மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


சுரண்டலற்ற சமுகமே நூற்றாண்டு கானும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் லட்சியம்…


ச.லெனின்

கம்யூனிஸ்ட் இயக்கம் என்பது இன்னுமொரு அரசியல் கட்சியல்ல. அது ஒரு புரட்சிகர அமைப்பு. கம்யூனிஸ்டுகள் எந்த கருத்தையும் ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் தொழிலாளி வர்க்க நலனிலிருந்து மட்டுமே.

அக்கறையுடன் கூடிய ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை கம்யூனிஸ்டுகள் புறக்கணிப்பதில்லை. அதே சமயம் விமர்சிப்பவர்களின் அரசியல் பார்வையையும் அதன் அடிப்படையில் அவர்களின் எழுத்தில் உள்ள வர்க்க சார்பையும் நாம் தவிர்த்துவிட முடியாது.

(2019 அக்டோபர் 23) “இந்து தமிழ் திசை” யில் அவ்விதழின் நடுப்பக்க ஆசிரியர் திரு சமஸ் அவர்கள் “அடுத்த நூற்றாண்டின் பொதுவுடைமை இயக்கம்” என்கிற கட்டுரையை எழுதியுள்ளார். கட்டுரையின் மீதான விமர்சனங்கள் குறித்த விவாதத்திற்கு செல்வதற்கு முன்பு கட்டுரையாளரின் அரசியல் பார்வையை ஒரு சிறு உதாரணத்தின் மூலம் பார்த்துவிடுவோம்.

அவரின் பெயரை வைத்து விவாதிப்பது நமக்கு உவப்பான ஒன்றில்லை என்ற போதும், அவரின் அரசியல் பார்வையை தெளிவாக்க நமக்கு அது உதவும் என்கிற அடிப்படையில் மட்டும் அதை உதாரணமாகக் கொள்வோம்.

சர்வாதிகாரமும் ஜனநாயகமும்

தனது பெயரின் சுருக்கமான வடிவமே சமஸ் என குறிப்பிடும் அவர் இதற்கு கொடுத்துள்ள தன்னிலை விளக்கம் என்னவெனில் . “சமஸ் என்பது சந்திரசேகரன் மலர்க்கொடி ஸ்டாலின் என்பதன் சுருக்கம் என்பது சரி. ஆனால், ஸ்டாலின் என்ற பெயரை நான் மாற்றிக்கொண்டது நான் வலதுசாரி என்பதால் அல்ல. அடிப்படையில் ஜனநாயகவாதியான நான் ஒரு சர்வாதிகாரியின் பெயரைச் சுமந்திருக்கக் கூடாது என்பதே”. என்று ஒரு இடத்தில் குறிப்பிட்டுள்ளார். தன்னை காந்தியவாதி என்றும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.

கம்யூனிஸ்டுகள் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்களே. ஜனநாயகம் என்பது கொழுத்துப்போன முதலாளிகளுக்கானது அல்ல. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் மூலமே கம்யூனிஸ்டுகளால் ஏழை உழைக்கும் மக்களுக்கு முழுமையான ஜனநாயகம் கிடைக்க வழிவகை செய்யப்படும். கட்டுரையாளர் தன்னை பிரகடனப்படுத்தும் ‘ஜனநாயக வாதி’ எனும் ஜனநாயகம் என்பது உண்மையில் பெரும் பகுதி மக்களுக்கு எதிரான ஜனநாயகமே ஆகும்.

ஸ்டாலின் பேசிய பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் முதலாளிகளுக்கு எதிரான சர்வாதிகாரமாகவும் அதுவே பெரும்பகுதி மக்களான உழைக்கும் வர்க்கத்திற்கான ஜனநாயகமாகவும் அமைகிறது. சர்வாதிகாரம் உழைக்கும் மக்களை வஞ்சித்து முதலாளிகளை நோக்கி நீளும். அதன் மூலம் நாட்டின் பெரும் பகுதி மக்களுக்கு முழுமையான ஜனநாயகம் உறுதிபடுத்தப்படும்.

முதலாளித்துவ ஜனநாயகம் பேசும் அவரின் அரசியல் பார்வையும், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சாதாரன மக்களின் எழுச்சிமிகு போராட்டங்களுக்கு அணை போட்ட காந்தியத்தின் வழிமுறையுமே கட்டுரையாளரை ‘ஸ்டாலின் ஒரு சர்வாதிகாரி’ என்று சொல்லவைக்கிறது.
ஸ்டாலினும், ரஷ்யாவும் இல்லாமல் இருந்திருந்தால் ஒருவேளை உண்மையான சர்வாதிகாரம் என்பது என்னவென்று ஹிட்லர் மூலம் உலகிற்குத் தெரிந்திருக்கக் கூடும்.

ஹிட்லருக்கும் ஸ்டாலினுக்கும் வித்தியாசம் கிடையாதென்று பரப்புவதே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பார்வைதான். அது எப்படி உலகையே தனது சர்வாதிகாரத்தின் கீழ் கொண்டுவர முயன்ற ஹிட்லரும் இரண்டாம் உலகப்போரில் அவனை வீழ்த்திய ரஷ்ய செஞ்சேனையை வழிநடத்திய ஸ்டாலினும் ஒருசேர சர்வாதகாரியாகிறார்கள்? இது தான் கட்டுரையாளரின் அரசியல் பார்வை.

கட்டுரையாளரின் எழுத்து நடை முதலில் இயக்கத்தின் தலைவர்களையும் கட்சியின் சில நடவடிக்கைகளையும் உயர்த்தி பேசி வாசகர்களை உள்ளே இழுத்துவிட்டு பிறகு தனது குழப்பவாதத்தை முன்வைப்பதாக அமைகிறது. தோழர் சங்கரய்யா சரி எனில் அவரை அப்படி சரியான புடம் போட்ட கம்யூனிஸ்டாக வளர்த்தது நூற்றாண்டு கண்ட இந்த கம்யூனிஸ்ட் இயக்கமே. அதைத் தான் தோழர் சங்கரய்யாவும் இளம் தோழர்களுக்கு கடத்துகிறார். அவர்கள் எல்லாம் இணைந்து சிந்தித்து வளர்த்தெடுத்ததே கட்டுரையாளர் விமர்சிக்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அரசியல், ஸ்தாபன, தத்துவார்த்த வளர்ச்சி என்பதை கட்டுரையாளருக்கு தெரிவிக்க வேண்டியுள்ளது.

தோழர் சங்கரய்யாவை வானுயர புகழ்ந்து இயக்கத் தோழர்களை உள்ளே இழுத்துவிட்டு மிக தெளிவான நோக்கத்தோடு தான் காஷ்மீர் கொடுமைகளையும் சீனாவின் ஹாங்காங்கையும் ஒப்பிட்டு பேசுவதை நாம் பார்க்க வேண்டியுள்ளது. அதுவே கட்டுரையாளரின் நோக்கம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஹாங்காங்கும் காஷ்மீரும் ஒன்றா?

ஒரு சட்ட முன்வடிவை ஹாங்காங் மக்கள் ஏற்கவில்லை, அதை எதிர்த்து போராடுகின்றனர். எனவே அந்த முன்வடிவு நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது முழுமையாக அது திருமப்பெற பட்டுவிட்டது. காஷ்மீரில் என்ன நிலைமை? மாற்றுக் கருத்திற்கே இடமில்லை, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் வீட்டு சிறையில், போராடும் மக்கள் சிறைக்கொட்டடியில்.

1957ல் சின்னஞ்சிறு மாநிலமான கேரளாவில் ஒரு கம்யூனிஸ்ட் அரசு உருவானதைக் கூட அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதை வீழ்த்த ஏகாதிபத்தியம் செய்த சதிகளை, அமெரிக்க உளவு பிரிவான CIA வெளிட்ட தனது பழைய ஆவணங்கள் வாயிலாக வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. சின்னஞ்சிறு மாநிலத்திற்கே அவ்வளவு தலையீடுயென்றால் எல்லவற்றையும் மீறி அமெரிக்க வர்த்தகத்திற்கே சிம்ம சொப்பனமாக நிற்கும் சீனாவை தாக்க ஏகாதிபத்தியம் ஹாங்காங் போராட்டங்களைத் தூண்டிவிடாதா என்ன?

ஆனால் கட்டுரையாளர் இதை எப்படி ஒப்பிடுகிறார் “காஷ்மீரில் அங்குள்ள மக்களின் சுயாட்சி போராட்டத்தை ஒடுக்கும் மோடி அரசைப் பொதுவுடைமை இயக்கம் கடுமையாக விமர்சிக்கிறது; ஜின்பிங் (சீன அதிபர்) அரசு எந்த வகையில் மோடி அரசிடமிருந்து அடக்குமுறையில் மேம்பட்டது? எப்படி ஜின்பிங் தோழர் ஆகிறார்?” இதில் தான் கட்டுரையாளரின் உள்நோக்கம் மிகத்‌தெளிவாக வெளிப்படுகிறது. மோடியையும், ஜின்பிங்கையும் ஒப்பிடுவது ஹிட்லரையும், ஸ்டாலினையும் ஒப்பிடுவதற்கு சமம் ஆகாதா?. அதுதான் கட்டுரையாளரின் நோக்கமும், அரசியல் பார்வையுமாகும்.

கட்டுரையாளரே நடுப்பக்க ஆசிரியராக உள்ள பத்திரிக்கையில், அதே நடுபக்கத்தில் சீனா குறித்து பல்லவி ஐயர் என்பவர் எழுதியிருந்த கட்டுரைகளை வாசித்தால் சீனாவும் இந்தியாவும் ஒன்றல்ல என்பது புரியும். இப்போது ஹாங்காங் பிரச்சினை போல்தான் திபெத் பிரச்சினையை பலர் எழுதி குவித்தனர். திபெத்தின் உண்மை நிலவரத்தை மூத்த பத்திரிக்கையாளர் “இந்து” ராம் அவர்களின் எழுத்துக்கள் வழியே வாசித்தால் ஹாங்காங்கும் காஷ்மீரும் ஒன்றல்ல என்பதை விளக்கும்.

உலக நாடுகளுக்கே சீனா வறுமை ஒழிப்பில் வழிகாட்டுகிறது என்கிறது ஐக்கிய நாடுகள் சபை. அந்நிய செலாவணி கையிருப்பில் முதல் இடத்தில் உள்ளது சீனா. “சீனாவுக்கான சோஷலிச சந்தை பொருளாதாரத்தை” அவர்கள் முன்வைத்து மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கிறது. ஆனபோதும் சீனா தன்னை சோஷலிச நாடு என்று கூறவில்லை. சோசலிசத்தின் துவக்க நிலையில் இருப்பதாகவே கூறுகிறது.

எல்லா நேரங்களிலும் சீனாவின் நிலையை கண்மூடித்தனமாக கம்யூனிஸ்டுகள் ஆதரித்ததில்லை. இ.எம்.எஸ். எழுதிய வரலாற்றை எல்லாம் கட்டுரையாளர் தனது கட்டுரையில் சுட்டுகிறார்.

இந்திய புரட்சிக்கான பாதை ரஷ்ய பாதையா? சீன பாதையா? என்கிற விவாதங்களை எல்லாம் கடந்து இந்திய நிலைமைகளுக்கு ஏற்ற இந்திய புரட்சிக்கான பாதையை தீர்மானித்தனர் என்பதையும், கட்டுரையாளர் கட்டுரையில் எழுப்பும் பல்வேறு விவாதங்களுக்கான இந்திய கம்யூனிஸ்டுகளின் பார்வையும் இ.எம்.எஸ் யுடைய எழுத்துக்கள் எடுத்துரைக்கின்றன.

முழுமையான அறுவை சிகிச்சை

கம்யூனிஸ்டுகள் எப்போதும், சமூகத்தில் ஏற்படுகிற புறவயமான மாற்றங்களுக்கும், அகவயமான மாற்றங்களுக்கும் ஏற்ப பல்வேறு மாற்றங்களை செய்து கொண்டுத்தான் உள்ளனர். கம்யூனிச சமூகத்தை அடைவதற்கான பயணத்திற்கு தேவையான அறுவை சிகிச்சையை செய்ய கம்யூனிஸ்ட் இயக்கம் தயாராகவே உள்ளது. ஆனால் கட்டுரையாளர் மேற்கொள்ள சொல்லும் முழுமையான அறுவை சிகிச்சையோ கம்யூனிசம் எனும் இலக்கையே கைவிடச் சொல்லுவதாக உள்ளது. அறுவை சிகிச்சை வெற்றி ஆனால் நோயாளி இறந்துவிட்டார் என்பது போன்று தான் கட்டுரையாளரின் ஆலோசனை உள்ளது.

“இன்றைய இடிபாடுகளிலிருந்து பொதுவுடைமை இயக்கம் எப்படி மீண்டெழுவது? அது, சமகாலத் தேவைக்கேற்ப சித்தாந்த ரீதியாக ஒரு முழு அறுவை சிகிச்சைக்குத் தன்னை உட்படுத்திக்கொள்வதேயாகும்.”
என்கிறார் கட்டுரையாளர். முதலில் இடிபாடுகளில் பொதுவுடமை இயக்கம் உள்ளது என்கிற விவரிப்பிலேயே தேர்தல் வெற்றி தோல்வியை மட்டும் வைத்து கம்யூனிஸ்ட் இயக்கத்தை மதிப்பிடும் போக்கு வெளிப்படுகிறது. கம்யூனிஸ்ட் இயக்கம் மக்கள் இயக்கத்தினால்தான் உயிர்ப்போடு இருக்கிறது. களத்தில் கம்யூனிஸ்டுகள் போராட்டம் நடத்தாத ஒரு நாளும் இல்லை. மக்களுக்கு எதிரான ஒவ்வொரு செயலுக்கு எதிராகவும் களத்தில் இன்றும் கம்யூனிஸ்டுகளே உள்ளனர். ஆனால் கட்டுரையாளரோ வெறும் தேர்தல் வெற்றி தோல்வியை மட்டுமே வைத்துக்கொண்டு இயக்கம் இடிபாடுகளுக்குள் உள்ளது என்கிறார்.

பரிசீலனை செய்து தேவையான மாற்றங்களை மேற்கொள்வதில் கம்யூனிஸ்டுகளுக்கு தயக்கமில்லை. ஆனால் கட்டுரையாளர் சொல்லும் அறுவைசிகிச்சையும், செய்யச்சொல்லும் முறையும் , அதற்கு அவர் முன்வைக்கும் மருத்துவ உபகரணங்களும் தான் அந்தப் பரிந்துரைகளை கேள்வி எழுப்ப வைக்கிறது.

ராமச்சந்திர குஹா இந்திய சோஷலிஸ்ட் கட்சி என்று பெயர் வைக்க சொல்கிறார் என்பதை சொன்னாலும் அது தமது ஆலோசனை இல்லை என்று கூறிவிட்டு ‘தமிழ்நாடு பொதுவுடைமை இயக்கம்’ என்று பெயர் மாற்றச் சொல்லி கட்டுரையாளர் ஆலோசனை வழங்குகிறார்.

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றை கட்டுரையாளர் கவனித்தால் ஒரு முக்கியமான சம்பவம் காணக்கிடைக்கும். ரஷ்யா வீழ்ச்சியடைந்தபோது பல நாட்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் கட்சியின் பெயரை சமூக ஜனநாயக கட்சி என மாற்றிக்கொண்டனர். ஆனால் இந்தியாவில், செங்கொடியை கம்பீரமாக கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரிலேயே தொடர்ந்தது என்பது தான் வரலாறு.

கட்டுரையாளர் தன் பெயர் மாற்ற ஆலோசனைக்காக மாமேதை லெனினை சுட்டிகாட்டுகிறார். துவக்கத்தில் ஜாரின் ஆட்சியின் போது கட்சியை நடத்துவதற்கே முதலில் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி சமூக ஜனநாயக கட்சி என்று செயல்பட்டது. அங்கு அப்போது முதலாளித்துவ ஜனநாயக அரசு முறை கூட இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் புரட்சியின் காலத்தில் போல்ஷிவிக், கம்யூனிஸ்ட் என்ற அடையாளத்தோடே அது முன்னேறியது. அதே போல் முசோலினியின் ஆட்சியின் போது இத்தாலியில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தோழர் கிராம்ஷி தனது சிறைகுறிப்பில் மார்க்சியத்தை “செயல்பாட்டின் தத்துவம்” என்றே குறிப்பிடுகிறார். அன்று மார்க்சியம் என்று குறிப்பிட முடியாது. ஆனால் இன்று கம்யூனிசம் என்பதையோ, மார்க்சியம் என்பதையோ மறைந்து மறைந்து பேச வேண்டிய சூழல் இல்லை.

தமிழ்நாடு பொதுவுடைமை இயக்கமா?

தமிழ்நாடு பொதுவுடைமை இயக்கம் என்று பெயர் மாற்றச் சொல்லுகிறார் கட்டுரையாளர். என்ன கட்சி சின்னத்தை வைத்துக் கொள்வது? மாநிலத்திற்கு ஒரு கட்சி பெயரெனில் மாநிலத்திற்கு ஒரு சின்னம் தானே? மாநிலத்திற்கு ஒரு பெயர், மாநிலத்திற்கு ஒரு கட்சி சின்னத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது? பெயர் மாற்றத்தால் ஆகப்போவது என்ன?

தேர்தல் நோக்கை விடுங்கள். சர்வதேச பார்வையற்ற, தேசிய கண்ணோட்டம் இல்லாத ஒரு இயக்கம் எப்படி கம்யூனிஸ்ட் இயக்கமாக இருக்க முடியும். அதைவிட முக்கியமாக முதலாளித்துவத்தின் சுரண்டலை எதிர்த்த நாடுதழுவி வர்க்க ஒற்றுமையை உருவாக்காமல் இந்தியாவில் தொழிலாளி வர்க்க புரட்சியை எப்படி சாத்தியப்படுத்துவது? இது தான் கட்டுரையாளர் சொல்லும் புரட்சிக்கான அறுவை சிகிச்சையா? சரி, கட்டுரையாளர் குறிப்பிடும் தோழர் சங்கரய்யாவின் எந்த பேச்சாவது சர்வதேச பார்வை இல்லாமல் இருந்திருக்கிறதா?

இந்தியத் தன்மை

“இந்திய பொதுவுடமை இயக்கத்தினருக்கு பெரிய தடுமாற்றம் இருக்கிறது” என்று குறிப்பிடும் கட்டுரையாளர், உண்மையில் அவர்தான் கட்டுரையின் பாதிக்குமேல் குழப்பமும் தடுமாற்றமுமாய் எழுதியுள்ளார்.

தேசிய இனங்கள், மாநில உரிமை என்பது பற்றியெல்லாம் விவாதித்து உலக நிலைமைகளை கணக்கில் கொண்டு தான் கம்யூனிஸ்டுகள் முடிவெடுத்துள்ளனர். உலக தொழிலாளரே ஒன்று சேருங்கள் என்கிற முழக்கத்தை கொண்ட கம்யூனிஸ்டுகளிடம் தமிழ்நாடு பொதுவுடைமை இயக்கம் என்று பெயர் வைக்கக் கூறுவது தொழிலாளி வர்க்கத்தின் விரிந்து பரந்த அரசியல் பார்வையை தவிர்த்து குறுகிய பார்வைக்குள் அவர்களை சுறுக்கிவிடுவதாகாதா? உலக மூலதன சரண்டலை எதிர்கும் தொழிலாளி வர்க்க பார்வையை சிதைக்காதா? இது தான் கட்டுரையாளரின் அரசியல் புரிதல்.

ஒரு இடத்தில் “இணையுங்கள் இந்தியத் தன்மை பெறுங்கள்” என்று பேசுகிறது அவரின் கட்டுரை. இப்போது இந்தியத் தன்மை வேண்டுமா? தமிழ்நாட்டு தன்மை வேண்டுமா? என்று அவரது கட்டுரையே குழப்பமாகிவிடுகிறது.

இடதுசாரிகள் ஒன்று சேருங்கள் என்கிறது கட்டுரை. ஒன்றாகதான் இணைத்து தேர்தலை சந்திக்கின்றனர். கூட்டு இயக்கம் நடத்துகின்றனர். தலைவர்கள் கைகுலுக்குவதால் கட்சி ஒன்றிணையாது, கூட்டு இயக்கங்கள் மூலம் ஊழியர்கள் ஒன்றிணையும் வேளையில்தான் அது சாத்தியப்படும். இணைப்பதனால் பலமாகிவிடும் என்பது அபத்தம். இணைந்துதானே போராடுகிறோம், தேர்தலையும் சந்திக்கிறோம்?

“இணைப்புக்கு எதிரான மயிர்ப்பிளப்பு வாதங்களைக் கடந்த கால வரலாற்றிலிருந்து மீண்டும் இடதுசாரிகள் தோண்டியெடுக்க வேண்டியதில்லை.” என்று கட்டுரையாளர் குறிப்பிடுகிறார். மயிர் பிளக்கும் விவாதங்கள் தனி நபர் சண்டைக்காக நடக்கவில்லை. அது கொள்கை ரீதியான பிரச்சினையோடு சம்மந்தப்பட்டது. ஸ்டாலினை சர்வாதிகாரி எனும் பார்வை கொண்ட கட்டுரையாளர் வர்க்கம், வர்க்க போராட்டம் என்பதையெல்லாம் எப்படி அணுகுவார் என்பது சந்தேகமே.

யார் வர்க்க எதிரி என்று தீர்மானிக்காமல், யார் நேச சக்தி என்று முடிவு செய்யாமல் போராட்டத்தை முன்னெடுக்க முடியாது. கட்டுரையாளர் மனதில் வைத்து பேசுவதுபோல் இது வெறும் அரசியல் வெற்றி தோல்விக்கான போராட்டமல்ல, வர்க்க சேர்கையோடு சேர்ந்த வர்க்கப் போராட்டத்தோடு சம்மந்தப்பட்டது. அந்த அடிப்படை புரிதலிலிருந்துதான் இணைப்பின் கருத்து ரீதியான விவாதங்கள் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் நடத்தப்படுகிறது. இது மயிர் பிளப்பு விவாதம் எனில் கட்டுரையாளரின் கருத்தும் அப்படியானது தானே?

“அடுத்தடுத்த நூற்றாண்டுகளுக்கு இயக்கம் நீடிக்குமா?” என்று ஒரு உபதலைப்பு கொடுக்கிறார் கட்டுரையாளர். இந்திய விடுதலையின் இளம் புரட்சியாளர் தோழர் பகத்சிங் சொன்னது போல் “இந்த போராட்டம் மனிதனை மனிதன் சுரண்டும் முறைக்கு முடிவு கட்டும் வரை தொடரும்”. என்றார்

பகத்சிங்கின் வார்த்தைகளின் வழியே, இந்திய சமூகத்தில் தொழிலாளி வர்க்க புரட்சியை நிகழ்த்தும் வரை, சமூகத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் வரை தொழிலாளி வர்க்கமும் அதன் முன்னணி படையான கம்யூனிஸ்ட் இயக்கமும் ஓய்ந்து போகாது.



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: