காப்பீட்டுக் கழக ஊழியர்கள் சங்கத்தின் முன்னோடித் தலைவரும், மார்க்சிய கல்வியாளரும், எழுத்தாளருமான தோழர். இ.எம்.ஜோசப் ஜூன் 30 அன்று காலை நம்மிடமிருந்து மறைந்தார். மார்க்சிஸ்ட் இதழின் தொடக்க நாட்களிலிருந்தே பங்களித்து வந்த, அவரது மொழிபெயர்ப்பில் ஒரு பகுதியை இத்தருணத்தில் வெளியிட்டு நினைவு கூர்கிறோம்.
– ஆசிரியர்குழு
நமக்குப் பாடங்களை வழங்கும் லெனினுடைய மேதமை நோக்கியே மீண்டும் நகர்வோம். 1905-1907, அது தவிர 1917 இவை அனைத்தும் சிக்கல்கள் நிறைந்த காலங்கள். அந்தக் காலத்தில் லெனினுடைய செயல்பாடுகளில் இருந்து சில எடுத்துக்காட்டுகளை இங்கே பார்க்கலாம். அடுத்தடுத்து வெகுவேகமாக சூழ்நிலைகள் மாறி வந்த இந்த இரண்டு குறுகிய காலங்களில் அதற்கு இணையாக, எவ்வாறு கோஷங்கள், போராட்ட வடிவங்கள், ஸ்தாபனம் ஆகியவற்றில் விரைவான பல மாற்றங்கள் உருவாக்கப்பட்டன என்பது குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
புரட்சிகரமான அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு ஆயுதம் தாங்கிய மக்கள் போராட்டமே ஒரே வழி என்பதில் லெனின் உறுதியாக இருந்தார். அதே வேளையில் தனிநபர் பயங்கரவாதத்தினை சமரசமின்றி எதிர்த்தார். அத்தகைய தனிநபர் பயங்கரவாதத்தினை அறிவுஜீவிகளின் பயங்கரவாதம் என அழைத்த லெனின், அது தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டங்களுக்கு ஊறுவிளைவிக்கும் என்றும் கூறினார். புரட்சி முதிர்நிலை அடைந்த 1905-ம் ஆண்டு வரை, ஆயுதம் தாங்கிய சிறு சிறு களப்போர்களை அனுமதிக்கவில்லை. ஆனால் 1905-ல் அதற்கான நேரம் வந்தவுடன், சற்றும் தாமதிக்காமல், அதே வேளையில் மிகுந்த எச்சரிக்கையுடன், ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்கு லெனின் அழைப்பு விடுத்தார். இந்த விஷயத்தை லெனின் எப்படி விளக்குகிறார் என்று பாருங்கள்: அறிவுஜீவிகளின் பயங்கரவாதமும், தொழிலாளர்களின் பெருந்திரள் இயக்கமும் வெவ்வேறானவை. இவ்வாறு அவை இரண்டும் வெவ்வேறாக இருத்தல் காரணமாகவே, அவற்றின் முழுச் சக்தியையும் இரண்டுமே பயன்படுத்த முடியவில்லை. இதைத்தான் புரட்சிகரமான சமூக ஜனநாயக வாதிகள் இதுவரை வலியுறுத்திக் கூறி வந்திருக்கிறார்கள். இந்த ஒரு காரணத்திற்காகவே அவர்கள் பயங்கரவாதத்தினை எதிர்த்து வருகின்றனர். நமது கட்சிக்குள் இருக்கும் அறிவாளர் பிரிவு உறுப்பினர்களின் பயங்கரவாதம் குறித்த ஊசலாட்டத்தை அவர்கள் எதிர்த்து வருகின்றனர். இந்த ஒரு காரணத்திற்காகவே பழைய இஸ்க்ரா ஏடு தனது 48வது இதழில் பயங்கரவாதத்திற்கு எதிராக எழுதியது:
“புரட்சிகரப் போராட்ட வடிவங்களிலேயே, பழைய பாணி பயங்கரவாதப் போராட்டம் மிகவும் அபாயகரமானது. அதில் ஈடுபடுபவர்கள் உறுதியாகவும், தங்கள் உயிரை பலி கொடுப்பதற்கும் தயாரான தியாகிகள் ஆகவும் இருப்பார்கள். ஆனால் அரசுக்கு எதிரான பகிரங்கமான எதிர்ப்பு மேலொங்கி வரும் வேளையில், பழைய பாணி பயங்கரவாதப் போராட்டம் தேவையற்ற ஒன்று.” (தொகுதி 8, பக். 160)
ஆயுதம் தாங்கிய போராட்டம் தவிர, வேறு எந்தப் போராட்ட வடிவம் குறித்தும் அறியாத, எல்லா நாடுகளுக்கும், எல்லாக் கண்டங்களுக்கும் ஆயுதம் தாங்கிய போராட்டமே பொருந்தும் என்று கூறுகின்ற அதிதீவிரவாதிகள் நமது காலத்திலும் உள்ளனர்.
இயக்கவியல் பொருள்முதல்வாத அணுகுமுறையில் மானுட வரலாற்று வளர்ச்சியை ஆய்வு செய்யும் மார்க்சீய அறிவியல்தான் வரலாற்றுப் பொருள்முதல்வாதம்.
எந்த ஒரு மானுட சமூகமும் தொடர்ந்து தனது இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்கு தன்னை மறு உற்பத்தி செய்து கொண்டாக வேண்டும்.
பிற உயிரினங்களுக்கும் மானுட உயிரினத்திற்கும் உள்ள அடிப்படை வேறுபாடு மானுட இனம் உற்பத்தியில் ஈடுபட்டு தன்னைத் தானே மறு உற்பத்தி செய்து கொள்கிறது என்பதாகும்.
இதற்கு இன்றியமையாதது மனித உழைப்பு.
Leave a Reply