மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


இந்தியாவுக்கு எதிரான ‘குடியுரிமை’ கூராயுதம்!


இரா. சிந்தன்

Download : Marxist Reader (android)

(டிசம்பர் 2019 மார்க்சிஸ்ட் இதழில் இடம்பெறும் இக்கட்டுரை, முன்னுக்கு வந்துள்ள குடியுரிமை சிக்கலை ஒட்டி இணைய வாசிப்புக்காக பகிரப்படுகிறது)

குடியுரிமை என்பதை தன் அரசியலுக்கான புதிய ஆயுதமாக தீட்டத் தொடங்கியிருக்கிறது பாஜக. குடியுரிமை சட்டத் திருத்தத்தை கொண்டுவந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றவும் செய்தது. அதில் மத அடிப்படையில் இந்தியக் குடியுரிமையை தீர்மானிக்கும் தன் நோக்கத்தை அப்பட்டமாகவே வெளிப்படுத்தியுள்ளது.

அசாமில்,  ‘இந்திய குடிமக்களின் தேசிய பதிவேடு’ பட்டியல் வெளியிடப்பட்டதும், அது ஒரு புதிய குழப்பத்தை ஏற்படுத்தியதையும் நாம் அறிவோம். இப்பட்டியலில் இடம் பெறாத 19 லட்சம் பேர் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டனர். பாஜக இப்படியொரு பதிவேடு இந்தியா முழுவதுமே கொண்டு வரப்பட வேண்டும் என்ற வாதத்தை முன்வைக்கிறது. அசாம் மாநில பட்டியல் வெளியான சில நாட்களுக்குப் பின் அவர்கள் கூச்சலை சற்று குறைத்துக்கொண்டார்கள். அதற்கு காரணம், 40 லட்சம் பேர் அதுவும் ‘வந்தேறிகள்’ வெளியேற்றப்படுவார்கள் என்ற தங்கள் பிரச்சாரம் பொய்த்துப்போனதே ஆகும். அசாம் மாநிலத்தில் பாதிக்கப்பட்ட மக்களில் முஸ்லிம்கள்  பெரும்பான்மையாக இல்லை. 

அவர்களுக்கு இது சிறிய ஏமாற்றம்தான். உத்திரப் பிரதேச மாநிலத்தில், மீரட் கண்டோன்மென்ட் தொகுதியின் எம்.எல்.ஏவான சத்ய பிரகாஷ் அகர்வால் ‘வடிகட்டும் வேலையை’ நாடு முழுவதும் செய்வோம் என திமிராகவே இப்போதும்  பேசுகிறார்.பாஜகவின் தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா, ‘முஸ்லிம்களை’ மட்டும் குறிவைத்து தங்கள் திட்டத்தை மாறுதலுக்கு உள்ளாக்கி செயல்படுத்துவோம் என்கிறார். அசாமில் கணக்கெடுப்பை மீண்டும் நடத்துவோம் என்கிறார். (அந்த மாநிலத்தில் ஏற்கனவே மேற்கொண்ட கணக்கெடுப்பிற்கே சுமார் ரூ.1,600 கோடி செலவு ஆகியிருக்கிறது). அமித் ஷா பேச்சின் ஒரு பகுதி ‘முஸ்லிம் அல்லாதவர்களுக்கு பாஜக ‘தயவு’  உண்டு என்பதாகும்’. இது முஸ்லிம் அல்லாத வாக்கு வங்கியை நோக்கிய தூண்டில். மற்றொரு பகுதி, அவர்களுடைய திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு முன் நகர்த்துவது. இந்திய நாட்டின் குடியுரிமையையே மத அடிப்படையிலானதாக மாற்றியமைக்க வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ். செயல் திட்டமாகும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் முகமான பாஜக இந்த முயற்சியை வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்திலேயே தொடங்கியது.

அசாம் ஒப்பந்தம் – வரலாற்று சுருக்கம்

ஆர்.எஸ்.எஸ்/பாஜக திட்டம் குறித்து பேசுவதற்கு முன், அசாம் மாநிலத்தின் சூழலை சுருக்கமாக பார்ப்போம். 1970களின் இறுதியில் அசாம் மாநிலத்தில் மாணவர் இயக்கம் எழுந்தது. இந்த இயக்கத்தின் முழக்கங்களில் ஒன்று அசாம் மாநிலத்தில் குடியேறியவர்களை (வங்க தேசத்தவர்களை) வெளியேற்ற வேண்டும் என்பதாகும். இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் ராஜீவ் காந்தி தலைமையிலான அரசாங்கம் 1985 ஆம் ஆண்டில் ஒரு ஒப்பந்தம் (அசாம் அக்கார்ட்) ஏற்படுத்திக் கொண்டது. அதன்படி ஒருவருடைய குடும்பத்தாரின் பெயர் 1951 அசாமில் ஏற்படுத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம் பெற்றிருக்க வேண்டும். அல்லது 1971 மார்ச் 24 வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். இவை அல்லாமல் வேறு சான்றுகளையும் கொடுக்கலாம். இப்பிரச்சனையில் உச்ச நீதிமன்றமும் தலையிட்டு நெறிப்படுத்தியது.

இந்திய குடிமக்களின் தேசியப் பதிவேடு ஏற்படுத்தப்பட்ட வரலாற்றை படிக்கும் எவருக்கும் அது அசாம் மாநிலத்துக்கு மட்டுமேயான தனித்துவமான சூழலில் எழுந்தது என்பதை புரிந்துகொள்ள முடியும். மேலும், 1951 ஆம் ஆண்டிலேயே அந்த மாநிலத்தில் இவ்வாறான ஒரு பதிவேடு ஏற்படுத்தப்பட்டிருந்தது என்பதால், அதனை அடிப்படையாகக் கொள்ள முடிந்தது என்பதையும் பார்க்க வேண்டும். (புதுவை 1963 ஆம் ஆண்டில்தான் யூனியன் பிரதேசமானது என்பதையும்,கோவா 1974 ஆம் ஆண்டில்தான் இந்தியாவுடன் இணைந்தது என்பதையும் பார்க்கும்போது குடியுரிமை என்பதற்கு ஆண்டு அளவுகோல் போதுமா என்ற கேள்வியும் எழுகிறது)

ஆனால், அறிவியல் பூர்வமான வரையறை எது என்ற கேள்வியையே பாஜக விரும்பவில்லை. அசாமின் சூழலில் எழுந்த ஒரு முடிவை வைத்துக்கொண்டு நாடு முழுவதும் குடியுரிமை குறித்த வரையரையை மாற்றியமைப்பதே அவர்களின் நோக்கமாகும்.

ஏக காலத்தில் அவர்களுடைய செயல் திட்டத்தை பல்வேறு முனைகளில் முன்னெடுக்கின்றனர்.  இந்தக் கட்டுரையில்   ‘குடியுரிமை’ பிரச்சனையை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

இந்தியக் குடியுரிமை பற்றிய ஆர்.எஸ்.எஸ். நிலைப்பாடு

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் குருஜி கோல்வால்கர் 1939 ஆம் ஆண்டில் ‘நாம் அல்லது நமது தேசியம் – ஒரு விளக்கம்’ என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். அதில் ஆர்.எஸ்.எஸ். ஏற்படுத்த விரும்புகிற தேசம் குறித்து பின்வருமாறு விளக்குகிறார். “இந்து இனம் தனது இந்து மத கலாச்சாரம் மற்றும் மொழியுடன் (சமஸ்கிருதம் மற்றும் அதிலிருந்த பிறந்த மொழிகளுடன்) அதன் தேசிய கருதுகோள் முழுமையடைகிறது” என்பதே அவரது விளக்கமாகும். மேலும், மேற்சொன்ன வரம்பிற்குள் வராத குடிமக்களை இரண்டாந்தர குடிமக்களாகவே நடத்தவேண்டும் என்கிறது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தம்.

மேலும் 1923இல் வி.டி. சாவர்க்கர் ’இந்துத்துவா’ என்ற புத்தகத்தை வெளியிடும்போது ‘இந்துத்துவா’-விற்கும் இந்து மதத்திற்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை என்று தெளிவுபடக் கூறியுள்ளார். ஏனென்றால் அது ஒரு அரசியல் திட்டமே ஆகும். மதத்திற்கும், ஆன்மீகத்திற்குமான சொல் அல்ல. ‘இராணுவத்தை இந்துமயமாக்கு; இந்துதேசத்தை இராணுவமயமாக்கு’ (`Hinduise the military, militariseHindudom’) என்ற முழக்கத்தையும் அவர் முன்வைத்ததை இத்தோடு இணைத்துப் புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறாக அவர்கள் கட்டமைக்கும் ‘தேசத்தில்’ மற்றவர்கள் எப்படி நடத்தப்படுவார்கள்?. இதுபற்றி கோல்வால்கர் தனது புத்தகத்தில் குறிப்பிடும்போது “இந்துஸ்தானத்தில் அந்நிய இனங்கள் இந்து கலாச்சாரத்தையும், மொழியையும் ஏற்க வேண்டும்” என சொல்வதுடன் அவ்வாறு ஏற்காதவர்கள் இந்து தேசத்திற்கு அடிபணிந்து வாழ வேண்டும்; அவர்கள் எதையும் எதிர்பார்க்கக் கூடாது; எந்த முன்னுரிமையையும் பெற முடியாது; மிகக் குறைவான முன்னுரிமையைக் கூட –குடியுரிமையைக் கூட பெற முடியாது” (பக்கம் 104-105) என்கிறார்.

இப்போதுள்ள ‘அனைவருக்குமான இந்தியா’ என்ற நிலையை மாற்றி சொந்த குடிமக்களுக்குள்ளேயே மோதலை தீவிரப்படுத்துவதுதான் ஆர்.எஸ்.எஸ். தத்துவமும் செயல்திட்டமும் ஆகும். இந்த முடிவுக்கு அவர்கள் வருவதற்கு உதவியாக அமைந்தது ஜெர்மனியில் அமைந்த நாஜி அரசாங்கம். கோல்வால்கர் தன்னுடைய புத்தகத்தில் நாஜி அரசு யூதர்களுக்கு இழைத்துக் கொண்டிருந்த கொடுமைகளைக் குறிப்பிட்டு அவைகளை வரவேற்று எழுதியிருக்கிறார். அதுபற்றி கீழ்க்காணும் வகையில் குறிப்பிடுகிறார் ‘செமிட்டிக் மொழிகள் பேசுகிற – யூதர் – இனத்தை வெளியேற்றியதன் மூலம் ஜெர்மனி உலகை அதிரச் செய்தாள். அதன் மூலமே ஒரு இனத்தின் பெருமை உச்சம் தொட வைக்கப்பட்டது.” என்றதுடன் அந்த கொடூரத்தில் இருந்து ‘இந்துஸ்தான்’ கற்றுக் கொள்ள வேண்டும்;  லாபமடைய வேண்டும் என்றார். எழுதியது மட்டுமல்ல; ஜெர்மனியிலும், இத்தாலியிலும் செயல்பட்ட அமைப்புகளுடன் தொடர்பும் ஏற்படுத்திக் கொண்டார்கள்.

இந்துத்துவா எதற்காக உருவாக்கப்பட்டது?

சாவர்க்கர் 1907 ஆம் ஆண்டில் ஒரு புத்தகம் எழுதினார்.அந்த புத்தகம் 1857 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் சுதந்திரப் போராட்டத்தை பற்றியது. இந்தப் போராட்டக் களத்தில்தான் “இந்துக்களும் முஸ்லிம்களும் முதல் முறையாக இணைந்தார்கள்” என்று குறிப்பிட்டதுடன், அவ்வாறு நடந்திருக்காவிட்டால் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்த மோதல் போக்கு முடிவுக்கு வந்திருக்காது என எழுதியிருக்கிறார். 1913 ஆம் ஆண்டில்  சவார்க்கர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் அந்தமான் சிறையில் அடைக்கப்படுகிறார்.

அந்தமான் சிறையில்,அடுக்கடுக்கான துன்பங்களுக்கு பிறகும் விடுதலைப் போரைக் காட்டிக் கொடுக்காத வீரத் தியாகிகளைப் போன்றவர் அல்ல சவார்க்கர். அவர் மன்னிப்புக் கடிதங்களை எழுதுகிறார். 6 முறை மனுப் போடுகிறார். அதில் ஒரு கடிதத்தில்,“(பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு) பெருந்தன்மையுடன், கருணையுடன் என்னை சிறையிலிருந்து விடுவிக்குமானால், நான் (பிரிட்டிஷ் காலனி) அரசின் அரசியல் சட்டத்தை உயர்த்திப் பிடிப்பவனாக இருப்பேன். பிரிட்டிஷ் அரசின் விசுவாசத்திற்கு உரியவனாக இருப்பேன்’ என்று இறைஞ்சிக் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த மாற்றத்தின் பிறகே அவர் ‘இந்த்துவா” என்ற அரசியல் சித்தாந்தத்தை வடிவமைக்கிறார்.

அது பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தங்களுடைய பிரித்தாளும் சூழ்ச்சியை செயல்படுத்தத் தொடங்கியிருந்த காலகட்டமாகும். அந்த திட்டத்திற்கு உதவியாகவே ‘இந்துத்துவா’ கருத்தியல் வடிவமைக்கப்பட்டது. மேலும், இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கு அடிப்படையாக அமைந்த ‘இரு தேசக்கொள்கையையும்’ சவார்க்கரே முதலில் முன்வைத்தார் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். சுமார் 10 லட்சம் மரணங்களையும், மிகப்பெரும் எண்ணிக்கையில் மத அடிப்படையிலான இடப்பெயர்வையும் ஏற்படுத்திய அந்த பிரிவினை, வரலாற்றின் ஆறாத வடுவாக அமைந்தது. இவ்வகையில், பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் நலன்களைக் காக்கும் விதமாகவே ‘இந்துத்துவா’ உருவானது; செயல்பட்டது.

இதன் காரணமாகவே, பாஜக முன்வைக்கும் தேசியமும், குடியுரிமையும் ‘காலனி ஆதிக்க எதிர்ப்பை’ அடிப்படையாக கொண்டிருக்கவில்லை. காலனி ஆதிக்க எதிர்ப்பின் மூலம் வடிவம் பெற்ற இந்திய தேசியத்தையும், மக்களிடையே வலுப்பட்ட மத நல்லிணக்கம், மதச்சார்பற்ற அரசியல் என அனைத்தையும் நிராகரிப்பதுடன், அதனைச் சிதைத்து அழிக்கவே திட்டமிட்டது. இப்போதும் அது கார்ப்பரேட் பெருமுதலாளிகளின் நலன்களை பாதுகாக்கும் வகையில் தன் பாசிச செயல்திட்டத்தை முன்னெடுக்கிறது.

பாசிசம்: உருவாக்கம் – வளர்ச்சி

முதல் உலகப் போருக்குப் பின் சில காலம் உலகப் பொருளாதாரம் வளர்ச்சியடைவது போல் தோன்றினாலும் மீண்டும் நெருக்கடிக்குச் சென்றது. இத்தகைய பொருளாதார சூழலில்தான் பாசிச அரசியல் பிறப்பெடுத்தது என்பது வரலாறு.

பாசிச அரசியலானது தானாகவே ஒரு பெரும் சக்தியாக வளர முடியாது. “முதலாளித்துவ வர்க்கம் தனது ஆதரவையும், ஊக்கத்தையும் வழங்குகிறபோதே பாசிசமானது தன்னை ஒரு இயக்கமாக அமைத்துக் கொள்ள முடியும், கீழ் நடுத்தர வர்க்கத்தின் பிற்போக்கு சக்திகளை திரட்டி அமைப்பின் பின் படை சேர்ப்பது இவ்வாறுதான் சாத்தியமாகும்” என்கிறார் மார்க்சிய சிந்தனையாளர் ஜான் பெல்லோமி போஸ்டர். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் தயவோடு உருவாகி வளர்ந்த பாசிச கருத்தியல் மக்களிடையே வேர் விடவோ, வலிமை பெறவோ முடியவில்லை. இந்திய முதலாளித்துவ சக்திகளுக்கு பாசிசம் தேவைப்பட்டிருக்கவில்லை. 

இப்போது, உலக முதலாளித்துவ உற்பத்தி அமைப்புசார் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. பொருளாதாரத்தில் பெரும் தேக்கம் நிலவுகிறபோது அது லாபத்தில் சரிவை ஏற்படுத்தும். குறைந்த பலன்களே கிடைக்கும்போதும் அதில் பெரும் பகுதியை தன் வசமாக்க விரும்புகிறது முதலாளித்துவம். எனவே அது பழைய ‘தாராளவாத ஜனநாயக’ அரசாங்கமும், அரசியலும் போதாது என நினைக்கிறது. தன்னுடைய வெளிப்படையான கொள்ளை நடவடிக்கைகளுக்கும், வரன்முறையற்ற சுரண்டலுக்கும் யார் சேவையாற்ற முடியும் என தேடுகிறது. இதற்காகத்தான் பாசிச சக்திகளுக்கு பெரும் பணமும், ஆதரவும் கொடுத்து ஊக்கப்படுத்துகிறது.

இரண்டு உலகப் போர்களுக்கு இடையிலான காலகட்டத்தைப் போல் அல்லாமல் இப்போதைய பாசிச அரசியல் சக்திகளின் செயல்பாடு சற்று வேறுபடுகின்றன. ‘நவ-பாசிசத்தின்’ கூறுகள் நாட்டுக்கு நாடு, சூழலைப் பொறுத்து மாறுபடும். அதன் அடிப்படையான கூறு வெகுமக்களிடையே ஒற்றுமையைச் சிதைத்து, வரன்முறையற்ற சுரண்டலுக்கு வழிவகுப்பதுதான்.

உள்ளிருக்கும் எதிரிகளும், உண்மை குடிமக்களும்:

பாசிசம் தன்னை உயிரோடு வைத்திருப்பதற்காக தொடர்ந்து முயற்சிகளை முன்னெடுக்கிறது. அது திட்டமிட்ட வகையில் ‘உள்ளிருக்கும் எதிரிகளைக்’ கற்பனையாகக் கட்டமைக்கிறது. வன்முறைகளை தூபம் போட்டு வளர்க்கிறது. காலனி ஆதிக்க காலத்திலும் சரி, விடுதலைக்கு பிறகும் சரி ஹைதராபாத், ஜம்மு, ஆல்வார்-பாரத்பூர்-மிவாட், பாட்டியாலா என எங்கெல்லாம் முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பு மோதல்கள் நடந்தனவோ அங்கெல்லாம் இந்து மஹாசபாவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் பங்கெடுத்தன என்பதை பல்வேறு ஆய்வறிக்கைகள் காட்டுகின்றன. பிரிவினையின்போது நடைபெற்ற வன்முறைகளிலும்  இவர்களின் கை இருந்தது.

‘உள்ளிருக்கும் எதிரிகளை’ கட்டமைத்து அதன் உதவியுடன் ஒரு நாட்டின் ‘உண்மையான’ உறுப்பினர்கள் என்ற மாய நம்பிக்கையையும் அது ஏற்படுத்துகிறது. அப்படிப்பட்ட ‘உண்மையான’ உறுப்பினர்களைக் கொண்ட ஒரு தேசம் உருவாகிறபோது, அது அந்த நாட்டுக்கே ‘மறு பிறவியாக’ அமையும் என்ற நம்பிக்கையை தன் ஆதரவுத்தளத்தில் விதைக்கிறது. இந்த மாற்றம் நடந்துவிட்டால் அரசியலும், கலாச்சாரமும் மாற்றம் பெற்றுவிடும்; நெருக்கடிகள் தீரும்; ஊழல் முடைநாற்றங்கள் முடிவுக்கு வரும் என்று பிரச்சாரம் செய்கிறது. அடிப்படையை மாற்றாமலே எல்லாவற்றையும் மாற்ற முடியும் என்கிற போலியான இந்த ‘நம்பிக்கை’யே பாசிசத்தின் தத்துவம், பிரச்சாரம், அரசியல் மற்றும் நடவடிக்கைகளின் அடிநாதமாகும். இன்றும் பாசிச சக்திகளின் செயல்பாட்டில் இதை நாம் உணர்கிறோம். மேலும்,அதே பாஜக-வானது மற்றொரு பக்கம் கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு அப்பட்டமான சலுகைகளை அள்ளி வழங்கிக் கொண்டிருப்பதையும் நாம் அறிவோம்.

குடியுரிமை சிக்கலின் அடுத்த கட்டம் என்ன?:

இந்திய குடிமக்களின் தேசிய பதிவேட்டை நாடு முழுவதும் விரிவாக்க நினைக்கும் பாஜகவின் செயல் திட்டம், நாஜிக்களின் வரலாற்றில் இருந்து ஊக்கம் பெற்றது என்பதைப் பார்த்தோம். நாஜிக்களின் சட்ட நிபுணரான கார்ல் ஸ்மிட் இந்த திட்டம் குறித்து மேலும் விரிவாக கூறியிருக்கிறார். ஆரியர் அல்லாதவர்களை நீக்குவது,  தலைவரை சட்டத்திற்கு மேலானவராக நிறுத்துதல் என இரண்டு வழிமுறைகளை  ஆளுகை செலுத்துவதற்கான உத்திகளாக அவர் முன்வைத்தார். ‘ஒற்றைத்தன்மை மற்றும் தூய்மை ஆகிய லட்சியங்களை ‘பன்மைத்துவத்தை அழிப்பதன்” மூலமே அடைய முடியும் என்கிறார்.

உலகம் முழுவதுமே வலதுசாரிகள் இந்த நிலைப்பாட்டினை எடுத்து வருகிறார்கள். அந்தந்த நாடுகளின் சிறுபான்மையினரை ‘இரண்டாந்தரக் குடிமக்கள்’ என்ற நிலைக்கு தாழ்த்துகின்றனர். மோடியின் இரண்டாவது ஆட்சிக்காலம் அந்தப் பாதையில் சற்று வேகமாகவே பயணிக்கிறது. இதுவரையிலும் அவர்கள் மேற்கொண்டுவந்த ஒடுக்குமுறைகளை இப்போது நிறுவனமயப் படுத்துகிறார்கள்.

அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைகள் இதனை எளிதாக அனுமதிப்பதில்லை என்பது அவர்களுக்கு சில சிரமங்களை ஏற்படுத்துகிறது. ‘பாஜக விரும்புகிற’ குடியுரிமையை முன்வைக்கும் மசோதாவும் அரசமைப்புச் சட்ட வரம்புக்கு உட்பட்டது அல்ல. ஆனால், சில அண்டை நாடுகளில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிப்பதனை முன்வைத்து, ‘முஸ்லிம் அல்லாத’ அளவுகோலை, குடியுரிமைக்கு பொருத்துகிற தன் வாதத்தினை பிரச்சாரம் செய்ய முயற்சிக்கிறது பாஜக.

இன்றைக்கு நடந்துகொண்டிருக்கும் குழப்பங்களுடன் சேர்த்து, இந்தி மொழியை திணிப்பது மற்றும் மும்மொழித் திட்டம் ஆகியவற்றிற்கு எழுந்திருக்கும் எதிர்ப்புகள் என பல்வேறு நிகழ்வுகள் அவர்களுடைய செயல்திட்டத்திற்கு சில தடைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. முதலில் அவர்கள் ‘முஸ்லிம்களை’ மட்டும் குறி வைக்கிறார்கள். அதே சமயம் “முதலில் முஸ்லிம்கள், அடுத்தது கிறுத்துவர்கள்” என்ற வி.எச்.பி. முழக்கத்தைப் போல படிப்படியாக நகர்வோம் என்கிறார்கள் சங்க பரிவாரங்கள். குடியுரிமை சட்டம் மற்றும் பதிவேடு ஏற்படுத்துகிற முயற்சியின் அடுத்தடுத்த கட்டங்கள் இப்படித்தான் இருக்கும். அந்நிய குடியேற்றத்தை நீக்குவதல்ல; இந்தியாவிலேயே காலம் காலமாக வசித்துவரும் பலவகைப்பட்ட மத, இன, மொழி அடையாளம் கொண்டிருக்கும் மக்களிடையே  ‘உயர்ந்த’ மற்றும் ‘இரண்டாந்தர’ என்ற எண்ணத்தை உருவாக்கி மோதச் செய்வதுதான் அந்த செயல்திட்டத்தின் மெய்யான நோக்கம்.

ஆதாவது, கும்பல் கொலைகள், பசுக்காப்புபடையினர், லவ் ஜிகாத் என்ற பெயரால் ‘உதிரிகளை’ உருவாக்கி நிகழ்த்தப்பட்டு வந்த வன்முறைகளை இனி சட்டத்தின் பேரால் நடத்த விரும்புகிறார்கள். அந்த தாக்குதல்கள், அரசின் நலத் திட்டங்களை மறுப்பு, வேலைவாய்ப்பு மறுப்பது, சட்ட உரிமைகளை மறுப்பது என வளர்த்தெடுக்கப்படும்.

பாசிசமும், முதலாளித்துவ நெருக்கடியும்:

உலகம் முழுவதுமே சூழல்கள் மாறிவருவது பற்றி மார்க்சிஸ்ட் கட்சி தனது 22வது மாநாட்டில் விவாதித்தது. உலக முதலாளித்துவம் மீள முடியாத அமைப்பு நெருக்கடியில் சிக்கியுள்ளது. அதன் விளைவுகள் பல வழிகளில் வெளிப்படுகின்றன. “இனவாதம், இனவெறுப்பு மற்றும் வலது அதிதீவிர நவ-பாசிச போக்குகள்” வளர்கின்றன. நிதி மூலதனத்தின் நலன்களைக் காக்கும் விதமாகவே இந்தியாவிலும் வலதுசாரி அரசியல் வலுவடைகிறது. அதன் விளைவுகளில் ஒன்றாக மக்களுடைய ஜனநாயக உரிமைகளும், நாடாளுமன்ற ஜனநாயக கட்டமைப்பும், ஜனநாயக நிறுவனங்களும் தாக்கப்பட்டு எதேச்சதிகாரம் மேலோங்குகிறது.

பாசிசம் என்பது “வெளித்தோற்றத்தில் அது பிற்போக்கு சக்திகளின் பயங்கரவாத சர்வாதிகாரம், பெருமளவில் ஆதிக்கத் தன்மையுடையது. மேலும் நிதி மூலதனத்தின் அனைத்து ஏகாதிபத்திய வடிவங்களையும் உள்ளடக்கிய ஒன்று” என்கிறார் மார்க்சிய அறிஞர் ஜார்ஜ் டிமிட்ரோவ். மேலும், முதலாளித்துவத்தின் துணை இல்லாமல் பாசிச அரசியல் சக்திகள் அதிகாரத்தில் அமர்ந்திருக்கவில்லை. ஏகாதிபத்தியத்தின் நலன்களை உச்ச அளவில் அமலாக்கக்கூடியதே பாசிசம். அதற்கு ‘அந்நியச் சுரண்டல்’ மீது ‘அளவுகடந்த பாசமே’ உண்டு. அதே சமயம் மக்களிடையே “அவமதிக்கப்பட்ட தேசத்தின் மேலங்கியாகவும்,  வெடித்துக் கிளம்பும் ‘தேசிய’ உணர்வுகளின் முறையீடாகவும் தன்னைக் காட்டிக் கொள்வதில் வெற்றியடைகிறது. அதற்கு முகம் ஒன்று; முகமூடி வேரொன்று.

முதலாளித்துவம் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் சூழலில், வரன்முறையற்ற சுரண்டலை கட்டவிழ்த்து விடுகிறது. அதனால்தான், வேலையின்மையும், உற்பத்தி நெருக்கடியும் தீவிரமடைகின்றன. ஆனால், இந்த நிலைமையை மாற்றியமைக்க பாசிச அரசியலில் தீர்வு எதுவும் கிடையாது. பாசிசத்தின் பொருளாதாரக் கொள்கை முதலாளித்துவ அமைப்பை பாதுகாப்பதுதான்.

இத்தாலியின் முசோலினி பேசும்போது, ‘முதலாளித்துவ அமைப்பை மாற்றியமைக்கும் திட்டம் எதுவும் தங்களிடம் இல்லை’ என வெளிப்படையாக அறிவித்தார். ஹிட்லர் தனது ஆட்சியில் தனிச்சொத்துடைமையை பாதுகாத்ததுடன், தனியார்மயத்தை வேகமாக முன்னெடுத்தார். உழைக்கும் மக்களின் கூலியை வெட்டிச் சுறுக்கப்பட்டது. கீனிசியன் பொருளாதார கோட்பாடுகளை அமலாக்கி அதன் வழியாகவும் முதலாளித்துவத்தையே ஊக்கப்படுத்தினார். இவ்வகையில் முதலாளித்துவத்தின் வேட்டை நாயாகவே வளரும் பாசிசத்தை வீழ்த்துவது, முதலாளித்துவத்தை அம்பலப்படுத்தாமல் சாத்தியமில்லை.

ஜனநாயக உரிமைகளை காப்போம்:

குடியுரிமை மட்டுமல்ல, இந்திய மக்களின் ஜனநாயக உரிமைகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பறிக்கப்படுகின்றன. முதலாளித்துவ ஜனநாயகக் கட்டமைப்பிற்குள்ளாகவே போராடிப் பெறப்பட்ட பல உரிமைகளை அழித்தொழிக்க முயல்கிறது பாஜக அரசு. குடியுரிமையின் பேரால் மதவழி சிறுபான்மையினரை குறிவைக்கும் அவர்களின் இந்தப் போக்கு உண்மையில் ‘ஒற்றை இந்தியா’ என்ற ஆதிக்கப் போக்கின் வெளிப்பாடாகும். அவர்கள் முன்வைக்கும் ‘இந்து’ மதம், சாதிப்படிநிலை ஏற்றத்தாழ்வை நிலைநாட்டுகிற ஒன்றாகும். அவர்கள் முன்வைக்கும் மொழி ஆதிக்கம், தேசிய இனங்களுக்கு எதிரானதாகும். அவர்களுடைய அரசாங்கக் கட்டமைப்பு ‘கூட்டாட்சி’க்கும் சவால் விடுப்பது. முஸ்லிம்கள், கிறித்துவர்கள், பழங்குடிகள், பட்டியலினத்தார் மற்றும் பெண்கள், தேசிய இனங்கள் என பாதிக்கப்படும் மக்கள் திரளே பெரும்பான்மையிலும் பெரும்பான்மையாகும்.

மேலும், பாசிச செயல் திட்டத்தின் அங்கமாகிய ‘வரன்முறையற்ற சுரண்டலும், முதலாளித்துவக் கொள்ளையும்’ நேரடியாகவே அனைத்து தரப்பு மக்களையும் சிக்கலுக்கு ஆளாக்குகிறது. அது ஏகாதிபத்திய நலன்களோடு கைகோர்த்துக் கொள்வதால் உலக அமைதிக்கும் ஆபத்தாக எழுகிறது. இந்த சூழலை மாற்றியமைப்பது இடது – ஜனநாயக சக்திகளின் ஒன்றுபட்ட போராட்டத்தாலேயே சாத்தியமாகும்.Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: