மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை காட்டும் பாதை


ஜி.ராமகிருஷ்ணன்

“முதலாளித்துவ வர்க்கத்தின் வீழ்ச்சியும், பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியும் தவிர்க்கவியலாதவை” என மார்க்சும், ஏங்கெல்சும் இணைந்து வெளியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் உறுதிபடக் கூறினார்கள்.

1848-ம் ஆண்டு பிப்ரவரி 21 அன்று லண்டனில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் முதல் பிரதி (ஜெர்மன் மொழியில்) வெளியிடப்பட்டது. தீப்பொறி வேகத்தில் அடுத்தடுத்து பல மொழிகளில், பல நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியானது. இவ்வாறு வெளியான அறிக்கைக்கு மார்க்சும், ஏங்கெல்சும் இணைந்து இரண்டு முன்னுரைகளும், மார்க்சின் மறைவிற்குப் பிறகு ஏங்கெல்ஸ் தனியாக ஐந்து முன்னுரைகளும் எழுதியுள்ளனர். ஒவ்வொரு முன்னுரையிலும் வரலாற்று வளர்ச்சிப் போக்குடன் தாங்கள் வெளியிட்ட அறிக்கையின் நிர்ணயிப்புகளை ஒப்பிட்டு, பொருத்திப் பார்த்து சரியாக மதிப்பீடும் செய்துள்ளனர்.

முதலாளித்துவம் வீழ்ச்சியுறும் என்ற நிர்ணயிப்பின்படியே 1871-ம் ஆண்டு ஃபிரெஞ்சு நாட்டில் தொழிலாளி வர்க்கம் அந்நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரத்தை புரட்சியின் மூலம் கைப்பற்றியது. இரண்டு மாதங்களுக்கு மேல் அதனால் தக்க வைக்க முடியவில்லை என்றாலும் மார்க்சும், ஏங்கெல்சும் கூறிய அடிப்படையில் தொழிலாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்பதற்கான முன்னுதாரணமான முதல் புரட்சிதான் பாரீஸ் கம்யூன்.  

1872-ம் ஆண்டு இருவரும் இணைந்து எழுதிய ஒரு முன்னுரையில் மேற்கண்ட பாரீஸ் கம்யூன் புரட்சியைப் பற்றி குறிப்பிட்டதோடு, 1882-ம் ஆண்டு இருவரும் இணைந்து எழுதிய முன்னுரையில் ரஷ்யாவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை மதிப்பீடு செய்து “ரஷ்யப் புரட்சியானது மேற்கு நாடுகளில் ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு முன்னோடியாகி … கம்யூனிச வளர்ச்சிக்கான தொடக்கப்புள்ளியாக பயன்படக் கூடும்” எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

1917-ம் ஆண்டு நவம்பர் 7 அன்று லெனின் தலைமையிலான ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி புரட்சியின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து 1949-ல் சீனாவிலும், இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், 1950களில் வியட்நாம், கொரியா, 1959-ம் ஆண்டு கியூபா என அடுத்தடுத்து கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. இது எவ்வாறு சாத்தியமானது?  உலகு தழுவிய பாட்டாளி வர்க்கத்திற்கு அவரவர் வாழும் நாடுகளில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஒரு பொதுச் செயல்திட்டமாக அமைந்தது.

“பாட்டாளி வர்க்கத்தின் வெற்றி தவிர்க்க முடியாதது” என்ற முடிவுக்கு மார்க்சும், ஏங்கெல்சும் வந்தது யூகத்தினால் அல்ல. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிடுவதற்கு முந்தைய பத்தாண்டுகளில் மார்க்சும், ஏங்கெல்சும் தனியாகவும், இணைந்தும், அக்காலத்தில் நிலவிய தத்துவ,  பொருளாதார, அரசியல் சூழலை ஆய்வு செய்து அதனடிப்படையில் மாற்றம் தவிர்க்க முடியாதது என்ற முடிவுக்கு வந்தனர். வேறுவகையில் சொல்வதானால், கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிடுவதற்கு முந்தைய ஆண்டுகளில் இருவரும் இணைந்து உருவாக்கிய இயக்க இயல், வரலாற்றியல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தினை நடைமுறைப்படுத்திட (Application) உருவாக்கப்பட்டதுதான் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்ற செயல்திட்டம்.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையைப் பற்றி லெனின் கூறியதை இங்கு மேற்கோள் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.

“மனித வாழ்க்கையின் உண்மைகளைச் சார்ந்த, சீரான பொருள்முதல் வாதம்; வளர்ச்சி பற்றிய விரிவான கோட்பாடாகிய இயக்கவியல்; கம்யூனிச சமூகத்தைப் படைக்கும் வல்லமை கொண்ட பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர வரலாற்று பாத்திரம், வர்க்கப் போராட்ட கருத்தியல்;  இவை யாவும் அடங்கிய ஒரு புதிய உலகக் கண்ணோட்டத்தை இந்த நூல் மாமேதைகளுக்கேயுரிய தெளிவோடு எடுத்துரைக்கிறது.”

அக்கால அரசியல், பொருளாதார, தத்துவ வளர்ச்சிப் போக்குகளை இயக்க இயல், வரலாற்று இயல் அணுகுமுறை அடிப்படையில் அறிக்கையின் பல பகுதிகளில் அவர்களுக்கே உரிய பாணியில் விளக்கியிருக்கிறார்கள்.

சுதந்திரமானவனும் – அடிமையும், உயர்குலச் சீமானும் – பாமர குடிமகனும், நிலப்பிரபுவும் – பண்ணை அடிமையும், முதலாளியும் – தொழிலாளியும் சுருங்கக் கூறின் ஒடுக்குவோரும் – ஒடுக்கப்படுவோரும் தீரா பகைமைக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு கட்டத்திலும் ஒடுக்கும் வர்க்கத்திற்கும் – ஒடுக்கப்படும் வர்க்கத்திற்கும் இடையறாத போராட்டம் வரலாற்று நெடுகிலும் நடந்து வந்தது என்பதைத்தான் “இதுநாள் வரையில் நிலவி வந்துள்ள சமுதாய வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டத்தின் வரலாறே ஆகும்” என  கூறுகிறார்கள்.

மனித குல வரலாற்றை மேற்கண்டவாறு இயக்கவியல் முறையில் ஆய்வு செய்த மார்க்சும், ஏங்கெல்சும் டார்வினுடைய பரிணாம வளர்ச்சித் தத்துவத்தை தங்களுடைய நிர்ணயிப்புக்கு ஆதாரமாக கருதினார்கள். மார்க்ஸ் தனது உற்றத் தோழன் ஏங்கெல்ஸ்சுக்கு எழுதிய கடிதத்தில், இயற்கையில் ஏற்படும் மாற்றத்தை விளக்கிடும் டார்வினின் பரிணாம வளர்ச்சித் தத்துவம் (உயிரின் தோற்றம்), மனித சமுதாயத்தில் ஏற்படும் மாற்றம் பற்றிய தங்களது ஆய்வை நிரூபிப்பதற்கு துணையாக இருப்பதாக   எழுதினார்.

“டார்வினுடைய கொள்கை உயிரியலுக்கு ஆற்றிய அதே பங்கினை இந்த வரையறைப்பு வரலாற்று இயலுக்கு ஆற்றப்போவது நிச்சயம். நாங்கள் இருவரும் 1845க்கு சில ஆண்டுகள் முன்பிருந்தே இந்த வரையறையை நோக்கி படிப்படியாக நெருங்கி வந்து கொண்டிருந்தோம்” என ஏங்கெல்சும் குறிப்பிட்டிருக்கிறார்.

சமூகத்தின் சகல அம்சங்களையும் தனித்தனியாக ஆய்வு செய்து கொண்டிருந்த இந்த இரண்டு மேதைகளின் சந்திப்பு மார்க்சியத் தத்துவத்தை உருவாக்குவதில் மிகப் பெரிய பாத்திரத்தை வகித்துள்ளது.

1844 ஆகஸ்ட் கடைசியில் பாரிஸில் மார்க்சை ஏங்கல்ஸ் சந்தித்தார். அவர் இங்கிலாந்திலிருந்து ஜெர்மனிக்கு திரும்பும் வழியில் பாரிசுக்கு வந்தார். அவர் அப்போது பாரிஸ் நகரத்தில் பத்து தினங்கள் தங்கியிருந்தார். அப்போது இருவரும் அநேகமாக எல்லா நேரத்தையும் ஒன்றாகவே கழித்தனர். அவர்களுடைய நேரடியான நாள்தோறும் நிகழ்ந்த கலந்துரையாடல் அவர்களுடைய கருத்தோட்டங்கள் அநேகமாக அத்தனை பிரச்சனைகள் மீதும் தத்துவம் நடைமுறை ஆகியவற்றின் ஒவ்வொரு அம்சத்திலும் முழுவதும் ஒன்றுபோல் இருந்தன. முழு கருத்தொற்றுமை நிலவியது.

“1844 கோடைக்காலத்தில் பாரிஸில் நான் மார்க்ஸிடம் சென்று அவரை சந்தித்துப் பேசியபோது எல்லா தத்துவத் துறைகளிலும் எங்கள் இருவருக்கிடையில் இருந்த முழுமையான உடன்பாடு தெளிவாகத் தெரிந்தது. எங்களுடைய கூட்டுப்பணி அன்றிலிருந்தே தொடங்கியது” என ஏங்கெல்ஸ் எழுதியிருக்கிறார்.

1840களின் துவக்கத்திலேயே இருவரும் தனியாகவும், கூட்டாகவும் பொருளாதாரம், தத்துவம், சோசலிசம் ஆகிய அம்சங்கள் குறித்து விரிவான ஆய்வுகளில் இறங்கினர். “இங்கிலாந்தில் தொழிலாளர்களின் வாழ்நிலை” என்ற நூலில் இங்கிலாந்தில் தொழிலாளர்களின் உழைப்பு முதலாளிகளால் ஒட்டச் சுரண்டப்படுவதும், இதனால் வாழ்க்கைத் தரம் குறைந்து வருவதும்,  தங்களுடைய வாழ்க்கையைப் பாதுகாக்க ஆலை முதலாளிகளுக்கு எதிராக போராடுவதும் ஆகிய பல்வேறு அம்சங்களை ஏங்கெல்ஸ் தனது நூலில் விளக்குகிறார். மேலும், முதலாளித்துவத்தை வீழ்த்தி சோசலிசத்திற்கான போராட்டத்திற்கு பாட்டாளி வர்க்கம்தான் தலைமை தாங்கும் தகுதியுள்ளது எனவும் ஏங்கெல்ஸ் பதிவு செய்திருக்கிறார். மேலும், ‘அரசியல், பொருளாதாரம் பற்றிய விமர்சனக் குறிப்பு என்ற ஏங்கெல்சினுடைய கட்டுரையையும், இங்கிலாந்தில் தொழிலாளர்களின் வாழ்நிலை என்ற நூலையும் படித்த மார்க்ஸ் தன்னுடைய பல கட்டுரைகளில் அவற்றை எடுத்தாண்டிருக்கிறார்.

1843லிருந்து 1845 வரை மார்க்ஸ் பாரீஸில் இருந்தார். இக்காலத்தில் சில இதழ்களுக்கு கட்டுரைகள் எழுதியதோடு அக்கால பொருளாதார, தத்துவ பிரச்சனைகள் குறித்து பல குறிப்புகளை தயார் செய்தார். இந்த கையெழுத்து பிரதிகள் பிற்காலத்தில் ‘பாரீஸ் கையெழுத்து பிரதிகள்’ என அழைக்கப்பட்டது. இதில் தொழிலாளர்களின் ஊதியம், முதலாளிகளின் லாபம் உள்ளிட்ட பல அம்சங்களை ஆய்வு செய்தார். தொழிலாளர்களின் உழைப்பால் உருவாகும் மூலதனமே அவர்களை ஒடுக்குகிறது என்ற முடிவுக்கு வருகிறார். பிற்காலத்தில் மூலதனம் நூலை எழுதுகிற போது பாரிஸ் கையெழுத்து குறிப்பில் உள்ள பல அம்சங்களை விளக்கமாக பதிவு செய்திருக்கிறார். மூலதனத்திற்கும் (முதலாளித்துவம்) உழைப்பிற்குமான முரண்பாடு இரண்டு வர்க்கங்களுக்கிடையிலான முரண்பாடு என்று வர்ணித்ததோடு இந்த மோதல் முதலாளித்துவ வர்க்கத்தின் வீழ்ச்சிக்கும், தொழிலாளி வர்க்கத்தின் வெற்றிக்கு இட்டுச் செல்லும்; இதுவே சோசலிச சமூகம் உருவாவதற்கு வழிவகுக்கும் என்ற முடிவுக்கு வருகிறார். இத்தகைய முடிவு கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலும் பிரதிபலித்துள்ளது.

1844-ம் ஆண்டு மார்க்சும், ஏங்கெல்சும் சந்தித்த பிறகு அப்போது ஜெர்மனியில் இளம் ஹெகலியர்களில் ஒரு பிரிவினர் மத்தியில் நிலவிய திரிபுவாதப் போக்குகள் குறித்து விமர்சனப் பூர்வமான பார்வையில் இருவரும் இணைந்து எழுதிய முதல் நூல் ‘புனிதக் குடும்பம்’ (Holy Family). வரலாற்றியல் பொருள்முதல்வாத தத்துவத்திற்கான அடிப்படை அம்சங்களை இந்நூலில் அவர்கள் விளக்கினர்.

“வரலாற்றை உருவாக்குவதும், உள்வாங்குவதும் என அனைத்து மனித செயல்பாடுகளுக்கும் அடிப்படை மனிதனே. “வரலாறு தானே எதையும்  செய்யாது. அது அபரிமிதமான வளங்களைக் கொண்டிருக்கவில்லை”. அது “எந்த போராட்டத்தையும் நடத்துவதில்லை”. அவற்றையெல்லாம் செய்கிறவன் மனிதன். உயிருள்ள மனிதனே; மோதுவதும் கைப்பற்றுவதும் மனிதனே; இவற்றை ‘வரலாறு’ செய்வதில்லை; வரலாறு ஒரு நபர் அல்ல; அது தன் சொந்த இலக்குகளை அடைவதற்காக மனிதனை பயன்படுத்திக் கொள்கிறது. வரலாறு என்பது மனிதர்கள் தங்கள் இலக்குகளை அடைவதற்காக கைக்கொள்ளும் வழிமுறைகள் தவிர வேறல்ல.”

புனிதக் குடும்பம் என்ற நூலுக்கு அடுத்ததாக இருவரும் இணைந்து இயக்கவியல், வரலாற்றியல் பார்வையில் அக்கால  தத்துவ, பொருளாதாரச் சூழலை ஆய்வு செய்து ஜெர்மன் தத்துவம் என்ற நூலை எழுதினார்கள். எதிர்காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை மட்டுமல்ல, மூலதனம் உள்ளிட்டு மார்க்ஸ் – எங்கெல்சின் பல படைப்புகளில் ‘ஜெர்மன் தத்துவம்’ நூலின் நிர்ணயிப்புகளின் அடிப்படையில் பல கோட்பாடுகளை வலியுறுத்தினார்கள். சொல்லப் போனால், மார்க்சிய தத்துவத்தினுடைய அடிப்படை கோட்பாடுகள் பலவற்றினுடைய துவக்கம் ‘ஜெர்மன் தத்துவம்’ என்ற நூலில் சொல்லப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில்தான் அமைந்துள்ளது.

முதல் பகுதி என்பது, அனைத்து சிந்தனைகள் மற்றும் அனைத்து வரலாறுகளின் நிலைமைகளைச் சொல்வதிலிருந்து தொடங்குகிறது, மார்க்சியத்தின் தத்துவ அடிப்படையை நேர்மறையாகவும் தெளிவாகவும் விளக்குகிறது. மார்க்சும் எங்கெல்சும் தனியார் சொத்துடைமையின் வளர்ச்சியையும், ஒவ்வொரு கட்டத்திலும் பொருளாதார கட்டமைப்பும் அதனோடு தொடர்புடைய, அதன் கீழ்ப்பட்ட அரசியல் மற்றும் தத்துவ வடிவங்கள் குறித்த வரையறுப்பை தருவதிலிருந்து தொடங்குகின்றனர். 

முதலாளித்துவ அமைப்பில் சொத்துக்கள் ஒரு சிலர் கையில் குவிகிறது. முதலாளித்துவ வர்க்கம் எந்தளவுக்கு வளர்கிறதோ, அதே அளவுக்கு நவீன பாட்டாளி வர்க்கமும் எண்ணிக்கையில் வளர்கிறது. அதேநேரத்தில் பாட்டாளிகள் தம்மைத் தாமே கொஞ்சம், கொஞ்சமாக விலைக்கு விற்றாக வேண்டிய கட்டாயத்தில்  சரக்காகவே இருக்கிறார்கள். ஆம். அவர்களின் உழைப்புச் சக்தி சந்தையில் விற்கப்படும் சரக்கைப் போன்று ஆகிறது. முதலாளிகள் உள்ளிட்ட ஆலைகள், இயந்திரங்கள், நிறுவனங்கள் ஆகிய முதலாளித்துவ உற்பத்தி சக்திகளுக்கும் உழைப்பு சக்தியை விற்கும் நிலைக்கு ஒட்டச் சுரண்டப்படும் தொழிலாளர்களுக்கும் இடையிலான மோதலே உற்பத்தி சக்திகளுக்கும்,உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான  வர்க்கப் போராட்டமாக உருவாகிறது. இதனைத்தான் “ஒவ்வொரு வர்க்கப் போராட்டமும் ஒரு அரசியல் போராட்டமே ஆகும்” என கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

“நவீன கால அரசின் நிர்வாக அமைப்பானது, ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்கத்தின் பொது விவகாரங்களை நிர்வகிப்பதற்கான ஒரு குழுவே அன்றி வேறல்ல” என முதலாளிகளின் நலன்களை பாதுகாக்கக் கூடிய நிர்வாகமாகத்தான் அரசு உள்ளது என்பதை கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.

மார்க்சும், ஏங்கெல்சும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஒரு தவறான கருத்து வெளியானால் அதனை எதிர்க்காமல் ஓயமாட்டார்கள். “தவறான கருத்தை மறுக்காமல் விடுவது அறிவுலகில் ஒழுக்கக் கேட்டை ஊக்குவிப்பதாகும்” என மார்க்ஸ் கூறினார். குறிப்பாக, வறுமையின் தத்துவம் என்று புரூதோன் எழுதிய நூலில் வெளிப்பட்ட இயக்க இயலுக்கு மாறான கருத்துக்களை மறுத்து தத்துவத்தின் வறுமை என்ற நூலை 1847-ம் ஆண்டில் மார்க்ஸ் எழுதினார். அன்றைய முதலாளித்துவ சமூக அமைப்பை மாற்றத் தேவையில்லை,அதில் உள்ள தவறான அம்சங்களை மட்டும் நீக்கிட வேண்டும் என்பதுதான் புரூதோன் முன்வைத்த கருத்து. அது தவறு. அக்கருத்தை மறுத்த போராட்டத்தின் விளைவாக உருவாக்கப்பட்டதே சரியான கருத்து (Thesis –Anti-thesis- Synthesis) என்ற இயக்க இயல் கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே வறுமையின் தத்துவம் என்ற நூல்.

பொருளாதாரம், தத்துவம், அரசியல் ஆகிய சூழல்களை ஆய்வு செய்து இயக்க இயல், வரலாற்றியல் கோட்பாட்டின் அடிப்படையில் அணுகுமுறையை உருவாக்கிட முயற்சித்த அதேநேரத்தில் நேரடி நடவடிக்கையில் ஈடுபட பாட்டாளிகளைத் திரட்டும் அமைப்பையும் உருவாக்கினார்கள். 1847-ம் ஆண்டு ‘கம்யூனிஸ்ட் லீக்’ என்ற அமைப்பில் அவர்கள் செயல்பட்டனர். பல மேலை நாடுகளில் இதனடிப்படையில் போராட்டங்களும் நடைபெற்றன.

இரண்டு தளங்களில் – கருத்தியல் ரீதியிலும் நேரடி நடவடிக்கைகளிலும் – கம்யூனிஸ்டுகள் மேற்கொள்ள வேண்டிய  புரட்சிகர பணிகளையும் அவர்கள் வலியுறுத்தினர்.

ஒவ்வொரு சமூக அமைப்பிலும் ஆளும் வர்க்கத்தின் சித்தாந்தமே மக்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தும். பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமெனில் ஆளும் வர்க்க சித்தாந்தத்தை எதிர்த்த போராட்டத்தை நடத்திட வேண்டுமென்று அவர்கள் வலியுறுத்தினர்.

ஜெர்மன் தத்துவம் என்ற நூலில் “ஏற்கெனவே நிலவி வரும் பழைய தத்துவ நோக்கங்களுடன் கணக்குத் தீர்க்க வேண்டும்” (To settle accounts with our erstwhile Philosophical conscience) என்கின்றனர். மேலும் “இதுவரை வந்த தத்துவ ஞானிகள் உலகைப் பற்றி விளக்க மட்டுமே செய்தார்கள். ஆனால் உலகை மாற்றுவது என்பதே முக்கியமானது” என அந்த நூலிலேயே குறிப்பிட்டிருந்தார்கள் மார்க்சும் எங்கெல்சும். ஆம். சரியான திட்டமும், நடைமுறையும் சேர்ந்தால்தான் மாற்றத்தை உருவாக்க முடியும்.

இப்போதும் இந்தியாவில் ஆளும் வர்க்கம் நவீன தாராளமயக் கொள்கைளை அமலாக்கி வருகிறது, மேலும் மத்திய பாஜக அரசு தனது இந்துத்துவா சித்தாந்தத்தை இணைத்து முன்னெடுக்கிறது. இவைகளை எதிர்த்த போராட்டம், வர்க்கக் கண்ணோட்டத்தோடு எழ வேண்டும். அப்போதுதான் ஆளும் வர்க்கத்தை முறியடிப்பதுடன் ஒரு சுரண்டலற்ற சமூகத்தை நோக்கி முன் நகர முடியும். இத்தகைய வரலாற்றுக் கடமையைக் கொண்டிருக்கும் பாட்டாளி வர்க்கத்தின் ஆயுதமாக கம்யூனிஸ்ட் அறிக்கை திகழும். இந்தியத் தொழிலாளி வர்க்கத்திற்கும் அது உயிர்ப்போடு கூடிய உற்ற துணையாக இருக்கும் என்பது நிச்சயம்.Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: