குழப்பக் குட்டையில் சிக்கிக் கொண்ட கம்யூனிச ‘விமர்சகர்’


  • இரா.சிந்தன்

இந்து தமிழ்த் திசை நாளேடு, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ‘அறிவுரை(!)’ கூறும் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. பத்திரிக்கையாளர் சமஸ் அதை எழுதியுள்ளார். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் இன்றியமையாமையை அந்தக் கட்டுரை சுட்டிக்காட்டாமல் இல்லை. அதே சமயம் விமர்சனங்களாக முன்வைக்கிற கருத்துக்கள் சரிதானா என்று பார்க்க வேண்டியுள்ளது. பொதுவெளியில் வைக்கப்பட்டுள்ள அந்தக் கட்டுரையின் பகுதிகளை திறனாய்வோம்.

மோதிக் கொண்டுள்ளனவா கம்யூனிஸ்ட் கட்சிகள்?:

மார்க்சிஸ்ட் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் இருவேறு கட்சிகளாக செயல்படுவது வரலாற்றுச் சுமை என்று வர்ணிக்கிறார் கட்டுரையாளர். இயக்கம் பின்னடைவை சந்திக்க அதுதான் முதற்பெருங்காரணம் என்பது அவருடைய கருத்து. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், மார்க்சிஸ்ட் கட்சிக்கும் இரு வேறு திட்டங்கள் உண்டு. இந்தியாவில் மக்கள் ஜனநாயக புரட்சி நடத்த வேண்டும் என்கிறது மார்க்சிஸ்ட் கட்சி. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதில் மாறுபடுகிறது. ஆனால், இந்திய மக்களின் உடனடித் தேவை என்ன என்பதை இரண்டு இயக்கங்களும் உணர்ந்தே இருக்கின்றன.

அதனால்தான் மேற்கு வங்கம், திரிபுராவில் இடது முன்னணியினை அமைத்தும், கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி அமைத்தும் செயல்படுகின்றோம். இப்படி உடனடி தேவைகளை மனதில் கொண்டு செயல்படும் மார்க்சிஸ்ட் கட்சியானது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோடு மட்டுமல்ல, இடதுசாரி என்ற வரம்பிற்குள் வர முடிந்த அனைத்துக் கட்சிகளோடும், இடதுசாரி அல்லாத ஜனநாயக இயக்கங்களோடும் இணைந்தே செயல்படுகிறது.

மோதல் போக்கை வளர்ப்பதுதான் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நோக்கமென்றால், இப்படி செயல்படவே முடியாது. பொதுவுடைமை இயக்கத்தின் ஜனநாயக புரிதலின் காரணமாகவே, இணைந்த செயல்பாடு சாத்தியமாகிறது. மேலும் அந்தப் புரிதல்தான், ‘பொது செயல்திட்ட’ அடிப்படையிலான அணிச் சேர்க்கைகள் உருவாக காரணமாகவும் இருந்தது. பொது செயல் திட்டத்தை அடிப்படையாக கொண்டு மத்தியில் ஆட்சி அமைந்த காலத்தில்தான், இந்திய மக்களின் நலன்கள் ஓரளவாவது பாதுகாக்கப்பட்டன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பலமுறை ‘பன்மைத்துவம்’ என்ற கருத்தை எடுத்தாண்டிருக்கும் கட்டுரையாளருக்கு, இடதுசாரிகளின் இத்தகைய தனித்துவமான அரசியல் கலாச்சாரமும் ‘பன்மைத்துவத்தின்’ பகுதி என்பது தெரியவில்லை. ஒரு புரட்சிகர திட்டத்தின் அடிப்படையில் இயங்குவதையே கேள்விக்கு உள்ளாக்க நினைக்கின்றார். எனவே, இரண்டு திட்டங்கள் எதற்கு? இரண்டு கட்சிகள் எதற்கு? என்பது போன்ற கேள்விகளை முன்வைக்கிறார். இது மக்கள் ஜனநாயக திட்டத்தின் மீது நிகழ்த்தப்படும் தாக்குதலே ஆகும். அந்த வாதத்தை கட்டமைக்க வசதியாக இடதுசாரி இயக்கங்களுக்குள் நிலவும் விமர்சனங்களையும், மாற்றுக் கருத்துக்களையும் மோதலாக சித்தரித்து, எழுதவும் துணிகிறார்.

ஒரு கட்சிக்குள்ளேயே முரண்பாடுகள் இருந்துகொண்டுதான் இருக்கும் என்கிறபோது, வேறுபட்ட கட்சிகளிடையே நிலவும் மாற்றுக் கருத்துக்களை ஆபத்தாகப் பார்ப்பது தவறான பார்வை.

சீனாவில் நிலவுவது கம்யூனிசமா?

கட்டுரை முன்வைக்கிற மற்றொரு கருத்து, கட்சி தனது பண்பை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதாகும். அதற்கான காரணத்தை அடுக்கும்போது அவதூறுகளைத் தேடிச் சேகரிக்கிறாரே தவிர, ஆக்கப்பூர்வமான வாதத்தைக் காண முடியவில்லை.

முதலில் காஷ்மீர் – ஹாங்காங் ஒப்பீட்டை எடுத்துக் கொள்வோம். காஷ்மீரில் நடந்துகொண்டிருக்கும் மனித உரிமை மீறல்களை கண்டிக்கவோ, வெளிப்படுத்தவோ தைரியம் இல்லாத இந்திய நாளிதழ்களுக்கு ஹாங்காங்கில் நடக்கும் போராட்டங்களுக்கு ஆதரவளிக்கவாது சுதந்திரம் இருக்கிறதே என்று ஆறுதல் அடைய வேண்டியுள்ளது.

இன்றைக்கு காஷ்மீர் ஒரு மாநிலமாகக் கூட இல்லை, இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஒரே உத்தரவில் மாற்றப்பட்டு, பெரும் வரலாற்று துரோகத்தை எதிர்கொண்டிருக்கிறது. ஹாங்காங் நிலைமை அப்படியா இருக்கிறது?. ஒரு நாடு இரு அமைப்புகள் என்ற கொள்கையின் அடிப்படையில் சீனாவுடன் இணைந்து செயல்படுகிறது. அதாவது பொருளாதாரக் கொள்கையே வேறு வேறு, ஆனாலும் அவர்கள் ஒரே நாடு என இணைந்துள்ளனர். போராட்ட கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கிறது. சிலவற்றை ஏற்றுள்ளது. இன்றுவரையிலும் ஹாங்காங் காவல்துறை மட்டும்தான் அந்த நாட்டில் போராடும் மக்களிடையே செயல்படுகின்றன. பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்படவில்லை. போராட்டக்காரர் ஒருவர் சுடப்பட்டால், அதற்காக வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு, தவிர்க்க இயலாத சூழலில் அது நடைபெற்றதாக விளக்கம் கொடுக்கிறது ஹாங்காங் காவல்துறை. உண்மையில், காஷ்மீரும், ஹாங்காங்கும் ஒப்பிடும் வகையிலேயே இல்லை என்பது மட்டுமல்ல, சீனாவில் நிலவுவதையே எதேச்சதிகாரம் என்று சொன்னோமென்றால், இந்தியாவில் நிலவுவதன் பெயரென்ன, அது குறித்து மெளனம் காக்கும் இந்த ஊடகங்களின் செயலுக்கு பெயர் என்ன என்ன என்ற கேள்வி எழுகிறது.

சீன ஆட்சியாளர்கள் தவறு செய்தால் நிச்சயம் விமர்சிக்க வேண்டும். ஆனால் அதற்காக எடுத்தாளும் மேற்கோளின் உண்மை இருக்கிறதா என்று பார்ப்போம். “சீனாவை பிளவுபடுத்தத்தக்க எந்த போராட்டமும் சிதைக்கப்பட்ட உடலாகவும், நொறுக்கப்பட்ட எலும்புகளாகவும்தான் மிஞ்சும்” என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்ததாக மேற்குலக ஏடுகள் அனைத்தும் எழுதினார்கள். அதற்கு ஆதாரமாக சி.சி.டி.வி என்ற சீன அரசு ஊடகத்தில் வந்த செய்தியை மேற்கோள் காட்டினார்கள். மேற்கோள் காட்டினார்களே தவிர இரண்டும் ஒன்றுதானா என ஆராய்ச்சிக்குள் செல்லவில்லை. நாமே தேடி ஒப்பிட்டால், “சீனத்தின் எந்தப் பகுதியிலும் பிரிவினை விதைக்க முயற்சிக்கிறவர்கள் ஒடுக்கப்படுவார்கள், வெளியிலிருந்து அதற்கு ஆதரவு கொடுக்கும் சக்திகளின் முயற்சியை சீன மக்கள் பகல் கனவாக மாற்றுவார்கள்” என்றுதான் ஜி ஜின்பிங் பேசியிருக்கிறார். திரிக்கப்பட்ட மேற்கோளை எடுத்தாள்வது என்ன இதழியல்?.

மிலிட்டரி ஒலிம்பிக் எனப்படும், உலக ராணுவ விளையாட்டு போட்டிகள் சீனத்தில் தொடங்கியிருக்கின்றன. மேலும், ஸியாங்க்சான் ராணுவ மாநாடு சீனத்தில் நடந்துவருகிறது. இவற்றில் உலகிற்கு ஏன் அமைதியும் நல்லிணக்கமும் தேவை என வலியுறுத்தப்படுகிறது. ஆனால் எதைப் பேச வேண்டும். எந்த பிம்பத்தைக் கட்டமைக்க வேண்டும் என்பதில் முதலாளித்துவ ஊடகங்கள் தெளிவாக இருக்கின்றன. அதே கருத்தைத்தான் கட்டுரையாளரும் நம்புகிறார், முன்னெடுக்கிறார்.

சீனாவில் நிலவுவது சோசலிசமா, கம்யூனிசமா என அறிவதற்குக் கூட கட்டுரையாளர் மெனக்கெடவில்லை. சீனா தன்னை சோசலிச கட்டுமானத்தின் துவக்க கட்டத்தில் இருப்பதாக கூறுகிறது. (சோசலிச கட்டுமானம் முடிந்துவிட்டதாக கூட கூறவில்லை.) கட்டுரையாளரோ திரித்துக் கட்டமைக்கப்பட்ட கருத்துக்களை அடுக்கி வைத்தபின், ‘சோசலிஸ்ட்’ என்பதன் நோக்கத்தை சிறப்பானது என்று சிலாகிக்கிறார். அவ்வாறு சொல்லும்போது கூட சீனா மட்டுமல்ல உலகில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்படுத்தியிருக்கும் அரசுகள் ‘சோசலிசத்தை கட்டுகிற’ அரசுகள் என்பதைப் பார்க்கத் தவறுகிறார். சோசலிசம் எதிர் கம்யூனிசம் என்ற பார்வை முழுக்க முழுக்க கட்டுரையாளரின் மூளைக்குள் நிகழ்ந்த ஒன்றாகும்.

சோசலிசம் என்றால் என்ன?

சோசலிச சமூக கட்டமைப்பும், கம்யூனிச சமூக கட்டமைப்பும் அடுத்தடுத்து வரக்கூடியவையே. அந்த இலக்கில் பயணிக்க வழிகாட்டும் தத்துவமாக மார்க்சியம் இருக்கிறது. மார்க்சின் தத்துவம் சமூகத்தின் வரலாற்று வளர்ச்சிப் போக்கினை பல்வேறு கட்டங்களாக பார்க்கிறது. அதன் வளர்ச்சி மட்டங்களை, சமூகத்தில் நிலவக்கூடிய உற்பத்தி முறையை மையப்படுத்தியும், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை மையமாகக் கொண்டும் நிர்ணயிக்கிறது.

முதலாளித்துவ சமூகம் தனியுடைமையை அடிப்படையாகக் கொண்டது. இங்கே மனிதர்கள் வர்க்கங்களாக பிளவுபட்டு மோதுவதுடன், வேலையின்மை, வறுமை போன்ற கேடுகள் மலிந்திருக்கின்றன. முதலாளித்துவ பொருளாதாரமானது மீண்டும் மீண்டும் நெருக்கடியில் சிக்கக் கூடிய ஒன்றாகும். இப்போதைய முதலாளித்துவ சமுதாய அமைப்பை வீழ்த்தி, பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் ஏற்படுத்தப்படும் அமைப்பே, சோசலிசம் ஆகும். அப்படி அமைகிற சோசலிச அரசும், சமூகமும் பாட்டாளி வர்க்கத்தால் விஞ்ஞான வழியில் நிர்வகிக்கப்படும். அது திட்டமிட்ட வகையில் படிப்படியாக தனியார் மூலதனக் குவிப்பையும், சுரண்டலையும் ஒழிக்கும். இதன் காரணமாக வேலையற்றோர் என்ற நிலைமையே இல்லாமல் ஆக்கப்படுவதுடன், தனியார் லாபத்திற்காகவே உற்பத்தி என்ற அராஜகப் போக்கு மறையும். இந்தக் கடமைகள் அனைத்தையும் நிறைவேற்றுகிற வர்க்கமாக பாட்டாளி வர்க்கமே திகழ்கிறது.

எனவேதான், சோசலிச அரசு என்பது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமாக அமைகிறது. “அதாவது ஒடுக்குமுறையாளர்களை அடக்குவதற்காக ஒடுக்கப்பட்டவர்களுடைய முன்னணிப்படை ஆளும் வர்க்கமாய் அமையும் ஒழுங்கமைப்பாக” அமைகிறது. அது “பண மூட்டைகளுக்கான ஜனநாயகமாக இருக்காது, முதன் முதலாய் ஏழைகளுக்கான ஜனநாயகமாக, மக்களுக்காக ஜனநாயகமாக ஆக்குவதுடன் கூட ஒடுக்குமுறையாளர்களும் சுரண்டலாளர்களும் முதலாளிகளும் ஆனோரின் சுதந்திரத்திற்கு பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் வரிசையாக பல கட்டுகளை விதித்திடுகிறது” என அரசும் புரட்சியும் என்ற நூலில் விளக்குகிறார் லெனின்.

சோசலிச அரசு அமைப்பானது, கம்யூனிசத்திற்கு இந்த சமூகம் மாறிச் செல்லும் கட்டத்திற்கான ஒன்று ஆகும். ஒட்டுமொத்த உலகத்திலும் சோசலிச அரசமைப்புகள் ஏற்பட்ட பின் சமூகம் கம்யூனிசத்தை நோக்கி பயணிக்க தொடங்கும். அத்தகைய கம்யூனிச அமைப்பில் அரசு அரவே தேவையற்றதாகும். “கம்யூனிச சமுதாயத்தின் முதற் கட்டத்தில் (சாதாரணமாக இது சோசலிசம் என்று அழைக்கப்படுகிறது) முதலாளித்துவ உரிமை அதன் முழு அளவிலும் ஒழிக்கப்பட்டுவிடுவது இல்லை.” என்கிறார் கார்ல் மார்க்ஸ். அறிவியல் பூர்வமாகவே அது படிப்படியாக ஒழிக்கப்பட்டு நிறைவான கம்யூனிச நிலையை எட்டும். கம்யூனிச சமுதாயத்தின் உயர் கட்டத்தில்… ஒவ்வொருவரிடமிருந்தும் அவருடைய ஆற்றலுக்கு ஏற்ப , ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய தேவைக்கு ஏற்ப’ என்ற நிலைமையை எட்ட முடியும்.

இதுபற்றி எங்கல்ஸ் குறிப்பிடும்போது, “சமூக உற்பத்தியில் அராஜகம் எந்த அளவு மறைகிறதோ, அந்த அளவு அரசியல் ஆட்சியதிகாரம் மறைந்து போகிறது. முடிவில், தனக்கே உரிய சமூக நிறுவன வடிவத்தின் எஜமானனாகத் திகழும் மனிதன், அதேவேளையில், இயற்கையின் தலைவன் ஆகிறான். தனக்குத் தானே எஜமானன் ஆகிறான். அதாவது, சுதந்திரமடைகிறான்” என்கிறார். எனவே கம்யூனிசம் என்பது மனித சமூகத்திற்கு அவசியமான ஒரு புதிய, வளர்ச்சிபெற்ற நிலைமையாகும்.

ஆனால், இப்படியெல்லாம் தேடிப்படித்து, ஆய்வுப்பார்வையை செலுத்துவதெல்லாம் கட்டுரையாளருக்கு அவசியமாகப் படவில்லை. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நோக்கம் சோசலிசமாக இருக்க வேண்டும் என்றும், கம்யூனிசத்தை விட சோசலிசம் சிறப்பாக இருக்கிறது என்ற முடிவுக்கு வருகிறார். கம்யூனிஸ்ட் என்பதை கைவிடச் சொல்லிவிட்டு, தமிழ்நாடு ‘பொதுவுடைமை’ இயக்கம் என்ற பெயரை பரிந்துறைக்கிறார். ‘பொதுவுடைமை’ என்பதன் பொருள் என்ன என்ற குழப்பத்தை வாசகர்களுக்கும் ஏற்படுத்தி, தானும் குழம்பிவிடுகிறார். அத்தனை சிரமம் ஏன் படுகிறார்? ஏனென்றால், அவர் உண்மைகளைத் தேடுவதற்காக எடுத்துக் கொண்டிருக்கும் அடிப்படைகள் ராமச்சந்திர குஹா மற்றும் மேற்குலக செய்தி ஏஜென்சிகளின் பிரச்சாரங்களும் ஆகும். நோக்கமே பிரச்சாரமாக ஆகிவிட்டால் உண்மை காணக்கிடைக்குமா?

தனிநபர்கள் சொத்து வைத்திருக்க கூடாதா?

கார்ல் மார்க்ஸ் தன்னுடைய காலத்திலேயே பதில் சொல்லிய பல குழப்பக் கேடுகளை கட்டுரையாளர் மீண்டும் முன்வைக்கிறார். தனி நபர்கள் சேர்க்கும் வசதிகளை ‘சொத்து’ என்று பார்ப்பது பொத்தாம்பொதுவான பார்வையாகும். தனி நபர்கள் எல்லோருமே தேவையான வசதிகளை சேர்க்க முடியாமைக்கு எது தடையாக இருக்கிறது என்பதுதான் மார்க்சிஸ்டுகள் மேற்கொள்ளும் ஆராய்ச்சி. எனவே ‘எல்லோரும், எல்லாமும் பெறவேண்டும்’ என்ற உன்னத லட்சியத்தை, ‘எல்லோரிடமிருந்தும் எல்லாவற்றையும் பிடுங்கவேண்டும்’ என்பதாக முன்வைக்கும் திரித்த வாதங்களுக்கும், மார்க்சியத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை இங்கே சொல்ல வேண்டியிருக்கிறது.

“உலகமயமாக்கல் காலகட்டத்துக்குப் பிந்தைய பொருளாதாரத்தை எப்படி அணுகுவது, மதத்தை எப்படி அணுகுவது, தேசியத்தை எப்படி அணுகுவது, அரசியத்தை எப்படி அணுகுவது இந்த நான்கு விஷயங்களிலுமே இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தினருக்குப் பெரிய தடுமாற்றம் இருக்கிறது” என்ற குற்றச்சாட்டை முன்வைக்கும்போது, கட்டுரையாளர் தன் தெளிவற்ற சிந்தனையையே அதில் வெளிப்படுத்துகிறார். உண்மை நிகழ்வுகளை காண மறுக்கிறார். இன்றைக்கு, உலகமயமாக்கலை விதந்தோதிய பொருளாதார அறிஞர்களே, பொருளாதார நெருக்கடியால் விழி பிதுங்கி நிற்கின்றனர். இருக்கிற கட்டமைப்புக்குள்ளேயே தீர்வு கிடைக்காது என்பது நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது. இந்த சூழலுக்கு, கம்யூனிசம் மட்டுமே மிகத் தெளிவான மாற்றை முன்வைக்கிறது.

பொருளாதாரம் – மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்ட திட்டமிடல் கொண்டதாக இருக்க வேண்டும் என்கிறது மார்க்சியம். மத வழிபாட்டு உரிமையை மார்க்சியம் எப்போதும் அங்கீகரித்து வந்துள்ளது. தேசியத்தை, உழைக்கும் பாட்டாளி மக்களின் பார்வையில் இருந்து அணுகுகிறது. குறிப்பிட்ட மொழி பேசும் மக்களை வெறும் சந்தையாக அணுகுகிற முதலாளித்துவக் கட்டமைப்பை கேள்விகேட்கிறது. அரசியல் குறித்த நவீன விஞ்ஞானக் கோட்பாடுகளை கொண்டிருப்பதும் மார்க்சியமே ஆகும். மேலும், இந்தக் கோட்பாடுகளெல்லாம் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் வளர்த்தெடுக்கப்படுகின்றன.

சர்வதேசியம் வேரற்ற ஒன்றா?

சர்வதேசியத்தை கைவிட வேண்டும் என்ற ஆலோசனையை கட்டுரையாளர் முன்வைக்கிறார். அதற்கு எதிராக தமிழின் ‘ஓருலகவாதம்’ என்பதை முன்வைக்கிறார். கார்ப்பரேட் பெரு முதலாளிகள் தங்கள் சுரண்டல் வலையை உலகம் முழுவதும் விரித்திருக்கிறார்கள். அரசுகள் பல்வேறு ஒப்பந்தங்களின் வழியே சந்தையை இணைத்து, ராணுவ, அரசியல் கூட்டணிகளை ஏற்படுத்தி செயல்படுகின்றன. இந்த அமைப்புமுறைக்கு எதிராகச் செயல்படும் பாட்டாளி வர்க்க இயக்கம் மட்டும் சுரண்டப்படும் உலக மக்களிடையே ஒரு கூட்டணியை ஏற்படுத்துவது விமர்சனத்திற்குரியது என்ற பார்வை எப்படிப்பட்டது?

மார்க்சியம் முன்வைக்கிற சர்வதேசியத்தை மறுக்கும் அதே சமயம் கட்டுரையாளருக்கு இரண்டு நாடுகள் ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன. பிரிட்டனும், டென்மார்க்கும் ஒப்பீட்டளவில் இடதுசாரி அரசுகளை விட மேம்பட்டவையாகத் தென்படுகின்றன.

பிரிட்டனின் பொருளாதார அமைப்பு முதலாளித்துவச் சுரண்டலை ஒழித்தது அல்ல. சமீப நாட்களில் மிகக் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுகொண்டிருக்கிறது. டென்மார்க்கின் மனித வளக் குறியீடுகள் சற்று மேம்பட்டதாகத் தெரியலாம், ஆனால் பிரச்சனை அந்த குறியீடுகள் மட்டுமே அல்ல. ஒரு நாட்டில் நிலவும் உற்பத்தி எந்த வர்க்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதுதான் மிக முக்கியமான பிரச்சனை. கம்யூனிஸ்டுகளிடம் முதலாளித்துவ நாடுகளை முன்னுதாரணம் காட்டுவதன் மூலம் கட்டுரையாளரின் கருத்து பழைய முதலாளித்துவச் சுரண்டல் முறையை விதந்தோதுவதில் முடிகிறது.

இந்தியத் தன்மை இல்லையா?

மார்க்சிஸ்ட் கட்சி இந்தியாவின் 3 மாநிலங்களில் ஆட்சிக்கு வந்திருக்கிறது. தனது மாற்றுக் கொள்கைகளை, இந்திய முதலாளித்துவக் கட்டமைப்புக்கு உட்பட்டு செயல்படுத்தியிருக்கிறது. அதே சமயம் எல்லாம் கடந்த காலத்தோடு முடிந்துபோனவை அல்ல. ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தை மையமாகக் கொண்ட விவசாயிகள் இயக்கம், மஹாராஷ்டிர விவசாயிகள் நெடும்பயணம், பீகாரில் செயல்படும் இடது முன்னணி, ஜம்மு காஷ்மீரின் குல்காம் சட்டமன்ற உறுப்பினர் தாரிகாமியின் போராட்டங்கள், தமிழகத்தின் தீண்டாமை ஒழிப்பு களப்போராட்டங்கள், ஆந்திரா-தெலங்கானாவில் பகுஜன் இடது அணி என்று பல்வேறு புதிய முயற்சிகளை இதே காலத்தில் கம்யூனிச இயக்கம் முன்னெடுத்திருக்கிறது. இதன் பொருள் மாநிலங்களின் ஒன்றியம் இந்தியா என்ற சரியான புரிதல் உள்ள கட்சியாக, மார்க்சிஸ்ட் கட்சி இருப்பதுதான். தனியொரு தலைவரை மட்டும் நம்பி இயங்குகிற இயக்கம் கம்யூனிஸ்ட் இயக்கம் அல்ல. இந்த இயக்கத்தின் ஒவ்வொரு தலைவரும் தன்னை கூட்டு முடிவுகளுக்குள் உட்படுத்திக் கொள்வதற்கு காரணம், ஜனநாயக செயல்பாட்டுக்கும், இந்தியாவின் பன்முக சூழலை பிரதிபலிப்பதற்கும் கம்யூனிஸ்ட் கட்சி கொடுத்துவரும் அழுத்தமே, அதன் கூட்டு செயல்பாட்டில் வெளிப்படுகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தனது ஆரம்பம் முதலே ‘இந்தியாவுக்கான கம்யூனிஸ்ட் கட்சியாக’ தன்னை அமைத்துக் கொள்வதிலேயே கவனம் செலுத்தி வந்திருக்கிறது. இந்திய விடுதலை என்பது முழுமையான சுதந்திரமாக இருக்க வேண்டும் என முன்மொழிந்த முதல் இயக்கம் கம்யூனிஸ்ட் இயக்கம் என்பது தொடங்கி, அந்தமான் சிறையில் அடக்குமுறைகளை எதிர்கொண்ட 80 சதவீதம் பேர் கம்யூனிஸ்டுகள் என்பது வரையில், தியாகம் மட்டுமல்ல, அந்த தியாகக் குருதியை நீராக்கி விளைந்ததே கம்யூனிஸ்ட் இயக்கம்.

இடது ஜனநாயக முன்னணி, இடது முன்னணி, குறைந்தபட்ச செயல்திட்டத்தின் யு.பி.ஏ அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு, போராட்ட அணிச் சேர்க்கை, மதச்சார்பின்மைக்கும், தீண்டாமை ஒழிப்புக்கும் அமைக்கும் மேடைகள், இந்தியாவின் பொதுத்துறைகளை காக்கவும், வங்கித்துறையை காக்கவும், சிறு குறுந்தொழில்களை விவசாயத்தை பாதுகாக்கவும் கம்யூனிஸ்ட்கள் ஏற்படுத்திவரும் அணிச் சேர்க்கைகள் பற்றி பேச மறுக்கும் கட்டுரையாளர். 2019 தேர்தலில் பாஜகவுடன் கைகோர்த்ததாக ‘மமதாவின் பிரச்சாரத்தை’ உண்மை போல் திரித்து அவதூறு செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்.

இந்தியாவின் ஒடுக்கப்படும் அனைத்து மக்களின் விடுதலைக்கு வழிகாட்டும் ஒரே இயக்கம் கம்யூனிஸ்ட் இயக்கமே ஆகும். தேர்தல் கண்ணாடியை மட்டும் அணிந்து நோக்கும்போது, கம்யூனிஸ்ட் இயக்கம் சரிவில் இருப்பதைப் போல தோன்றலாம். உண்மையில் மக்கள் போராட்டக் களத்தில் கம்யூனிஸ்ட் இயக்கமே முன்னணியில் உள்ளது. இன்றும் ஆறு கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் கொள்கை மாற்றை வலியுறுத்தி களம் கண்டிருக்கின்றனர். கார்ப்பரேட் பெரு முதலாளிகளின் லாப வெறி காரணமாக, இந்தியா அடுத்தடுத்த நெருக்கடிகளுக்குள் சிக்கித் தவிக்கிறது. மாற்றுக் கொள்கைகளை மார்க்சிய இயக்கமே முன்வைக்கிறது. ஆட்சியாளர்களின் வகுப்புவாத-தேசியவெறிக் கொள்கைகள் எதிர்காலத்தை அச்சுருத்திக் கொண்டிருக்கின்றன. ஒற்றை இந்தியா என்ற முழக்கம் கூட்டாட்சியை கேலிப்பொருளாக்கியிருக்கிறது. இந்த சூழலில், பரந்துபட்ட மக்கள் மேடையை ஏற்படுத்தி, சவால்களை எதிர்கொள்ளும் கடமையை உணர்ந்த இயக்கமாக கம்யூனிஸ்ட் இயக்கம் இருக்கிறது. அடுத்தடுத்த நூற்றாண்டுகளுக்கான செயல் திட்டத்தை வகுத்து, அதை தொய்வின்றி முன்னெடுக்கிறது.

காங்கிரஸ், பாஜக பாணியிலான அமைப்பை கம்யூனிஸ்டுகள் அமைக்கவில்லை. உழைக்கும் மக்களின் பன்முக தேசிய, கலாசார, மொழி தனித்தன்மைகளைக் கொண்டது இந்தியா. அவற்றை பாதுகாக்க ஆண்ட, ஆளுகிற கட்சிகள் எந்த முனைப்பும் காட்டவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே, அவற்றை பாதுகாத்து முன் செல்கிற தேவையை உணர்ந்துள்ளது. அதே நேரத்தில் மத்தியில் மையப்படுத்தப்பட்ட அரசும், குவிக்கப்பட்ட அதிகாரமும், கார்ப்பரேட் பெருநிறுவனங்களும் செலுத்துகிற ஆதிக்கத்தை வீழ்த்த வேண்டும். அதற்கேற்ற அனைத்திந்திய அளவிலான கட்சி அமைப்பையே கம்யூனிஸ்டுகள் ஏற்படுத்தி வளர்க்கிறோம்.

கம்யூனிசத்தின் நூற்றாண்டு, ‘கலக்கத்தோடு தொடங்குவதாக’ கட்டுரையாளர் நிறுவ முயல்கிறார். இன்று கலக்கத்தில் இருப்பது கம்யூனிஸ்டுகள் அல்ல, முதலாளித்துவமே மீள முடியாத தன் நெருக்கடியைக் கண்டு அஞ்சி நடுங்கிக் கொண்டுள்ளது. மனித குலத்தின் எதிர்காலத்தைக் காட்டுகின்ற ஒளிவிளக்காய் மார்க்சிய இயக்கம் ஜொலிக்கிறது.

தோழர் சங்கரய்யா, ‘இன்குலாப், ஜிந்தாபாத்’ என்ற முழக்கத்தை கர்ஜித்தபோது, அது ‘புரட்சி ஓங்குக’ என்ற சமரசமற்ற போர் முழக்கம் என்பதை உணர்ந்தே கம்யூனிஸ்டுகள் எதிரொலிக்கிறோம்.

இருவேறு மொழிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட அந்த முழக்கம் பாட்டாளி வர்க்கத்தின் போர் முழக்கமாக இந்தியாவெங்கும் எதிரொலிக்கும்.

One thought on “குழப்பக் குட்டையில் சிக்கிக் கொண்ட கம்யூனிச ‘விமர்சகர்’

  1. மீண்டும் மீண்டும் அடிப்படை கம்யூனிச கொள்கைகள் பற்றிய விளக்கமாகவே இருக்கிறது. நடைமுறை பற்றிய தெளிவான விளக்கங்கள் இல்லை.தேர்தல் அடிப்படையில் காட்சியைப் பார்ப்பது தவறு என்கிறார். மக்கள் கட்சிகளை தேர்தல் தொடர்பிலேயே பார்க்கிறார்கள்.ஆட்சியாளர்களின் தவறுகளை விமர்சனம் செய்வதில் கம்யூனிஸ்ட்களுக்கு தயக்கம் இருப்பது ஏன் ? மாற்றி மாற்றி கூட்டணி வைப்பதினால்தானே? தேர்தலில் பணம் வாக்குகளுக்கு கொடுப்பது பற்றிய விமர்சனங்கள் கம்யூனிஸ்ட்களால் வைக்கப்படுவதில்லையே? இது ஒரு உதாரணம்தான். தினம் ஒரு அயோக்கியத்தனம் அரங்கேறுகிறது. எங்கே எதிர் குரல்? எவ்வளவு குற்றச்சாட்டுகள் திமுகவின் மீது உள்ளன. அவர்களுடன் கூட்டணி வைத்தால் ?

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s