தமிழில்: இரா.சிந்தன்
நடப்பு நிலைமைகளை பயில்வதைப் புறந்தள்ளுதல், வரலாறு பயில்வதைப் புறந் தள்ளுதல், மார்க்சிய – லெனினியத்தைப் பயன்படுத்துதலை புறந்தள்ளுதல் ஆகியவை அனைத்தும் மோசமான வேலைப் பாணியை விளைவிக்கின்றன. அதன் பரவல், நம்மில் பல தோழர்களுக்கு தீங்கிழைத்துள்ளது.
உண்மையில் நமது அணிகளில் உள்ள பல தோழர்கள் இந்த வேலைப்பாணியால் தவறிழைக்கிறார்கள் நாட்டுக்கு உள்ளும் வெளியிலும், நாடு, மாகாணம், கவுண்டி அல்லது மாவட்டங்களிலும் குறிப்பான நிலைமைகளை முறையாகவும், முழுமையாகவும் ஆய்ந்து பயின்று செயல்பட விரும்புவதில்லை, மாறாக தங்கள் குறைபாடான அறிவைக் கொண்டும், ”எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது எனவே அப்படித்தான் இருக்க வேண்டும்” என்று கருதியும் உத்தரவுகளை மேற்கொள்கின்றனர். நம்மிடையே பெரிய அளவில் பல தோழர்களிடம் இன்னமும் இந்த அகநிலைவாதப் பாணி நிலவுகிறது அல்லவா?
சிலர் தம் சொந்த வரலாற்றைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் இருப்பதற்கும், குறைந்த அளவே தெரிந்திருப்பதற்கும் வெட்கப்படுவதற்கு பதிலாக, இறுமாப்புடன் இருக்கிறார்கள்…
***
… நாம் மார்க்சியத்தைப் பயின்று கொண்டிருக்கிற போதிலும் நம்மில் பலர் அதைப் பயிலும் வழியானது மார்க்சியத்திற்கு நேர் எதிராக இருக்கிறது. அதாவது, மார்க்சும், எங்கல்சும், லெனினும், ஸ்டாலினும் அக்கறையுடன் நமக்கு வலியுறுத்திய ”நடைமுறையையும் தத்துவத்தையும் இணைத்தல்” என்ற அடிப்படைக் கொள்கை நெறியையே மீறுகின்றனர். அப்படி மீறுவது மட்டுமல்லாமல், தமக்கேற்ற வகையில் எதிர்நிலையான ஒரு சொந்த நெறியை வளர்த்தெடுத்து, தத்துவத்தையும், நடைமுறையையும் பிரிக்கின்றனர்…
***
… இந்தக் கருத்தினை மேலும் விளக்குவதற்கான, நேரெதிரான இரண்டு உளப்பாங்குகளை வேறுபடுத்திக் காட்டுகிறேன்.
முதலில், அகநிலை உளப்பாங்கு.
இந்த உளப்பாங்கோடிருக்கும் ஒரு நபர் சூழல் குறித்த ஆழமான, முறையான பயிலுதல் எதுவும் செய்யாமல் தன் தனிப்பட்ட அகவய உற்சாகத்தின் அடிப்படையில் பணிபுரிகிறார், இன்றுள்ள சீன நிலைமைகளைப் பற்றி மங்கலான புரிதலே கொண்டிருக்கிறார். தனது மனநிலையின் வழியே சீன வரலாற்றை வெட்டிக் குறுக்குகிறார், நேற்றும், நேற்று முன் தினமும் சீனா கடந்துவந்திருக்கும் நிலைமைகளைப் பற்றி தெளிவில்லாத நிலையில் உள்ள அவருக்கு பண்டைய கிரேக்கம் பற்றி மட்டுமே தெரிகிறது. இந்த மனநிலையில் இருக்கும் ஒருவர் மார்க்சிய-லெனினியக் கோட்பாட்டை அருவமாக, குறிக்கோள் ஏதுமின்றிப் பயில்கிறார்.
அவர் சீனப் புரட்சியின் தத்துவார்த்தப் பிரச்சனைகளுக்கும், உத்தி ரீதியிலான பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதற்கான வழிமுறையையும், கண்ணோட்டத்தையும், நிலைப்பாடுகளையும் அறிந்துகொள்வதற்காக அல்லாமல், தத்துவத்தை வெறும் தத்துவமாக வாசிக்கவே மார்க்ஸ், எங்கல்ஸ் லெனின் மற்றும் ஸ்டாலினை அணுகுகிறார். இலக்கை நோக்கி அம்பெய்தாமல், அங்கொன்றும் இங்கொன்றுமாக எய்துகிறார். மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோர் நாம் புறவய எதார்த்தங்களில் இருந்து நம் செயல்பாடுகளைத் தொடங்கவேண்டும் என்கின்றனர். அதிலிருந்து நாம் விதிகளை உய்த்துணர்ந்தால் அவை நம் செயல்பாடுகளுக்கு வழிகாட்டியாக அமையும் என்று கற்பித்துள்ளனர்.
அதற்கு நாம், மார்க்ஸ் கூறியிருப்பதைப் போல, விரிவான தரவுகளைப் பெற்று அவற்றை விளக்கமாகவும், அறிவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்தியும் செயல்பட வேண்டும். நம்மில் பலர் இப்படி செயல்படாமல், எதிர்திசையில் செயல்படுகின்றனர். அவர்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள் ஆனால் அவர்களிடத்தில் இன்றைக் குறித்தோ, நேற்றைய சீனா குறித்தோ கற்க விருப்பமிருப்பதில்லை, எதார்த்தத்திலிருந்து விலகிய வெற்றுக் “கோட்பாடுகளை” பயில்வதற்கே பழக்கப்பட்டுள்ளனர். மேலும் பிறர் நடைமுறைப் பணிகளை மேற்கொள்கின்றனர்.
ஆனால், அவர்கள் கூட புறவய நிலைமைகளைப் பயில்வதற்கு தங்களது கவனத்தினைச் செலுத்தாமல், பெரிதும் தங்கள் சொந்த ஆர்வத்தினைச் சாந்து தங்கள் தனிநபர் உணர்வுகளை கொள்கைகளிடத்தில் முன்வைக்கின்றனர். இவ்விரு வகையிலான நபர்கள் அகநிலையைச் சார்ந்துள்ளதோடு புறவய எதார்த்தங்களையும் புறக்கணிக்கின்றனர். அவர்கள் உரைவீச்சுக்களில் பெரியளவில் வாய்ச்சவடால் அடிப்பார்கள், கட்டுரைகளில் A, B, C, D, 1, 2, 3, 4 என நீண்ட வரிசையில் மனம் போன போக்கில் எழுதுவார்கள். அவர்கள் நடந்தவைகளிலிருந்து பேருண்மையை தேடும் நோக்கமில்லாமல் இருக்கின்றனர்; மாறாகப் பகட்டாரவாரத்தின் வாயிலாக பிறர் கவனம் ஈர்க்கும் விருப்பத்தை மட்டுமே கொண்டிருக்கின்றனர்.
அவர்கள் உள்ளீடு ஏதுமின்றி வெளிப்புறத்தே ஒளிர்கின்றனர், உடையும் தன்மையோடு உறுதியற்றுள்ளனர். அவர்களே எப்போதும் சரியானவர்கள், சொர்கத்தின் கீழே அவர்கள் மட்டுமே முதன்மை அதிகாரம் கொண்டவர்கள். இந்த “ஏகாதிபத்திய தூதுவர்கள்” எல்லாவிடத்தும் ஓடிக் கொண்டுள்ளனர். நம் அணிகளில் உள்ள சில தோழர்களிடம் இந்த வேலைப்பாணி காணப்படுகிறது. ஒருவரை இந்தப் பாணி ஆட்கொள்ளும்போது அவர் பாதிக்கப்படுகிறார், மற்றவர்களுக்கு கற்றுத் தரும்போது அவர்களும் கெடுகின்றனர், புரட்சியை வழிநடத்தை இந்த வழிமுறையைப் பயன்படுத்துவதானது புரட்சியையே பாதிக்கிறது.
தொகுத்துச் சொன்னால், இந்த அகநிலைப்பட்ட வழிமுறையானது மார்க்சிய – லெனினியத்திற்கும் அறிவியலுக்கும் முரண்பட்டதாகவும் (உழைக்கும் வர்க்கம், மக்கள் மற்றும் தேசத்திற்கே) ஒரு வல்லமைமிக்க எதிரியாகவும் உள்ளது; இது ஒரு கட்சியின் உயிரோட்டத்தில் ஏற்பட்ட பிழையின் விளைவாகும். ஒரு வல்லமை மிக்க எதிரி நம் முன் நிற்கிறான், நாம் அவனை வீழ்த்தியாகவேண்டும். அகநிலைவாதம் வீழ்த்தப்பட்டால் மட்டுமே மார்க்சிய-லெனினியம் என்ற பேருண்மை மேலோங்கும்; கட்சியின் உயிரோட்டம் வலுப்படுத்தப்படும், புரட்சி வெற்றிகரமாகும், அறிவியல் மனப்பான்மை இல்லாமல் போவதானது அதாவது தத்துவத்தையும் நடைமுறையையும் இணைக்கும் மார்க்சிய-லெனினிய அணுகுமுறை இல்லாமல் போவதானது, கட்சியின் உயிரோட்டம் இல்லாமல் போவதை அல்லது பற்றாக்குறையைக் காட்டுகிறது.
இப்படிப்பட்ட நபர்களைச் சித்தரிக்கும் ஈரடிப் பாடல் ஒன்றுள்ளது, அது இவ்வாறு பொருள் தரும்,
சுவற்றில் வளரும் நாணலின் தலை கனத்திருக்கும் தண்டு மெலிந்திருக்கும், வேர்கள் பிடிப்பற்றவை
குன்றிலே விளைந்த மூங்கிலின் முனை கூர்மையாய் இருக்கும், தோல் கணத்திருக்கும், உள்ளீடற்று இருக்கும்
அறிவியல் மனப்பான்மை இன்றி, மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், ஸ்டாலினின் படைப்புகளில் இருந்து சொற்களையும் வாக்கியங்களையும் மட்டுமே மனனம் செய்து ஓதியபடி, மெய்யான கற்றறிதல் இல்லாமல் புகழை அனுபவிப்போருக்கு இதுவல்லவா பொருத்தமானதொரு விளக்கப்பா? ஒருவர் தன் பிணியிலிருந்து நலம்பெற விரும்பினால், அவரை இந்த ஈரடிப் பாடலை மனப்பாடம் செய்துகொள்ளவோ அல்லது இன்னும் அதிக வீரத்தோடு தன் அறையின் சுவர்களில் இந்த வரிகளை எழுதிவைத்துக் கொள்ளுமாறு அறிவுருத்துவேன். மார்க்சியம்-லெனினியம் ஓர் அறிவியலாகும். மேலும், அறிவியலின் பொருள், நேர்மையான உறுதியான அறிவு ஆகும்; அங்கே தந்திரச் செயல்களுக்கு இடமில்லை. ஆகையால் நாம், நேர்மையாக இருப்போம்.
இரண்டாவதாக, மார்க்சிய லெனினிய அணுகுமுறை உள்ளது.
இந்த அணுகுமுறை கொண்டு, ஒரு நபர் தத்துவத்தையும் மார்க்சிய லெனினிய வழிமுறையையும் படிப்படியாக, ஆழமான ஆய்வுகள் செய்து, சூழலைக் குறித்து நன்கு பயின்று அமலாக்குகிறார். தன் சொந்த ஆர்வத்தால் மட்டும் அவர் செயல்படுவதில்லை, ஸ்டாலின் சொல்வதைப் போல நடைமுறைத் தன்மையை புரட்சிகர வீச்சோடு இணைக்கிறார். இந்த உளப்பாங்குடன் அவர் வரலாற்றை வெட்டிக் குறுக்கமாட்டார்…
***
… இதுபோன்றதொரு உளப் பாங்கை மேற்கொள்வது என்பது மெய்நிகழ்வுகளிலிருந்து (facts) பேருண்மையை தேடுவது ஆகும். “மெய் நிகழ்வுகள்” என்பன புறவயமாக நிலவும் பொருட்களாகும். பேருண்மையின் பொருள் என்பது அவற்றின் உள் உறவுகள் ஆகும். அதாவது, அவற்றை ஆட்சி செய்யும் விதிகள் “தேடுவது” என்றால் பயில்வதாகும். நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும், மாகாணத்திலும், மாவட்டத்திலும் அல்லது கவுண்டியிலும் நிலவும் உண்மையான நிலைமைகளிலிருந்து நம் செயல்பாட்டைத் தொடங்க வேண்டும், நமது செயலுக்காக கற்பனையாக இல்லாமல், உள்ளார்ந்திருக்கும் வழிகாட்டு நெறிகளையும், விதிகளையும் கண்டறிய வேண்டும், அதாவது நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் ஒன்றுக் கொண்டு உள்ள தொடர்புகளைக் கண்டறிய வேண்டும்.
மேலும் இதைச் செய்வதற்காக நாம் அகவய கற்பனையையோ, அப்போதைய ஆர்வத்தையோ அல்லது சாரமற்ற புத்தகங்களையோ சார்ந்திருக்கக் கூடாது, புறவயமாக நிலவுகின்ற சூழல்களைத்தான் சார்ந்திருக்க வேண்டும். உரிய வகையில் தகவல்களைச் சேகரித்து, மார்க்சிய-லெனினிய பொதுக்கொள்கை நெறிகளினை சரியாகப் பின்பற்றி அதிலிருந்து முடிவுகளை வகுக்க வேண்டும். இத்தகைய முடிவுகள் வெறும் அ, ஆ, இ, ஈ வரிசையாலான நிகழ்ச்சிப்போக்குகள் நிறைந்த பட்டியல்களோ, பயனற்ற கூற்றுகள் நிரம்பிய எழுத்துக்களோ அல்ல, அவை அறிவியல் பூர்வமான முடிவுகள் ஆகும். இத்தகைய உளப்பாங்கு என்பது மெய் நிகழ்வுகளிலிருந்து பேருண்மையை தேடுவது, வெற்று பசப் புரையிலிருந்து அணுகூலமானதைப் பெறுவது அல்ல.
இதுதான் மார்க்சிய-லெனிய வழியில் தத்துவத்தையும் நடைமுறையையும் இணைப்பதாகும், உயிரோட்டமான கட்சியின் வெளிப்பாடு இதுவே. எந்தவொரு கட்சி உறுப்பினரும் இந்த அணுகுமுறையை மிக குறைந்த அளவிலேனும் கைக் கொண்டிருக்கவேண்டும். இந்த அணுகுமுறையைக் கைக்கொள்ளும் ஒருவருக்கு “தலை கனத்து, தண்டு மெலிந்து, வேர்ப்பிடிப்பில்லாமல்” இருக்காது. “கூரான நாக்கும், தடித்த தோலும், உள்ளீடற்றும்” கொண்டவராக இருக்க மாட்டார்…
Leave a Reply