ஜி. செல்வா
கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரைத்துள்ள ‘தேசியக் கல்விக் கொள்கை வரைவு 2019’ இந்திய மக்களிடையே பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த வரைவு அறிக்கை குறித்து மிக விரிவாக விவாதித்து, விமர்சனபூர்வமாக நீண்ட குறிப்பொன்றை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ளது. இந்த வரைவு அறிக்கையை முழுமையாக நிராகரிக்க வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளது. இந்தக் கருத்துக்கு ஆதரவாக இந்திய மக்களை அணி திரட்டும் முயற்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட்டு வருகிறது.
இந்தச் சூழலில் தேசிய கல்விக் கொள்கை வரைவுக்கு ஆதரவாகப் பேசியும் எழுதியும் வரும் சிலர் ‘எதிர்க்கட்சிகள் என்றாலே ஆளுங்கட்சியின் கொள்கையை எதிர்ப்பதுதானே நடைமுறை’ என குறுகிய பார்வையோடும், இன்னும் ஒரு படி மேலே சென்று “கம்யூனிஸ்டுகளுக்கு கல்வி குறித்து என்ன பார்வை உள்ளது?” எனவும் கேள்வி எழுப்புகின்றனர். இந்தக் கேள்விகளுக்கு முகம் கொடுத்து விவாதிப்பதன் மூலம் கல்வி குறித்த கம்யூனிஸ்டுகளின் பார்வையை இக்கட்டுரை எடுத்துரைக்க முயல்கிறது.
தீர்க்கமான பார்வை
“கல்வியின் மீது சமூகம் ஏற்படுத்தும் தாக்கத்தை கம்யூனிஸ்டுகள் புதிதாகக் கண்டுபிடிக்கவில்லை. அதனுடைய தன்மையை மட்டுமே மாற்றுகிறார்கள்” என 1848-லேயே கம்யூனிஸ்டுகளின் அடிப்படைப் பார்வையை மார்க்ஸும் எங்கெல்ஸும் கம்யூனிஸ்ட் அறிக்கையில் பிரகடனம் செய்துவிட்டனர். “குழந்தைகளை வணிகப் பொருள்களாக, உழைப்புக் கருவிகளாக மாற்றிவிட்டு, பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே நெருக்கமான உறவு குறித்து பேசும் பேச்சுக்கள் எல்லாம் அருவருக்கத்தக்கதாக மாறிவிட்டதாக” கம்யூனிஸ்டு அறிக்கை குறிப்பிபிட்டது இன்றைக்கும் பொருத்தமானதே!
“பொருளாதார சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண, முழுமையாக வளர்ச்சி பெற்ற மனிதர்களை வளர்த்தெடுக்க, கல்வியும் உற்பத்தி உழைப்பும் திட்டமிட்டு இணைக்கப்பட்ட பல்தொழில்நுட்ப கல்வியை அடிப்படையாகக் கொண்டு கல்வி அமைப்பு உருவாக்க வேண்டுமென” கூறியதுடன், சோஷலிச சோவியத் யூனியனில் அதை வளர்த்தெடுத்தும் காண்பித்தார் மாமேதை லெனின்.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கீழ் இந்தியா பெற்றிருந்த கல்வி அறிவைவிட மிகவும் பின்தங்கி இருந்த சீனா, தோழர் மாவோ தலைமையில் புரட்சிக்குப் பின் கல்வித்துறையில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறிப்பிடத்தக்கவை. இன்று உலகத்தின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களை அதிகமாகக் கொண்ட நாடுகளின் வரிசையில் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், வேளாண்மை, வணிக மேலாண்மை என அனைத்துத் துறைகளிலும் சீனா இன்று ஆதிக்கம் செலுத்துவதற்கு, அது கல்வித் துறையில் ஏற்படுத்திய மாற்றங்கள் முக்கியக் காரணமாகும்.
சுருங்க சொன்னால், கம்யூனிஸ்டுகளுக்கு கல்வி குறித்து தீர்க்கமான பார்வை உண்டு. முதலாளித்துவ சமூகம் கட்டமைக்கும் சமூக கட்டமைப்புக்கு மாறாக, சமமான – தரமான கல்வியை அனைவருக்கும் அளிப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு கம்யூனிஸ்டுகள் செயலாற்றி வருகின்ன்றனர். அவ்வாறே, தற்போதுள்ள முதலாளித்துவ சமூகங்களில் வழங்கப்படும் கல்விமுறை குறித்து கூர்மையான விமர்சன விழிப்புணர்வோடு, உழைக்கும் மக்களை வளர்த்தெடுப்பதிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கவனம் செலுத்தி வருகின்றன.
விடுதலைக்கு முன் இந்திய கல்வி
ஐரோப்பியர்கள் இந்தியாவை வெற்றிகொள்வதற்கு முந்தைய இந்திய சமூகநிலை குறித்து தோழர் இ.எம்.எஸ். கீழ்க்கண்டவாறு வரையறுக்கிறார்: “வருண சாதி அமைப்புமுறை உருவானவுடன் அதைப் பராமரிக்கவும், நியாயப்படுத்தவும் உதவும் வகையில் சுரண்டல் அமைப்பு முறையை சுற்றி ஒரு தனியான சமய – சித்தாந்த தத்துவார்த்த கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அடிமைச் சுரண்டல் முறைக்கு பொருத்தமான சமய தத்துவார்த்த கட்டமைப்பிலிருந்து வேறுபட்ட ஒரு கட்டமைப்பு இந்தியாவில் அமைக்கப்பட்டது. இதுதான் இந்து மதம், இந்து தத்துவம், இந்து கலாச்சாரம் என்ற வடிவத்தில் தோன்றியது. இதையே இந்து வகுப்புவாதிகள் புனிதமான இந்திய கலாச்சாரம் என அழைக்கின்றனர்” என்றார்.
இந்தப் பண்பாட்டில், உழைக்கும் மக்களுக்கு, அதாவது சூத்திரர்களுக்கும் பஞ்சமர்களுக்கும், கல்வி முழுமையாக மறுக்கப்பட்டது. “சூத்திரர்களுக்கு கடவுள் விடுத்துள்ள ஒரே வேலை பிராமணர், சத்திரியர், வைசியர் ஆகிய மூன்று பிரிவினருக்கும் பணிவோடு ஊழியம் செய்வதே” என்கிறது மனுஸ்மிருதி. பிறப்பின் அடிப்படையில் நால்வர்ணங்களாக பிரித்த அமைப்பில் சூத்திரர் நிலை கிட்டத்தட்ட அடிமை நிலையாக இருந்தது என்றால், இந்த நால்வர்ணத்துக்கு அப்பாற்பட்ட தலித் மக்களின் நிலையோ முற்றிலும் அடிமைநிலைதான்!
இந்த இழிநிலைக்கு எதிராக சமூக சீர்திருத்தப் போராளிகள் தொடுத்த இடைவிடாத சித்தாந்தக் அறப்போராட்டங்கள் வாயிலாகவே, ஒடுக்கப்பட்ட பிரிவினர் கல்வி வாசனையை நுகர முடிந்தது. இவர்களின் குரல்களுக்கு செவிமடுப்பதுபோல் நடித்துக் கொண்டே வெள்ளை ஏகாதிபத்தியம் வேரில் வெந்நீரை ஊற்றும் வேலையை செய்தது. கல்வித் துறையில் சதி ஆட்டம் ஆட ஆரம்பித்தது. இந்தியாவில் தாய்மொழிக் கல்விக்கு மாற்றாக ஆங்கில வழிக்கல்வியை திணித்தது ‘1813 சாசனம்’; எண்ணத்திலும் அறிவாற்றலிலும் ஆங்கிலேய அடிமைகளை உருவாக்க முயன்றது ‘மெக்காலே கல்விக் கொள்கை’; இதற்கு ஏற்றாற்போன்று போதனா முறையை உருவாக்கியது ‘1854 சார்லஸ் உட் நடவடிக்கை’; தேர்வுகளை கண்டுபிடித்தது ‘1882 ஹன்டர் கமிஷன்’. இத்தகைய குழுக்களின் பரிந்துரையுடன் நவீன இந்தியக் கல்வி முறை கட்டமைக்கப்பட்டது.
இதற்கு மாற்றாக கல்வியின் உள்ளடக்கம் – பயிற்றுமொழியைக் குறித்தெல்லாம் விடுதலைப் போரில் பங்கெடுத்த தேசியத் தலைவர்கள், காங்கிரஸ் காரர்கள், கம்யூனிஸ்டுகள் கூர்மையான கருத்துக்களை, விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். ஒரு சில இடங்களில் அதை பரிசோதனையாகவே செய்து காட்டவும் முயன்றனர். ஜோதிராவ் பூலே, சாவித்திரி பாய் பூலே தொடங்கி தாகூர், காந்தி, பெரியார், அம்பேத்கர், சிங்காரவேலர் உள்ளிட்ட பலர் கல்வித் தளத்தில் ஆற்றிய பங்கு குறிப்பிடத்தக்கது.
வெள்ளை ஏகாதிபத்தியத்துக்கு எதிராக வெகுண்டெழுந்த மக்களின் உணர்வுகளையும் தேசத் தலைவர்களின் கனவுகளையும் பிரதிபலிக்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950-ல் இயற்றப்பட்டது. “அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பத்தாண்டுகளுக்குள் அனைத்து குழந்தைகளுக்கும் அவர்களது 14 ஆவது வயது முடியும்வரை இலவச கட்டாயக் கல்வி தர அனைத்து முயற்சிகளையும் அரசு எடுக்க வேண்டும்” என அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்தியது. ஆனால் அதை நிறைவேற்ற ஒரு சட்டம் வருவதற்கே, விடுதலை அடைந்த இந்தியாவில் சுமார் 60 ஆண்டு காலம் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது.
விடுதலை இந்தியாவில் கல்வி
“விடுதலைக்கு பிந்தைய ஆரம்ப ஆண்டுகளில் மேற்கத்திய நாடுகளிடம் இருந்து நியாயமான உதவி பெற இயலாததால், இந்திய பெருமுதலாளி வர்க்கம் சோவியத் யூனியனிடம் உதவி கோரியது. முதலாளித்துவத்தை வளர்க்க, அரசு வழிநடத்தும் முதலாளித்துவப் பாதையை முதலாளிகள் தேர்ந்து கொண்டனர். ஏகாதிபத்தியம், சோஷலிசம் என்ற இரண்டு முகாம்களையும் பேரம் பேசுவதற்கு பயன்படுத்திக் கொண்டு தங்கள் நிலையை உருவாக்கிக் கொண்டனர். திட்டமிட்ட பொருளாதாரம் முதலாளித்துவப் பாதையில் ஒரு பகுதியாக பயன்படுத்தப்பட்டது” (சிபிஐ-எம் கட்சி திட்டம்) இதற்கு உகந்த பாதையில் திட்டமிட கல்வித்துறையில் பல்கலைக்கழகக் கல்வி குறித்து டாக்டர் ராதாகிருஷ்ணன் (1948-49), உயர் கல்வி – தொழில்நுட்பக் கல்வி குறித்து லட்சுமணசாமி (1952-53) ஆகியோர் தலைமையில் இரண்டு குழுக்களை நேரு அரசு அமைத்தது. தொடர்ந்து, கல்வியில் நவீனமயமாக்கலை முன்மொழிவதற்கு 1964இல் அப்போதைய பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் டாக்டர் டி.எஸ். கோத்தாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு இரண்டு ஆண்டுகள், 12 உண்மை அறியும் குழுக்கள், ஏழு செயல் அமைப்புக் குழுக்கள் என இயங்கி 9,000 பேரிடம் கருத்துகளைக் கேட்டறிந்து, 2,400 பக்க அறிக்கையை 1966 ஜுன் 29 அன்று சமர்ப்பித்தது. இதுவே ‘கோத்தாரிக் கல்விக் குழு’ என அழைக்கப்படுகிறது. இந்தக் குழுவின் பரிந்துரையின் பேரிலேயே 1968 ‘தேசிய கல்வி கொள்கை’ உருவாக்கப்பட்டது. ஆட்சியில் இருக்கும் அதிகார வர்க்கத்தினர் கோத்தாரிக் கல்விக் குழுவின் பரிந்துரைகளில் சமச்சீர்கல்வி, அருகாமைப் பள்ளிகள், கல்விக்கு ஜி.டி.பி.யில் 6 சதவீதத்தை ஒதுக்கீடு செய்தல் போன்ற பரிந்துரைகளுக்கு மாற்றாக, தங்களுக்கு உகந்த மும்மொழிக் கொள்கை, தனித்தொகுதி மையங்கள், பல்கலைக்கழக நிர்வாக முறைகளில் தேவைப்படும் மாற்றங்கள் உள்ளிட்ட ஆலோசனைகளை மட்டுமே ஏற்று செயல்பட ஆரம்பித்தது.
சுதந்திர இந்தியாவின் தொடக்க ஆண்டுகளில் முதலாளித்துவ வளர்ச்சிக்கு உகந்த கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கு ஏற்ற மூலதனம் இல்லாததால், அரசுத் தலையீட்டை இந்தியப் பெருமுதலாளிகள் விரும்பினர். எனவே கல்வி, விவசாயம், தொழில் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகளில் அரசின் மூலதனம் செலவிடப்பட்டது. 1980-களின் மத்தியில் இதில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. இந்தியப் பெருமுதலாளி வர்க்கம் அரசுக்கு என ஒதுக்கப்பட்ட தொழில்களில், பொதுத்துறை நிறுவனங்களை தாங்களே எடுத்துக்கொண்டு அந்நிய மூலதனத்தோடு சேர்ந்து புதிய பகுதியில் விரிவடைய தயாராகியிருந்தது. இதற்கு ஏற்றாற்போல் பொருளாதாரக் கொள்கையை, கல்விக் கொள்கையை வடித்தெடுக்கும் திட்டம் ராஜீவ் காந்தி ஆட்சி காலத்தில் தொடங்கியது.
கல்வியை வழங்குவது அரசின் கடமை என்பது காலாவதியாகிப் போன முழக்கமாக மாற்றப்பட்டது. இரு வேறு கல்வி முறை கூர்மையாக பிரித்தெடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. உற்பத்தித் துறைக்கு மாறாக, வணிக, சேவைத் துறைக்கு உகந்ததாக கல்வி அமைப்பு செயல்படத் தொடங்கியது. இத்தகைய தாராளமய, தனியார்மய பாதை பெருமுதலாளிகளுக்கு ஏராளமான பலன்களை தந்தது. புதிய வர்த்தக நிறுவனங்கள் தோன்றி பெருமுதலாளித்துவ நிறுவனங்களாக விரிவடைந்தன. 1957-ம் ஆண்டில் 22 ஏகபோக நிறுவனங்களின் சொத்து மதிப்பு ரூ. 312.63 கோடியில் இருந்து, 1997-ல் ரூ. 1,58,00,472 கோடியாக, அதாவது 500 மடங்கு, உயர்ந்திருந்தது.
“மக்களுக்கு கல்வி கொடுக்கும் கடமையில் இருந்து அரசு விலகிக் கொள்ள வேண்டும்”, “இனி கல்வி என்பது உலக சந்தையின் ஒரு பண்டமாக கருதப்படும்” என 1990-ல் உலக வங்கியும் ஐ.நா.வும் இணைந்து நடத்திய ‘எல்லோருக்கும் கல்விக்கான உலக மாநாட்டில்’ வெளியிடப்பட்ட ‘ஜோமிதியன் பிரகடனம்’ கூறியது. இதைத் தொடர்ந்து 1995-ல் உலக வர்த்தக அமைப்பானது ‘கல்வி, மருத்துவம் உட்பட அனைத்து சேவைகளும் வாங்க, விற்க, பொருளை ஈட்டக்கூடிய பொருட்களாக’ மாற்றியது. இதற்கேற்ற வகையில் ‘காட் ஒப்பந்தங்கள்’ உருவாக்கப்பட்டன. இதற்குப் பிறகு இந்தியப் பொருளாதாரம் முழுமையாக அந்நிய மூலதனத்துக்குத் திறந்து விடப்பட்டது. இது கல்விக் கொள்கையிலும் பிரதிபலிக்கத் தொடங்கியது. தனியார் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள், பன்னாட்டு உறைவிடப் பள்ளிகள் போன்றவைவை புற்றீசல்போல் உருவெடுக்கத் தொடங்கின.
வாஜ்பேயி ஆட்சி காலத்தில் கல்வி
கல்வியாளர்களை கொண்டே கல்வி குறித்து ஆய்வு அறிக்கைகள் பெற்றுக்கொண்டு வந்த இந்திய அரசு முதல்முறையாக வாஜ்பேயி காலத்தில் இந்தியப் பெருமுதலாளிகள் அம்பானி – பிர்லா தலைமையில் குழு அமைத்து ‘கல்வி சீரமைப்புக்கான ஒரு கொள்கை வரையறை’யை உருவாக்கியது. இக்குழு பெரும் லாபம் தரக்கூடிய சந்தையாக கல்வியைப் பார்த்தது. கல்விக் கட்டணத்தை முழுமையாக மாணவரிடமிருந்து வசூலிக்க வேண்டும், உயர்கல்வியை தனியார்மயமாக்கி, அதில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என அம்பானி – பிர்லா அறிக்கை கூறியது. ‘கல்வி என்பது எதிலும் பொருந்திக்கொள்கிற மலிவான, அதே நேரத்தில் புது திறன்களையும் புதுமைகளையும் ஏற்றுக்கொள்கிற தொழிலாளர்களை உருவாக்கித் தருகிற ஒன்றாக இருக்க வேண்டும்’ என ஓங்காரமாய் பேசியது. மேலும், ‘பல்கலைக்கழக – கல்வி நிறுவன வட்டாரங்களில் அரசியல் நடவடிக்கைகளை தடை செய்யும் சட்டம் இயற்றப்பட வேண்டும்’ எனவும் அம்பானி – பிர்லா குழு வற்புறுத்தியது.
அதே வாஜ்பேயி ஆட்சியே பாடப்புத்தகங்களில் திட்டமிட்டு இந்துமத அடிப்படைவாத கருத்துக்களைத் திணித்தது. பல்கலைக்கழகங்களில் வேத ஜோதிடம், வேதக் கணிதம் ஆகியவற்றை பாடதிட்டங்கள் ஆக்கினர். சிறுபான்மை மக்களுக்கு எதிரான அவதூறுக் கருத்துக்கள், மதவெறியைத் தூண்டும் சிந்தனை ஓட்டம் பாடப்புத்தகங்களாக மாற்றப்பட்டன. கல்விப் புலங்களில், ஆய்வு நிறுவனங்களிலிருந்து, இடதுசாரி ஆய்வாளர்கள் நீக்கபட்டு ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவோடு 2004ல் ஆட்சி பொறுப்புக்கு வந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பல்வேறு குறைபாடுகளுடன் கல்வி உரிமைச் சட்டத்தை நிறைவேற்றியது. தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்கு உகந்தாற்போன்று கல்வித்துறையில் மாற்றம் கொண்டுவர சாம் பிட்ரோடா தலைமையில் ‘தேசிய அறிவுசார் ஆணைய’த்தை அரசு உருவாக்கியது.
மோடி அரசின் மோசடி வித்தை
அதிகார வர்க்கத்தின் சுரண்டல் தன்மைக்கு ஏற்றாற் போன்று கல்விக் கொள்கையும் காலம்தோறும் மாற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதன் தொடர்ச்சியாகவே இன்றைய ஆர்எஸ்.எஸ். – பா.ஜ.க. தலைமையிலான அரசு வெளியிட்டுள்ள கஸ்தூரிரங்கன் தலைமையிலான ‘தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019’ -ஐ காண வேண்டியுள்ளது.
பா.ஜ.க. ஆட்சி 2014-ல் வந்தவுடனேயே அப்போதைய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி புதிய கல்விக் கொள்கையை உருவாக்க டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைத்தார். இதில் ஒருவர் மட்டுமே கல்வியாளர். இக்குழு 2016 மே மாதம் 90 பரிந்துரைகளை அரசுக்கு கொடுத்தது. ஆனால், அவை என்னவானது என யாருக்கும்தெரியாது.
இதைத் தொடர்ந்து ‘புதிய தேசிய கல்விக் கொள்கை’யை உருவாக்க விஞ்ஞானி கஸ்தூரிரங்கன் தலைமையில் 2017 ஜூன் 24 அன்று 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. எவ்விதமான வெளிப்படையான காரணங்களையும் அறிவிக்காமல் இந்த குழுவுக்கு ஐந்து முறை காலநீட்டிப்பு அளிக்கப்பட்டு 2018 டிசம்பர் 15 அன்று அன்றைய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், அதே அறிக்கையை பா.ஜ.க. தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு புதிதாக பொறுப்பேற்ற மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பொக்ரியாலிடம் மே 29 அன்று இரண்டாவது முறையாக கஸ்தூரி ரங்கன் வழங்கியதாக அதிகாரபூர்வமான செய்தி வந்தது.
கஸ்தூரிரங்கன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு பற்றி நாடறிந்த கல்வியாளர்கள் கூர்மையாக பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகின்றனர். மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தை சேர்ந்த முனைவர் சந்திரகுரு, அக்குழுவில் பணியாற்றிய ஒவ்வொருவர் குறித்தும் விரிவாக ஆய்வு செய்துள்ளார். 11 பேர் கொண்ட குழுவின் அறிக்கை, அரசிடம் அறிக்கை கொடுக்கப்படும்போது 9 பேர் கொண்ட குழுவாக மாறிவிட்டது.
இவர்களில் இந்த அறிக்கையை முழுமையாக உருவாக்கி வடித்தெடுத்தவர் பெங்களூரைச் சேர்ந்த எம்.கே.ஸ்ரீதர். இவர் படிக்கும் போதே ஏ.பி.வி.பி. அமைப்பின் தேசிய செயலாளராக இருந்தவர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களை சிதைக்கும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சிந்தனாவாதி.
மனு ஸ்மிருதி தொடங்கி, மெக்காலே கல்விக் கொள்கை, ராஜீவ் காந்தியின் புதிய கல்விக் கொள்கை, அம்பானி பிர்லா குழு, சாம் பிட்ரோடா குழு என இதற்கு முன் அமைக்கப்பட்ட அனைத்து குழுக்களின் ஆலோசனைகளை கலந்து இன்றைய சந்தை பொருளாதாரத்துக்கு உகந்தாற்போன்று ‘ஆர்.எஸ்.எஸ். ஆய்வகத்தில்’ செய்த கலவைதான் டாக்டர் கஸ்தூரி ரங்கன் குழு உருவாக்கிய ‘புதிய கல்விக் கொள்கை’.
இந்திய மரபைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் புவியியல் பற்றிய அறிவை விரிவுபடுத்தவும், இந்தியர் என்ற பெருமிதம் கொள்ளவும், சுயமதிப்பீடு அதிகரிக்கவும் வழிவகை செய்யும் வகையில் பல்வேறு திட்டங்களை வரைவு அறிக்கை ஆங்காங்கே பேசிச் செல்கிறது. அதாவது புராதன பண்பாட்டுப் பெருமை என்ற பெயரில் பகுத்தறிவுக்கு ஒவ்வாத, பிற்போக்கு, பழமைவாத, சாதிய கருத்துக்களை கல்வியில் திணிப்பதற்கு திட்டமிட்டு பரிந்துரைகளை கொடுத்திருக்கிறார் கஸ்தூரி ரங்கன். விமர்சனப் பார்வையை மழுங்கடிக்கக் கூடிய வகையில் பழைய கல்வி முறையை போற்றிப் புகழ்ந்து குரு-சிஷ்ய உறவு குறித்தெல்லாம் வரைவு தேசிய கல்விக் கொள்கையை உருவாக்கியவர்கள் ஆலாபனை பாடியிருக்கிறார்கள்.
பேச வேண்டியதை பேசாதது ஏன்?
தற்போதைய இந்தியக் கல்வி கொள்கை குறித்து ஏராளமான விமர்சனங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் முற்போக்கு ஜனநாயக சக்திகளும் தொடர்ந்து முன்வைத்து வருகின்றன. நடைமுறையிலுள்ள கல்வி முறைக்கு மாற்றாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது திட்டத்தில், “அனைத்து நிலைகளிலும் விரிவான – அறிவியல்பூர்வமான கல்வி கிடைக்க பொதுக் கல்வி நிறுவன முறை வளர்க்கப்படும். மேல்நிலைக் கல்விவரை இலவச – கட்டாயக் கல்வி வழங்கப்படும். கல்வியில் மதச்சார்பற்ற தன்மை உத்தரவாதப்படுத்தப்படும். உயர்கல்வி – தொழிற்கல்வி நவீனப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும். முழு அளவிலான ஆராய்ச்சி – வளர்ச்சி நிறுவனங்கள் மூலம் அறிவியல் – தொழில்நுட்ப வளர்ச்சி ஊக்குவிக்கப்படும். விளையாட்டு நடவடிக்கைகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் விரிவான விளையாட்டுக் கொள்கை நிறைவேற்றப்படும்” எனக் கூறியுள்ளது.
ஆனால் பா.ஜ.க. அரசு சார்பாக முன்மொழியப்பட்டுள்ள வரைவறிக்கையோ தற்போதைய கல்வித் துறையில் நிலவும் பலவீனங்கள் குறித்து எதுவும் பேசாமல், அல்லது இத்தகைய பிரச்சினைகளுக்கு ஏன் புதிய தீர்வுகளை முன்மொழிகிறோம் என தர்க்க அடிப்படையில் எதுவுமே பேசவில்லை. ‘நீ படிக்கக்கூடாது.. உனக்கு படிப்பு ஒரு கேடா.. நீ எல்லாம் மாடு மேய்க்கத்தான் லாயக்கு’. இப்படிக் காலம்காலமாக சொல்லப்பட்டுவந்த வார்த்தைகளை நவீன இந்தியாவில் எப்படி நயமாக சொல்வது என்பதற்கு ஆர்.எஸ்.எஸ். மூளை அதிகார வர்க்கத்துக்கு வழிகாட்டியுள்ளது. எட்டாம் வகுப்பை தாண்டவே மூன்று பொதுத்தேர்வு. அதற்கடுத்து 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எட்டு மாதத்துக்கு ஒருமுறை 40 தாள்களுக்குத் தேர்வு. இதில் தேர்ச்சி பெற்றாலும் மதிப்பெண் பெற்றாலும் உயர்கல்வி பயிலவோ கல்லூரிக்கோ செல்ல முடியாது. அவ்வாறு செல்வதற்கு ‘தேசிய தகுதித் தேர்வு’ எழுத வேண்டும். இதில் எடுக்கக்கூடிய மதிப்பெண்களை பொறுத்தே உயர்கல்விக்குச் செல்ல முடியும். இவையெல்லாம் எதிர்கொண்டு கல்லூரிக்குப் போய் பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி. படித்தாலும் அதற்கு மதிப்பில்லை. அதற்குப் பிறகு நாடுதழுவிய அளவில் நடத்தப்படும் தகுதித் தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்ணை வைத்துதான் எந்த மேற்படிப்பைப் படிப்பது என்று மதிப்பிடப்படும். பொறியியல், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் இதே நிலைதான்.
டியூஷன் சென்டர், கோச்சிங் சென்டர் அதற்கேற்றாற் போன்று நோட்டுப் புத்தகம், ஆடியோ, வீடியோ பயிற்சி வகுப்புகள் நடத்தி, கொள்ளை லாபத்தைச் சுரண்டுவதற்கு இயலாமல் முட்டு சந்தில் மாட்டிக் கொண்டிருக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கு சிக்கெடுத்து, சீரெடுத்து சாமர்த்தியமாக வழிகாட்டி இருக்கிறார்கள் சாவர்க்கர் வீட்டுப் பிள்ளைகள்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இந்திய மக்களுக்கு உறுதியளிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை இல்லாது ஒழிக்க ‘தரம்’ என்கிற அஸ்திரத்தை ஏவியுள்ளார் கஸ்தூரி ரங்கன். கல்விரீதியாகவும் சமூகரீதியாகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உறுதியளிக்கப்பட்ட உரிமைகள்கூட முழுமையாக நடைமுறைப்படுத்தாததற்கு யார் காரணம் என்கிற கேள்வியை கஸ்தூரி ரங்கன் ஏனோ எழுப்பவில்லை. இன்னும் ஒரு படி மேலே சென்று, தனியார் கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு குறித்து வற்புறுத்த இயலாது என வரைவு அறிக்கை பேசுகிறது. அரசுப் புள்ளிவிவரங்களே தலித் பழங்குடியின மக்களுக்கு எதிராகத் தொடுக்கப்படும் வன்முறைகள் அதிகரித்து வருவதை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. இடஒதுக்கீடு அடிப்படையில் ஒதுக்கப்பட்ட இடங்களில்கூட முழுமையாகப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் இல்லாததை புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இத்தகைய சூழலில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக பேசுவது எந்த விதத்தில் நியாயம்?
ஒற்றை அதிகாரத்துக்கான ஒற்றையடிப் பாதை
1990-களுக்குப் பிறகு பேசிய பல குழுக்களின் கண்ணோட்டத்துக்கு வடிவம் கொடுக்கக்கூடிய வகையில், இந்த கல்விக் குழுவின் அறிக்கை அனைத்து அதிகாரங்களையும் மையப்படுத்தும் போக்குக்கு முழு முற்றாக வழிகாட்டியுள்ளது. தற்போது 93 சதவீத கல்வித் துறை அதிகாரம் மாநில அரசுகளின் கையில்தான் உள்ளது. அதை முற்றாக மையப்படுத்தும் போக்குக்கு உகந்த மாற்றங்களை ஏற்படுத்த பல்வேறு புதிய அமைப்புகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
பிரதமர் தலைமையில் மையப்படுத்தப்பட்ட அதிகாரம் கொண்ட ராஷ்டிரிய சிக்க்ஷா ஆயோக் (ஆர்.எஸ்.ஏ.) உருவாக்குவது என முன்மொழியப்பட்டுள்ளது. அரசியல் தலையீடு இல்லாத கல்வித் துறையின் சுதந்திரம் குறித்து பெருமை பேசும் இந்த அறிக்கைதான், மறுபுறத்தில் 16 பேர் கொண்ட பிரதமர் தலைமையிலான குழுவுக்கு ஒட்டுமொத்த அதிகாரத்தை தூக்கிக்கொடுத்துள்ளது.
நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில், மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா போன்ற அமைப்புகளை சிதைக்கும் முயற்சியை கச்சிதமாக வகுத்துக் கொடுத்துள்ளது கஸ்தூரி ரங்கன் அறிக்கை.
பல ஆபத்தான விளைவுகளை உருவாக்கும் ‘தேசிய ஆராய்ச்சி நிறுவனம்’ என்ற மற்றொரு மையப்படுத்தப்பட்ட சர்வாதிகார அமைப்பை உருவாக்கவும் ஆலோசனை வகுத்துக் கொடுக்கப் பட்டுள்ளது. “இத்தகைய ஆராய்ச்சி நிறுவனங்கள் மாநில சுயாட்சி கொள்கைக்கு எதிரானவை. இந்த அமைப்புகள் இயந்திர கதியாக செயல்படுவதற்கே வழிவகுக்கும். தனிப்பட்ட ஆராய்ச்சியாளரின் அறிவு தாகத்துக்கு பூட்டுப் போட்டு விடும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
தாய்மொழிக் கல்வியை தகர்க்க, இந்தி மொழியை திணிக்க, மும்மொழி கல்வித் திட்டத்தை புகுத்த, வகைதொகையில்லாமல் வியாக்கியானங்களை பேசியிருக்கிறது வரைவறிக்கை. அதுபோல எல்லா மொழிகளுக்கும் அடிப்படை சமஸ்கிருத மொழி என கதை விட்டுள்ளார் ராக்கெட் நிபுணர் கஸ்தூரி ரங்கன்.
எங்கும் வணிகமயம், எதிலும் வணிகமயம்
உலகத்திலேயே அதிக அளவில், சுமார் 31 கோடி மாணவர்களைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. இத்தனை மாணவர்கள் உருவானதற்குத் தனியார் துறை பங்களிப்புதான் காரணம் எனப் பலர் விதந்தோதி வருகின்றனர். ஆனால், அது முழு உண்மையல்ல. அரசுக் கல்வி நிலையங்களின் வாயிலாகவே மாணவர்கள் கல்வி பயில்வதற்கான தளமும் வாய்ப்பும் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை பல்வேறு புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. அதிலும் குறிப்பாக சமூகரீதியாக, கல்விரீதியாகப் பின்தங்கிய பிரிவினர் கல்வி பயிலும் இடமாக அரசுக் கல்வி நிலையங்களே இன்றும் விளங்கி வருகின்றன.
கல்வி என்பது சமூக மாற்றத்துக்கான கருவியாக இருப்பதால் சமத்துவமாகக் கல்வி பெறும் வாய்ப்பை அனைவருக்கும் ஏற்படுத்தித் தருவதுதான் அரசின் கடமை என அரசியலமைப்புச் சட்டம் சுட்டிக் காட்டியுள்ளது. ஆனால், கல்வித்துறையில் வணிகமயம் என்பது சமத்துவ சமூகநீதியை குழிதோண்டிப் புதைத்துள்ளது. இதுவரை இந்திய கல்வி குழுக்கள் கொடுத்த பரிந்துரைகளை எல்லாம் ஒரு படி தாண்டி தனியார் பள்ளிகளும், தனியார் உயர்கல்வி நிலையங்கள் போன்று, தங்கள் விருப்பம்போல் கல்வி கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம் என முழு அனுமதி அளிக்கிறது இந்த வரைவு.
மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் 2016-17 ஆண்டு அறிக்கையின்படி இந்தியாவில் பழங்குடி இனத்தினர் 5.2%, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 14.3%, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 34%, முன்னேறிய வகுப்பினர் 46.5% என்ற விகிதாச்சாரத்தில் மாணவர்கள் உயர்கல்வி பெற்று வருவதாகக் கூறுகிறது. இத்தகைய அசமத்துவ நிலை மாற்றுவதற்கு அரசு கல்வி நிலையங்களும் சமூகநீதி கோட்பாடும் மிக அவசியம். ஆனால் சமூகநீதி கோட்பாட்டுக்கு எதிராக இடஒதுக்கீட்டு முறையை ஒழித்துக் கட்டுவதற்கு ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கூட்டத்தினர் குத்தீட்டியோடு களமிறங்கியுள்ளனர்.
இந்திய உழைப்பாளி வர்க்கத்தில் ஏற்படுத்தப்போகும் மாற்றங்கள் என்னென்ன என்பது குறித்து புதிய கல்விக் கொள்கை கிஞ்சித்தும் சிந்தித்ததாகத் தெரியவில்லை. எவ்வித துறைசார்ந்த அறிவும் இன்றி உழைப்பதற்கான சக்தியை மட்டுமே கொண்ட பெரும்பாலான உழைக்கும் கூட்டத்தை உருவாக்கி, நவீன இயந்திரங்களின் உதவியோடு மலினமாக உழைப்புச் சுரண்டலை நடத்த ஏகாதிபத்திய அமைப்புகளின் சதி திட்டத்துக்கு சாஷ்டாங்கமாக காலில் விழுந்து வரவேற்பு கொடுத்துள்ளது வரைவு அறிக்கை.
எல்லா மட்டத்திலும் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் என்பதினூடாக தேர்வுக்கான பயிற்சி மையங்களை தெருவுக்குத் தெரு திறந்து வைத்து பெருமுதலாளிகள் கொள்ளை லாபம் ஈட்ட வழி காட்டியுள்ளது வரைவு அறிக்கை. எத்தகைய சமூகச் சீர்கேடுகளை இது இந்திய சமூகத்தில் ஏற்படுத்தப் போகிறது என்பது குறித்து அக்கறை கொள்ளாதது வெட்கக்கேடு. உதாரணத்துக்கு தற்போது ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத டெல்லி பயிற்சி மையம் ஒன்றில் பயில 50 லட்ச ரூபாய் செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது. 50 லட்சம் கொடுத்து பயின்று ஐ.ஏ.எஸ். ஆகும் அதிகாரியிடம் சமூக அக்கறையை எதிர்பார்க்க இயலுமா?
செய்ய வேண்டியது என்ன?
ஜனநாயக விழுமியங்களை வளர்த்தெடுக்க வேண்டிய கல்வி நிலையங்களில் முழுமுற்றாக ஆசிரியர், மாணவர் ஜனநாயக உரிமைகளை பறித்து நட்ட நடு ஆற்றில் நிறுத்தியுள்ளது கஸ்தூரி ரங்கன் குழு.
கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு முன்மொழிந்துள்ள தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019 -ஐ முழுமையாக நிராகரிப்போம்!
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களை பாதுகாக்கக்கூடிய, பலப்படுத்தக்கூடிய, புதிய கல்வி முறையைக் காண போராட்டத்தை முன்னெடுப்ப்போம்!