மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை முதலாளித்துவம் குறித்த ஆய்வுக் கருவூலம்


பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா

அறிமுகம்

கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை பிரசுரமாக வெளிவந்தது 1848-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ம் நாள். அறிக்கை வெளிவந்து 172 ஆண்டுகள் விரைவில் நிறைவடையவுள்ளன. இக்காலகட்டத்தில் உலகில் பிரம்மாண்டமான அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியும் அரசியல்-சமூக-பொருளாதார மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன. ஆனால் இன்றும் அறிக்கையை வாசித்தால் அது பல மையமான அம்சங்களில் சமகால முதலாளித்துவ உலக மயத்தைப் பற்றிய மிகத் துல்லியமான ஆவணம் என்பதை நாம் உணர்வோம். இதற்குக் காரணம் முதலாளித்துவம் என்ற உற்பத்தி அமைப்பை, அதன் இயக்க விதிகளை மிகச் சரியாக இயக்கவியல்-வரலாற்றுப் பொருள்முதல்வாத அணுகுமுறையில் அறிக்கை ஆய்வு செய்துள்ளது என்பதே ஆகும்.

நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்திய முதலாளித்துவம்

அறிக்கை முதலாளித்துவ உற்பத்தி அமைப்பை ஆழமாக ஆய்வு செய்கிறது. எவ்வாறு முந்தைய உற்பத்தி அமைப்பான நிலப்பிரபுத்துவ உற்பத்தி அமைப்பில் இருந்து முதலாளித்துவம் எழுகிறது என்பதை ஐரோப்பிய நாடுகளின் அனுபவங்களின் மூலம் அறிக்கை விளக்குகிறது. மானுட உயிரினத்தின் ஆரம்ப காலத்தில் மானுட சமூகங்களின் குறைவான உற்பத்திசக்திகளின் விளைவாக நிலவிய, நிர்ப்பந்தத்தின் அடிப்படையிலான, துவக்கநிலை பொதுவுடமை அமைப்பு உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியில் காலாவதியாகிறது. உபரி உற்பத்தி மானுட சமூகத்தின் இலக்கணமாக மாறுகிறது. உபரி உற்பத்தி வர்க்க சமூகத்தை, சுரண்டலை, சாத்தியமாக்குகிறது. இதில் இருந்தே சுரண்டும் வர்க்கத்திற்கும் சுரண்டப்படும் வர்க்கத்திற்கும் இடையிலான இடையறாத வர்க்கப் போராட்டம் மானுட வரலாற்றின் இலக்கணமாக அமைகிறது என்பதை துவக்கத்திலேயே அறிக்கை விளக்குகிறது. வர்க்கச் சுரண்டலுக்கு நிலம் உள்ளிட்ட உற்பத்திக் கருவிகளில் தனியுடைமை அவசியம் என்பதையும் சுரண்டல் அமைப்பை சுரண்டும் வர்க்கம் சார்பாக பாதுகாக்க அரசு என்ற அடக்குமுறை இயந்திரம் அவசியம் என்பதையும் சுருக்கமாகத் தெளிவுபடுத்துகிறது அறிக்கை.

அடுத்து, உற்பத்திசக்திகளின் தொடர் வளர்ச்சி மீண்டும் மீண்டும் சமூக உற்பத்தி உறவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதையும், இம்மாற்றங்கள் வர்க்கப் போராட்டங்கள் மூலமாக நிகழும் என்பதையும் அறிக்கை விளக்குகிறது. இந்தப் பின்புலத்தில் ஒரு சில விறுவிறுப்பான பக்கங்களில் ஐரோப்பிய நாடுகளில் முதலாளித்துவ உற்பத்தி அமைப்பிற்கு முந்தைய உற்பத்தி அமைப்பான நிலப்பிரபுத்துவ அமைப்பில் நிகழ்ந்துவந்த உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி புதிய உற்பத்தி உறவுகளை அந்த அமைப்பிற்குள்ளேயே வளரச் செய்கின்றன என்பதையும் இதனால் புதிய வர்க்கங்கள் நிலப்பிரபுத்துவ ஆளும் வர்க்கத்திற்கு எதிராக உருவாக்கப்படுகின்றன என்பதையும் இயக்கவியல்-வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் பாலபாடமாக அறிக்கை விவரிக்கிறது. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி உபரி உற்பத்தியை கணிசமாக உயர்த்துகிறது. இவற்றை வெகுதூரம் கொண்டுசென்று விற்கும் வாய்ப்புகளை இது அவசியப்படுத்துகிறது.

பொருட்களை பதப்படுத்தி பலகாலம் பராமரிக்கும் தொழில்நுட்பங்களையும் தொலைதூர போக்குவரத்து தொழில்நுட்பங்களையும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி சாத்தியமாக்குகிறது. இந்த மாற்றங்கள், நிலப்பிரபுத்துவ அமைப்பில் ஒவ்வொரு நிலப்பிரபுவின் ஆளுமைக்கு உட்பட்டிருந்த குறுகிய நிலப்பரப்பிலும் நிலவிய தொழில் மற்றும் வர்த்தக தடைகளையும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த இதர அம்சங்களையும் தகர்த்தெறிந்து புதிய உற்பத்தி உறவுகளுக்கு இட்டுச் சென்றது. படிப்படியாக, நிலப்பிரபுக்களின் ஆதிக்கம் தகர்க்கப்பட்டு, நகர்ப்புற பட்டறைகள் மூலம் உற்பத்தியையும் உற்பத்தி சக்திகளையும் விரிவுபடுத்தி, தொலைதூர வணிகத்தை வளர்த்துவந்த –  அன்றைய காலத்தில் மத்தியதர வர்க்கம் என்று அழைக்கப்பட்ட – புதிதாக வளர்ந்துவந்த நவீன முதலாளி வர்க்கம் நிலப்பிரபுத்துவ அமைப்புக்கு சாவுமணி அடிக்கும் வர்க்கமாக வரலாற்றுக்களத்தில் தனது இடத்தை நிலைநாட்டிக் கொண்டது.

முதலாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் தனது வரலாற்றுப் பயணத்தில் மன்னருக்கும் நிலப்பிரபுக்களும் இடையிலான முரண்பாடுகளில் மன்னருக்கு ஆதரவாக செயல்பட்டு நிலப்பிரபுத்துவ வர்க்கத்தை எப்படி பலவீனப்படுத்தியது? பின்னர் எப்படி மன்னர்களின் அதிகாரங்களை சிதைத்து தனது வர்க்க ஆட்சியை ஏற்படுத்தியது? இப்பயணத்தில் எவ்வாறு தொழிலாளி வர்க்கத்தை பயன்படுத்திக் கொண்டது? என்ற விஷயங்களை அறிக்கை சுருக்கமாகவும் தெளிவாகவும் விளக்குகிறது.

முதலாளித்துவத்தின் வரலாற்றுப் பாத்திரம்

அறிக்கை முதலாளித்துவத்தின் அடிப்படைத்தன்மையை மிகவும் துல்லியமாக வர்ணிக்கிறது. அதன் சில முக்கிய அம்சங்களை அறிக்கையின் வாசகங்களிலேயே கீழே காணலாம் :

முதலாளித்துவ வர்க்கம் வரலாற்று ரீதியாகமிகவும் புரட்சிகரமான பாத்திரம் வகித்துள்ளது. உற்பத்திக் கருவிகளையும்அதன்மூலம் உற்பத்தி உறவுகளையும்அவற்றோடு கூடவே ஒட்டுமொத்த சமுதாய உறவுகளையும் இடையறாது புரட்சிகரமாக மாற்றி அமைத்திடாமல் முதலாளித்துவ வர்க்கம் உயிர்வாழ முடியாது…..

முதலாளித்துவத்தின் உற்பத்திப் பொருள்களுக்குத் தொடர்ந்து விரிவடைந்து செல்லும் சந்தை தேவைப்படுகிறது. இத்தேவை முதலாளித்துவ வர்க்கத்தைப் புவியின் பரப்பு முழுவதும் விரட்டியடிக்கிறது. அது எல்லா இடங்களுக்கும் சென்று கூடு கட்டிக் கொள்ள வேண்டும்எல்லா இடங்களிலும் குடியேற வேண்டும்எல்லா இடங்களிலும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டே ஆக வேண்டும். உலகச் சந்தையை நன்கு பயன்படுத்திக் கொள்வதன் மூலம் முதலாளித்துவ வர்க்கம் ஒவ்வொரு நாட்டிலும் பொருள் உற்பத்திக்கும் நுகர்வுக்கும் ஓர் உலகத் தன்மையை (cosmopolitan character) அளித்துள்ளது.

மக்கள் தொகையும்உற்பத்திச் சாதனங்களும்சொத்துகளும் சிதறுண்டு கிடக்கும் நிலையை முதலாளித்துவ வர்க்கம் மேலும் மேலும் ஒழித்துக்கொண்டே வருகிறது. மக்கள் தொகையை ஆங்காங்கே குவித்து வைத்துள்ளது. உற்பத்திச் சாதனங்களை மையப்படுத்தியுள்ளது. சொத்துகளை ஒருசிலர் கையில் குவிய வைத்துள்ளது. இதன் தவிர்க்கவியலாத விளைவு அரசியல் அதிகாரம் மையப்படுதலாகும்.

முதலாளித்துவ வர்க்கம் நூறாண்டுகள் கூட ஆகாத அதன் ஆட்சிக் காலத்தில்இதற்கு முந்தைய தலைமுறைகள் அனைத்தும் சேர்ந்து உருவாக்கியவற்றைக் காட்டிலும் மிகப்பெரிய அளவில் மிகப் பிரம்மாண்டமான உற்பத்தி சக்திகளை உருவாக்கி வைத்துள்ளது. இயற்கையின் சக்திகளை மனிதனுக்கு அடிபணியச் செய்தல்எந்திர சாதனங்கள்தொழில்துறைக்கும் விவசாயத்துக்கும் இரசாயனத்தைப் பயன்படுத்தல்நீராவிக் கப்பல் போக்குவரத்துரயில் பாதைகள்மின்சாரத் தந்திகண்டங்கள் முழுவதையும் திருத்திச் சாகுபடிக்குத் தகவமைத்தல்கால்வாய்கள் வெட்டி நதிகளைப் பயன்படுத்தல்மனிதனின் காலடி படாத இடங்களிலும் மாயவித்தைபோல் பெருந்திரளான மக்களைக் குடியேற்றுவித்தல் – இத்தகைய உற்பத்தி சக்திகள் சமூக உழைப்பின் மடியில் துயில் கொண்டிருக்குமென இதற்கு முந்தைய நூற்றாண்டு கற்பனையாவது செய்திருக்குமா?

ஆக நாம் காண்பது என்னவெனில்: முதலாளித்துவ வர்க்கம் தன்னைக் கட்டி அமைத்துக்கொள்ள அடித்தளமாக இருந்த உற்பத்திச் சாதனங்களும்பரிவர்த்தனைச் சாதனங்களும் நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் உருவாக்கப்பட்டவை. இந்த உற்பத்தி மற்றும் பரிவர்த்தனைச் சாதனங்களுடைய வளர்ச்சியின் குறிப்பிட்ட ஒரு கட்டத்தில்நிலப்பிரபுத்துவ சமுதாயம் எத்தகைய சமூக நிலைமைகளின்கீழ் உற்பத்தியும் பரிவர்த்தனையும் செய்து வந்ததோ அந்தச் சமூக நிலைமைகளும்விவசாயம்பட்டறைத் தொழில் ஆகியவற்றில் நிலவிய நிலப்பிரபுத்துவ ஒழுங்கமைப்பும்சுருங்கக் கூறின்நிலப்பிரபுத்துவச் சொத்துடைமை உறவுகள்ஏற்கெனவே வளர்ச்சிபெற்றுவிட்ட உற்பத்திச் சக்திகளுக்கு இனிமேலும் ஒவ்வாதவை ஆயின. அவை, [உற்பத்தியைக் கட்டிப்போடும்] கால் விலங்குகளாக மாறின. அந்த விலங்குகளை உடைத்தெறிய வேண்டியிருந்ததுஅவை உடைத்தெறியப்பட்டன.

அவற்றின் இடத்தில் தடையற்ற போட்டியும்அதனுடன் கூடவே, அதற்கு ஏற்றாற் போன்ற, சமூகஅரசியல் அமைப்புச் சட்டமும்முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதாரஅரசியல் ஆதிக்கமும் வந்து அமர்ந்து கொண்டன.

மானுட வரலாற்று வளர்ச்சியில் உற்பத்தி சக்திகளின் தவிர்க்கவியலாத வளர்ச்சி நிலவும் உற்பத்தி உறவுகளுடன் முரண்பட்டே ஆகவேண்டும்இந்த முரண்பாடுதான் வளர்ச்சிக்கான அடித்தளம்இந்த முரண்பாடு வர்க்கப் போராட்டம் மூலமாகவே வரலாற்றில் தன் பணியைச் செய்கிறது ஆகிய வரலாற்றுப் பொருள்முதல் வாதத்தின் அடிப்படைக் கூறுகளில் நின்று, நிலப்பிரபுத்துவம் வீழ்த்தப்பட்டு முதலாளித்துவம் ஆட்சிக்கு வந்த வரலாற்றையும் அதில் முதலாளி வர்க்கத்தின் முதன்மை பாத்திரத்தையும் இவ்வளவு சுருக்கமாகவும், தவறு இன்றியும், எளிமையாகவும் வேறு எந்த ஆவணமும் விளக்கியதில்லை. 

முதலாளித்துவத்திற்கு முடிவு உறுதி

முதலாளித்துவ உற்பத்தி அமைப்பின் வரலாற்று பாத்திரத்தை விறுப்பு வெறுப்பின்றி அறிக்கை விவரித்திருப்பதன் பொருள் முதலாளித்துவத்தை அது பாராட்டுகிறது என்பதல்ல. மாறாக, இயக்கவியல் அணுகுமுறையின் அடிப்படையில் நின்று, முதலாளித்துவத்தின் ‘சாதனை’களின் மறுபக்கத்தை அறிக்கை தோலுரித்துக் காட்டுகிறது. அதுமட்டுமின்றி, முதலாளித்துவ சுரண்டலுக்கு முடிவுகட்டி மானுட விடுதலையை சாதிக்க வல்ல வர்க்கம் தொழிலாளி வர்க்கமாகத்தான் இருக்க முடியும் என்பதையும் அறிக்கை விளக்குகிறது.

முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடுகளை ஒன்றன்பின் ஒன்றாக அறிக்கை விவரிக்கிறது. லாபவெறி அடிப்படையில் இயங்கும் முதலாளித்துவ உற்பத்தி அமைப்பு உற்பத்தி சக்திகளின் மாபெரும் வளர்ச்சியை ஒவ்வொரு நொடியும் முன்னெடுத்துச் செல்லும் அவசியத்தை சந்திக்க நேர்ந்தாலும், நெருக்கடி நிறைந்த அமைப்பாகவே முதலாளித்துவம் உள்ளது என்பதை அறிக்கை பின்வருமாறு விளக்குகிறது:

இவ்வளவு பிரம்மாண்ட உற்பத்திச் சாதனங்களையும் பரிவர்த்தனைச் சாதனங்களையும் மாயவித்தைபோல் தோற்றுவித்துள்ள இந்த முதலாளித்துவ சமுதாயம் – தனது மந்திரத்தின் வலிமையால் பாதாள உலகிலிருந்து தட்டியெழுப்பி வந்த சக்திகளை இனிமேலும் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் மந்திரவாதியின் நிலையில் இருக்கிறது. கடந்த சில பத்தாண்டுகளது தொழில்துறைவணிகம் ஆகியவற்றின் வரலாறானதுநவீன உற்பத்தி உறவுகளுக்கு எதிராகவும்முதலாளித்துவ வர்க்கமும் அதன் ஆட்சியதிகாரமும் நிலவுதற்கு அடிப்படையாக விளங்கும் சொத்துடைமை உறவுகளுக்கு எதிராகவும்நவீன உற்பத்தி சக்திகள் நடத்தும் கலகத்தின் வரலாறே ஆகும். இதனை உறுதிப்படுத்தகுறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்படும் வணிக நெருக்கடிகளைக் குறிப்பிட்டாலே போதும். இந்த நெருக்கடிகள் ஒவ்வொரு முறை வரும்போதும் முன்னைவிட அச்சமூட்டும் வகையில்ஒட்டுமொத்த முதலாளித்துவ சமுதாயத்தின் இருப்பையே கேள்விக்கு உள்ளாக்குகின்றன. இந்த நெருக்கடிகளின்போதுஇருப்பிலுள்ள உற்பத்திப் பொருள்களின் பெரும்பகுதி மட்டுமன்றிஏற்கெனவே உருவாக்கப்பட்ட உற்பத்தி சக்திகளில் ஒரு பெரும்பகுதியும் தொடர்ந்து அழிக்கப்படுகிறது. இதற்கு முந்தைய சகாப்தங்கள் அனைத்திலும் அபத்தமானதாகக் கருதப்பட்டிருக்கும் ஒரு கொள்ளை நோய் – தேவைக்கு அதிகமான உற்பத்தி என்னும் கொள்ளை நோய் – இந்த நெருக்கடிகளின்போது தொற்றுகிறது. சமுதாயம்தான் திடீரெனெத் தற்காலிக அநாகரிக நிலைக்குப் பின்னோக்கித் தள்ளப்பட்டுள்ளதைக் காண்கிறது. ஏதோ ஒரு பெரும் பஞ்சம் அல்லது உலகளாவிய ஒரு சர்வநாசப் போர் ஏற்பட்டு வாழ்வாதாரப் பொருள்கள் அனைத்தின் வினியோகமும் நிறுத்தப்பட்டதுபோல் தோன்றுகிறதுதொழிலும் வணிகமும் அழிக்கப்பட்டுவிட்டதாகத் தோன்றுகிறது

இதன் பொருள் என்ன? அறிக்கையின் வார்த்தைகளில்: “சமுதாயத்தின் வசமுள்ள உற்பத்தி சக்திகள்முதலாளித்துவச் சொத்துடைமை உறவுகளின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல இனிமேலும் உதவப் போவதில்லை. மாறாகஅந்த உறவுகளை மீறி உற்பத்தி சக்திகள் வலிமை மிக்கவை ஆகிவிட்டன. முதலாளித்துவ உடைமை உறவுகள்உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்குத் தளைகளாகிவிட்டன.“ சமகாலத்தில், கடந்த பத்து ஆண்டுகளாக நிலவும் உலக முதலாளித்துவத்தின் பொருளாதார மந்தநிலை, மானுட உயிரினத்தின் எதிர்காலத்தை கேள்விக்கு உள்ளாக்கியிருக்கும் பருவநிலை மாற்றம், மிகக் கொடிய அளவிலான வேலையின்மை, அறிவியல் தொழில்நுட்பம் பிரம்மாண்டமாக வளர்ந்தும் பசியும் பிணியும் வறுமையும் உலகில் பல கோடி மக்களை தொடர்ந்து வாட்டி வதைப்பது ஆகியவை சொல்லும் செய்தி இதுதானே?

தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்றுப் பாத்திரம்

நிலப்பிரபுத்துவ உற்பத்தி அமைப்பில் உற்பத்தி சக்திகள் வளர்ந்து வந்ததன் விளைவாக ஒரு கட்டத்தில் அந்த உற்பத்தி அமைப்பின் உற்பத்தி உறவுகள் உற்பத்தி சக்திகளின் தொடர் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக மாறின என்பதையும், அக்கட்டத்தில் நிலப்பிரபுத்துவ அமைப்பின் உள்ளிருந்தே வளர்ந்துவந்த முதலாளி வர்க்கம் நிலப்பிரபுத்துவ அமைப்பிற்கு முடிவுகட்டும் வர்க்கமாக அமைந்தது என்பதையும்அறிக்கை விளக்கியதை நாம் குறிப்பிட்டோம். அதேபோல் முதலாளித்துவ உற்பத்தி அமைப்பின் உற்பத்தி உறவுகள் உற்பத்தி சக்திகளின் தொடர்வளர்ச்சிக்கு தடையாக மாறும் தருணத்தில் இந்த உற்பத்தி அமைப்பை தூக்கி எறியும் வர்க்க சக்தியாக தொழிலாளி வர்க்கம் அமையும் என்பதையும் அறிக்கை விளக்குகிறது.

அறிக்கை யின் வரிகளில் இதனை பார்ப்போம்:

எந்த ஆயுதங்களைக் கொண்டு முதலாளித்துவ வர்க்கம் நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்தித் தரைமட்டம் ஆக்கியதோஅதே ஆயுதங்கள் இப்போது முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராகத் திருப்பப்படுகின்றன. ஆனால்முதலாளித்துவ வர்க்கம் தனக்கே அழிவைத் தரப்போகும் ஆயுதங்களை மட்டும் வார்த்தெடுக்கவில்லைஅந்த ஆயுதங்களைக் கையாளப்போகும் மனிதர்களையும்அதாவது நவீனத் தொழிலாளி வர்க்கமாகிய பட்டாளிகளையும் உருவாக்கி உலவவிட்டுள்ளது.

பாட்டாளி வர்க்கம் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களைக் கடந்து செல்கிறது. பிறந்தவுடனே அது முதலாளித்துவ வர்க்கத்துடனான தனது போராட்டத்தைத் தொடங்கிவிடுகிறது. முதலாவதாகஇந்தப் போராட்டத்தைத் தனித்தனித் தொழிலாளர்களும்அடுத்து ஒரு தொழிற்சாலையைச் சேர்ந்த தொழிலாளர்களும்பிறகு ஒரு வட்டாரத்தில் ஒரு தொழிற்பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்களும்தம்மை நேரடியாகச் சுரண்டும் தனித்தனி முதலாளிகளுக்கு எதிராக நடத்துகின்றனர்.

தொழில்துறையின் வளர்ச்சியைத் தொடர்ந்து தொழிலாளி வர்க்கம் எண்ணிக்கையில் அதிகமாவது மட்டுமின்றிபெருந்திரள்களாகவும் குவிக்கப்படுகிறதுஅதன் வலிமை வளர்கிறதுஅந்த வலிமையை அது அதிகம் உணரவும் செய்கிறது. எந்த அளவுக்கு எந்திர சாதனங்கள் உழைப்பின் பாகுபாடுகள் அனைத்தையும் துடைத்தொழித்துஅனேகமாக எல்லா இடங்களிலும் கூலி விகிதங்களை ஒரேமாதிரிக் கீழ்மட்டத்துக்குக் குறைக்கிறதோ அந்த அளவுக்குப் பாட்டாளி வர்க்க அணிகளுக்குள்ளே பல்வேறு நலன்களும்வாழ்க்கை நிலைமைகளும் மேலும் மேலும் சமன் ஆக்கப்படுகின்றன. தொடர்ந்து அதிவேக வளர்ச்சி காணும் எந்திர சாதனங்களின் முடிவுறாத மேம்பாடுஅவர்களுடைய பிழைப்பை மேலும் மேலும் நிலையற்றதாக்குகிறது. தனிப்பட்ட தொழிலாளர்களுக்கும் தனிப்பட்ட முதலாளிகளுக்கும் இடையேயான மோதல்கள்மேலும் மேலும் இரு வர்க்கங்களுக்கு இடையிலான மோதல்களின் தன்மையைப் பெறுகின்றன. உடனே தொழிலாளர்கள் முதலாளிகளுக்கு எதிராகக் கூட்டமைப்புகளை (தொழிற் சங்கங்களை) அமைத்துக்கொள்ளத் தொடங்குகின்றனர். கூலிகளின் விகிதத்தைத் [குறைந்து போகாமல்] தக்கவைத்துக்கொள்ள அவர்கள் ஒன்று சேர்கிறார்கள். …அவர்களுடைய போராட்டங்களின் மெய்யான பலன் அவற்றின் உடனடி விளைவில் அடங்கியிருக்கவில்லை. எப்போதும் விரிவடைந்து செல்லும் தொழிலாளர்களின் ஒற்றுமையில் அடங்கியுள்ளது. நவீனத் தொழில்துறை உருவாக்கியுள்ள மேம்பட்ட தகவல் தொடர்புச் சாதனங்கள் இந்த ஒற்றுமைக்குத் துணைபுரிகின்றன

இன்றைக்கு முதலாளித்துவ வர்க்கத்தை நேருக்குநேர் எதிர்த்து நிற்கும் வர்க்கங்கள் அனைத்திலும் பாட்டாளி வர்க்கம் ஒன்று மட்டுமே உண்மையில் புரட்சிகரமான வர்க்கமாகும். பிற வர்க்கங்கள் நவீனத் தொழில்துறையின் முன்னே சிதைவுற்று முடிவில் மறைந்து போகின்றன. பாட்டாளி வர்க்கம் மட்டும்தான் நவீனத் தொழில்துறையின் தனிச்சிறப்பானசாரமான விளைபொருளாகும்.

மூலதனம் உருவாதலும் வளர்ந்து பெருகுதலும்தான் முதலாளித்துவ வர்க்கம் நிலவுவதற்கும் ஆதிக்கம் செலுத்துவதற்கும் இன்றியமையாத நிபந்தனை ஆகும். மூலதனத்துக்கு இன்றியமையாத நிபந்தனை கூலி உழைப்பாகும். கூலி உழைப்போ முற்றிலும் தொழிலாளர்களுக்கு இடையிலான போட்டியை மட்டுமே சார்ந்துள்ளது. முதலாளித்துவ வர்க்கம் அனிச்சையாக வளர்த்தெடுக்கும் தொழில்துறையின் முன்னேற்றமானதுஅத்தகைய போட்டியின் காரணமாக தொழிலாளர்களிடையே ஏற்படும் தனிமைப்போக்கை, அவர்கள் [சங்க அமைப்பில்] ஒன்றுசேர்தலின் காரணமாக ஏற்படும் புரட்சிகரப் பிணைப்பின் மூலம் நீக்குகிறது. எனவேநவீனத் தொழில்துறையின் வளர்ச்சியானதுஎந்த அடிப்படையில் முதலாளித்துவ வர்க்கம்பொருள்களை உற்பத்தி செய்தும் கையகப்படுத்தியும் வருகிறதோஅந்த அடிப்படைக்கே உலை வைக்கிறது. ஆகஅனைத்துக்கும் மேலாகத் தனக்குச் சவக்குழி தோண்டுவோரையே முதலாளித்துவ வர்க்கம் உற்பத்தி செய்கிறது. முதலாளித்துவ வர்க்கத்தின் வீழ்ச்சியும்பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியும் சம அளவில் தவிர்க்கவியலாதவை ஆகும்.

முதலாளித்துவ உற்பத்தி அமைப்பை வரலாற்றின் குப்பைமேட்டில் தூக்கி எறியும் வலிமையும் வரலாற்றுக் கடமையும் தொழிலாளி வர்க்கத்துடையது என்பதற்கான சிறப்பான தத்துவார்த்த விளக்கத்தை அறிக்கை இவ்வாறு அளிக்கிறது.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை பொய்த்துப் போய்விட்டதா?

அறிக்கை 1848 தொடக்கத்தில் வெளிவந்தது. அப்பொழுது முதலாளித்துவ உற்பத்தி அமைப்பு ஐரோப்பாவில் பல நாடுகளில் வெற்றியடைந்திருந்தது. இதுதான் மானுடத்தின் எதிர்காலம்; இதுதான் நிரந்தரமாக இருக்கும் என்ற கருத்து மேலோங்கியிருந்தது. அப்பொதுக்கருத்து தவறானது என்பதையும் மானுடத்தின் எதிர்காலம் பாட்டாளி வர்க்க ஆட்சியை நோக்கித்தான் பயணிக்கும் என்பதையும் ஆழமான ஆய்வின் அடிப்படையில் ஆணித்தரமாக, உரக்கச் சொல்லியது.அறிக்கைவெளிவந்தபின் அடுத்த பல பத்தாண்டுகளில் முதலாளித்துவம் மேலும் பாய்ச்சல்வேகத்தில் பரவி, உலகம் முழுவதையும் தனது ஆதிக்கத்தின்கீழ் கொண்டு வந்தது. அறிக்கை பொதுவிவாதத்தில் சில பத்தாண்டுகள் இடம் பெறவில்லை. 1871 இல் வெடித்த பாரிஸ் கம்யூன் புரட்சி முதலாளித்துவத்தை உறு­­திபட எதிர்த்து புரட்சிகர மாற்றம் கொண்டுவரும் திறன் கொண்டது தொழிலாளி வர்க்கம்தான் என்பதை உலகுக்கு அறிவித்தபோதிலும், அப்புரட்சி நீண்ட நாட்கள் நிலைக்க இயலவில்லை. எனினும் பாரிஸ் கம்யூன் புரட்சி நிகழ்ந்து அடுத்த 50ஆண்டுகள் நிறைவடையும் முன்பே மகத்தான அக்டோபர் புரட்சி ரஷ்யாவில் வெடித்தது. 19-ம் நூற்றாண்டில் முதலாளித்துவம் உலகை வென்றது என்றால் இருபதாம் நூற்றாண்டின் முதல் ஐம்பது ஆண்டுகளில் அதன் எதிர்காலம் கடுமையான கேள்விக்குறியானது. கடந்த நூற்றாண்டில், முதல்உலகப்போர் (1914-1918), பெரும் பொருளாதார வீழ்ச்சி (1929-1939), இரண்டாம் உலகப்போர்(1939 – 1945) என்று தொடர்ந்து முதலாளித்துவம் கடும் நெருக்கடியில் சிக்கியது.

மறுபுறம், பின்தங்கிய ரஷ்யாவில் 1917 அக்டோபரில் போல்ஷ்விக் கட்சியின் முன்னணி பாத்திரம் மூலம் தொழிலாளி வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்றியது. அப்புரட்சியை முளையில் கிள்ளியெறிய 14 முதலாளித்துவ நாடுகள் தங்களது ராணுவங்களை அனுப்பின. இவர்களை மக்கள் ஆதரவுடன் செஞ்சேனை வீழ்த்தியது. ஏகாதிபத்தியம் தந்த தொடர்நெருக்கடிகளை எதிர்கொண்டே, போல்ஷ்விக் கட்சியின் தலைமையில் சோசலிச சோவியத் ஒன்றியம் மாபெரும் முன்னேற்றத்தை சாதித்தது. ஏகபோக முதலாளித்துவத்தின் பிரத்யேக அரசு வடிவமான பாசிசத்தை வீழ்த்தி மானுடத்தையும் ஜனநாயகத்தையும் சோசலிசம் காப்பாற்றியது. இரண்டாம் உலகப் போரின் இறுதிக் காலத்திலும் அதனை தொடர்ந்தும் உலகில் சோசலிச வெற்றிகள் தடம் பதித்தன. தனியாக நின்று ஏகாதிபத்தியங்களை எதிர்கொண்டு வந்த சோவியத் ஒன்றியத்திற்கு பக்கபலமாக பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் மக்கள் ஜனநாயக அரசுகள் அமைந்தன. மாபெரும் சோசலிச மக்கள் சீனம் 1949இல் மலர்ந்தது. இதனை தொடர்ந்து வடவியத்நாம், வடகொரியா, பின்னர் க்யூபா என்று 1950களின் இறுதியில் உலக நிலப்பரப்பில் ஆறில் ஒரு பங்கும், மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கும் சோசலிச அமைப்பின்கீழ் வந்தன.

கடந்த நூற்றாண்டின் முதல் எண்பது ஆண்டுகள் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் வரலாற்றுப் பார்வை மிகச்சரியானது என்பதை நிரூபித்தன. சோசலிச நாடுகளின் சாதனைகளை நாம் மறக்க இயலாது. ஏகாதிபத்திய ராணுவ பலத்திற்கு எதிராக நின்று உலக அமைதியையும் முன்னாள் காலனிநாடுகளின் இறையாண்மையையும் பாதுகாப்பதில் அவற்றின் பங்கு அளப்பரியது. வறுமையையும் வேலையின்மையையும் பெருமளவிற்கு முடிவுக்கு கொண்டு வந்தது; அனைத்து மக்களுக்கும் கல்வியையும், ஆரோக்கிய வசதிகளையும் உறுதிப்படுத்தியது; பாலின சமத்துவத்தில் பெரும் முன்னேற்றம் கண்டது; உழைப்பாளி மக்களுக்கு மேம்பட்ட வாழ்க்கையை சாத்தியமாக்கியது உள்ளிட்ட சாதனைகளை நாம் பதிவுசெய்ய வேண்டும்.

1991இல் சோவியத் ஒன்றியம் சிதைக்கப்பட்டு, முதலாளித்துவம் அங்கும் கிழக்கு ஐரோப்பாவிலும் மீண்டும் ஆட்சியை பிடித்தபோதிலும் 2008இல் துவங்கி முடிவின்றி தொடரும் உலக முதலாளித்துவ பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியும் மானுடத்தின் எதிர்காலத்தையே அச்சுறுத்தும் பருவநிலை மாற்றமும் உற்பத்தி சக்திகளின் தொடர்வளர்ச்சிக்கும் மானுடத்தின் எதிர்காலத்திற்கும் எதிரியாக முதலாளித்துவம் நிற்கிறது என்பதை நாளும் பளிச்சென்று உணர்த்துகிறது. இருபதாம் நூற்றாண்டின் வெற்றிகரமான பல சோசலிஸ்ட் புரட்சிகளின் சாதனைகளும் அனுபவங்களும் வீண்போகாது என்று இன்றைய உலகம் நமக்கு நினைவூட்டுகிறது. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் கணிப்பு வரலாற்றுப் பார்வையில் மிகச்சரியானது என்று மானுட அனுபவம் நமக்குக் கற்றுக் கொடுக்கிறது.Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: