டி.கே.ரங்கராஜன்
காஷ்மீரில் அரசமைப்புச் சட்ட பிரிவு 370 வழங்கியிருந்த உரிமைகள் பறிக்கப்பட்டிருக்கின்றன. பாஜக தனது கொள்கையை அமலாக்கியிருப்பதாக சொல்கிறது. வாஜ்பாய் ஆட்சிக்காலத்திலோ, மோடியின் கடந்த ஆட்சியிலோ செய்யாத ஒன்றை இப்போது அவசர அவசரமாக செய்வதற்கு என்ன காரணம்?
காஷ்மீர் பிரச்சனையைப் பற்றி விரிவாக பேசுவதற்கு முன், சில அடிப்படையான விசயங்களை நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. அடிப்படையில் பாஜக ஒரு வகுப்புவாத கட்சி. அது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வடித்துக் கொடுத்த வகுப்புவாத தத்துவத்தைத்தான் முன்னெடுக்கும்.
ஒரு வகுப்புவாதக் அமைப்பானது சில குறிப்பிட்ட கொள்கைகளின் அடிப்படையில் தனது செயல்களை அமைத்துக் கொள்வதில்லை. தனது கொள்கைத் திட்டத்தில் எதையும் கைவிட்டுவிடும், எதையும் மாற்றிக்கொள்ளும், சில சமயங்களில் தன் கொள்கை என்று பேசிவந்தவைகளுக்கு நேர் விரோதமாகக் கூட செயல்படும்.
வகுப்புவாதிகள் பேசும் சமூக, பொருளாதார, அரசியல் கொள்கைகள் பெரும்பாலும் அவர்களின் முகமூடியாகவே அமைந்திருக்கிறன. தன்னுடைய தேர்தல் தேவைகளுக்காகவும், அரசியல் தேவைகளுக்காகவும் இவற்றை மாற்றிக் கொள்வதை வகுப்புவாதம் மிக இயல்பாக மேற்கொள்ளும். அரசியல் ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொள்ள இவ்வாறு செயல்படுவது அதற்கு அவசியமாகிறது. அதே சமயம், அதிகாரத்தை பயன்படுத்தி தன்னுடைய வகுப்புவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க அது விரும்புகிறது.
வகுப்புவாதக் கட்சியை ஒரு பழமைவாதக் கட்சி என வரையறுத்துவிட முடியாது. நடைமுறையில் உள்ள சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பில் அது எல்லா நேரமும் பழமைவாதத்தை பிரதிநிதித்துவம் செய்வதில்லை. உண்மையில் பழமைவாதிகள் மதநல்லிணக்க உணர்வோடு இருந்திருக்கின்றனர். இந்தியாவில் சுதந்திரா கட்சியும், பிரிட்டனின் பழமைவாதக் கட்சியும் அதற்கு உதாரணங்கள். இந்து முஸ்லிம் ஒற்றுமையை சுதந்திரா கட்சி வலியுறுத்திவந்திருக்கிறது. அது தனது கொள்கை என வகுத்துக் கொண்டவைகளோடு ஒட்டி செயல்பட்டது.
பாஜக ஒரு வலதுசாரி அதிதீவிர கட்சியும் ஆகும். நாட்டின் பொருளாதாரத்தில் பிற்போக்கு, சுரண்டல் சக்திகள் வலுப்படாமல் தன்னுடைய திட்டத்தில் அதனால் முன் செல்ல முடியாது. அவ்வாறு செய்வதன் மூலமே அதனால் அரசு இயந்திரத்தையும், சமூகத்தையும் வகுப்புவாத தன்மையுடையதாக மாற்றிட முடியும்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பல்வேறு பரிவாரங்களில் சுதேசி ஜாக்ரன் மஞ்ச் என்ற அமைப்பும் ஒன்று. அதன் பிரச்சாரத்தை கவனித்தால், பொதுத்துறை பங்குகளை தனியார்மயப்படுத்துவதையோ, அன்னிய மூலதனம் இந்தியாவுக்குள் நுழைவதையோ எதிர்க்காது. ஏகபோகமும், ஏகாதிபத்தியமும் அதன் இலக்கல்ல. அதே சமயம் மக்களிடையே சீன பட்டு வாங்க வேண்டாம் எனச் சொல்லி சுதேசிப் பட்டுக்கு வக்காலத்து வாங்குவதைப் போன்ற பிரச்சாரங்களை முன்னெடுக்கும்.
அதே போல, சில தினங்களுக்கு முன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், ஜாமியத் அமைப்பின் தலைவர் மெளலானா சையது அர்ஷத் மதானியை சந்தித்தார். நாட்டில் இந்து முஸ்லிம் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் மேம்படுத்துவதே இந்த சந்திப்பின் நோக்கம் என தெரிவித்தனர். இந்த சந்திப்பு முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாகவும், தேர்தலை மனதில் கொண்டு காலதாமதம் செய்யப்பட்டதாகவும் ‘தினமணி’ (செப். 3) தெரிவிக்கிறது.
பாஜக எந்த இலக்கை நோக்கி முன்னேறுகிறது, நாட்டை நகர்த்துகிறது என்பதை அறிந்துகொள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் திட்டத்தை ஒருவர் புரிந்துகொள்ள வேண்டும். ஆர்.எஸ்.எஸ் அடிப்படையில் முஸ்லிம் வெறுப்பில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் அமைப்பாகும். அதன் திட்டமும், சாவர்க்கரும், கோல்வால்கரும் வகுத்துக் கொடுத்த கொள்கைகளும், இத்தாலியில் வளர்ந்த பாசிசத்திலிருந்து ஆக்கம்பெற்றவை. இந்துஸ்தான் டைம்ஸ் இதழ், மோடி அரசாங்கத்தின் பயனத்திட்டத்தை குறிப்பிடுகையில் அது ‘தாய்மதம் திரும்புதல்’ முதல் ‘ஒரு நாடு, ஒரு சட்டம்’ என்பது வரையில் சாவர்க்கரின் அடியொற்றி செயல்படுகிறது என்று குறிப்பிட்டது. எனவே மோடி அரசாங்கத்தின் எந்த நடவடிக்கையும், இந்துத்துவ நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டது. அதனை தனித்துப் பார்ப்பது உதவாது. காஷ்மீர் சிக்கலுக்கும் இது பொருந்தும்.
வகுப்புவாதம் ஒரு திசைதிருப்பும் உத்தி என்று பார்க்கப்படுகிறதே?
தற்போதைய சூழலில் பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு முரண்பாடுகள் மக்களிடையே எழுகின்றன. அதற்கு மாற்றாக, மக்களை திசைதிருப்பு, அரசியல் அறுவடைக்காக காஷ்மீர் பிரச்சனையும், இதர வகுப்புவாத முழக்கங்களும் ஒரு உத்தியாக முன்னெடுக்கப்படுகிறது. புல்வாமா தாக்குதலை ஒட்டிய பேச்சு பாஜகவின் தேர்தல் வெற்றிக்கு உதவியது, காஷ்மீர் பிரச்சனையிலும் மக்கள் மத்தியில் அவர்களுக்கு செல்வாக்கு அதிகரித்திருப்பதாக கூறுகிறார்கள். இந்தப் போக்கு சரியான போக்கு அல்ல. ஆனால் ஆளும் வர்க்கம் தன்னை கெட்டிப்படுத்திக் கொள்வதற்காக, தவறான முறையில் இதைச் செய்கிறது. அவசியமான நடவடிக்கைகள் எடுக்காமல், செய்யக் கூடாதவைகளைச் செய்து தன்னை பலப்படுத்திக்கொள்ள ஆர்.எஸ்.எஸ்., பாஜக செயல்படுகிறது. இந்த நிலைமைகளை மக்களிடம் அம்பலப்படுத்தி, அவசியமானவைகளை நோக்கி அரசின் நடவடிக்கைகளை திருப்ப வேண்டும். அதைத்தான் மார்க்சிஸ்ட்கள் செய்ய முயற்சிக்கிறோம்.
ஏனெனில், வகுப்புவாதம் என்பது காலூன்றிவிட்டது. அது காலூன்றவில்லை என்று சொல்லி ஏமாற்றிக்கொள்ள வேண்டியதில்லை. அதனை எதிர்த்து போராடவேண்டிய அவசியம் உள்ளது. போதுமான அளவுக்கு எதிர்ப்பு ஒருங்கிணைக்கப்படவில்லை. எதிர்ப்பு வலுப்படாமல் இருப்பதற்காக மாநிலக் கட்சிகளை ஒடுக்குவது, வழக்குகள் போடுவது, கட்சித்தாவலை ஊக்குவிப்பது என செயல்படுகின்றனர்.
காஷ்மீர் மீது பெரு முதலாளிகளுக்கும் ஒரு கண் இருக்கிறதுதானே?
கண்டிப்பாக. காஷ்மீர் பிரச்சனையில் பாஜக எடுத்திருக்கும் நிலைப்பாடுகளை பெரு முதலாளித்துவ பத்திரிக்கைகள் ஆதரித்து எழுதுவதன் காரணமே, அது தங்களுக்கு பெரிய சுற்றுலா தளமாக அமையும் என்று பெருமுதலாளிகள் நம்புவதுதான். 5 நட்சத்திர ஹோட்டல்களை உருவாக்க முடியும் என்கின்றனர். காஷ்மீரில் அது வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்கின்றனர். உண்மையில் அது ஏற்கனவே குஜராத்தை விட சிறப்பாக இருக்கிறது என்பதைத்தான் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
காஷ்மீரில் பாஜக எடுத்திருக்கும் 370 ரத்து நடவடிக்கை, இந்திய பெருமுதலாளிகள் நலனுக்காகவும் எடுக்கப்பட்ட நடவடிக்கை. அம்பானியும், அதானியும் முதலீடு தருகிறேன் என்பதும். தோனி அங்கே சென்று கிரிக்கெட் குழுவை ஆரம்பிக்கப் போகிறேன் எனச் சொல்வதும் எதன் காரணமாக? இதுவரை அவர்கள் ஏன் இதையெல்லாம் செய்யவில்லை?.
உலக அரங்கில் பாகிஸ்தான் பேசுவதும், இந்திய எதிர்வினையும் என்ன விளைவை ஏற்படுத்துகின்றன?
பாகிஸ்தான் பேசுகிற எல்லாப் பேச்சுக்களும் பாகிஸ்தானில் உள்ள மதவாதிகளுக்கு தீனி போடுவதற்காக பேசுகிறது. அதுதான் முதல் அடிப்படை. பாகிஸ்தான் தனது தளத்தை உறுதி செய்வதற்காக இந்த முழக்கத்தை முன்வைத்துக் கொள்கிறது.
அமெரிக்கா எந்தப் பக்கம் என்பது இப்பிரச்சனையில் ஒரு தாக்கம் செலுத்தவில்லையா?
பாகிஸ்தான் அமெரிக்காவில் உற்ற நண்பனாக இருந்துவருகிறது. பாகிஸ்தானின் ராணுவம் அமெரிக்காவின் பெண்டகனால் பயிற்சியளிக்கப்பட்டது. அவர்களின் ராணுவ தளவாடங்களில் 90 சதவீத்தத்திற்கும் அதிகமாக நேட்டோவுடையது. அமெரிக்கா இந்தியாவை தன்னுடைய சந்தையாக பார்க்கிறது. சீனாவுக்கு எதிராக நிறுத்துவதற்காகவும், தன்னுடைய சந்தையாகவும் இந்தியாவை பார்ப்பதால் அமெரிக்கா இந்திய அரசை பகைத்துக்கொள்ள விரும்பவில்லை. இந்திய அரசும் அமெரிக்காவுக்கு இளைய பங்காளியாக செயல்படுகிறது. மக்கள் சீனத்தை எதிர்து இந்தியாவை உட்படுத்தி ஜப்பான் , ஆஸ்திரேலியா கூட்டணி உருவாக்க செயல்படுகிறது. தனது நெடுநாளைய நண்பனுக்கும், இளைய பங்காளிக்கும் நடுவே அமெரிக்கா ஒரு சமநிலையை கடைப்பிடிக்கப் பார்க்கிறது. பாகிஸ்தானை அது கைவிட முடியாது. ஆப்கானிஸ்தான், ரஷ்யா என பல நாடுகளை எதிர்கொள்ள பூகோள அரசியலில் பாகிஸ்தானை அது விட முடியாது. இந்தியச் சந்தையையும் அது விட முடியாது. காஷ்மீரில் இந்தியா நடந்துகொண்டிருக்கும் முறை பற்றி அமெரிக்கா எந்தக் அக்கறையும் இல்லை; அனைத்திலும் தங்களது ஏகாதிபத்திய நலன்களைப் பாதுகாப்பதற்குத்தான் அவர்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
Leave a Reply