“நவீன தாராளமய முதலாளித்துவமும், மூன்றாம் உலக நாடுகளின் வறுமையும்” என்ற பேரா. பிரபாத் பட்நாயக் அவர்களின் கட்டுரை முதலாளித்துவத்தின் வளர்ச்சிப்போக்கு எந்த வகையிலும் மூன்றாம் உலக நாடுகளின் வறுமையை ஒழித்துவிடாது என்பதையும், உண்மையில், இந்நாடுகளின் வறுமை மேலும் அதிகரிக்கவே செய்கிறது என்பதையும் நிறுவுகிறது. அதேபோல் இந்நாடுகளில் உண்மையான ஒரு புரட்சிகர மாற்றை உருவாக்க தொழிலாளி – விவசாயிகளின் கூட்டணியின் அவசியத்தையும் வலியுறுத்துகிறது. இக்கட்டுரையை ஆர்.எஸ்.செண்பகம் சுருக்கமாகத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
கடந்த இதழில் குறிப்பிட்டிருந்தது போல் இந்திய கம்யூனிஸ்ட இயக்கத்தின் நூற்றாண்டை சிறப்பிக்கும் வகையில் இவ்விதழில் இரண்டு கட்டுரைகள் வெளியாகின்றன. ஒன்று, உ. வாசுகி எழுதியுள்ள “வெகுஜனப் பாதையும் மார்க்சிஸ்ட் கட்சிக் கிளைகளும்” என்பதாகும். வெகுஜன மக்கள் மத்தியில் கட்சியின் கருத்துக்களை எடுத்துச் சென்று மக்கள் மத்தியில் கட்சியின் செல்வாக்கை உயர்த்துவதிலும், மக்களிடமிருந்து கற்றுக்கொண்டு மக்களுக்கு செயலாற்றுவதிலும் கட்சிக் கிளைகளின் முக்கிய பங்கினை இக்கட்டுரை விளக்குகிறது.
இரண்டு, என்.குணசேகரன் எழுதியுள்ள “முழு விடுதலை-லட்சியத்தின் வீர வரலாறு என்ற கட்டுரையாகும். முழு விடுதலை என்கிற முழக்கத்தை இந்திய விடுதலை போராட்ட களத்தில் முதன் முதலில் ஒலித்தவர்கள் கம்யூனிஸ்டுகளே. அதுவும் கம்யூனிஸ்ட் இயக்கம் துவங்கப்பட்ட அடுத்த ஆண்டே அந்த முழக்கம் எழுப்பப்பட்டது. அதற்கான காரணம் கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு இருந்த தத்துவார்த்த தெளிவே ஆகும். முழு விடுதலை என்கிற இம்முழக்கத்தின் வளர்ச்சி மற்றும் நீட்சிகளை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.
மார்க்சிய மூலவர்களில் ஒருவரான தோழர் எங்கெல்ஸ் (28 நவம்பர் 1820 – 5 ஆகஸ்ட்1895) அவர்கள் பிறந்த 200வது ஆண்டை சிறப்பிக்கும் வகையில் பாலசுப்பிரமணியன் – ரகுராம் நாராயணன் எழுதியுள்ள “எங்கெல்ஸ் என்ற புரட்சியாளன்” என்ற கட்டுரை வெளியாகிறது. எங்கெல்ஸ் அவர்களின் தத்துவார்த்த பங்களிப்போடு, அவரின் களச் செயல்பாடும், மார்க்ஸ்-எங்கெல்ஸ் காலத்தில் நடந்த போராட்டங்களில் அவர்களின் பங்கேற்பும் இதில் விவரிக்கப்பட்டுள்ளது.
பொருளியல் துறைக்கான 2019-ம் ஆண்டு நோபல் பரிசு அபிஜித் பானெர்ஜீ, எஸ்தர் டுஃப்ஃப்ளோ, மற்றும் மைக்கேல் க்ரேமெர் ஆகிய மூன்று பொருளாதார நிபுணர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. “வறுமைக்கான காரணங்கள் உற்பத்திக் கருவிகளின் உடைமையில் உள்ள மாபெரும் ஏற்றத்தாழ்வுகள், வேலை வாய்ப்பு, கூலி, அரசுகளின் ஒட்டுமொத்த பொருளாதார சமூக கொள்கைகள் என்று பலவற்றாலும் நிர்ணயிக்கப்படுகின்றன. இவற்றை எல்லாம் புறந்தள்ளிவிட்டு ஒரு பெரும் சமூக பிரச்சினையை ஒரு குறிப்பிட்ட இடத்தில் வறுமை எதிர்ப்பு நடவடிக்கையின் தன்மையில் சிறு மாற்றத்தை மட்டுமே கொணர்ந்து தீர்க்க முயலும் அணுகுமுறை எந்த வகையிலும் பயன் தராது” என்பதை “நோபல் பரிசு 2019 – ஒரு விமர்சனப் பார்வை” என்கிற பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயாவின் கட்டுரை முன்வைக்கிறது.
சொல்லகராதி பகுதியில் உற்பத்தி முறை பற்றிய மார்க்சின் மேற்கோள் இடம் பெற்றிருக்கிறது.
நவம்பர் 9 ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற நவம்பர் புரட்சி தின நிகழ்வில் தென் மாவட்டங்களில் இருந்து பங்குபெற்ற தோழர்கள் மார்க்சிஸ்ட் சந்தாக்களை ஒப்படைத்துள்ளனர். மேலும் மார்க்சிஸ்ட் இதழில் சாதி, இடஒதுக்கீடு, அடையாள அரசியல் குறித்து வெளியான கட்டுரைகளை தொகுத்து பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள “சாதி, இடஒதுக்கீடு, அடையாள அரசியல் பற்றி…” என்ற நூலும் இந்த நிகழ்வில் வெளியிடப்பட்டது.
– ஆசிரியர் குழு
Leave a Reply