இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்
தமிழில்: அசோகன் முத்துசாமி
பொதுவாழ்வில் நேரடியாகப் பங்கேற்ற போது நான் பதின்பருவத்தில் இருந்தேன். நவீன ஜனநாயக இயக்கம் எனது மாநிலத்தில் பரவிய போது அதன் இருவிதமான போக்குகளின் ஆழ மான செல்வாக்கிற்கு நான் ஆட்பட்டிருந்தேன். முதலாவது, கேரளாவின் சாதி ஆதிக்கம் மிகுந்த சமூக வாழ்விற்கு எதிராக வளர்ந்து வந்த எதிர்ப்பியக்கம். குறிப்பாக மாநிலத்தின் மிக உயர்ந்த சாதியான நம்பூதிரிகளின் காலாவதியா கிப் போன சடங்கு சம்பிரதாயங்கள், மூடநம்பிக் கைகள், குடும்ப அமைப்புகள் மற்றும் இவை போன்றவற்றிற்கு எதிரானது. இரண்டாவது, விடுதலை இயக்கம்; அந்த காலகட்டத்தில் காந்தியின் தலைமையில் நடந்த வெகுமக்கள் போராட்ட அலை பல நூற்றாயிரக்கணக்கான இளம் ஆண்களையும் பெண்களையும் தன்னுள் ஈர்த்து இழுத்துக் கொண்டிருந்தது.
ஆரம்பத்தில் நான் இந்த இரண்டு நீரோட்டங் களிலும் உருவாகி வந்த வளர்ச்சிகளையும் கூர்ந்து நோக்குவதில் ஆர்வம் காட்டினேன்; 1920களின் பின்பாதியில் அந்த இரண்டிற்குள் நானும் படிப்படியாக ஈர்க்கப்பட்டேன். 1930ஆம் ஆண்டின் சத்தியாகிரகப் போராட்ட, ஏகாதிபத் திய எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் அடுத்த அலை வீசத் துவங்கியபோது-1930ம் ஆண்டு உப்பு சத்தியாகிரகம்- சமூகக் கலாச்சார, அரசியல் வாழ்வில் நான் ஏற்கனவே தீவிர கொள்கை கொண்டவனாக ஆகிவிட்டிருந்தேன்.
சமூக தளத்தில், நம்பூதிரி சமூகத்தின் குடும்ப வாழ்வில், ஓரளவு சீர்திருத்தங்களுக்கான முயற்சி கள் என்பதிலிருந்து சாதிப் படிநிலையின் உச்சத் தில் சமூக வாழ்வைப் புரட்சிகரமாக மறுசீரமைப் பதற்கான போராட்டம் என்கிற நிலைக்கு முன்னேறினேன். இது கேரள சமுதாயத்தின் தாழ்ந்த சாதிகளின்உயர்சாதி எதிர்ப்பு இயக்கத் திற்கு உணர்வுபூர்வமாக என்னைக் கொண்டு சென்றது; குறிப்பாக, ஒடுக்கப்பட்ட சாதிகளில் மிகவும் புரட்சிகரமான சமூக எதிர்ப்பியக்கத்தை வளர்த்திருந்த ஈழவர்களிடம் கொண்டு சென்றது. ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் தலைமையில் தமிழ் நாட்டில் நடந்த சமூகக் கலாச்சார இயக்கத்துடன் இந்த ஒடுக்கப்பட்ட சாதித் தலைவர்கள் தொடர்பு கொண்டிருந்ததனால், பகுத்தறிவு மற்றும் நாத்திகம் ஆகிய கருத்துக்களை நான் உட்கிரகித் துக் கொள்ளத் துவங்கினேன். காந்தியிசத்திலிருந்து என்னை நான் முறித்துக் கொள்ளவில்லை என்ற போதிலும், அரசியல் ரீதியாக நான் ஜவகர்லால் நேரு மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரின் தலைமையிலான காங்கிரசின் இடதுசாரித் தலைவர்களின் தீவிர ஆதரவாளராக ஆனேன்.
உப்பு சத்தியாகிரக வருடங்களும், அதைத் தொடர்ந்த அரசியல் வளர்ச்சிப்போக்குகளும் தீவிரமான சமூகக் கலாச்சார மற்றும் அரசியல் இயக்கங்களில் என்னை மூழ்கச் செய்தன. விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பதாக நான் கருதிய அனைத்து அரசியல் நடவடிக்கைகளிலும் கல்லூரி மாணவன் என்கிற முறையில் முழுமை யாக பங்கேற்றேன். அதே வேளையில், தீவிரமான சமூகக் கலாச்சார இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்காகவும் என்னுடைய நேரத்தை அர்ப்பணித்தேன். 1930-31 ஆண்டுகளில் நான் ஆசிரியராக இருந்து செயல்பட்ட ஒரு வாரப் பத்திரிகையின் பத்திகள் சமூகக் கலாச்சார மற்றும் தேசிய அரசியல் தளங்களில் இடதுசாரிக் கருத்துக் களைப் பரப்புவதற்காகப் பயன்படுத்தப்பட்டது.
மாணவன் என்கிற முறையிலான என்னுடைய செயல்பாடுகள் அடுத்து என்னை ஒத்துழையாமை இயக்கத்தின் செயலூக்கமுள்ள தொண்டர் என்கிற வகையில் சிறைக்கு கொண்டு போய்ச் சேர்த்தது. அன்றிலிருந்து ஒரு சாதாரண சமூக சீர்திருத்தவாதி மற்றும் விடுதலைப் போராட்ட வீரன் என்பதிலிருந்து மொத்த சமுதாயத்தையும் புரட்சிகரமாக மறுகட்டமைக்கப் போராடும் இளைஞனாக என்னை மாற்றிக்கொண்டேன். துவக்கத்தில் ஒரு சோசலிசவாதியாகவும், அதை அடுத்து ஒரு கம்யூனிஸ்டாகவும் ஆனேன். ‘நான் எப்படி ஒரு கம்யூனிஸ்டாக ஆனேன்’ என்கிற என்னுடைய நூலில் இது கூறப்பட்டிருக்கிறது.
என்னுடைய அரசியல் ஆளுமையின் இந்த இரு குறிப்பிட்ட வகையான வளர்ச்சி என்னுடைய அரசியல் சிந்தனைக்கு இரண்டு வெவ்வேறு விதமான போக்குகளை அளித்தது. விடுதலைப் போராளி மற்றும் புரட்சிகரமான தேசியவாதி என்கிற வகையிலும் சாதி, மத அரசியலுக்கு எதி ரானவனாக நான் இருந்ததுடன் புரட்சிகரமான சமூக சீர்திருத்தவாதி என்கிற வகையிலும், சாதி, மத அடிப்படையிலான அனைத்து வேறுபாடு களும் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதை ஆதரித்து வந்தேன்.
எனினும், நாம் அடைய விரும்பும் இறுதி இலக்கு என்னவாக இருந்தபோதும், யதார்த்தத் தில் நிலவிவரும் சாதி மற்றும் மதச் சமூக அடிப்படையிலான வேறுபாடுகளையும், வித்தி யாசங்களையும் ஒதுக்கித் தள்ளி விட முடியாது. ஆதலால்தான் ஒடுக்கப்பட்ட சாதி மக்களின் நலனுக்காகவும், ஆதிக்கசாதியினரின் சமூக அமைப்பு மற்றும் குடும்ப அமைப்பிற்கு எதிராகப் போராடு வதற்காகவும் தங்களை அர்ப்பணித்துக் கொண் டுள்ள சமூக அரசியல் இயக்கங்களின் மீது இரக்கம் கொண்டவனாக இருந்தேன். சாதியை அடிப்படையாகக் கொண்ட அமைப்புகளில் சில, ஒடுக்கப்பட்ட சாதிகளின் சமூகநீதிக் கோரிக்கை யையும், அரசியல் ஜனநாயகத்திற்கான இயக்கத் தையும் ஒன்றிணைத்து அரசியல் கோரிக்கை களுக்காகப் போராடத் துவங்கியபோது என்னு டைய ஆதரவு மேலும் கூடுதலானது.
1930ம் ஆண்டுகளின் முதல் பாதியில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சியான, ஒடுக்கப் பட்ட ஈழவ சாதித் தலைவர்கள் சிலரால் தொடங்கப்பட்ட தனிச்சிறப்பான தீவிர சமூக அரசியல் இயக்கத்தின் தோற்றம் என் மீது செல்வாக்கு செலுத்தியது. திருவாங்கூரைச் சேர்ந்த காலஞ்சென்ற சி.கேசவன் அவர்களால் தொடங்கப்பட்ட அந்த இயக்கம் பொறுப்புள்ள ஒரு அரசாங்கம் வேண்டுமெனக் கோரும் திருவாங்கூர் மக்களின் ஜனநாயக விருப்பங் களையும், ஒடுக்கப்பட்டசாதிகள் மற்றும் மதச் சமூகங்களின் சமூக நீதிக் கோரிக்கையையும், அந்த சமஸ்தானத்தின் அன்றைய மேல்சாதி ஆதிக்கத்திற்குட்பட்ட எதேச்சதிகார ஆட்சியில் ஒன்றிணைக்க முயற்சித்தது. பெரும்பான்மை யான தேசியவாதிகள் அவரையும் அவரது இயக்கத்தையும் ‘சாதிவாதம்’ என்றும், ‘வகுப்பு வாதம்’ என்றும் கண்டித்ததுடன் ‘தேசவிரோ தம்’ என்றும் குற்றம் சாட்டினர். கேசவனின் தலை மையில் நடைபெற்ற இயக்கத்திற்கு முழு ஆதரவு அளித்த தேசியவாத மலையாள பத்திரிக்கை களில் நான் ஆசிரியராக இருந்த வாரப் பத்திரிகை யும் ஒன்று (மலையாள பத்திரிகை உலகின் மறைந்த பெரியவர் ஏ.பாலகிருஷ்ண பிள்ளை அவர்களை ஆசிரியராகக் கொண்ட பத்திரிகை மற்றொன்று).
அதன் பின்னர் அந்த இயக்கம் கூட்டு அரசியல் காங்கிரஸ் (தடிiவே யீடிடவைiஉயட உடிபேசநளள) என்றழைக்கப் பட்ட, மேல்சாதி ஆதிக்கத்திற்கு எதிரான சில சாதிகள் மற்றும் சமூகங்களின் அரசியல் கூட்ட ணியாக வளர்ச்சி பெற்றது. இந்த ‘சாதி மற்றும் சமூகக் கூட்டணி’ சமஸ்தானத்தில் இருந்த அனைத்து ஜனநாயக சக்திகளையும் உள்ளடக்கிய ‘திருவாங் கூர் மாநில காங்கிரஸ்’ என தன்னை மேலும் விரிவுபடுத்திக் கொண்டது. ‘வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமையும், பிற்படுத்தப் பட்ட சமூகங்களுக்கு இடஒதுக்கீடும் கொண்ட பொறுப்புள்ள ஒரு அரசாங்கம்’ என்பதே அந்த இயக்கத்தின் மையமான முழக்கமாக ஆனது.
பக்கத்திலிருந்த கொச்சி சமஸ்தானத்திலும் இதே மாதிரியான வளர்ச்சிப் போக்குகள் நிகழ்ந்து கொண்டிருந்தன. சமஸ்தானத்தில் ஒரு பொறுப் புள்ள அரசாங்கத்திற்காகப் போராடிய முதல் அமைப்பு, திருவாங்கூர் மாநில காங்கிரசைப் போலவே, பிற்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் சமூகங்களுக்கு இடஒதுக்கீடு என்பதையும் தன்னு டைய அடிப்படையான அரசியல் கோரிக்கையில் இணைத்துக் கொண்டது. இடதுசாரிகளாகிய நாங்கள் இரண்டு மாநிலங்களிலும் இந்தக் கோரிக்கைக்கு எங்களுடைய முழுமையான ஆதரவை அளித்தோம். மலையாளம் மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதிய கட்டுரைகளில், கேரளாவிலும் உள்ள உண்மையான நிலைமை களில், ஜனநாயக இயக்கத்தின் வளர்ச்சியென்பது சாதி இந்து ஆதிக்கத்திற்கு எதிரான ஒழுங்கமைக் கப்பட்ட போராட்டத்துடன் இணைக்கப்படுவ தென்பது எப்படி கட்டாயமாக நிகழும் என்பதை விளக்க முயற்சித்தேன்.
இதற்கிடையே, சோசலிச மற்றும் கம்யூனிச இயக்கங்களைச் சேர்ந்த நாங்கள் தொழிலாளர்க ளையும், விவசாயிகளையும், மாணவர்களையும், ஆசிரியர்களையும், மற்றவர்களையும் அணிதிரட் டும் பணியில் முழுமையாக இறங்கினோம். இந்த செயல்பாட்டிற்காக நடத்தப்பட்ட இயக்கங் களும், உருவாக்கப்பட்ட அமைப்புகளும் அனைத்து சாதிகளையும், அனைத்து மதங்களையும் உள்ளடக்கியதாக இருந்தன என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ‘உலகத்தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்’ என்கிற மார்க்சிய அறைகூவல் எங்கள் அனைவருக்கும் உத்வேகமளித்தது. ஆதலால், சாதி, மதம் அல்லது இதர அது போன்ற எண்ணங்கள், முதலாளிகளுக்கு எதிராக தொழிலாளிகளின் ஒற்றுமை, நிலப்பிரபுக் களுக்கு எதிராக விவசாயிகளின் ஒற்றுமை மற்றும் தங்களது கோரிக்கைகளுக்காக மற்ற உழைக்கும் மக்களின் ஒற்றுமை, மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத் தியத்திற்கு எதிராக, சமஸ்தானங்களின் எதேச்சதி காரஆட்சிகளுக்கு எதிராக இவர்கள் அனைவரின் ஒற்றுமை ஆகியவற்றுக்குக் குறுக்கே வருவதற்கு நாங்கள் அனுமதிக்கவில்லை. ஆதலால், ஒடுக்கப் பட்ட சாதிகளின் நலன்களைப் பாதுகாப்பது, சமூகநீதிக்காகக் குரல் கொடுப்பது போன்றவை ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் ஒற்றுமை மற்றும் தேச ஒற்றுமை ஆகியவற்றிற்கு உட்பட்டதாக ஆக்கப்பட்டன.
அன்றும் சரி இன்றும் சரி, ஒடுக்கப்பட்ட சாதி மற்றும் மதச் சமூகங்களின் நலன்களுக்காகப் போராடுவதால் ‘தேசியவாதம் மற்றும் சோசலி சம் ஆகிய கொள்கைகளிலிருந்து விலகிச் செல்வ தாக எங்களைக் குற்றம் சாட்டுவோருடன் ஒரு பக்கமும் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்க ளைப் பாதுகாக்கிறோம் என்கிற பெயரில், உண்மையில் அம்மக்களை, சாதி மத வேறுபாடின்றி உழைக்கும் மக்கள் நடத்தும் ஒன்றுபட்ட போராட்ட பொது நீரோட்டத்திலிருந்து தனிமைப் படுத்துவோருடன் மறு பக்கமும் என இரண்டு முனைகளில் நாங்கள் போராட வேண்டியிருந்தது.
சுதந்திரத்திற்குப் பிந்தைய வருடங்களில் குறிப்பாக, கேரளாவிலிருந்த இரண்டு சமஸ்தானங் களின் பொறுப்பற்ற திவான்களின் ஆட்சிகள் நீக்கப்பட்டு, அவற்றினிடத்தில் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசாங்கங்கள் அமைக்கப்பட்டு, பின்னர் அவை கேரளாவுடன் இணைக்கப்பட்ட பிறகு, இந்த இரு முனைப் போராட்டமானது மேலும் கடுமையானது.
இந்த வளர்ச்சிப் போக்குகள் ஒடுக்கப்பட்ட சாதிகளையும், சமூகங்களையும் சேர்ந்த சாமான்ய மக்களின் வாழ்நிலைமைகளிலும், பணி நிலைமைகளிலும் எந்த உருப்படியான மாற்றத்தையும் கொண்டு வரவில்லை என்ற போதிலும், ஒரு சிறிய மேல் வர்க்கத்தினர் அவர்களிலிருந்து தோன்றி, ஆண்டுகள் செல்லச் செல்ல செல்வாக்கிலும், அதிகாரத்திலும் வளரத் துவங்கினர். வளர்ச்சிப் போக்கின் இறுதியில் மேல்சாதியினர் மற்றும் பெரும்பான்மை சமூகத் தினர் உள்ளிட்ட அனைத்து சாதிகளையும் சமூகங்களையும் சேர்ந்த பெரும்பான்மையான மக்கள் ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்கள் என்கிற தரத்திற்குத் தாழ்த்தப்பட்டனர். ஒடுக்கப் பட்ட சாதியினரையும், மதச் சமூகத்தினரையும் பாதுகாக்க உறுதி ஏற்றுக் கொண்ட, அதே வேளையில் அனைத்து சாதி மற்றும் சமூகங் களைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட பிரிவினருடன் எங்களை அடையாளப்படுத்திக் கொண்ட நாங் கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பழங்குடி யினருக்கும், பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கும் அளிக்கப்படும் இடஒதுக்கீடு என்பது முற்படுத்தப் பட்ட சமூகங்களைச் சேர்ந்த ஏழைகளின் மீது ஏற்படுத்தக் கூடிய தாக்கம் பற்றியும் சிந்திக்க வேண்டியிருந்தது. மேல்சாதிகளையும், பெரும் பான்மை மதத்தையும் சேர்ந்தவர்களிலும் மேலும் மேலும் அதிகமான பிரிவினர் தாங்கள் முன்னர் அனுபவித்து வந்த பழைய அந்தஸ்தையும், செழிப்பையும், சிறப்புரிமைகளையும் இப்போது அனுபவிப்பதில்லை என்கிற யதார்த்தத்திற்கேற்ற வேகமூட்டும் வகையில் தாழ்த்தப்பட்ட சாதி களுக்கும், பழங்குடியினருக்கும், பிற்படுத்தப் பட்ட சமூகங்களுக்கும் நிபந்தனையற்ற இடஒதுக் கீடு என்று இருபது ஆண்டுகளுக்கு முன்னர் வடிவமைக்கப்பட்ட தீர்வில் மாற்றங்கள் செய் யப்பட வேண்டும்; சாதியை அடிப்படையாகக் கொண்டு அல்லாமல், பொருளாதார நிலை மையை அடிப்படையாகக் கொண்ட இடஒதுக் கீடு செய்யப்பட வேண்டும் என்கிற கோரிக்கை வலியுறுத்தப்படலானது.
இந்தக் கோரிக்கையை எழுப்பியவர்களின் மீது நாங்கள் அனுதாபம் கொண்டிருந்த போதிலும் அப்போதும் சரி, இப்போதும் சரி எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை; ஏனெனில், சாதிய ஒடுக்குமுறை மற்றும் அந்த ஒடுக்கு முறையின் சமூக கலாச்சார, பொருளாதார மற்றும் அரசியல் விளைவுகள், இன்னமும் அகற்றப்பட வில்லை என்றே நாங்கள் கருதுகிறோம். ஆதலால், என்னுடைய 1977-ம் ஆண்டு கட்டுரையில் நான் விளக்கியதைப் போல, நாங்கள் பின்வரும் முடி வுக்கு வந்தோம். (1) தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பழங்குடியினருக்கும் இடஒதுக்கீடு இப்போது இருப்பது போலவே எந்த மாற்றமுமின்றி தொடர வேண்டும். (2) இதர பிற்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் சமூகங்களின் விஷயத்திலும், சம்பந்தப்பட்ட சாதி அல்லது சமூகம் தன்னுடைய பிற்பட்ட நிலையைக் கடக்கின்ற வரையில், சாதி மற்றும் சமூக அடிப்படையிலான இடஒதுக்கீடு தொடர வேண்டும் (3) இந்த பிற்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் சமூகங்களில் சிறு பிரிவுகள் இப்போது தாங்கள் அனுபவித்து வரும் சலுகை களால் ஆதாயம் அடைந்திருப்பதால், அவர் களில் நிர்ணயிக்கப்பட்ட உச்ச வரம்பிற்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் இடஒதுக்கீட்டின் பலன்களிலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும்.
இதை முற்படுத்தப்பட்டவர்கள் பிற்படுத்தப் பட்டவர்கள் ஆகிய இருவருமே கண்டித்தனர். சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை இது கைவிடுவதாக பிற்படுத்தப்பட்டவர்கள் கண்டித்த னர். முற்படுத்தப்பட்டவர்களோ நேரெதிரான காரணத்திற்காகக் கொந்தளித்தனர். இரு தரப் பினரும் பெரும் போராட்டங்களை நடத்தினர். ஆனால், நாங்கள் எங்கள் நிலையில் உறுதியாக இருந்தோம்.
கேரளாவில் என்னால் பிரதிநிதித்துவப்படுத் தப்படும் கட்சியும், இயக்கமும் சாதி மற்றும் வகுப்புவாத அமைப்புகள் குறித்த பிரச்சனையை அம்மாநில உழைக்கும் மக்களின் அரசியல் மற்றும் மக்கள் இயக்கத்தின் வளர்ச்சியில் அவை என்ன பாத்திரம் வகிக்கின்றன என்கிற கண் ணோட்டத்திலிருந்தே கையாள்கின்றோம் என்பதை மேலே கூறப்பட்டவற்றிலிருந்து காணலாம். நான் சில தத்துவார்த்த ரீதியிலான ஆய்வுகளை மேற் கொண்டு, சில முடிவுகளுக்கு வர வேண்டி யிருந்தது. அது குறித்து இப்போது பார்க்கலாம்.
தொழிற்சங்கமும், விவசாயிகள் இயக்கமும்
காங்கிரஸ் சோசலிசவாதிகளாகத் துவங்கி, பின்னர் கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள், தொழிற் சங்கம் மற்றும் விவசாயிகள் இயக்கத்தை வளர்க்க இயல்பாகவே கடுமையாக உழைத்தோம். இரண் டிலுமே முன்னேற்றம் மிக விரைவாக இருந்தது. அன்றைய சென்னை ராஜதானியின் மலபார் மாவட்டம் முழுவதிலும் பற்பல தொழிற்சங்கங் களை எங்களால் ஒரு ஐந்தாண்டுகளுக்குள்ளாகவே உருவாக்க முடிந்தது. கொச்சி மற்றும் திருவாங் கூர் பகுதிகளிலும் கூட, ஏற்கனவே இருந்த தொழிற் சங்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும், பல புதிய சங்கங்களை உருவாக்க வும் முடிந்தது. விவசாய இயக்கத்தைப் பொறுத்த வரையில், அதனுடைய வளர்ச்சி பெரும்பாலும் மலபார் பகுதிக்கு உட்பட்டதாக மட்டுமே இருந் தது; ஏனெனில், குத்தகை சீர்திருத்தச் சட்டம் மலபாரைவிட கொச்சி மற்றும் திருவாங்கூரில் பெருமளவிற்கு முன்னேறியிருந்தது. வேறு வார்த் தைகளில் கூறினால், நிலப்பிரபுத்துவ (ஜென்மி) ஆதிக்கம் மலபார் பகுதியில் மிக வலுவாக இருந்தது.
அன்றைய சென்னை ராஜதானியின் முதல் காங்கிரஸ் அரசாங்கம் நானும் உறுப்பினராக அங்கம் வகித்த மலபார் குத்தகை சீர்திருத்தக் குழுவை அமைத்தாக வேண்டிய நிர்பந்தம் கொடுக்கும் அளவு மலபார் பகுதியின் விவசாய இயக்கத்தின் வளர்ச்சி அவ்வளவு வேகமாக இருந்தது; என்னைத் தவிர, நிலச்சீர்திருத்தப் பிரச் சனையில் இடதுசாரிப் பார்வை கொண்டிருந்த மேலும் இருவர் அதில் உறுப்பினர்களாக இருந் தனர். அந்தக் குழுவின் ஒரு டஜனுக்கு மேற்பட்ட எஞ்சிய உறுப்பினர்கள் வலதுசாரி அரசியல் எண்ணம் கொண்டவர்கள். ஆதலால், நாங்கள் மூவரும் எங்களது அதிருப்தியை எழுத்து மூலம் தனியே தெரிவிக்க வேண்டியிருந்தது.
குத்தகைச் சட்டங்களில் உடனடியாக திருத் தங்கள் செய்யப்பட வேண்டும் என்கிற ஆலோ சனைகள் எங்களது தனித்தனி குறிப்புகளில் ஏறத் தாழ ஒரே மாதிரி இருந்தபோதும், என்னுடைய குறிப்பு, நிலப்பிரபுத்துவத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி பற்றியும், அதன் சமூகப் பொருளாதார தாக்கம் பற்றியும் விவாதிப்பதாக மிக விரிவான தாகவும், மிக நீண்டதாகவும் இருந்தது. முந்தைய குழுக்கள் மற்றும் ஆணையங்களின் ஆய்வுகளை அடிப்படையாக வைத்துக் கொண்டும், குத்தகை விவசாயிகளின் வாடகைச் சுமை பற்றிய சில கணக்கீடுகளுடன், ஜென்மி முறையை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்று வலுவாக நான் வாதாடினேன்; இந்த முறை ரத்து செய்யப்பட்டால் தான் மக்களின் பொருளாதார, சமூகக் கலாச் சார, மற்றும் அரசியல்-நிர்வாக பின்தங்கிய நிலை மையை அகற்ற முடியும் என்றும் கூறினேன். இது உடனடியாக அடைய முடியாத அடிப்படை யான குறிக்கோள். ஆதலால், தற்போதுள்ள சட்டங்களில் சில குறிப்பிட்ட உடனடி சீர்திருத் தங்கள், அதாவது, சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்ற ஆலோசனையை முன்வைத்தேன்.
இது, தங்களது உடனடிக் கோரிக்கைகளை அடைவதற்காக விவசாயிகள் நடத்திய அன்றாடப் போராட்டங்களை, மலபார் பகுதியில் நிலமான்ய -ஜென்மி முறைக்கு முடிவு கட்ட வேண்டுமென்கிற அடிப்படையான பிரச்சனையின் மட்டத்திற்கு உயர்த்துவதற்கு நான் எடுத்த முதல் முயற்சியா கும். இந்த ஆய்வும், அதே நேரத்தில் கேரளாவில் அரசியல் இயக்கத்தில் ஏற்பட்ட வளர்ச்சியும், குறிப்பாக கொச்சி மற்றும் திருவாங்கூர் சமஸ் தானங்களில் ஒரு பொறுப்புள்ள அரசாங்கத்திற் காக நடந்த ஜனநாயக இயக்கம் ஆகியவை நில மான்ய முறையை அதன் சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் நிர்வாக வடிவில் ஆராய்வதற்கு என்னை இட்டுச் சென்றது. மலபார் பகுதியின் ஜென்மி முறையும், கொச்சி மற்றும் திருவாங்கூர் சமஸ்தானங்களில் மன்னராட்சியும் ஒரே நாண யத்தின் இரு பக்கங்களாகப் பார்க்கப்பட்டன. மலபார் பகுதியின் குத்தகை விவசாயிகள் இயக் கமும் மற்றும் சமஸ்தானங்களில் பொறுப்புள்ள அரசாங்கத்திற்காக நடந்த ஜனநாயக இயக்கமும் ஒரு பொதுவான நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு இயக்கத்தில் ஒன்றிணைக்கப்பட வேண்டியிருந்தது.
இது சென்னை ராஜதானியின் மூன்று நிர்வாக மாவட்டங்களிலும், கொச்சி மற்றும் திருவாங் கூர் பகுதிகளிலும் வசிக்கும் மலையாளம் பேசும் மக்கள் மறுபடியும் ஒன்றிணைக்கப்பட வேண்டு மென்கிற அரசியல் கோரிக்கையை எங்கள் கட்சி எழுப்புவதற்கு இட்டுச் சென்றது. மலபாரின் ஜென்மி ஆதிக்க ஒழிப்புடன் ‘ஐக்கிய கேரள’ கோரிக்கையும் சேர்க்கப்பட்டது. யுத்தத்தின் ஆரம்பத்திலும், யுத்தத்தின் போதும் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளை கொச்சி மற்றும் திருவாங்கூர் பகுதிகளுக்கும் நீட்டிப்பதற்கு இது உதவி செய்தது.
இது என்னை மற்றொரு போராட்ட -தத்து வார்த்தப் பணியை மேற்கொள்ளச் செய்தது. ‘ஒண்ணே கால் கோடி மலையாளிகள்’ (ஹ ஊசடிசந யனே ய ணுரயசவநச ஆயடயலயடநநள) என்கிற தலைப்பில் ஒரு பிரசுரம் 1945-ல்வெளியிடப்பட்டது; அது ஐக்கிய கேரளக் கோரிக்கைக்காக வாதாடியது. அதில் இனங்காணப்பட்ட புதிய மாநிலம் ஜனநாயகத் தன்மையும், மதச்சார்பற்ற தன்மையும், நவீன தன்மையும் கொண்டதாக இருக்கும். மலபார் குத்தகை சீர்திருத்தக் குழுவின் அறிக்கையில் உள்ள என்னுடைய அதிருப்தி குறிப்பின் மைய ஆலோசனையாக முன்வைக்கப்பட்ட ‘உழுபவனுக் கே நிலம் சொந்தம்’ என்கிற முழக்கம் இப்போது அடையப்பட்டுள்ள ஐக்கிய கேரளத்தின் ஒரு முக்கியமான அம்சமாகும். அத்துடன், மொத்த தேசத்திற்கும் என கம்யூனிஸ்ட் கட்சி வகுத்துள்ள திட்டப்படி, உழைக்கும் மக்களின் நலனுக்காகச் செயல்படும் நவீன ஜனநாயக, மதச்சார்பற்ற அரசு என்கிற மற்ற அம்சங்களும் இதனுடன் சேர்க்கப்பட்டது.
கிட்டத்தட்ட அதே சமயத்தில் சுந்தரய்யா வின்’ விசாலாந்திரா’ மற்றும் பவானி சென்னின் ‘நதூன் பங்களா’ ஆகிய இதே போன்ற பிரசுரங் கள் ஆந்திராவிலும், வங்கத்திலும் வெளியிடப் பட்டன; கேரளா, ஆந்திரா, வங்கம் ஆகிய மாநிலங் களில் வெகுஜன அரசியல் தளம் கொண்டதாக, கம்யூனிஸ்ட் கட்சி அன்று வலுவாக இருந்தது. ஆதலால், சுதந்திர, ஜனநாயக, மதச்சார்பற்ற இந்தியா என்று கட்சி கருதியிருந்த இந்தியாவின் ஒரு பகுதியாக தொழிலாளி வர்க்கம், விவசாயி கள் மற்றும் இதர உழைக்கும் மக்கள் பிரிவினரின் நலன்கள் பாதுகாக்கப்படுவது உத்திரவாதப்படுத் தப்படும். தங்களது சொந்த மொழி வழி மாநிலம் என்கிற கோரிக்கையை இம்மாநிலங்களில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் எழுப்பியதும் இயற்கையானதே.
எதிர்கால சுதந்திர இந்தியாவின் ஒரு பகுதி யாக புதிய ஜனநாயக, மதச்சார்பற்ற கேரள மாநிலத்தின் பொதுவான வடிவமைப்பை இவ்வி தம் வகுத்த பின்னர், கேரளாவின் மற்றும் கேரள மக்களின் கடந்த கால வரலாற்றை ஆராய்வதற்கு எனக்குக் கிடைத்த முதல் வாய்ப்பைப் பயன்படுத் திக் கொண்டேன். அதன் பலனாக மலையாள மொழியில் கேரளாவின் சுருக்கமான வரலாறு 1947-ல்எழுதப்பட்டு, அதற்கடுத்த வருடத்தில் அது வெளியிடப்பட்டது.
கேரளாவின் மத்தியகால சமுதாயத்தை வர்ணிக்க அந்தப் பிரசுரத்தில் பயன்படுத்தப் பட்ட சொல் நிலப்புரபுத்துவம்என்பதல்ல என்பதும், மேல்சாதிகள், ஜென்மிக்கள் உள்ளூர் குலபதிகள்’ என்கிற பொருள்படும்’சாதி-ஜென்மி-நடுவழி மேதாவித்வம்’ என்பது. ‘பிராமணர்களை சமூகரீதியாக உயர்த்துவதும், ஜென்மிக்களை பொருளாதார ரீதியாக உயர்த்துவதும், சமந்தா-நாயர் சாதிகளை நிர்வாக ரீதியாக உயர்த்துவ தும்’, மிகப் பெரும்பான்மையான மக்களின் நிலையை சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதி யாகவும், அரசியல் ரீதியாகவும்தாழ்த்துகின்றது எனவும் மேற்குறிப்பிட்ட உயர் பிரிவினரிலிருந்து விரல் விட்டு எண்ணத்தக்க மாபெரும் அறிஞர் கள், மற்றும் கவிஞர்கள், கலைஞர்கள் தோன்று வதற்கு வழிவகுத்ததானது மிகப் பெரும்பான் மையான மக்களின் கலாச்சார ரீதியாகப் பின் தங்கிய நிலைமைக்கு இட்டுச் சென்றது இப்படித் தான் எனவும் நான் அதை விவரித்திருந்தேன்.
அப்போது வெளிக் கொணரப்பட்ட அந்தப் பிரசுரம் கேரள வரலாற்றிற்கு மார்க்சிய வர்க்கப் போராட்ட கோட்பாட்டைப் பொருத்திப் பார்க்கும் என்னுடைய முதல் முயற்சியாகும். முதல் முயற்சி என்பதால், இயல்பாகவே அதில் குறைகளும் இருந்தன. பெரும் எண்ணிக்கையிலான விமர்சனங்கள் வரப்பெற்று அவற்றிலிருந்து பலனும் பெற்றேன். அந்த நூல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை திருத்தி எழுதப்பட்டது. அதன் பலனாக ‘கேரளாவில் தேசியப் பிரச்சனை’ (1952) என்கிற தலைப்பில் என்னுடைய முதல் ஆங்கில நூல் வெளிவந்தது; அதன் மேம்படுத்தப்பட்ட வடிவம் ‘கேரளா-நேற்று, இன்று, நாளை’ (1967) என்கிற தலைப்பில் வெளிவந்தது. இந்த இரண்டு நூல் களிலிருந்து விரிவாக மேற்கோள் காட்டாமல், பிந்தைய நூலில் ‘நிலப்பிரபுத்துவ முறையின் தோற்றம்’ என்கிற தலைப்பில் ஒரு அத்தியாயம் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகின்றேன். அதில் பின்வருமாறு கூறியிருந்தேன்:
‘சேரப்பேரரசின் காலத்திலோ அல்லது அதற்கும் முன்பாகவோ…வர்க்கப் பிரிவினைகள் தோன்றிக் கொண்டிருந்தன….என்றாலும், வர்க்கப் பிரிவினைகள் சாதிப்பிரிவினைகளின் வடிவத்தை எடுத்தன. பெருமளவில் செல்வம் குவிக்கும் நிலையில் இருந்தவர்கள் உயர்சாதியினராகக் கருதப்பட்டனர்; செல்வக் குவிப்பில் அடுத்த நிலையில் இருந்தவர்கள் அடுத்த நிலை உயர் சாதியினராகக் கருதப்பட்டனர்; அப்படியே படிப்படியாக இறங்கி, செல்வம் எதுவும் குவிக்கவே முடியாத நிலையில் இருக்கும் வர்க்கத்தவர் தாழ்ந்த சாதியினராயினர்’.4
அடுத்து, ‘ஒவ்வொரு சாதிக்கூட்டத்திற்கும் சொந்தமான கோவில் இருந்தது; மொத்த சாதி யின் கூட்டு அமைப்பின் பிரதிநிதியாகயும், அதன் பிரதிபலிப்பாகவும் அக்கோவிலின் தெய்வம் இருந்தது. அந்தக் கோவிலின் பெயரிலும், அதன் தெய்வத்தின் பெயரிலும் தலைமுறை தலைமுறை யாகச் சேர்க்கப்பட்ட செல்வம் வைக்கப்பட் டிருந்தது. இருப்பினும் படிப்படியாகக் கோவிலின் கட்டுப்பாடும், ஆதலால் அதன் சொத்தும், முதலில் மொத்த சாதிக் கூட்டத்திடமிருந்து கூட்டு அமைப்பிற்கும் (உதாரணமாக, பஞ்சாயத்துக்கு-), பின்னர் குடும்பங்களின் தலைவர்களுக்கும், அதற்குப் பின்னர் ஒரு குடும்பத்தின் தலைவருக் கும் உரியதாகச் சுருங்கியது. அது அந்தக் கட்டத்தை அடைந்தவுடன், கோவிலின் தர்மகர்த்தா என்கிற முறையில் கோவிலின் சொத்துரிமை கொண்டிருந்த குடும்பத் தலைவரிடமிருந்து, அதன் மூலமாக மொத்த சாதியினுடையதாக இருந்த சொத் துரிமை, அந்தக் குடும்பத் தலைவருக்கு உரியதாக உரிமையுடன் மாற்றப்படுவதற்காக மட்டுமே இருந்தது.’
ஆதலால், ஜென்மி ஆதிக்கத்தின் தோற்று வாயும், வளர்ச்சியும் பிரிக்க முடியாத வகையில் சாதிப் படிநிலையின் இருப்பு மற்றும் வளர்ச்சி யுடன் தொடர்புடையதாக இருக்கின்றது. உண்மையில், மலையாளத்தில் நான் எழுதிய கேரள வரலாறு குறித்த நூலில் நான் புள்ளிவி வரங்களுடன் பின்வருவதை நிரூபித்திருக்கின்றேன்:
1) சொத்துடமை விஷயத்தில் புலையர்களும், பறையர்களும், கணக்கர்களும் மற்ற ஒடுக்கப்பட்ட சாதிகளும் மிகவும் கீழானவர்கள். மறுபுறமோ, மிக உயர்ந்த சாதியினரான நம்பூதிரிகள், சொத்துடமை விசயத்தில் மிக உயர்ந்த நிலையில் இருக்கின்றார்கள். நான் வந்தடைந்த முடிவு களுக்கு அடிப்படையாக உள்ள கொச்சியைச் சேர்ந்த நான்கு கிராமங்களில் எந்த ஒரு சாதியும் நம்பூதிரிகளைவிட அதிகமான சொத்துள்ளவர் களாகவோ அல்லது ஒடுக்கப்பட்ட சாதிகளை விட குறைவான சொத்துள்ளவர்களாகவோ இருக்கவில்லை.
2) நம்பூதிரிகளுக்கு அடுத்தபடியாக மற்ற சாதி இந்துக்கள் வருகின்றனர். அவர்களில் சொத்துட மை விசயத்திலும், சாதிப் படிநிலையிலும் மிகக் கீழானவர்களாக இருப்பவர்கள் நாயர்கள்.
3) மிக மிக ஏழைகளான ஒடுக்கப்பட்ட சாதி களுக்கு அடுத்த படியாக ஈழவர்களும் முஸ்லிம் களும் வருகின்றனர்; அதே வேளையில், கிறித்து வர்கள் நாயர்களை விட தாழ்வானவர்களாகவும், ஆனால் ஈழவர்கள் மற்றும் முஸ்லிம்களைவிட மேலானவர்களாகவும் இருக்கின்றனர்.
ஆதலால், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்ட காலகட்டத்தில் (1930) சாதியப் படிநிலையின் அந்தஸ்திற்கும் சொத்துடமைக்குமிடையில் தெளி வான ஒன்றுடன் ஒன்று உறவு இருக்கின்றது என்பது என் முடிவுகளுக்கு அடிப்படையாக அமைந்தது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள உண்மைத் தரவு கள் மத்தியகால கேரளா தொடர்பானவை. எந்த வகையிலும் முக்கியத்துவமற்றதாகக் கருதப்படும் மாற்றங்கள் கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன; குறிப்பாக முதலாம் உலகப்போருக்குப் பின்னரும் இன்னும் கூடுதலாக நாடு விடுதலை அடைந்த பின்னர். தலைமுறைகள் கடந்து மேல்சாதிகளைச் சேர்ந்த குடும்பங்கள் தரித்திரமாக்கப்பட்டு, மென்மேலும் பெரிய அளவில் பாட்டாளிகளின் கூட்டத்திற்கு தூக்கி வீசப்படுகின்றன. கீழ்சாதிகளைப் பொறுத்த வரையில், மொத்த தாழ்த்தப்பட்ட சாதியினர் உள்பட, முன்பு போலவே அதே சமூகப் பொருளா தார குறைபாடுகளால் தொடர்ந்து பாதிக்கப் பட்டு வருகின்றனர். தாழ்த்தப்பட்டவர்கள் அல்லாத, ஆனால் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த சிறு குழுக்கள் பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலிருந்து ஏற்பட்டு வரும் முதலாளித்துவ வளர்ச்சியைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தங்களை முன்னேற்றிக் கொண்டிருக்கின்றன. தரித்திரமாக்கப்பட்ட மேல்சாதி மற்றும் பிற்படுத் தப்பட்ட சாதிகளில் பெரும்பான்மையானோர் மற்றும் ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட சாதியினர் ஆகியோருக்கிடையில் ஓரளவிற்கான இணைப்பு இவ்விதமாக ஏற்படுகின்றது.
வேறு வார்த்தைகளில்கூறினால், இந்தியாவின் எஞ்சியுள்ள பகுதிகளைப் போலவே, கேரளா வின் அரசியல் வாழ்வில் இன்னமும் சாதி ஒரு முக்கிய காரணியாக இருப்பதால், செயல்படுவ தால், சாதி மற்றும் சமூகங்களுக்கு அப்பாற்பட்டு, வர்க்கங்களின் ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் அரசியல் கட்சிகள் மற்றும் வெகுஜன அமைப்புகள், மென்மேலும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. ஆதலால், பொது வாழ்வில் உள்ள முற்போக்கு சக்திகள் சாதிய ஒடுக்குமுறைகள் நிலவுவதை கவனிக்கும் அதே நேரத்தில் வளர்ந்து வரும் வர்க்கங்களைத் தங்களது அடிப்படையாகக் கொள்ள வேண்டும்; ஆதலால், வர்க்கச் சுரண்டலுக்கும், ஒடுக்கு முறைக்கும் எதிரான போராட்டத்தில் அனைத்து சாதிகளையும் சமூகங்களையும் சேர்ந்த மக்களை ஒன்றிணைப்பது இன்னும் முடிக்கப்படாத பணியான ‘சாதி-ஜென்மி-நடுவழி மேதாவித்வத்தை’ முடிவிற்கு கொண்டு வருவதற்கு அதிஅவசிய மான முன்நிபந்தனையாகும். மேல்சாதிகளைச் சேர்ந்த முற்போக்கு சக்திகள் தங்கள் பங்கிற்கு கீழ்சாதிகளின் விருப்பத் தேர்வுகளின் விஷயத்தில் எதிர்மறையான அணுகுமுறையை மேற்கொள்ள முடியாது.
இவ்வாறாக, எங்களது கட்சியும் அதன் தொண்டனாகிய நானும் வர்க்கப் போராட்டம் எனும் மார்க்சியக் கோட்பாட்டை எங்களது அடிப்படையாகக் கொண்டிருக்கின்றோம்; சுரண்டும் வர்க்கங்களுக்கு எதிராக சாதி மத வேறுபாடின்றி சுரண்டப்படுபவர்களை ஒற்று மைப்படுத்த வேண்டிய தேவைகளுக்காக சாதி ஒடுக்குமுறைப் பிரச்சனையை அதற்கு உட்பட்ட தாகக் கொண்டிருக் கின்றோம்.
அகில இந்திய அளவில்
மேலே விவரிக்கப்பட்டபடி ஆரம்பத்தில் கேரளாவிற்கு மட்டுமே உட்பட்டதாக இருந்த என்னுடைய செயல்பாடுகள் படிப்படியாக அகில இந்திய அரசியலுக்கு விரிவடைந்தன. அதனால் நான் 1940 மற்றும் 1950களில் அன்றாடப் போராட்டங்களிலும், பிரச்சாரத்திலும், தத்து வார்த்த அடிப்படையிலும் அகில இந்திய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பிரச்சனை களைக் கையாள வேண்டியிருந்தது. கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு நிர்வாகியாகவும், கட்சியின் அகில இந்திய மையத்தில் சில பொறுப்பு களை எடுத்துக் கொண்டவனாகவும் நான் பணியாற்றிக் கொண்டிருந்த நாட்கள் அவை.
1950களின் இறுதியிலும், 1960களின் துவக்கத் திலும் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையான உட்கட்சிக் கருத்து வேறுபாடுகள் நிலவிய காலகட்டத் திற்குள் நுழைந்ததென்பது அனைவருக்கும் தெரி யும். இந்திய சமுதாயத்தின் தன்மை, இந்தியப் புரட்சியின் சமூகப் பொருளாதார உள்ளடக்கம், மற்றும் கொள்கை, உத்தி, மூலஉத்தி தொடர் பான எண்ணற்ற பிரச்சனைகள் இயல்பாகவே எழுந்தன. என்னுடைய பங்கிற்கு, இந்திய சமுதா யம் மற்றும் புரட்சியின் பொருளாதார, சமூக, கலாச்சார மற்றும் அரசியல் பிரச்சனைகள் குறித்து தீவிரமான ஆய்வு மேற்கொள்வது என்று நான் தீர்மானித்தேன். அதன் பலனாக’இந்திய வடிவ சோசலிசத்தின் பொருளாதாரம் மற்றும் அரசியல்’ என்கிற தலைப்புடைய நூல் 1963-64ல் எழுதப்பட்டு அது ஆகஸ்ட் 1966ல் பதிப்பிக்கப் பட்டது. உண்மையில், அது இந்தியப் புரட்சியின் அடிப்படைத் திட்டத்தின் பரிணாம வளர்ச்சிக்கு என்னுடைய பங்களிப்பாகும்; அதன் அடிப்படை யில் கம்யூனிசஇயக்கத்திற்குள் இருந்த வேறு பாடுகளைத் தீர்ப்பதற்கு முயற்சிக்கப்பட்டது.
1964ல் வகுக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் திட்டம் இந்த வேறு பாடுகளைத் தீர்த்ததென்பது தெரிந்ததென்கிற போதிலும்; ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு பிரிவு அதை ஏற்கவில்லை. மற்ற பல பிரச் சனைகளுடன், தற்போதைய இந்திய சமுதாயத் தில் முதலாளித்துவத்திற்கு முந்தைய சமுதாயத் தின் செல்வாக்குகள் எந்த அளவிற்கு இருக்கின்றது என்பது பற்றியும் அந்த திட்டம் பரிசீலிக்க வேண்டியிருந்தது. பிரச்சனையும், அதன் தீர்வும் கட்சித் திட்டத்தில் பின்வரும் வார்த்தைகளில் விளக்கப்பட்டிருக்கின்றன:
‘மேற்கு ஐரோப்பாவிலும், இதர முன்னேறிய முதலாளித்துவ நாடுகளிலும் நிகழ்ந்தது மாதிரி யான முதலாளித்துவ வளர்ச்சி இந்தியாவில் நிகழவில்லை. இந்திய சமுதாயம் முதலாளித் துவப் பாதையில் வளர்ந்து கொண்டிருந்த போதி லும், அது முதலாளித்துவத்திற்கு முந்தைய சமுதாயத் தின் பலமான கூறுகளை இன்னமும் தன்னுள் கொண்டுள்ளது. முதலாளிகளால் அழிக்கப்பட்ட, முதலாளித்துவத்திற்கு முந்தைய சமுதாயங்களின் சாம்பலின் மீது வளர்ந்த முன்னேறிய முதலாளித் துவ நாடுகள் போலல்லாது, இந்தியாவில் முதலாளித் துவம் அதற்கு முந்தைய சமுதாயத்தின் மேலே அப்படியே பொருத்தப்பட்டது. ஒரு நூற்றாண்டுக் கும் மேலாக ஆட்சி புரிந்த பிரிட்டிஷ் ஆட்சி யாளர்களோ அல்லது 1947ல் அதிகாரத்தைப் பெற்ற இந்திய முதலாளிகளோ, முதலாளித்துவ சமுதாயத்தின் தடையற்ற வளர்ச்சிக்கும், பின்னர் அது சோசலிச சமுதாயத்தால் நீக்கப்படுவதற்கும் இன்றியமையாத செயலான முதலாளித்துவத் திற்கு முந்தைய சமுதாயங்களுக்கு மரண அடி கொடுக்கும் வேலையைச் செய்யவில்லை.
ஆதலால், இன்றைய இந்திய சமுதாயமானது, ஏகபோக முதலாளித்துவம் சாதி, மத, இனக்குழு நிறுவனங்களுடன் இணைந்திருக்கும் ஒரு விசித் திரமான கலவையாகும். இவ்வாறாக, முதலாளித் துவத்திற்கு முந்தைய சமுதாயத்தின் அழிவில் நாட்டம் கொண்ட முற்போக்கு சக்திகளை ஒன்று படுத்தும் கடமையும், ஜனநாயகப் புரட்சியை மிக விரைவாக பூர்த்தி செய்வதற்காக அதற்குள்ளேயே இருக்கின்ற புரட்சிகர சக்திகளை உறுதிப்படுத் தும் கடமையும், சோசலிசத்திற்கு மாறிச் செல்வ தற்காக தளத்தைத் தயார்படுத்தும் கடமையும் தொழிலாளி வர்க்கத்தின்மீதும், அதன் கட்சியின் மீதும் விழுந்துள்ளது.’
கட்சியின் இந்தப்புரிதலின் அடிப்படையில், நான் மேலே குறிப்பிட்ட நூலில் சாதிப் பிரச் சனையை விவாதித்திருக்கின்றேன். அதிலிருந்து சில பொருத்தமான பகுதிகளை இங்கு கொடுப் பது பயனுள்ளதாக இருக்கும்:
‘மக்களின் சமூக வாழ்வின் மீது சாதியம் மற்றும் வகுப்புவாதம் ஆகியவற்றின் பிடி பலவீனமடைந்து கொண்டிருக்கும்போது, அவை அரசியல் ரீதி யாக மேலும் மேலும் வலுவடைந்து வருகின்றன என்பதென்னவோ முரண்பாடாகத் தோன்றலாம். ஆனால், அதுதான் உண்மை. தங்களது சாதியால் மற்றும் மதத்தால் விதிக்கப்பட்ட பாரம்பரிய சடங்குகள் மற்றும் பழக்க வழக்கங்களை மீறுகிற அனைத்து சாதிகளையும், மதக் குழுக்களையும் சேர்ந்த மக்களின் எண்ணிக்கை இடைவிடாமல் அதிகரித்துக் கொண்டிருக்கும் நாட்கள் இவை. பழைய புனிதத் தடைகள் முந்தைய தலைமுறை யினரை விட இன்று குறைவாகவே கடைப் பிடிக்கப்படுகின்றது. முந்தைய தலைமுறையே தன்னுடைய முன்னோர்களைவிடக் குறைவான அளவே கடைப்பிடித்தது. சாதி மற்றும் மதத்தால் விதிக்கப்பட்ட புனிதத் தடைகளைக் கடைப்பிடிக் காத ஒரு போக்கு குறைந்தபட்சம் ஒன்றரை நூற்றாண்டுகளாக நிகழ்ந்து கொண்டிருக்கின் றது. தீட்டு மற்றும் தீண்டாமை, சமபந்தி போஜனம் மற்றும் சாதிகளுக்கு இடையிலான திருமணம் போன்றவை சம்பந்தமான விதிகள் மக்கள் மீதான தங்களுடைய பிடிமானத்தை மென்மேலும் இழந்து வருகின்றன.
அதே சமயம் சாதி, மதச் சமூகம், இனம் ஆகியவை நாட்டின் அரசியல் வாழ்வில் மென்மேலும் சக்தி மிக்கவையாக ஆகி வருகின்றன. ஒரு சமூக அமைப்பு என்கிற முறையில் சாதியின் விதிகளையும், தடை களையும் கடைப்பிடிக்க மறுக்கும் அதே நபர்கள் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை வசீகரிப்பதற் காகவும், வேலைகளைப் பெறுவதற்காக அல்லது ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக சரியான இடத் தில் இருக்கும் சரியான நபர்களின் மீது செல் வாக்கு செலுத்துவதற்காகவும் சாதி இறுக்கத் தைப் பயன்படுத்துகின்றனர்.’
இந்த முரண்பட்ட நிகழ்வை முறையாகப் புரிந்து கொள்வதற்கு இரண்டு உண்மைகளைக் கவனிப்பது அவசியம்.
முதலாவதாக, நவீன முதலாளித்துவம், ‘முதலில் பிரிட்டிஷ் மேலாதிக்கவாதிகளின் மூலமாகவும், பின்னர் தேசிய முதலாளி வர்க்கத்தின் மூலமாக வும் இந்தியாவின் சமூகப் பொருளாதார, கலாச் சார, அரசியல் வாழ்வின் பல்வேறு பக்கங்களில் புரட்சிகரமான மாறுதல்களை நிகழ்த்தியது…. ஆதலால், தங்களது குறுகிய சுயநலன்களுக்காகச் செயல்பட்ட போதும், பிரிட்டிஷ் ஆட்சியாளர் கள்’ இந்தியாவின் ஆன்மா’ என்றழைக்கப்படு வதின் வேர்களை வெட்டினர்; நூற்றாண்டு கால பழமையான இந்திய சமுதாயத்தில் புரட்சிகர மான மாறுதல்களை அவர்கள் கொண்டு வந்தனர்.’
இரண்டாவதாக, ‘தாங்கள் அன்னிய ஆட்சி யாளர்கள் என்கிற உண்மை நிலையே பிரிட்டி ஷார்களை அன்னிய ஆட்சியாளர் தங்களுடைய நலன்களை பாதுகாக்கவே உள்ளார்கள் என்று கருதிய இந்திய சமுதாயத்தின் சில வர்க்கங்களை யும், பிரிவினைரையும் சார்ந்திருக்கச் செய்தது; உழைக்கும் மக்கள் திரளையோ அல்லது எழுந்து கொண்டிருந்த முதலாளித்துவ வர்க்கத்தையோ தங்களது அன்னிய ஆட்சியை ஆதரிப்பதற்காகச் சார்ந்திருக்க முடியாது என்பதால், பிரிட்டி ஷாருக்கு முந்தைய பழைய ஆட்சியின் பிரதிநிதி களான- மன்னர்கள் மற்றும் நிலப்பிரபுக்கள், காலாவதியாகிப் போன சாதிப்பிரிவினைகள் நிறைந்த பழைய சமுதாயத்தின் பூசாரிகள் மற்றும் அவர்களைப் போன்றவர்கள், மத அதிகார பீடத்தின் பிரதிநிதிகள், கிராம சமுதாயங்கள் மற்றும் இனக்குழுத் தலைவர்கள், இதரர்கள் ஆகியோரின் ஆதரவைத் திரட்ட வேண்டியிருந்தது. ஆதலால், பழைய சமுதாயத்தின் பிரதிநிதிகளான இந்தப் பிரிவைச் சேர்ந்த ஒவ்வொருவரிடமும் அவர்கள் சமரசம் செய்து கொள்ள வேண்டி யிருந்தது. அவர்கள் மக்கள் திரளின் பிற்படுத்தப் பட்ட (சாதி, மதம், இனம் இத்தியாதி) உணர்வை யும் பயன்படுத்த வேண்டியிருந்தது.
அன்னிய ஆட்சியாளர்களுக்கும், சாதி உள்ளிட்ட காலாவதியாகிப் போன சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்குமிடையிலான இந்த சமரசம் சுதந்திரப் போராட்டத் தலைமையிலும் பிரதி பலித்தது. அரசியல் ரீதியான முற்போக்குத் தன்மையுடன், சமூகக் கலாச்சார பிற்போக்குத் தன்மையும் இணைந்திருந்ததென்பது எழுந்து கொண்டிருந்த முதலாளித்துவ ஜனநாயக இயக் கத்தின் ஒரு முகமாகும். சமூகக் கலாச்சார முற் போக்குத் தன்மை அன்னிய ஆட்சியாளர்களுக்கு அரசியல் ஆதரவளித்ததென்பது அதே நாணயத் தின் மறுபக்கமாகும்.
வர்ண தர்மம் அல்லது இஸ்லாமியச் சட்டம் ஆகியவற்றை பாதுகாப்போம் என்கிற உறுதி யேற்றுக் கொண்ட, இந்து அல்லது முஸ்லிம் மறுமலர்ச்சியை ஆதரிக்கும் சுதந்திரப் போராட்ட வீரர்கள்; சுதந்திரப் போராட்டத்தை எதிர்த்து பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் கைகோர்த்துக் கொண்ட முற்போக்குவாதிகள் மட்டுமின்றி ‘சோசலிஸ்டுகளும்’ – ஆகிய இரண்டு மாற்றுக் களை எழுந்து கொண்டிருந்த முதலாளி வர்க்கத் தின் அரசியல் தலைமை முன் வைத்தது.
இந்த இரண்டு போக்குகளும் இறுதியில் ‘ஒரே, பிரிக்க முடியாத இந்தியா (அகண்ட பாரதம்)’ மற்றும் ‘இந்து மற்றும் முஸ்லிம் ஆகிய இரண்டு தேசங்களைக் கொண்ட இந்தியா’ ஆகிய இரு கோட்பாடுகளில் தங்களை பலப்படுத்திக் கொண் டன. விடுதலை இயக்கத்தின் முதலாளித்துவ தலைமையின் போற்றப்பட்ட லட்சியம் நிறை வேறியபோது அது பழைய, ஒன்றுபட்ட, பிரிட் டிஷ் ஆளுகைக்குட்பட்ட இந்தியா இரண்டு சுதந்திர தேசங்களாகப் பிரிக்கப்படும்வடிவத்தை எடுத்ததென்பது அந்தத் தலைமையின் தோல்வியே ஆகும்.
அந்த நிலைமையை உண்டாக்கிய முதலாளித் துவ தலைமையின் பிரிவுகளுக்கெதிராகப் போராட்டப் பதாகையை உயர்த்திப் பிடித்தது நாங்கள்தான் என்று கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த எங்களால் பெருமையுடன் கூறிக் கொள்ள முடியும். எங்களது முயற்சியில் நாங்கள் தோல்வி அடைந்தோம் என்பதென்னவோ உண்மைதான்; அத்துடன் அந்த முயற்சி எடுக்கும் போதும் சில பெரும் பிழைகளைச் செய்தோம் என்பதும் உண்மைதான் என்றபோதும், விடுதலை இயக்கத்தில் பங்கேற்ற மற்ற ஒவ்வொரு அரசியல் கட்சியும், அமைப்பும், குழுவும் முதலாளித்துத் தலைமையின் இந்த அல்லது அந்தப் பிரிவின் பின்னால் அணிதிரண்டபோது, கம்யூனிஸ்டு களாகிய நாங்கள் இரு பிரிவுகளையும் எதிர்த்துப் போராடினோம் என்பதும் உண்மை. நாட்டி லிருந்த அரசியல் கட்சிகள், குழுக்கள், அமைப்பு கள் ஆகியவற்றில், இந்தியாவில் வாழும் பல்வேறு தேசிய இனங்களை ஒன்றுபடுத்துவதற்காகவும், ஒரு தன்னார்வக் கூட்டமைப்பை அமைப்பதன் மூலம் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங் களின் பலன்களை உறுதிப்படுத்தவும், மக்களின் புதிய இந்தியாவை நிர்மாணிக்கவும் போராடியது நாங்கள் மட்டுமே. மொத்த அரசியல் நிலைமை யில் உடனடியாகத் தாக்கத்தை ஏற்படுத்த முடி யாத அளவு நாங்கள் மிகச் சிறிய சக்தியாக இருந் தோம் என்பதும், ஆதலால் நாடு பிரிக்கப்பட்ட தும், அது துயரம் மிக்க வகுப்புக் கலவரங்களுக்கு இட்டுச் சென்றது என்பதும் உண்மை. ஆனால் நாங்கள் முயற்சித்தோம் என்பதே திருப்திக்கும் பெருமிதத்திற்கும் உரிய விசயமாகும்.
1930களின் பின்பாதியில் இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் தன்னை ஒன்றுபடுத்திக் கொண்டு, நாட்டின் அரசியல் நிலைமையில் நேரடியாகத் தலையிட ஆரம்பித்த நாளிலிருந்து, அதன் தலை மையும், தொண்டர்களும், அதைப் பின்பற்றும் மக்களும் காங்கிரஸ், முஸ்லிம்லீக் ,மற்றிதர அரசியல் கட்சிகளில் தங்களைப் பலப்படுத்திக் கொண்ட முதலாளித்துவ –நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் தத்துவத்திற்கு எதிராக இடைய றாத போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது. 1940களில், வெள்ளையனே வெளியேறு இயக்கத் திலிருந்து ஒதுங்கியிருந்த அதே வேளையில், விடுதலை இயக்கத்தின் மீது அடக்குமுறையை ஏவும் பிரிட்டிஷ் கொள்கையை எதிர்த்தும். சோவியத் யூனியன் மற்றும் இதர உலகப் புரட்சி கர சக்திகளின் பின்னாலும் அதே வேளையில் அத்தருணத்தில் பாசிஸ எதிர்ப்பு முகாமில் இருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வும் போராடினோம்; காங்கிரஸ் வகை அகண்ட பாரதத்திற்கும், முஸ்லிம்லீகின் இரு தேசக்கொள் கைக்கும் எதிராக ஏககாலத்தில் நாங்கள் நடத்திய போராட்டம், சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் நவீனமயமாக்கல் ஆகியவற்றிக்கான இந்தியா வின் போராட்டத்தை வெற்றிகரமான முடிவை நோக்கி எடுத்துச் செல்லும் முயற்சியிலிருந்து பிரிக்க முடியாததாகும்.
இந்தப் போராட்டம் எங்களைப் பெரும்பா லும் விடுதலைப் போராட்டத்தின் பொது நீரோட்டத்திலிருந்து தனிமைப்படுத்தியது என்கிற போதிலும், இந்தியாவிலும், அயல்நாடுகளிலும் முதலாளி வர்க்கத்தையும் அதன் கூட்டாளிகளை யும் எதிர்த்துப் போராடுவதற்காக பாட்டாளி வர்க்கப் புரட்சி எனும் பதாகையின் கீழ் மென்மே லும் பெரிய எண்ணிக்கையில் உழைக்கும் மக்களை, எங்களது மனஉறுதியை அது பதப்படுத்தியது. அதனால்தான், நாட்டிலுள்ள இடதுசாரி சக்தி களில் தனியொருசக்தியாக, வங்கத்தின் தெபாகா இயக்கம், ஆந்திராவின் தெலுங்கானா இயக்கம், மலபார், மராட்டியத்தின் வொர்லி பகுதி மற்றும் இதர பிரம்மாண்டமான போர்க்குணமிக்க இயக் கங்களை, யுத்தத்திற்குப் பிந்தைய வருடங்களி லும், விடுதலைக்குப் பிந்தைய வருடங்களிலும் எங்களால் நடத்த முடிந்தது. அந்தப் போக்கில் சில பெரும் பிழைகளை நாங்கள் செய்தோம் என்கிற உண்மை இன்னும் பெருமளவிலான மக்களின் ஆதரவைப் பெறுவதிலிருந்து எங்களைத் தடுத்துவிடவில்லை.
விடுதலைக்குப் பின் இயற்றப்பட்ட புதிய அரசியல் சட்டத்தின் கீழ் நடந்த முதல் பொதுத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்றத்தி லும், நான்கு மாநிலங்களிலும் முக்கிய எதிர்க்கட் சியாக ஆனதிலிருந்து இது தெளிவானது. அந்த நான்கில் இரண்டு மாநிலங்களில் கட்சி, தன் தோழமைக் கட்சிகளுடன் சேர்ந்து சட்டமன்றத் தில் கிட்டத்தட்ட பெரும்பான்மை பெற்று, கூட்டணி அரசாங்கம் அமைக்கும் நிலை வரை வந்தது. ஐந்து வருடங்களுக்கு பின்னர் கட்சி உள்ளபடியே பெரும்பான்மை பெற்றது; அதைத் தொடர்ந்து அது தானே தன்னுடைய சொந்த மாநில அரசாங்கத்தை அமைத்தது.
இது கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமே உரித் தான பெருமை. பின்வந்த ஆண்டுகளில் கட்சியில் பிளவு ஏற்பட்டபோது பிளவுபட்ட இரண்டில் வலுவானதாக இருந்த கட்சி இடதுசாரி மற்றும் இதர எதிர்க்கட்சிகளைக் கொண்ட ஆட்சிகள் அமைக்கப்பட்டபோது அந்த கூட்டணியின் முக்கிய அங்கமாக ஆனது. இன்றும் கூட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மூன்று மாநிலங் களில் கூட்டணிக்கும், அரசாங்கத்திற்கும் தலைமை தாங்குகின்றது. வேறு எந்தக்கட்சியோ, குழுவோ அல்லது அமைப்போ இத்தகைய ஒரு நிலையை வகித்ததில்லை.
1980ம்ஆண்டின் அரசியல் நிகழ்வுகள் மேலே கூறப்பட்டது எவ்வளவு உண்மை என்பதை மீண்டுமொரு முறை அடிக்கோடிட்டுக் காட்டின. முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ ஆளும் வர்க்கங் களின் கட்சிகள் அனைத்தும் உடைந்து சிதறி யதை அந்த வருடம் கண்டதுடன் அவற்றில் மிக வும் வலுமிக்க கட்சி, மத்தியிலும், பெரும்பாலான மாநிலங்களிலும் அதிகாரத்தில் இருந்தபோதும், அது உள்கட்சி மோதல்களால் பிளவுண்டு கிடந்த துடன் மக்களின் மீதான தனது பிடிமானத்தை அது மிக வேகமாக இழந்து கொண்டிருந்தது. ஜனநாயகத்திற்காகப் போராடுவது, உழைக்கும் மக்களின் நலன்களைப் பாதுகாப்பது என்கிற கொள்கை வழிப்பட்ட நிலை எடுக்கவும், அதற் காக இடதுசாரிகளுடன் ஒத்துழைக்கவும் மறுத்த அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் அதே கதிதான் ஏற்பட்டுக்கொண்டிருந்தது. ஆதலால், மக்களுக் குச் சேவை செய்யும், ஆளும் வர்க்கங்களை எதிர்த்துப் போராடும் ஒரு எளிய திட்டத்தின் அடிப்படையில் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் இதர எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் ஒரு இயக்கம் நடந்து கொண்டிருக்கின்றது.
ஆளும் வர்க்கங்களை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உள்ள ஒரே தத்துவம், இந்தியாவின் பிரச்சனை களுக்கு நியாயமான, நீடித்திருக்கும் தீர்வுகளைக் கண்டுபிடிக்கக் கூடிய தத்துவம், மார்க்சியம்-லெனினியம்தான். கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த நாங்கள் இந்த தத்துவத்தை இந்தியாவின் பிரத்தியேக நிலைமைகளுக்குப் பிரயோகிக்க முயற்சிப்பதால் தான் 1964 வரை ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்க மும், அதற்குப் பின்னர் சிபிஐ(எம்)-மும் அரசியல் தளத்தில் மிதமான வெற்றிகளைப் பெற்று வந்துள்ளோம்.
Leave a Reply