மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


அதிகாரக் குவிப்பும் அத்துமீறல்களும்


உ. வாசுகி

அரசு என்பது ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறை கருவி என்றார் மார்க்ஸ். ஒரு நாட்டில் உள்ள அரசின் வர்க்கத் தன்மையைப் பொறுத்து, ஆளும் வர்க்கத்தின் நலனுக்கு ஏற்பவே அரசின் அங்கங்களும், அதிகார கட்டமைப்பும் அமையும். இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. இந்தியாவின் அரசியல் சாசனம், சுதந்திரத்துக்குப் பின் நவீன இந்தியா எத்தகையதாக கட்டமைக்கப்பட வேண்டும் என்ற பல நீரோட்டங்களின் கருத்து மோதல்களில் உருவானது. இந்திய முதலாளி வர்க்கத்தின் தலைமையிலான தேசிய நீரோட்டம், இடதுசாரி கருத்தோட்டம், ஆர்.எஸ்.எஸ். முன்வைத்த இந்து இந்தியா போன்ற பிரதான கருத்தியல்களில் ஆர்.எஸ்.எஸ்.சின் கண்ணோட்டம் நிராகரிக்கப்பட்டு, ஜனநாயக சோஷலிச குடியரசு என்ற அடிப்படையில் அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டது. பின்னர் மதச்சார்பின்மையும் இணைக்கப்பட்டது. டாக்டர் அம்பேத்கர் போன்ற தலைவர்களின் பங்களிப்பு இதில் முக்கியமானது.

கூட்டாட்சிக் கோட்பாடு இதில் இடம் பெற்றதற்கு முக்கிய காரணம் தேச விடுதலை போராட்டங்களில் மக்கள் பங்கேற்பும் , மொழி வழி மாநிலங்களுக்காகவும், மொழி கலாச்சாரம் பாதுகாக்கப்படுவதற்காகவும் பல்வேறு தேசிய இனங்கள் நடத்திய வெகுமக்கள் போராட்டங்களும்தாம். இவற்றில் இடதுசாரிகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. பல்வகை தேசிய இனங்கள், மொழிகள் உள்ளடங்கிய மாநிலங்கள் இணைந்த ஒன்றியம்தான் இந்தியா என்ற சாராம்சம் அரசியல் சாசனத்தில் இடம் பெற்றது. இந்தியாவில் பெரு முதலாளிகள் பெரிதும் வளர்ச்சியடையாத காலமாகவும் அது இருந்தது.

அரசியல் சாசனம் “வடிவத்தில் கூட்டாட்சி தன்மை (federal) கொண்டதாக இருந்தாலும், குணாம்சத்தில் மத்திய அரசிடம் அதிகார குவிப்புக்கு (unitary) வழி வகுப்பதாக உள்ளது” என்பது அன்றைக்கே கம்யூனிஸ்டுகளின் விமர்சனமாக அமைந்தது. பிரதான அதிகாரங்கள், வருவாய் மற்றும் வளங்களின் மீது கட்டுப்பாடு போன்றவை மத்திய அரசின் பொறுப்பில் இருந்தன. மாநில அரசுகளைக் கலைக்கும் உரிமை மத்திய அரசிடம் இருந்தது. நிதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் மத்திய அரசை சார்ந்து இருக்க வேண்டிய நிலைமையில்தான் மாநிலங்கள் வைக்கப்பட்டன. ஆளுநர்கள் மத்திய அரசின் முகவர்களாக செயல்பட்டனர். பொதுப்பட்டியலில் உள்ள அம்சங்கள் மீது முடிவெடுக்கும்போது கூட மாநிலங்களுடன் கலந்து பேசுவதற்கான ஏற்பாடு இல்லை. காலப்போக்கில் இந்த முரண்பாடு அதிகரித்தது. மத்திய மாநில உறவுகளை மறு வரையறை செய்யக்கோரி, 1977-ல் மேற்கு வங்க இடது முன்னணி அரசு 15 அம்ச கோரிக்கை சாசனத்தை உருவாக்கியது. வேறு பல கட்சிகளும் இந்நிலைபாட்டை எடுத்தன. 1983-ல் ஸ்ரீநகரில் நடந்த மாநாடு இத்தகைய கட்சிகளை ஒருங்கிணைத்தது. அதிகார பரவல் என்பது மைய அரசை பலவீனப்படுத்தாது; மாறாக அடித்தளத்தை வலுப்படுத்தும் என்று தோழர் ஜோதிபாசு அம்மாநாட்டில் முன்வைத்தார். அதே வருடம் மத்திய மாநில உறவுகளை மறு சீரமைப்பு செய்ய சர்க்காரியா கமிஷனை மத்திய அரசு அமைத்தது. இதன் அறிக்கை பல அடிப்படை முரண்பாடுகளைத் தீர்க்க உதவவில்லை. 1990-ல் தேசிய முன்னணி அரசு, மாநிலங்களுக்கிடையேயான கவுன்சிலை (Inter-State council) உருவாக்கியது. இது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், இதுவும் அடிப்படை பிரச்னைகளுக்கு வழிகாட்டவில்லை. மேலும் பல புதிய சிக்கல்கள் முளைத்தன. 2007-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி, மீண்டும் ஒரு கமிட்டியை, மத்திய மாநில உறவுகள் சம்பந்தமாக அமைத்தது. அதன் வரம்பும் கூட மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமல் நிர்ணயிக்கப்பட்டது.

பொதுவாக, அரசியல் சாசனத்தில் இருந்த கூட்டாட்சி அம்சங்களை வலுப்படுத்தும் விதமாக, மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் முறையிலேயே கம்யூனிஸ்ட் கட்சியின் தலையீடுகள், நிலைபாடுகள் அமைந்தன. மத்திய முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ அரசின் அதிகார குவிப்பை நிலைநிறுத்துவதாகவே காங்கிரசின் செயல்பாடுகள் இருந்தன. அரசின் வழிகாட்டுதல் மற்றும் உதவியோடு இந்தியாவில் முதலாளித்துவ வளர்ச்சி பாதை போடப்பட்டது. இந்தத் தேவைக்கு ஏற்றாற் போல் மாநில உரிமை வரம்பை மீறும் மத்திய அரசின் நடவடிக்கைகள் தொடர்ந்தன. மாநில முதலாளித்துவ கட்சிகளைப் பொறுத்தவரை, அவற்றின் தோற்றம் மாநில உரிமைகள், மொழி, கலாச்சாரம் போன்றவற்றை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டாலும், மாநில உரிமைகளுக்கான அவர்களின் வலுவான குரல், நவீன தாராளமய காலகட்டம் மாநில முதலாளிகளின் வளர்ச்சிக்குக் கதவைத் திறந்து விட்ட பின்னணியில், தளர்ந்து போனது.

இந்திய முதலாளித்துவத்தின் தடையற்ற வளர்ச்சிக்கு அரசின் கட்டுப்பாடுகள் ஒரு கட்டத்தில் தடையாக மாறின. 1990களில் நவீன தாராளமய கொள்கைகள் சுவீகரிக்கப்பட்ட பின்னணியில், சர்வதேச நிதி மூலதனம் விருப்பம் போல் லாபத்தைத் தேடி உலகம் சுற்றுவதற்கு ஏதுவாக அரசின் பங்கு பாத்திரம் மாறியது. ஒருங்கிணைந்த சந்தை உருவாவது முதலாளித்துவ வளர்ச்சிக்குப் பலனளிக்கும் என்ற நிலையில், மத்திய அரசின் கையில் மேலும் அதிகாரங்கள் மாறவும், மாநில உரிமைகள் நீர்த்துப் போகவுமான நடவடிக்கைகள் பின்தொடர்ந்தன. பெரு முதலாளிகளின் வர்க்க பிரதிநிதியான காங்கிரஸ் இந்தப் பாதையில்தான் செயல்பட்டது. பின்னர் வந்த பாஜக அதிகார குவிப்பை அடுத்த கட்டத்துக்கே கொண்டு போனது. நிதி மற்றும் வருவாய் பகிர்வு குறித்த அதிகார குவிப்பு பிறிதொரு கட்டுரையில் இடம் பெறும். அரசியல் பாதிப்புகளை இங்கு பரிசீலிக்கலாம்.

பாஜக ஆட்சியில் அதிகார குவிப்பு:

பாஜக ஆட்சியில் பெருமளவு அதிகாரங்களை மத்திய அரசும், பிரதமர் அலுவலகமும் தம் வசம் குவித்துக் கொள்வதை வெறும் எதேச்சாதிகார நடவடிக்கையாக, மீறலாக மட்டும் பார்க்க இயலாது. பாஜக அரசு இப்படித்தான் இயங்கும். அதன் சித்தாந்தம் அப்படி. வேறு வகையிலான அறிவிப்புகள், வாய் ஜாலங்கள் அனைத்தும் புலியின் மீது போர்த்தப்பட்ட பசு தோல்தான்.

ஆர்.எஸ்.எஸ்.சின் வழிகாட்டுதலில் இயங்கும் பாஜக அரசு, கார்ப்பரேட்டுகளின் ஒட்டுமொத்த ஆதரவைப் பெற்றிருக்கிறது. தீவிரமான கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை நடைமுறைப்படுத்தவும், ஏற்க மறுக்கிற மாநிலங்களின் எதிர்ப்பை நசுக்கவும் அதிகாரங்கள் மத்திய அரசிடம் குவிக்கப்பட வேண்டியிருக்கிறது. சர்வதேச நிதி மூலதனம் நாடு நாடாக போவதற்கும், வெளியேறுவதற்கும் ஒரு தேசமே கட்டுப்பாடுகளை அகற்ற வேண்டும் என்னும்போது, மாநிலங்களும் அப்பாதையில் செல்ல நிர்ப்பந்தப்படுத்தப்படுகின்றன. ஒரு பரந்து விரிந்த ஒருங்கிணைக்கப்பட்ட சந்தை நவீன தாராளமய காலத்தின் கட்டாயம்.

மறுபுறம், இந்துத்வ சித்தாந்தத்துக்கு ஏதுவாக ஒரே தேசம் – ஒரே கலாச்சாரம் – ஒரே மொழி என்ற ஒற்றை வடிவத்தைத் திணிக்கவும் அதிகார குவிப்பு மேலும் மேலும் தேவைப்படுகிறது. பாஜகவின் கலாச்சார தேசியம் என்ற சொல்லாடலும் சரி, அதன் கருத்தியலும் சரி, இந்தியாவின் பன்மைத் தன்மையை நிராகரிப்பதாகவே இருக்கிறது. தேசிய இனங்களின் பன்மைத் தன்மையை அங்கீகரிப்பதோடு தொடர்புடையதுதான் மாநில உரிமைகளுக்கான அங்கீகாரம். அது இல்லை என்றால் இது இருக்காது. இந்தப் பின்னணியிலேயே பாஜக அரசின் நடவடிக்கைகளைப் பொருத்திப் பார்க்க வேண்டும்.

உதாரணமாக, மானிய வெட்டு என்பது இவர்கள் பின்பற்றும் பொருளாதார கொள்கையின் ஒரு முக்கிய அம்சம். கொள்கை அடிப்படையில் இடதுசாரிகளும், மக்கள் போராட்டங்களின் வெப்பத்தில் இதர மாநில அரசுகளும், பொது விநியோக முறையை பலப்படுத்த வேண்டும் என்று கோருகின்றன. மானியத்தைக் குறைக்கும் நோக்குடன் வறுமை கோட்டைத் தீர்மானித்து, அதற்கேற்றாற் போல் அரிசி, கோதுமையை குறைப்பது, மண்ணெண்ணெயை நிறுத்துவது போன்ற நடவடிக்கைகள் காங்கிரஸ் ஆட்சியில் துவங்கின. தற்போது பாஜக ஆட்சி அதனைத் தீவிரமாக அமல்படுத்துகிறது. இது கேரளா, தமிழகம் போன்ற பொதுவிநியோக முறை ஓரளவு பலமாக இருக்கும் மாநிலங்களைக் கடுமையாக பாதித்துக் கொண்டிருக்கிறது. நேரடி பணப்பட்டுவாடா மூலம் பொதுவிநியோக முறையை முற்றிலும் சீரழிக்கும் நடவடிக்கைகள் படிப்படியாக அதிகரிக்கின்றன. தற்போதைய ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு என்பது பொதுவிநியோக முறையை நாசமாக்குவது மட்டுமல்ல; மாநில அரசாங்கங்கள் தம் மக்களுக்கு உணவு வழங்கும் அதிகாரத்தை மீறுவதாகவும் அமைகிறது. உலக வர்த்தகக் கழகத்தின் நிர்ப்பந்தங்கள், தம் குறுகிய அதிகாரங்களுக்கு உட்பட்டு சில நலத் திட்டங்களை அமல்படுத்த முயற்சிக்கிற மாநில அரசுகளுக்குத் தடையாக அமைகிறது. எனவே, சர்வதேச ஒப்பந்தங்கள் போடும் போது நாடாளுமன்ற ஒப்புதல் வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டியிருக்கிறது. ஜி.எஸ்.டி., நீட் உள்ளிட்ட நடவடிக்கைகளும் மாநிலங்களின் உரிமைகளை மீறக்கூடியவையாகவே அமைந்தன.

மொழி என்பது ஒரு தேசிய இனத்தின் மைய அம்சங்களில் ஒன்று. இந்தி திணிப்பை வலுவாக எதிர்த்த மாநிலங்களில் முதன்மையானது தமிழகம். இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பு, சமஸ்கிருத வளர்ச்சிக்குக் கூடுதல் நிதி ஒதுக்குவது, அகில இந்திய தேர்வுகள் சிலவற்றில் இந்தி, ஆங்கிலம் இரண்டை மட்டும் பயன்படுத்தியது, ரயில்வேயில் உள்ளக தொடர்புக்கு தமிழைப் பயன்படுத்தக் கூடாது என்று அறிவிப்பு வெளியிட்டது போன்ற நடவடிக்கைகள் மோடி ஆட்சியில் அடிக்கடி நடக்கின்றன. தேசிய வரைவு கல்வி கொள்கையின் மூலம் தமிழகத்தின் இரு மொழிக் கொள்கையை மறைமுகமாக மாற்ற முயற்சிக்கப்பட்டது. ஒவ்வொரு கட்டத்திலும் பலத்த எதிர்ப்புக்கிடையேதான் இது மாற்றிக் கொள்ளப்பட்டது. ஆனால் அடுத்த வாய்ப்பு வரும் போது மீண்டும் முயற்சிக்கப்படுகிறது. எனவே மாநிலங்களின் எதிர்ப்பை அங்கீகரித்து, எடுத்த முயற்சியை விட்டு விடுவது என்பது பாஜகவின் நோக்கமல்ல. தற்காலிகமாக விட்டுக் கொடுப்பது அல்லது தகர்த்து முன்னேறுவதுதான் அதன் உத்தியாகத் தெரிகிறது.

ஒரே தேசம் ஒரே தேர்தல் என்பதிலும் மாநிலங்களின் உரிமைகள் கடுமையாக மீறப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் பதவிக்காலத்தை அதிகரிப்பது அல்லது குறைப்பது என்ற உள்ளடக்கம் இதில் உண்டு. ஆளுநரின் மறைமுக ஆட்சிக்கும் இதில் பரிந்துரை செய்யப்படுகிறது.

17வது மக்களவை அமைக்கப்பட்ட பிறகு, நிலைக் குழுக்களோ, அவைக் குழுக்களோ உருவாக்கப்படவில்லை. எனவே, பல்வேறு மசோதாக்கள் முறையாக தயாரிக்கப்படாமல் நேரடியாக நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டன. பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய, ஆழமாக ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய, மாநில உரிமைகளைப் பறிக்கக் கூடிய மசோதாக்களை தெரிவுக் குழுவுக்காவது விட வேண்டும் என்ற எதிர் கட்சிகளின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. மக்களவையில் உள்ள மிருக பலத்தை வைத்து இந்த மசோதாக்கள் அனைத்தும் வரிசையாக நிறைவேற்றப் பட்டன. இவற்றில் பலவற்றில் மாநில உரிமைகள் வலுவாக மீறப்பட்டுள்ளன.

அனைத்து மாநில மக்கள் பிரதிதிகளும் இடம் பெறும் நாடாளுமன்றமும், அது சம்பந்தமாக பின்பற்ற வேண்டிய நடைமுறைகளும் புறக்கணிக்கப்பட்டு, பிரதமர் அலுவலகம் சார்ந்து முடிவுகள் எடுக்கப்படுவதும் கூட்டாட்சிக்கு முரணானது.

வரைவு தேசிய கல்விக் கொள்கை:

தற்போதைய வரைவு கொள்கையின் ஒரு பிரதான அம்சம் மையப்படுத்துதல். உதாரணமாக பிரதமர் தலைமையிலான ராஷ்டிரிய சிக்‌ஷா ஆயோக் என்ற அமைப்பின் கட்டுப்பாட்டிலும், கண்காணிப்பிலும் ஒட்டு மொத்த கல்வி நடவடிக்கைகள் இருக்கும் என்றும், ஆராய்ச்சி செய்ய வேண்டிய முக்கிய பிரச்னைகள் என்ன என்பதை இனி தேசிய ஆராய்ச்சி கழகம்தான் தீர்மானிக்கும் என்றும், இக்கழகம் தொழிலதிபர்கள், கார்ப்பரேட்டுகளின் நிதியைக் கொண்டு இயங்கும் என்றும் முன்மொழிவுகள் உள்ளன. கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாக எழும் போது, நேர்மாறாக, அதனை மத்திய பட்டியலுக்கு அதிகாரபூர்வமாகக் கொண்டு செல்லாமலேயே, அத்தகைய விளைவுகளை இக்கொள்கை ஏற்படுத்துகிறது.

தேசிய மருத்துவ ஆணையம்:

இதிலும் இந்தியா முழுவதும் உள்ள மருத்துவம் சார்ந்த அனைத்து அம்சங்களையும் இந்தக் கமிஷன் கட்டுப்படுத்தும் என்பது வருகிறது. தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50% இடங்களுக்கான கல்வி கட்டணம் அவர்களின் விருப்பத்துக்கு விடப்படுகிறது. மீதி 50%க்கு கட்டணம் வசூலிக்க பொதுவான வழிகாட்டுதல்தான் இருக்குமாம். அதற்கு ‘உட்பட்டு’ தனியார் மருத்துவ கல்லூரிகளே நிர்ணயித்துக் கொள்ளலாம். மாநில அரசு நிர்ணயிக்க இங்கு ஏதும் இல்லை. 6 மாத சுருக்கப்பட்ட பயிற்சி பெற்று கிராமப்புறங்களில் மருத்துவம் பார்க்கலாம் என்பதும், எக்ஸ்ரே டெக்னிஷியன், லேப் டெக்னிஷியன், கம்பவுண்டர் உள்ளிட்டோர் கூட இதனை செய்யலாம் என்பதும், நகர்ப்புற, கிராமப்புறங்களுக்கிடையே மருத்துவ சிகிச்சை தரத்தில் நிலவும் பாகுபாடுகளை இது சட்டபூர்வமாக்குகிறது. மாநில அரசின் அதிகார வரம்பை மீறுகிறது. ஐந்தரை ஆண்டு மருத்துவ படிப்புக்குப் பிறகு, மீண்டும் ஒரு தேர்வு எழுதப்பட வேண்டும் என்ற நிபந்தனை, பல்கலைக்கழகம் மருத்துவ பட்டம் கொடுக்குமா? இந்தத் தேர்வை நடத்தும் முகமையின் சார்பில் பட்டம் கொடுக்கப்படுமா? என்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

தகவல் உரிமை சட்டத் திருத்தத்தின்படி மாநில தகவல் ஆணையரின் ஊதியமும், பதவிக் காலமும் இனி மத்திய அரசின் கையில்தான். தேசிய புலனாய்வு முகமை திருத்த சட்டத்தில், எந்த மாநிலத்தில் உள்ள எவரை வேண்டுமானாலும் மத்திய உள்துறை அமைச்சகம், பயங்கரவாதி என்று முத்திரை குத்தி, மாநில அரசின் ஒப்புதல் இல்லாமலே அவரைக் கைது செய்து, அவரின் சொத்துக்களைக் கைப்பற்றலாம் என்ற பிரிவு உள்ளது. விசாரணை செய்வதிலும் மாநில காவல்துறையை ஈடுபடுத்தப்போவதில்லை. சட்டம் ஒழுங்கு மாநில அதிகாரம் என்பது இதில் நீர்த்துப் போகிறது.

தொழிலாளர் நல சட்டத் திருத்தம்:

தொழிலாளர் நலன் என்பது மத்திய – மாநில பொதுப் பட்டியலில் உள்ளது. 44 தொழிலாளர் நல சட்டங்கள் வெறும் நான்கு தொகுப்பாக மாற்றப்படும் என்று மாநிலங்களுடன் விவாதிக்காமல், நிதிநிலை அறிக்கையின்போது நிதியமைச்சர் உரையில் அறிவிக்கப்படுகிறது. இவற்றில் ஊதியம் குறித்த தொகுப்பு தற்போது சட்டமாகியிருக்கிறது.

குறைந்த பட்ச ஊதியம் குறித்து 15வது இந்திய தொழிலாளர் மாநாடு வழங்கிய பரிந்துரையும், பின்னர் ராப்டகாஸ் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும், இவற்றை ஏகமனதாக ஏற்று உருவாக்கப்பட்ட 45 மற்றும் 46வது இந்திய தொழிலாளர் மாநாடுகளின் பரிந்துரைகளும் இச்சட்டத்தில் இடம் பெறவில்லை. 7வது ஊதிய குழு பரிந்துரைத்த ரூ.18,000 என்பதும் புறந்தள்ளப்பட்டு தேசிய அடிமட்ட ஊதியம் ரூ.4628 என தொழிலாளர் நலத்துறை அமைச்சரால் தன்னிச்சையாக அறிவிக்கப்படுகிறது. முறைசாரா துறையில் முதலாளி, மத்திய அரசு நிர்ணயிப்பதையோ அல்லது மாநில அரசு நிர்ணயிப்பதையோ தரலாம் என்று பச்சை கொடி காட்டியிருப்பது, குறைவான கூலிக்கே இட்டு செல்லும். சில குறிப்பிட்ட மாநிலங்களில் தொழிற்சங்க இயக்கம் போராடி தியாகம் செய்து பெற்ற பலன்கள் கூட தொடர முடியாது. உதாரணமாக, கேரள அரசு ரூ.18,000 குறைந்தபட்ச ஊதியம் என்பதை சட்டரீதியாக்கியிருக்கிறது. சட்டங்களை மீறும் முதலாளிகளுக்கு அதிகமான அபராதம் விதிக்கப்படுவதற்கான சட்டமும் உள்ளது. ஆனால் அகில இந்திய சட்டம் வரும் போது, மாநில சட்டங்களை அமல்படுத்துவது மிகுந்த சிரமத்துக்குள்ளாகும்.

ஆளுநர்கள் அரசியல் ஆதாய கருவிகளாய்:

மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டத்திலேயே ஆளுநர் நியமனம் குறித்த விமர்சனம் இருக்கிறது. மேலிருந்து தன்னிச்சையாக நியமனம் செய்வது கூட்டாட்சிக்கு முரணானது. ஒரு வேளை அப்படிப்பட்ட பதவி தேவை என்றால், மாநில முதல்வர்கள் பரிந்துரைக்கும் மூவரில் ஒருவரை குடியரசு தலைவர் தேர்வு செய்து ஆளுநராக நியமனம் செய்வது என்ற வழியைப் பின்பற்றலாம். இது சர்க்காரியா கமிஷன் பரிந்துரையிலும் இடம் பெற்றிருக்கிறது. உலக அளவில் கூட்டாட்சி அமைப்பை வைத்திருக்கும் பிரதான நாடுகள் எவற்றிலும் மத்திய அரசு ஆளுநரை நியமனம் செய்யும் முறை இல்லை. அதே போல், மாநில அரசுகள் நிறைவேற்றும் மசோதாக்கள் ஆளுநர்/குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் போது எல்லையற்ற காலம் அதைக் கிடப்பில் போட்டு வைப்பதானது தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் பணிகளை முடக்கும் நடவடிக்கையே. எனவே, மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதும் மார்க்சிஸ்ட் கட்சியின் பரிந்துரையாக உள்ளது. மாநிலங்களின் கவுன்சில் இதற்கான அரசியல் சட்டத்திருத்தம் வேண்டும் என்று பலமுறை விவாதித்த பிறகும், அது அமல்படுத்தப்படவில்லை. ஆளுநர்கள் பல்கலைக்கழக வேந்தர்களாக இருப்பது பற்றியும், மாநில அரசை பகிரங்கமாக விமர்சிப்பது, அவர்களின் கருத்துக்களுக்கு முரண்படுவது போன்ற அம்சங்களும் தொடர்ந்து விவாதிக்கப்பட வேண்டியிருக்கிறது. புதுவை, தமிழக ஆளுநர்களின் அணுகுமுறை இதற்கு அண்மைக்கால உதாரணமாகும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கலைப்பது, கவிழ்ப்பது மற்றும் எந்தக் கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பது, எப்போது அழைப்பது போன்ற அம்சங்களில் மத்திய அரசின் செயல்கருவியாக ஆளுநர் செயல்பட்டதை அருணாச்சல பிரதேசம், உத்தராகண்ட், தமிழ்நாடு, கோவா, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் பார்த்தோம். இது இன்னும் அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளன.

குதிரை பேரம்:

ஒரு குறிப்பிட்ட கட்சியின் சார்பில் அதன் கொள்கைகளை சொல்லி போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள், இன்னொரு கட்சியால் விலைக்கு வாங்கப்படும் குதிரை பேரமானது ஜனநாயகத்தைக் கேலி கூத்தாக்குவதாகும். மாநில மக்களின் விருப்பத்தை/முடிவை கொல்லைப்புற வழியாக தட்டிப் பறிப்பதாகும். தற்போது பாஜக ஆட்சியில், வாடிக்கையாக, அங்கீகரிக்கப்பட்ட நடவடிக்கையாக இது பெருமளவு மாறிவிட்டது. கர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்த குதிரை பேரம், அடுத்து ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தைக் குறி வைத்து செய்யப்படுகிறது.

மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து:

11 மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து இந்திய அரசியல் சட்டத்தில் அளிக்கப்பட்டிருக்கிறது. முதன்முதலில் அரசியல் சாசனத்தின் ஓர் அம்சமாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டது. ஆனால் படிப்படியாக அது நீர்த்துக் கொண்டே வந்தது. அண்மை காலத்தில் மாநில அரசு கலைக்கப்பட்டு, குடியரசு தலைவரின் ஆட்சியின் கீழ் இருக்கும் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலும் நடத்தப்பட வேண்டும் என்று கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்திய பிறகும், தேர்தல் ஆணையம் முன்வரவில்லை.

தற்போது, ஒரு சில மணி நேரங்களில் நாடாளுமன்றத்தின் மூலமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து, அதன் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, குடியரசு தலைவரின் ஒப்புதலையும் பெற்று, பல்லாண்டுகளாக அம்மாநிலம் அனுபவித்து வந்த உரிமைகளைக் குழி தோண்டிப் புதைத்து விட்டது பாஜக அரசு. இனி சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலமாக அது இருக்க முடியாது என்பது மட்டுமல்ல; மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் அது இயங்க வேண்டியிருக்கும். இந்து இந்தியாவில், முஸ்லீம்கள் கணிசமாக இருக்கும் மாநிலம் சிறப்பு அந்தஸ்துடன் இயங்கலாமா என்ற மதவெறி நிகழ்ச்சி நிரலோடு சேர்த்து, இனி கார்ப்பரேட்டுகளுக்கு அதன் இயற்கை வளங்களை அள்ளிக் கொடுக்க முடியும் என்பதும் உள்ளது. நாடாளுமன்றப் பெரும்பான்மையின் கொடுங்கோன்மையைப் பயன்படுத்தி ஒரு மாநிலத்தையே இந்திய வரைபடத்தில் சிதைக்க முடியும் என்றால், இனி எந்த மாநிலத்தையும் எதுவும் செய்யலாம். ஜனநாயக படுகொலை என்பதோடு சேர்த்து, இந்தியாவின் சாரமாக இருக்கும் கூட்டாட்சியை மியூசியத்தில் அடைத்து வைத்து காட்சி பொருளாக்கும் ஏற்பாடே இது.

விடுதலை போராட்டத்தில் பங்களிப்பு செய்யாத ஆர்.எஸ்.எஸ்., காந்தி படுகொலைக்குப் பின் தடை செய்யப்பட்டு, மீண்டு வந்து, அதன் எண்ணற்ற அமைப்புகள் மூலமாக பாசிச உத்திகளைப் பயன்படுத்தி, தற்போது அரசியல் அதிகாரம் பெரும்பான்மை பலத்தோடு கைக்கு வந்த சூழலில், நாட்டின் விடுதலைக்குப் பிறகு மக்களால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்ட தனது நிகழ்ச்சி நிரலை ஒவ்வொன்றாக அமல்படுத்துகிறது. இதுதான் பாஜக அரசு பயணிக்கும் திசைவழியாக உள்ளது. மக்களின் மனநிலையை ஜனநாயகப்படுத்தி, போராட்ட ஒற்றுமையை ஏற்படுத்தும் பணியில் களத்திலும், கருத்தியல் தளத்திலும் முன்னிலும் வேகமாக இடதுசாரிகள் செயல்பட வேண்டிய நேரம் இது.



One response to “அதிகாரக் குவிப்பும் அத்துமீறல்களும்”

  1. தாரைப்பிதா Avatar
    தாரைப்பிதா

    களத்தில் கருத்தியல் போராட்டத்திற்கு உதவிடும் கட்டுரையே… மகிழ்ச்சி.

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: