இந்தியாவின் பன்முகத்தன்மையை முற்றாக அழித்து ஆர்.எஸ்.எஸ்- இன் ஒற்றை பண்பாட்டை திணிக்கும் வேலையை மத்திய பா.ஜ.க அரசு அனைத்து வழிகளிலும் செய்து வருகிறது. ஒரே நாடு-ஒரே மொழி, ஒரே நாடு – ஒரே ரேஷன் அட்டை, ஒரே நாடு ஒரே சட்டம் போன்ற வார்த்தை ஜாலங்களோடு, தீவிர முதலாளித்துவ சுரண்டலுக்கும் அது வசதி செய்து தருகிறது. மாநிலங்களின் உரிமைகளை தகர்ப்பது, கல்வி, வேலை உள்ளிட்ட பொதுப்பட்டியலில் உள்ள விஷயங்களில் கூட மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் பல்வேறு சட்டத் திருத்தங்களை தனது நாடாளுமன்ற பலத்தைக் கொண்டு நிறைவேற்றுவதும் நடைபெற்று வருகிறது.
அனைத்திற்கும் உச்சமாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, லடாக்-ஐ சட்டமன்றமற்ற யூனியன் பிரதேசமாகவும், ஜம்மு-காஷ்மீர் பகுதியை சட்டமன்றமுள்ள யூனியன் பிரதேசமாகவும் மாற்றி, தனது மைய அதிகாரத்தை விரிவுபடுத்தும் போக்கை எதேச்சதிகாரத் தன்மையோடு பா.ஜ.க அரசு அமலாக்கியுள்ளது. மத்திய அரசின் இத்தகைய அரசியல் சார்ந்த அதிகார மையப்படுத்தலை உ.வாசுகி அவர்களின் “அதிகாரக் குவிப்பும் அத்துமீறல்களும்” என்ற கட்டுரை விரிவாகப் பேசுகிறது. அடுத்த இதழில் பொருளாதார அம்சங்களில் மத்திய அரசின் மையப்படுத்தும் அதிகாரம் குறித்த கட்டுரை வெளியாகும்.
ஆனந்த் டெல்டும்டெவின் “சாதிக் குடியரசு” என்ற நூலை முன்வைத்து என்.குணசேகரன் அவர்களின் கட்டுரை ஒன்றை கடந்த இதழில் வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக “சாதி, வர்க்கம், இயக்கங்கள்” என்கிற கட்டுரை இவ்விதழில் வெளியாகிறது. இது சாதி, வர்க்கம் பற்றிய அம்பேத்கரின் நிலைபாடு, தலித் இயக்கங்களின் தற்போதைய நிலை, இடதுசாரிகள் மீதான டெல்டும்டேவின் விமர்சனம் ஆகியவை குறித்து விவாதிக்கிறது.
ஜிப்ஸன் ஜான், ஜிதேஷ் பி.எம் ஆகியோர் ஃப்ரண்ட்லைன் இதழுக்காக இந்தியாவின் தலைசிறந்த பேராசிரியர் அய்ஜாஸ் அகமத் உடன் ஒரு விரிவான உரையாடலை மேற்கொண்டனர். அந்த பேட்டியில் பாசிசம் குறித்தும், பா.ஜ.க வின் தற்போதைய வெற்றி குறித்தும், இடதுசாரிகள் குறித்தும் ஆழமான கருத்துக்களை அய்ஜாஸ் அகமத் வெளியிட்டிருந்தார். அதன் ஒரு பகுதி “உள்ளிருந்தே கைப்பற்றப்பட்ட அரசு” என்ற தலைப்பில் இந்த இதழில் வெளியாகிறது.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை அதிகார மையப்படுத்தல், காவிமயமாக்கல் மற்றும் தனியார் மயமாக்கல் என்பதை உள்ளடக்கியதாக அமைகிறது. அதன் அபத்தங்களையும், கல்வி குறித்த கம்யூனிஸ்டுகளின் பார்வையையும் விளக்கி ஜி.செல்வாவின் “கல்வியும் கம்யூனிஸ்டுகளும்” என்ற கட்டுரை பேசுகிறது.
எங்கெல்ஸ் மறைந்து 124 ஆண்டுகள் முடிந்துள்ளன. அவர் மறைவின் 125 ஆம் ஆண்டின் தொடக்கத்தை நினைவு கூரும் வகையில் எங்கெல்ஸ் குறித்து “மார்க்சியத்தின் அடித்தளம் எங்கெல்ஸ்” என்ற கட்டுரையை ச.லெனின் எழுதியுள்ளார். மார்க்ஸ் எங்கெல்ஸ் என்று அவர்கள் இணைந்தே அறியப்பட்டதன் காரணமும், உலகின் முதல் மார்க்சிஸ்ட் ஆன எங்கெல்சின் பங்களிப்பும் இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.
பல மாவட்டங்களில் மார்க்சிஸ்ட் இதழுக்கான சந்தா ஒப்படைப்பு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளது. தோழர்கள் தங்கள் மாவட்டங்களில் கூடுதலான சந்தாக்களை சேர்த்து ஒப்படைக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்ளுமாறும், மார்க்சிஸ்ட் வாசகர் வட்டங்களில் வரும் கருத்துக்களை ஆசிரியர் குழுவிற்கு அனுப்புமாறும் கேட்டுக்கொள்கிறோம். – ஆசிரியர் குழு
Leave a Reply