வெகுஜனப் பாதையும் மார்க்சிஸ்ட் கட்சிக் கிளைகளும்


குரல்: ஆனந்த்

உ. வாசுகி

கம்யூனிஸ்ட் கட்சி, அதன் தன்மையில் புரட்சிகர குணாம்சம் கொண்டதாகவும், நடைமுறையில் மாஸ் லைனைக் கடைப்பிடிப்பதாகவும் இருக்கவேண்டும். மாஸ் லைன் என்கிற மக்களோடு உயிரோட்டமான தொடர்பு என்ற நடைமுறைக்கு, கருத்தாக்க வடிவம் (தத்துவமாகவும், நடைமுறை உத்தியாகவும்) கொடுத்தது தோழர் மாவோ. 1943ல் தலைமைமுறை (பாணி) குறித்து எழுதும்போது அரசியல் ஸ்தாபன தலைமைப் பண்பாக அதனைக் குறிப்பிடுகிறார். பின்னர் அதை மேலும் செழுமைப்படுத்துகிறார்.

எவ்வளவு திறமையான லைனாக இருந்தாலும், ஒரு சிறு எண்ணிக்கையிலான தோழர்கள் மட்டுமே பேசுவதாக இருந்தால் உதவாது; அது மக்களின் நடவடிக்கைகளோடு இணைக்கப்பட வேண்டும் என்பதற்கு அழுத்தம் கொடுக்கிறார். ஆனால் அது குறித்து பேசும் இடத்தில், “அக்டோபர் புரட்சியின் பாரம்பரியம் மற்றும் மக்களை சார்ந்திருப்பது என்ற தோழர் லெனினின் மாஸ் லைனின் நீட்சியாக…” என லெனினை மேற்கோள்காட்டியே விவரிக்கிறார். மக்கள் பங்கேற்பு, வர்க்கங்களின் அணிதிரட்டல் குறித்து மார்க்ஸ் கூறுவதும், மாஸ் லைன் என்ற சொல்லடுக்கைப் பயன்படுத்தாவிட்டாலும், அதன் நடைமுறை பகுதியாகப் பார்க்க முடியும்.

1925ல் கிராம்சி, கட்சிகல்விக்கான பாடத்திட்டம் பற்றிய ஒரு கட்டுரையில், இதற்கான விளக்கத்தைக் கச்சிதமாகக் கொடுக்கிறார். மக்களுடனோ, ஊழியர்களுடனோ தொடர்பு இல்லாத,  நாம் தேர்வு செய்து அழைக்கிற தோழர்களோடு மட்டும் விவாதிக்கும்போது, கள நிலவரத்தோடு இணைந்ததாக கருத்துக்கள் வராமல் போகும். சமூக சக்திகளுக்கிடையே நிலவும் உறவுகள், நமது அடிப்படை வர்க்கங்களின் உணர்வு மட்டம், வாழ்நிலை போன்றவற்றைக் கணக்கில் எடுக்காத முடிவுகளை எட்ட வேண்டியிருக்கும் எனக் குறிப்பிடுகிறார். இது, இயல்பாகவே, திட்டவட்டமான சூழலைத் துல்லியமாக ஆய்வு செய்வது என்கிற மார்க்சீயத்தின் சாரத்திலிருந்து விலகிச் செல்வதாகவே அமையும். ஆய்வும், பரிசீலனையும் துல்லியமாக இல்லை என்றால், முடிவுகள் சரியாக இருக்காது; முன்னேற்றம் கிடைக்காது.  நமது நேரம், உழைப்பு அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகிப் போகும்.

கம்யூனிஸ்ட் கட்சியின் பாத்திரம் என்பது புரட்சிக்குத் தலைமை தாங்கும் தொழிலாளி வர்க்கத்துக்கு வழிகாட்டுவதாகும். கீழ்க்கண்ட சூழல்களில், கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளி வர்க்கத்தை வழிநடத்த முடியாது என்று ஸ்டாலின் சொல்கிறார் –

  • கட்சிக்கும் கட்சியில் இல்லாத மக்களுக்கும் நெருக்கம் இல்லை என்றால்
  • கட்சியின் தலைமையை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால்
  • அரசியல்ரீதியாக, தார்மீகரீதியாக மக்கள் மத்தியில் கட்சிக்கு நம்பகத்தன்மை இல்லை என்றால்

கட்சிக்கு வெளியே உள்ள மக்களோடு தொடர்பு கொண்டு கட்சியின்மீது நம்பிக்கையை ஏற்படுத்துவது என்பதையே இது குறிக்கிறது. இல்லையேல் தொழிலாளி வர்க்கத்துக்கு வழிகாட்டும் கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படையான பாத்திரமே அடிபட்டுப் போய்விடும். அதாவது, மக்களுடன் உயிரோட்டமான தொடர்பு என்பது புரட்சிகர இலக்குக்கு சம்பந்தம் இல்லாத, அரசியல் நோக்கம் இல்லாத நடவடிக்கை அல்ல. ஒரு புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் நடைமுறையாக, தலைமையின் பண்பாக இருக்கவேண்டும் என்று சொல்லும்போது, புரட்சி என்கிற இலக்கினை அடையத் தேவைப்படும் நடவடிக்கையாகவே இதனைக் கருதவேண்டும். அப்படியானால் அனைத்து மட்ட தலைமையும் கையாளவேண்டிய உத்தி இது. இதற்குள் கிளைகளின் பங்கு என்பதற்கு ஒரு முக்கியத்துவம்  உண்டு.

மாஸ் லைன்:

மக்களிடமிருந்து மக்களுக்கு என்று இதன் சாராம்சத்தை மாவோ விளக்குகிறார். மக்கள் என்ன சொன்னாலும், அதை அப்படியே ஏற்றுக் கொள்வது, அதற்கு வால்பிடிப்பதற்கு சமம். அது மாஸ் லைன் அல்ல. மாறாக, அவர்களின் ஆலோசனைகளை, கருத்துக்களை சேகரித்து, மார்க்சிய வரையறையில் அதனைப் பரிசீலித்து, முடிவுகளையும், கோரிக்கைகளையும் திரும்ப அவர்களிடம் கொண்டுசென்று நடைமுறைப்படுத்துவது என்பதுதான். அதாவது, மூலப்பொருளை மக்களிடம் பெற்று, மார்க்சிய வெளிச்சத்தில் அவற்றை வடிகட்டி, பட்டை தீட்டி, முழுமைப்படுத்தப்பட்ட பொருளை மீண்டும் அவர்களிடம் கொண்டு சேர்ப்பது, அவர்கள் மூலமே அதை அமல்படுத்துவது.

கிளை, மார்க்சிஸ்ட் கட்சி ஸ்தாபன கட்டமைப்பில் அடித்தளமாக இருப்பது, ஆனால் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதுபோல் அது மிக முக்கியமான ஓர் அங்கம். புரட்சியின் பயணத்தில் ஒவ்வொன்றுக்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. சோஷலிச புரட்சியில் தொழிலாளி வர்க்கத்தின் முக்கியத்துவத்துக்கு, உற்பத்தி முறைமையில் அது நேரடியாக, நெருக்கமாக இடம் பெற்றிருக்கிறது என்பது ஒரு பிரதான காரணம். கட்சி கட்டமைப்பில் கிளையின் முக்கியத்துவத்துக்கு, அது மக்களுடன் உயிரோட்டமான உறவில் நெருக்கமாக இருக்கும் பாத்திரத்தைப் பெற்றிருக்கிறது என்பது பிரதான காரணம்.

எனவேதான் கிளையின் செயல்பாடு திறன்வாய்ந்ததாக இல்லாவிட்டால், மாஸ் லைன் வெற்றிபெற முடியாது. கட்சி உறுப்பினர்களின் தரத்துடன், கிளைச்செயலாளர் செயல்பாட்டுடன் இது இணைந்தது. மார்க்சிஸ்ட்  கட்சியின் கொல்கத்தா பிளீனம் வலியுறுத்தும் குறைந்தபட்ச 5 ஸ்தாபன கடமைகளை இந்த வெளிச்சத்தில்தான் புரிந்துகொள்ள வேண்டும். கட்சித் திட்டத்தைப் படிக்காத, அரசியல் ஸ்தாபன நிலைபாட்டை உள்வாங்காத கட்சி உறுப்பினர்கள், கிளைச்செயலாளர்கள் இருப்பார்களேயானால், எவ்வாறு அவர்களால் கட்சியின் இலக்கு நோக்கி செயல்பட முடியும்?

கிளை செயல்பாடு:

மாதாமாதம் கிளை கூடவேண்டும்; புதியவர்களைக் கட்சிக்குள் கொண்டுவர வேண்டும்; வர்க்க வெகுஜன அமைப்புகளை உருவாக்க வேண்டும்; ஸ்தல இயக்கங்களை நடத்த வேண்டும்; கட்சி கல்வி கொடுக்கவேண்டும்; தன்னெழுச்சி போராட்டங்களில் தலையீடு செய்து தலைமைப் பொறுப்பெடுத்து அதன் உள்ளடக்கத்தில் அரசியல்ரீதியாக செல்வாக்கு செலுத்த வேண்டும் என்று சொல்வதெல்லாம் எதற்காக என்பதைக் கட்சி திட்டம் சார்ந்து புரிந்துகொண்டால்தான், அவற்றை செய்யவேண்டிய கட்டாயத்தை உணரமுடியும். மேல்கமிட்டியின் முடிவுகளை நிறைவேற்றும் பாத்திரம் மட்டுமே கிளைக்கு கிடையாது. கட்சித்திட்டத்தை நோக்கிய பணிகளை சுயேச்சையாகத் திட்டமிடுவதும் கிளையின் முக்கிய கடமையாகும்.

கட்சித்திட்டம் மக்கள் ஜனநாயக புரட்சியை இலக்காக வைத்து, அதற்கு அணிதிரட்ட வேண்டிய வர்க்கங்களை காரண காரியத்துடன் பட்டியல் போடுகிறது. மக்கள் ஜனநாயக அணியைக் கட்டமைக்கும் பணிக்கு முன்னோட்டமாக இடது ஜனநாயக அணி அமைக்கப்பட வேண்டும் என்பது கட்சி மாநாடுகளின் முடிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. இது “போராடும் வர்க்கக் கூட்டணி”  (fighting class alliance) என விளக்கப்படுகிறது. போராட்டம் என்றால் எவ்வகையான போராட்டம்? ”பொருளாதார போராட்டம் அரசியல் போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாதது. இவை இரண்டுமே சித்தாந்த போராட்டத்திலிருந்து தனிமைப்படுத்த முடியாதவை” என கிராம்சி சொல்வதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு போராடும் வர்க்க கூட்டணி என்ற சொற்றொடரை நாம் ஆய்வு செய்தால், அரசியல், பொருளாதாரம், சமூகம், சித்தாந்தம் போன்ற அனைத்துத் தளங்களிலும் போராட்டம் என்பதே வெளிவரும். களப்போராட்டம், கருத்தியல் போராட்டம் இரண்டையும் இது குறிக்கும். இவற்றை சாத்தியமாக்குவதிலும், வெற்றிபெற வைப்பதிலும் மாஸ் லைன் முக்கிய பங்கு வகிக்கிறது.

கட்சித்திட்டம் என்பதானது, வகுப்பு எடுக்கும் தலைப்பு மட்டுமே என்ற குறுகிய புரிதலிலிருந்து மாறி,  நடைமுறைப்படுத்த வேண்டிய செயல்திட்டம் என்கிற புரிதல் வலுப்பட வேண்டியிருக்கிறது. நடைமுறைப்படுத்தும் கடமை உயர்மட்ட கமிட்டிகளுக்கு மட்டுமல்ல; கிளைகளுக்கும் உண்டு. எனவே வர்க்கத் திரட்டல், ஒடுக்கப்படும் சமூகப் பகுதியினரைத் திரட்டல், போராட்டங்களை உருவாக்குதல், தொடர்புகளை ஸ்தாபனப்படுத்துதல், அரசியலாக உறுதிப்படுத்துதல் என்பதை நோக்கி கிளைகளின் செயல்பாட்டை அமைத்துக் கொள்ளவேண்டும். இது எதுவுமே, மூடிய அலுவலக அறைக்குள்ளிருந்து செய்யப்படுவதல்ல; மாறாக, மக்களுக்கு மத்தியிலிருந்துதான் இதைச் செய்யமுடியும். மேற்குவங்கத்தில் கட்சி வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்தவுடன், முதல்வர் ஜோதிபாசு, அரசின் தலைமையகம் ரைட்டர்ஸ் பில்டிங்கிலிருந்து அல்ல; மக்கள் மத்தியிலிருந்துதான் செயல்படும் என்று அறிவித்தது இதன் பிரதிபலிப்பே…

கிளைகளும், கிளை உறுப்பினர்களும் எப்படி இருக்க வேண்டும்?

கிராம்சி சொல்கிறார் – கட்சி உறுப்பினர்கள் அரசியல் ஸ்தாபன தரம் உயர்ந்தவர்களாக இருக்கவேண்டும். எவ்வளவு தடைகள் எதிர்பட்டாலும், அவற்றிலிருந்து மீண்டுவரும் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும். அர்ப்பணிப்போடு செயல்படவேண்டும். அதில் ஊழியர்களாக இருப்பவர்கள், புரட்சியை வழிநடத்தக் கூடியவர்களாகவும், புரட்சிக்குப் பின் பாட்டாளி வர்க்க அரசை நிர்வகிக்கக் கூடியவர்களாகவும் இருக்கவேண்டும். புதிதாக சேர்ந்தவர்கள், அரசியலாக தயார்படுத்தப்படாதவர்களாகவே நீடித்தால், அந்நிய வர்க்க கருத்தியலுக்கு சுலபமாக இரையாகி விடுவார்கள். பேச்சுவன்மை, சாதுரியம், சுயதம்பட்டம் போன்ற குட்டி முதலாளித்துவ குணாம்சங்களால் ஈர்க்கப்பட்டு விடுவார்கள். இது கட்சியை ஊனப்படுத்திவிடும் என்று எச்சரிக்கிறார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு விதிகள்,  மக்களிடம் நம்பிக்கை பெற்றவர்கள், மக்கள் சேவையில் சிறந்தவர்களை ஊழியர்களாக உயர்த்துங்கள் என்கின்றன. மேலும், தத்துவத்தை நடைமுறையோடு இணைப்பது, விவரங்களிலிருந்து உண்மையைத் தேடுவது, நடைமுறையின் மூலம் அந்த உண்மையை உறுதிப்படுத்துவது என்ற தத்துவார்த்த நிலைபாட்டைக் கைக்கொள்ள வேண்டும், இந்த அடிப்படையில் புதிய வழிமுறைகளை சிந்திக்க வேண்டும்; அவற்றைப் பரீட்சித்துப் பார்க்க வேண்டும்; புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்; சூழ்நிலை மாற்றத்தை உற்று கவனிக்க வேண்டும்; மாற்றத்தைக் கணக்கில் எடுத்து பழைய அனுபவங்களைப் பரீசீலிக்கவேண்டும்; பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும்; மொத்தத்தில், மார்க்சீயத்தை நடைமுறை அனுபவத்தின் மூலமாக வளப்படுத்த வேண்டும் எனக் கட்சி உறுப்பினர்களைப் பணிக்கின்றன. இவ்வாறானவர்களைக் கொண்டதாக கிளைகள் இருக்க வேண்டும் என்பதுதான் இதன் சாராம்சம்.

பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச்செயலாளர்களுக்கான பாடத்திட்டத்தில்,

  • கட்சி கிளை, செயல்படும் இடத்தில் அரசியல் தலைமையாக உயர வேண்டும்.
  • கிளை செயல்படும் வேலைத்தளம் அல்லது பகுதி குறித்து விவரம் தெரிந்ததாகக் கிளை இருக்க வேண்டும். எந்த முக்கிய வர்க்க பகுதி அங்கு உள்ளது; உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் யார், பிரதான பிரச்னைகள் என்ன, செயல்படும் பிரதான கட்சிகள், அமைப்புகள், மதகலாச்சார, விளையாட்டு ஸ்தாபனங்கள் எவை என்பவை குறித்த அறிவு பெற்றிருக்க வேண்டும். இந்த முக்கிய அமைப்புகள், நபர்கள், மக்கள்மீது செல்வாக்கு செலுத்தக் கூடியவர்களிடம் நாம் எப்படி நமது அரசியலைக் கொண்டு செல்வது என்பதைத் தெரிந்திருக்க வேண்டும்.
  • கட்சி உறுப்பினர்கள் மட்டும் போதாது, ஒரு ஆதரவு தளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். உதாரணமாக, கட்சி பத்திரிகையின் வாசகர் வட்டம், வர்க்க வெகுஜன அமைப்பு உறுப்பினர்கள் போன்றவர்களை சொல்லலாம்.
  • மேல்கமிட்டி அனுப்பும் சுற்றறிக்கையில் உள்ள கடமைகளை இயந்திரகதியாக உறுப்பினர்களுக்கு ரிப்போர்ட் செய்வது கூடாது. உள்ளூர் பிரச்னையோடு இணைத்து அவற்றை விளக்க வேண்டும். உலக அமைதி என்பது ஒரு கோரிக்கையாக இருந்தால்கூட, உள்ளூர் அளவில் அதற்கு என்ன முக்கியத்துவம், என்ன தாக்கம் என்பதை விளக்கவேண்டும். கோரிக்கைகள் பொதுவானவையாக இல்லாமல் ஸ்தூலமாகவும், நடைமுறை சாத்தியம் உள்ளவையாகவும் இருப்பது முக்கியம்.

மேற்கொண்டவையோடு, மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மற்றும் மாநில பிளீனம் சுட்டிக் காட்டியிருக்கும் வழிகாட்டுதல்களையும் கணக்கில் எடுத்தால், மாஸ் லைனுக்கான முக்கியத்துவம் புரியும்.

கிளைகள் என்ன செய்ய வேண்டும்?

கிளை செயல்படும் இடத்தில், வார்டு மட்டத்தில் அல்லது ஊராட்சி மட்டத்தில், கிராம மட்டத்தில் மக்கள் சந்திப்பினை ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். சந்திப்பு வெறும் துவக்கமே. இதன் நோக்கம், கட்சி பற்றிய அறிமுகம் மட்டுமல்ல. வர்க்கங்களையும், ஒடுக்கப்பட்ட சமூக பிரிவினரையும் திரட்டி, போராட்டங்களைக் கட்டவிழ்த்து விட்டு, அரசியல்படுத்தி, வர்க்க சேர்மானத்தில் மாற்றம் ஏற்படுத்துவது என்பதே.

மக்கள் சந்திப்பின்போது, அவர்களை பாதிக்கும் முக்கிய பிரச்னைகளை அவர்களையே பேசவைக்க வேண்டும். என்ன செய்யலாம் என்பதையும் அவர்களிடம் கேட்கலாம். தேவைப்படும் கூடுதல் விவரங்களை, அவை பற்றி அதிகம் தெரிந்தவர்கள்,  வட்டார அலுவலகங்களில் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும். தகவல் உரிமை சட்டத்தின் மூலம் சேகரிக்க வேண்டிய விவரங்கள் இருந்தால் அதனையும் செய்ய வேண்டும். அடுத்து, அவற்றைப் பரிசீலிக்க வேண்டும். இதில் முன்னுக்கு வரும் முரண்பாடு என்ன, எதிரி வர்க்கம் எது, தீர்ப்பதற்கான வழிஎது என்பதைப் பரிசீலித்து, கோரிக்கைகளை உருவாக்க வேண்டும். அதிலும், நீண்டகால, உடனடி கோரிக்கைகளைப் பிரித்துக்கொள்ள வேண்டும். உள்ளூர் மக்களின் மனோநிலை என்ன, எத்தகைய போராட்டத்துக்கு வர தயாராக இருப்பார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். போராட்டத் தயாரிப்பில் ஈடுபட வேண்டும்.

மக்களைப் போராட்டக் களத்தில் இறக்குவது என்பதுதான் மிக முக்கியம். போராட்டம்தான் மிகப்பெரிய ஆசிரியர். அதுவே முக்கிய அரசியல் கல்வி. பின்தங்கிய மனநிலையில் உள்ள பகுதியினரைப் புடம்போட இது உதவும். அதற்கேற்றாற் போன்றே அனைத்தும் திட்டமிடப்பட வேண்டும்.  அதற்கு வேண்டிய பிரச்சாரம், திண்ணை கூட்டம், கிராம கூட்டம் போன்றவற்றில் ஈடுபட்டு, அவர்கள் வருகையை உறுதிசெய்ய வேண்டும். இவற்றில், கோரிக்கைகளுக்குப் பின் உள்ள அரசியலை விளக்கவேண்டும்.

கடலூரில், 4 நாட்களில் 18 மையங்களில் 262 கிளை செயலாளர்களை இக்கட்டுரை ஆசிரியர் சந்தித்து பேசிய போது, சில கிளை செயலாளர்கள், ஸ்தல பிரச்னை வந்தால் அதிகாரிகளுக்கு போன் செய்து, பிரச்னையைத் தீர்த்து விடுவோம் என்றனர். சில சமயம், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பயன்படுத்தி, பிரச்னைகள் தீர்க்கப்படுகின்றன. பிரச்னைகளைத் தீர்ப்பது முக்கியம். ஆனால்  மக்களைத் திரட்டி, போராட்டத்தில் இறக்கித் தீர்ப்பது என்பதுதான் இடது ஜனநாயக அணியைக் கட்டுவதற்கு இட்டுச் செல்லும். இதை உறுதிப்படுத்திக் கொண்டு, கட்சியின் தொடர்புகளைப் பயன்படுத்தி அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைப் பயன்படுத்தி பிரச்னைகளைத் தீர்க்கலாம். அதாவது, போராட்டங்களோ, கோரிக்கை மாநாடுகளோ இலக்குஅல்ல; அவை வர்க்கங்களை, ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவினரை ஈர்க்க, அணிதிரட்ட கம்யூனிஸ்டுகள் பயன்படுத்தும் ஆயுதம்; அது ஒரு வழி. வழி வேறு, இலக்கு வேறு. வழியை இலக்கு என்று நினைத்துக் கொண்டு செயல்பட்டால் ஊர் போய் சேரமுடியாது.

அரசியல்படுத்துவது என்பது அதற்கென்று கூட்டம் போட்டுப் பேசுவது மட்டுமல்ல; போராட்டத் தயாரிப்பு என்ற நிகழ்முறையின் மூலமாகவே  மக்களை அரசியல்படுத்தத் துவங்க முடியும். மக்களை நேராக தாசில்தார் அலுவலகத்திற்கு வரவழைத்து, அதிகாரிகளிடம் மனுகொடுத்து பேசிவிட்டு, அவர்களை வீட்டுக்கு அனுப்புவது எதற்கு பயன்படும்? இதில் மறைந்து நிற்கும் அரசின் கொள்கை என்ன, அதிகார வர்க்கம் மற்றும் காவல் துறையின் பங்கு பாத்திரம் என்ன, போராடினால்தான் விவகாரம் நகரும் என்பதையெல்லாம் அனுபவத்தில் பெறவைக்க வேண்டும். அதற்கான கலந்துரையாடல், போராட்ட தயாரிப்பின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.

கிளைக்கு அலுவலகம் இருந்தால், அது மக்கள் வந்து போகும் இடமாக மாற்றப்பட வேண்டும். இளைஞர்கள், பெண்கள், சிறுவர் சிறுமியர் பத்திரிகை படிக்க, திறன்வளர்க்க வாய்ப்புகளை கட்சிக்கிளை உருவாக்க வேண்டும். சேவை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். இவையும் மக்களை ஈர்க்க, அவர்களுடன் உரையாட கிடைக்கும் அற்புதமான வாய்ப்புகள்.

அடுத்து,  கிடைக்கும் தொடர்புகளைக் கண்டிப்பாக ஸ்தாபனப்படுத்த வேண்டும். வர்க்க வெகுஜன அமைப்புகளை அடுத்தடுத்து உருவாக்க வேண்டும். இல்லையேல், அது தன்னார்வ அமைப்புகளின் பணியாகவே நின்று விடும். மேலும், நாம் போராடி பெற்றுக் கொடுத்தோம் என்ற நன்றி உணர்வு மட்டுமே இருக்கும். அதுவும் சில நாட்களில் மறைந்து விடும். நாம் தலையிட்டோம் என்பதாலேயே காலம் முழுதும் மக்கள் நம்மிடம் கட்டுண்டு கிடப்பார்கள் என்று நினைப்பது யதார்த்தமல்ல. அவர்களை அரசியல்படுத்த வேண்டும். மற்ற முதலாளித்துவ கட்சிகளின் சந்தர்ப்பவாத, சாகச நிலைபாடுகளிலிருந்து மார்க்சிஸ்ட் கட்சியின் வர்க்க அரசியல் எவ்வாறு வேறுபடுகிறது என்பதை எடுத்துக் காட்ட வேண்டும். உதாரணமாக, இன்றைய பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் கிராக்கி குறைந்திருப்பது, மக்களிடம் வாங்கும் சக்தி இல்லை என்பதே. எனவே, அரசு முதலீட்டை உள்கட்டமைப்பு வசதிகளில் அதிகரித்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, மக்கள் கையில் பணம் புழங்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்ற நமது புரிதலை, லட்சம் கோடிகளை ஏற்றுமதி நிறுவனங்களுக்கும், கட்டுமான கம்பெனிகளுக்கும் அள்ளிக் கொடுப்பது, கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகை அளிப்பது என்ற நேர்எதிரான முதலாளித்துவ கொள்கையோடு ஒப்பிட்டு வேறுபடுத்திக் காட்டவேண்டும். நிதிநிலை அறிக்கையில் நிதிஒதுக்கீட்டின் பின்உள்ள வர்க்க அரசியல் தெளிவுபடுத்தப்பட வேண்டும். கட்சிகள், அமைப்புகள், தலைவர்கள் வேறுவேறாக இருந்தாலும், அவர்கள் பேசமறுக்கிற அம்சங்கள், வைக்க மறுக்கிற கோரிக்கைகளை உதாரணமாகக் காட்ட வேண்டும். நேர்மை, எளிமை உள்ளிட்ட குணாம்சங்கள் கம்யூனிஸ்டுகளுக்கே உரித்தானது என்பதை நம் வாழ்க்கையின் மூலம் பிரதிபலிக்க வேண்டும். இதிலிருந்து கட்சி விரிவாக்கத்துக்குத் திட்டமிட வேண்டும். அப்போதுதான் வெகுஜனதளம் உருவாகும். கட்சியின் சொந்தபலம் அதிகரிக்கும். அதுதான் நிலைத்து நிற்கும். இல்லையேல் போராட நாம், ஓட்டுக்களைப் பெற முதலாளித்துவ கட்சி என்ற நிலைபாடு தொடர்ந்து நீடிக்கும். 

எனவே, நமது அரசியல் நோக்கத்துக்கு ஏற்ப, அரசியல் நடைமுறை உத்தியின்படி கிளையின் பணிகள் திட்டமிடப்பட வேண்டும். அரசியல் நடைமுறை உத்தி, அவ்வப்போது நிலவும் குறிப்பான அரசியல் சூழலை எதிர்கொண்டு இலக்கு நோக்கி பயணிப்பதற்கு ஏற்ப வடிவமைக்கப்படுகிறது. தற்போதைய பாஜக அரசு கார்ப்பரேட் ஆதரவு மற்றும் வகுப்புவாத கொள்கைகளைக் கடைப்பிடிக்கிறது. இவை இரண்டுக்கும் எதிரான போராட்டங்களை, அதற்கான மனோநிலையை மக்கள் மத்தியில் வளர்ப்பது முக்கிய தேவை. கிளைமட்டத்தில் இதனை எவ்வாறு செய்வது என்று விவாதிக்க வேண்டும்.

பாஜக பகவத்கீதையை உயர்த்திப் பிடிக்கிறது. “கடமையை செய்! பலனை எதிர்பாராதே!” என்கிறது கீதை. மாற்றத்தை நோக்கி அணிதிரளக் கூடாது, இருப்பதே நீடிக்க வேண்டும். ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆளும் வர்க்க அரசியல் இதற்குள் இருக்கிறது. லாபத்தை எதிர்பார்க்காமல் கடமையை செய் என கார்ப்பரேட்டுகளிடம் கீதை சொல்லுமா? உபதேசம் உழைப்பாளி மக்களுக்குத்தான். ஆனால் கம்யூனிஸ்டுகள், இடதுசாரி அரசியலை நோக்கி மக்களைத் திரட்டுவது என்ற பலனை எதிர்பார்த்து, அது கிடைக்கும் வகையில் பணிகளை செய்ய வேண்டும். திட்டமிடாமல், திசையறியாமல் உழைத்துவிட்டு, அரசியல் பலனைப் பெறுவது குறித்துக் கவலைப்படாமல் இருக்கும் போக்கு ஆளும் வர்க்கத்தின் விருப்பத்தை நிறைவேற்றுவதாகவே இருக்கும். நிலவுகிற முதலாளித்துவ அமைப்புக்கு உள்ளேயே நம்மை இயக்கிக் கொண்டிருக்கும். அதனைத் தகர்க்கும் அரசியல் முன்வராது. நம்மை அறியாமல் நம் வேலைமுறையின் காரணமாக, சமூக மாற்றம் என்னும் பாதைக்கு எதிர்த்திசையில் பயணிப்பதாக அமைந்துவிடும்.

எனவே, கட்சித்திட்டம், அதைஒட்டி வெளியிடப்படும் மத்தியகுழு ஆவணங்கள், மாநாட்டு முடிவுகள், தற்போதைய தேவையான பிளீனம் முடிவுகள் அமலாக்கம் இவற்றை, மக்களோடு உயிரோட்டமான தொடர்பினை உருவாக்கி, அவர்கள் மூலம் நடைமுறைப்படுத்தும் பணியினைக் கட்சிக்கிளைகள் செய்ய வேண்டும். கட்சிக்கு அப்பாற்பட்ட மக்களை வென்றெடுக்க வேண்டும். சாதி, மதம் கடந்து நிற்கும் வர்க்க ஒற்றுமையைக் கட்டியமைத்திட வேண்டும். இடைக்குழு, மாவட்டக்குழு அதற்கு உதவ வேண்டும். கட்சிக்கான அரசியல் அனுகூலம் இதன் மூலமே உறுதிப்படும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s