- அ. இராசகோபால்
இந்திய அரசின் சமீபத்திய அறிக்கையின்படி இந்தியாவில் 21 நகரங்களில் குடிநீருக்காக உபயோகிக்கப்படும் நிலத்தடி நீர் 2020-ல் முற்றிலும் குறைந்து பெரும் நெருக்கடி ஏற்படும் அபாயம்
ஏற்பட்டுள்ளது. அதில் சென்னையும் அடங்கும். 2020-ல் இந்தியாவில் தேவைப்படும் குடிநீர் அளவு இரட்டிப்பாகி பல கோடி மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் மொத்த வருமானத்தில் ஆறு சதவீதம் இழப்பு ஏற்படும். ( நிதி ஆயோக்- ஜூன் 2018).
சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் எங்கும் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி மற்றும் குடிநீர் பிரச்சினை ஏதோ மழை பொழிவு குறைவு, அதனால் தண்ணீர் அளவு குறைவு, எனவே தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை என்ற அடிப்படையில் மட்டும் பார்க்க முடியாது. மாறாக அரசு கடைப்பிடிக்கும் உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகளின் அடிப்படையில் ஆராய்வது அவசியம்.
அரசின் தண்ணீர் தனியார்மயக் கொள்கை உலக அளவில் 1990 களிலிருந்து தாராளமய, தனியார்மய பொருளாதார கொள்கைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் முன்பிருந்த பொதுத்துறையின் பங்கு வெகுவாக குறைக்கப்பட்டு வருகிறது. குடிநீர் விநியோகத்திலும் பொதுத் துறையின் பங்கு வெகுவாக குறைக்கப்பட்டு தனியார் பங்கீடு அதிகமாக்கப்பட்டுள்ளது. அதாவது முன்பிருந்த ‘கீனீஷியன்”(Keynesian) பொருளாதார அடிப்படையின் ‘மக்கள் நல அரசு’ (Welfare State) என்ற கோட்பாடு கைவிடப்பட்டு, எல்லாத் துறைகளிலும் சந்தை பொருளாதாரம் புகுத்தப்பட்டது. எனவே குடிநீர் தனியார் மயமாக்கலை உலகப் பொருளாதார மாற்றத்தின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும். முக்கியமாக தண்ணீர் ஒரு சந்தை பொருளாகவே மாறியுள்ளது எனலாம்.
இதனால் உலக அளவில் மற்றும் இந்தியாவில் ஏற்பட்ட விளைவுகளைப் பார்ப்போம். தண்ணீர் தனியார்மயம் – உலக அனுபவங்கள் குடிநீர் 1990களில் உலகம் முழுவதும் பல நாடுகளில் தனியார் மயமாக்கப்பட்டது. பொதுவாக தனியார் மயமாக்கப்படும்போது குடிநீர் வரி பல மடங்கு உயர்த்தப்படுவது பல நாடுகளின் அனுபவம். சூயஸ் மற்றும் வெலோலியா போன்ற தனியார் நிறுவனங்கள் நிர்வாக ஒப்பந்தம் மேற்கொண்ட பல நாடுகளில் குடிநீர் வரி அதிகரித்து மக்களின் செலவினங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன. இதனால் முக்கியமாக தென் ஆப்பிரிக்கா, தென்
அமெரிக்கா மற்றும் கரிபிய நாடுகளில் குடிநீர் தனியார்மயத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.
குடிநீர் தனியார்மயம் பொலிவியா நாட்டில் மக்கள் போராட்டங்கள் மூலம் முறியடிக்கப்பட்ட நிகழ்ச்சி ‘கொச்சம்பா நீர்ப்போர்’என அழைக்கப்படுகிறது. பொலிவியாவின் முக்கிய நகர் கொச்சம்பாவில் டிசம்பர் 1999லிருந்து ஏப்ரல் 2000 வரை குடிநீர் வரி உயர்வுக்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்று தனியார்மயம் முறியடிக்கப்பட்டது. உலக அளவில் கடந்த 15 ஆண்டுகளில் 35 நாடுகளில் உள்ள 180 நகரங்களில் தனியார் துறை நிர்வாகத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று குடிநீர் சேவை பொதுத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
குடிநீர் விநியோகத்தில் தனியார்மயத்திற்கு ஆதரவாக இரண்டு காரணங்கள் கூறப்பட்டன: தனியார்மயம் முதலீடுகளை அதிகப்படுத்தி நீர் விநியோக கட்டமைப்பை நவீனப்படுத்தும்.
எனவே நிர்வாகத் திறமை அதிகரித்து குடிநீர் பயன்பாட்டுத் திறன் அதிகரிக்கும். ஆனால் உண்மையில் நடந்தது இதற்கு மாறானது. மொத்தத்தில் தனியார் நிறுவனங்கள் குடிநீர் துறையில் தங்களின் சொந்த முதலீடுகளை மேற்கொள்ளாமல் அரசின் பொதுத்துறை முதலீடுகளையே பயன்படுத்தி உள்ளன. மேலும் தனியார் கம்பெனிகள் உலகில் நன்கு இலாபம் உறுதியளிக்கும் நடுத்தர வளர்ச்சி நாடுகளிலேயே அதிகம் முதலீடு செய்துள்ளன. உலக அளவில் நீர் கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தில் தனியார் துறையின் முதலீடு 37 சதவிகிதம் ஆகும்.
இதில் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையில் குறிப்பிடத்தக்க அளவு முதலீடுகள் நடைபெறவில்லை. குறிப்பாக ஏழைகள் வாழும் பகுதிகளில் தனியார் துறையில் முதலீடுகள் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் ஏற்கனவே போடப்பட்ட பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் குறிப்பிட்டபடி தனியார் துறை முதலீடுகள் கிடைக்காமல் முறிவடைந்துள்ளன. உலக வங்கியின் புள்ளி விபரங்களின்படி குடிநீர் துறையில் ஏற்பட்ட கட்டுமானங்கள் 80 சதவிகிதம் சரிவர பராமரிக்கப்பட்டு பயன்படுத்தப்படவில்லை. அமெரிக்காவில் மேற்கொண்ட ஓர் ஆய்வின்படி பொது நிறுவனங்கள் வழங்கும் குடிநீரின் செலவு தனியார் நிறுவனங்களை விட சராசரியாக 20 சதவிகிதம் குறைவு என கணக்கிடப்பட்டுள்ளது. எனவே தனியார்மயம் நிர்வாகத்திறமையை அதிகரித்து குடிநீர் திட்டங்களின் பலனை அதிகரிக்கும் என்பது ஒரு மாயையே.
இந்தியாவில் தண்ணீர் தனியார்மய அனுபவங்கள் தண்ணீர் தனியார்மயம் இந்தியாவிற்கு புதியதல்ல. கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு முன்பே தற்போதைய சட்டிஸ்கர் மாநிலத்தில்
23.5 கி.மீ நீளம் உள்ள சிவநாத் என்ற ஆற்றையே “ரேடியஷ் வாட்டர் லிமிடெட்” என்ற தனியார் நிறுவனத்திற்கு ‘தொழில்துறை வளர்ச்சிக்காக’ விற்று விட்டது அரசு.
இதைத்தவிர வெலோலியா, ஜீஸ்கோ, ஆரஞ்சு பாட்டில் வாட்டர் போன்ற தனியார் நிறுவனங்கள் பல ஆண்டுகளாக இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. இதனால் குடிநீர் வரி உயர்வு, அரசு சேவை குறைவு ஆகியவற்றால் மக்களின் வாழ்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. சிவநாத் ஆறு விற்பனை மூலம் அரசுக்கு பெரிய அளவில் நிதி இழப்பு ஏற்பட்டது என அறியப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆற்றை நம்பி இருந்த பொதுமக்களின் வாழ்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக இந்தியாவில் தண்ணீர் தனியார்மயம் 2000க்கு பிறகு அதிகரித்துள்ளது. இதற்கு அடிப்படை உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கிகளே ஆகும். மேலும் 2002-ம் ஆண்டில் வகுக்கப்பட்ட மத்திய அரசின் நீர் கொள்கையும் தனியார்மயத்தை ஊக்குவித்தது. அதற்குபிறகு 10 ஆண்டுகளில் நீர்வள திட்டங்களில் தனியார் பங்கேற்பு 300 % க்கும் மேல் அதிகரித்துள்ளன.
“மகத்தான் அதியான்” என்ற என்.ஜி.ஓ.அறிக்கையின்படி தனியார்மய குடிநீர் திட்டங்கள் மிக அதிகமாக மகாராஷ்டிராவிலும்(48) கர்நாடகாவிலும்(26) அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 25 திட்டங்களில் தனியார் முதலீடுகள் உள்ளது என இந்த அறிக்கை கூறுகிறது. நாக்பூர் நகராட்சி அமைப்பு 2007-ல் குடிநீர் விநியோகத்தை வெலோவியா என்ற நிறுவனத்திற்கு வழங்கியது. முதலில் குறைந்த அளவில் சில வார்டுகளில் ஆரம்பிக்கப்பட்ட தனியார்மயத் திட்டம் 2011-ல் நகரம் முழுவதும் விரிவாக்கப்பட்டது. அரசு முதலீடும் இரட்டிப்பாக்கப்பட்டு தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டது.
குடிநீர் வரி நான்கு மடங்கு அதிகரிக்கப்பட்டு மக்களுக்கு வரிச்சுமையை ஏற்றின தனியார் நிறுவனங்கள். இதற்கு எதிராக நாக்பூர் மக்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் சங்கம் 2016-ல் மிகப்பெரிய போராட்டங்கள் நடத்தின. நாக்பூர் மட்டுமல்லாது, கொல்கத்தா, மைசூர் மற்றும் இதர நகரங்களிலும் தனியார் நிறுவனங்கள் மக்கள் சேவையில் தோல்வி கண்டுள்ளன. 2013-ல் மைசூர் மாநகர நிர்வாகம், 24X7 என்ற குடிநீர் சேவையில் ஏற்பட்ட பல்வேறு குறைபாடுகளுக்காக ஜுஸ்கோ என்ற நிறுவனத்தின் மேல் ரூ.7 கோடி அபராதம் விதித்தது. மேலும் அரசு தனியார் கூட்டு Public Private Partnership (PPP) என்ற போர்வையில் பல நீர்வள திட்டங்கள் தனியார் நிறுவனங்களின் இலாப வேட்டைக்கு இரையாகியுள்ளன என்றால் மிகையாகாது.
திருப்பூர்:
தமிழ்நாட்டில் திருப்பூரில் 1995-ல் ‘புது திருப்பூர் வளர்ச்சி திட்டம்’ திருப்பூர் நகர பின்னலாடை தொழில் மற்றும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 1023 கோடி ரூபாய் செலவில் மிகவும் விளம்பரத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. 1995-ல் ஆரம்பிக்கப்பட்ட திட்டப்பணிகள் 2005-ல் தான் முடிவடைந்தது. இருப்பினும் ஆரம்பம் முதல் 2011 வரை இந்த திட்டம் சரிவர செயல்படவில்லை. தனியார் கம்பெனிகள் ஒப்பந்தப்படி முதலீடு செய்யாதது மற்றும் அவர்களுக்குள் ஏற்பட்ட பொருளாதார மோதல்கள் திட்டத்தின் செயல் இன்மைக்கு முக்கிய காரணங்கள்.
எனவே 2011-ல் அரசு முதலீடு மூலம் இத்திட்டம் மீண்டும் இயக்கப்பட்டது. இது சம்பந்தமாக எழுந்த சட்டப்பிரச்சினையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் அவர்கள் கருத்து குறிப்பிடத்தக்கது. பொலிவியாவில் இருந்து விரட்டப்பட்ட ‘பெக்டல்’ கம்பெனி பங்குபெறும் திட்ட கூட்டமைப் பிற்கு (Consortium) எவ்வாறு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது? என கேள்வி எழுப்பியுள்ளார். எனவே குடிநீர் போன்ற அடிப்படை பணிகளில் பன்னாட்டு நிறுவனங்களை ஈடுபடுத்துவது மிகவும் தவறு என்று எச்சரித்துள்ளார்.
தனியார் மயமாகும் கோவை குடிநீர் விநியோகம்:
கோவை நகர குடிநீர் விநியோகம் மற்றும் மராமத்து பணிகள் சூயஸ் எனும் பிரெஞ்சு கம்பெனிக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. 26 ஆண்டுகளுக்கு இந்நிறுவனம் கோவை மாநகரின் குடிநீர் நிர்வாகத்தை கவனிக்கும். முதல் 5 ஆண்டுகள் குடிநீர் விநியோக கட்ட மைப்பை சீர் செய்ய வேண்டும். அதன்பிறகு 21 ஆண்டுகள் குடிநீர் விநியோகத்தை நிர்வாகம் செய்வது இதனுடைய பணியாகும். இதற்காக ரூ 2,300 கோடி இந்த நிறுவனத்திற்கு கொடுக்கப்படும். குடிநீர் வரி உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சூயஸ் கம்பெனி தமிழ்நாட்டில் செம்பரம்பாக்கம் ஏரியை சரிவர பாரமரிப்பு செய்யாமல் இருந்ததால் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு சூயஸ் நிறுவனம் காரணம் என மத்திய தணிக்கையாளர் அறிக்கை (CAG) தெரிவித்ததுள்ளது . இப்படியிருக்க இந்த கம்பனிக்கு தற்போது எவ்வாறு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது ?
தமிழகத்தின் வறட்சி மற்றும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு பொதுவாக, சென்னை போன்ற நகரங்களில் குடிநீருக்கு மக்கள் தங்கள் வருமானத்தில் பத்து முதல் இருபது சதவிகிதம் செலவிடுகிறார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இது பெருமளவு நடுத்தர மற்றும் உயர்தர மக்களுக்கு மட்டுமே உதவும். எனவே ஏழைகள் தண்ணீர் விநியோகத்திலிருந்து பெருமளவு விடுபட்டு உள்ளார்கள். தற்போது குடிநீர் விநியோகத்தில் அரசு பங்கு குறைந்து தனியார் பங்கு மிக அதிகரித்துள்ளது என பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பிரச்சினையின் தன்மையை உணர்ந்து நீண்ட
கால நோக்கோடு அரசு செயல்படவில்லை என சென்னை உயர்நீதி மன்றம் கடிந்துள்ளது.
ஏற்கனவே குறிப்பிட்டபடி குடிநீர் பிரச்சினைக்கு அடிப்படை காரணம் அரசின் பொருளாதார கொள்கைகளே. மேலும் ‘நிதி பற்றாக்குறை குறைப்பை’ அடிப்படையாக கொண்டுள்ள அரசு பட்ஜெட்டில் நீர்வளம் போன்ற திட்டங்களுக்கு ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. மேலும் வறட்சி மற்றும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண தொலைநோக்கு திட்டங்கள்
தீட்டப்படவில்லை.
ஆரம்ப கட்ட தண்ணீர் முதலாளித்துவ வளர்ச்சி
மேலே விவரிக்கப்பட்ட அனுபவங்கள் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் நீர் போன்ற அடிப்படை உற்பத்தி காரணிகளில் ஏற்பட்டுள்ள ஆரம்ப கட்ட முதலாளித்துவ (primitive capitalism) வளர்ச்சியை குறிக்கிறது. ஏற்கனவே குறிப்பிட்டபடி கீனீஷியன் (Keynesian) பொருளாதார காலகட்டத்தில் ‘மக்கள்நல அரசின் பலன்கள்’ தண்ணீர் விநியோகத்தில் பொதுத்துறை மூலம் கிடைத்து வந்தன. ஆனால் இந்தியா உட்பட பல நாடுகளில் தற்போது கடைப்பிடிக்கப்படும் புதிய தாராளமய, தனியார்மயக் கொள்கைகள்
அரசின் நீர் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
நீர் மேலாண்மையில் முன்பிருந்த “சமூக சம பங்களிப்பு” (Social Equity) என்ற கோட்பாடு மாறி “பொருளாதார சம பங்களிப்பு” (Economic Equity) என்ற கோட்பாடு நடைமுறையில் உள்ளது. அதாவது நீர் விநியோகத்தில் மக்களின் வாங்கும் சக்திக்கு ஏற்றவாறு அதன் விலை இருக்க வேண்டும் என்பதற்கு மாறாக, ‘ தண்ணீரின் விலை’ அதன் உற்பத்தி மற்றும் விநியோக செலவை முழுவதும் திருப்பி பெறுவதாக (full cost recovery) இருக்க வேண்டும் என மாறியுள்ளது .
ஆனால் குடிநீர் என்பது மற்ற விற்பனை பொருட்கள் போல் அல்ல. குடிநீர் மக்களின் வாழ்வுரிமை. இதை பூர்த்தி செய்வது மக்கள்நல அரசின் அடிப்படை கடமை. எனவே குடிநீர் நிர்வாகத்தில் பொது மக்களின், முக்கியமாக ஏழைகளின், பங்கு உறுதி செய்யப்பட வேண்டும் . இதன் மூலம் குடிநீர் விநியோகத்தில் ஏற்படும் பல குறைகளுக்கு தீர்வு காண ஒரு கட்டமைப்பை ஏற்படுத்த இயலும். உலகின் பல பகுதிகளில் நடப்பது போல் மீண்டும் குடிநீர் நிர்வாகத்தை மாநகர அமைப்புகளுக்கு திருப்பித்தர வேண்டும். தண்ணீர் தனியார்மயத்தின் கடந்த கால அனுபவங்களிலிருந்து பாடம் கற்போம்.