உற்பத்தி நிகழ்முறையில், மனிதர்கள் இயற்கையின் மீது மட்டுமன்றித் தங்களுக்குள் ஒருவர் மீது மற்றவரும் செயலாற்றுகின்றனர். அவர்கள் குறிப்பிட்ட வழிமுறையில் ஒன்று சேர்ந்து உழைப்பதன் மூலமும், தம் செயல்பாடுகளைப் பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதன் மூலமும்தான் அவர்கள் உற்பத்தி செய்கின்றனர்.
உற்பத்தி செய்யும் பொருட்டு அவர்கள் ஒருவருக்கொருவர் வரையறுக்கப்பட்ட தொடர்புகளையும் உறவுகளையும் ஏற்படுத்திக் கொள்கின்றனர். இந்தச் சமூகத் தொடர்புகளுக்கும் உறவுகளுக்கும் உட்பட்டே இயற்கை மீதான அவர்களின் செல்வாக்குச் செயலாற்றுகிறது, அதாவது உற்பத்தி நடைபெறுகிறது.
உற்பத்தியாளர்கள் இடையிலான இந்தச் சமூக உறவுகளும், எந்த நிலைமைகளின்கீழ் தம் செயல்பாடுகளைப் பரிமாறிக் கொண்டு, உற்பத்திச் செயல்முறை முழுவதிலும் பங்கெடுத்துக் கொள்கிறார்களோ அந்த நிலைமைகளும், இயல்பாகவே உற்பத்திச் சாதனங்களின் தன்மைக்கு ஏற்ப மாறுபடும்.
புதிய போர்க்களக் கருவியான துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, படையின் ஒட்டுமொத்த அக ஒழுங்கமைப்பும் தவிர்க்கவியலாமல் மாற்றப்பட்டது. தனியாட்கள் ஒரு படையாக அமைந்து, ஒரு படையணியாகச் செயல்படுவதற்குரிய உறவுகள் மாற்றம் பெற்றன. வெவ்வேறு படையணிகள் ஒன்று மற்றொன்றோடு கொண்டிருந்த உறவும் அதுபோல மாற்றம் கண்டது.
இவ்வாறாக, உற்பத்திக்கான பொருளாயதச் சாதனங்களும் உற்பத்திச் சக்திகளும் மாற்றமும் வளர்ச்சியும் அடைவதைத் தொடர்ந்து, தனியாட்கள் உற்பத்தி செய்வதற்குரிய சமூக உறவுகள், அதாவது உற்பத்தியின் சமூக உறவுகள் மாற்றத்துக்கு உள்ளாகின்றன என்பதை காண்கிறோம். உற்பத்தி உறவுகளே அவற்றின் ஒட்டுமொத்தத்தில் சமூக உறவுகளாய் அமைகின்றன. அவையே சமுதாயமாக, இன்னும் குறிப்பாக, வரலாற்று வளர்ச்சியில் குறிப்பிட்ட ஒரு கட்டத்திலுள்ள சமுதாயமாக தனக்கே உரித்தான தனித்த பண்பியல்புகள் கொண்ட ஒரு சமுதாயமாக அமைகின்றன.
- கார்ல் மார்க்ஸ், கூலியுழைப்பும் மூலதனமும்