மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


கிரீஷ் கர்னாட் : அதிகாரத்தின் தாழ்வாரங்களில் வலம் வந்த போதிலும்…


பிரளயன்                       

நாடகம் மற்றும் சினிமாவில் பெரும் பங்களிப்பு செய்த இந்தியாவின் மிக முக்கியமான கலை ஆளுமையும், சாகித்ய அகாதெமி, பாரதிய ஞான பீடம், காளிதாஸ் சம்மான் போன்ற மிகப்பெரும் விருதுகளால் கௌரவிக்கப்பட்டவரும், பத்மஸ்ரீ, பத்மபூஷண் போன்ற ஒன்றிய அரசு அளிக்கிற உயர் அங்கீகாரங்களைப் பெற்றவருமான கிரீஷ் கர்னாட் அண்மையில் பெங்களூருவில் தனது 81 ஆவது வயதில் காலமானார்.

நாடகம், சினிமா, புனைவெழுத்து எனப் பன்முகப் படைப்புத்திறன் கொண்டவராக இருந்தது மட்டுமல்ல ஒரு தீவிரமான களச் செயல்பாட்டாளராகவும் அவர் இருந்தார் என்பதுதான் அவரது தனிச்சிறப்பு. இறுதி காலத்தில் கடும் நோய் வாய்ப்பட்டிருந்த போதும் தான் நம்புகிற மதிப்பீடுகளுக்காக களத்தில் இறங்கி போராடுபவராக அவர் இருந்தார்.

கடந்த சில ஆண்டுகளாக சுவாசக்கோளாறுகளுக்காக எந்நேரமும் ஆக்சிஜன் பெறவேண்டிய கட்டாயத்தில் இருந்த அவர், மூக்கில் குழாய்களைச் செருகிக்கொண்டு கையில் ஆக்சிஜன் சிலிண்டரை சுமந்து கொண்டு ‘நானும் ஒரு அர்பன் நக்சல்தான்’ என எழுதப்பட்ட அட்டையை கழுத்தில் கட்டிக் கொண்டு பத்திரிகையாளர், களச்செயற்பாட்டாளர் கௌரி லங்கேஷ் படுகொலைக்கு நியாயம் கேட்டு அவர் தெருவில் அமர்ந்து போராடிய காட்சியினை அனைவரும் அறிவார்கள். ஜனநாயகத்திலும் சமயச்சார்பின்மையிலும் நம்பிக்கையுள்ள பலரது மனச்சாட்சிகளையும் உசுப்பிவிட்ட பெருஞ்செயல் அது.

கிரீஷ் கர்னாடின் தந்தை ரகுநாத் கர்னாட் ஒரு டாக்டர். மும்பையில் பணியாற்றிய டாக்டர் ரகுநாத் கர்னாட் தன்னுடன் பணியாற்றிய, ஒரு குழந்தைக்குத் தாயான இளம் விதவை கிருஷ்ணாபாயை ஆர்யசமாஜ முறைப்படி மணந்து கொண்டார். ரகுநாத்–கிருஷ்ணாபாய் தம்பதியரின் மூன்றாவது குழந்தைதான் கிரீஷ் கர்னாட். மராத்தி பேசும் மும்பையில் பிறந்த அவரது தாய்மொழி கொங்கணி. எனினும் அவரது பள்ளிக் கல்வி மற்றும் இளமைக்காலம் முழுதும் கொங்கணக் கடற்கரைப்பிரதேசமான தார்வாரிலேயே கழிந்தது. கர்நாடகப் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை முடித்த கர்னாட் ரோட் ஸ்காலர்ஷிப் பெற்று ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பயின்றார். அங்கே பயில்கிறபோது பல்லைக்கழகத்தின் மாணவர் பேரவைத் தலைவராகவும் செயல்பட்டார். அவர் அங்கே படிக்கச் செல்கிறபோதுதான் தனது முதல் நாடகமான ‘யயாதி’யை எழுதுகிறார்.

ரோட் ஸ்காலர்ஷிப் பெற்று இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்ஃபோர்டு பலகலைக்கழகத்திற்குப் படிக்கச்செல்வதை அவர் தந்தையார் விரும்பவில்லை. இந்தியாவிலே பயிலும்படி அவரை வற்புறுத்துகின்றனர். தந்தையோடு நடத்திய போராட்டத்திற்குப்பிறகுதான் அவர் ஆக்ஸ்ஃபோர்டு செல்கிறார். தந்தையுடனான போராட்டம் அவரை ஒரு நாடகம் எழுதத்தூண்டியது. அந்நாடகம்தான் ‘யயாதி’.

பாரதத்தின் ஆதிபர்வத்திலும் பாகவத புராணத்தின் 18ஆவது அத்தியாயத்திலும் சொல்லப்படுகிற கதைதான் இது. சுக்கிராச்சாரியாரின் மகள் தேவயானியை மணந்து கொள்கிற யயாதி, தேவயானியின் பணிப்பெண்ணான சர்மிஷ்டையிடமும் உறவு வைத்துக் கொள்கிறான். இதையறிந்த தேவயானி தன் தந்தை சுக்ராச்சாரியாரிடம் முறையிடுகிறாள். தன் மகளுக்குத் துரோகம் செய்த ‘யயாதி’யை விரைவிலே முதுமையடையுமாறு சுக்ராச்சாரியார் சபித்து விடுகிறார். இப்படி சபித்த சுக்ராச்சாரியார், யயாதியின் பிள்ளைகள் யாரேனும் தங்கள் இளமையைத் தானம் தந்தால் அந்த சாபத்திலிருந்து அவன் மீளலாம் என்று விமோசனத்திற்கும் வழி சொல்கிறார். அதன்படி யயாதி, தன் இளைய மகன் புருவின் இளமையை தானமாகப் பெற்று முதுமையிலிருந்து மீள்கிறான் என்றெல்லாம் இக்கதை வளரும். இந்த புரு என்பவன்தான் கௌரவ பாண்டவர்களின் வம்சமான குரு வம்சத்தின் முதல் மன்னன். இந்த புருவின் வம்சம்தான் பின்னர் குரு வம்சம் என்று ஆகிறது.

இந்நாடகத்தை தனது தாய்மொழியான கொங்கணியிலோ அல்லது தான் புலமை பெற்றுள்ள ஆங்கில மொழியிலோ அவர் எழுதிவிடவில்லை. கன்னட மொழியில்தான்அவர் எழுதுகிறார். ‘யயாதியின்’ கதை நாடகமாக எழுதப்படுகிறபோது அதற்கு வேறு ஒரு பரிமாணம் கிடைத்து விடுகிறது. மூலக்கதையில் இல்லாத புருவின் மனைவியாக வரும் சித்ரலேகா எனும் பாத்திரத்தை புதிதாக கர்னாட் உருவாக்குகிறார். சித்ரலேகா மூலமாக புருவின் இளமையைப் பறித்துக்கொண்ட யயாதியை கேள்விக்குள்ளாக்குகிறார். அந்நாடகத்தில் இப்படியொரு உரையாடல் நடக்கும்.

“சித்ரலேகா : அரசே!! திருமணத்திற்கு முன் எனக்கு புருவை யாரென்று தெரியாது; அவர் இளைஞன் என்பதாலும் பரத வம்சத்தின் வாரிசுகளை அவர் என்னுள் விதைப்பார் என்பதாலும் நான் அவரை மணந்து கொண்டேன். ஆனால் இப்போது அவர் முதுமையடைந்து விட்டார். இனி அவரால் எனக்குப் பிள்ளைகளைத் தரமுடியாது. ஆனால் உங்களால் முடியும்.

யயாதி : சித்ரலேகா என்ன சொல்கிறாய்.

சித்ரலேகா : ஆம் அரசே! உங்களது மகனின் இளைமையை நீங்கள் பறித்துக்கொண்டீர்கள்! அதனால் ஏற்படும் எல்லா விளைவுகளுக்கும் நீங்கள்தான் பொறுப்பேற்கவேண்டும்.

யயாதி : வேசையே! உன்னோடு படுக்கைக்கு என்னை அழைக்கிறாயா?”

சுருக்கென முள் போல தைக்கும் அதிர்ச்சியூட்டும் மதிப்பீடுகளைக் கொண்ட நாடகம் இது.

பெற்றோர்களின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காக பிள்ளைகள் எவ்வாறெல்லாம் தியாகம் செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்பதாக கிரிஷ் கர்னாட் இக்கதையினைப் பொருள்கோடல் செய்தார்.

தங்களது கனவை நிறைவேற்ற தமது பிள்ளைகளின் வாழ்வை பலி கேட்கிற, தியாகம் செய்யக் கோருகிற, இன்றைய குடும்பச்சூழல்களை இழுத்து வந்து நம் கண் முன்னால் நிறுத்தும் இந்நாடகம் பெரும் வரவேற்பு பெற்றது. கிரீஷ் கர்னார்டை நோக்கி அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்தது.

மேல் கல்வி பெற வெளிநாடு செல்வதற்கு முதலில் தனது பெற்றோர்கள் தம்மை அனுமதிக்கவில்லை. அவர்களது விருப்பத்தை என் மீது திணிக்க முயன்றனர். இச்சூழல்தான் யயாதி நாடகம் எழுத என்னைத் தூண்டியது என்று குறிப்பிடும் கர்னாட், 2008இல் எழுதிய ஒரு கட்டுரையில் இவ்வாறு கூறுகிறார்:

“நான் இந்நாடகத்தை எழுதுகிறபோது மிகப்பெரும் மன அழுத்தத்தில் இருந்து தப்பிப்பதற்கான வழி என்றுதான் நினைத்தேன். ஆனால் மீண்டும் அந்நினைவுகளை அசை போடுகிறபோது அந்தக் கணத்தில் ஏற்பட்ட எனது உள்ளார்ந்த பதற்றங்களை, எனது எதிர்காலத்தை நான் தியாகம் செய்ய வேண்டும் என்று கோரியவர்களிடம் உண்டான எனது மனக்கசப்பை, அந்தப் புராணக்கதை எவ்வாறெல்லாம் மிகத்துல்லியமாக பிரதிபலித்தது என்பதை எண்ணி இன்றும் கூட நான் வியப்புறுகிறேன்.

நான் யயாதியை எழுதி முடித்துவிட்ட பிறகு இங்கிலாந்துக்கு செல்கிற மூன்றுவாரகால கப்பல் பயணத்தின் போதும், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் ஆளரவமற்ற அந்த நீண்ட வராந்தாவில் நடைபயிலும்போதும் என்னுள் ரீங்கரித்துக்கொண்டிருந்த யயாதியின் கதை பகுத்தறிவு பூர்வமாக நான் வந்தடைய முடியாத பல மதிப்பீடுகளை என்னுள் புகுத்திக்கொள்ள எனக்கு உதவியது. வீடு திரும்புவதா என்பதுகூட கடைசியில் மிகச் சிறிய பிரச்சினையாகவே எனக்குத் தோன்றியது; அந்த புராணக்கதை கடந்த காலத்தில் என்னை ஆணியடித்து இருத்திவிட்டது.” (https://www.ukessays.com/essays/english-literature/a-study-of-girish-karnads-yayati-english-literature-essay.php)

உயர் கல்வி முடிந்ததும் அவர் இந்தியா திரும்புகிறார். சென்னையிலுள்ள ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக பதிப்பகத்தில் பணிக்கு சேர்கிறார். 1963 முதல் 1970 வரை சென்னையில் தான் பணி. இந்நேரத்தில் சென்னையிலுள்ள ‘மெட்ராஸ் பிளேயர்ஸ்” எனும் ஆங்கிலத்தில் நாடகம் செய்யக்கூடிய ஒரு குழுவோடு இணைந்து பணியாற்றுகிறார். 1964 இல் எழுதிய ‘துக்ளக்’ நாடகம் அவருக்கு மிகப்பெரும் புகழை அள்ளித்தருகிறது. 1970க்கு பிறகு பணியைவிட்டு விலகி முழு நேர எழுத்தாளராக மாறுகிறார்.

“யயாதி’-யைத்தொடர்ந்து, ‘ஹயவதனா”, ‘துக்ளக்’, ‘நாகமண்டலா’, ‘தலெதண்டெ’, ‘திப்பு சுல்தான் கண்ட கனசு’ (திப்பு சுல்தான் கண்ட கனவு), ‘ஒடகுகள பிம்பா’, சிதிலமுற்ற பிம்பங்கள், ‘அக்னி மத்து மளெ’ (அக்கினி மற்றும் மழை), ‘ரக்ஷா தங்கடி’ போன்ற நாடகங்களை எழுதி இந்திய நாடகங்களின் முகவரியை மாற்றியவரென நாம் கிரீஷ் கர்னாடை மதிப்பிடவியலும். அவரின் ஒரு சில நாடகங்களை இங்கே அலசுவதன் மூலம் கிரீஷ் கர்னாட் என்கிற ஆளுமையை சற்று கிட்டே நின்று நம்மால் பார்க்க முடியும்.

1964 இல் கிரீஷ் கர்னாட் எழுதிய நாடகமான “துக்ளக்”, 14ஆம் நூற்றாண்டில் டில்லியை ஆண்ட சுல்தான் முகமது-பின் – துக்ளக்கின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. முதலில் இது கன்னடத்தில் மேடையேற்றப்பட்டது. பின்னர் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு மேடையேற்றம் கண்டது.

மிகப்பெரும் லட்சியங்களை நிஜமாக்கப்போகிறேன் என்று தனது அரசியல் வாழ்வை தொடங்கிய சுல்தான் துக்ளக், கடைசியில் மீளவே முடியாத ஒரு முட்டுச்சந்தில் வந்து சிக்கிக் கொள்கிற வரலாற்று அவலத்தை சுற்றிச் சுழன்றது இந்நாடகம்.

1964 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ‘துக்ளக்’, மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய நேருவின் சோசலிசப் பிரகடனங்கள், சொல்லொணா ஏமாற்றங்களில் மூழ்கடிக்கப்பட்டதை ஓர் உருவகமாகச் சித்தரித்த நாடகம். ஒரு காலத்தின் துயரத்தை ,‘துக்ளக்’ எனும் பாத்திர வார்ப்பின் வாயிலாக நாடகம் பார்க்கும் ஒவ்வொரு தனி மனிதரின் துயரமாக கடத்திய நாடகம் இதுவெனவும் சொல்லலாம்.

இந்நாடகம் குறித்து ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறுகிறார்: “துக்ளக்கின் வரலாறு எனக்கு உணர்த்திய ஓர் விஷயம் அது மிகவும் சமகாலத்தன்மை பொதிந்ததாக இருக்கிறது என்பதைத்தான். ஓர் உண்மை என்னவென்றால் இதுவரை டில்லியை ஆண்ட அரசர்களிலே மிகவும் ஞானமிக்கவனும் அறிவார்ந்தவனுமான துக்ளக், நாட்டை ஆள்வதிலே ஆட்சியதிகாரத்தை நிர்வகிப்பதிலே மிகப்பெரும் தோல்வியைக்கண்டவன். ஆட்சிக்கு வந்த இருபதாண்டுகளிலே இந்த ஞானவான் தூள் தூளாக நொருங்கிப்போகிறான். இதற்கெல்லாம் காரணம் அவனது அவசரம், பொறுமையின்மை, எல்லாவற்றிற்கும் சரியான பதில் தன்னிடத்தில் மட்டும்தான் இருக்கிறது, தான் தான் சரி என்கிற எண்ணம், ஈவிரக்கமற்ற அவனது அணுகுமுறைகள் அவனை இந்நிலைக்கு கொண்டு வந்து விட்டுவிடுகின்றன. 1950கள் தொடங்கி சுதந்திர இந்தியாவின் முதல் இருபதாண்டு கால ஆட்சியதிகாரத்தில் துக்ளக் ஆட்சிக்கு இணையான ஒரு போக்கினையே நான் காண்கிறேன்.” (Enact, June 1971. 32)

1972 ஆம் ஆண்டு டெல்லி பழைய கோட்டையை (புராணா கிலா) பின்னணியாகக் கொண்டு ஆகப் பெரும் நாடக ஆளுமை இப்ராஹிம் அல்காஜி ‘துக்ளக்’ நாடகத்தை மேடையேற்றினார். மனோகர் சிங் எனும் திறம்மிக்க நடிகர் துக்ளக் பாத்திரத்தை ஏற்று நடித்தார். இந்திய நாடக வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக இதனைச் சொல்வோரும் உண்டு. அது 1986 ஆம் ஆண்டு; ‘துக்ளக்’ நாடகம் மறுபடியும் டில்லியில் மேடையேற்றப்படுகிறது. கர்னாடும் பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருக்கிறார். இந்திராகாந்தி தனது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதற்குப் பிறகு இரண்டாண்டுகள் கழித்து அது நடக்கிறது. துக்ளக் தனது தலைநகரை தக்கணத்தில் உள்ள தேவகிரிக்கு மாற்றுகிறான். இது தற்போதைய மகாராஷ்ட்ராவில் உள்ளது. அப்புதிய தலைநகருக்கு தௌலதாபாத் என்றும் பெயர் சூட்டுகிறான். நாடகத்தின் எட்டாவது காட்சியில் ,டில்லியிலிருந்து மாற்றம் செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட புதிய தலைநகரான தௌலதாபாத் கோட்டையை ரோந்து செய்யும் இரு காவலர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வதாக ஓர் இடம் வரும். வலுமிக்கவகையில் கோட்டையின் அரண்கள் அமைந்திருப்பது குறித்து பெருமிதம் கொள்ளும் ஒரு காவலன் இவ்வாறு சொல்வான்:

“எந்த ஒரு பெரிய படையாலும் இக்கோட்டையைத் தகர்த்துவிடமுடியுமா என்ன? சொல்லுங்க அண்ணே!”

அதற்கு உடன் வரும் காவலன் சொல்வான்: “தம்பி ஒன்று தெரிந்துகொள்! வெளியிருந்து வரும் தாக்குதல்களை விட உள்ளிருந்து வரும் தாக்குதல்களால்தான் பெரும்பாலான கோட்டைகள் தகர்க்கப்பட்டுள்ளன!”

இவ்வசனத்தை அந்நடிகர் மொழிந்ததுதான் தாமதம், பார்வையாளர்களிடமிருந்து ஏக காலத்தில் ‘ஹா’வென ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது.

கே.எம்.சௌதன்யா எடுத்த ஓர் ஆவணப்படத்தில் இச்சம்பவத்தை நினைவு கூர்கிற கர்னாட் “நாடகக்கதை 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுல்தானைப் பற்றியது. ஆனால் பார்வையாளர்கள் இந்திரா காந்திக்கு நேர்ந்த கதியை தொடர்பு படுத்திக்கொண்டார்கள்.” என்கிறார்.

1989இல் அவர் எழுதிய நாடகம் ‘தலெ தண்டெ’. தலெ தண்டெ எனில் தலையை தண்டமாக வெட்டிப் பலி கொடுப்பது எனப்பொருள். பாப்ரி மஸ்ஜித்- அயோத்யா பிரச்சினை மேலெழுந்த போது அவர் எழுதிய நாடகம் இது. இந்நாடகம் தமிழில் ‘பலிபீடம்’ என மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது.

சாதிய ஏற்றத்தாழ்வு கூடாது; பிறப்பில் அனைவரும் சமம்; ஆணும் பெண்ணும் சமம் என்றெல்லாம் 12 ஆம் நூற்றாண்டில் அன்றிருந்த சாதீய மேட்டிமைகளுக்கெதிராக பிராமண சாதியில் பிறந்த பசவண்ணர் தோற்றுவித்த சரணர் இயக்கத்தைப் பின்னணியாகக் கொண்டது இந்நாடகம். வட கன்னடப் பகுதியிலுள்ள கல்யாண் நகரைத் தலைமையாகக் கொண்ட தேசத்தின் அரசன் பிஜ்ஜளன். இவனிடத்தில் அமைச்சு அலுவலராகப் பணியாற்றியவர்தான் பசவண்ணர். பிறப்பால் ஷத்திரியனல்லாத முடிதிருத்தும் சமூகத்தைச் சேர்ந்த பிஜ்ஜளனை பிராமணர் உள்ளிட்ட மேல்ஜாதியினர் மதிப்பதில்லை; இந்த உறுத்தல் அவனுக்குள் இருந்து கொண்டே இருக்கும். எனவே இவன் இயல்பாகவே பசவண்ணரது சரணர் இயக்கத்திற்கு ஆதரவாய் இருக்கிறான்.

‘தலெ தண்டெ’ நாடகத்தின் ஓரிடத்தில் பிஜ்ஜளன் இவ்வாறு சொல்வான்:

 “என்னுடைய 62 வருட ஆயுளில், என்னுள் ஒளிந்திருக்கும் எனது சாதியைத் தேடாமல் என் கண்களை நேருக்கு நேர் பார்த்து பேசுகிறவர்கள் யாரேனும் உண்டென்றால் அது சரணர்கள்தாம்! பசவண்ணரின் சீடர்கள் தாம்!!”

சரணர் இயக்கத்தில் சேர்ந்துவிடுகிற ஒரு பிராமணப் பெண்ணை அவ்வியக்கத்திலுள்ள சமர் வகுப்பைச் சேர்ந்த ஒரு பையனுக்கு கல்யாணம் செய்துவைக்கிறர்கள். சரணர் இயக்கத்தினரையும் அதற்கு ஆதரவாயுள்ள பிஜ்ஜளனையும் ஒழித்துக்கட்ட காத்துக்கொண்டிருந்த சாதீய மேலாதிக்க சக்திகள், இச்சூழலைப் பயன்படுத்தி சரணர் இயக்கத்தை பிளவுபடுத்துகின்றனர்; பிஜ்ஜளனுக்கெதிராக அவன் மகன் சோவி தேவனைத் தூண்டி விடுகின்றனர். மிகப்பெரும் கலகம் மூள்கிறது. சரணர்கள் வேட்டையாடப்படுகின்றனர்; பிஜ்ஜளன் கொல்லப்படுகிறான்; சரணர்களின் பெரும் ஓலத்திற்கிடையே சோவிதேவனை போற்றித் துதி செய்யும் பிராமணர்களின் கோஷமும் ஒலிக்கிறது என்றவாறு முடிகிறது இந்நாடகம்.

இது ஓர் அவல நாடகம்தான்

1989 இல் எழுதப்பட்ட இந்நாடகம், ராமஜென்மபூமிக்கான மத ரீதியான அணிதிரட்சியையும் 12ஆம் நூற்றாண்டில் சரணர் இயக்கம் வீழ்த்தப்பட்டதற்குமுள்ள இணைப்புக்கண்ணிகளை, இணை போக்குகளை அடையாளம் காட்டுகிறது எனலாம். ராமஜென்ம பூமிக்கான மதரீதியான அணி திரட்டலை வகுப்புவாதம்-சமயச்சார்பின்மை எனும் இரு எதிரிடைகளுக்குள் வைத்து விளக்கவோ விடைகாணவோ அவர் முற்படவில்லை. மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமுல்படுத்தத் தொடங்கியதால்தான் அதற்கு எதிர்வினையாற்றும் வகையில் ராமஜென்மபூமிக்கான அணிதிரட்டலும் கலவரங்களும் வெடித்தன; மத ரீதியான அணிதிரட்டலில் ஒரு சாதீய செயல்திட்டம் பொதிந்துள்ளது என்பதைத்தான் ‘தலெ தண்டெ’ நாடகம் மூலமாக அவர் நமக்கு சூசகமாக சொல்ல முயன்றார்.

கிரீஷ் கர்னாடின் மற்றொரு முகம் அவரது சினிமா பங்கெடுப்பு. உண்மையில் இந்தியாவின் பலமொழி பேசும் வெகுமக்களுக்கு கிரீஷ் கர்னாடை பரவலாக அறிமுகம் செய்துவைத்தது அவரது நாடகச்செயல்பாடுகளல்ல; தமிழ், கன்னடம் ,மலையாளம், தெலுங்கு வங்காளம், மராத்தி, இந்தி போன்ற இந்திய மொழிகளில் அவர் நடித்த திரைப்படங்கள்தான்.

மேலும் அவர் ஒரு நடிகர் மட்டுமல்ல

திரைக்கதையாளர், இயக்குநர் என்று பன்முகமாய்ப் பங்களித்தவர். அவர் திரைக்கதை எழுதி நடித்த சம்ஸ்காரா, அவர் பி.வி.கரந்துடன் சேர்ந்து இயக்கிய வம்ச விருக்ஷா, தப்பலியு நீனாதே மகனே, அவர் தனித்து இயக்கிய ஒந்தனொந்து காலதள்ளி, காடு, அஞ்சு மல்லிகெ, கானூரு ஹெக்கதிதி, உத்ஸவ் மற்றும் அவர் முக்கிய பாத்திரமேற்று நடித்த மந்தன், நிஷாந்த், போன்ற திரைப் படங்கள் 1960களின் பிற்பகுதியில் மேலெழுந்த சுயாதீன சினிமா, இணை சினிமா இயக்கத்தின் முக்கிய பங்களிப்புகள்.

ஒன்றிய அரசின் சங்கீத நாடக அகாதெமியின் தலைவர், லண்டனிலுள்ள இந்தியக்கலாச்சார அமைச்சகத்தின் ‘நேரு மையத்தின்’ இயக்குநர் என வாழ்நாளின் கணிசமான காலம் அதிகாரத்தின் தாழ்வாரங்களில் வலம் வந்தவர் எனினும் 1971-75 காலத்தில் புனே திரைப்படக்கழகத்தின் தலைவராகச் செயல்படுகிறபோது இந்திராகாந்தி அரசால் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டதை எதிர்த்து 1975இல் அந்தப்பதவியை உதறி எறிந்தவர்.

தன் வாழ்நாள் முழுதும் ஜனநாயகத்தையும் சமயச் சார்பின்மையும் உயர்த்திப்பிடிப்பவராக அவர் இருந்தார். தான் எழுதுகிற எழுத்துக்களுக்கும் தனது நம்பிக்கைகளுக்கும் தமது செயல்பாடுகளுக்கும் இடைவெளிகளே இல்லாது வாழ்ந்தவர் அவர். முன்னெப்போதையும் விட அவரைப் போன்றவர்களின் பங்களிப்புகள் கூடுதலாக தேவைப்படுகிற நேரத்தில் கிரீஷ் கர்னாட் நம்மை விட்டுப் பிரிந்திருக்கிறார்.

ஜனநாயகத்தையும் சமயச்சார்பின்மையையும் உயர்த்திப்பிடிக்கிற முற்போக்கு பண்பாட்டு இயக்கங்களுக்கு அவர் மறைவு பேரிழப்பை ஏற்படுத்திச்சென்றிருக்கிறது.

(pralayans@gmail.com)Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: