மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


அடிமைச் சங்கிலியைத் தகர்த்த தாதா அமீர் ஹைதர் கான்


  • இரா.சிந்தன்

நூறாண்டு கண்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றில், தாதா அமீர் ஹைதர் கான் என்ற பெயர் மிகுந்த ஊக்கத்தைக் கொடுப்பதாகும். தென்னிந்தியாவின் மாபெரும் கம்யூனிச ஆளுமைகளான பி.சுந்தரய்யா, பி.ராமமூர்த்தி, பி.சீனிவாசராவ், ஜீவானந்தம் ஆகியோரை இயக்கத்திற்குள் ஈர்த்த பெருமை இந்தப் பெயருக்கு உண்டு. அவரே தென்னிந்தியாவுக்கு வருகை தந்த முதல் கம்யூனிஸ்ட்.

அமீர் ஹைதர் கான் சொந்த வாழ்க்கையும், இயக்க வாழ்க்கையும் பல்வேறு திருப்பங்களை உள்ளடக்கியதாகும். அவரின் வாழ்க்கை, கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றோடு பிணைந்த ஒன்றாகும்.

குழந்தைப் பருவம்

பிரிட்டிஷ் இந்தியாவில் ராவல்பிந்தி மாவட்டத்தில் (பஞ்சாப்) குக்கிராமம் ஒன்றில் பிறந்தவர் அமீர் ஹைதர் கான். இப்போது அப்பகுதி பாகிஸ்தானில் உள்ளது. 1900 ஆம் ஆண்டில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். அவருக்கு ஒரு அண்ணனும், அக்காவும் இருந்தனர். 4 வயதில் தந்தையை இழந்தார். அதன் பின்னர் தாய் மறுமணம் செய்துகொண்டார். மாற்றாந்தந்தையுடன் ஹைதருக்கு பிணக்குகள் எழுந்தன. ஒரு கட்டத்தில் சொந்த கிராமத்திலிருந்து வெளியேறினார். முதலில் தன் அண்ணனைத் தேடி பெஷாவர் சென்றார். பிறகு கல்கத்தாவுக்கு பயணித்தார். டிக்கெட் எடுக்கவும், உணவுக்கும் பணம் இல்லாத அந்த பயணமே பெரும் போராட்டமாக அமைந்தது. இறுதியில் அவர் அண்ணனை கண்டுபிடித்தார். அண்ணன் நன்கு படிக்கத் தெரிந்தவர், திறமையானவர். அங்கே கணக்குப்பிள்ளையாக இருந்தார். ஆனால், அது கொகெய்னும், கஞ்சாவும், விலைமாதர்களும் புழங்கிவந்த இடமாகும். அங்கே ஆங்கிலேயர்களும் வந்தார்கள், இந்தியர்களும் இருந்தார்கள். சிறிது காலம் கழித்தே நடப்பதை அறிந்துகொண்ட ஹைதரின் மனம் வாடியது. ஒரு நாள் அங்கே காவல்துறை வந்தது, ஹைதரின்  அண்ணன் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்தது.

கைவிடப்பட்ட சிறுவனான ஹைதர், கப்பலைச் சுரண்டும் வேலை செய்தார். இந்த வேலை கடுமையாக உடலை பாதித்தது. 12 மணி நேரம் வேலை செய்து, 6 அணா சம்பாதிக்க வேண்டும். சாலையோரத்தில் படுத்து உறங்கினார். சாலையோரத்தில் வசித்த சிறுவர்கள் பலர் ரவுடிகளால் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டனர். இதனால் சிறுவர்களுக்கு உடல்நலம் குன்றியது. ரவுடிகளுக்கு எதிராக நண்பர்கள் அனைவரும் இணைந்து போராடி, அடித்து விரட்ட முடிவு செய்தனர். அதில்  வெற்றியும் பெற்றனர். அங்கு கிடைத்த தொடர்புகளின் மூலம் ஹைதர் பயணிகள் கப்பலில் பணியாளராக வேலைக்கு சேர்ந்தார். அவருக்கு 14 வயதாகியிருந்தது. முதல் உலகப்போர் நடந்துகொண்டிருந்தது. கப்பல் பணியாளராக, போர் முனைக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ராணுவ வீரர்களுடன் உரையாடினார். துருக்கி போர் முனையில், பிரிட்டிஷ் படையில் இருந்த முஸ்லிம் ராணுவ வீரர்களிடம்  ஒருவித   ஊசலாட்டத்தை அவரால் உணர முடிந்தது.

அமீர் ஹைதர் கான் தன் இளமைக்கால போராட்டங்களை அவரே விவரிக்கும்போது கல்வி கற்பதற்கு தன்னிடம் இருந்த ஏக்கத்தை குறிப்பிடுகிறார். மதப் பள்ளிகளில் அவர் திருப்தியடையவில்லை. பல்வேறு சுரண்டல்களுக்கு ஆளானாலும் கற்றுக் கொண்டேயிருந்தார். ஓரிடத்தில் தேங்கிப் போகவில்லை. முதல் உலகப்போர் சூழல் அவருக்கு ஆட்சியதிகாரங்களின் வேறொரு முகத்தைக் காட்டியது.

அரசியல் அறிமுகம்

18 வயதாகும்போது அமீர் ஹைதர் கானுக்கு அமெரிக்க கப்பல் ஒன்றில் வேலை கிடைத்தது. அப்போது இந்தியாவில் ஆதிக்கம் செலுத்திவந்த பிரிட்டிஷ் ஆட்சிக்கு  எதிரான விவாதங்கள் உலகம் முழுவதும் நடந்து வந்தன. இந்தியாவில் ஜாலியன் வாலாபாக் என்ற பூங்காவில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் அதிர்ச்சி தரும் செய்தியாகின. இக்கொடூரச் செயலுக்கு எதிராக உலகம் முழுவதும் விவாதங்கள் எழும்பின. ஐரிஷ் தேசியவாதியான ஜோசப் முல்கானே என்பவரின் உதவியுடன் காலனியாதிக்கத்தை குறித்து படிக்கத் தொடங்கினார் ஹைதர். இக்காலகட்டத்தில் அமெரிக்காவில் கதார் கட்சி உருவானது. 1920 இல் அவர் அக்கட்சியின் அறிமுகம் பெற்றார். ஆங்கிலம் படித்ததுடன், இரண்டாம் நிலை பொறியியல் படித்து தேர்ச்சி பெற்றார்.

இந்திய விடுதலையின் நண்பர்கள் என்ற அமைப்பின் முதல் மாநாடு நடைபெற்றது. அது இந்தியாவுக்கு முழு விடுதலை என்ற கோரிக்கையை எழுப்பியது. கப்பலில் பணியாற்றிக் கொண்டிருந்த அமீர் ஹைதர் கான், பிரிட்டிஷ் எதிர்ப்பு பிரசுரங்களை வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் சேர்க்கும் பணியை செய்தார். அவருடைய கப்பல் அறையில் கதார் கட்சியின் இதழ் உட்பட ஏகாதிபத்திய எதிர்ப்பு பிரசுரங்கள் இருந்தன. பிரிட்டிஷ் காவல்துறை அவரை மோப்பம் பிடித்துவிட்டது. ஹாங்காங்கில் வைத்து, கப்பலுக்குள் புகுந்து சோதித்தது. பிரசுரங்கள் சிக்கவில்லை ஆனாலும்  அவரை கைது செய்தது. அமெரிக்க கப்பலில் பணியாற்றும் ஒருவரை பிரிட்டிஷ் காவலர்கள் எப்படி கைது செய்யலாம் என்று சக பணியாளர்கள் கப்பலின் கேப்டனிடம் முறையிட்டனர். ஆனால், ஹைதர் சாகும் வரை சிறையில்தான் இருக்கப்போகிறான் என்று எகத்தாளம் பேசினார்கள் பிரிட்டிஷ் காவலர்கள்.  அவரை மீட்பதற்கான முயற்சியே இறுதியில் வென்றது.

சோசலிச கல்வி

அமீர் ஹைதர் கானின் வாழ்க்கையை ஆய்வு செய்தவர்கள், ‘பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திற்கு அச்சம் கொடுக்கும் ஒரு மனிதராக ஹைதர் இருந்தார்’ என்கின்றனர். காலனி ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு நெருப்பு எப்போதும் அவருக்குள் கனன்று கொண்டிருந்தது.

மாலுமிகள் சங்கத்தின் உதவியுடன் அமெரிக்க குடியுரிமை பெற்ற அவர், ரயில்வே பட்டறை ஒன்றில் பணிக்கு சேர்ந்தார். பின்னர் விமானம் ஓட்டிப் பழகினார். புகழ்பெற்ற டெட்ராய்ட் நகரத்தில் ஒரு தொழிலாளியாக இருந்தார். இக்காலகட்டங்கள் அவருக்கு சோசலிச அரசியலுக்கு ஒரு அறிமுகம் கொடுத்தன. தொழிற்சங்கத்தினருடன் விவாதித்தார். மேலும் நிறவெறிக் கொடுமைகளையும் எதிர்கொண்டார்.

மார்கனுடன் விவாதம்

டெட்ராய்ட் நகரில் அவர் வசித்தபோது, பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மார்கன் ஜான் அங்கே வருகை தந்தார். அவர் பங்கெடுக்கவுள்ள நிகழ்ச்சிக்கு நேரில் சென்றார் அமீர் ஹைதர் கான்

இந்திய நிலைமை பற்றி தொழிலாளர் கட்சியின் கருத்து என்ன என்ற கேள்விகளும் அங்கே எழுந்தன. மார்கனின் பதிலை ஆர்வத்துடன் கவனித்தார் ஹைதர். மார்கன் ஜான் ‘இந்தியர்களுக்கே அவர்களுக்கு என்ன வேண்டுமென்று தெரியவில்லை’ என்று விளக்கியபோது, ஹைதர் வெகுண்டெழுந்தார். “மன்றோ கொள்கையின்படி அமெரிக்கா அமெரிக்கர்களுடையது என்பதைப் போல இந்தியா இந்தியர்களுடையது” என ஆணித்தரமாக கூறினார். மேலும், மார்கனிடம் பல கேள்விகளை முன்வைத்தார். அந்த அவையில் வாக்குவாதம் நடந்தது. பதில் இல்லாமல் வெளியேறினார் மார்கன்.

ஏகாதிபத்திய ஆதிக்கத்தின் எதிர்ப்பாளராக இருந்த ஹைதர், அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் அறிமுகமும் பெற்றார்.

மாஸ்கோ பயணம்

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தை கட்டமைக்கும் முயற்சியில், எம்.என்.ராய் ஈடுபட்டார். ஆனால் இந்திய தொடர்புகள் கிடைக்கவில்லை. இதற்காக எம்.என்.ராய்  அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியிடம்  உதவியை நாடியபோது, அவர்கள் கதார் இயக்கத்தின் துணையைப் பெற்றனர்.இவ்வாறு 5 மாணவர்கள் மாஸ்கோ அனுப்பப்பட்டனர். அதில் ஒருவராக அமீர் ஹைதர் கான் மாஸ்கோ சென்றார். அங்கு அவர் சோசலிச அரசியல் பயிற்சி பெற்றார். பயிற்சி முடித்த பின் அவர் இந்தியாவுக்கு வர முடிவு செய்தார்.

20 ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த கம்யூனிஸ்ட் தலைவர்களான ரோசா லக்சம்பர்க், க்ளாரா ஜெட்கின், கார்ல் ரடெக், லியூ ஷோ சி ஆகியோரையும் எங்கல்சின் மானவர் தாமஸ் மன், ஸ்டாலினுடைய செயலராக இருந்த பியாட்னிஸ்கி ஆகியோரையும் சந்தித்து உரையாடியிருப்பதை அவருடைய சுய சரிதையில் இருந்து நம்மால் அறிய முடிகிறது. உலக தலைவர்களைப் போலவே இந்தியாவிலும் அவருக்கு புரட்சியாளர்களுடன் தொடர்பு இருந்தது.

மீரட் சதி வழக்கு

இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை கட்டமைக்கும் பணியில் இணைந்துகொள்வதற்காக அமீர் ஹைதர் கான் இந்தியா வந்தார் ஹைதர் இந்தியா வந்தபோது தோழர்கள் அவரை வரவேற்றனர். அதே சமயம் ஹைதரின் செலவுகளுக்கு கொடுக்க அவர்களிடம் பணம் ஏதும் இல்லை. ஹைதர் ஆலைத் தொழிலாளியாக பணியாற்றி ஈட்டிய பணத்திலேயே கட்சிப் பணிகளை ஆற்றினார்.

பிரிட்டிஷ் அரசாங்கம் மீரட் சதி வழக்கினை புனைந்து, இந்திய கம்யூனிஸ்டுகளை வேட்டையாடத் தொடங்கியது. உடனே இச்செய்தியை கம்யூனிஸ்ட் அகிலத்திற்கு எடுத்துச் சென்றார். உலகம் முழுவதும் இச்சதி வழக்கிற்கு எதிரான குரல்கள் எழுந்தன. 1931 ஆம் ஆண்டில் கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி, சவுகத் உஸ்மானி என்ற மீரட் சதி வழக்கு கைதியை பொதுத்தேர்தல் வேட்பாளராக  நிறுத்தியது. தேர்தல் பிரச்சாரத்தில் இந்திய விடுதலை மற்றும் மீரட் சதி வழக்கை அம்பலப்படுத்துவதை முன்வைத்தது.  75 ஆயிரம் வாக்குகளை பெற்றது.

அமீர் ஹைதர் கான் மீண்டும் இந்தியா திரும்பினார். தோழர் பி.டி.ரணதிவே யிடம் பயணத்தை விவரித்தார். கம்யூனிஸ்ட் அகிலத்துடன் தகவல் தொடர்பு ஹைதரின் மூலமே நடைபெற்றது. தொலைத்தொடர்பு இயந்திரங்களை இயக்குவது உட்பட கற்றுக் கொண்டார். மேலும் தனது கப்பல் தொடர்புகளை அதற்காக பயன்படுத்தினார். இதனை அறிந்துகொண்ட பிரிட்டிஷ் காவல்துறை அவரைத் தேடியது. இந்த சூழலில்தான் அவர் மெட்ராஸ் அனுப்பப்பட்டார்.

தென்னிந்தியாவில் அமீர் ஹைதர் கான்

முன்னுரையில் குறிப்பிட்டதைப் போல, தென்னிந்தியாவின் மாபெரும் புரட்சியாளர்களை கண்டறிந்த பெருமை அமீர் ஹைதர் கானைச் சேரும். உண்மையில் அவர் தென்னிந்தியாவுக்கு விருப்பத்தின் பேரில் அனுப்பப்படவில்லை. பாம்பேயில் இருப்பது ஹைதருக்கு பாதுகாப்பில்லை என முடிவு செய்த கட்சி அவரை மெறாஸ் செல்ல பணித்தது. இந்த தகவலை டாக்டர் சாரி அவரிடம் தெரிவித்தார். ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டை ஏற்ற கம்யூனிஸ்ட்டான அவர் கமிட்டி முடிவை ஏற்று அங்கிருந்து புறப்பட்டார்.

மெட்ராஸ் காஸ்மாபாலிடன் கிளப்பில் பணியாற்றும் சீனிவாசன் என்பவருடன் பேசி ஹைதருக்கு உதவுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. (தோழர் சுஹாசினி இந்த ஏற்பாட்டை செய்தார்). ஆனால் மெட்ராஸ் வந்த ஹைதருக்கு உடனடியாக உதவி கிடைக்கவில்லை. சில நாட்கள் பின் ஹைதரை சந்தித்த சீனிவாசன், “இங்கே மேல் சாதி, கீழ் சாதி என சமூகம் பிரிந்துகிடக்கிறது. உங்கள் கோட்பாட்டை இங்கே ஏற்பது மிகவும் கடினம். நீங்கள் புரிந்துகொண்டது தவறு. இந்தப் பணி மிகவும் கடினம்” என தெரிவித்தார். உண்மையில் அவர் ஹைதருக்கு உதவ முடியாது என்பதைத்தான் அப்படித் தெரிவித்தார்.

உப்பு சத்தியாகிரக போராட்டம் நடந்துகொண்டிருந்தது. அந்த சமயத்தில் காந்தி அதன் அழுத்தத்தை இர்வின் ஒப்பந்தத்திற்கு திருப்பிவிட்டார். முழுச் சுதந்திரம் என்ற முழக்கம் பின்னடைந்ததால் பெரும் ஏமாற்றம் பரவியது. ஹைதர் ஒரு விடுதியில் தங்கியிருந்தார். சங்கர் என்ற புனைப்பெயரோடு பணியாற்றினார். அவரே உருவாக்கிய சில தொடர்புகளை வைத்து முதலில் ஒரு படிப்பகமும் பின் அதைத் தொடர்ந்து இளம் தொழிலாளர்கள் லீக் அமைப்பையும் ஏற்படுத்தினார்.

இக்காலத்தில் வடிவேலு முதலியாருடன் சந்திப்பு ஏற்பட்டது. அவர் நடத்திவந்த ஜனமித்திரன் என்ற பத்திரிக்கையை பற்றி அறிந்து இளம் தொழிலாளர் லீக் அமைப்பிற்கு அவரை அறிமுகம் செய்தார். பிறகு முன்னேற்றம் என்ற பெயரில் பத்திரிக்கை கொண்டுவருவதென அவர்கள் முடிவு செய்தனர். மெல்ல மெல்ல இளம் தொழிலாளர் லீக் வளர்ந்தது. மீரட் சதி வழக்கில் தொழிலாளர் தலைவர்கள் கைது செய்யப்பட்டது செய்தியாகியது. கம்யூனிசம் பரவுவதை அறிந்த போலீசும் எச்சரிக்கையானது.

சுந்தரய்யாவுடன் சந்திப்பு

இளம் அரசியல் செயல்பாட்டாளராக இருந்துவந்த சுந்தரய்யா, உப்பு சத்தியாகிரகத்தில் பங்கெடுத்தவர். ஜெயராமன் உதவியுடன் அவரை சந்திக்க முடிவுசெய்த அமீர் ஹைதர் கான், சுந்தரய்யாவை தேடி பெங்களூரு சென்றார். ‘கம்யூனிஸ்ட் இயக்கத்தை கட்டுவதற்கான வாய்புகள் இருந்தும், உள்ளூர் அளவில் சரியான தலைவர்கள் இல்லாமல் அதை சாதிக்க முடியாது. தொழிலாளர் லீக் அமைத்துவிட்டோம். உள்ளூர் மொழிகளை அறிந்த தலைவர்கள் இப்பணியை முன்னெடுக்க வேண்டும்’ இதுதான் அவர் பேசியது. அந்த சந்திப்பு சுந்தரய்யாவுக்குள் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது.

ஹைதர் ஒரு முஸ்லீம் என்றபோதும் தென்னிந்தியாவில் சங்கராக, பிராமணராக அடையாளத்தை மாற்றி மாற்றி செயல்பட வேண்டிவந்தது.

1931 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிட்டு கொல்லப்பட்டனர். ஓராண்டுக்கு பின் இளம் தொழிலாளர் லீக் அவர்கள் நினைவுதினத்தை கடைப்பிடித்தது. துண்டறிக்கை வெளியிட்டு விநியோகித்தார்கள். இதனை அறிந்த காவல்துறை, மோப்பம் பிடித்து வந்து பாலன் என்பவரை கைது செய்தது. அவர் இறுதி வரை ஹைதரையோ, அமைப்பையோ காட்டிக் கொடுக்கவில்லை. காவல்துறை தாக்குதலில் மரணமடைந்தார். தற்கொலை வழக்காக அதை ஜோடித்தது காவல்துறை.

சுபாஸ் சந்திர போசுடன் உரையாடல்

பின்னர் ஹைதர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு முதலில் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டார். துண்டறிக்கை வெளியீட்டுக்காக அவர் மீது வழக்குப் போடப்பட்டது. இவ்வழக்கில் சுபாஸ் சந்திரபோஸ் சாட்சியாக சேர்க்கப்பட்ட சுவாரசியம் அவரின் சுய சரிதையில் விளக்கப்படுகிறது. போஸ், ஹைதரிடம் மாஸ்கோவில் என்ன கற்றுக் கொண்டார் என்பதை பற்றி கேட்டு அறிந்துகொண்டார். மேலும் ‘வலுக்கட்டாயமாக பறிக்கப்படும் சுதந்திரத்தை அதே முறையில் எடுத்துக்கொள்வது சரியானதும் நியாயமானதுமே ஆகும்’ என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்திய சுதந்திரத்தின் எதிர்காலம் என்ற புத்தகத்தை எழுதச் செய்யும் அளவுக்கு அவர்களின் உரையாடல் தாக்கம் செலுத்துவதாக இருந்தது. மெட்ராஸ் சிறையில் இருந்தபடி ‘சேவாவாதி சங்கா’ என்ற புத்தகத்தை போஸ் எழுதினார். 

சிறைத் தண்டனைக்கு பிறகு சென்னை திரும்பிய ஹைதர், இளம் தொழிலாளர் லீக் கூட்டத்தில் பங்கெடுத்தார். அந்த கூட்டத்தில் பி.சுந்தரய்யாவும் வந்திருந்தார். அச்சகம் இயங்கிக் கொண்டிருந்தது. கட்சி பரவிக்கொண்டிருந்தது. திருச்சி சிறையில் சந்தித்த சீனிவாசராவ், ஹைதரை வந்து சந்தித்தார். இக்காலகட்டத்தில் பி.ராமமூர்த்தி, ஜீவானந்தம் ஆகியோரையும் ஹைதர் சந்தித்ததாக குறிப்புகள் உள்ளன. அவர்  இத்தோழர்களின் வாழ்வில் மறக்கவியலா தாக்கம் செலுத்தினார்.

மீண்டும் கைது செய்யப்பட்ட ஹைதர் ராஜமுந்திரியிலும், அம்பாலாவிலும் சிறை வைக்கப்பட்டார். கம்யூனிஸ்ட் இயக்கம் மீரட் சதிவழக்கை எதிர்கொண்டு முன்சென்றது. ஹைதரால் அடையாளம் காணப்பட்ட சுந்தரய்யா தன் 22 வயதில் கட்சியின் மத்தியக் குழுவில் இடம்பெற்றார்.

சிங்காரவேலருடன் தொடர்பு இருந்ததா?

1931 முதல் 1934 வரை மெட்ராஸ் ராஜதானியில் ஊக்கத்துடன் இயங்கி முன்னணி செயல்பாட்டாளர்களை கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஈர்த்த தாதா அமீர் ஹைதர் கான், அதே காலத்தில் இங்கே வாழ்ந்த தோழர் சிங்காரவேலரை சந்தித்தாரா என்ற கேள்வி வருகிறது. மீரட் சதி வழக்கில் குற்றப்பத்திரிக்கையில் சிங்காரவேலரின் பெயர் இடம்பெற்றிருந்தது. ஆனால் அவர் உடல் நிலையை பரிசோதிக்க அமர்த்தப்பட்ட மருத்துவர்கள் குழு, 1500 மைல் தொலைவில் உள்ள மீரட்டுக்கு ரயில் மூலம் அழைத்துச் செல்லப்பட்டால் அவர் உயிரோடு இருக்கமாட்டார் என்று கூறியதன் காரணமாக இவ்வழக்கில் அவர் இணைக்கப்படவில்லை என்று பி.ராமமூர்த்தி (தமிழ்நாட்டு தொழிற்சங்க இயக்கம் என் நினைவுகள்)  புத்தகத்தில் குறிப்பிடுகிறார். முதல் கட்சிக்கிளை உறுப்பினராக இருந்த சி.சுப்பிரமணியம் தனது குறிப்பில் எழுதும்போது, 1933 ஆம் ஆண்டு, மெட்ராஸ் ராஜதானியில் முதல் கட்சிக்கிளை அமைக்கப்பட்டது. அதற்கு தோழர்கள் ம.சிங்காரவேலு மற்றும் அமீர் ஹைதர் கான் ஆகியோர் வழிகாட்டியதாகவும். முதல் கிளையில் கே.பாஸ்யம் (எ) ஆர்யா, பி.சுந்தரய்யா, கம்மம்பட்டி சத்தியநாராயணா, வி.சுப்பய்யா மற்றும் ரஷ்யா மாணிக்கம் ஆகியோர் இடம்பெற்றதாக தெரிவிக்கிறார். சிங்காரவேலர், அமீர் ஹைதர் கான் நேரடி சந்திப்பு ஒருமுறை நடந்திருப்பதாக ‘சிங்காரவேலர் வாழ்வும் சிந்தனையும்’ புத்தகத்தில் பாஸ்யம் தெரிவித்தாக குறிப்பு இடம்பெற்றுள்ளது.

சிறுபான்மை இந்துக்களைக் காத்தவர்

1934களில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது.  கட்சி முடிவின்படி காங்கிரஸ் கட்சியில் இணைந்து  வெளிப்படையாக அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். அந்த நேரத்தில் 2 வது உலகப்போர் வெடித்தது. இந்த காலத்தில் மீண்டும் கைது செய்யப்பட்ட அமீர் ஹைதர் கான் நாசிக் சிறையில் தனது நினைவுக் குறிப்பினை எழுதினார். ‘இழக்கப்போவது அடிமைச் சங்கிலியே’ என்றபெயரில் வெளியான அந்த சுய சரிதை இரண்டு பாகங்களாக ஆங்கிலத்தில் கிடைக்கிறது. அக்காலத்தின் உலக, இந்திய அரசியலைக் காட்டும் மிக முக்கியமான பதிவாக அது அமைந்துள்ளது.

சிறையிலிருந்து 1942 ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டார். தொழிற்சங்கத்திலும், விவசாயிகள் சங்கத்திலும் பாடுபட்டார். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது, தனது சொந்த கிராமத்தில் இயங்கினார். பிரிவினை நேரத்தில் மிகப்பெரும் வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டன. பிரிட்டிஷ் ஆட்சியின் சதி வேலைகளை மிகத் தெளிவாக உணர்ந்தவராக அமீர் ஹைதர் கான் இருந்தார். ஏற்கனவே பம்பாயில் திட்டமிட்ட வதந்திகளின் மூலம் கலவர முயற்சிகளை எதிர்கொண்ட அனுபவம் அவருக்கு இருந்தது. பாகிஸ்தானில் இந்து சிறுபான்மையினர் தாக்கப்பட்டபோது முன்நின்று காக்க உழைத்தார். இந்துக்களைக் காக்கும் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தினார். முஸ்லிம் அல்லாதவர்களை ரயிலேற்றிவிட்டு வந்து கண்ணீர் விட்டு அழுதார். அவர் இதயம் நொறுங்கியது.

பாகிஸ்தானில் ஒரு ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியை ஏற்படுத்த முயற்சி செய்தார். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையால் ஊக்கமிழந்திருந்த இளைஞர்கள் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு வந்தார்கள். அவர்களுக்கு உதவி செய்தார். ஆனால் முஸ்லீம் லீக் அரசு எச்சரிக்கையானது. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மேல் அடக்குமுறைகள் ஏவுவது தொடர்ந்தது. வகுப்புவாத சட்டத்தின்படி அவர் வெறுப்பு விதைப்பதாக சொல்லி வைது செய்தது. இந்த சதிவழக்கில் தாதா அமீர் ஹைதர் கான்  1949 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 15 மாதங்கள் சிறைப்படுத்தப்பட்டார். அடுத்தடுத்து சதி வழக்குகளின் மூலம் அவரை முடக்க முயன்றது பாகிஸ்தான் அரசாங்கம்.

1954 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி சட்ட விரோதமாக அறிவிக்கப்பட்டு ராவல்பிண்டி அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. 1958, 1970 என மீண்டும் கைது செய்யப்பட்டார். அரசிய சூழல் மீண்டும் மீண்டும் குழப்பங்களை சந்தித்தது.

அமீர் ஹைதர் கான் இறுதி வரையிலும் ஒரு போராளியாகவும், கம்யூனிஸ்டாகவும் செயல்பட்டார். அவரின் சொந்த கிராமத்தில் இருந்த நிலத்தில் பள்ளிக்கூடம் ஏற்படுத்தினார். பிறகு அதில் பெண்களுக்கான பள்ளியும், அறிவியல் ஆய்வகமும் ஏற்படுத்தப்பட்டது. கட்டமைப்பை ஏற்படுத்தி பின் அதனை அரசிடம் ஒப்படைத்தார். தனது 88 வது வயதில், பேருந்தில் ஏற முயன்றபோது விபத்துக்கு ஆளானார். அதில் உடல் நலம் குன்றிய அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் காலமானார்.

மாபெரும் வாழ்க்கை

ஹைதர் என்ற சிறுவன் ராவல்பிண்டியில் இருந்து வெளியேறியபோது அவனிடம் கல்விக்கும், நல்ல வாழ்க்கைக்குமான தேடல் இருந்தது. ஆதரவற்ற, கடும் சுரண்டலுக்கு ஆளான சிறுவனாக, குழந்தைத் தொழிலாளியாக இருந்த அவர், தன் விதியே என்று நொந்துகொள்ளவில்லை. முதல் உலகப்போர் அவருக்கு ஏகாதிபத்தியங்களின் உண்மை முகத்தைக் காட்டியது. நிறவெறியும், ஆதிக்க வெறியும் அவரைத் தாக்கியபோது தனி மனிதராக மட்டும் அதனை எதிர்கொள்ளாமல், ஒரு சரியான இயக்கத்தை தேடினார். ரஷ்ய சோசலிசப் புரட்சியின் வெற்றி எல்லாத் தொழிலாளர்களையும் போலவே அவரையும் ஊக்கப்படுத்தியது. ஒரு சரியான தத்துவப் பாதையின் தேவையை உணர்ந்தார். மார்க்சியத்தைக் கற்றதுடன் தன் வாழ்க்கையையே அதற்கு அர்ப்பணித்தார். இவ்வாறு அவர் தாதா அமீர் ஹைதர் கானாக மாறினார்.

அமீர் ஹைதர் கான் பாட்டாளி வர்க்கத்தின் விடுதலை, ஒட்டுமொத்த சமூகத்தின் விடுதலையோடு பின்னிப் பிணைந்தது என்ற உண்மையை உணர்ந்த ஒரு போராளியாக இயங்கினார். பயணித்த இடத்திலெல்லாம் தன் முத்திரையைப் பதித்தார். இந்திய துணைக்கண்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் பரவி வளர்ந்ததில் அமீர் ஹைதர் கானின் பங்களிப்பு அதி முக்கியமானது. அதற்காக பல ஆண்டுகள் சிறைவாழ்க்கையையும், தலைமறைவு வாழ்க்கையையும் ஏற்றுக்கொண்டார். தேசப்  பிரிவினை அவர் இதயத்தை நொறுக்கியது. ஆனாலும் தன்னால் ஆன அளவில் கம்யூனிச லட்சியத்தை பரவலாக்க உழைத்தார்.  அவர் தொடங்கி வைத்த போராட்டம் மிக நீண்ட ஒன்று என்பதை நாமறிவோம். இன்னும் பல நூற்றாண்டுகளுக்கான ஊக்கத்தை, நம் முன்னோடித் தோழர்களின் வாழ்க்கையிலிருந்து பெற்றிடுவோம். கற்றிடுவோம்.Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: