- பிரபாத் பட்நாயக்
தமிழில் : சிபி நந்தன்
தேசிய புள்ளியியல் நிறுவனம், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தும் தேசிய நுகர்வோர் செலவீட்டு கணக்கெடுப்பை இம்முறை (அதாவது 2017-18ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பினை) வெளியிட மறுத்துள்ளது. கடந்த நவம்பர் 15 ஆம் நாள் ‘தி பிசினஸ் ஸ்டாண்டர்ட்’ நாளிதழ் கசிந்த இந்த கணக்கெடுப்பின் முடிவுகள் 2011-12 முதல் 2017-18 வரை ‘தனிநபர் நுகர்வோர் செலவீடு’ 3.7 சதவீதம் சரிந்துள்ளது என தெரிவிக்கிறது. இதுதான் கணக்கீட்டை வெளியிட மறுப்பதற்காக காரணம். அதாவது (கசிந்த கணக்கீட்டு விபரங்களின்படி) சராசரியாக ஒரு இந்தியர் செலவிடும் தொகை மாதத்துக்கு 1,501 ரூபாயிலிருந்து 1,446 ரூபாயாக சரிந்துள்ளது. (2009-10 ஆம் ஆண்டின் விலைவாசி அடிப்படையில்).
உண்மையிலேயே தனிநபர் நுகர்வோர் செலவீட்டில் சரிவு ஏற்பட்டிருந்தால் அது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். இது போன்ற சரிவு ஏற்படுவது கடந்த நாற்பது ஆண்டுகளில் இதுவே முதல் முறை. கடைசியாக 1971-72 ஆம் ஆண்டில் இதே போல் சரிவு ஏற்பட்டது. ஆனால் அந்த ஆண்டில் விளைச்சல் மோசமாக இருந்தது, ஒபெக் (OPEC) நாடுகள் ஏற்படுத்திய முதல் எண்ணெய் நெருக்கடியும் அதோடு சேர்ந்து நாட்டின் பணவீக்கத்தை பெருக்கின. இது மக்களின் வாங்கும் திறனை பிழிந்தெடுத்திருந்தது. இந்த சிக்கல்களை சரியாக கையாளாதது அரசாங்கத்தின் தவறு என்ற போதிலும், எண்ணெய் விலை உயர்வு போன்ற புற காரணிக்கும், எதிர்பாராத விளைச்சல் சரிவுக்கும் நாம் அரசாங்கத்தையே பொறுப்பாக்க முடியாது.
2017-18 ஆம் ஆண்டில் இது போன்ற, அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை மீறிய, எதிர்பாராத எந்த பாதிப்புகளும் இல்லை. கணக்கெடுப்பு நிகழ்த்தப்பட்ட இந்த ஓராண்டில் பொருளாதாரத்தையே உலுக்கிப் போட்ட பாதிப்புகள் என்றால் அவை பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜிஎஸ்டி அமலாக்கமும் தான். இந்த இரண்டுக்கும் மோடி அரசாங்கமே முழுப் பொறுப்பு.
இந்த இரு நடவடிக்கைகள் மட்டுமே தனிநபர் நுகர்வோர் செலவீட்டின் சரிவுக்கு காரணம் இல்லை என்பதை தெளிவுபடுத்திக்கொள்வோம். இந்த சரிவு குறிப்பாக கிராமப்புறங்களில் தான் மோசமாக நிகழ்ந்துள்ளது, அதாவது 2011-12 முதல் 2017-18க்குள் 8.8 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. இதே கால கட்டத்தில் நகர்ப்புறங்கள் சொற்பமான, அதாவது 2 சதவீத உயர்வை சந்தித்துள்ளன. கிராமப்புறங்களில் ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளையும் தாண்டிய நெருக்கடியின் அறிகுறிகள் சில காலமாகவே புலப்படத் தொடங்கிவிட்டன. ஏற்கனவே இருந்த நெருக்கடியை (மோடி அரசாங்கத்தின்) நடவடிக்கைகள் மேலும் மோசமாக்கிவிட்டன. (அதாவது) இவற்றை மேற்கொள்வதற்கு முன்பும் கூட நிலைமை அத்தனை சகிக்கக் கூடிய வகையில் இல்லை.
இதற்கான தெளிவான ஆதாரம், உற்பத்தி குறித்த புள்ளிவிபரங்களில் இருந்து நமக்கு கிடைக்கிறது. உற்பத்தி பற்றிய விபரங்களும் நுகர்வோர் செலவீடுகளைப் பற்றிய விபரங்களும் ஒன்றுக்கொன்று முரண்படுவதாக அரசு தெரிவிக்கிறது, ஆனால் இது தவறு. ’வேளாண்மை மற்றும் வேளாண்மை சார் செயல்பாடுகளின்’ நிகர மதிப்புகூட்டப்பட்ட தற்போதைய விலையை எடுத்துக்கொள்வோம். இதுவே நாட்டில் வேளாண்மை சார்ந்து கிடைக்கும் அனைத்து வருவாய்களின் மூலம் ஆகும். இதை, நாட்டில் உள்ள வேளாண்மை சார்ந்துள்ள மக்கள்தொகையைக் கொண்டு வகுத்து, பின் அதை நுகர்வோர் விலை குறியீட்டினால் திருத்தினோமானால், வேளாண்மை சார் மக்களின் வருவாய் நமக்கு கிடைக்கிறது. 2017-18 ஆம் ஆண்டில் இவர்களுக்கு கிடைத்த இந்த வருவாயின் அளவு, 2013-14 ஆம் ஆண்டு கிடைத்துவந்த வருவாயிலிருந்து சற்று சரிந்துள்ளது. விவசாயம் சார்ந்துள்ள மக்களுள் பெரும் நிலவுடைமையாளர்களும், விவசாய முதலாளிகளும் அடங்குவார்கள். மிகக்குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும் விவசாயத்தின் மூலம் வரக்கூடிய மொத்த வருமானத்தில் பெரும்பங்கு இவர்களுக்கே செல்கிறது. நாம் எடுத்துக்கொண்ட காலத்தில் இவர்களின் வருவாய் குறைந்திருக்க வாய்ப்பில்லை என கருதினோமானால், விவசாயம் சார்ந்து வாழும் பெரும் எண்ணிக்கையிலான, உழைக்கும் மக்களின் வருவாய் மிகக் கடுமையான சரிவை சந்தித்திருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். நாம் எடுத்துக்கொண்டுள்ள நிறைவு ஆண்டான 2017-18 என்பதை (ஓராண்டு முந்தையதாக) 2016-17 என எடுத்துக்கொணாலும் (பணமதிப்பிழப்பு, மற்றும் ஜிஎஸ்டி அமலுக்கு வருவதற்கு முந்தைய ஆண்டு), இந்த முடிவில் மாற்றம் ஏதும் இல்லை. மோடி அரசு கருணையற்று செயல்படுத்திய ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பின் பாதிப்புகள் என்பது, ஏற்கனவே பல்வேறு அரசுகளால் தொடர்ந்து திணிக்கப்பட்ட நவ தாராளவாத கொள்கையினால் சிக்கலில் இருந்த வேளாண் பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்தப்பட்டவை என்பது புலப்படுகிறது.
கிராமப்புறங்களில் 2011-12 முதல் 2017-18 ஆம் ஆண்டு வரை உணவுக்காக மேற்கொள்ளப்பட்ட தனி நபர் செலவு பத்து சதவீதம் வரை குறைந்துள்ளது. இது வறுமையின் அளவை கணிசமாக உயர்த்தியிருக்கக் வேண்டும். அரசின் கூற்றுக்கு மாறாக, கலோரி வழிமுறையின் படி கணிக்கப்படும் நாட்டின் வறுமையின் அளவு புதிய தாராளவாத கொள்கைகளின் காலம் முழுக்க உயர்ந்துகொண்டே தான் இருக்கிறது. இது, 1993-94 ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்களையும், 2011-12 ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்களையும் ஒப்பிடுகையில் நமக்குப் புலப்படுகிறது. இந்த அளவு 2017-18 புள்ளிவிபரங்களில் இன்னும் அதிகமாக உயர்ந்திருக்கக் கூடும்.
மோடி அரசு இந்த தகலை பதுக்குவதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. இதற்கு முன்பும் கூட வேலையின்மை குறித்த விபரங்களை இந்த அரசு மறைத்தது. 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை நிலவுவதை காட்டிய புள்ளிவிபரங்களை மக்களவைத் தேர்தலுக்கு முன் அரசாங்கம் வெளியிடவில்லை. தேர்தலுக்கு பின்பாவது அந்த தரவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. தற்போதைய நுகர்வோர் செலவீட்டு புள்ளிவிபரங்களை வெளியிடவே போவதில்லை என அரசாங்கம் முடிவுசெய்துள்ளது. அடுத்த ஐந்தாண்டான 2021-22 வரை இந்த அரசு காத்திருக்கும், அதுவரை தனக்கு ஏற்ற முடிவுகள் வரும்படியாக கணக்கெடுப்பின் செயல்முறைகளை மாற்றியமைக்கும்.
இந்த விபரங்களை வெளியிடாததற்கு, அவற்றின் ‘தரம் சரியில்லை’ என அரசாங்கம் தெரிவித்துள்ள காரணம் வினோதமானதாக உள்ளது. இந்த சர்ச்சையை அதிகாரிகளிடமும் தேர்ந்தெடுக்கப்பட்ட “வல்லுனர்களிடமும்” மட்டும் முடிவு செய்வதற்கு கொடுப்பதை விட ஆய்வாளர்களிடமும், பொதுமக்களிடமுமே விட்டிருக்கலாம். விபரங்களை ளியிட்டுவிட்டு, இந்த விபரங்கள் தரமானது அல்ல, எனவே இதை வைத்துக்கொண்டு ஆழமான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டாம் என கூறியிருக்கலாம்.
சொல்லப்போனால், 2009-10 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஐந்தாண்டு கணக்கெடுப்பில், நாட்டின் வறுமை 2004-05 ஆண்டை காட்டிலும் கணிசமாக உயர்ந்திருப்பது தெரியவந்தது. அப்போதைய அரசாங்கம், 2011-12 ஆம் ஆண்டு மீண்டும் பெரிய அளவிலான புதியதொரு கணக்கெடுப்பை நடத்த உத்தரவிட்டது. 2009-10 ஆண்டு ஏற்பட்ட வறட்சி கணக்கெடுப்பின் விபரங்களை பாதித்திருக்கக் கூடும் என இதற்கு காரணம் தெரிவிக்கப்பட்டது. என்றபோதிலும் 2009-10 க்கான கணக்கெடுப்பின் முடிவுகளை அப்போதைய அரசு வெளியிடவே செய்தது. 2011-12ல் நல்ல விளைச்சல் இருந்தமையால் எதிர்பார்த்ததைப் போலவே, கணக்கெடுப்பின் முடிவுகள் நுகர்வோர் செலவீட்டில் உயர்வையே காட்டின. ஆனாலும், இந்த கணக்கெடுப்பு நவ தாராளவாத கொள்கைகள் அமலாகும் காரணமாக வறுமை உயர்வதையே காட்டின.
கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கு செலவிடப்பட்ட பணத்தை மொத்தமாக விரயம் செய்யும் வகையில், ஒரு கணக்கெடுப்பு விபரங்கள் முற்றிலுமாக நசுக்கப்படுவது இதுவே முதல் முறை. தான் உருவாக்கி வைத்திருக்கும் ‘அச்சே தின்’ என்ற மாயை அழிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக, தேசத்தின் இத்தனை வளங்களை விரயம் செய்ய இந்த அரசு துணிகிறது என்றால், இது இந்த அரசாங்கம் கொண்டிருக்கும் பிம்பப் போதையின் உச்சத்தைக் காட்டுகிறது.
நம்மை மேலும் கவலைப்பட வைப்பது என்னவென்றால், இந்த அரசு தனது பிம்பப்போதையினால், நாட்டின் புள்ளியியல் கட்டமைப்பைச் சிதைத்துவிடுமோ என்பது தான். இந்த புள்ளியியல் கட்டமைப்பு, பேராசிரியர் பி.சி. மகலனோபிஸ் என்பவரால், ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்த போது கட்டமைக்கப்பட்டது. அவர் அமைத்த தேசிய மாதிரி கணக்கெடுப்பு என்பதே அப்போதைய உலகின் மிகப்பெரிய மாதிரி கணக்கெடுப்பு. அதன் மூலம் கிடைத்த விபரங்கள் எந்த மூன்றாம் உலக நாடுகளிலும் இல்லாத அளவுக்கு விரிவானவை; பல்வேறு ஆய்வுகளுக்கு இன்றியமையாத உள்ளீட்டுத் தகவல்களாக அமைந்தவை. நம் நாட்டின் பெருமையாகவே இந்த கணக்கெடுப்பு இருந்து வருகிறது.
பிம்பப் போதையினால், செலவீடு குறித்த தகவலின் தரம் சரியில்லை என்று சொல்கிற இந்த அரசு அதற்காக தெரிவிக்கின்ற காரணம்: பிற அதிகாரப்பூர்வ பொருளாதார குறியீடுகளுடன் இந்த விபரங்கள் ஒத்துப்போகவில்லை என்பதே ஆகும். ஆனால், நமக்கு கிடைத்துள்ள மற்ற விபரங்களை வைத்துப் பார்த்தால், நுகர்வோர் செலவீட்டு புள்ளிவிபரங்கள் அவற்றோடு ஒத்துப்போகவே செய்கின்ற என்பது நமக்குத் தெரிகிறது. வேலையின்மை குறித்து முன்னர் கிடைத்த விபரங்களை இது உறுதிப்படுத்துகிறது, விவசாய வருமானம் குறித்த விபரங்களை உறுதிப்படுத்துகிறது. ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு புள்ளிவிபரம் இந்திய பொருளாதாரத்தின் மோசமான நிலையைக்குறித்து வந்துகொண்டிருக்கும் சூழலில், நாட்டின் பொருளாதாரம் கடுமையான சரிவை சந்தித்து வருகிறது என்பதையே இந்தப் புள்ளிவிபரமும் உறுதிப்படுத்துகிறது. சமீபத்தில், பிஸ்கட் போன்ற சாதாரண பொருட்களின் விற்பனை கூட சரிந்து வருகிறது என்கிற உண்மையை நுகர்வோர் செலவீட்டில் ஏற்பட்டுள்ள சரிவு உறுதிப்படுத்துகிறது.
நாடு மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இந்த சூழலில், கிடைக்கும் ஒவ்வொரு புள்ளிவிபரத்தையும் பயன்படுத்தி எதிர்கொள்ளும் சிக்கலைப் புரிந்துகொள்ளாமல், இது போன்ற முக்கியமான புள்ளிவிபரங்களை மோடி அரசாங்கம் பதுக்குகிறது. இது தான் சிக்கலில் இருந்து மீள இந்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை!