கம்யூனிஸ்ட் அறிக்கையும், இந்திய புரட்சியின் திட்டமும்


என். குணசேகரன்

கம்யூனிஸ்ட் அறிக்கை மானுட சமூகத்தின் உலகளாவிய விடுதலையைப் பேசுகிறது. இந்திய கம்யூனிஸ்ட்  கட்சி (மார்க்சிஸ்ட்) ன் திட்டம், இந்திய விடுதலையைப் பேசுகிறது. இந்த இரண்டும் இந்திய நாட்டில் செயல்படுகிற  ஒரு புரட்சிகர போராளிக்கு  வழிகாட்டும்  கையேடுகளாகத் திகழ்கின்றன.

அனைத்து நாட்டு மக்களுக்கும் உண்மையான விடுதலையை முன்னிறுத்தும் விடுதலைப் பிரகடனமாக, கம்யூனிஸ்ட் அறிக்கை திகழ்கிறது. அடிமை விலங்குகளை உடைத்தெறிந்து, முதலாளித்துவ சுரண்டலிலிருந்தும், அடிமைத்தனத்திலிருந்தும் விடுபட பாட்டாளி வர்க்கத்திற்கு அறிக்கை வழிகாட்டுகிறது.

பிரெட்ரிக் எங்கெல்ஸ் 1883-ம் ஆண்டில் ஜெர்மன் பதிப்புக்கு எழுதிய முன்னுரையில்  “(அனைத்து வரலாறும்) சமூக வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களிலும் சுரண்டப்படும் வர்க்கத்துக்கும், சுரண்டும் வர்க்கத்துக்கும், ஒடுக்கப்படும் வர்க்கத்துக்கும், ஒடுக்கும் வர்க்கத்துக்கும் இடையேயான போராட்டங்களின் வரலாறாகவே இருந்து வருகிறது …” என்கிறார்.

இந்த நெடிய போராட்டத்தில் முதலாளித்துவம் பாட்டாளி வர்க்க முன்னேற்றத்தை தடுக்கவும் ஒடுக்கவும் அனைத்து  சாகசங்களையும் செய்துவருகிறது. ஆனால் இதில் இறுதி வெற்றியை தீர்மானிக்கிற  இடத்தில் பாட்டாளி வர்க்கமே உள்ளது. வரலாற்றில் நிகழவிருக்கும் இந்த விடுதலை சமூகம் முழுமைக்குமான விடுதலையாக அமைந்திடும். 

1848-ல்  மார்க்சும் எங்கெல்சும் எழுதிய இந்தக் கருத்துக்கள் இன்றும் பொருந்துமா?. 20-ம் நூற்றாண்டில் பணி நிலைமைகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. உற்பத்தி முறையிலும் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன; இதன் காரணமாக உழைக்கும் மக்களின் வலிமை பலவீனமடைந்து உள்ளது என்ற வகையில் பல வாதங்களைப் பலரும் முன்வைத்தனர். பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவத்தை வீழ்த்துவது என்ற கருத்தாக்கம் பொருத்தமற்றதாகப் போய்விட்டது என்றனர்.

ஆனால், இன்றைய நிலைமைகளும் கூட மார்க்சின்  கருத்தினை   உறுதிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. மார்க்ஸ் குறிப்பிட்டார்: “பாட்டாளிகளின் இந்த ஒழுங்கமைப்பு முன்னிலும் வலிமை மிக்கதாக, உறுதி மிக்கதாக, சக்தி மிக்கதாக மீண்டும் வீறுகொண்டு எழுகிறது.” 

21-ம் நூற்றாண்டில் முறைசாரா தொழில்கள், அணி சார்ந்த உற்பத்தித் துறைத் தொழில்கள் மற்றும் சேவைத் துறை தொழில்கள் என பலவிதமாக தொழிலாளர் எண்ணிக்கை பெரும் அளவில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சங்க ரீதியாக ஒன்றுதிரண்டு போராடுகிற திறனும் சமீபகாலங்களில் அதிகரித்துள்ளது .

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 2018-ம் ஆண்டுக் கணக்கீட்டின்படி தற்போது வேலையில் இருக்கும் மொத்த உழைப்பாளர்களில் 60% முறைசாரா தொழில்களில், எவ்வித சமூகப் பாதுகாப்பும் இல்லாமல், வறுமைச் சூழலில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு பணியாற்றும் தொழிலாளர்கள் எண்ணிக்கையே 200 கோடியைத் தாண்டுகிறது. இது மிகப்பெரும் பிரம்மாண்டமான உலகப் பாட்டாளி வர்க்கம். இந்தியாவில் 50 கோடிக்கும்  மேற்பட்ட எண்ணிக்கை கொண்ட வலிமையான பாட்டாளி வர்க்கம் உள்ளது.

தொழிலாளர் ஒற்றுமைக்கான தடைகள் மார்க்ஸ் காலத்தைவிட இன்று அதிகமாக உள்ளன. இன்று வலதுசாரி கருத்தியல் தொழிலாளர்களிடம், இன, சாதி, மத அடையாளங்களை வலுப்படுத்தி, வெறியூட்டி, அரசியல் லாபம் பெற்று வருகிறது. எனினும், மார்க்சின் அறைகூவலான  “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!” என்ற  பாதையில் உழைக்கும் வர்க்கம் தீரமுடன் பயணம் மேற்கொண்டால் சுரண்டலற்ற ஒரு சமூகம் சாத்தியமே.

இந்திய கம்யூனிஸ்ட்கள்

அறிக்கை காட்டும் பாதையில்  இந்திய புரட்சிக்கான திட்டத்தை   வகுக்க இந்திய கம்யூனிஸ்ட்கள் 1920- ம் ஆண்டுகளிலிருந்தே முயற்சித்து வந்தனர்.

கார்ல் மார்க்ஸ் தொழிலாளி வர்க்கம் தனது விடுதலையைத்  தானே சாதித்துக் கொள்ள வேண்டும் என்றும், தனக்கென்று ஒரு அரசியல் கட்சியை வளர்த்தெடுத்து, ஆளுகிற வர்க்கமாக தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்றும் கம்யூனிஸ்ட் அறிக்கையில் எழுதியுள்ளார். இது நடக்கும் வரை, முதலாளித்துவ கட்சிகள் பல வடிவங்களில் உழைக்கும் வர்க்கத்தினை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள். மார்க்சின் இந்த அறிவுரை அடிப்படையில் ஒரு புரட்சிகரமான கட்சியை உருவாக்கிட இந்திய  கம்யூனிஸ்ட் இயக்கம் துவக்கத்திலிருந்தே முயற்சித்து வந்தது.

மார்க்சிஸ்ட் கட்சியின்  திட்டத்தில் கட்சியின்  பங்கு குறிப்பிடப்படுகிறது;

“புரட்சிகர இயக்கத்தின் வளர்ச்சிப் போக்கின் தனித்துவமான கட்டங்களில் பல்வேறு வர்க்கங்களும், ஒரே வர்க்கத்தின் பல்வேறு பகுதியினரும், பல வகைப்பட்ட நிலைபாடுகளை எடுப்பார்கள். ஒரு பலமான கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே வெகுஜன இயக்கங்களை வளர்த்தெடுத்து, தொலைநோக்கு இலக்கை அடைவதற்குப் பொருத்தமான ஐக்கிய முன்னணி உத்தியை உருவாக்கி, மாற்றங்களை உருவாக்குவதன்மூலம் இத்தகைய பிரிவினரை தனது அணிக்குள் ஈர்க்க முடியும்.

இத்தகைய கட்சியால்தான் மிகுந்த அக்கறைகொண்ட, சகல தியாகங்களுக்கும் தயாராக உள்ள பகுதியினரை தனது அணிக்குள் கொண்டுவந்து புரட்சிகர இயக்கத்தின் பாதையில் ஏற்படும் பல்வேறு திருகல்கள், திருப்பங்களின் போது மக்களுக்கு தலைமை தாங்கிச் செல்ல முடியும்.” (7.16)

உழைக்கும் மக்கள் ஆதரவைப் பெற, சித்தாந்தத் துறை முக்கியமானது. தங்களது மூலதன நலன்களை பாதுகாக்கும் சித்தாந்தத்தை தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்கானது என்று சித்தரிப்பதில் முதலாளித்துவ சிந்தனையாளர்களும், ஊடகவியலாளர்களும் வல்லவர்கள். எனவே இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் இந்தியாவில் நிலவும் சாதிய ஒடுக்குமுறை, மதங்கள் முன்னிறுத்தும் நம்பிக்கைகள், பிற்போக்கான வாழ்வியல் கருத்துக்கள் ஆகிய அனைத்தையும் எதிர்கொண்டு, இந்திய புரட்சியைப் பற்றி கம்யூனிஸ்ட்கள் சிந்தித்தனர்.

தொழிலாளி வர்க்கத்தின்  ஒவ்வொரு போராட்டமும், முதலாளித்துவ அரசியல்  அதிகாரப்  பிடிப்பிற்கு சவாலாக அமைந்திடும். “ஒவ்வொரு வர்க்கப் போராட்டமும் ஓர் அரசியல் போராட்டமே” என்பது மார்க்சின் கூற்று. இந்தியாவில் 1947-ல் விடுதலை கிடைக்கும்வரை ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகவும், உழைக்கும்  மக்களின் உடனடி  கோரிக்கைகளை  முன்வைத்தும்,  இந்திய  கம்யூனிஸ்டுகள் எண்ணற்ற  போராட்டங்களை முன்னின்று  நடத்தினார்கள். அவை அனைத்தும் காலனிய எதிர்ப்பு, வர்க்க சுரண்டலுக்கு எதிரானதாக நடந்தன. அவற்றின் அரசியல்  தாக்கம்தான் 1947-க்குப் பிறகு அமைந்த  அரசு அமைப்பு ஜனநாயகமும், மதச்சார்பற்ற தன்மையும் கொண்டவையாக அமைய வழிவகுத்தன.

அவ்வப்போது சில வெற்றிகளை தொழிலாளி வர்க்கம் பெற்றபோதிலும், முதலாளித்துவத்துடன்  உள்ள முரண்பாடு  நீடிக்கிறது. இந்த நிகழ்வுப்போக்கின் இறுதிக் காட்சியை மார்க்ஸ் சித்தரிக்கிறார். “…பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவத்தை தூக்கி எறிந்து தனிச்சொத்துரிமையையும் அழித்திடும்” என்று மார்க்ஸ்  குறிப்பிட்டார். இந்த எதிர்காலப் பார்வைதான் இந்திய சோசலிச  மாற்றத்திற்கான திட்டத்தை  இந்திய மார்க்சியர்கள் உருவாக்குவதற்கான பார்வையாக  அமைந்தது.

முதலாளித்துவம் வீழும் என்பது மார்க்சின் ஆருடம்  அல்ல. முதலாளித்துவ வரலாற்றின் தர்க்கரீதியான நிகழ்வுப் போக்கு.  “இது  தவிர்க்க முடியாதது” என்று அழுத்தந்திருத்தமாக மார்க்ஸ் குறிப்பிடுவதற்குக்   காரணம், அவற்றின் போக்குகளை  அவர்  துல்லியமாக அறிந்திருந்ததுதான்.

முதலாளித்துவ  அழிவு  என்பதனை மார்க்ஸ் தனது விருப்பமாக வெளிப்படுத்தவில்லை; அல்லது முதலாளித்துவ சுரண்டல் கொடுமைகளுக்கு ஆளாகும் பாட்டாளி வர்க்கத்தின்  மீது ஏற்பட்ட பரிதாபத்தின் விளைவாக முதலாளித்துவம்  அழியட்டும் என்று மார்க்ஸ் சாபமிட்டார் என்று கருத முடியாது. அவரும் எங்கல்சும், உருவாக்கிய தத்துவக்  கோட்பாடுகள் முதலாளித்துவ எதிர்காலத்தை கணிக்க உதவின. இயக்கவியல், வரலாற்றுப் பொருள்முதல்வாதம் முதலாளித்துவத்தை ஆராய்வதற்கான சோதனைக் கூடமாக அமைந்தது.

எனவே இந்திய புரட்சிப்பாதையை தெரிவு செய்கிறபோது, இந்திய முதலாளித்துவம்,  அதன் வளர்ச்சிப் போக்குகளை துல்லியமாகவும், வரலாற்றுப் பொருள்முதல்வாதத் துணை கொண்டும் ஆராய்ந்திடும் முயற்சியில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் முயன்றது.

1864 ஆம் ஆண்டு சர்வதேச தொழிலாளர் அமைப்பின் விதிகளை எழுதுகிறபோது மார்க்ஸ் கீழ்கண்டவாறு குறிப்பிட்டார்: “தொழிலாளி வர்க்கங்களின் விடுதலையை தொழிலாளி வர்க்கங்களேதான் சாதிக்க வேண்டும்” வேறு எந்த வர்க்கமும் அந்த வேலையை சாதித்திட முடியாது. இந்தக் கருத்து மற்ற சிந்தனையாளர்களிடமிருந்து மார்க்சினை வேறுபடுத்திக் காட்டுகிறது; அடிமைப்பட்டும், சுரண்டப்பட்டும் இருக்கிற உழைக்கும் மக்களை விடுதலை செய்வதற்கு தேவதூதன் போன்று ஒரு மகத்தான தலைவர் தோன்றிடுவார் என்பது உள்ளிட்ட, பல  பொய்யான சித்தாந்தங்களை உழைக்கும் மக்களிடையே கால காலமாக விதைத்து வருகின்றனர். ஊடகங்களும் ‘சுதந்திர சந்தை, சுதந்திர போட்டியே’ ‘ஜனநாயகம்’ என்பது போன்ற கருத்துகளைப் பரப்பி, சில தனிநபர்களையும் முன்னிறுத்துகின்றனர். இந்த வேலை காலம்காலமாக இடையறாது நடந்து கொண்டிருக்கிறது.

தங்களின் விடுதலையை தாங்களே சாதித்துக் கொள்ள வேண்டும் என்பதும், அதற்கான  தெளிவான திட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சி முன்வைக்க வேண்டும் என்பதும் மார்க்சிய லெனினிய வழிகாட்டுதல். இந்திய உழைக்கும் வர்க்கங்களான தொழிலாளர் – விவசாயிகளின் சமூக பொருளாதார நிலைமைகள் அனைத்தையும் அறிந்து அவர்களின் வர்க்க விடுதலைக்கான வியூகத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் விளக்குகிறது.

இந்திய அரசும், அரசாங்கமும் முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையில் நாட்டின் பொருளாதாரத்தை கொண்டு செல்கிற நடவடிக்கையையும், அந்நிய நிதி மூலதனத்தோடு, வலுப்பெற்று வருகிற அதன் கூட்டையும்,  கட்சித்திட்டம் விளக்குகிறது. நவீன தாராளமயக் கட்டத்தில் முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சிப் போக்குகளை கட்சித் திட்டம் துல்லியமாக விளக்குகிறது. விவசாயம், தொழில் மற்றும் வெளியுறவு கொள்கையைப் பற்றிய துல்லியமான மதிப்பீட்டை கட்சித் திட்டம் கொண்டிருக்கிறது.

அதிகாரத்தை கைப்பற்றுதல்

கம்யூனிஸ்டுகளின் செயல்பாடுகள் அனைத்தும் முதலாளித்துவ முறைமையை ஒழிப்பதுதான் என்பது அறிக்கை பகிரங்கமாக  எடுத்துரைக்கிறது. இதனை எவ்வாறு செய்து முடிப்பது என்பதற்கான கோட்பாடுகளையும் அறிக்கை கொண்டுள்ளது.

இதை மூன்று வகையாக பிரித்து அறிக்கை மேலும் விளக்குகிறது. பாட்டாளிகளை ஒரு வர்க்கமாக கட்டியமைக்க வேண்டும் என்றும், அது கம்யூனிஸ்டுகளின் முதல் நோக்கம் என்றும்  அறிக்கை குறிப்பிடுகிறது. இதன் பொருள் என்ன ? பாட்டாளிகள் இந்த சமூகத்தை மாற்றுவதற்கு தாங்கள் கடமைப்பட்டவர்கள் என்ற உணர்வினை அடைய வேண்டும். அவர்களுக்கு அந்த உணர்வினை ஏற்படுத்துகிற பொறுப்பு கம்யூனிஸ்டுகளுக்கு உண்டு. தங்களது அன்றாட பொருளாதார கோரிக்கைகளுக்கு மட்டுமே பாட்டாளி வர்க்கம் முன்கை எடுப்பது போதுமானதல்ல; அந்தப் போராட்டங்கள் அரசியல் உள்ளடக்கம் கொண்டவையாக இருந்தாலும், இறுதியாக, ஒரு பெரும் வரலாற்று கடமையை பாட்டாளி வர்க்கம் நிறைவேற்றவேண்டும். அந்தக் கடமையை உணர்ந்த  வர்க்கமாக பாட்டாளி வர்க்கம் உயரும்போதுதான் அது தனது வரலாற்றுக் கடமையை  செவ்வனே நிறைவேற்றும்.

அது எப்படிப்பட்ட வரலாற்று கடமை என்பதை இரண்டாவது அம்சமாக அறிக்கை குறிப்பிடுகிறது. முதலாளித்துவ மேலாதிக்கத்தை வீழ்த்துகிற கடமையைத்தான் அறிக்கை குறிப்பிடுகிறது. புரட்சிகர உணர்வு கொண்ட பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவ மேலாதிக்கத்தை வீழ்த்துகிற  வல்லமை கொண்டதாக மாறிடும்.

மூன்றாவதாக, பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க வேண்டும் என்பதை அறிக்கை  வலியுறுத்துகிறது. அரசியல் அதிகாரம்தான் முதலாளித்துவ சமூக ஒழுங்கினை முடிவுக்குக் கொண்டுவந்து சமூக சமத்துவத்தை நிலைநாட்டும் .

எனவே, பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு ஏற்றவாறு, அந்த  வர்க்கத்திற்கு உணர்வு ஊட்டுகிற பணியை கம்யூனிஸ்டுகள் மேற்கொள்ள வேண்டும் என்பது அறிக்கையின் வழிகாட்டுதல். 

அறிக்கை முதலாளித்துவத்தின் உலகம் தழுவிய செயல்பாட்டை விரிவாக பேசுகிறது; அதேநேரத்தில், தேசிய எல்லைகளுக்குள் வர்க்கப் போராட்டம் நடத்தவேண்டிய தேவையையும் அழுத்தமாக குறிப்பிடுகிறது. முதலாளித்துவ வர்க்கத்துடன் பாட்டாளி வர்க்கம் நடத்தும் போராட்டம், முதலில் தேசிய அளவிலான போராட்டமாக இருக்கிறது என்பதை அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. ஏனெனில்,.”…. ஒவ்வொரு நாட்டின் பாட்டாளி வர்க்கமும் முதலில் தன் நாட்டின் முதலாளித்துவ வர்க்கத்துடன் கணக்கு தீர்க்க வேண்டும்” என்று அறிக்கை தீர்க்கமாக குறிப்பிடுகிறது.

இவ்வாறான தேசிய அளவிலான போராட்டங்கள் வடிவத்தில் உள்நாட்டு எல்லைகளை கொண்டிருந்தாலும் இந்தப் போராட்டங்கள் உலக அளவில் “முதலாளித்துவத்தோடு கணக்கு தீர்ப்பதில்” கொண்டு செல்லும்.

சமூக பொருளாதார அமைப்புகள்

மார்க்சியத்தில் சமூக பொருளாதார அமைப்புகள் குறித்த தனித்த பார்வை உண்டு. புராதன கம்யூனிச சமுதாயம், அடிமை சமூகம், நிலப்பிரபுத்துவ சமுதாயம், முதலாளித்துவ சமூகம் என குறிப்பிட்ட கட்டங்களாக சமூக வளர்ச்சியை மார்க்சிஸ்டுகள் பார்ப்பது வழக்கம். ஆனால் இதை ஒரு சூத்திரமாக, ஒன்றின் பின் ஒன்றாக அணிவகுத்து வரும் சமூக வளர்ச்சியாக பார்ப்பது கூடாது. எங்கெல்ஸ் எழுத்துக்களில் இந்த வறட்டுத்தனம் தவிர்க்கப்பட்டு இருப்பதை காணலாம்.

ஒவ்வொரு நாடும் தனித்தன்மை கொண்ட சமூக பொருளாதார அமைப்பினையும் , விசேச தன்மைகளையும் கொண்டதாக உள்ளது. அந்த வளர்ச்சியின் பயணம் நேர்கோட்டில் செல்வதில்லை. முன்னேற்றமும் பின்னடைவும் நிறைந்ததாகவே உள்ளது. ஆனால், வர்க்கப் போராட்டம் இடையறாது நிகழ்வது, கம்யூனிச சமூக அமைப்பு, அதன் முதற்கட்டமாக சோசலிசம் என்ற இலக்கை நோக்கிய பயணம் முடிவடைவதில்லை.

இந்தியா போன்ற நாடுகளில் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை, முதலாளித்துவ  உற்பத்தி  முறை  என  இரண்டுமே  இயங்குவதைக்  காண முடியும். பல ஐரோப்பிய  நாடுகளில் நிலப்பிரபுத்துவ அழிவில்  முதலாளித்துவம்  வளர்ச்சியடைந்த  வரலாற்றையும் காணமுடியும். “குறிப்பிட்ட நிலைமைகளை,  குறிப்பிட்டவாறு ஆய்வு  செய்திட  வேண்டும்” என்று லெனின் வலியுறுத்தினார்.

கட்சித் திட்டம் அந்த குறிப்பிட்ட நாட்டில் நிலவுகிற திட்டவட்டமான நிலைமைகளை மார்க்சிய, லெனினிய கண்ணோட்டத்துடன் ஆய்வு செய்கிற ஒரு ஆவணமாகும். இந்திய புரட்சியின் முதலாவது கட்டம் இந்திய விடுதலையோடு நிறைவு பெற்றது. அப்போது முதலாளிகள், தொழிலாளி வர்க்கம், விவசாயப் பிரிவினர், குட்டி முதலாளிகள் போன்ற பிரிவினர் ஒன்று சேர்ந்து நடத்திய புரட்சியின் முதலாவது கட்டம் முடிவுக்கு வந்தது. இதில் ஏகாதிபத்தியம் முதன்மை எதிரியாக விளங்கியது. தற்போதைய இரண்டாவது கட்டத்தில் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புக் கடமைகள் நிறைவேற்ற வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, பெருமுதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம், ஏகாதிபத்தியம் ஒன்றுபட்டு உழைக்கும் வர்க்கங்களுக்கு எதிராக அதிகாரம் செலுத்துகிற இந்தச் சூழலில்,  இந்த மூன்றுக்கும் எதிரான வர்க்க கூட்டணி அமைத்து புரட்சியை நோக்கி முன்னேறுவதுதான் இந்திய புரட்சியின் இரண்டாவது கட்டமாக விளங்குகிறது. இந்த கட்டத்தில் அணி சேர வேண்டிய வர்க்கங்களாக தொழிலாளி வர்க்கம், விவசாய பிரிவினர், நடுத்தர வர்க்கங்கள், ஏகபோகமல்லாத முதலாளித்துவ பிரிவினர் ஆகியோர் அடங்குவர். இவை அனைத்தையும் கட்சித்திட்டம் மக்கள் ஜனநாயக அணி என்கிற தலைப்பின் கீழ் ஒவ்வொரு பிரிவினரும் வகிக்கும் பங்கு குறித்து விரிவாக விளக்குகிறது. 

விடுதலைக்குப் பிறகு, அரசின் வர்க்கத்தன்மை, இந்திய முதலாளித்துவ வளர்ச்சியின் தன்மை, புரட்சியின் தன்மை, வர்க்க மதிப்பீடுகள் உள்ளிட்ட பலவற்றில் கருத்து மோதல்கள் தொடர்ந்தன. இவை அனைத்திலும் தவறான நிர்ணயிப்புக்களை எடுத்துரைத்து, புரட்சிகர இயக்கத்தை திசை திருப்பும் முயற்சிகள் நடந்தன.

தற்போதைய இந்திய புரட்சியின் கட்டமாக மக்கள் ஜனநாயக புரட்சி என்பது நமது கட்சி திட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய அரசினுடைய வர்க்கத்தன்மை பற்றிய நிர்ணயிப்பு – முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அரசாக இந்திய அரசு செயல்படுகிறது என்பதையும், இதற்கு பெருமுதலாளித்துவம் தலைமை தாங்கி வருகிறது என்பதையும் கட்சித்திட்டம் வரையறை செய்கிறது. அரசு கட்டமைப்பு மற்றும் ஜனநாயகம் குறித்த விளக்கங்கள் கட்சித் திட்டத்தில் உள்ளன.  உண்மையான ஜனநாயகம் பெரும்பகுதியான மக்களுக்கு மறுக்கப்படுவது குறித்தும், நாட்டின் தேச ஒருமைப்பாட்டுக்கு எதிரான சக்திகளின் வளர்ச்சி, வகுப்புவாத சக்திகளால் மதச்சார்பின்மைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து, அதிகரித்து வரும் சமூக ஒடுக்குமுறை ஆகியன கட்சித் திட்டத்தில் விளக்கப்படுகிறது.

மக்கள் ஜனநாயக அரசு அமைகிறபோது, அது ஏற்று அமலாக்கவிருக்கும் நடவடிக்கைகள் குறித்து கட்சித் திட்டத்தில் விரிவாக விளக்கப்படுகிறது. தொழிலாளிகள், விவசாயிகள், நடுத்தர மக்கள் உள்ளிட்ட அனைவரின் வாழ்வாதார கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகிற திட்டங்கள் அனைத்தும் விளக்கப்படுகிறது.

மக்கள் ஜனநாயக அரசை அமைப்பதற்கு கட்ட வேண்டிய புரட்சிகரமான மக்கள் ஜனநாயக அணி அதில் அங்கம் வகிக்க வேண்டிய வர்க்க சக்திகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது. மார்க்சிய – லெனினிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இந்த அம்சங்கள் அனைத்தும் மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டத்தில் விளக்கப்பட்டுள்ளன. 

வர்க்கங்களிடையே முரண்பாடுகளும், வர்க்கத் திரட்டலும்

மக்கள் ஜனநாயக அணியில் அங்கம் வகிக்கும் வர்க்கங்கள் மற்றும் பல்வேறு பிரிவினரைப் பற்றி கட்சித் திட்டம் விரிவாக விளக்குகிறது.

“தொழிலாளி வர்க்கம் மற்றும் விவசாயிகளின் வலுவான கூட்டணிதான் மக்கள் ஜனநாயக முன்னணிக்கு மையமானதும், அடித்தளமானதும் ஆகும். நாட்டின் சுதந்திரத்தை பாதுகாக்கவும், நீண்டகால விளைவுகளை தரக்கூடிய ஜனநாயக மாற்றத்தைக் கொண்டுவரவும், ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்தை உறுதிப் படுத்தவும் இந்த கூட்டணி மிக முக்கியமான சக்தியாக இருக்கும். புரட்சியை முன்னெடுத்துச் செல்வதில் இதர வர்க்கங்கள் வகிக்கும் பாத்திரம் தொழிலாளர் – விவசாயிகள் கூட்டணியின் வலிமை, நிலைத்தன்மை ஆகியவற்றையே முக்கியமாக சார்ந்துள்ளது.(7.6)

“விவசாயத்தில் முதலாளித்துவம் ஆழமாக ஊடுருவியுள்ளதால், விவசாயிகளிடையே தெளிவான முரண்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, புரட்சியில் பலவகைப்பட்ட பகுதியினரும் பல்வேறு வகையான பாத்திரத்தை வகிப்பார்கள். நிலப்பிரபுக்கள் மற்றும் முதலாளித்துவவாதிகளின் ஈவு இரக்கமற்ற சுரண்டலுக்கு கிராமப்புறங்களில் மிகப்பெரும் எண்ணிக்கையில் உள்ள விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகள் ஆளாகியுள்ளனர். இவர்கள் தொழிலாளி வர்க்கத்தின் அடிப்படையான கூட்டாளிகளாக இருப்பார்கள். நிலப்பிரபுத்துவ மற்றும் முதலாளித்துவ நிலப்பிரபுக்களின் கந்துவட்டி மூலதனத்தாலும், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பெரு முதலாளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள முதலாளித்துவ சந்தையாலும், கிராமப்புறங்களில் உள்ள நடுத்தர விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமப்புற வாழ்க்கையில் நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தால் இவர்களது சமூக நிலையும் பல்வேறு வகைகளிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் மக்கள் ஜனநாயக முன்னணியில் நம்பகமான கூட்டாளிகளாக இருப்பார்கள்.

மேலும் மேலும் பாட்டாளி வர்க்க பட்டாளத்தில் நடுத்தரவர்க்கமும் இடையறாது வந்து சேர்கிறது. இதனை அறிக்கை படம் பிடித்துக் காட்டுகிறது (7.7)

கம்யூனிஸ்ட் அறிக்கையில் நடுத்தர வர்க்கம் குறித்து முக்கியமான கருத்து பேசப்படுகிறது. “நடுத்தர பட்டறைத் தொழில்முறையின் இடத்தைப் பிரம்மாண்ட நவீனத் தொழில்துறை பிடித்துக் கொண்டது. பட்டறைத் தொழில் சார்ந்த நடுத்தர வர்க்கத்தாரின் இடத்தில் கோடீஸ்வரத் தொழிலதிபர்கள் ஒட்டுமொத்தத் தொழில்துறைப் படையணிகளின் தலைவர்கள், அதாவது நவீன முதலாளித்துவ வர்க்கத்தினர் உருவாயினர். நவீனத் தொழில்துறை உலகச் சந்தையை நிறுவியுள்ளது..'” (அத்தியாயம்-1 முதலாளிகளும் பாட்டாளிகளும்)

இந்தியாவில் நடுத்தர வர்க்கங்களின் நிலைமை பற்றி குறிப்பிட்டு அவர்கள் புரட்சிகர இயக்கத்தில் பங்காற்ற இயலும் என்பது கட்சியின் திட்டத்திலும் சுட்டிக்காட்டப்படுகிறது.

“முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ ஆட்சியால் நகர்ப்புற மற்றும் கிராமப்புற நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரும் எண்ணிக்கையிலான நடுத்தர வர்க்க ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழில்முறைநிபுணர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் அறிவு ஜீவிகளின் புதிய பிரிவினர் ஆகியோர் முக்கியமான பகுதியினராகவும், செல்வாக்கு செலுத்தும் பகுதியினராகவும் உள்ளனர்.

மக்கள் ஜனநாயக முன்னணியில் இவர்களை கூட்டாளிகளாக இருக்கவைக்க முடியும்; இருப்பார்கள். புரட்சிக்காக இவர்களை வென்றெடுக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த பிரிவினரை ஜனநாயக லட்சியங்களுக்காக அணிதிரட்டுவதில் முற்போக்கான அறிவு ஜீவிகளின் பணி முக்கியமான ஒன்றாகும்.”(7.9).

“தொழிலாளி – விவசாயி கூட்டை மையமாகக் கொண்டு அனைத்து தேசபக்த, ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையின் மூலம் மக்கள் ஜனநாயகப் புரட்சியின் லட்சியங்களை அடைவதற்கான போராட்டம் சிக்கலானதும், நீண்டகால தன்மை கொண்டதும் ஆகும்.” என்று திட்டம் கூறுகிறது.

மக்கள் ஜனநாயக அணியில் இடம்பெறும் வர்க்கங்கள் மற்றும் பல்வேறு பிரிவினர்களுக்கும்  முதலாளித்துவ அரசிற்கும் ஏற்படும் முரண்பாடுகள்தான் அந்த வர்க்கங்களை திரட்டும் பணிக்கான ஆதாரம். எனவே அந்த முரண்பாடுகள் குறித்த புரிதலை கட்சி உறுப்பினர்களுக்கு ஏற்படுத்தி, தாங்கள் வாழும் சூழலில் தாங்கள் திரட்ட வேண்டிய வர்க்கங்கள் குறித்த ஆழமான புரிதலை உருவாக்க வேண்டும்.

“எண்ணற்ற உள்ளூர் போராட்டங்கள்” முதலாளித்துவத்தை எதிர்த்து அதனை வீழ்த்தும் தன்மை கொண்டவை  என்பது அறிக்கையின் பார்வை. அறிக்கை  பயன்படுத்தும் “உள்ளூர் போராட்டங்கள்” எனும்  சொற்றொடர் முக்கியமானது. நவீன தொடர்பு சாதனங்கள் இந்த உள்ளூர் போராட்டங்களை “ஒரே தேசிய போராட்டமாக மையப்படுத்த” உதவுவதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

இதேபோன்று உழைக்கும் மக்களின் உள்ளூர் போராட்டங்களும் முக்கியமானவை. முதலாளித்துவத்தின் சுரண்டல் கொள்கைகள் கடைக்கோடி கிராமங்கள் மற்றும்  குடியிருப்புகள் வரை தாக்கத்தை செலுத்துகின்றன. இந்த நிலையில், சமூகரீதியில் ஒடுக்கப்படுவோர், சிறுபான்மையினர், மீனவர்கள், ஆதிவாசிகள் என அனைத்துத் தரப்பு உள்ளூர் மக்கள் அனைவரும் அந்தந்தப் பகுதி சார்ந்த போராட்டக்களத்தில் வருவது முதலாளித்துவ எதிர்ப்பினை கூர்மைப்படுத்தும். இது தேசிய போராட்டத்தையும், உலகப் போராட்டத்தையும் வலுப்படுத்தும்.

வாசிப்பது கடினமானதா?

கட்சித் திட்டத்தின் அடிப்படைகளை உணர்ந்துகொள்ள கம்யூனிஸ்ட் அறிக்கை உதவிடும். இரண்டு ஆவணங்களையும் ஆழமாக உள்வாங்கிட வேண்டும். வாசிப்பது கடினமாக இருக்கிறது என்கிற காரணத்தை முன்வைத்து , ஒருவர் , அவற்றை வாசிக்காமல் இருப்பது, அவரது கம்யூனிச லட்சியப் பிடிப்பினை தளரச்  செய்திடும். இவ்வாறு, இலட்சிய பிடிப்பில் தளர்ச்சியுடன் செயல்படும் தெளிவற்ற உறுப்பினர்கள் கொண்ட இயக்கம் வளர்ச்சி காணாது. இயக்கத்திலும் தீவிரமான செயல்பாடு இருந்தாலும் வளர்ச்சி என்பது கானல் நீராகவே இருந்திடும்.

வாசிப்பது, மறுபடியும் வாசிப்பது, வரிக்கு வரி பொறுமையுடன் வாசிப்பது, மார்க்சியம் அறிந்தோருடன் விவாதம் செய்து வாசிப்பது, வாசகர் வட்ட கூட்டங்களில் இந்த இரண்டு ஆவணங்களின் கருத்துக்களை முன்வைத்து விவாதிப்பது, மற்றவர்களுக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கும், அறிக்கையிலும் திட்டத்திலும் உள்ள விஷயங்களை பேசுவது மற்றும் போதிப்பது- என பல வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

கம்யூனிஸ்ட் கட்சியில் சேருகிறவர்கள் கட்சித் திட்ட லட்சியத்துடன் தன்னை முழுமையாக இணைத்துக் கொள்ள வேண்டுமென்று லெனின் அறிவுறுத்தினார். கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் அறிக்கையையும், திட்டத்தையும் போதிக்கும் பணி முக்கியமானது மட்டுமல்ல; புரட்சிகரமான ஒரு பணியும் ஆகும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s