மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


தேவை நேர் எதிரான ஒன்று – பொருளாதார மந்த நிலை குறித்து பிரபாத் பட்நாயக்


நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையை சரிசெய்வதற்காக பாஜக அரசாங்கம், தன் கருவூலத்தில் இருந்து 1.45 லட்சம் கோடி ரூபாய்கள், கார்ப்பரேட் துறைக்கு கைமாறும் வகையில், சிறப்பு வரி விகித குறைப்பை அறிவுத்துள்ளது. இந்த நடவடிக்கை, இந்திய பொருளாதார மந்த நிலையை தீர்க்க போதாது என்ற பார்வை எழுகிறது. இந்தப் பார்வை, குறைமதிப்பீடாகும், (உண்மையில் பாஜக அரசாங்கம் செய்திருப்பது) பொருளாதாரத்தை மீட்க என்ன செய்யவேண்டுமோ அதற்கு நேர் மாறான செயலே ஆகும். இந்த நடவடிக்கை, உழைக்கும் மக்களின் தலைகளில் பளுவை ஏற்றி பொருளாதார ஏற்றத்தாழ்வை முன்பு இருந்ததை விட மோசமான நிலைக்கு தள்ளப் போகிறது, எனவே இந்த நடவடிக்கை பொருளாதார நெருக்கடியை மேலும் அதிகரிக்கும். அரசு இப்படி ஒரு நடவடிக்கையை எடுக்க முற்படுகிறது என்றால், அது பொருளாதார விஷயங்கள் மீது அரசுக்கு கவனமே இல்லை என்பதையும் உழைக்கும் மக்களை காவு கொடுத்துவிட்டு பொருநிறுவனங்களின் மூலதனத்தை அதிகரிப்பதில் மட்டுமே அக்கறை செலுத்துகிற காட்டுகின்ற அரசின் வர்க்க சார்பையும் காட்டுகிறது.

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலைக்கான காரணம் நாட்டின் மொத்த தேவையில் ஏற்பட்டுள்ள சரிவு. தங்களது வருமானத்தின் குறைந்த பகுதியை மட்டும் நுகர்வுக்காக செலவிடும் மக்களின் வரி விகிதத்தை அரசு உயர்த்த வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டும் தான் அரசு, தனது நிதிபற்றாகுறைக்கு பாதிப்பு ஏற்படாமல் இந்த சிக்கலை தீர்க்க முடியும். இதன் மூலம் வரும் வரி வருமானத்தை, தங்களது வருமானத்தின் பெரும்பகுதியை நுகர்வுக்கு செலவிடும் மக்களுக்கு அரசு அளிக்க வேண்டும், அல்லது தனது நேரடி செலவுகளுக்கு பயன்படுத்த வேண்டும். இதுவே நாட்டின் மொத்த தேவையை அதிகரிக்கும்.

இப்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியின் காரணம் வெளிப்படையாக தெரிந்த ஒன்றே, சந்தையில் கிராக்கி அதிகரிக்கவில்லை. அரசின் நிதித் தலையீடுகள் இந்த பற்றாக்குறையை மீறி கிராக்கியை அதிகரிக்கும் வகையிலானதாக இருக்க வேண்டும். நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கக் கூடாது எனில், தங்கள் வருமானத்தில் மிகவும் குறைவான தொகையையே பொருட்கள் நுகர செலவு செய்யும் மக்கள் மீது வரி போட வேண்டும், அந்த வரியைக் கொண்டு அரசின் நேரடிச் செலவுகள் மூலமாகவோ, செலவு செய்யும் மக்களின் கைகளுக்கு அந்த பணத்தை கடத்துவதன் மூலமாகவோ நுகர்வினை அதிகரிக்க வேண்டும்.

உழைக்கும் மக்களைக் காட்டிலும் பெரு நிறுவனங்கள் தங்களது வருமானத்திலிருந்து குறைந்த விகிதத்தையே நேரடியாகவோ மறைமுகமாகவோ செலவிடுகின்றன என்பது நமக்கு நன்கு தெரியும். ஏனெனில் இந்த நிறுவனங்கள் தங்களுக்கு கிடைக்கும் லாபத்தில் விநியோகிக்கப்படாத பகுதியை, செலவு செய்யாமல் தாங்களே வைத்துக் கொள்கின்றன.  அது மட்டுமல்லாமல் தங்களது லாபத்தை பிரித்து வழங்குவதில் கிடைக்கும் ஈவுத்தொகையை விடவும், கூலியாக தரும் தொகையே நுகர்வுக்கு அதிகம் பயன்படுகிறது. எனவே மொத்த தேவையை பெருக்குவதற்கான வழி என்பது நிறுவனங்களின் வரியை உயர்த்தி அதன் மூலம் கிட்டும் வருமானத்தை, அரசு செலவினங்களை பெருக்குவதற்கோ பட்ஜட் செலவுகளின் மூலம் உழைக்கும் மக்களுக்கு அளிப்பதற்கோ பயன்படுத்துவது தான். மாறாக கர்ப்பரேட்டுகளுக்கு வரி விலக்கு அளித்து, நிதிப்பற்றாகுறை பாதிக்கப்படாதவாறு அதை சமன் செய்வதற்கு அரசின் செலவினங்களைக் குறைப்பதும், உழைக்கும் மக்களுக்கு கொடுக்கப்படும் நிதியை குறைப்பதும், அவர்களின் வரியை உயர்த்துவதும் தற்போதைய தேவைக்கு நேர்மாறாக மேற்கொள்ளும் செயல் ஆகும். இது நாட்டில் கிராக்கியை அதிகரிப்பதற்கு பதிலாக, தலைகீழாக செயல்பட்டு நெருக்கடியையே அதிகரிக்கும்.

கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கப்படும் இந்த வரிவிலக்கு, நிதிப் பற்றாக்குறையின் வழியே தீர்க்கப்படும் என்றால் அது நெருக்கடியை அதிகரிக்காமல் போகலாம், ஏனென்றால் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட வளங்களுக்கு நிகராக வேறு யாரிடமும் வரி வசூலிக்கப்படவில்லை. நிதிப் பற்றாக்குறையின் மூலம் அந்த வரிச்சலுகைகள் சமன் செய்யப்படும் என்றால், அதன் மூலம் வரும் குறைந்தது 5 பிரச்சனைகளை கவனிக்க வேண்டும்.

முதலாவது, வரிச் சலுகைகளை ஒரு பகுதி நிதிப்பற்றாக்குறை மூலமும், மற்றொரு பகுதி அரசின் செலவுகள் அல்லது மக்களுக்கு கிடைத்துவரும் நிதிப் பங்கீட்டை குறைப்பதன் அல்லது மக்கள் மேலான வரியை உயர்த்துவதன் மூலம் சமன் செய்யப்படலாம் என்றால், அது கிராக்கியில் பாதிப்பை ஏற்படுத்தும். அந்த பாதிப்பு நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க எத்தனை குறைவான அளவுக்கு இந்த முடிவை மேற்கொள்கிறோமோ அந்த அளவுக்கு பாதிக்கும்.

இரண்டாவது, வரிச்சலுகையின் மொத்த தொகையையும் ‘நிதிப்பற்றாக்குறை’ மூலம் சரி செய்வதாக இருந்தால் அது கிராக்கியை அதிகரிப்பதில் எந்த குறைபாட்டையும் ஏற்படுத்தாது. இந்த தொகையில் ஒரு சிறு தொகையை அரசே நேரடியாக செலவிட்டால் அது பெரும் கார்ப்பரேட்டுகளின் கையில் இந்த நிதியைக் கொடுப்பதை விடவும் (சந்தையில்) கிராக்கியை அதிகரிப்பதில் மிகப்பெரும் தாக்கத்தை செலுத்தியிருக்கும். வேறு சொற்களில் கூறினால், விநியோகத்தை கணக்கிலெடுக்கும்போது 1.45 லட்சம் கோடி ரூபாய்களை கருவூலத்தில் இருந்து எடுத்து பெரும் முதலாளிகளிடம் கொடுப்பதானது, கிராக்கியை அதிகரிப்பதில் மிக மிக குறைவான பலனையே கொடுக்கும்.

மூன்றாவது, முதலாளிகள் கையில் கொடுக்கும் இந்த நிதியானது வேறு வகைகளில் செலவிடுவதை விட குறைவான பலனை மட்டுமே கொடுக்கும் என்பது மட்டுமல்ல, கிராக்கியை உயர்த்த எந்த வகையிலும் பலன் கொடுக்காது எனலாம். ஏனென்றால், நுகர்வுக்காக செய்யப்படும் செலவுகளை தங்களது லாபத்திலிருந்து இந்நிறுவனங்கள் எடுப்பதை விடவும், கூலியில் இருந்து மேற்கொள்வதே அதிகம், அதுவும் குறிப்பிட்ட இந்தக் காலத்தில், லாபத்திலிருந்து செய்யப்படும் நுகர்வுச் செலவுகள் முழுவதும் குறைக்கப்பட்டுவிட்டன. சில குறிப்பிட்ட காலத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் வரிச்சலுகை லாபங்கள் அதிகரிக்கும் என்பது உண்மை, அது டிவிடெண்ட் தொகையையும் அதிகரிக்கும் அது நுகர்வினை சற்று ஊக்கப்படுத்தலாம்; ஆனால் அப்போது பொருளாதார நெருக்கடியானது மேலும் மோசமாகலாம். வேறு வகையில் சொன்னால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தரப்படும் வரிச்சலுகையானது கிராக்கியை அதிகரிப்பதில் எதிர்வரும் குறுகிய கால அளவில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது, மேலும் நெருக்கடிக்கு தீர்வு காண்பது பற்றி பேசிக்கொண்டிருக்கும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டியது அதைத்தான்.

நான்காவது, இந்த நடவடிக்கை கிராக்கி அதிகரிப்பில் என்ன தாக்கம் செலுத்துகிறது என்பதை விடவும் முக்கியம், இந்த நடவடிக்கையினால் நாட்டின் சொத்துப் பகிர்வில் நிலவிவரும் ஏற்றத்தாழ்வுகள் மேலும் அதிகரிக்கும். ஏனென்றால் இந்த வரிவிலக்குக்கான நிதியை அரசு நிதிப்பற்றாக்குறையில் இருந்து வழங்குகிறது. நிதிப்பற்றாகுறை என்பது அரசு வாங்கவுள்ள கடன் ஆகும். இவ்வாறு அரசுக்கு கடன் தருகிறவரின் கையில் கடன் ஒரு சொத்தாகவே சேரும், அது அவரை மேலும் செல்வந்தராக்கும். உண்மை நிலவரங்களைக் கொண்டு பார்க்கும்போது இந்தக் கடனை வெளிநாடுகளில் இருந்து பெறுவது சாத்தியமில்லை, உள்நாட்டு பணக்காரருக்கே இது பலனாக போய்ச் சேரும். அரசாங்கம் செலவு செய்வதாக சொல்லுகிற தொகையை பெரும் பணக்காரர்களுக்கு தருவதன் மூலமாக இங்கே ஏற்றதாழ்வுகளே மேலும் அதிகரிக்கும்.

இறுதியாக, நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பதன் வாயிலாக இந்திய பொருளாதாரத்தில் நிதி வரவு குறையும். ஏனென்றால் அரசாங்கம் மூலதனத்தையோ வர்த்தகத்தையோ கட்டுப்படுத்துவதைப் பற்றி சிந்திக்கவில்லை, எனவே இது நடப்புக் கணக்கு பற்றாக்குறையை சமாளிப்பதை மேலும் கடுமையாக்கும். சில சலுகைகள் அன்னிய மூலதனத்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது உண்மைதான், கார்ப்பரேட் வரியில் சலுகை செய்வதைப் போலவே, FPI முதலீட்டாளர்களுக்கு விதிக்கப்பட்ட மூலதன அதிகரிப்பின் மீதான சர்சார்ஜ் மீது சில சலுகைகள் அறிவிக்கப்பட்டன. அதாவது பட்ஜெட்டில் செய்யப்பட்ட அறிவிப்பு நீக்கப்பட்டு பட்ஜெட்டுக்கு முந்தைய நிலைமையே மீண்டும் உறுதி செய்யப்பட்டது. ஆனால், நிதிப்பற்றாக்குறை அதிகரித்திருப்பது அன்னிய மூலதன வருகையை பாதிக்குமே தவிர அதிகரிக்காது. எனவே அரசாங்கம் நிதிப்பற்றாக்குறையை குறிப்பிட்ட அளவில் வைத்திருக்க வும்பும். அதன் பொருள், மேலே சொன்ன வகையில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை கொடுப்பதன் மூலம் நாம் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி அதிகரிக்குமே தவிர குறையாது.

கிராக்கியை ஊக்கப்படுத்துவதற்காக, நுகர்வினை தூண்டுவது பற்றித்தான் நாமெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் வரிச் சலுகை அறிவிப்பானது பெருமளவில் முதலீடுகளுக்கு ஊக்கம் கொடுக்கும் என சிலர் வாதிடலாம். இது முற்றிலும் தவறான வாதம். முதலீடுகள், அதிலிருந்து கிடைக்கும் என எதிர்நோக்கப்படும் லாபத்தை மனதில் கொண்டே செய்யப்படுகின்றன. எதிர்நோக்கப்படும் லாபத்தின் விகிதமானது, கிராக்கி கூடுவதன் அடிப்படையிலேயே  அதிகரிக்கும். ஏற்கனவே செய்யப்பட்டுள்ள முதலீடுக்கு கிடைத்துவரும் லாபத்தின் விகிதத்தை மனதில் கொண்டு புதிய முதலீடுகள் வருவதில்லை.

உதாரணத்துக்கு வாகனங்களுக்கான தேவை தேக்கமடையும் என தற்போது எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் உள்ள உற்பத்தி திறனே இந்த தேவையை பூர்த்தி செய்யும் என்பதால், புதிய உற்பத்தி வசதிகளை கட்டுவதில், வாகன நிறுவனங்கள் முதலீடு செய்யாது. ஏனென்றால் இந்த முதலீடுகளிலிருந்து அவர்களுக்கும் கிடைக்கும் என அவர்கள் எதிர்நோக்கும் லாபத்தின் அளவு பூஜ்ஜியம். ஏனவே, முன்னமே இருக்கும் முதலீடுகளிலிருந்து 50சதவீதம் லாபம் கிடைத்தாலும், அவை புதிய முதலீடுகளில் செலவிடப்படாது. இந்த வரிவிலக்கு நடவடிக்கை நிறுவனங்களின் தற்போதுள்ள முதலீடுகளிலிருந்து கிடைக்கும் லாபத்தையே பெருக்கும். எனவே அது புதிதாக முதலீடுகளில் எந்த மாற்றத்தயையும் ஏற்படுத்தாது.

மேலும் அரசு செலவினங்களில் இருந்தோ, மக்களுக்கான நிதியிலிருந்தோ, பணம் எடுத்து கொடுக்கப்படும் பட்சத்தில் மொத்த தேவை பாதிக்கப்பட்டு சரியக்கூடும். எனவே முதலீடுகளும் குறையவே செய்யும்.

ஒருவேளை இந்த வரிலக்கு சிறு நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தால், அதனால் முதலீடுகள் உயர்ந்திருக்ககூடும். ஏனென்றால், இந்நிறுவனங்கள் பெரும்பாலும் நிதியை பொறுத்து செயல்படுபவை கட்டுப்படுபவை. மாறாக பெருநிறுவனங்கள் சந்தையில் நிலவும் தேவையைப் பொறுத்து செயல்படுபவை. சிறு நிறுவனங்களுக்கு இந்நிதி கிடைக்கும் பட்சத்தில், அவை முதலீடுகளை பெருக்கியிருக்கக் கூடும். ஆனால், பெருநிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் போது அவை புதிய முதலீடுகளை மேற்கொள்ள வாய்ப்பில்லை. அதுவும், தேவை குறையும் போது முதலீடுகளின் அளவும் நிச்சயசம் குறையவே செய்யும்.

ஆக மொத்தத்தில் மோடி அரசு பொருளாதாரத்துக்கு “ஊக்கமளிப்பதற்காக” மேற்கொண்டிருக்கும் இந்த நடவடிக்கை உற்பத்தியையும், வேலைவாய்ப்பையும் பின்நோக்கியே நகர்த்தும். அதுமட்டுமில்லாமல், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மேலும் விரிவடையச் செய்யும். பொருளாதாராத்தைப் பற்றி அடிப்படை அறிவு கூட இல்லாத இந்த அரசிடம் இருந்து வந்திருக்கும் இந்த நடவடிக்கையைக் கண்டு நாம் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை.



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: