கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வலதுசாரி சக்திகள் வலுவான ஒரு வெற்றியை ஈட்டின. இந்த வெற்றி அவர்களுக்கு எவ்வாறு சாத்தியமானது என்பதையும், அதற்கு அவர்கள் ஊடகத்தினையும், சமூக வலைத் தளங்களையும், இன்னும் பல்வேறு சக்திகளையும் எவ்வாறெல்லாம் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர் என்பவை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை கொண்ட கட்டுரையாக தோழர் சுகுமார் முரளிதரன் எழுதிய “ஊடகம், விளம்பரம், தேர்தல் : உலகமயமாக்கலுக்கு இரையாகிப் போன நம்பகத்தன்மை” என்கிற கட்டுரை அமைந்துள்ளது.
சாதி, இடஒதுக்கீடு, உலகமயத்தின் தாக்கம், தலித் அரசியல் கட்சிகளின் செயல்பாடு, கம்யூனிஸ்ட் இயக்கங்களின் செயல்பாடு உள்ளிட்டவை குறித்து “சாதிக் குடியரசு” என்ற ஒரு விரிவான நூலை ஆய்வாளர்ஆனந்த் டெல்டும்டே எழுதியுள்ளார். சாதி, இடஒதுக்கீடு குறித்து ஆனந்த் டெல்டும்டே இந்நூலில் கூறியுள்ள கருத்துக்களை மட்டும் எடுத்துக் கொண்டு “சமகாலத்தில் சாதியும், இட ஒதுக்கீடும்“ என்ற தோழர்.என் குணசேகரன் எழுதியுள்ளகட்டுரை விவரிக்கிறது. நூலில் இடம்பெற்றுள்ள பல்வேறு கருத்துக்கள் சமகால வளர்ச்சிப்போக்கில் கூடுதல் முக்கியத்துவம் பெறுவதைக் கருத்தில் கொண்டு சாதி-வர்க்க உறவு, இந்துத்துவா போன்றவை குறித்துடெல்டும்டே இந்நூலில் முன்வைத்துள்ள கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட கட்டுரைகள் வரும் இதழ்களில் வெளியாகும்.
நவீன நாடகம், நவீன சினிமா, நவீன இலக்கியம் ஆகிய துறைகளில் முத்தாய்ப்பான பல சாதனைகளை படைத்தவர் கிரீஷ் கர்னார்ட். உடல் நலக்குறைவுக்கு இடையிலும் சமூக தளத்தில் முற்போக்கு செயல்பாட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தவர் அவர். நவீன இந்தியாவில் அவரின் பங்களிப்புகளை நினைவுகூரும் வகையில் தோழர் பிரளயன் எழுதியுள்ள “அதிகாரத்தின் தாழ்வாரங்களில் வலம் வந்த போதிலும்” என்ற கட்டுரை இந்த இதழில் வெளியாகிறது.
மனித குல மேம்பாட்டிற்காகவே அனுதினமும் சிந்தித்து செயலாற்றி வந்த மார்க்ஸின் வாழ்க்கை முழுவதுமே கடும் சோதனைகளும் போராட்டங்களும் நிறைந்ததுதான் என்பதை நாம் அறிவோம். மார்க்ஸின் இறுதிக்காலம் நம்மை கலங்கடிக்கும் பல சம்பவங்களை கொண்டது. இதனைஆய்வாளர் மார்சலொ முஸ்டோவின் மூலதனத்தின் தோற்றம் என்ற நூல் விரிவாக விளக்கும். பீப்பிள்ஸ் டெமாக்ரசியில் தொடர்ந்து வெளியாகிய “மார்க்ஸின் இறுதி ஆண்டுகள்” என்கிற தொடரின் முழுமையான பகுதி இவ்விதழில் கட்டுரையாக வெளிவருகிறது.
பல மாவட்டங்களில் மார்க்சிஸ்ட் சந்தா சேர்ப்பு இயக்கம் மிகச் சிறப்பாகத் தொடங்கியுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் பல நூற்றுக்கணக்கில் சந்தாக்களை திரட்டி ஆசிரியர் குழுவிடம் ஒப்படைத்துள்ளனர். மற்ற மாவட்டங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வரும் முயற்சிகள் பற்றிய தகவல் இந்த இதழில் வெளியாகிறது. இந்த முயற்சியில் ஈடுபட்ட தோழர்களுக்கு ஆசிரியர் குழு மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது. மார்க்சிஸ்ட் இதழின் சந்தாவை மேலும்உயர்த்திட மற்ற மாவட்ட தோழர்களும் வாசகர்களும் கூடுதல் முயற்சி எடுக்குமாறு கோரும் அதே நேரத்தில் மார்க்சிஸ்ட் இதழ் குறித்து வாசகர் வட்டங்களில் வெளியாகும்கருத்துக்களையும் ஆலோசனைகளையும் ஆசிரியர் குழுவிற்கு தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்
– ஆசிரியர் குழு
Leave a Reply