மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


பெரியார் – சுயமரியாதை இயக்கமும் சோசலிசமும்


(புது தில்லியில் கடந்த 2018, ஜனவரி 3-4 தேதிகளில், அம்பேத்கர் பல்கலைகழகமும், அசோகா பல்கலைகழகமும் இணைந்து நடத்திய ‘திராவிடவியல், தேசியம், கூட்டாட்சித்தத்துவம்’ என்ற தலைப்பிலான ஆய்வரங்கத்தில் முன்வைக்கப்பட்ட கட்டுரை. )

ஆர்.விஜயசங்கர் (ஆசிரியர், பிரண்ட்லைன்)

தமிழில்: ரமணி

தென்னிந்திய லிபரல் கூட்டமைப்பும் (South Indian Liberal Federation) 1916ல் வெளியிடப்பட்ட பிராமணரல்லாதோர் கொள்கை அறிக்கையும் சென்னை மாகாணத்தில் ஒரு புதிய அரசியல் போக்கு மலர்ந்ததையும்,  அது சென்னை மாகாணத்தின் அரசியல் தளத்தில் செல்வாக்கு செலுத்தவுள்ளது என்பதையும், அது மட்டுமல்லாமல் பிற்காலத்தில் ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக செல்வாக்கை செலுத்திக் கொண்டிருக்கும் என்பதையும் வெளிப்படுத்துவதாக அமைந்தன. அவர்களின் அரசியல் கொள்கைகளைத் தாங்கி வந்த ‘நீதி’ என்ற பத்திரிக்கையின் பெயரைக் கொண்டு, அந்தக் கூட்டமைப்பானது  ‘நீதிக்கட்சி’ என்றே அறியப்பட்டது. அந்த (பிராமணரல்லாதோர் கொள்கை) அறிக்கை அன்றைக்கு நிலவிவந்த சிக்கலை  கீழ்வருமாறு முன்வைத்தது:

(மெட்ராஸ்) மாகாணத்தின் மக்கள் தொகையான 4 கோடி 15 லட்சம் பேரில், 4 கோடிப் பேர் பிராமணர் அல்லாதவர்கள். வரி செலுத்துவோரில் கணிசமானவர்கள் அதே பிரிவைச் சார்ந்தவர்கள். அவர்களில் ஜமீந்தார்கள், நிலப்பிரபுக்கள் மற்றும் விவசாயிகளும் அடங்குவர்.  அன்றைய மெட்ராசில் நிலவிவந்த நிலைமை என்னவென்றால் பெரும்பான்மையாக இருந்த அவர்கள் அதற்குரிய அந்தஸ்தோடு அரசியலில் பங்காற்ற முடியவில்லை.  தேசத்தின் பொது அரசியலில் தங்களது செல்வாக்கை குறைந்த அளவே  செலுத்த முடிந்தது; அல்லது முற்றாக செலுத்த இயலவில்லை. திட்டமிட்டு முயற்சியில் ஈடுபடக்கூடிய இன்றைய காலகட்டத்தில் அவர்களின் பொதுநலனை பாதுகாக்க, வளர்த்தெடுக்க அவர்களுக்கென ஒரு அமைப்பு இல்லை. அரசியலில் எதிராளியை, மற்றும் எதிரணி நிபுணர்களை எதிர்கொள்ள அதே அளவு தகுதியுள்ள அவர்களது தரப்பு உண்மைகளை எடுத்துரைக்க தகுதியான நபர்கள் அவர்கள் சார்பில் யாருமில்லை; பத்திரிகையும் இல்லை.  ஆகையால் அவர்களது அரசியல் செல்வாக்கு (15 லட்சமே உள்ள பிராமணர்களோடு ஒப்பிடும் போது) கடுமையான பாதிப்பிற்கு ஆளாகியது.

அந்த அறிக்கை எவ்வாறு பிராமணரல்லாத சமூகம் பாதிப்பிற்கு ஆளானது என்பதை எடுத்துரைக்கிறது.  மெட்ராஸ் நிர்வாகக் கவுன்சில் உறுப்பினர் சர். அலெக்சாண்டர் கார்டியு அவர்களின் அறிக்கையைச் சுட்டிக்காட்டி 1892க்கும்  1904க்கும் இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற மாகாண ஆட்சிப்பணித் தேர்வுகளில் (Madras Provincial Civil Services) வெற்றி பெற்ற பதினாறு பேரில் பதினைந்து பேர் பிராமணர்கள் என்பதை தெரிவித்துள்ளது.  கார்டியு அவர்கள் கூற்றுப்படி உதவிப் பொறியாளர்கள், துணை ஆட்சியர்கள், கீழமை நீதிமன்ற நீதிபதிகள் ஆகிய பதவிகளை பிராமணர்கள் ஏகபோகமாக அனுபவித்து வந்தது தெட்டத் தெளிவாக தெரிய வருகிறது.  மெட்ராஸ் பல்கலைக் கழகம், மெட்ராஸ் சட்டப் பேரவை போன்ற அமைப்புகளிலும் இதே நிலைமையே தொடர்ந்தது. அரசியல் தளத்தில் அந்த கொள்கை அறிக்கை சுட்டிக் காட்டியிருப்பது என்னவென்றால் மெட்ராஸ் மாகாணத்திலிருந்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு தேர்வான பதினைந்து பேரும் பிராமணர்களே.  இது எவ்வாறு அனைத்துத் தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகும் என்ற கேள்வியை அறிக்கை எழுப்பியுள்ளது.

அந்த கொள்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், உயர்மட்ட அதிகார மையங்களில் இருந்து பெறப்பட்ட சான்றாதாரங்களைக் கொண்டிருந்தன. மற்றவர்களைக் காட்டிலும் பிராமணர்களுக்கு  காலங்காலமாக  கிட்டிய கல்விப் பின்புலம், அதன் தொடர்ச்சியாக நவீன கல்வி, குறிப்பாக பத்தொன்பதாம் நூற்றாண்டு முற்பகுதியில் ஆங்கிலக் கல்வி கற்கும் வாய்ப்பு கிட்டியது. இந்த உண்மையை பிரிட்டிஷ் அரசு ஆவணப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பிராமணர்கள்  உயர்கல்வியில் மேலாதிக்கம் பெற்றவர்களாக இருந்தனர்.  1881-82ல் இருந்த பொதுக் கல்வி இயக்ககத்தின் அறிக்கை  (Director of Public Instruction) குறிப்பிடுவது என்னவென்றால், நுண்கலை மற்றும் இளங்கலை இரண்டு பிரிவுக்கும் சேர்த்து நடத்தப்பட்ட தேர்வுகளில் 125 பிராமணர்களுக்கு ஒருவர் வீதமும் 5,888 இதர இந்துக்களுக்கு ஒருவர் வீதம் இருந்ததாக தெரிவிக்கிறது.  சிவில் பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, வேளாண்மை பள்ளிக்கூடங்கள் பெரும் எண்ணிக்கையில் பிராமண சமூகத்தைச் சார்ந்த மாணவர்களை ஈர்ப்பதும் அதே சமயம் இளங்கலை அறிவியல் படிப்பில் அதிகமாகும் ஏற்றத்தாழ்வு அதே அளவில் இருந்து வருவதையும் சுட்டிக் காட்டுகிறது.

ஆங்கிலவழி உயர்கல்வியில் பிராமணர்களின் ஏகபோகம், 1857ல் நடந்த முதல் சுதந்திரப் போருக்குப் (சிப்பாய் கலகம்) பின்னர் விரிவடைந்த, மத்தியத்துவப்படுத்தப்பட்ட, மற்றும் இந்திய மயமாக்கப்பட்ட அதிகார வர்க்கப் பணியிடங்களிலும் பிராமணர்கள் ஏகபோகமாக அனுபவிப்பதற்கு வழிவகுத்தது.   நிபுணத்துவ துறைகளான (liberal professions) சட்டம், மருத்துவம், மற்றும் ஆசிரியப் பணி ஆகியவற்றில் அவர்களின் மேலாதிக்கம் சரியாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிராமணர்கள், பிராமணர் அல்லாதவர்கள் என இரு பிரிவாகப் பிரித்து ஒரு சட்டகத்துக்குள் அடக்குவதன் பல்வேறு அடிப்படைகளில், பிரிட்டிஷ் அரசு இந்தியாவை காணும் பார்வையும் ஒன்றாகும்.   தினமும் அரசு நிர்வாகத்தில், கிட்டத்தட்ட வாழ்வின் அனைத்து தளங்களிலும் எதிர்கொள்ளவேண்டிய மிகவும் சிக்கலான சாதி-மத பிரமைகளை உள்வாங்கி  முடிவுகளை மேற்கொள்ள வேண்டியது ஆட்சியாளர்களின் நடைமுறைத்தேவையாக எழுகிறது.  துப்புரவான ஆங்கிலேய அல்லது காலனி ஆதிக்க வகைப்படுத்துதலை சமூகத்தின் மீது திணிப்பதன் வழியாக தனது கட்டுப்பாட்டைக் கொண்டுவர பிரிட்டிஷ் ஆட்சி விரும்பியது.  உள்ளூர் சமூகமோ அவர்களின் வகைப்படுத்துதலில் காணப்பட்ட துல்லியத்தன்மையோ, துப்புரவினையோ கொண்டிருக்கவில்லை.  பிரிட்டிஷ் ஆட்சியின் சொற்பயன்பாடுகள் பெரும் எண்ணிக்கையிலான உள்பிரிவுகளை ஒன்றாக்கி ஒரே வகைப்பாட்டில் அடக்கியது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்  சென்னை மாகாணத்தில் இருந்த பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை குறித்து கல்வித் துறையின் அறிக்கையை “இர்சிக்” சுட்டிக் காட்டுகிறார்.  1870-71 வாக்கில் கல்வித்துறையானது பள்ளி மாணவர்களை  பிராமணர்கள், இதர இந்துக்கள், கிழக்கிந்தியர்கள், ஐரோப்பியர்கள், முகமதியர்கள், தேசிய கிறிஸ்துவர்கள் மற்றும் பார்சிகள் என பிரித்தது.  1880-ன் முற்பகுதியில் இந்துக்களின் வகைப்பாடு  பிராமணர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் மற்றும் இதர இந்துக்கள் என மாற்றியமைக்கப்பட்டது. அந்த நூற்றாண்டின் இறுதிவாக்கில் பிராமணர்கள், பிராமணர் அல்லாதவர்கள் என வகைப்படுத்தப்பட்டது.

சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் தலைவர்களாக,  பிராமணர் அல்லாத நான்கு கோடி பேர்களின் பிரதிநிதியாக, பிராமணர்கள் இருப்பதை இந்த கொள்கை அறிக்கை கேள்விக்குள்ளாக்கியது. இதே விதமாக பிரதிநிதித்துவ உரிமை குறித்த கேள்வியை வர்க்க நோக்கில் முன்வைத்தோமென்றால் அது நீதிக் கட்சியின் தலைமைக்கு சரியாகவே பொருந்தியது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் ஏ.என். சட்டநாதன் (1969) குறிப்பிடுகிறார், நெருக்கமாக பிணைக்கப்பட்ட சமூகத்தில் பெரும்பான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தாத, அவர்களை அறிந்திராத, அவர்கள் மொழியில் உரையாடாத  பணக்காரர்களில் உயர் வகுப்பினருடையதாகவே அந்த அமைப்பு இருந்தது. சமூகத்தை மாற்றியமைக்கும் நோக்கமோ அல்லது பெரும்பான்மை மக்கள் பயனுற அவர்களின் வாழ்நிலையை உயர்த்தும் நோக்கமோ அவர்களுக்கு இல்லை. … உள்ளூர் சுயாட்சி அமைப்புகளின் ஏற்பாடாக அமைந்த மாவட்ட அவைகளிலும், பொதுச் சேவைகளிலும் பிராமணர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும், டாக்டர் அன்னி பெசண்ட் அம்மையாரால் துவக்கப்பட்டு சென்னையில் பிரபலமடைந்த “ஹோம் ரூல்” இயக்கத்திலும் பிராமணர்கள் செல்வாக்கு பெருகிவருவதைக் குறித்துமே அவர்கள் கவலைப்பட்டனர்.

நீதிக் கட்சி கட்டமைக்க விரும்பிய ‘பிராமணர் அல்லாதார் அடையாளத்தின்’ உள் முரண்பாடுகள், நீதிக்கட்சி தொடங்குவதற்கு பத்தாண்டுக்கு முன்னதாகவே தெரியத் தொடங்கியிருந்தன. தமிழ் நாட்டின் சமூக-பொருளாதார வரலாற்றைப் பார்த்தோமென்றால் பிராமணரல்லாதார் இயக்கம் தோன்றுவதற்கு முந்தைய நூற்றாண்டிலேயே பள்ளர், பறையர், பள்ளியர்கள் (pallis) ஆகிய கொத்தடிமைகளை வைத்திருப்பதில் பிராமணரல்லாத நிலப்பிரபுக்கள் பிராமண நிலப்பிரபுக்களுக்கு சற்றும் சளைத்தவர்களாக இல்லை என்பது தெளிவாகத் தெரிய வருகிறது..  பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தீவிர அடிமை முறை இருந்தது குறித்து தர்மா குமார் தெரிவித்திருப்பது. “ வெள்ளாள (பிராமணரல்லாதார்) விவசாயிகள் அடிமைகளை வைத்திருந்தனர்.  அவர்களை விற்கவும், அடகு வைக்கவும், மற்றும் வாடகைக்கு விடவும் செய்தனர் (அதில் கிடைக்கும் வருமானம் அடிமையின் உரிமையாளருக்கே சொந்தமாகும் ).

மேலும் பள்ளியர்களை வகைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களைப் பற்றி அவர் குறிப்பிடும்போது “1819-ல் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் இங்கு அடிமைகளாக இருப்பது இரு சாதியைச் சார்ந்தவர்கள் மட்டுமே, ஒன்று பள்ளர், மற்றொன்று பறையர் ஆகும்.  அதே சமயம் பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ் (சென்னை மாகாண ஆட்சியர்) அவர்கள் தெரிவித்திருப்பது “வேளாண் பணிகளில் ‘அடிமைகளாக’ உள்ள சாதியினர் பள்ளி, பள்ளன், பறையன் ஆகும்.  பள்ளி சாதியினர் பிராமணர்களுக்கு அடிமைகளாக இருந்தவர்கள்; மற்ற இரு சாதியினரும் பிராமணர் அல்லாதவர்களுக்கு அடிமைகளாக இருந்தவர்கள்.  அதே சமயம் 1881-ல் வெளியிடப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை தெரிவிப்பது என்னவென்றால் பள்ளி சாதியினர் பண்ணை அடிமைகளாக இருந்தவர்கள்;  வெள்ளாள சமூகத்தினருக்கு அடிமைகளாக இருந்தனர் என்கிறது.  விவசாயத்தில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக ஒரு சமயத்தில் தமிழகத்தில் வறண்ட பகுதிகளிலிருந்து பெரும் பகுதி மக்கள் இடம் பெயர்ந்து மற்ற பகுதிகளுக்குச் சென்றனர்.  அது வறட்சிக்கு இட்டுச் சென்றது.  பேரலை போல் தாக்கி பல பகுதிகளை பொது மயானமாக மாற்றியது. சாதி அடுக்குமுறை சமூக-பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்தியது.  இந்த கசப்பான உண்மைகள் பிராமணரல்லாதோர் அறிக்கையில் இடம் பெறவில்லை.

நீதிக்கட்சியின் இந்தக் குறுகிய கண்ணோட்டத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் வேறு யாருமல்ல, ஈ.வெ.ரா. பெரியார் தான்.  பிராமணல்லாதார் அடையாளத்திற்கு ஒரு புதுப் பரிமாணம் உருவாக்கியதில் வெற்றி கண்டவர் அவரே. 1926-ஆம் ஆண்டு மதுரையில் ஒரு பிராமணரல்லாதார் மாநாட்டில் அவர் பேசியது வருமாறு: “முதலாவதாக நமது இயக்கம் என்றால் என்னவென்று சாதாரண மக்களுக்குப் புரிய வைத்திருக்கிறோமா? நாம் சாதாரண மக்களின் அனுதாபத்தை பெற ஏதாவது செய்திருக்கிறோமா? நமக்காக அரசு பதவிகளைப் பெற்றிருக்கிறோம். விருதுகள் பெற்றிருக்கிறோம். ஆனால் இவற்றின் மூலம் சாதாரண மக்கள் பயனடைந்திருக்கிறார்களா?  நமக்குக் கிடைத்த அதிகாரத்தையும், பதவியையும் பயன்படுத்தி பிராமணர்கள் முன்னேறுவதைத் தடுத்திருக்கிறோம். அதில் சந்தேகத்திற்கு இடமில்லை.  ஆனால் மக்களின் துயரங்களிலிருந்து அவர்களை விடுவித்திருக்கிறோமா?  மக்களை அடிமைகளாக, ஏழை கூலித் தொழிலாளியாக, பாட்டாளியாக வைத்திருக்கும் மூட நம்பிக்கையிலிருந்து அவர்கள் விடுபட ஏதாவது செய்திருக்கிறோமா?  நமக்கு பதவிகளும், விருதுகளும் தேவையில்லை என்று சொல்லவில்லை.  அவற்றை பெறுவது மட்டும் நமது நோக்கமல்ல.   நான் பிராமணரல்லாதோர் எனச் சொல்லும் போது 90 சதவீதமாக உள்ள ஏழைகள், ஏதுமற்றவர்களைத்தான் சொல்கிறேன்.  ராஜாக்கள், மற்றும் ஜமீந்தார்களைச் சொல்லவில்லை.  இங்கே கூடியுள்ள உங்களைப் பார்த்துக் கேட்கிறேன்.  நாம் உண்மையிலேயே பிராமணரல்லாதோர் நலனுக்காக பாடுபட உறுதியோடு இருக்கிறோமா? அல்லது ஒரு சிறிய பகுதியினரின் நலனுக்காக இருக்கிறோமா?  இந்தப் பிரச்னையில் புத்திசாலித்தனத்துடனும், பொறுப்புணர்வுடனும் செயல்பட, உறுதியேற்க எல்லாத் தலைவர்களுக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன்.”

வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின் தேவை குறித்தும் அதை காங்கிரஸ் தலைமை ஏற்கும்படி செய்திட தான் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியுற்ற பின்னணியில் 1927-ல் பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறினார்.  இதே காரணங்களுக்காக உடனே நேரிடையாக நீதிக் கட்சியில் போய்ச் சேரவில்லை.  நீதிக்கட்சியை விட்டு விலகி இருக்காவிட்டாலும். 1925ல் ராமநாதன் அவர்களால் துவக்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தை தனது சர்வதேசப் பார்வைக்கு உகந்ததாக, மறுமலர்ச்சிக்கான புதிய சிந்தனைகளுக்கு அகலக் கதவு திறந்து வைத்திருக்கும் அமைப்பாக, தொண்ணூரு வயது வரையிலும் எந்த நோக்கத்திற்காக தனது அரசியல் வாழ்க்கையை அர்ப்பணித்து இருந்தாரோ, அதற்கு ஏற்ப சுயமரியாதை இயக்கம் இருந்ததால், அவ்வமைப்பை தனது நோக்கத்திற்கு உகந்ததாகக் கருதினார்.  சுயமரியாதை இயக்கம் பிராமணரல்லாதார் அடையாளத்திற்கு ஒரு தனித்துவமான, மாறுபட்ட பரிமாணத்தைத் தந்தது. மேலும் அந்த இயக்கத்தை ஜனநாயகப்படுத்தியது.  சமூக அடித்தளத்தை விரிவுபடுத்தவும் செய்தது.

அவர் பார்வையில் பிராமணரல்லாதார் என்பவர் கலாச்சார அடிப்படையில் பிராமணர்களால் அடிமைப்படுத்தப்பட்டவர்கள்; பொருளாதார, அறிவுசார் வளங்கள் பெற தடுக்கப்பட்டவர்கள் என்பதேயாகும்.  சுயமரியாதையுடன், கண்ணியத்துடன் கூடிய ஒரு மனிதனாக மீண்டெழ இவையே உதவும்.  பிராமணீயம் பிராமணரல்லாதார் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றின் உதவியுடன் தத்துவார்த்த அடிப்படையில் சாதி அமைப்பை ஆதரிக்கவும், நிலை நிறுத்தவும் உதவுகிறது. பிராமணரல்லாதார் இயக்கத்தில் உயர் பிரிவினரின் கட்டுப்பாட்டு எல்லைகளை சுயமரியாதை இயக்கத்தினர் தகர்த்தனர்.  ஈ.சா.விஸ்வநாதன் கூற்றுப்படி, சுயமரியாதை அமைப்பினர் தாழ்த்தப்பட்டவர்கள், இதர பிற்படுத்தப்பட்டவர்களான நாடார்கள், அகமுடையார்கள், இசை வேளாளர்கள், செங்குந்தர்கள், வன்னியகுல சத்திரியர்கள் ஆகியோரை நோக்கிச் சென்றனர்.  இந்தச் சாதியினரில் பெரும்பான்மையானவர்கள் விவசாயக் கூலிகள், பயிற்சி இல்லா தொழிலாளிகள், தமிழக மாவட்டங்கள் அனைத்திலும் சமமாக பரவி இருப்பவர்கள். 

ஈ.சா.விஸ்வநாதன் ‘ஈ.வெ.ரா. பெரியாரின் அரசியல் வாழ்வு’ என்ற தனது நூலில் குறிப்பிடும்போது,  சுயமரியாதை இயக்கத்தினர் தங்களது சாதிப் பெயரினை விட்டொழித்து, சாதி அடையாளங்களிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு,  சாதி மறுப்புத் திருமணங்களை ஆதரித்து,  பெண் விடுதலைக்கு பாடுபட்டனர்.  குழந்தைத் திருமணத்தை எதிர்த்தனர். வரதட்சிணைக்கு எதிராக செயல்பட்டனர்.  விதவைத் மறுமணத்தை ஆதரித்தனர்.  சொத்தில் பெண்ணுக்கு உரிமை கோரி போராடினர். விவாக ரத்து உரிமை கோரினர்.  மேலும் இது போன்றவற்றுக்கு ஆதரவாகச் செயல்பட்டனர். 1942-ல் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் தங்களது சாதிப் பெயரை கைவிட்டார்கள் என்கிறார்.

இந்த சுயமரியாதை இயக்கம் பிராமணரல்லாதாரை அடிமைப்படுத்தியிருக்கும் ஆரிய கலாச்சாரத்திற்கு மாற்றாக தீவிர சமூக சீர்திருத்தம், மதச்சார்பின்மை, அறிவியலை வளர்த்தெடுப்பது போன்றவற்றை செயல்படுத்தும் அமைப்பாகும்.  இவ்வமைப்பு மாகாணத்தில் பிராமணரல்லாத மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றிருந்தது.  ஈ.சா.விஸ்வநாதன் தெரிவிப்பது என்னவெனில் “இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குழு, (பெரியாரின்) சுயமரியாதை இயக்கத்தினர், தமிழ்ப்பற்றாளர்கள், சாமியார்கள், பெண்கள், ஆதி திராவிடர்கள். உழைப்பாளி மக்கள், மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் உட்பட பலர் இணைந்த, நீதிக்கட்சியை விட ஒரு நெகிழ்வான அரசியல் சக்தியாக சென்னை மாகாணத்தில் உருவானது. சுயமரியாதை இயக்கம் மற்றும் நீதிக்கட்சியில் இருந்த முற்போக்காளர்களால் நடத்தப்பட்ட ஆலய நுழைவுப் போராட்டங்களில் நூற்றுக்கணக்கான ஆதிதிராவிடர் உள்ளிட்ட இளைஞர்கள், இளம் பெண்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.  

இந்தத் திட்டங்கள், அதனை செயல்படுத்துவது ஆகியவற்றின் மீது பிராமணர்கள் மட்டுமல்லாது, மதம் குறித்த பெரியாரின் கருத்தை ஏற்க மறுத்த நீதிக்கட்சித் தலைவர்களிடமிருந்தும் கடும் எதிர்ப்பினை சந்தித்தது.  இந்தப் புதிய முற்போக்கான, மதச்சார்பற்ற அடையாளம் சாதிப் பிரிவினையால் பயனடைந்து வரும் பிராமணரல்லாதோரில் இருந்த சில சுயநல சக்திகளை ஆட்டம் காண வைத்தது.  பிராமணரல்லாதோர் இயக்கம் சந்தித்த அடுத்த மாற்றம் அவர்களுடைய அச்சத்தை தீவிரப்படுத்தியது  முக்கியமாக இந்த அமைப்பு சாதி அடையாளத்துடன் கூடியதானாலும், வர்க்க வளையத்திற்குள் நுழைந்தது. 

அன்றைக்கு சென்னை மாகாணத்தில் தொழிற்சாலைகள் எண்ணிக்கை பெருகியதும். அதன் விளைவாக தொழிலாளி வர்க்க சமூகம் சுயமரியாதை இயக்கத்தின் சமூகப் பின்புலத்தை வர்க்க அடிப்படையில் தீவிரமாக மாற்றியமைக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தியது.  தொழிலாளி வர்க்க, சோசலிச தலைவர்களான எம். சிங்காரவேலர், ஜீவானந்தம் ஆகியோர் சுயமரியாதை இயக்கத்தோடு இணைந்து செயல்பட்டதும், அவர்கள் பெரியாரிடம் செல்வாக்கு பெற்றவர்களாக அமைந்தமையினால் அந்த இயக்கத்தை சீர்திருத்தக் கண்ணோட்டத்திலிருந்து, புரட்சிகர திசைவழியில் நடத்திச் சென்றனர்.  1917-ல் ரஷ்யாவில் போல்ஷ்விக் தலைமையில் புரட்சி வெற்றி பெற்றதும், இந்தியாவில் தொழிலாளி வர்க்கம் தோன்றியதும் இந்த வளர்ச்சிக்கு பின்புலமாக இருந்தது. கம்யூனிஸ்ட் அறிக்கை தமிழாக்கம் செய்யப்பட்டு, தொடராக பெரியாரால் நடத்தப்பட்ட ‘குடி அரசு’பத்திரிகையில் வெளிவந்தது.  பெரியார் அதற்கு ஆழமான கருத்துரை வழங்கியிருந்தார். அதில் குறிப்பிட்டிருந்தது என்னவென்றால் இந்தியாவில் சூழ்நிலை கனிந்திருந்தாலும், புரட்சி இதுவரை வராததற்குக் காரணம் இங்கு பணக்காரர் ஏழை இவர்களுக்கிடையிலான மோதல்களை சாதிக் கட்டுமானம் முகமூடியாக மறைத்து நிற்கிறது. ஒரு வலிமையான சோசலிச கண்ணோட்டத்துடன் கூடிய ஈரோடு திட்டம் பின்னர் வெளிவந்தது.

தமிழுக்கு எதிராக, சமஸ்கிருதத்திற்கு ஆதரவாக சலுகைகள் காட்டுவதை எதிர்த்து உருவான தனித்தமிழ் இயக்கம், (அதே ஆண்டு துவக்கப்பட்ட) பிராமணல்லாதோர் இயக்கத்துடன் இணைந்து இரட்டையர் போல் செயலாற்றியது.  ராஜாஜி அரசு பள்ளிக் கல்வியில் இந்தியை கட்டாய பாடமாக திணித்த போது அதனை எதிர்த்து தமிழ்நாடு பொங்கி எழுந்தது.  இந்த எதிர்ப்புப் போராட்டங்களில் பிராமணரல்லாதார் இயக்கத்தின் சமூக  நீதி மற்றும் தமிழுக்கான நீதி ஆகியவை சங்கமித்ததன் விளைவாக திராவிட தேசியம் வளர்வதற்கான அடித்தளம் உருவாக்கப்பட்டது.  சுயமரியாதை இயக்கத்தின் சோசலிச கட்டம், அடிப்படை சமூக நீதித் திட்டம், மற்றும் தனித்தமிழ் இயக்கத்தால் வளர்க்கப்பட்ட பேராண்மை இவற்றின் ஒன்றிணைவு  அவன்/அவளின் சாதி, வர்க்கம், மொழி போன்ற பல்வேறு அடுக்குகளைக் கொண்ட அடையாளங்கள் உடைய தமிழ் மக்களின் விருப்பங்கள் நிறைவேற வேண்டும் என்ற நோக்கத்தை தூண்டிவிட்டது.

சோசலிசம் நோக்கிய பெரியாரின் திருப்பம் ஒரு சில பகுதியினருக்கு அபாய

சங்கொலியாக இருந்தது.  குறிப்பாக பிராமணரல்லாதவர்களில் ஒரு பகுதியினர், பிரிட்டிஷ் அரசு ஆகியோரே அப்பகுதியினர்.  அரசியல் தளத்தில் வர்க்கம் பெரிய அளவில் நுழைவது பிராமணரல்லாதார் இயக்கத்தில் இருந்த நில உடைமையாளர்கள் தங்கள் அதிகாரம், இதுவரை பெற்ற சலுகைகள் மற்றும் தங்களது சொத்திற்கு ஆபத்து வரும் எனக் கருதினர்.  பெரும் எண்ணிக்கையில் மக்களை ஈர்க்கக் கூடிய ஒரு சமூக சீர்திருத்தவாதி புரட்சியாளராக மாறுவது, குறிப்பாக தேசிய இயக்கம் பெருகி வரும் கால கட்டத்தில், சோவியத் யூனியனில் சோசலிசம் திட்டவட்டமான நிலையை எட்டும் சூழலில் பிரிட்டிஷ் அரசிற்கு மிகப் பெரும் கவலையளிக்கும் விஷயமாக இருந்தது.  வளர்ந்து வரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மீது கடுமையான தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டது.  இதுவரை பிராமணரல்லாதார் இயக்கம் பெற்ற நன்மைகளைப் பாதுகாக்க வேண்டி, குறிப்பாக மாகாணத்தில் காங்கிரஸ் கட்சியில் பிராமணர்கள் கை மேலோங்கி உள்ள சூழலில், நீதிக்கட்சியின் அரசியல் வீழ்ச்சி கண்கூடாக காணப்பட்ட நிலையில், பெரியார் மீண்டும் சமூக சீர்திருத்த வட்டத்திற்குள் வந்து சேர்ந்தார்.

இருப்பினும், பெரியார் அவருடைய அரசியல் பயணத்தில் ஒரு சிக்கலான கட்டத்தில் பொதுக்கூட்டங்கள் வாயிலாகவும், அச்சு ஊடகம் வாயிலாகவும் வெளிப்படுத்திய சமூக சீர்திருத்தம், சோசலிசம் குறித்த கருத்துக்கள் மக்கள் மனங்களை கவ்விப் பிடித்தன – அடுத்த நூற்றாண்டு வரை மக்களிடம் அழிக்கவியலாத செல்வாக்கு செலுத்தும் அரசியல் சக்தியாகின.



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: