தமிழில் சுறுக்கமாக : ஆர்.எஸ்.செண்பகம்
வளர்ந்து வரும் தொழில்நுட்ப புரட்சி, உழைப்பில் ஏற்படும் மாற்றங்கள், செயல்முறைகள் ஆகியவற்றின் காரணமாக பாட்டாளி வர்க்கம் வேகமாகக் குறைந்து வருகிறது என்றும், அந்த இடத்தில் ஒரு ‘புதிய நடுத்தர வர்க்கம்’ வளர்ந்து வருகிறது என்றும், ஒரு கருத்து மார்க்சிய வட்டாரங்களிலும் மற்ற இடதுசாரிகளிடமும் நிலவுகிறது. நடுத்தர வர்க்கத்திற்கு எந்தவொரு புரட்சிகர முன்னோக்குப் பார்வையோ, புரட்சிகர ஆற்றலோ இல்லை என்றும், அதிவேகமாக வீழ்ச்சியடைந்து வரும் பாட்டாளி வர்க்கமும் இயற்கையாகவே தன்னுடைய புரட்சிகரத் திறனை இழந்து கொண்டிருக்கிறது என்றும் குறிப்பிடும் அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வலியுறுத்துகின்ற பாட்டாளி வர்க்க புரட்சிக்கான அறைகூவலை மதிப்பற்ற ஒன்றாக ஆக்கிட முயற்சிக்கிறார்கள். இக்கட்டுரையில் நாம் இந்த விஷயத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதுடன், வளர்ந்து வரும் யதார்த்தத்தை சுட்டிக் காட்டவும் முயற்சிப்போம்.
தொழிலாளி வர்க்கத்தின் கட்டமைப்பு மாற்றங்கள்
தற்போது நடந்துவரும் அறிவியல் தொழில்நுட்பப் புரட்சி உற்பத்திசக்திகளின் தனிச்சிறப்புகளில் புதிய அம்சங்களை திறந்து விடுகிறது. இதனால் தொழிலாளி வர்க்கத்தின் பாரம்பரிய கட்டமைப்பிலும் மாற்றம் ஏற்படுகிறது. தொழில்நுட்பப் புரட்சியின் விளைவாக உருவாகியுள்ள நவீன தொழில்துறை குறித்து கார்ல் மார்க்ஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார் “நவீன தொழில் துறையானது பலதரப்பட்ட, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத, பழைய தொழிலுற்பத்தி வடிவங்களிலிருந்து வெளிவந்து, இயற்கை விஞ்ஞானத்தை உணர்வுப்பூர்வமாக கவனமாகவும், திட்டவட்டமான ஒழுங்குமுறையுடனும் பயன்படுத்தி, தனக்கான பயனுள்ள செயல்திறனையும் விளைவுகளையும் அடைய முயல்கிறது” என்றார். 1867 தொழில் புரட்சியின் துவக்கக் கட்டத்திலேயே, உற்பத்தியில், அறிவியல் வளர்ச்சி செலுத்தும் தாக்கத்தை உணரத்தொடங்கிய காலத்திலேயே மார்க்ஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது எத்தனை முன்னுணர்ந்த கண்ணோட்டம்? தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் அறிவியல், தொழில்நுட்பப் புரட்சியானது ‘இயற்கை விஞ்ஞானத்தை உணர்வுப்பூர்வமாக பயன்படுத்துவதன்’ மூலமாக உற்பத்தி சக்திகள் புரட்சிகரமாக மாற்றியமைக்கப்படுவதும், அதனால் எழுகின்ற புதிய சாத்தியங்களையும், சிக்கல்களையும் நாம் பார்க்கிறோம்.
தொழிற்புரட்சி என்பது சில தனிப்பட்ட விஞ்ஞானிகளின் குறிப்பிட்ட கண்டுபிடிப்புகளினால் விளைந்தது. அதிலும் குறிப்பாக நீராவி எஞ்சினின் கண்டுபிடிப்பு, தொழில் புரட்சிக்கான முதன்மை இயக்கியாக இருந்ததை நாம் பார்க்கலாம். ஆனால், தற்போதைய எந்தவொரு கண்டுபிடிப்பும் இத்தகையதொரு இடத்தினை பிடிக்க முடியவில்லை. ஆலைப்பாட்டாளியும், மார்க்சிய அறிஞருமான ஹாரி பிரேவர்மேன் (Harry Braverman) என்பவர், மார்க்சின் உழைப்பு நிகழ்முறை குறித்து ஆழமான ஆய்வினை நடத்தியவர். அவர் தனது “உழைப்பு மற்றும் ஏகபோக மூலதனம்” என்னும் நூலில், “அறிவியல் தொழில்நுட்பப் புரட்சி என்பதை, குறிப்பிட்ட கண்டுபிடிப்புகளை வைத்து புரிந்துகொள்ள முடியாது. அதனால்தான் நம்மால் ஒரு குறிப்பிட்ட கண்டுபிடிப்பை வைத்து புரிந்துகொள்வது சாத்தியப்படவில்லை… சாதாரண செயல்பாடுகளோடு இணைந்திருக்கும் முழுமையான பொறியியல் மற்றும் அறிவியல் ஆய்வுப்பார்வையை உள்ளடக்கிய உற்பத்தி முறையினைப் புரிந்துகொள்வதன் மூலமே அதை அறிய வேண்டும். மிக முக்கியமான கண்டிபிடிப்பினை, வேதியலிலோ, மின்னணுவியலிலோ, தானியங்கி இயந்திரங்கள், வானியல், அணு இயற்பியல், அல்லது இந்த அறிவியல் – தொழில்நுட்பத்தின் ஏதேனும் ஒன்றிலோ காண முடிவதில்லை, மாறாக அறிவியலே மூலதனமாக மாற்றமடைவதில் காண முடியும்” என்று குறிப்பிடுகிறார்.
அறிவியல், தொழில்நுட்பப் புரட்சி உற்பத்திசக்திகளை புரட்சிகரமாக மாற்றியமைப்பதுடன், உழைப்பு முறையிலும் அளவில்லா மாற்றத்தை கொண்டு வருகிறது. ஏற்கனவே உருவான ஏகபோக மூலதனமும், நிர்வாகப் பணிகளின் விரிவாக்கமும், மிகப் பெருமளவில் எழுத்தர் பணிகளில் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்தது. தற்போது, அறிவியல், தொழில்நுட்பப் புரட்சியின் விளைவாக, மிகப் பெரிய சேவைத் துறை என்பது உருவாக்கப்பட்டு, அதில் தனித்திறன் மிக்க பணியாளர்கள், தொழில் நுட்பவியலாளர்கள், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள், பிற சிறப்பு அறிவுத் திறனுடன் கூடிய தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
எர்னஸ்ட் மண்டேல், “முதலாளித்துவ சேவைத்துறையின் விரிவாக்கம் என்பது சமீபத்திய முதலாளித்துவ வடிவத்தின் சான்றாக நம் முன் உள்ளது. இந்த சேவைத் துறையின் விரிவாக்கம் முதலாளித்துவ உற்பத்தி முறையில் உள்ள அனைத்து முக்கிய முரண்பாடுகளையும் கொண்டுள்ளது. உற்பத்தியின் சமூக, தொழில்நுட்ப, அறிவியல் சக்திகளின் அபரிமிதமான விரிவாக்கத்தை அது பிரதிபலிக்கிறது. இதனோடு உற்பத்தியாளர்களிடம் கலாச்சார, நாகரீக தேவைகளையும் அது அதிகரிக்கிறது. அவ்வாறே, இது முதலாளித்துவ அமைப்பில் நடக்கிற காரணத்தால், விரோத மனப்பான்மையையும் அது பிரதிபலிக்கிறது. மேலும், இந்த சேவைத்துறையின் விரிவாக்கம் என்பது பெருமளவு மூலதன மயமாக்கலுடன் சேர்ந்து நடக்கிறது. இதனால், பலன்களை பெறுவதில் அதிகப்படியான சிரமங்களையும், பொருள்மதிப்புகள் வீணாக்கப்படுதலையும் ஏற்படுத்துகிறது. உற்பத்தி நடவடிக்கையிலும், நுகர்வுத்தளத்திலும் தொழிலாளர்கள் அந்நியப்படுதலும் நடக்கிறது” என்று கூறுகிறார்.
ஒவ்வொரு நாடும் இதுபோன்ற தனித்துவமான சேவைத்துறை வளர்ச்சியை காண்கின்றன. இதனால் சேவைத் துறை தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இது இந்தியாவிற்கும் பொருந்தும். சேவைத்துறை ஊழியர்கள் அல்லது தொழிலாளர்கள் பெரிய, தேசிய கூட்டமைப்புகளின் கீழ் திரட்டப்பட்டுள்ளனர். அவர்கள் தொழிற்சங்க இயக்கத்தில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளனர். ஆனால் அடிக்கடி ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது. இந்த சேவைத்துறை என்பது உற்பத்தி சார்ந்ததா? இல்லையா? என்று. உற்பத்தி சார்ந்த துறை இல்லை என்றால், இந்த முதலாளித்துவ சமுதாயத்தில், ஒரு வர்க்கப் போராட்டத்தை தொடர்ச்சியாக நடத்துவதில், அதைக் கூர்மைப்படுத்துவதில் இந்தத் துறையின் ஊழியர்கள், தொழிலாளர்கள் என்ன பங்கு வகிக்கமுடியும் என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. இந்த தலைப்பின் கீழ் விவாதத்தை தொடர்வதற்கு முன் மார்க்ஸ் இதுகுறித்து ஏதேனும் பேசியிருக்கிறாரா என்று பார்ப்போம்.
வணிக கூலித் தொழிலாளர்கள்
வர்த்தக மூலதனம் பற்றிய ஆய்வினை மேற்கொள்ளும்போது மார்க்ஸ் “வணிக கூலித் தொழிலாளர்கள்” (commercial wage-workers) என்ற பதத்தை பயன்படுத்துகிறார். இவர்களையும், முதலாளிகளுக்காக தங்களுடைய உபரி உழைப்பை உபரி மதிப்பாக உருவாக்கும் “கூலித்தொழிலாளர்கள்” என்றே மார்க்ஸ் குறிப்பிடுகிறார். வணிக முதலாளியாக இருக்கும் வியாபாரிகளால் பணிக்கு அமர்த்தப்படும் இவர்களைக் குறித்த கேள்வியை எழுப்பி அதற்கான விடையையும் மார்க்ஸ் தருகிறார்.
முதலாவதாக, இந்தத் தொழிலாளியின் உழைப்பு சக்தியானது மூலதனத்தை பெருக்குவதற்காக மாறும் மூலதனத்தால் விலைக்கு வாங்கப்படுகிறது. இரண்டாவதாக, இவர்களுடைய உழைப்பு சக்தியின் மதிப்பும் அதாவது சம்பளமும் பிற கூலித் தொழிலாளர்களைப் போன்றே உற்பத்திக்கான செலவு மற்றும் அவர்களுடைய உழைப்புச் சக்தியை மறுஉற்பத்தி செய்வதற்கான செலவைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.
இங்கே மார்க்ஸ் இரண்டு முக்கியமான விஷயங்களை மிகத் தெளிவாகக் கூறுகிறார். 1. வணிக கூலித் தொழிலாளர்களும் பிற கூலித்தொழிலாளர்களைப் போன்ற கூலித் தொழிலாளரே ஆவார். 2. அவரது கூலியும் பிற கூலித்தொழிலாளர்களைப் போன்றே நிர்ணயம் செய்யப்படுகிறது என்பதாகும்.
மார்க்ஸ் அதற்கு மேலும் விளக்கம் தருகிறார். “தொழில் துறை மூலதனத்திற்கும், வணிக மூலதனத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் போலவே, தொழில்துறை மூலதனத்தால் நேரடியாக பணியமர்த்தப்படுகிற கூலித்தொழிலாளியையும், வணிக கூலித்தொழிலாளியையும் வேறுபடுத்திப்பார்க்க வேண்டும்”, “வெறுமனே சுற்றோட்ட முகவராக ஒரு வர்த்தகர் இருக்கும் வரையில் அவர் மதிப்பையோ, உபரி மதிப்பையோ உற்பத்தி செய்வதில்லை… எனவே, அதே பணிகளில் அமர்த்தப்படுகிற வணிக தொழிலாளர்களும் நேரடியாக உபரி மதிப்பை அவருக்காக படைத்துக்கொடுக்க முடியாது. “
மேலும் மார்க்ஸ் விளக்குகிறார், “உபரி மதிப்புக்கும் வணிக மூலதனத்திற்குமான உறவு, தொழில்துறை மூலதனத்திற்கும் உபரி மதிப்புக்குமான உறவில் இருந்து வேறுபட்டதாகும். தொழில் துறை மூலதனம் பிறரது ஊதியமில்லா உழைப்பை நேரடியாகத் தனதாக்கிக் கொள்வதன் மூலம் உபரி மதிப்பை உற்பத்தி செய்கிறது. வணிக மூலதனமோ இந்த உபரி மதிப்பில் ஒரு பகுதியை தொழில் துறை மூலதனத்திடமிருந்து தனக்கு மாற்றிக் கொள்வதன் மூலம் தனதாக்கிக் கொள்கிறது” வேறு வார்த்தைகளில் சொன்னால், வணிக கூலித்தொழிலாளரும் உபரியை படைக்கிறார், வழிமுறைகள் வேறுபடுகின்றன.
“தனியொரு வணிகரின் இலாபமானது, அவர் இந்த நிகழ்முறையில் ஈடுபடுத்தும் மூலதனத்தின் அளவைப் பொருத்ததாகும்; அவருடைய எழுத்தர்களின் ஊதியமில்லா உழைப்பு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அவ்வளவு அதிகமாக அவர் வாங்குவதற்கும் விற்பதற்கும் அந்த மூலதனத்தை பயன்படுத்த முடியும்… இந்த எழுத்தர்களின் ஊதியமில்லா உழைப்பு மதிப்பை படைப்பதில்லை என்றாலும் வணிகர் உபரி-மதிப்பை தனதாக்கிக் கொள்வதற்கு வழிவகை செய்கிறது. அவரது மூலதனத்தை பொறுத்தவரை உபரி-மதிப்பை படைப்பதும் தனதாக்கிக் கொள்வதும் விளைவளவில் ஒன்றுதான். ஆகவே இந்த ஊதியமில்லாத உழைப்புதான் அவரது இலாபத்திற்கு ஆதாரம்.” மேலும், “திறனுடை மூலதனத்திற்கான உபரி மதிப்பை ஒரு தொழிலாளியின் ஊதியமில்லா உழைப்பு நேரடியாக படைத்தளிப்பதைப் போலவே வணிக கூலித் தொழிலாளியின் ஊதியமில்லா உழைப்பும் இந்த உபரி மதிப்பில் ஒரு பங்கை வணிக மூலதனத்திற்கு பெற்றுக் கொடுக்கிறது”
வணிக முதலீடும் லாப உற்பத்தியும்
சுற்றோட்டத் துறையில் உள்ள தொழிலாளி உற்பத்தியை உண்டு பண்ணுகிறவரா இல்லையா என்ற கேள்விக்கு வந்து ஒரு முடிவான விளக்கத்தினை மார்க்ஸ் தருகிறார். “தொழில் மூலதனத்திற்கு சுற்றோட்டச் செலவுகள் என்பவை பலனற்ற செலவுகள் போல் தெரிகின்றன. ஆம், அது அவ்வாறே. ஆனால் ஒரு வணிகருக்கு, பொது லாப வீதத்தைப் பொருத்தும், அளவைப் பொருத்தும் நேர் விகிதத்தில் லாபமடைவதற்கான ஆதாரமாக அந்தச் செலவுகள் அமைந்திருக்கின்றன. ஆகவே இந்த சுற்றோட்டச் செலவுகளுக்கு செய்யும் முதலீடு வணிக-மூலதனத்திற்கு பலன் தரும் செலவே ஆகும்.” இவ்வாறு குறிப்பிடும் கார்ல் மார்க்ஸ், “இந்தக் காரணத்தினால்வணிக மூலதனத்தால் வாங்கப்படும் உழைப்பு உடனடியாக நேரடியாக உடனடி பலன் தரக்கூடியதாக இருக்கிறது” என்ற விளக்கத்தை தருகிறார்.
இவ்வகைப்பட்ட கூலித் தொழிலாளர்களை குறிப்பிட, மார்க்ஸ் “white collar worker” (அறிவுசார் தொழிலாளி) என்ற பதத்தை பயன்படுத்தவில்லை, தொழில்துறை கூலித்தொழிலாளர்களை அழைப்பதை ஒத்த வகையில் “வணிக பாட்டாளிகள்” என்ற பதத்தையும் அவர் பயன்படுத்தவில்லை. இருப்பினும், மார்க்ஸ் இவர்களை கூலித் தொழிலாளர்கள் என்றும், முதலாளித்துவ உற்பத்தி உறவுகளில் இவர்கள் ஒடுக்கப்படுபவர்களாகவும், சுரண்டப்படுபவர்களாகவும் இருக்கின்றனர் என்றும் தெளிவுபடுத்துகிறார்.
சுரண்டலின் அளவுகோள்
அதே போன்று, இந்த தொழிலாளர்கள் குறித்து இன்னொரு கருத்து நிலவுகிறது. அவர்கள் அதிகம் சம்பளம் பெறுபவர்கள். அதனால், இவர்கள் போராட முன்வருவதற்கு வாய்ப்பில்லை என்ற கருத்து நிலவுகிறது. மார்க்ஸ் இந்த இடத்தில் இன்னொரு விவாதத்தினை முன்வைக்கிறார். “வணிக தொழிலாளர் – இச்சொல்லுக்கு உரிய கண்டிப்பான பொருளிலில் – ஓரளவுக்கு நல்ல ஊதியம் பெறும் கூலித்தொழிலாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர், தேர்ச்சி பெற்ற உழைப்பாக வகைப்படுத்தப்பட்டு சராசரி உழைப்புக்கு மேற்பட்டதாக இருக்கும் உழைப்புக்கு உரியவர்களான கூலித்தொழிலாளர் வகையைச் சேர்ந்தவர்கள். என்றாலும், முதலாளித்துவ பொருள் உற்பத்தி முறையில் முன்னேற்றம் ஏற்படும்போது சராசரி உழைப்பு தொடர்பாகவும் கூட கூலி குறைந்து செல்லும் போக்கு வெளிப்படுகிறது.” சமூகத்தின் எந்த பகுதியிலிருந்து இவர்கள் பணியில் அமர்த்தப்படுகிறார்கள்? மார்க்ஸ் அதனை விளக்குகிறார், “பொதுக்கல்வி அனைவருக்குமாக பரவலாக்கப்படுவதால், சமூகத்தில் அடித்தட்டில், மிகவும் தரம் குறைந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த மக்களிடையே இருந்தவர்களும் கல்வி பெறும் வாய்ப்பு ஏற்பட்டது. இதனால், தனித்திறன் மிக்க தொழிலாளர்கள் அதிக அளவில் உருவாவதும், அவர்களிடையே போட்டி ஏற்படும் நிலையும் உருவானது. இதனால், ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர்த்து இவர்களின் உழைப்பு சக்தியானது மதிப்பிழக்கும் நிலை முதலாளித்துவ உற்பத்தி முறையின் முன்னேற்றப் பாதையில் உருவானது” என்று குறிப்பிடுகிறார். இதன் பொருள் தெளிவானது. முதலாளித்துவம் முன்னேற முன்னேற, இந்த பகுதி தொழிலாளர்கள் மிகப் பெருமளவிற்கு சுரண்டலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதுதான்.
எனவே, மார்க்சின் மிகத் தெளிவான வரையறைகளின்படி பார்க்கும்பொழுது பொதுவான தொழிலாளி வர்க்க இயக்கத்தில் சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களில் இவர்களது பங்கு குறித்து இருக்கும் கருத்துக்கள் தவறானவை என்பது மிகத் தெளிவாக நிரூபிக்கப்படுகிறது.
பாட்டாளி வர்க்கத்தின் வரையறை
மார்க்சின் நாட்களில் இருந்து, இன்று மிகப் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. அதுவும் தொழில்நுட்ப புரட்சியின் காரணமாக உழைப்பு முறையிலும் புரட்சிகரமான பல மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. தற்காலத்திய மார்க்சிஸ்டுகள் இந்த மாற்றங்களை புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அந்த புரிதல்களின் அடிப்படையில் விஷயங்களை மதிப்பிட வேண்டும். மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் அடிப்படை சூத்திரங்கள், கொள்கைகளின் அடிப்படையில் விஷயங்களை பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.
முதலாளித்துவ கட்டமைப்பு, மூலதனக் குவிப்பு, உழைப்புக் கருவிகளின் தொழில் நுட்ப முன்னேற்றங்கள் ஆகியவற்றைப் பொறுத்து தான் தொழிலாளி வர்க்கத்தின் உழைப்பு முறையிலும் மாற்றங்கள் நிகழ்கின்றன. தொழிற்சாலைகளில் கூட, இயந்திரமயமாக்கல் என்பது இயந்திரங்களை பயன்படுத்தி அதிக அளவில் உற்பத்தி செய்வதற்காக முதலாளித்துவ உற்பத்தி முறையில் புகுத்தப்பட்டது என்ற முறையில் மூலதனத்தின் முதல் பகுதியில் மார்க்ஸ் தனது ஆய்வினை மேற்கொள்கிறார். 19-ம்நூற்றாண்டில் லான்ஷயர் காட்டன் வர்த்தக நிறுவனம் போன்ற ஒரு சில முன்னேறிய தொழிற்சாலைகள் தவிர்த்து, பெரும்பகுதி முதாலாளித்துவ நிறுவனங்கள் நீராவி இயந்திரங்களை விட மனித உழைப்பு சக்தியைத்தான் பயன்படுத்தின. உண்மையில் தொழில் புரட்சி காலத்திலேயே கூட பெருமளவில் இயந்திரமயமாக்கல் நிகழவில்லை. 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20-ம் நூற்றாண்டிலும்தான் மிகப் பெருமளவில் அமெரிக்காவில் அது பயன்படுத்தப்பட்டது.
தொழிலாளி வர்க்கம் எப்போதுமே ஒரு குறிப்பிட்ட நிலையான கட்டமைப்பை உடையதாகவோ அல்லது கலவையானதொரு அமைப்பை உடையதாகவோ இருந்ததில்லை. மாறாக, தொழிலாளி வர்க்கத்தின் கலவை அமைப்பும், கட்டமைப்பும் மூலதன சேர்க்கையின் தேவைக்கேற்ப மாற்றி அமைக்கப்படுகிறது. மறுகட்டமைப்பு மற்றும் ஒருங்கிணைப்புகள் நிகழும்போது, திவாலானவை கையகப்படுத்தப்படும்போது, திறனற்ற துறைகள் பயனற்றதாகும்போது, புதிய துறைகள் உருவாகும் போது, அதிக திறன் படைத்த மூலதனங்கள் வரும்போது நெருக்கடிகள் எழுவதுண்டு. தொழிலாளி வர்க்கத்திற்குள்ளும் இதே அழிக்கப்படுதலும், உருவாக்கப்படுதலும் நிகழ்கிறது.
தற்போதைய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப புரட்சி காலக்கட்டத்தில், முதலாளித்துவ பொருளாதார உலகமயமாக்கலின் கீழ், முதலாளிகள் அதிக அளவில் தொழிலாளர்கள் தேவைப்படாத வகையில் சாதனங்களை பயன்படுத்துகின்றனர். மினனணுவியல், சைபர்நெட்டிக்ஸ் எனும் தன்னாள்வியல், ஆட்டோமேஷன் எனும் தானியங்கல் ஆகியவை முதலாளிகளுக்கு அதிக அளவில் தொழிலாளர்கள் தேவைப்படாத வகையில் சாதனங்களை பயன்படுத்த உதவுகின்றன.
மார்க்ஸ் சொன்னது போல், கல்வி பொதுவாக்கப்பட்டதன் காரணமாக வர்த்தக முதலாளிகளுக்கு வேலை செய்யக்கூடிய தொழிலாளர்கள் பெருமளவில் கணக்காளர்களாக, எழுத்தர்களாக, கொடுக்கல் வாங்கல் துறைகளில் வேலை செய்ய தயாராக இருக்கிறார்கள். அதேபோல, தானியங்கித் துறை மற்றும் கணிணித் துறையில் உள்ள உயர் மட்ட தொழில் நுட்பக் கல்வியின் காரணமாக, சேவைத்துறையின் முதலாளிகளுக்கு தொழில்நுட்ப தனித்திறன் பெற்ற தொழிலாளர்களை அவர்கள் விரும்பும் வேலைகளில் பணியமர்த்த முடிகிறது. அதாவது, தொழிலதிபர்களுக்குத் தேவையான பல்வேறு வகையான தொழிலாளர்களை பல்வேறு பணிகளில் பணியமர்த்திக் கொள்கின்றனர். உண்மையில் தொழிலாளர்களின் பெருக்கம் என்பது முதலாளிகளின் நலன்களை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் பல்வேறு வகையான வேலைகளுக்கு தொழிலாளர்களை பணியமர்த்த உதவுகிறது என்பதை மார்க்ஸ் கண்ணுற்று கூறுகிறார்.
வர்க்கங்கள் குறித்து கார்ல் மார்க்ஸ் சொல்வது
மார்க்சின் மூலதனம் நூலின் பகுதி மூன்றில், வர்க்கங்கள் குறித்த அத்தியாயத்தில், எழுதியவை முடிக்கப்படாமல் கையெழுத்துப் பிரதி பாதியில் நின்று விடுகிறது. மார்க்ஸ், “கூலித் தொழிலாளர்களும், முதலாளிகளும், நிலவுடைமையாளர்களும் முப்பெரும் சமுதாய வர்க்கங்களாக அமைவது எதனால்? “ என்ற கேள்வியை எழுப்பி விடை காண முயல்கிறார்.
“முதல் பார்வையில் – வருவாய் ஆதாரங்களும், வருவாய்க்கான மூலங்களும் காரணமாகவே என்று தோன்றுகிறது.” கூலித் தொழிலாளர்களும், முதலாளிகளும், நிலவுடைமையாளர்களும் “உழைப்பு சக்தியாலும், மூலதனத்தாலும், நிலச் சொத்தாலும் கிடைக்கிற கூலியையும் இலாபத்தையும் நில வாடகையையும் நம்பி வாழ்கின்றனர்.”
“எனினும், இந்தக் கண்ணோட்டத்தில் மருத்துவர்களும், அலுவலர்களும் கூட இரு வர்க்கங்களாவர். ஏனென்றால், அவர்கள் இரு வேறு சமூகக் குழுக்களைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு குழுவின் உறுப்பினர்களும் ஒரே ஆதாரத்திலிருந்து தமது வருவாயைப் பெறுகிறவர்கள். சமுதாய உழைப்புப் பிரிவினை தொழிலாளர்களையும், அதே போல் முதலாளிகளையும், நிலவுடைமையாளர்களையும் அவர்கள் பெறக்கூடிய நலன்கள் என்ற வகையிலும், தரம் என்ற வகையிலும் எல்லையற்ற முறையில் பிரித்துக் கூறு போடுகிறது. உதாரணமாக, நிலவுடைமையாளர்களை திராட்சை தோட்ட உடைமையாளர்கள், பண்ணை உடைமையாளர்கள், வன உடைமையாளர்கள், சுரங்க உடைமையாளர்கள், மீன் வள உடைமையாளர்கள் என்று பிரிக்கிறது. அதற்கும் இதுவே பொருந்தும். கெடுவாய்ப்பாக கையெழுத்துப் பிரதி இங்கே நின்றுவிடுகிறது.
சேவைத் துறை உள்ளிட்ட நவீன உற்பத்தித் துறையில் தொழிலாளர்களின் வேலைப்பிரிவினை என்பது அவர்களுடைய தனித் திறன் சார்ந்தது என்பதையும், தர வகைப்பட்டது என்பதையும் நாம் வெளிப்படையாக இன்று கண்டு கொண்டிருக்கிறோம்.
இன்னொரு இடத்தில் மார்க்ஸ், “ஒட்டுமொத்த தொழில் முறையின் உண்மையான நெம்புகோல் அல்லது முன்னோக்கி எடுத்துச் செல்லும் சக்தி என்பது தனிப்பட்ட தொழிலாளர்கள் அல்ல. மாறாக, உழைப்பு சக்தி சமூக அளவில் ஒருங்கிணைக்கப்படும்போது, அது கூட்டு வேலையாகும்போது, பல்வேறு உழைப்பு சக்திகள் ஒருங்கே சேர்ந்து ஒட்டு மொத்த உற்பத்தி நிகழ்முறையை உருவாக்கி, பொருட்களை உற்பத்தி செய்யும் பல்வேறு வழிகளில் பங்கெடுக்கும்போது, அதுவே ஒட்டுமொத்த தொழில் முறையின் உண்மையான நெம்புகோலாகிறது. சிலர் கரங்களால் சிறப்பாக வேலை செய்வார்கள்; சிலர் கருத்தால் வேலை செய்வார்கள். மேனேஜராக, என்ஜினியராக, தொழில் நுட்ப வல்லுநராக, கண்காணிப்பாளராக, உடலுழைப்பு தொழிலாளியை விட இன்னும் கடின உழைப்பாளியாக சிறப்பாக செயல்படுவார்கள். எப்போதுமே அதிகரித்துக் கொண்டிருக்கும் எண்ணற்ற உழைப்பு வகைகள் உற்பத்தி உழைப்பு பற்றிய கருத்தாக்கத்திற்குள் அடக்கப்படும். அதைச் செய்பவர்கள் உற்பத்தித் தொழிலாளர்கள் என வகைப்படுத்தப்படுவார்கள். இந்தத் தொழிலாளர்கள் நேரடியாக மூலதனத்தால் சுரண்டப்படுகிறார்கள். அதே போல அவர்கள் மூலதனத்தின் உற்பத்தி மற்றும் விரிவாக்கத் தாக்கங்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்” என்று கூறுகிறார்.
கூட்டு வேலை என்பது முதலாளித்துவ உற்பத்தி முறைக்கே உரிய சிறப்பியல்பு அல்ல. முதலாளித்துவ கூட்டு வேலையில் சுயேச்சையான கூலித் தொழிலாளியும், உற்பத்தி சாதனங்களின் தனி உடைமையும் தேவைப்படுகிறது. கூட்டு வேலை முறை வளரும் போது உழைப்பு மூலதனத்துக்கு கீழ்படிந்து செயல்படுவது என்பது வெறும் புறவடிவமாக இருந்த நிலையிலிருந்து உண்மையான நேரடியான கீழ்ப்படிதல் நடைபெறும் நிலைக்கு மாறி விடுகிறது.
எனவே, மார்க்சின் வாதத்தின்படி, யாரெல்லாம் கூட்டு வேலையின் பங்களிப்பாளர்களாக ஆகிறார்களோ, அவர்கள் அனைவருமே உற்பத்தி தொழிலாளர்கள் ஆவர். அவர்கள் கரத்தால்தான் வேலை செய்ய வேண்டும் என்பதில்லை. அதே போல மார்க்ஸ் வணிக தொழிலாளர்கள் பற்றி குறிப்பிடும்போது உற்பத்தி தொழில்துறையில் வேலை செய்பவர்கள் மட்டும் பாட்டாளி வர்க்கம் என்று சொல்லவில்லை. இதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
உழைப்புச் சக்தியும், கட்டாயமும்
உண்மையில், உற்பத்தி மற்றும் உற்பத்திசாரா தொழிலாளர்கள் என்பதற்கான வேறுபாடு என்னவென்றால் மூலதனத்தின் விரிவாக்கத்திற்கு பங்களிப்பவர்கள் என்பதும், பங்களிக்காதவர்கள் என்பதுமே ஆகும். 19-ம் நூற்றாண்டின் இரண்டாவது பகுதியில் (பிரிட்டனில் விக்டோரியா மகாராணியின் காலம்) நடுத்தர மற்றும் உயர்தட்டு மக்களால் அவர்களுடைய வருமானத்தில் இருந்து பணிக்கமர்த்தப்பட்ட வீட்டு வேலை தொழிலாளர்களை இதற்கு உதாரணமாக மார்க்ஸ் குறிப்பிடுகிறார். ஆனால், வீட்டு வேலை செய்யும் அவ்வகைப்பட்ட தொழிலாளர்களுக்கு வேறு வாழ்க்கை ஆதாரங்கள் இல்லாததால் உழைப்புச் சக்தியை இவ்வகையில் விற்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அவர் குறிப்பிடத் தவறிவிட்டார். மார்க்ஸ் தொழிலாளர்களின் பல்வேறு வகைகள் பற்றி குறிப்பிடும்போது, நாம் இன்னொன்றையும் மார்க்சினுடைய முதலாளித்துவ ஆய்வின் அடிப்படையிலேயே புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. தன்னுடைய உழைப்பு சக்தியை விற்றால்தான் வாழ முடியும் என்ற சமூகப் பொருளாதார நிர்ப்பந்தம் அல்லது கட்டாயம் என்பதுதான் பாட்டாளி வர்க்கத்தின் வெளிப்படையான குணாம்சமாகும்.
இதனால் அனைத்து கூலித்தொழிலாளர்களும் முதலாளித்துவ உற்பத்தி உறவுகளின் அடிப்படை கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடுகிறார்கள். உற்பத்திக்கான வழிமுறைகள் சொந்தமின்மை, நிலஉடமையின்மை மற்றும் அவை கைக்கெட்டாமை, உழைப்பு சக்தியை (தொடர்ச்சியாக) விற்காமல் வாழ்வாதாரத்திற்குத் தேவையானவற்றை வாங்குவதற்கு போதுமான பணமின்மை என்பது போன்ற சமூகப் பொருளாதார நிர்ப்பந்தங்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இந்த பிரிவில் வணிக தொழிலாளர்களும், அரசாங்கத்தின் கீழ் நிலை ஊழியர்களும், சிதறிக் கிடக்கும் தினக் கூலிகளும் (வீட்டு வேலை பணியாளர்களும்) அடங்குவர். ஏனென்றால், இவர்களுக்கும் வாழ்வாதாரத் தேவைகளுக்காக தங்களுடைய உழைப்பு சக்தியை விற்பதைத் தவிர வேறு வழியில்லை.
இங்கே ரோசா லக்சம்பர்க் தன்னுடைய மூலதனக் குவிப்பு குறித்த நூலில், அத்தியாயம் 16-ல் ‘மூலதன மறு உருவாக்கம் மற்றும் சமூக அமைப்பாக்கம் என்ற தலைப்பின் கீழ் எழுதியுள்ளதை நாம் கவனிக்க வேண்டியுள்ளது’. அவர் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பாட்டாளி வர்க்கத்தின் உற்பத்தி நிலைகள் பற்றி விவாதிக்கும்போது, “விவசாயப் பொருளாதாரம் மற்றும் கைவினைத் தொழில்கள் தொடர்ச்சியாக நசிவடைந்தபோது, கிராமப்புற மற்றும் நகர்ப்புற மத்தியதர வர்க்கத்தினர் எப்படி பாட்டாளி வர்க்கமாக மாற்றப்பட்டார்கள்” என்று குறிப்பிடுகிறார், ” அதாவது, முதலாளித்துவம் கோலோச்சாத நிலையில் இருந்து, உழைப்பு சக்தியானது முதலாளித்துவ நிர்ப்பந்தங்களுக்கு இடைவிடாது உட்படுத்தப்பட்டு, மாற்றங்கள் ஏற்பட்டது, முதலாளித்துவத்திற்கு முந்தைய நிலையிலிருந்து, உற்பத்தி முறையில் முன்னோக்கிய சிதைவுகளும் முறிவுகளும் ஏற்பட்டன”. இது 19-ம் நூற்றாண்டு ஐரோப்பாவிற்கு மட்டும் பொருந்தும் ஆய்வல்ல; தற்போது இந்தியாவில் நிலவும் சூழலுக்கும் இது மிகச் சரியாகப் பொருந்துகிறது.
உழைப்புச் சக்தியும் சேவைத்துறையும்
இன்னொரு முக்கியமான விஷயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டியுள்ளது. சேவை குறித்து மார்க்ஸ் குறிப்பிடும்போது, ”சேவை என்பது ஒரு பொருளின் அல்லது ஒரு உழைப்பின் பயன் மதிப்பின் பயனுள்ள விளைவு என்பதன்றி வேறில்லை” என்று பொதுவான வரையறை ஒன்றினை கூறியுள்ளார். அதன் பிறகு அவர் தனித் திறன் பெற்ற தொழிலாளர்கள் மற்றும் திறன்பெறாத சாதாரண தொழிலாளர்கள் குறித்து ஒரு சுவாரஸ்யமான விளக்கம் அளித்துள்ளார். “மதிப்பினை உருவாக்கும் ஒவ்வொரு உற்பத்தி செயல் முறையிலும், தனித்திறன் பெற்ற தொழிலாளி மற்றும் சாதாரண சமூகத் தொழிலாளியின் குறைப்பு (உ-ம்) திறன் பெற்ற தொழிலாளியின் 1 நாள் முதல் திறனற்ற தொழிலாளியின் 6 நாள் வரை குறைப்பு என்பது தவிர்க்க முடியாதது” என்று குறிப்பிடுகிறார்.
ஒரு முதலாளியால் பொருட்களின் உற்பத்திக்கென பணியில் அமர்த்தப்படும் ஒரு தொழிலாளி முதலாளிக்கு தனது சேவையை செய்கிறார். இந்த சேவையின் மூலம் அவர் உறுதியான விற்பனைக்குரிய ஒரு பொருளை சரக்காக மாற்றுகிறார். உழைப்பின் பயனுள்ள விளைவு விற்பனைக்குரிய ஒரு பொருளாக மாறாத போது வித்தியாசமான ஒரு சூழல் உருவாகிறது. ஹாரி ப்ரேவர்மேன் இந்த சூழல்கள் குறித்து மிகவும் தர்க்கரீதியான விளக்கத்தினை அளிக்கிறார். “ஒரு தொழிலாளி தன் உழைப்பால் பயன்பெறக் கூடியவருக்கு நேரடியாக தனது உழைப்பை வழங்காமல், ஒரு முதலாளியிடம் விற்று, அந்த முதலாளி சரக்கு சந்தையில் அதனை மறுவிற்பனை செய்வார் என்றால், அது சேவைத் துறையில் நடைபெறும் உற்பத்தியின் முதலாளித்துவ வடிவமாகும்” என்று குறிப்பிடுகிறார்.
அதே போல, ஹாரி ப்ரேவர்மேன் அத்தகைய சேவை என்பது முதலாளித்துவ உற்பத்தி முறையில், உபரிமதிப்பை உற்பத்தி செய்கிற பயனுள்ள உழைப்பாகும் என விளக்கும் விதத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
“முதலாளித்துவத்தின் வரலாற்றில் ஏகபோக மூலதனத்தின் காலத்தில் பல்வேறு வகையான உழைப்பு முறைகளானது மூலதனத்தின் லாபகரமான முதலீட்டின் ஒரு பகுதியாக ஆகிவிடுவதன் காரணமாக, அவை மூலதன விரிவாக்கத்திற்கே பயன்படுகின்றன. தற்போதைய நவீன “கார்ப்பரேட்டுகள்” அல்லது “பெரு நிறுவனங்கள்” வடிவத்தில் அனைத்து வகையான தொழிலாளர்களும் எவ்வித வேறுபாடுமின்றி பணிக்கமர்த்தப்படுகிறார்கள். நவீன கார்ப்பரேட் குழுமங்களில் உற்பத்தி, வர்த்தகம், வங்கி, சுரங்கம் மற்றும் சேவை போன்றவற்றை கவனிப்பதற்கென சில பிரிவுகள் இருக்கின்றன. அவற்றில் அவரவர் வேலையை அமைதியாக அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இறுதியில் கம்பெனியின் பேலன்ஸ் ஷீட் வெளிவரும்போது அனைத்து வகையான உழைப்பு வடிவங்களும் மறைந்து போய் அவை அனைத்தும் மதிப்புருக்களாக தெரிகிறது” என்று சேவை குறித்த தனது விளக்கத்தினை மிகத் தெளிவாக தருகிறார்.
மார்க்ஸ் இது குறித்து கம்யூனிஸ்ட் அறிக்கையை எழுதும் முன்பே “கூலி உழைப்பு, மூலதனம்” என்ற நூலில் விளக்கியுள்ளார்
“உற்பத்தி மூலதனம் வளரும்போது, தொழிலாளர்களுக்கான கிராக்கியும் வளர்கிறது. இதன் விளைவாக, உழைப்பின் விலை, கூலி அனைத்தும் உயர்கின்றன…….
“கவனிக்கத்தக்க ஒரு கூலி உயர்வு ஏற்படுகிறது என்றால், அது உற்பத்தி மூலதனத்தின் துரித வளர்ச்சியை சுட்டிக்காட்டுகிறது. உற்பத்தி மூலதனத்தின் துரித வளர்ச்சி என்பது அதற்கு சமமான செல்வாதார வளர்ச்சியை, ஆடம்பர மற்றும் சமூகத் தேவைகளின் வளர்ச்சியை, சமூக போகங்களின் வளர்ச்சியை உருவாக்குகிறது. இப்படி தொழிலாளியின் அனுபோகங்கள் வளர்ச்சி அடைந்தாலும், முதலாளியின் அனுபோகங்களின் வளர்ச்சியோடு ஒப்பிடும்போது அது குறைவாக இருப்பதால், முதலாளியின் அனுபோகங்கள் தொழிலாளிக்கு எட்டாதவையாக இருப்பதால், சமூகத்தின் பொதுவான முன்னேற்றத்தோடு ஒப்பிடுகையில், தொழிலாளியின் அனுபோக வளர்ச்சிகள் போதுமானதாக இல்லாமல் இருப்பதால், ஒரு தொழிலாளி பெறும் அனுபோகங்களில் சமூக திருப்தி என்பது குறைவாகவே இருக்கிறது. நமது ஆசைகளும் இன்பங்களும் சமூகத்தில் இருந்தே முளைத்தெழுகின்றன. நாம் அவற்றை சமூகத்தின் அளவுகோலால் மட்டுமே அளக்கிறோம். நம்மிடம் இருக்கும் பொருட்களால் அல்ல. ஏனென்றால் அவை சமூகத்துடன் தொடர்புடையவை; சமூகத் தன்மையுடன், இயல்புடன் கூடியவை. பொதுவாக, கூலி என்பது சரக்குகளின் விலையால் மட்டும் தீர்மானிக்கப்படுவதல்ல. அது பல்வேறு உறவுகளை உள்ளடக்கியதாகும்” என்று மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.
மார்க்சின் இந்த வார்த்தைகள் தற்போதைய சூழலை புரிந்து கொள்ள மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். தொழிலாளர்களின் போராட்டங்கள் மற்றும் பல்வேறு பிற காரணிகளால், தொழிலாளர்களின் கூலியும் வசதி வாய்ப்புகளும் உயர்ந்தாலும் அவர்களின் வாழ்க்கைத் தரம் என்பது 19-ம் நூற்றாண்டின் மத்திய காலத்தின் அளவிற்கு இல்லை என்பதே இன்றைய நிலை. முதலாளித்துவம் முதலாளிகளுக்கும் கூலித் தொழிலாளர்களுக்கும் இடையே ஒரு பரந்த பொருளாதார ஏற்றத்தாழ்வினை உருவாக்குகிறது. தொழிலாளர்கள் ஒரு வேளை கூடுதலான ஊதிய விகிதம் அல்லது வசதிவாய்ப்புகளை பெறலாம். ஆனால் உடைமையாளர்களின் செல்வச் செழிப்புகளும் வசதிகள் மற்றும் சொத்துக்களும் ஒரு நிரந்தர விகிதாச்சாரத்தில் அதைவிட கூடிக் கொண்டே போகிறது.
இந்த முதலாளித்துவ உலகமயமாக்கல் காலக்கட்டத்தில், குறிப்பாக நிதி மூலதனத்தின் ஆதிக்கத்தின் கீழ், வருமான ஏற்றத் தாழ்வுகள் என்பது இதற்கு முன்பு இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. உலகமயமாக்கலின் கதாநாயகன் என்று சொல்லப்படும் உலக வங்கியே கூட, அதனுடைய அடுத்தடுத்த அறிக்கைகளில் இந்த வருமான ஏற்றத்தாழ்வுகள் குறித்து கவலை தெரிவித்துள்ளது. மேலும் மேலும் மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவது குறித்தும், வேலையில்லாமல் இருப்பது குறித்தும் உலக வங்கி கவலை தெரிவித்துள்ளது. அதே போல ஆட்சியாளர்களுக்கு எதிராக துன்பப்படும் ஏழை எளிய மக்களின் அதிருப்தியை கண்டுணர்ந்துளளது.
எனவே, ஊதியத்தில் எவ்வளவு உயர்வு ஏற்பட்டிருக்கிறது என்ற கேள்வியல்ல இப்போது முக்கியத்துவம் பெறுவது. தற்போதைய வினா என்னவென்றால், ஒரு நாட்டின் செல்வாதாரத்தை -/ வருமானத்தை உருவாக்கும் சாமானிய மக்களுக்கு அவர்களுக்கு சேர வேண்டிய பங்கு உரிய விகிதத்தில் / உரிய முறையில் சேர்கிறதா என்பதுதான். இந்த இழப்புணர்வும், ஏற்றத்தாழ்வான நிலையும்தான் தொழிலாளி வர்க்கத்தின் போர்க்குணத்திற்கு உண்மையான கரு ஆகிறது.
இந்த எல்லா வகையான உண்மைகளையும், சூத்திரங்களையும் கருத்தில் கொண்டு, இன்றைய உற்பத்தித் துறை தொழிலாளர்கள், திறன் பெற்ற சேவைத் துறை தொழிலாளர்கள், வணிக நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள், நிதி நிறுவனங்களாகிய வங்கிகள், இன்சூரன்ஸ் துறை ஊழியர்கள், அரசுத் துறைகளில் – அரசு அலுவலகங்களில் எழுத்தர்களாகவும் அதற்கும் கீழான பியூன் போன்ற வேலையில் இருக்கும் தொழிலாளர்கள், முதலாளிகளுக்கு சேவை செய்வதில் இது போன்ற வேலைகளில் இருக்கும் தொழிலாளர்கள், ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் தனித் தனியான தினக் கூலிகள் என அனைவருமே கூலித் தொழிலாளர்கள் என்ற வரையறையின் கீழ் இயற்கையாகவே வந்துவிடுகிறார்கள். அதே நேரத்தில் பாட்டாளி வர்க்கத்தின் மையமாக, முக்கிய கருவாகத் திகழ்பவர்கள் தொழில் துறை கூலித் தொழிலாளர்கள் ஆவர்.
தங்களுடைய உழைப்பு சக்தியை விற்பதைத் தவிர வேறு வாழ்வாதாரம் இல்லாத வீட்டு வேலை தொழிலாளர்கள், அவர்கள் மதிப்பினை உருவாக்கவில்லை என்றாலும், முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராக அணி திரளாவிட்டாலும், மிக அதிக அளவில் சுரண்டலுக்கு உட்படுத்தப்படுகின்ற, அனைத்தையும் இழந்து நிற்கும் தொழிலாளர்கள் என்ற முறையில் பாட்டாளி வர்க்கம் என்பதன் பரந்த வரையறைக்குள் வந்துவிடுகின்றனர்.
இந்த காரணிகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, பாட்டாளி வர்க்கம் என்பது இன்றைக்கு மிக வேகமாகக் குறைந்து கொண்டே வரும் வர்க்கமாகவும், மறைந்து போகிற வர்க்கமாகவும் இருக்கிறது என்பதும், அந்த இடத்தில் புதிதாக போர்க்குணமற்ற, புரட்சிகர திறனற்ற, மிக அதிக அளவில் ஊதியம் மற்றும் பிற வசதி வாய்ப்புகளை பெற்ற வாழும் ஒரு மத்திய தர வர்க்கம் உருவாகி இருக்கிறது என்பதுமான கருத்து ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இல்லை.
தொழிலாளி வர்க்கத்தின் வர்க்க உணர்வு (புரட்சிகர குணாம்சம்)
மார்க்சிய இயக்கவியல் கொள்கையின்படி, வர்க்க உணர்வு என்பது ஒரு மனிதனின் புறச் சூழலுக்கும், அதன் காரணமாக அவனுள் ஏற்படும் உணர்வு நிலைக்குமான உள்ளார்ந்த தொடர்பு குறித்த விழிப்புணர்வில் இருந்து உருவாகிறது.
“தத்துவத்தின் வறுமை” என்ற தனது நூலில் வர்க்கத்திற்குள்ளும், வர்க்கத்திற்காகவும் என்ற இரண்டிற்குமான முக்கியமான வேறுபாட்டினை பற்றி மார்க்ஸ் பேசுகிறார். இந்த இடத்தில்தான் தொழிலாளி வர்க்கத்தின் உணர்வு மட்டத்தின் வேர் இருக்கிறது என்று குறிப்பிடுகிறார்.
“பொருளாதார நிலைமைகள் முதன்முதலில் நாட்டின் திரளான மக்களை தொழிலாளிகளாக மாற்றிவிட்டது. மூலதனத்தின் ஆதிக்கம் இந்த மக்கள் திரளுக்கு ஒரு பொதுவான நிலைமையை, பொதுவான நலனை உண்டாக்கிவிடுகிறது. எனவே, இந்த மக்கள் திரள் ஏற்கனவே மூலதனத்துக்கு எதிரான வர்க்கமயமாகியுள்ளது என்றாலும் தனக்காக நிற்கும் வர்க்கமாக இன்னும் ஆகவில்லை. இந்தப் போராட்டத்தில் – அதன் சில கட்டங்கள் மட்டும் நாம் குறிப்பிட்டிருக்கிறோம். இந்த மக்கள் திரள் ஒன்றுபடுகிறது. தனக்காக நிற்கும் வர்ககமாக உருவமைத்துக் கொள்கிறது. அது காத்து நிற்கும் நலன்கள் வர்க்க நலன்களாகி விடுகின்றன. ஆனால் வர்க்கத்துக்கு எதிராக வர்க்கம் நடத்தும் போராட்டம் ஒரு அரசியல் போராட்டமாகும்.” என்று மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.
இங்கு நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, மார்க்ஸ் “பொருளாதார போராட்டங்களை” புரட்சிகர அரசியல் உணர்வு மட்டத்துடனோ அல்லது சோசலிசத்துடனோ தொடர்புடையது அல்ல என்று ஒரு போதும் சொல்லவில்லை. மார்க்சைப் பொறுத்த வரையில், “பொருளாதாரப் போராட்டங்கள்”தான் ஒரு பிரத்தியேகமான, பரந்துபட்ட அரசியல் உணர்வினை உருவாக்குவதற்கு மையமான முக்கிய அம்சமாகும்.
அதே நேரத்தில், இந்த அரசியல் உணர்வு – சோசலிச குணாம்சம் என்பது தானாக தொழிலாளி வர்க்கத்திற்கு வந்துவிடாது என்று லெனின்கூறுகிறார். அதாவது ஒரு புரட்சிகர கட்சியின் தலையீட்டினால் மட்டுமே இந்த சோசலிச உணர்வு மட்டம் என்பது பாட்டாளி வர்க்கத்திற்கு ஊட்டப்பட முடியும் என்று லெனின் குறிப்பிடுகிறார்.
தற்போது நவீன முதலாளித்துவ சமுதாயத்தில் பாட்டாளி வர்க்கம் மட்டுமே புரட்சிகர வர்க்கமாக இருக்கிறது. ஆனால், அவர்களுடைய அரசியல் உணர்வு மட்டம் அல்லது புரட்சிகர குணாம்சம் என்பது லெனின் கூறியபடி தானாக வந்துவிடாது. அதே போல எல்லா சந்தர்ப்பங்களிலும் எல்லா இடங்களிலும் முதலாளித்துவ நெருக்கடிக்கு எதிரான போராட்டங்கள் ஒரே மாதிரியாக இருக்காது.
ஹங்கேரியன் மார்க்சிஸ்ட் ஜார்ஜ் லூகாக்ஸ், “பொருளாதார நெருக்கடிக்கு எதிரான பாட்டாளி வர்க்கத்தின் உணர்வு மட்டம் என்பது பல நேரங்களில் போதுமான அளவிற்கு அதன் தீவிரமான தாக்குதலுக்கு எதிர் வினையாற்றும் தீவிரத்துடன் இருப்பதில்லை” என்று குறிப்பிடுகிறார்.
தற்போதைய தலைமுறை தொழிலாளி வர்க்கம் முதலாளித்துவ நெருக்கடிகளுக்கு எதிரான போராட்டங்களில் உலகம் முழுவதும் ஆங்காங்கே ஈடுபட்டுக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால், உலகளாவிய அளவில் இந்த போராட்டங்கள் நடப்பதில்லை. தற்போது புரட்சிகர பாட்டாளிவர்க்க அரசியல் கட்சிகளின் முக்கிய கடமை என்பது தேவையான தலையீடுகளை செய்து, பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் உணர்வு மட்டத்தை வளர்த்தெடுப்பதாகும். அவர்களுக்கு சோசலிசமே மாற்று என்பதனை அறிவுறுத்தி, ஒரு புரட்சிகரப் போராட்டத்தினை நடத்துவதற்குத் தேவையான வழிகாட்டுதல்களை அளிக்க வேண்டியதாகும். இதைத்தான் கம்யூனிஸ்ட் அறிக்கை அறிவுறுத்துகிறது.
Leave a Reply