– என்.குணசேகரன்
இந்திய தேசிய இயக்கத்தின் துவக்க காலத்தில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்து முற்றாக விடுதலை பெற வேண்டுமென கோரிக்கை எழுப்பப்படவில்லை. முழு விடுதலை பற்றிய பார்வையும் இல்லை. இந்திய தேசிய காங்கிரஸ் 1885-ம் ஆண்டு துவங்குவதற்கு முன்னதாக பிரதேச அளவில் பல அமைப்புக்கள் இயங்கி வந்தன .காங்கிரஸ் துவங்குவதற்கு முன்னதாக தேசிய இயக்கத்தின் முக்கிய தலைவராக விளங்கிய தாதாபாய் நவரோஜி கிழக்கிந்திய சங்கம் என்கிற பெயரில் லண்டனில் ஒரு அமைப்பை நடத்திவந்தார். மெட்ராஸ் மகாஜன சபை 1881-ல் சென்னையில் செயல்பட்டது.
இந்த அமைப்புகள் ஆங்கிலேய நிர்வாகத்தில் சில சீர்திருத்தங்கள் வேண்டும் என்கிற கோரிக்கையை தான் முன் நிறுத்தின. அது தொடர்பான மனுக்களை பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் அனுப்பி வைத்தன. ஆங்கிலேய அரசின் நிர்வாக, சட்ட நடவடிக்கைகள் மீது சில விமர்சனங்களை முன்வைத்து அவற்றை தாங்கள் நடத்திய பத்திரிகைகளிலும் அந்த அமைப்புகள் எழுதி வந்தன .
1776-ம் ஆண்டு கல்கத்தாவில் செயல்பட்ட இந்திய சங்கம்ஆங்கிலேய அரசுக்கு மனு சமர்ப்பிக்கும் நடவடிக்கைகளோடு சில கிளர்ச்சிகளையும் நடத்தியது. சுரேந்திர பேனர்ஜி ,ஆனந்த் மோகன் போஸ் போன்றவர்கள் மாணவர்களிடமும், மக்களிடமும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். தாதாபாய் நவரோஜி பொருளாதாரத் துறையில் ஆங்கிலேய அரசு இந்திய செல்வங்களை சுரண்டி பலன் பெற்று வருவதாக விமர்சித்து எழுதி வந்தார்.
இந்த முயற்சிகளின் முத்தாய்ப்பாகத்தான் தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி உருவானது . ஆனால் நீண்ட காலம் ஆங்கிலேயரிடமிருந்து முழுமையான பொருளாதார, அரசியல் விடுதலை வேண்டும் என்கிற பார்வையை தேசிய இயக்கம் கொண்டிருக்கவில்லை.
1905-ம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டின் தலைமையுரையில் கோபால கிருஷ்ண கோகலே கீழ் கண்டவாறு குறிப்பிட்டார்;… இந்தியர் நலனுக்காக இந்தியாவில் ஆட்சி நடைபெற வேண்டும் என்பதுதான் காங்கிரஸின் குறிக்கோள்; காலப்போக்கில், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு உட்பட்டு காலனி நாடுகள் சுயமான ஆட்சியை எப்படி நடத்திக்கொண்டிருக்கிறார்களோ, அதேபோன்ற ஒரு அரசாங்க வடி?வத்தை இந்தியாவில் ஏற்படுத்தலாம்…
இந்த எண்ணவோட்டம்தான் தேசிய இயக்கத்தில் நீண்ட காலம குடிகொண்டிருந்தது. இந்த சூழலில்தான் கம்யூனிஸ்டுகள் புதிய சிந்தனை புதிய பார்வை புதிய இந்திய கனவினை முழு விடுதலை என்கிற இலட்சியத்தின் வழியாக முன் நிறுத்தினர்.
கம்யூனிஸ்டுகளின் முழக்கம்
1920-ம் ஆண்டு முதல் கிளை துவக்கத்திலிருந்தே இந்திய விடுதலை பற்றி ஆழமான சிந்தனையை கம்யூனிஸ்டுகள் கொண்டிருந்தனர். 1921-ம் ஆண்டிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழு விடுதலை என்கிற குறிக்கோளை தொடர்ந்து எழுப்பி வந்தது. 1921-ல் அகமதாபாத்தில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸின் மாநாட்டில்
கம்யூனிஸ்ட் தலைவர்கள் எம்.என் ராய், அபானி முகர்ஜி கையெழுத்திட்ட ஒரு அறிக்கையை மாநாட்டுக்கு வந்திருந்த பிரதிநிதிகள் இடையே கம்யூனிஸ்டுகள் விநியோகித்தனர்.
அந்த அறிக்கை ஆங்கிலேய ஆட்சியிலிருந்து இந்தியா முழு விடுதலை பெற வேண்டுமென கோரிக்கையை முன்வைத்தது. பிரிட்டிஷ் பேரரசிடம் இருந்து காங்கிரஸ் கட்சி முழுமையாக தனது உறவுகளை துண்டித்துக் கொண்டு ,தொழிலாளி வர்க்க ,விவசாய பிரிவினரின் போராட்டங்களுக்கு முழு ஆதரவு கொடுக்கவேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு அந்த அறிக்கை வேண்டுகோள் விடுத்தது .
மாநாட்டிற்கு வந்திருந்த பிரதிநிதிகள் இடையே அந்த அறிக்கை பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இதன் விளைவாக மவுலானா ஹஜ்ரத் மொஹானி என்ற முற்போக்கான காங்கிரஸ் தலைவர் முழு விடுதலை தீர்மானத்தை மாநாட்டில் கொண்டுவந்தார் .இந்த தீர்மானத்தை ,காந்தி உட்பட பெரும்பான்மையான பிரதிநிதிகள் ஏற்றுக்கொள்ளாததால் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. எனினும்,முழு விடுதலை என்கிற கம்யூனிஸ்டுகளின் கோரிக்கை எந்த அளவிற்கு மிகப் பெரும் தாக்கத்தை அன்று ஏற்படுத்தியிருந்தது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
இந்தியாவிலும் உலகத்திலும் ஏற்பட்டு வந்துள்ள மாற்றங்கள் இந்த நிகழ்விற்கு பின்னணியாக அமைந்தன. முழு விடுதலை கோரிக்கையை கம்யூனிஸ்டுகள் இந்தியாவில் எழுப்புவதற்கு சில ஆண்டுகள் முன்பு உலகத்தையே அதிரவைத்த ஒரு சரித்திர மாற்றம் ரஷ்யாவில் நிகழ்ந்தது்.1917-ம் ஆண்டு நடைபெற்ற ரஷ்யப் புரட்சி தொழிலாளிகள் , விவசாயிகள் கொண்ட உழைப்பாளி மக்களின வர்க்க கூட்டணி ஆட்சி அதிகாரத்திற்கு வரமுடியும் என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டியது. ரஷ்ய புரட்சி இந்தியாவில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி அகற்றப்பட்டு அந்த இடத்தில் இந்திய முதலாளிகள், நிலப்பிரபுக்கள் ஆட்சி வரக்கூடாது என்றும், இங்கேயும் தொழிலாளிகள் விவசாயிகள் கொண்ட வர்க்க கூட்டணியே விடுதலைக்குப் பிறகு ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும் என்றும் கம்யூனிஸ்டுகள் பிரச்சாரத்தை மேற்கொண்டனர் .
முழு விடுதலை கோரிக்கையை காங்கிரஸ் நிராகரித்தாலும் அந்த இலட்சியத்துடன் தொழிலாளிகள், விவசாயிகள் மத்தியில் கம்யூனிஸ்டுகள் அன்றைக்கிருந்த குறுகிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு பணியாற்றினர்.
1928-ம் ஆண்டுகளில் விவசாயிகள் தொழிலாளர்கள் போராட்டம் உத்தரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பல இடங்களில் எழுச்சியுடன் நடைபெற்றன.1928-ம் ஆண்டு குஜராத்தில் வரிகொடா இயக்கம் விவசாயிகள் தலைமையில் நடைபெற்று வெற்றியை பெற்றது. அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் வேகமாக வளர்ச்சி அடையத் துவங்கியது. 1928-ம் ஆண்டு நாட்டின் பல பகுதிகளில் வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. தென்னிந்திய ரயில்வே தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக வேலைநிறுத்தம் நடைபெற்றது . அன்றைய பம்பாயில் பஞ்சாலை மில்களில் நடைபெற்ற வேலைநிறுத்தத்தில் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். 1928-ம் ஆண்டு மட்டும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் கலந்துகொண்ட வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடைபெற்றன .இதில் பல வேலை நிறுத்தங்களுக்கு கம்யூனிஸ்டுகள் தலைமை தாங்கினர்.
இந்த நிகழ்வுகளுடன் இணைந்ததாக புரட்சிகர குழுக்கள் செயல்பட்டு வந்தன .புரட்சியின் வழியாக தொழிலாளர் விவசாயிகளின் அரசு அமைய வேண்டும் என்று அவர்கள் புரட்சிகர செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர். அந்த இயக்கங்களின் உன்னத தலைவராக பகத்சிங் திகழ்ந்தார். தங்களுடைய நோக்கத்தைப் பற்றி குறிப்பிடுகிற போது “மனிதனை மனிதன் சுரண்டும் முறையை முடிவுக்கு கொண்டும் வரும புரட்சிக்காக பணியாற்றுவது தான் “என்று பகத்சிங் மற்றும் அவரது தோழர்கள் அழுத்தமாக அறிவித்தனர். எனவே, ஆங்கிலேய ஆட்சியிடமிருந்து முழு விடுதலை பெற்று புரட்சிகர பாட்டாளி வர்க்க அரசு அமைய வேண்டும் என்கிற குறிக்கோளுடன் கம்யூனிஸ்டுகளும் புரட்சியாளர்களும் அன்று செயல்பட்டு வந்தனர்; மற்றவர்கள் அடிமைத்தனம் அகல வேண்டும் என்று ஒரு எல்லைக்கு உட்பட்டு சிந்தித்த நிலையில் இந்தியாவுக்கு பொருத்தமான ஒரு மாற்றினை கம்யூனிஸ்டுகளே கொண்டிருந்தனர்.
மார்க்ஸே முன்னோடி
இத்தாலிய மார்க்சிய அறிஞர் கிராம்ஷி குறிப்பிட்டார் ஒரு நாட்டின் பொதுவான வரலாற்றை எழுதாமல் கம்யூனிசத்தின் வரலாற்றை எழுத முடியாது அதேபோன்று இந்திய கம்யூனிசத்தின் வரலாற்றை இந்திய நாட்டின் பொதுவான வரலாற்றோடு இணைந்துதான் புரிந்து கொள்ள முடியும் அடித்தட்டு மக்களின் நலன்களை மையமாகக்கொண்டு கம்யூனிஸ்டுகள் சிந்தித்தும் செயல்பட்டு வந்தனர் அவர்கள் எடுத்த ஒவ்வொரு நிலைப்பாடும் நாட்டின் சமூக நிலைமைகளை துல்லியமாக அறிந்து எடுக்கப்பட்டு வந்துள்ளது.
இந்திய சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு நிலைமைகளை ஆராய்ந்து ,இந்திய மக்களின் வாழ்வியல் நெருக்கடிகளை தீர்ப்பதற்கான ,தீர்வுகளை காண முயன்ற முதல் கம்யூனிஸ்ட் யாராக இருக்க முடியும்? நிச்சயமாக அந்த முதல் கம்யூனிஸ்ட் கார்ல் மார்க்ஸ்தான். அவருடன் இணைந்து பிரெடெரிக் எங்கல்ஸ் அந்த பணிகளை மேற்கொண்டார்.
1850களில் இருந்தே, ஆசியப் பொருளாதாரம் பற்றி மார்க்ஸ் எழுதி வந்தார். இந்திய, சீன பொருளாதாரத்தின் முக்கிய பிரச்சனைகள், அவை மீது ஐரோப்பிய முதலாளித்துவம் ஏற்படுத்தி வந்த பாதிப்புகள் குறித்தும் மார்க்ஸ் எழுதிவந்தார். அதுமட்டுமல்ல, எதிர்கால உலக முன்னேற்றத்திற்கே, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் விடுதலை பெற வேண்டியது அவசியம் என்றும் மார்க்ஸ எழுதினார்.
அவரது விரிந்த உலகப் பார்வையில் உலக பிரச்சனைகளுக்கான தீர்வில் இந்திய நிலையை ஆராய்ந்து இந்திய விடுதலையை அவர் வலியுறுத்தியது இன்றைக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.இந்த அளவில் அந்த காலகட்டத்தில் சிந்தித்த அறிஞர் யாருமில்லை.
1850களில் இந்திய நிலை பற்றி மார்க்ஸ் ஆராய்ந்து சில முடிவுகளுக்கு வருகின்றார். ஒன்று, இந்தியாவில் ஆங்கிலேயர் செய்துவருவது அழித்தல் வேலை. அதாவது உள்நாட்டு பாரம்பரியமான தொழில்களை அழிப்பது, கிராமங்களின் பொருளாதார வாழ்க்கையை குலைத்து வேளாண்மையில் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியது, இரக்கமில்லாத வரி வசூலை மேற்கொண்டது, கிழக்கிந்திய கம்பெனி நேரடிக் கொள்ளை மூலம் இந்தியாவின் செல்வ களஞ்சியங்களை கொள்ளை கொண்டு சென்றது போன்ற அத்தனையும் அவர்களது அழித்தொழித்தல் வேலையாக இருந்தது என்பதை ஏராளமான விவரங்கள் ஆவணங்கள் அடிப்படையாகக் கொண்டு மார்க்ஸ் விளக்குகிறார். இவ்வாறு பலவற்றை அழித்து அவற்றால் நிர்க்கதியான மக்களுக்கு மாற்று வழியும் இல்லாமல் போன ஒரு நிலைமையை இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி ஏற்படுத்தியது.
அவர்களது ஆட்சியின், இரண்டாவது அம்சமாக மார்க்ஸ், இந்தியாவில் முதலாளித்துவத்தை கட்டமைக்க அவர்கள் செய்த பணியை விளக்குகிறார்.
ரயில்வே போக்குவரத்தை கொண்டு வந்தது; சாலைகள் அமைத்தது உள்ளிட்ட தொழில்துறை வளர்ச்சிக்கான சில அடிப்படைகளை தங்களது சுரண்டல் தேவைக்காக அவர்கள் மேற்கொண்டாலும் அது எதிர்கால முதலாளித்துவ வளர்ச்சிக்கான பயணத்தை துவக்கியது. இந்த அம்சத்தை மார்க்ஸ் விளக்கி இறுதியாக ஒரு முடிவினை முன்வைக்கின்றார் .
இந்தியாவில் தங்களுக்கான ஒரு புதிய சமூகத்தை மக்களே அமைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அதற்கு ஏகாதிபத்தியத்திடமிருந்து தங்களை விடுவித்துக் கொள்கிற ஒரு அரசியல் மாற்றத்தை மக்கள் ஏற்படுத்த வேண்டும் என்று சொல்லி மார்க்ஸ் வழிகாட்டுகிறார். சாதாரண ஏழை மக்களின் விடிவிற்கு அன்றே சிந்தித்தவர் மார்க்ஸ். எனவே, இந்திய விடுதலைக்கு முதல் குரல் கொடுத்தவர் காரல்மார்க்ஸ் என்பது வரலாற்றில் மறைக்க முடியாத உண்மை.
இந்த நெடிய சிந்தனை வரலாற்றின் தொடர்ச்சியே, 1920களில் கம்யூனிஸ்டுகள் இந்தியாவில் முன்வைத்த முழுமையான விடுதலை என்கிற முழக்கம். முழுமையான விடுதலை என்கிற முழக்கத்தை என்கிற இந்திய நிலைமைகளில் பொருத்தி கம்யூனிஸ்டுகள் முன்னெடுத்துச் சென்றனர். இந்த முழக்கம் காரணமாகவே ஆங்கிலேய அரசின் கொடூரமான அடக்குமுறைகளை கம்யூனிஸ்டுகள் எதிர் கொண்டனர். ஏராளமான கம்யூனிஸ்டுகள் கைதாகி பல சதி வழக்குகளுக்கு ஆளாகினர்.
நீதிமன்றத்தில் கொள்கை முழக்கம்
1929 மீரத் சதி வழக்கில் விரிவான அரசாங்க விசாரணை நடைபெற்றது 31 தலைவர்கள் கைது செய்யப்பட்டனர் அவர்களில் முசாபர் அகமது, எஸ்.ஏ. டாங்கே, பிசி ஜோஷி, ஜி.எம் அதிகாரி போன்ற பலர் பின்னாளில் கம்யூனிச இயக்கத்தின் முன்னணி தலைவர்களாக செயல்பட்டனர்.
சதி வழக்குகளுக்கு ஆளாகி குற்றம் சாட்டப்பட்ட கம்யூனிஸ்டுகள் குற்றவாளிக் கூண்டில் இருந்து புதிய இந்தியாவை பற்றி ஏராளமான விளக்கங்களை அளித்திருக்கிறார்கள் உண்மையிலேயே அவர்கள் நீதிமன்றத்திலிருந்து ஆற்றிய அந்த உரைகள் இந்திய விடுதலை இயக்கத்தில் மிக முக்கியமான ஆவணங்கள் அவர்களது நீதிமன்ற உரைகளிலிருந்து பளிச்சிடுகிற கீழ்க்கண்ட இந்திய மக்கள் மீதும், சோசலிச லட்சியத்தின் மீதும் அவர்களது உறுதி எடுத்துக்காட்டுகின்றன.
“முதலாளித்துவத்தின் சுரண்டலிலிருந்து, அதன் அடக்குமுறையிலிருந்து தொழிலாளி வர்க்கம் விடுதலை பெற வேண்டும் என்பதே என் நோக்கம்….“
“.. ஒரு தொழிற்சங்கம் அது உண்மையான தொழிலாளர்களுக்கான, மெய்யான நிறுவனமாக இருக்கவேண்டுமானால் தொழிலதிபர்கள் முதலாளிகள் வர்க்கத்துக்கு எதிராக தொழிலாளர்களின் பொருளாதார வர்க்க நலன்களை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் தொழிலாளர்களுக்கு வர்க்க உணர்வு வர்க்க ஒற்றுமை பற்றி அடிப்படை கொள்கைகளை கற்பிக்கத் தவறும் ஒரு தொழிற்சங்கம் தன் நோக்கத்தை தானே தோல்வியுறச் செய்வதாக அமையும்….
“… இந்த நீதிமன்றத்தால் நான் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டால்,அந்த தண்டனை… முதலாளித்துவ சுரண்டலில் இருந்து பாடுபடும் கோடிக்கணக்கான மக்களுக்கு விடுதலை பெற்று அவர்களை காப்பாற்ற விழைவு கொண்டதற்கு விதிக்கப்பட்ட தண்டனையாகும் … இந்தக் குற்றத்திற்காக என் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்றால் நான் குற்றவாளியே என்று ஒப்புக் கொள்கிறேன்…
“.. இளைஞர்களுக்கிடையே பணியாற்றிய தாகவும் இளைஞர் அமைப்புகளை அமைத்ததாகவும் என் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞனும் விரும்புவது போல் நானும் இந்தியாவின் விடுதலையை வேண்டுகிறேன் நான் முழு விடுதலை வேண்டுகிறேன் இந்தியா முற்றிலும் தொழில் மையமாக வேண்டும் நாடு அரசியல் பொருளாதார விடுதலை பெற வேண்டும் என் என விரும்புகின்றேன் ஆனால் சுதந்திரத்தை வேண்டுவதும் அதற்காக பாடுபடுவதும் குற்றமாக இருக்க முடியாது இந்திய இளைஞன் அவன் இன்பத்தை விரும்பினால் அவனுக்கு இரண்டு விஷயங்கள் இருக்க வேண்டும் ஒன்று சுதந்தரம் மற்றொன்று சோஷலிஸ்ட் சமூகம்…
“… நான் திருப்பி குற்றம் சாட்டுகிறேன் மனித சமூகம் முழுமைக்கும் பகைவர்களாக ஏகாதிபத்தியவாதிகளின் கைப்பாவையாக, அவர்களிடம் கூலி வாங்கும் ஏஜெண்டுகளாக இருக்கிறவர்கள்தான் குற்றவாளிகள். சமூக குற்றவாளிகள் யார்? கண்டம் கண்டமாக நெருப்பையும் வாளையும் எடுத்துக்கொண்டு போனவர்களும், ரத்தமும் பீதியும் சொட்டும் காலனி ஆட்சி முறையை ஏற்படுத்தியவர்களும், இந்த கண்டங்களின் கோடிக்கணக்கான உழைப்பாளி மக்களை முற்றிலும் வறுமையிலும் சகிக்க முடியாத அடிமைத்தனத்திலும் ஆழ்த்தி அவர்களை மொத்தமாய் அழித்தொழிக்க முயற்சி செய்பவர்களும் ஆன ரத்தவெறி கொண்ட ஏகாதிபத்தியவாதிகளா? அல்லது உலகம் முழுமையிலும் உள்ள உழைப்பாளி மக்களின் புரட்சி சக்திகளை ஒன்று திரட்டி அதைக் கொண்டு இரக்கமற்ற அடக்குமுறையையும் சுரண்டலையும் அஸ்திவாரம் கொண்ட இந்த நாசகர அமைப்பினை தூள் தூளாக்கி விட்டு அந்த இடத்தில் புதிய அமைப்பின் படைத்து, மனித சமூகத்தையும் அதன் நாகரீகத்தையும் அவை எந்தக் கேட்டை நோக்கி செல்கின்றனவோ, அதனிடமிருந்து மீட்டு காக்க முயலும் கம்யூனிஸ்டுகளா? இந்த வழக்கில் சமூக குற்றவாளிகள் அரசுத்தரப்பு பெஞ்சுகளில் அமர்ந்துள்ளவர்கள்தான்…”
இவ்வாறு இந்தியாவின் முழு விடுதலை நோக்கங்களை மிகச்சிறப்பாக நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் ஏறி விளக்கங்களை கம்யூனிஸ்டுகள் எடுத்துரைத்தனர்.
இந்த வழக்கில் வழக்கின் தீர்ப்பு 1933 ஜனவரியில் அறிவிக்கப்பட்டது . பிற்காலத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவராக செயல்பட்ட முசாபர் அகமது அவர்களுக்கு மிகக் கொடூரமான தண்டனையாக ஆயுள்காலம் முழுவதும் நாடுகடத்தல் தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு 12, 10 ஆண்டுகள் என நாடுகடத்தல் தண்டனையும் , மற்றவர்களுக்கு பல ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து சர்வதேச அளவில் எதிர்ப்பு இயக்கம் நடைபெற்றதால் அவர்கள் அப்பில் செய்தபோது தண்டனைகள் குறைக்கப்பட்டன.
இவ்வாறு கம்யூனிஸ்டுகள் முழு விடுதலை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, சுரண்டலில் இருந்து உழைக்கும் மக்களை விடுவித்து சோஷலிசத்தை அடைவது போன்ற மிக உயர்ந்த திட்டங்களை முன்வைத்து நீதிமன்றத்திலும் நீதிமன்றத்திற்கு வெளியேயும் உழைக்கும் மக்களை திரட்டி போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தனர். அதே காலங்களில் காங்கிரஸ் கட்சி இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து வேண்டும் என்று ஆங்கிலேய ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தது .
நாடு முழுவதும் நடந்து வரும் தொழிலாளி விவசாயிகளுடைய போராட்டங்கள, பிரிட்டிஷ் அரசு பேச்சுவார்த்தையின்போது துரோகம் இழைத்தது போன்ற காரணங்களால், 1930-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி பூரண சுயராஜ்யம் என்ற கோரிக்கையை முன்வைத்தது. ஆனால், அப்போதும் கூட, இக்கோரிக்கையின் உள்ளடக்கம் கம்யூனிஸ்டுகள் முன் வைத்தது போன்ற அடித்தட்டு உழைக்கும் மக்களின் விடுதலை லட்சியத்தை கொண்டது அல்ல. அன்றைக்கு இருந்த எந்த அரசியல் சக்திக்கும் கம்யூனிஸ்டுகளுக்கு இருந்தது போன்ற ஆழமான சித்தாந்த பார்வை இல்லை. ஒருபுறம் காங்கிரஸ் மேல்தட்டு வர்க்கங்களின் நலனை பாதுகாக்கும் தன்மையில் சுயராஜ்யக் கோரிக்கையை முன்வைத்தது. மறுபுறம், இந்து மகாசபை போன்ற மதவெறி அமைப்புகள் விடுதலை என்கிற லட்சியமே இல்லாத அமைப்பாக உண்மையில் விடுதலை இலட்சியத்திற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருந்தன.
எனவே, கம்யூனிஸ்டுகள் முழு விடுதலை கோரிக்கை வைத்தார்கள் என்பது ஒருவரி செய்தி அல்ல. அதற்கு அடிப்படையாக வர்க்க அடிப்படையிலான பார்வையும், சித்தாந்தமும் இருந்தன. மார்க்சிய தத்துவ வெளிச்சத்தில், இந்திய நிலைமைகளை உள்வாங்கி, முழு விடுதலை என்ற முழக்கம் முன்னெடுக்கப்பட்டது என்பது கம்யூனிச இயக்கத்திறகே உரிய சிறப்பு!