வெங்கடேஷ் ஆத்ரேயா
2019-ம் ஆண்டு நோபல் பரிசு பொருளியல் துறையில் மூன்று அமெரிக்க பொருளாதார நிபுணர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அபிஜித் பானெர்ஜீ, எஸ்தர் டுஃப்ஃப்ளோ, மற்றும் மைக்கேல் க்ரேமெர் ஆகிய மூவர் ஆகும். இவர்களில் அபிஜித் பானெர்ஜீ இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர். இவர் கொல்கத்தா நகரில் உள்ள மாநிலக் கல்லூரியில் தனது இளங்கலை பட்டத்தையும், தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டத்தையும் பெற்று பின்னர் அமெரிக்காவில் முனைவர் பட்டம் பெற்றவர். (இது சங்க பரிவாரத்திற்கு எரிச்சலூட்டும் விவரம்) அதன்பின் அமெரிக்காவிலேயே வாழ்ந்து வருபவர். எஸ்தர் அவர்கள் இவருடன் இணைந்து ஆராய்ச்சி செய்பவர். இவர்கள் ஆராய்ச்சி பணியில் மட்டுமின்றி சொந்த வாழ்க்கையிலும் இணையர்கள். இருவரும் அமெரிக்காவின் புகழ்மிக்க எம்ஐடி பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். மைக்கேல் க்ரேமெர் ஹார்வார்ட் பல்கலைக்கழக பேராசிரியர். இந்த வல்லுனர்களுக்கு பொருளியல் துறையில் நோபல்பரிசு வழங்கப்பட்டது குறித்து பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தற்சமயம் நோபல் ஆரவாரம் சற்றே ஓய்ந்துள்ளது. அமைதியாக இந்த விஷயம் பற்றி நாம் பேசுவதற்கு இது பொருத்தமான நேரம்.
பொருளியலுக்கான நோபல்பரிசு
நோபல்பரிசுகள் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர் மற்றும் ஆயுத உற்பத்தியாளர் அல்ஃப்ரெட் நோபல் அவர்கள் தனது உயிலில் நிறுவிய பரிசுகளாகும். வேதியல், இயற்பியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய ஐந்து துறைகளுக்கும் பரிசு அளிக்கப்பட வேண்டும் என அவரது உயிலில் உள்ளது. 1895 ஆம் ஆண்டு இப்பரிசுகள் நிறுவப்பட்ட போதிலும் 1901 ஆம் ஆண்டில் இருந்துதான் இந்த ஐந்து துறைகளுக்கான பரிசுகள் வழங்கப்படுகின்றன. நோபல் அவர்களின் உயிலில் பொருளியல் துறை கிடையாது.
பொருளியலுக்கான நோபல் நினைவு பரிசு முதன்முறையாக 1969 ஆம் ஆண்டில்தான் வழங்கப்பட்டது. இந்தப் பரிசை நிறுவியது ஸ்வீடன் நாட்டின் மையவங்கி. ஸ்வீடன் நாட்டில் சமூக ஜனநாயக கட்சி நீண்ட காலம் ஆட்சியில் இருந்து நலத்திட்டங்கள், சமூக பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்ற அம்சங்களை ஓரளவிற்கு அமல்படுத்தி வந்த போதிலும் அந்நாட்டின் மைய வங்கி முழுக்க முழுக்க முதலாளித்துவ பொருளாதாரத்தை தூக்கிப்பிடிக்கும் அமைப்பு என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். அந்நிறுவனம் பெரும் பணம் ஒதுக்கீடு செய்து பொருளியலுக்கான “நோபெல்” பரிசை நிறுவியதன் நோக்கத்தில் முக்கியமான ஒன்று முதலாளித்துவ அமைப்பையும் படிப்படியாக நவீன தாராளமய கொள்கைகளையும் தூக்கி பிடிப்பது என்பதாகும். நோபெல் பரிசு தான் நிபுணத்துவத்தின் அடையாளம், அறிவியல் அணுகுமுறையின் தரச்சான்று என்ற பிம்பத்தை பயன்படுத்தி, பொருளியல் துறையில் நிலவும் ஆளும் வர்க்க நலன்களை பாதுகாக்கும் அணுகுமுறை சார்ந்த நிபுணர்களுக்கே பெரும்பாலும் இப்பரிசு வழங்கப்பட்டு வந்துள்ளது. 1969 இல் துவங்கி இந்த ஆண்டு முடிய 51 பொருளியல் நோபெல் பரிசுகள் 84 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இன்று உலகளவில் புகழ்பெற்றதாக கருதப்படும் மேலைநாட்டு உயர்கல்வி நிறுவனங்களில் பொருளாதாரம் கற்றுத் தரப்படும் அணுகுமுறையை “புதிய செவ்வியல் பொருளியல்” (Neo-Classical Economics) என்று அழைப்பதுண்டு. இதன் சமகால வடிவம் புதிய தாராளமயம். இந்த அணுகுமுறையுடன் உடன்படுகின்ற அறிஞர்களுக்கே பெரும்பாலும் இப்பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. விதிவிலக்காக, 1974 இல் குன்னார் மிர்தால் என்ற ஸ்வீடன் நாட்டு சமூக ஜனநாயக அணுகுமுறை கொண்ட அறிஞருக்கும் 1998 இல் அமார்த்யா சென் அவர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
அண்மை ஆண்டுகளில், உலக முதலாளித்துவத்தின் தொடரும் நெருக்கடியின் காரணமாக பொருளாதார அறிவு புலத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ள நவீன செவ்வியல் மற்றும் நவீன தாராளமய அணுகுமுறைகளின் நம்பகத்தன்மை பெரிதும் மக்கள் மத்தியில் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. மேலை நாடுகளின் ஆதிக்கத்தில் நிகழ்ந்து வரும் உலகமயத்திற்கு பரவலான எதிர்ப்பு எழுந்துள்ளது. இத்தகைய புறச்சூழலை கருத்தில் கொண்டு பொருளாதார “நோபெல்” பரிசை யாருக்கு வழங்குவது என்று முடிவு செய்யும் குழுக்களும் வறுமை போன்ற பிரச்சினைகள் பற்றி பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் ஒரு வெளிப்பாடாக 2015 ஆம் ஆண்டு இப்பரிசு ஆங்கஸ் டீடன் என்ற வறுமை பற்றி ஆராய்ச்சி செய்த அறிஞருக்கு வழங்கப்பட்டதை பார்க்கலாம்.
நாம் மேலே கூறியுள்ளதன் மையப்பொருள் பொருளியலுக்கான நோபெல் பரிசு இவ்வறிவுப் புலத்தில் திறமை என்பதை வைத்து மட்டும் கொடுக்கப்படுவதல்ல என்பதுதான். பொருளியல் புலம் சார்ந்த அறிவுத்திறமை என்பதற்கான அலகுகளும் வர்க்க நலங்களுக்கு அப்பாற்பட்டதல்ல. இப்பின்னணியில், அபிஜித் பானெர்ஜி மற்றும் இருவருக்கு தரப்பட்டுள்ள நோபெல் பரிசு பற்றிய பிரச்சினைக்குள் செல்லலாம்.
2019க்கான பொருளியல் “நோபெல்” பரிசு பற்றி
பொதுவாக, கடந்த 51 ஆண்டுகளில் அளிக்கப்பட்ட பொருளியலுக்கான “நோபெல்” பரிசுகள், கணிதவியல் மற்றும் புள்ளியியல் துறை சார்ந்த அறிவையும் தொழில்நுட்பங்களையும் அதிகம் பயன்படுத்தி மாடல்களை உருவாக்கும் நிபுணர்களுக்கும் முழுமையாக தியரி (theory) சார்ந்த ஆய்வாளர்களுக்கும் தான் பெரும்பாலும் சென்றுள்ளன. இவ்விருதை யாருக்கு அல்லது எத்தகைய ஆய்வுகளுக்கு வழங்குவது என்பதில் அரசியல் தத்துவ சார்பும் பங்களிக்கிறது என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டோம். இந்த ஆண்டு விருது பெற்றுள்ள மூன்று நிபுணர்களுமே இந்த விஷயத்தில் சற்று வேறுபட்டவர்கள். இவர்கள் பொருளாதார கொள்கைகளை மதிப்பீடு செய்வதற்கும் அவை தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் களப்பரிசோதனைகள் மேற்கொள்வதுதான் மிகச்சிறந்த அணுகுமுறை என்று கருதுபவர்கள். இவர்களும் இவர்களுடன் பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஆய்வாளர்களும் ஏராளமான களப்பரிசோதனைகளை மேற்கொண்டுவருகின்றனர். இவர்கள் பயன்படுத்தும் அணுகுமுறைக்கு RCT (Randomized Controlled Trials) என்று பெயர்.
“சமவாய்ப்பு அடிப்படையில் நடத்தப்படும் கட்டுப்பாட்டுக்குள்ளான பரிசோதனைகள்” என்று RCTக்களை நாம் புரிந்துகொள்ளலாம். RCT மருத்துவத்துறையில் நீண்ட காலமாக பயன்படுத்தப்படும் அணுகுமுறை. ஒரு நோய்க்கு ஒரு மருந்து பரிந்துரை செய்யப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம்.அது உண்மையிலேயே பயன் தருமா என்ற கேள்விக்கு விடை காண மக்கள் வாழும் ஒரு பகுதியில் சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்ட இரு குழுக்களை அமைக்கலாம். இக்குழுக்களிடையே மிகக் குறைவான வேறுபாடுகளே இருக்க வேண்டும். இவற்றில் ஒரு குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள மருந்தை கொடுத்தும் இரண்டாம் குழுவிற்கு கொடுக்காமலும் ஒரு குறிப்பிட்ட காலம் பரிசோதனை செய்து, அதன் இறுதியில் மருந்து எடுத்துக்கொண்ட குழுவினரின் மத்தியில் இரண்டாம் குழுவுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது நோயில் இருந்து அதிகமானோர் குணம் அடைந்துள்ளனரா என்பதை அறியலாம். இதன் அடிப்படையில் குறிப்பிட்ட நோயை குணப்படுத்துவதில் கொடுக்கப்பட்ட மருந்து எந்த அளவிற்குப் பயன் அளிக்க வல்லது என்ற முடிவுக்கு வரலாம். இந்த பரிசோதனையில் இரு குழுக்களும் மருந்து உட்கொள்ளுவதில் மட்டுமே வேறுபடுகிறார்கள் என்ற நிபந்தனை மிக முக்கியமானது. இதே பரிசோதனை முறைகளை அரசு ஒரு இடத்தில் ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் அமலாக்கும் கொள்கை பயன் அளிக்கிறதா அல்லது அக்கொள்கையை குறிப்பிட்ட விதத்தில் திருத்தினால் பயன் அதிகமாக இருக்குமா என்று ஆராய பயன்படுத்த இயலும் என்பது RCT அணுகுமுறையை பின்பற்றுவோர் முன்வைக்கும் வாதம்.
எடுத்துக்காட்டாக, பள்ளி கல்வியில் மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்த பரிந்துரைக்கப்படும் கொள்கைகளை மதிப்பீடு செய்ய RCT பயன்படும் என்று இவர்கள் வாதிடுகிறார்கள். இதே அணுகுமுறை, வறுமை ஒழிப்பு திட்டங்களை சரியான முறையில் வடிவமைக்க உதவும் என்றும் RCT அணுகுமுறையாளர்கள் வாதிடுகின்றனர். இந்த ஆண்டு நோபெல் பரிசு பெற்ற மூவரும் RCT அணுகுமுறை மூலம் வறுமை குறைப்பு/ஒழிப்பு பணிகளில் பெரும் முன்னேற்றம் காண வழி செய்துள்ளதாக நோபெல் கமிட்டி கூறுகிறது. இக்கூற்று ஏற்கத்தக்கதா? நிச்சயமாக இல்லை. இது மிகவும் மிகையான மதிப்பீடு. RCT அணுகுமுறை வறுமையின் அடிப்படை காரனங்களுக்குள் செல்வதில்லை. ஏன், எப்படி என்ற கேள்விகளை அது கேட்பதில்லை. சமூக பொருளாதார களங்களில், மற்ற எல்லா வகையிலும் ஒப்பிடப்படும் இரு குழுக்கள் ஒரே மாதிரியானவை என்பதை பெரும்பாலும் உறுதிப்படுத்தவே முடியாது..
வறுமைக்கான காரணங்கள் உற்பத்திக் கருவிகளின் உடைமையில் உள்ள மாபெரும் ஏற்றத்தாழ்வுகள், வேலை வாய்ப்பு, கூலி, அரசுகளின் ஒட்டுமொத்த பொருளாதார சமூக கொள்கைகள் என்று பலவற்றாலும் நிர்ணயிக்கப்படுகின்றன. இவற்றை எல்லாம் புறந்தள்ளிவிட்டு ஒரு பெரும் சமூக பிரச்சினையை ஒரு குறிப்பிட்ட இடத்தில் வறுமை எதிர்ப்பு நடவடிக்கையின் தன்மையில் சிறு மாற்றம் கொணர்ந்து தீர்க்க முயலும் அணுகுமுறை எந்த வகையிலும் பயன் அளிக்காது. தேவையான, ஆளும் வர்க்கங்களுக்கு எதிரான, பொருளாதார சமூக உறவுகளை மக்களுக்கு ஆதரவாக மாற்றி அமைப்பதற்குப் பதில், எந்த ஒட்டுமொத்த கொள்கை சட்டகங்கள் வறுமையை மீண்டும் மீண்டும் மறு உற்பத்தி செய்கின்றனவோ, அதற்குள்ளேயே நின்று கொண்டு விளிம்பு நிலையில் சிறு மாற்றங்களை கொண்டு வருவதற்கு முயற்சிப்பவைதான் RCT அணுகுமுறைகள். ஆகவே நோபெல் குழுவின் வாதம் ஏற்கத்தக்கதல்ல.
RCTயில் இன்னும் பல பிரச்சினைகள் உண்டு. மருத்துவத் துறையில் சாத்தியமாகும் அளவிற்கு கட்டுப்பாடுகளை கறாராக அமலாக்கி RCTயை மேற்கொள்வதில் பெரும் சிரமங்கள் சமூக பொருளாதார களத்தில் உண்டு. ஒரு இடத்தில் RCT செய்யப்பட்ட பின்பும் திட்டவட்டமான முடிவுகளுக்கு வர இயலாது என்ற வகையில் பரிசோதனையின் முடிவுகள் அமையலாம். அப்படியே ஒரு தளத்தில் திட்டவட்டமான முடிவுகள் கிடைத்தாலும் அதனை பொதுமைப்படுத்துவது, பிறதளங்களிலும் இதே முடிவுகள் பொருந்தும் என்று கூற எந்த முகாந்திரமும் RCT அணுகுமுறையில் கிடையாது.
RCT அணுகுமுறைக்கு ஏன் இந்த மவுசு?
இந்த ஆண்டு நோபெல் பரிசு RCT அணுகுமுறைக்கு அரசு கொள்கைகளை நிர்ணயிப்பவர்கள் மத்தியில் அதிக செல்வாக்கை தரும். இது தற்செயலானதல்ல. RCT அணுகுமுறையை பயன்படுத்தி, பல்வேறு நாடுகளின் அரசுகள் முன்வைக்கும் வறுமை ஒழிப்பு, கல்வி, ஆரோக்கியம் போன்ற துறைகள் சார்ந்த திட்டங்களுக்கு உதவுவது தொடர்பான பரிந்துரைகளை RCT மூலம்தான் பெற வேண்டும் என்ற குரல்கள் உரக்க ஒலிக்கும். தாராளமய காலகட்டத்தில் எப்படியாவது அரசின் செலவுகள் குறைக்கப்பட வேண்டும், நலத் திட்டங்கள் வெட்டப்படவேண்டும் என்று கடுமையாக வாதிட்டுவரும் உலக வங்கி, ஐ எம் எஃப் போன்ற அமைப்புகளுக்கும் RCT ஒரு ஆயுதமாக பயன்படும். இத்தகைய அமைப்புகளுக்கும் வளரும் நாடுகளின் வறுமை குறைப்பு மற்றும் வளர்ச்சி பணிகளுக்கு உதவி வழங்குவதாக தம்பட்டம் அடித்துவரும் பணக்கார நாடுகளுக்கும் பன்னாட்டு-இந்நாட்டு பெரும் கம்பெனிகளுக்கும் தங்கள் அளிக்கும் தொகைகளை குறைக்க RCT ஒரு கருவியாக அமையும்.
திசை திருப்பும் பா ஜ க விமர்சனங்கள்
அபிஜித் பானெர்ஜீ அவர்களுக்கு நோபெல் பரிசு வழங்கப்பட்டதை இந்தியாவில் பலரும் வரவேற்றனர். பரிசு பெற்ற அறிஞர்களின் படைப்புகளின் வறுமை குறைப்பு பங்களிப்பு குறித்த மிகையான மதிப்பீட்டை நோபெல் விருதுக் குழு முன்வைத்துள்ளதை நாம் ஏற்க வேண்டியதில்லை. ஆனால் பா ஜ க ஆர்வலர்கள் பலர் அபிஜித் பானெர்ஜீக்கு எதிராக முன்வைத்த தரக்குறைவான விமர்சனங்களை யாரும் ஏற்க மாட்டார்கள். காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் தனது தேர்தல் அறிக்கையில் முன்வைத்த “NYAY” என்ற வறுமை குறைப்பு நடவடிக்கை தொடர்பாக அபிஜித் பானெர்ஜீ ஆலோசனைகள் வழங்கினார் என்பதே சங்க பரிவாரத்தினர் பலருக்கு ஆத்திரமூட்டும் செய்தியாக அமைந்தது. ஒரு சில அமைச்சர்களும் தரக்குறைவான பேச்சுக்களில் ஈடுபட்டனர்.
சமூக ஊடகங்களில் இதற்கு எதிர்வினையாக பானெர்ஜீ அவர்களை முற்போக்காளராக சித்தரிக்கும் தவறான கருத்துக்களும் பதிவாயின. சில ஏற்கத்தக்க கருத்துக்களை அவர் முன்வைத்தது உண்மைதான். இந்திய பொருளாதாரம் எதிர்கொள்ளும் மந்தநிலையில், பெரும் கம்பனிகளுக்கு வரிச்சலுகை அளித்தது பொருத்தமல்ல என்றும், கிராக்கியை மேம்படுத்த ரேகா திட்டத்தை விஸ்தரிக்க வேண்டும் என்றும், பொதுத்துறை மூலம் விவசாயத்துறைக்கான சில கட்டமைப்பு முதலீடுகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் சரியாகவே கூறினார். ஆனால் உழைப்பாளர் சட்டங்கள மேலும் நெகிழ்ச்சிபெற வேண்டும்; நிலம் கையகப்படுத்தும் சட்டங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக இருக்கவேண்டும் என்ற பொருளிலும் பேசியதன் மூலம் அடிப்படையில் தான் தாராளமய கொள்கைகளின் ஆதரவாளர் என்பதை அவர் நிரூபித்தார். பிரதமரை சந்தித்த பிறகு பெரும் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார். இதற்கு மேல் இந்த தனிநபர் மதிப்பீட்டுக்குள் செல்வது நமக்கு முக்கியமல்ல. நாம் புரிந்துகொள்ள வேண்டியது பொருளியல் துறைக்கான நோபெல் பரிசு பெரும்பாலும் மேலை நாடுகளின், ஏகாதிபத்தியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு அமைப்பு வழங்கும் அங்கீகாரம் என்பதுதான்.
ஓரிரு விதிவிலக்குகள் இருப்பதுபோல் தோன்றினாலும், அவை விதி விலக்குகள் மட்டுமே என்பதையும், அதுவும் கூட ஒரு எல்லைக்கு உட்பட்டுத்தான் அவை விதிவிலக்குகள் என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். இது மிகச்சிறந்த வல்லுனரான அமார்த்யா சென் அவர்களுக்கும் பொருந்தும். அவர் தாராளமய கொள்கைகளை முழுமையாக நிராகரிப்பவர் அல்ல. ஆனால் அவர் நமக்கு எதிரி என்று கருத வேண்டிய அவசியம் இல்லை. பொதுவாக, நோபெல் பரிசு பெற்றுள்ள பொருளியல் அறிஞர்களின் புலம்சார் திறனை நாம் குறைத்து மதிப்பிடவில்லை. அவர்களது புலம்சார் சாதனைகளையும் மறக்கவில்லை. நமது கருத்து பொருளியலுக்கான நோபெல் பரிசின் அரசியல்–தத்துவார்த்த பின்புலம் பற்றியதுதான். அறிஞர்களின் அணுகுமுறையில் உள்ள பலவீனங்களையும் அறிவியல் நிலைபாட்டில் இருந்தும், நமது வர்க்க நிலைபாட்டில் இருந்தும் விமர்சிப்பது நமது கடமை.
அருமை 👌
LikeLike