என். குணசேகரன்
(ஆனந்த் டெல்டும்டே நூலை முன்வைத்து)
இந்திய நாட்டின் முக்கிய சிந்தனையாளராகத் பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே இயங்கி வருகின்றார். அவரது “சாதிக் குடியரசு”என்ற நூல் அதிக விவாதங்களையும் விமர்சனங்களையும் எழுப்பியது சமகால சாதி அடுக்கின் இயங்கு முறை, இட ஒதுக்கீடு, தலித் இயக்கம், இடதுசாரி இயக்கம் என பரந்த தளத்தில் தனது கருத்துக்களை முன்வைத்து விவாதிக்கின்றார்.
மார்க்சிய ஆய்வு முறையை கையாள்கிற சிந்தனையாளர் என்பதால் அவருடைய கருத்துக்கள் ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட மக்களின் விடுதலை என்ற நோக்கில் அமைந்துள்ளன.
இந்த நூலின் உள்ளடக்கத்தில் நவீன தாராளமயம், சாதிக்கும் வர்க்கத்திற்கும் உள்ள உறவு, மதச்சார்பின்மை கோட்பாட்டின் உண்மையான பொருள், இந்திய அரசின் சில தன்மைகள், இந்துத்துவ நிகழ்ச்சி நிரல் போன்ற பல சமகாலப் பிரச்சினைகளை புதிய கோணங்களில் டெல்டும்டே விளக்குகிறார்.
அவரது கருத்துக்கள் மிக நுட்பமானவை, உயர்ந்த தரம் கொண்டவை; எனவே அவை மார்க்சிய இயக்கச் செயல்பாட்டுக்கு தேவையானவை. மார்க்சிய நடைமுறை நோக்கில் அவரது கருத்துக்களை ஆய்வு செய்வது அவசியமாகிறது.
சாதி -இட ஒதுக்கீடு
நூலின் முதல் தலைப்பாக இட ஒதுக்கீடு பிரச்சினை பேசப்படுகிறது. இட ஒதுக்கீடு குறித்த டெல்டும்டேவின் கருத்துக்கள் ஆழமாக பரிசீலிக்கத் தக்கன. சாதி, இடஒதுக்கீடு எனும் இரண்டு சொற்களும் பொது விவாதத்தில் பின்னி பிணைந்திருக்கின்றன என்று ஆசிரியர் தனது விளக்கத்தை துவக்குகிறார்.
இட ஒதுக்கீட்டு முறையே சமூக நீதியின் உயர்ந்த இலக்கு என்பது போன்றும், அனைத்துக்கும் அதுவே நிரந்தரமான தீர்வு என்றும், பல முதலாளித்துவ அரசியல் கட்சிகள் தலைதெறிக்க பேசுகின்றனர்.
இந்த போலித்தனத்தையும், சுயநல அரசியலையும் தகர்க்கிற வகையில் தனது கருத்துக்களை அடுக்கடுக்காக முன்வைக்கிறார் ஆசிரியர்.
இன்றைய நிலையில் இட ஒதுக்கீட்டு முறை ஒரு பெரும் இடியாப்பசிக்கலாக மாறி விட்டது என்று கருதுகிறார் டெல்டும்டே. இந்தத் திட்டம் தவறான முறையில் உருவாக்கப்பட்டு, விளைவுகளைப்பற்றி கவலைப்படாமல் மனம்போன போக்கில் அமலாக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடும் டெல்டும்டே, இது ஆளும் வர்க்கங்களுக்குத்தான் அதிகம் பயன்பட்டுள்ளது என்கிறார். குறிப்பாக, தலித் மக்களில் ஒரு பிரிவினர் தவிர, பெரும்பகுதி தலித் மக்களுக்கு அது பயன்படவில்லை என்று ஆதாரங்களுடன் டெல்டும்டே முடிவுக்கு வருகிறார்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தினராகவும் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட பகுதியினராகவும் உள்ள அடித்தட்டு மக்கள் பயன்பெறும் வகையில் இட ஒதுக்கீட்டு முறை இருந்திருக்க வேண்டும்; இந்த அடிப்படையில் அது வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, சாதி ஒழிப்பு என்கிற இலக்கை நோக்கிய பயணமாக அது இருந்திருக்க வேண்டும்.
ஆனால் தற்போது அது பெருமளவிற்கு சாதி அடையாளங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இதனால், இந்தியாவில் சாதியும் இட ஒதுக்கீடும் என்றென்றும் நிரந்தரம் என்கிற முடிவுக்கு வருகிற சூழல் ஏற்பட்டுள்ளதாக டெல்டும்டே கருதுகிறார்.
சாதி அடையாளம் சமூக சமத்துவம் ஏற்படுத்தவும், சாதி ஒழிப்பை நோக்கி சமூகத்தை முன்னெடுத்துச் செல்லவும் தேவையான நிகழ்ச்சி நிரல் பற்றி எதுவும் சிந்திக்காமல் இட ஒதுக்கீட்டினையே முதன்மைப் பிரச்சனையாக்குவது நாட்டின் அடித்தட்டு மக்களுக்கு பாதிப்பையே ஏற்படுத்தும். டெல்டும்டே குறிப்பிடும் அத்தகைய மாற்று நிகழ்ச்சி நிரல் கம்யூனிஸ்டுகளிடம் மட்டுமே உள்ளது. அதனை கம்யூனிஸ்ட்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
நவீன தாராளமய சீர்திருத்தங்கள் இட ஒதுக்கீட்டினால் கிடைக்கும் பலன்களை குறைத்துள்ள நிலையில்் இட ஒதுக்கீட்டு கோரிக்கைகளும் தீவிரமாக எழுப்படுகின்றன. பல்வேறு மாநிலங்களில் எழுப்பப்படும் கோரிக்கைகள் குறித்தும் அவற்றை சந்தர்ப்பவாத நோக்கில் பயன்படுத்துகிற அரசியல் சக்திகளையும் டெல்டும்டே விரிவாக விளக்குகின்றார்.
பல்வேறு மாநிலங்களில் எழுப்பப்படும் இடஒதுக்கீட்டு கோரிக்கைகள் குறித்தும், அவற்றை சந்தர்ப்பவாத நோக்கோடு பயன்படுத்தும் அரசியல் இயக்கங்கள் குறித்தும், இதன் விளைவாக, பல்வேறு பிரிவினரிடம் சாதி அடையாளம் கெட்டிப்படுகிற நிலை தொடர்ந்து வருவதையும் டெல்டும்டே தனது நூலில் சுட்டிக்காட்டுகிறார்.
மதமும் சாதியும் உழைக்கும் வர்க்கத்தை பிளவுபடுத்துகிற வரலாறு கொண்டவை என்பதை குறிப்பிடுகிற டெல்டும்டே, அவற்றால். பயனடை வது முதலாளிகள் மற்றும் அவர்களோடு இணைந்து நிற்கும் அரசியல் சக்திகள்தான் என்பதை எடுத்துரைக்கின்றார். மக்கள் சிந்தனையிலிருந்து வாழ்வாதாரப் பிரச்சினைகளை விலக்கி வைத்திட மதமும் சாதியும் நல்ல கருவிகளாகப் பயன்படுகின்றன என்பதனை அனுபவ அடிப்படையில் அவர் விளக்குகிறார்.
குழப்பமான சொற்றொடர்
சமூக ரீதியிலும், கல்வி அடிப்படையிலும் பின்தங்கிய வகுப்பாருக்கு இட ஒதுக்கீடு அளித்திட அரசியலமைப்புச் சட்டம் வழிவகுக்கிறது.
அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு340-ல் பின்தங்கிய வகுப்பினர் (Backward classes) என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ளது. ஆங்கிலத்தில் classes என்ற சொல்லுக்கு சாதி என்று பொருள் கொள்ள இயலாது. ஆனால் இந்த சொற்றொடர் “பிற்பட்ட சாதியினர்” என்கிற பொருளில்தான் பயன்பாட்டில் உள்ளது. இது ஒரு பெரும் குழப்பத்தை விளைவித்ததாக டெல்டும்டே கூறுகிறார் . இந்த குழப்பத்தை அரசியல் சக்திகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டனர் என்று கூறுகிறார்(பக்கம் 52).
இந்திய நாட்டைப் போன்ற மிகுந்த அசமத்துவ சமூக அமைப்பு கொண்டிருக்கின்ற நாட்டில் பின்தங்கிய நிலைமை என்பதனை வரையறுப்பது சிரமம். அனைத்து மக்களும் தாங்கள் பின் தங்கிய நிலையில் இருப்பதாக கூறிக் கொள்ள இயலும். சாதியம், மக்களை தலித், தலித் அல்லாதவர்கள் என்று கூறு போட்டு அரசியல் சுயநலமிகள் பலனடைய வாய்ப்பினை ஏற்படுத்துகிறது. பல பகுதிகளில் தலித்துகள், ஆதிவாசிகள்எந்த அளவிற்கு பின்தங்கிய நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ, அதே நிலைமைகளில்
தான் பிற்படுத்தப்பட்டோர் என்று வரையறுக்கப்படுகிற பிரிவினர் பலரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
எடுத்துக்காட்டாக, குறிப்பிட்ட ஒரு சாதி என்கிற கருத்தாக்கம் அந்தப் பிரிவினரில் வறிய நிலையிலுள்ள மக்களையும்கூட, அதே சாதிக்
குள் இருக்கிற செல்வாக்கு மிக்க சக்திகளோடு ‘நமது சொந்தங்கள்” என்று ஒருங்கிணைய வழிவகுக்கிறது. அது மட்டுமல்லாது தலித் மக்களை எதிரிகளாகப் பார்க்கவும் அவர்களைத் தூண்டுகிறது.
எனவே, வாழ்வாதார சூழலை குறிப்பிடும் போது பின்தங்கிய நிலைமை என்று குறிப்பிட்டால் அது வர்க்க தன்மை குறித்து பேசுவ
தாகவே அமையும். வர்க்கம் என்பது மிக நாசுக்காக சாதி என்று அடையாளப்படுத்தப்பட்டுவிட்டது என்கிறார் டெல்டும்டே. வர்க்க ஒற்றுமையை கட்டுவதற்கு முயல்கிற அனைவரும் எதிர்கொள்ள வேண்டிய சவாலாக இது உள்ளது.
இட ஒதுக்கீட்டின் மூன்று வடிவங்கள்
தற்போதைய வடிவத்திலான இட ஒதுக்கீட்டு முறை எங்கிருந்து தொடங்கியது? வேலை, கல்வி ஆகியவற்றில் முன்னுரிமை அளிப்பதன் வழியாக ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பிரதி
நிதித்துவத்தை வளர்ப்பது என்கிற நோக்கத்திலிருந்து இட ஒதுக்கீட்டு முறை துவங்கியது. மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற பாராளுமன்ற அவைகள், கல்வித்துறை,
வேலைவாய்ப்பு என மூன்று வடிவங்களில் இட ஒதுக்கீடு அமலாக்கப்பட்டு வருகிறது. மூன்றிலும் அது எத்தகைய தாக்கத்தையும், சிக்கல்களையும் ஏற்படுத்தியுள்ளது என்பதை டெல்டும்டே விளக்குகிறார்.
சட்டமன்ற நாடாளுமன்ற இடங்களில் தலித் மக்களுக்கு இட ஒதுக்கீடு என்கிற முறை உள்ளது. தலித் அல்லாத இதர சாதிகளைச் சேர்ந்தவர்
களின் வாக்குகளை சார்ந்து தலித் உறுப்பினர் கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இயல்பாகவே தேர்ந்தெடுக்கப்படுகிற தலித் உறுப்பினர் பெரும்பான்மை சமூகத்தையும் அவர்கள் சார்ந்திருக்கிற கட்சியையும் சார்ந்தே செயல்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
இந்த நிலையில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் என்பதற்கான தர்க்க நியாயங்கள் தகர்ந்து போகின்றன என்கிறார் டெல்டும்டே. முதலில் இந்த ஒதுக்கீடு 10 ஆண்டுகள் வரை இருக்கும் என்று நிச்சயிக்கப்பட்டது .அதற்குப் பிறகு முறையான பரிசோதனை நடத்தி முடிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது தொடர்ந்து இயல்பாகவே அது நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த முறையினால் பலன் பெற்றது ஆளுகிறவர்களே தவிர தலித் மக்கள் அல்ல என்று டெல்டும்டே வாதிடுகிறார். இந்தக் கருத்தில் பலருக்கு உடன்பாடு இல்லாமல் போகலாம் .
ஆனால் அரசியல் பிரதிநிதித்துவம் என்பதில் அனைவருக்கும் சம வாய்ப்பு என்கிற லட்சியத்தை அடைய சட்டமன்ற பாராளுமன்ற இடங்களில் சில இடங்களை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒதுக்கினாலே போதும் என்கிற கருத்து குறைபாடு கொண்டது. அடுத்து கல்வித் துறையில் நடைமுறையிலுள்ள இட ஒதுக்கீடு எந்த அளவிற்கு பயன்
பட்டிருக்கிறது என்பதிலும் டெல்டும்டே தனது கருத்துக்களை வெளிப்படுத்துகிறார். சமமான தரமான கல்வி வாய்ப்புகள் அனை
வருக்கும் கிடைப்பதற்கான ஒரு நிலை ஏற்படுகிறபோது இட ஒதுக்கீடு அர்த்தமற்றதாக ஆகிவிடும் என்று டெல்டும்டே அழுத்தமாக குறிப்பிடுகிறார்.
கார்ல் மார்க்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிட்டபோதே கல்வியில் சமமான வாய்ப்புகளை ஏற்படுத்தி, கல்வி அனைவருக்கும் கிடைக்கிற சமூகத்தை உருவாக்கும் கருத்தினை வெளிப்படுத்தி இருந்தார். கம்யூனிஸ்டுகளின் கல்வி குறித்த பார்வை இதிலிருந்தே துவங்குகிறது. டெல்டும்டேவும் இதனை வலியுறுத்துகிறார். கல்வியில் தனியார்மயம் அதிகரித்து வரும் நிலையில் இட ஒதுக்கீட்டினைப் புறக்கணிக்கிற போக்கும் தற்போது உள்ளது
வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு என்கிற பிரச் சினை இந்தியாவின் தற்போதைய தொழிலாளர்கள் நிலைமைகளிலிருந்து ஆராயப்பட வேண்டும். நாட்டின் அமைப்பு ரீதியான துறைகளில் உள்ள தொழிலாளர்கள் மொத்தத் தொழிலாளர்களில் 6 சதவீதம் ஆகும். குறுகிய அளவில் உள்ள இந்த வாய்ப்பும் சுருங்கிக் கொண்டே வருகிறது. தொடர்ந்து அரசு மற்றும் அரசுத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில்தான் எல்லா சாதியினரும் தங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று பெரும் கூச்சல் எழுப்பி போராடி வருகின்றனர்.
இதனையொட்டி டெல்டும்டே விரும்பத்தகாத ஒரு நிகழ்வு போக்கினைக் குறிப்பிடுகிறார். இட ஒதுக்கீட்டினால் ஒரு சில தலித்துகள் அல்லது ஒரு சில தலித் குடும்பங்கள் பலன் பெறுவதை காரணம் காட்டி ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எதிராக வெறுப்புணர்வு தூண்டப்படுகிறது. காலம் காலமாக சமூக ரீதியாக ஒடுக்கப்பட்டு வரும் தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் கொடுமைகள் மேலும் அதிகரித்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட தனி நபருக்கு அல்லது அவர் சார்ந்திருக்கும், அவரோடு தொடர்புடைய குடும்பத்தினர் பலன் பெற்றதற்கு. அவரது முழு சாதி சமூகமும் விலை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. தலித்துக்கள் அனைவருக்கும் இட ஒதுக்கீட்டுப் பலன் கிடைப்பதில்லை. ஆனால், தலித் மக்களுக்கு எதிரான உணர்வு, தலித் அல்லாத மக்கள் மீது தீவிரமாகும் நிலை உருவாகி, கூடுதலான சாதிக் கொடுமைகள், தாக்குதல்கள் என அது தீவிர வடிவம் எடுக்கிறது இவ்வாறான வாதங்களை டெல்டும்டே அடுக்கு
கிற நிலையில் அவர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பேசுகிறாரோ என்ற எண்ணம் ஏற்படக்கூடும். ஆனால், அவரது நோக்கம் அதுவல்ல. இட ஒதுக்கீடு என்பது அனைத்துக்குமான சர்வரோக நிவாரணி என்ற தன்மையில் சாதி உணர்வுகளையும் அடையாள அரசியலையும் மேலோங்கச் செய்கிற சிக்கல்களைதான் அவர் வெளிப்படுத்துகிறார். இவை அனைத்தும் ஆழமாக சிந்திக்க தகுந்தது மட்டுமல்ல, சமூக சமத்துவம் நோக்கி உரிய பாதையை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியத்தை இன்றைய நிலை ஏற்படுத்துகிறது. இந்த முடிவிற்கு வருவதற்கே டெல்டும்டே எழுத்துக்கள் நம்மை இட்டுச் செல்கின்றன.
தகுதி, திறமை..
தகுதி, திறமை ஆகியவற்றின் பெயரால் இட ஒதுக்கீடு கூடாது என்று பேசுகிறவர்களுக்கும் டெல்டும்டே சரியான பதிலடி அளிக்கின்றார். கடந்த காலங்களில் தகுதி திறமையுடன் வாழ்ந்தவர்கள் இந்தியாவை வழிநடத்திய நிலையில்தான் மனித வளர்ச்சியில் இந்தியா அதலபாதாளத்தில் இருந்து வருகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். கல்வியறிவு, வறுமை, ஊட்டச்சத்து குறைவு, நோய், குழந்தை இறப்பு உள்ளிட்ட அனைத்திலும் மிக மோசமான நிலையில் இந்தியா இருப்பது தகுதி திறமை வாய்ந்தவர்களது மோசமான நிர்வாகத்தினால் தான் எனச்சாடுகிறார் ஆசிரியர்.
அதே நேரத்தில் தலித் மக்கள் இட ஒதுக்கீட்டினால் பெரும் பலனை பெற்றுவிடுகிறார்கள் என்று கருத இயலாது. இட ஒதுக்கீடு என்பது இதுகாறும் புறக்கணிக்கப்பட்ட தலித் மக்கள் சமூகவாழ்வில் பங்கேற்பதற்கான ஒரு வழிமுறையே தவிர அது அவர்களுக்கான சமூகநீதியின் அளவுகோலாக மாறிடாது என்று டெல்டும்டே சரியாகவே குறிப்பிடுகிறார்.
அடையாள பூர்வமான ஒரு முன்னேற்ற நடவடிக்கை என்கிற நிலையிலிருந்து மாறி ஒடுக்கப்படுகிற சாதியினரின் பின்தங்கிய நிலையை மாற்றுவதற்கான ஒரே தீர்வு என்கிற இடத்திற்கு இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டுள்ளது.அத்துடன், இட ஒதுக்கீடு தலித் மக்களுக்கு சமூகம் தருகிற பெருந்தன்மையான கொடை என்கிற நிலையை ஏற்படுத்தியுள்ளது. இட ஒதுக்கீடு சாதி நெறியை மறுபதிப்பு செய்து தலித் மக்கள் இந்த சமூகத்துக்கு நன்றிக்கடன் பட்டவர்களாக இருக்கச் செய்கிறது. இந்த கருத்துக்கள் அனைத்தும் டெல்டும்டேவினால் ஆணித்தரமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு ஏற்படுத்தியிருக்கிற விளைவுகளை பாரபட்சமின்றி அவர் அணுகுகிற முறை முக்கியமானது.
நவீன தாராளமய மாற்றம்
நவீன தாராளமயம் 1991 -ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டபோது அது முதலாளித்துவத்தின் தீவிர வடிவமாக இயங்கியது. உலகம் முழுவ
தும் வெவ்வேறு வடிவங்களில் கொண்டுவரப்பட்ட நவீன தாராளமயம், அரசை மேலும் தீவிரமான ஒரு ஒடுக்குமுறைக் கருவியாக மாற்றியது. இதன் விளைவாக, மக்கள் வெவ்வேறு வகையில் தங்களது விரக்தியையும் அதிருப்தியையும் வெளிப் படுத்தினர். அடிப்படைவாதமும் மதவாதமும் மக்களிடையே தலைதூக்கியது. இந்தியாவில் இந்துத்துவ இயக்கமாக அது வடிவம் எடுத்தது.
நவீன தாராளமய காலத்தில் பொதுத்துறை வேலை வாய்ப்புகள் சுருங்கிய சூழல் ஏற்பட்டது. .அதேபோன்று கல்வியிலும் வாய்ப்புகள் குறைந்து வணிகமயம் தீவிரமாகியது. வேடிக்கை என்னவென்றால் அனைத்து வாய்ப்புக்களும் சுருங்கிய நிலையில்தான், இடஒதுக்கீட்டுக்கான கோரிக்கைகள் வீறு கொண்டு எழுந்தன!. அவற்றை பல்வேறு சமூக, சாதிப் பிரிவினர் எழுப்பினர். அவற்றை பல அரசியல் சக்திகள் தங்களது போட்டி அரசியல் லாபத்திற்கு பயன்படுத்திக் கொண்டனர்.
தனியார் துறையில் இட ஒதுக்கீடு என்கிற கோரிக்கை கோட்பாட்டு அளவில் சரியாக இருந்தாலும் தனியார் துறை நிர்வாகங்கள் இட ஒதுக் கீட்டினை அமலாக்குமா என்கிற கேள்வியை டெல்டும்டே எழுப்புகிறார். இவை அனைத்தும் எடுத்துக்காட்டுவது என்னவென்றால் அரசுத்துறை வேலைவாய்ப்புகளும், பொதுத்துறை வேலைவாய்ப்புகளும் சுருங்கியுள்ள சூழலில் இட ஒதுக்கீடு என்பது வேலைக்கான ஒரு வழி முறையாக நீடிக்குமா? அரசியலமைப்
புச் சட்டம் இட ஒதுக்கீடு முறை நமது சாதிய சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அளித்த உறுதி நிறைவேறியதா? இட ஒதுக்கீடு முறை அதன் குறிக்கோளை எட்டியதா? இந்தக் கேள்விகள் வலுவாக எழுகின்றன என்று டெல்டும்டே குறிப்பிடுகிறார்.
உள்ளாட்சி, நாடாளுமன்றம், ஜனநாயகம் மொத்த தலித் மக்கள் தொகையில் 80 சதவீதம் தலித் மக்கள் கிராமங்களில் வாழுகிற நிலையில் உள்ளாட்சி மன்றங்களில் தலித் இட ஒதுக்கீடு முறையினால் எத்தகைய பலன் கிட்டியிருக்கிறது இதனையும் டெல்டும்டே விவரிக்கின்றார். பெண்களுக்கான இட ஒதுக்கீடாக இருந்தாலும் பழைய அதிகாரமிக்க கிராம ஊராட்சித் தலைவர்களே தங்களது மனைவி அல்லது மருமகளைத் தேர்ந்தெடுக்கப்படுமாறு செய்துவிட்டு ஊராட்சி விவகாரங்கள் அனைத்தையும் அவர்களே கவனித்துக் கொள்கிற நிலை நீடிப்பதை ஆசிரியர் சுட்டிக்காட்டுகின்றார். அதே போன்று எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடாக இருந்தாலும் கூட கிராமப்புற அதிகாரமிக்க வர்க்கத்தினரும் சாதியினரும் ஆதிக்கம் செலுத்துவதை சுட்டிக்காட்டுகின்றார். ஆக, உள்ளூர் மட்டத்தில் ஆதிக்கம் சாதியினர் பணக்கார விவசாயிகள், நிலப்பிரபுக்கள் அதிகார மையமாக செயல்படுவதில் இட ஒதுக்கீடு பெரிய மாற்றத்தை கொண்டுவரவில்லை. இதற்கு தமிழகத்தில் நடந்த மேலவளவு உள்ளிட்ட பல சம்பவங்களை எடுத்துரைக்
கின்றார் டெல்டும்டே தற்போதுள்ள இட ஒதுக்கீடு முறை இதே நிலையில் நீடித்தால் இட ஒதுக்கீட்டு பலன் கிடைக்க வேண்டியவர்களுக்கு பதிலாக அந்த குறிப்பிட்ட வகுப்பினரின், குறிப்பிட்ட பகுதியினரின் நலன்களையே அது பாதுகாப்பதாக இருக்கிறது என்பதை டெல்டும்டே குறிப்பிடுகின்றார் இட ஒதுக்கீட்டு முறை அமலாகத் துவங்கிய காலங்களில் இந்த குறிப்பிட்ட வகுப்பினரின் மேல்மட்டத்தில் உள்ளவர்கள் மட்டுமே பலன் பெற்ற
தாக கூற இயலாது ஆனால் இன்று இட ஒதுக்கீட்டின் பலனை மூன்றாவது அல்லது நான்காவது தலைமுறை அனுபவிக்க துவங்கிய நிலையில் இட ஒதுக்கீட்டு முறையில் உள்ள பிரச்சனைகள் தலைதூக்கி வருகின்றன.
சட்டமன்றம் நாடாளுமன்றங்களில் ஜனநாயக பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேறு வழிமுறைகளை நாடுவது அவசியம். இதற்கு இட ஒதுக்கீடு ஒன்றே தீர்வல்ல. விகிதாச்சார பிரதிநிதித்துவம் போன்ற தேர்தல் முறைகளில்அதனை சாதிக்க இயலும் என்று டெல்டும்டே கருதுகின்றார். உண்மையான ஜனநாயகத்தை நோக்கிச் செல்ல விகிதாச்சார பிரதிநிதித்துவம் போன்ற சீர்திருத்தங்கள் தேவை என்று கம்யூனிஸ்ட்கள் நீண்ட காலமாக பேசி வருகின்றனர். தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகிற பொருளாதார கொள்கைகளால் ஒதுக்கீட்டுக்கு உரிய மொத்த இடங்கள் குறைந்து வருகிற நிலையில், மக்கள் தங்களுடைய சமூக பொருளாதாரம் பின்தங்கிய நிலைமையை போக்குவதற்கு சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடுதான் முழுமையான தீர்வு என்று நம்புகிற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்தான் இட ஒதுக்கீடு கோரிக்கைகளுக்கான போராட்டங்களில் சம்பந்தப்பட்ட மக்கள் அதிக அளவில் பங்கேற்கின்றனர்.
ஆனால், பல்வேறு சாதிப் பிரிவினர் இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்துவதற்கான கோரிக்கைகளை வைப்பதில் போட்டிபோட்டு வருகின்ற நிலையில் இட ஒதுக்கீட்டில் உள்ள சிக்கல்
களை பகுத்தறிவுடன் விவாதிப்பதற்கான இடமில்லாமல் போகிறது. இன்றைய பாராளுமன்ற ஜனநாயகத்தையே சுயநல சக்திகள் தங்களுக்கு சாதகமாக வளைத்துக்கொள்ள இட ஒதுக்கீட்டு முறையில் உள்ள கோளாறுகள் வாய்ப்பை தருகின்றன. இட ஒதுக்கீடு கோரிக்கைகள் அதிகரிக்கிற நிலையில் சமூகப் பிளவுகள் தீவிரமடைந்து வருவதனை தடுக்க இயலாது.
இங்கு கம்யூனிஸ்டுகளின் மாற்றுப்பார்வை முக்கியத்துவம் பெறுகிறது. சுயநல அரசியல், சாதிய சக்திகள் இட ஒதுக்கீட்டு முறையை சாதிய திரட்டலுக்கு பயன்படுத்துகிறார்கள் என்பது உண்மைதான். எனினும், நீண்ட கால சமூக ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஒரு சிறு வாய்ப்பாக உள்ளது இட ஒதுக்கீடு நீடிக்க வேண்டும் என்பதில் கம்யூனிஸ்டுகள் உறுதியாக உள்ளனர்.
அதே சமயத்தில், டெல்டும்டே குறிப்பிடுகிற கிராமப்புற அதிகார ஆதிக்க நிலையை மாற்றிட வேண்டும். உண்மையான நிலச்சீர்திருத்தம், மக்கள் பங்கேற்புடன் விவசாய, தொழில் விரிவாக்கம் அவசியம். பெரும் கார்ப்பரேட் பெருமுதலாளித்துவ மூலதனத்தைப் பெருக்குகிற கொள்கைகளை கைவிட்டுவிட்டு, விரிவான வேலைவாய்ப்பினை ஏற்படுத்துகிற வளர்ச்சி தேவை.
இத்தகு மாற்றம் வர வேண்டும் என்றால் உழைக்கும் வர்க்கங்களின் பலமான ஒற்றுமை கட்டப்பட வேண்டும்.அப்போதுதான் அரசு அதிகாரம் உழைக்கும் மக்களிடம் என்கிற நிலை உருவாகும். இன்றைய சிக்கல்களை தீர்க்க இதுவே சரியான பாதை.
(சாதி-வர்க்க உறவு,இந்துத்துவா போன்றவை பற்றிய டெல்டும்டே கருத்துக்கள்-அடுத்த இதழில் …)
Leave a Reply