மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


உலக, இந்திய இடதுசாரி இயக்கங்கள் அய்ஜாஸ் அகமது-உடன் ஓர் உரையாடல்


ஜிப்ஸன் ஜான், ஜிதேஷ் பி.எம்.

நன்றி: பிரண்ட்லைன் ஆங்கில ஏடு

தமிழில்: வீ. பா. கணேசன்

இடதுசாரி இயக்கம் உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஓரளவிற்கு வலுப்பெற்று வருகிறது. எனினும், இந்தியாவில் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இடதுசாரி இயக்கம் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. இன்றைய இந்தியப் பின்னணியில் இடதுசாரி அரசியல் எந்த அளவிற்குப் பொருத்தம் உள்ளதாக இருக்கும் என்று கருதுகிறீர்கள்?

 “உலகின் பல்வேறு பகுதிகளிலும்” என்ற வாக்கியத்தைப் பொறுத்தவரையில், அது நீங்கள்  ‘இடதுசாரி’ என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள், உலகின் எந்தப் பகுதியை சுட்டிக்காட்டுகிறீர்கள் என்பதைப் பொறுத்தது ஆகும். லத்தீன் அமெரிக்க இடதுசாரி இயக்கம் – அதாவது  ‘இளஞ்சிவப்பு அலை’ என்று அழைக்கப்படுவது – பெருமளவிற்குக் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. தென் அமெரிக்காவின் மிகப்பெரிய நாடான ப்ரேசில் –  லூலாவின் ப்ரேசில் – இப்போது அதிதீவிர வலதுசாரி ஆட்சியின் கீழ், மோடியின் இந்தியாவை விட மிகக் கொடூரமானதாக உள்ளது. அதேபோலத்தான் ஈக்வடாரும். அர்ஜெண்டினா இப்போது கொடூரத்தில் அதைவிட ஓரளவு குறைந்ததாக இருந்தபோதிலும் அதற்கு முந்தைய இரண்டு ஆட்சிகளின்போது தொழிலாளிவர்க்கம் பெற்றிருந்த பயன்கள் அனைத்தையும் பறிப்பதில் தீவிரம் காட்டும் ஆட்சியைக் கொண்டதாகவே உள்ளது. வெனிசுவேலாவில் சாவேஸின் அரசும் இயக்கமும் தன் இருப்பை நிலைநிறுத்திக் கொண்ட போதிலும் அமெரிக்கா அதன் மீது திணிக்கும் பொருளாதார தடை, உள்நாட்டுப் பொருளாதாரத்தின் மீதான நெறிப்பு ஆகியவற்றால் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகிறது. மறுபுறத்திலோ, ஐரோப்பிய – அமெரிக்கப் பகுதிகளில் உள்ள முக்கியமான சில நாடுகள் இடதுசாரிகளிலிருந்து தொடங்கி தீவிர வலதுசாரி அரசுகளின் சவால்களை – அமெரிக்காவைப் பொறுத்தவரையில் அதிதீவிர வலதுசாரி அரசின் சவாலை – எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளன. இதையும் கூட அதற்குரிய கண்ணோட்டத்தின்படியே காண வேண்டியுள்ளது.

அதன் எந்தவொரு பொருளிலும் அமெரிக்காவிலுள்ள பெர்னி சாண்டர்ஸ்-ஐ ஒரு சோஷலிஸ்ட் என்று கூறிவிட முடியாது. அவர் தொழிலாளி வர்க்கத்திற்கு கொஞ்சம் கூடவே குறைந்தபட்ச ஊதியம், கனடா, மேற்கு ஐரோப்பாவைப் போன்ற பொது சுகாதார அமைப்பு போன்ற சீர்திருத்தங்களுக்காகப் போராடுகின்ற, மிக மெல்லிய, சமூக ஜனநாயகத்தை எட்டிப் பிடிக்கும் வகையிலான, நாகரீகமான, புதிய வகைப்பட்ட ஜனநாயகவாதிதான். பிரிட்டனில் (ஜெர்மி) கோர்பின் எப்போதும் இருப்பதைப் போலவே, தொழிலாளர் கட்சியின் இடதுசாரிப் பிரிவின் ஒரு பிரதிநிதியாகத்தான் இருக்கிறார். 1950களிலும் 1960களிலும் கூட இதே போன்ற நிலைமைதான் இருந்தது. பிரான்சில் எப்போதுமே மைய நிலைபாட்டை மேற்கொள்ளும், இப்போது தரமிழந்துபோன சோஷலிஸ்ட் கட்சியின் முன்னாள் உறுப்பினரான ழீன் லக் மெலஞ்சன், 30 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலான காலத்தில் ப்ரெஞ்சு அதிபர் தேர்தல் அரசியலில் காணாத வகையில், மிகத் தீவிரமான இடதுசாரி திட்டத்துடன் தேர்தலில் குறிப்பிடத்தக்க வாக்குகளை கைப்பற்றியிருக்கிறார். இவர்களை எல்லாம் யார் தடுத்தார்கள்? சாண்டர்ஸைப் பொறுத்தவரையில் ஜனநாயக கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள், கோர்பினைப் பொறுத்தவரையில் தொழிலாளர் கட்சியின் ப்ளேர் ஆதரவுப் பிரிவு, அதைப் போன்றே பிரான்சில் இப்போது சுருங்கிப் போய்விட்ட சோஷலிஸ்ட் கட்சி மெலஞ்சனுடன் சேர்ந்து நிற்க மறுத்தது ஆகியவைதான். சுருக்கமாகச் சொல்வதானால், ஓரளவிற்கு சோஷலிச உணர்வு கொண்ட இடதுசாரிகளுக்கு நிலைத்த நிலையில் உள்ள தாராளவாதிகள் செய்த துரோகம்தான் இது. மிகப் பழைய கதையும் கூட.

அபாயகரமான தருணம்

இந்தியாவில் இடதுசாரிகள் எப்போதுமே பாதகமான சூழலைத்தான் பெருமளவிற்கு எதிர்கொண்டு வந்திருக்கின்றனர். இந்திய அரசியலில் தேர்தல் ரீதியாக, ஆர் எஸ் எஸ் ஸின் எழுச்சி தொடங்கியதில் இருந்தே – உண்மையில் இது அவசர காலத்திலிருந்தே தொடங்கியது என்றே கூற வேண்டும் –தெலுங்கானாவில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக ராணுவப் படைகளை யார் அனுப்பினார்கள் என்பதையும், கேரளாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது கம்யூனிஸ்ட் அரசை கலைத்தது யார் என்பதையும் நிகழ்காலத் தேவைகளின் அழுத்தத்தினால் இடதுசாரி கட்சிகள் பலவும் மறந்துவிடத் தீர்மானித்தன. தேர்தல் நேர அரசியலில் யாராவது ஒரு எதிரியுடன் அல்லது மற்றொருவருடன் சேர்ந்து கொள்ள வேண்டிய காலமும் இருந்தது. எனினும் அந்த எதிரிகளின் அடிப்படை குணாம்சத்தை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

ஜெயப்ரகாஷ் நாராயண், ராம் மனோகர் லோஹியா, அவரது வாரிசுகள் போன்ற சோஷலிஸ்டுகள் காங்கிரஸ் கட்சி மீதான வெறுப்பை விட அதிகமான வெறுப்பை கம்யூனிஸ்டுகளின் மீதே கொண்டிருந்தனர் என்பதை விரிவாகச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அவசரநிலை காலத்தில் சிக்கலானதொரு சூழ்நிலை எழுந்தபோது அவசரநிலைக்கு எதிரான கூட்டணியில் கைகோர்க்க மார்க்சிஸ்ட் கட்சியை விட ஆர் எஸ் எஸ்ஸிற்கே ஜெயப்ரகாஷ் நாராயண் முன்னுரிமை அளித்து, அதன் மூலம் அவசரநிலையை விலக்கிக் கொண்ட பிறகு உடனடியாக நடந்த தேர்தலில் உருப்பெற்ற ஜனதா கட்சியின் அரசில் வலதுசாரிப் போக்கு வலுப்பெறுவதை உறுதிப்படுத்தினார்.

அதையடுத்து வந்த பல பத்தாண்டுகளில் இந்திய அரசியலுக்கு பெரும் ஊறு விளைவிப்பதாகவே அத்தருணம் திகழ்ந்தது. அப்போதுதான் சோஷலிஸ்டுகள், மொரார்ஜி தேசாய், அவரது கும்பல் போன்ற காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்றவர்களின் உதவியுடன் ஆர் எஸ் எஸ் இந்திய அரசியலில் தனக்கேயுரிய இடத்தைப் பெற முடிந்தது. 1977 காலப்பகுதியில் மேற்கு வங்கத்தில் இடது முன்னணி ஆட்சிக்கு வந்தபோதிலும் கிட்டத்தட்ட இதே காலப்பகுதியில்தான் இடதுசாரிகளின் அரசியல் ரீதியான தனிமைப்படுத்தல் வளர்ந்தது என்ற உண்மையை மறைக்கவே அது பயன்பட்டது.

இப்போது இடதுசாரிகளின் பங்கு குறித்த உங்கள் கேள்விக்கு மீண்டும் வருகிறேன். இந்துத்துவ வகுப்புவாதம், பெரும்பான்மை வாதம் ஆகியவை குறித்து நாம் விவாதித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்தக் கேள்விக்கும் அதை ஒட்டியே பதிலளிக்கிறேன். எனது கருத்துப்படி இந்தியாவில் மதசார்பற்ற ஒரு சமூகம், அரசியல் களம் ஆகியவற்றின் மீது தீர்க்கமான, மாற்றமேதுமில்லாத உறுதிப்பாட்டைக் கொண்ட ஒரே சக்தியாக கம்யூனிச இடதுசாரிகள் மட்டுமே உள்ளனர். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலக் கட்சிகளுமே ஏதோவொரு நேரத்தில் ஆர் எஸ் எஸ்ஸின் அரசியல் முகமூடியான பிஜேபியுடன் இணைந்து செயல்பட்டவைதான்.

சற்று முன்பு நான் சொன்னதுபோல இந்திரா காந்திக்கு எதிரான, அவசர நிலைக்கு எதிரான இயக்கங்களில் ஜேபி இயக்கமும் ஆர் எஸ் எஸ்ஸும் மிக நெருக்கமாக செயல்பட்டு வந்தவை. இந்த இயக்கங்கள்தான் ஜனதா அரசு உருவாவதற்கு வழிவகுத்தன. இந்த ஜனதா அரசில் ஜனசங்கம்தான் மிகப்பெரிய, மிக வலிமையான சக்தியாக விளங்கியது. சுதந்திரத்திற்கு முன்பும் கூட மகாத்மா காந்தியின் காங்கிரஸிற்கு உள்ளேயும் கூட வலுவானதொரு வகுப்புவாதப் பிரிவு எப்போதும் இருந்தே வந்தது. இந்திய சமூகத்திலும், அரசியலிலும் இந்து வகுப்புவாதம் என்பது எப்போதுமே மிகப்பெரியதொரு நீரோட்டமாகவே இருந்து வந்துள்ளது.

இந்திய விடுதலைக்குப் பிறகு சில பத்தாண்டுகள் வரையில் மதசார்பற்ற நீரோட்டம் தொடர்ந்து மேலாதிக்கம் செலுத்தி வந்தது. நாட்டின் பல பகுதிகளிலும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வலிமை, பெருமை ஆகியவையும் இதற்கு ஓரளவிற்குக் காரணமாக இருந்தது. அதைப் போன்றே ஆளும் காங்கிரஸ் கட்சியும் கூட இந்த மதசார்பற்ற நீரோட்டத்தோடு தன்னை அடையாளப்படுத்திக்  கொண்டதும் இதற்கு ஓரளவிற்கு காரணமாக இருந்தது. இந்தப் போக்கிற்கும் கூட, குறிப்பாக 1950-ல் (வல்லபாய்) படேல் மறைவிற்குப் பிறகு (ஜவகர்லால்) நேரு, அவரது கூட்டாளிகள் ஆகியோருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவசர நிலைக்குப் பிறகு இந்திராவின் காலத்திலேயே காங்கிரஸின் இத்தகைய தன்மை மறையத் தொடங்கியது.

பாப்ரி மசூதியை இடித்துத் தள்ளிய சங் பரிவாரங்களை முறையான வகையில் நேருக்கு நேராக சந்திக்க (பி.வி.)நரசிம்ம ராவ் மறுத்துவிட்ட நேரத்தில் இடதுசாரி கட்சிகளைத் தவிர மற்ற அரசியல் கட்சிகளின் மேல்மட்டத் தலைவர்களிடையே இந்தக் கொடூரச் செயலுக்கு எதிராக எதையும் செய்யாமலிருப்பது என்ற உணர்வின் விரிவானதொரு கட்டமைப்பு உருவாகியிருந்தது. குஜராத் படுகொலைகள் பற்றி விதிமுறைகளின்படியாகவாவது விவாதம் செய்வதற்கு இந்த மேல்மட்டத் தலைவர்கள் நாடாளுமன்றத்தினை அனுமதிக்கவில்லை என்பதையும் கூட நீங்கள் இங்கே நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

நாடு முழுவதிலும் முன் எப்போதும் இருந்ததை விட அதிகமான அளவில் இந்துத்துவக் கருத்தோட்டங்கள், திட்டங்கள் ஆகியவை இப்போது நடுத்தர வர்க்க இந்துக்களுக்கு ஏற்புடையதாக இருக்கின்றன என்றே நான் நினைக்கிறேன். மிக நீண்ட காலமாக கம்யூனிஸ்ட் பாரம்பரியத்தைக் கொண்டவையாக இருந்தபோதிலும் கூட, கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களும் கூட இந்தப் போக்கிலிருந்து விடுபட்டிருக்கவில்லை. எனவே அவர்களால் என்ன செய்யமுடியுமோ அதை இடதுசாரிகள் செய்ய வேண்டும். எனினும் அவர்களுக்கு முன்னால் உள்ள வாய்ப்புகள் மிகவும் குறைவே. கேரளாவில் ஆர் எஸ் எஸ்ஸிடமிருந்தும், மேற்கு வங்கத்தில் திர்ணாமூல் கட்சியிடமிருந்தும் ஆண்டு முழுவதும் இடதுசாரிகள் வன்முறையை எதிர்கொள்ள வேண்டியிருப்பதையும் நீங்கள் பார்க்கலாம்.

ஆர் எஸ் எஸ் மட்டுமின்றி தாராளவாதிகளின் நடவடிக்கைகளாலும் கூட இந்திய அரசியல் எவ்வளவு தூரம் தரமிழந்திருக்கிறது என்பதைக் காணும்போது இடதுசாரிகள் தங்களது இயக்கத்தை உயிர்ப்போடு வைத்திருப்பதற்காகவே முதலில் போராட வேண்டியிருக்கிறது. அதன் பிறகே தங்களால் முடிந்த அளவிற்கு பகுத்தறிவுபூர்வமான, மதசார்பற்ற திசைவழியை நோக்கிச் செல்ல இந்திய அரசியலுக்கு அவர்கள் வழிகாட்ட முடியும்.

நவதாராளவாத முதலாளித்துவத்திற்கு எதிராக உலகின் பல பகுதிகளிலும் கிளர்ச்சிகள் அதிகரித்து வருகின்றன. ஓர் உலகளாவிய புரட்சிகர எழுச்சி உருவாகி வந்துகொண்டிருக்கிறது என்று நீங்கள் கருதுகிறீர்களா? சோஷலிசத்திற்கான ஒரு புரட்சிகர எழுச்சிக்கான வாய்ப்புகள், வசதிகள், சவால்கள் எவை?

முதலாளித்துவம் என்பதே பெருமளவில் கொடுமைகளை கட்டவிழ்த்து விடுகின்ற காட்டுமிராண்டித்தனமான ஒரு வடிவம்தான். குறிப்பாக அதன் உச்சகட்ட நிலைதான் நவதாராளவாதம். இந்தக் கொடுமைகள் தொடர்ந்து நீடிக்கும் வரையில் இத்தகைய எழுச்சிகளும் தொடர்ந்து எழுந்து கொண்டேதான் இருக்கும். இந்த எழுச்சிகளில் பலவும் இடதுசாரிகளிடமிருந்தே உருவாகிறது. எனினும் உலகளாவியதொரு புரட்சிகர எழுச்சிக்கான எந்தவொரு சூழலும் இப்போது இருப்பதாக நான் கருதவில்லை.

சீனாவில் 1970களின் பிற்பகுதியில் டெங்(சியோ பிங்)கின் புகழ்பெற்ற சீர்திருத்தங்கள் தொடங்கிய காலத்திலிருந்தே உலகளாவிய ஓர் அம்சம் என்ற வகையில் சோஷலிசம் என்ற கருத்தாக்கமானது பின்வாங்கி வரும் நிலையில்தான் இருந்து வருகிறது. 1930களில் தன் காலத்தைப் பற்றிய கிராம்ஷியின் புகழ்பெற்ற சித்தரிப்பான பாசிஸத்தின் எழுச்சியை பலரும் இப்போது மிகச்சரியாகவே எடுத்துக் காட்டுகின்றனர்.

அவரது சித்தரிப்பு இவ்வாறாகத்தான் இருந்தது: பழைய உலகம் இறந்து கொண்டிருக்கிறது. ஆனால் புதிய உலகம் இன்னும் பிறக்கவேயில்லை. இத்தகையதொரு சூழலில்தான் மரணங்கள், கொடிய நோய்கள் ஆகியவற்றுக்கான பல அறிகுறிகள் உலகத்தில் தென்படுகின்றன. இனரீதியான, மத அடிப்படையிலான வெறுப்புணர்வு, வன்முறையின் எழுச்சி என்பதும் இத்தகைய அறிகுறிகளில் ஒன்றாகும்.

வெற்றி பெற்றவர்களைப் போலவே அவர்களால் பாதிக்கப்பட்டவர்களிடமும் கூட இந்த அறிகுறிகள் எழுகின்றன. தீவிரவாத வெறித்தனத்தின் மிகக் கொடூரமான வடிவமான இஸ்லாமிய அரசு என்று அழைக்கப்படும் அமைப்பிற்கான ஆதரவாளர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? ஈராக்கின் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்டவர்களிலிருந்தே அவர்கள் வருகிறார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. எனவே இடதுசாரிகள் தங்களின் இருப்பை நிலைநிறுத்திக் கொள்வதில்தான் தற்போது ஈடுபட்டு வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். இதுதான் இந்தியாவிலும், ஏன் உலகம் முழுவதிலும் நடந்து வருகிறது.

மார்க்ஸ் இன்று

2018-ம் ஆண்டு கார்ல் மார்க்சின் 200வது பிறந்த ஆண்டு. கார்ல் மார்க்சின் எப்போதும் பொருத்தமான, மிக முக்கியமான பங்களிப்பு என்பது எது? நாம் ஏன் மார்க்சை கொண்டாட வேண்டும்?

இந்தக் கேள்வி மிக முக்கியமானதுதான். என்றாலும் மிக விரிவானதும் கூட. எனவே நான் சற்று திகைத்துப் போய்த்தான் இருக்கிறேன். நல்லது. 50 ஆண்டுகளுக்கு முன்னால் ழீன் பால் சாத்ரே கூறிய ஒன்றை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். இயங்கியலின் காரணம் குறித்த விமர்சனம் என்ற தனது நூலுக்கு அவர் எழுதிய, ஒரு தனி நூல் அளவிற்கு நீளமான, அறிமுகவுரையில் மார்க்சியத்தை இவ்வாறு விளக்கியிருந்தார். முதலாளித்துவ உற்பத்தி முறையினால் பதிலளிக்கவியலாத அறிவியலே மார்க்சியம். முதலாளித்துவம் நீடிக்கும் வரையில் அனைத்து சிந்தனைகளுக்குமான உயர்மட்ட வரம்பாக அதுவே நீடிக்கும். இந்த விஷயத்தின் மையக் கருத்து இதுவென்றே நான் கருதுகிறேன்.

அதே நேரத்தில் மார்க்சியம் அதன் அடிப்படையான தன்மையில் முழுமைபெறாத, முழுமைப்படுத்தவியலாத ஓர் அறிவு. ஏனெனில் மாறிக் கொண்டேயிருக்கும் இன்றைய உலகம் பற்றிய ஒரு விஞ்ஞானம் என்ற மார்க்சியமும் கூட என்றும் ஒரே மாதிரியாக நிலைத்த ஒன்றாக இல்லாது உயிர்த்துடிப்புடன் விளங்கும் ஓர் அறிவாகும். அது எப்போதும் தன்னை மேம்படுத்திக் கொண்டேயிருக்கிறது; புதுப்பித்துக் கொள்கிறது. ஏனெனில் மாற்றமெனும் சூறாவளியில் எப்போதும் சிக்கித் தவிக்கும் பொருளாயத உலகமே அந்த அறிவின் மையக் கருத்தாக விளங்குகிறது  என்றும் சாத்ரே குறிப்பிட்டார்.

இதையே வேறு வார்த்தைகளில் கூறுவதானால் மார்க்ஸ் நம்மிடையே இரண்டு வகையான வடிவங்களில் வாழ்ந்து வருகிறார். தனது பாரம்பரியமாக அவர் நமக்கு விட்டுச் சென்ற மிகப் பிரம்மாண்டமான எழுத்துக்களில்; அந்தப் பாரம்பரியத்தை மேலும் செழுமைப்படுத்திக் கொண்டே வருகின்ற, பல தலைமுறைகளைச் சேர்ந்த மார்க்சிஸ்டுகளின் அறிவார்ந்த அரசியல் பங்களிப்பில்.

இவற்றோடு நான் இன்னும் கொஞ்சம் சேர்த்துக் கூற விரும்புகிறேன்.  மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூல் நம்மை மூச்சுத் திணறவைக்கும் தன்மை கொண்டது. பொதுவாகவே, பொருளாதார ஆய்விற்கான குறிக்கோள்களையும் வழிமுறைகளையும் அறிந்து கொள்ள மார்க்சையும், புரட்சிகர அரசியலுக்கான தொலைநோக்கு உத்தி, இடைக்கால உத்தி ஆகியவற்றுக்கு லெனினையும் தேடிச் செல்லும் போக்கு இங்கே உருவாகியிருக்கிறது. லெனினின் முக்கியத்துவத்தை நான் குறைத்து மதிப்பிட விரும்பவில்லை. என்றாலும், அரசியல் என்ற கருத்தாக்கத்தின் மையமான ஒரு நபராக, நடைமுறைப் புரட்சியாளராக, தொழிலாளி வர்க்க அரசியலை நிறுவிய தத்துவஞானியாக மார்க்ஸ் திகழ்கிறார் என்பதை நான் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன். இடதுசாரி சிந்தனைப் போக்கின் வரலாற்றில் அறிவார்ந்த செயல்வீரர்கள் என்ற மகத்தான பாரம்பரியம் என்பதே மார்க்சின் வாழ்க்கை, செயல்பாடு ஆகியவற்றை நேரடியான முன்மாதிரியாகக் கொண்டு உருவானதுதான்.

அடுத்த இதழில்: சாதி  குறித்து  Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: