மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


மத்திய பட்ஜெட் 2020: வருமான மறு பங்கீட்டில் பெரும் அநீதி


க.சுவாமிநாதன்

ஒவ்வொரு பட்ஜெட்டும் வருமான மறு பங்கீட்டிற்கான கருவியே. அரசின் பொருளாதாரப் பாதையே பட்ஜெட்டை வழி நடத்துவதாய் இருக்கும். இன்று கடைப்பிடிக்கப்பட்டு வரும் நவீன தாராளமயப் பாதை பெரும் நெருக்கடிக்கு இட்டுச் சென்று ஓர் முட்டுச் சந்தில் திணறி நிற்கிற நிலையில் இந்த பட்ஜெட் வெளி வந்துள்ளது. நவீன தாராள மயத்தின் ரணங்களை பா.ஜ.க அரசின் இரு முக்கியமான பொருளாதார முடிவுகளான பண மதிப்பு நீக்கமும், ஜி.எஸ்.டி அமலாக்கமும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல ஆழமாக்கியிருந்தன. இதன் விளைவுகள் தொழில் மந்தம், கிராக்கி வீழ்ச்சி, வேலையின்மை, சிறு தொழில் நசிவு, விவசாய வருமானங்களில் சரிவு, உணவுப் பொருள் பணவீக்கம், அரசின் வருமான திரட்டலில் தோல்வி, ஏற்றத்தாழ்வு இடைவெளி அதிகரிப்பு என பல பரிமாணங்களில் வெளிப்படுகின்றன. ஆனால் அரசு நெருக்கடி இருப்பதாகவே ஏற்றுக் கொள்ளாமல் நவீன தாராள மயப் பாதையிலேயே பயணிக்க முனைந்துள்ளது. இதுவே மூர்க்கத்தனமான தாக்குதல்களாக பட்ஜெட்டில் வெளிப்பட்டுள்ளன.

கேள்வியாகிற நம்பகத்தன்மை

இந்த பட்ஜெட்டின் நம்பகத்தன்மை பெரும் கேள்விக் குறியாகி உள்ளது. அதில் காட்டப்பட்டுள்ள கணக்குகள், மதிப்பீடுகள் எல்லாம் உண்மை நிலைகளோடு பொருந்தவில்லை.

  • மொத்த வரி வருவாய் 2019- 20 க்கு ரூ 24,61,194 கோடிகள் பட்ஜெட் மதிப்பீடாக போடப்பட்டிருந்தது. தற்போது வெளியிடப்பட்ட திருத்திய மதிப்பீடின் அளவு ரூ 21,63,423 கோடிகள் ஆகும். அதாவது பள்ளம் ரூ 2,97,772 கோடிகள். இவ்வளவு பெரிய பள்ளம் இருக்கின்ற நிலையிலும் கூட 2020 – 21 பட்ஜெட்டில் ரூ 24, 23, 000 எதிர்பார்க்கப்படுவதாக காண்பிக்கப்படுகிறது. இது சாத்தியமான ஒன்றுதானா என்ற கேள்வி எழுவது இயல்பு.
  • மாநிலங்களுக்கான மத்திய வரி வருவாய் பங்கு என்பது 2019-20 பட்ஜெட் மதிப்பீடின் படி 8.1 லட்சம் கோடிகள் ஆகும். திருத்திய மதிப்பீடோ ரூ 6.6 லட்சம் கோடி. இதில் ஏற்பட்டிருக்கும் பள்ளம் 1.5 லட்சம் கோடி. இந்த 2020-21 பட்ஜெட்டில், ரூ 7.8 லட்சம் கோடி என மதிப்பிட்டு காண்பிக்கப்பட்டுள்ளது. இதுவும் சாத்தியம் ஆகுமா என்ற கேள்வி உள்ளது.
  • பட்ஜெட் செலவினங்களை பொருத்த வரையில் நடப்பு நிதியாண்டு பட்ஜெட் மதிப்பீடிற்கும், திருத்திய மதிப்பீடிற்குமான இடைவெளியாக ரூ 88,000 கோடி உள்ளது. ஆனாலும் 2020- 21 ஆண்டிற்கான பட்ஜெட்டில் ரூ. 27.86 லட்சம் கோடியில் இருந்து ரூ. 30.42 லட்சம் கோடிகளாக உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது. இது 11 சதவீத உயர்வு ஆகும். இது நடக்கவேண்டும் என்றால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீத உயர்வு தேவைப்படும். (நடப்பு விலை மதிப்பீட்டிலான ஜி.டி.பி அடிப்படையில்) இது நடப்பது சாத்தியமற்றது.

ஆனாலும், இப்படி நிறைய எண் விளையாட்டுகள் இந்த பட்ஜெட்டில் உள்ளன. பொதுவாக பட்ஜெட் மதிப்பீடு, திருத்திய மதிப்பீடு, உண்மை மதிப்பீடு என்பவை வேறுபட்டுத்தான் இருக்கும் என்றாலும் அவற்றிற்கான இடைவெளி இவ்வளவு பெரிதாக இருக்கக் கூடாது. ( உண்மை நிலவரம் வெளியே வர இரண்டு ஆண்டுகள் கூட ஆகிவிடுகின்றன.) உதாரணமாக தேசிய புள்ளியியல் நிறுவனம் 2018-19 மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை 6.1 சதவீதமாக அறிவித்துள்ளது. ஆனால் மே 2019 ல் வெளியிடப்பட்ட தற்காலிக மதிப்பீடுகள் 6.8 சதவீதம் என்று கூறியிருந்தன. இப்படிப்பட்ட மாறுபட்ட கணக்கீடுகள் தற்செயலானதாக தெரியவில்லை. நாடாளுமன்ற தணிக்கைக்கு உட்படாத நடவடிக்கையாக பட்ஜெட்டை மாற்றுகிற வெளிப்படைத்தன்மையற்ற அணுகுமுறையின் விளைவுகளே ஆகும்.

இந்த பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டத்தின் (எப்.ஆர்.பி.எம்) வரையறைகளுக்காக பூச்சு (Tinkering) வேலைகளும் செய்யப்பட்டுள்ளன. எப்.ஆர்.பி.எம் என்ற சட்டத்தின் நோக்கமே ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட பொருளாதார பாதையில் மக்களின் கருத்துக்கு இடமின்றி பயணிப்பதே ஆகும். 2019-20 ல் 3.3சதவீதம் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் இப்போது 3.8 சதவீதத்தை தொட்டுள்ளது. சட்டம் மீறப்பட்டு விட்டதா? இல்லை. எப்.ஆர்.பி.எம் சட்டத்தின் பிரிவு 4 (3) ஓர் தளர்வை தருகிறது. 0.5 சதவீதம் வரை நிர்ணய விகிதத்தில் இருந்து விலகல் இருக்கலாம். அதற்காக கணக்குகளில் பூச்சு வேலை நடந்துள்ளது. முக்கியமான செலவினங்கள் வெட்டப்பட்டுள்ளன. வருமானங்கள் அதீதமாய் மதிப்பிடப்பட்டுள்ளன. இந்த எப்.ஆர்.பி.எம் சட்டம் நவீன தாராள மயப் பாதையில் இருந்து அரசு விலகி செல்லாமல் இருப்பதை உறுதி செய்கிறது. இந்த பட்ஜெட் நிதி ஒழுங்கு என்ற பெயரில்தான் மூர்க்கமான பல தாக்குதல்களை தொடுத்துள்ளது.

விடை கிடைக்காத வேலையின்மை சிக்கல்

இந்திய தொழிலதிபர்களே பெரும் பிரச்சினையாக ஏற்றுக் கொள்கிற அளவிற்கு வேலையின்மை அதிகரிப்பு விஸ்வரூபம் எடுத்துள்ளது. 2017-18 ல் 45 ஆண்டுகள் இல்லாத 6.1 சதவீதத்தை வேலையின்மை தொட்டிருந்தது. இந்த புள்ளி விவரம் வெளியிடப்படாமல் மறைக்கப்பட்டது. பிறகு மோடி அரசாங்கம் இரண்டாவது முறை பதவியேற்ற பின்னர் வெளியிடப்பட்டது. நடப்பு நிதியாண்டில் மோட்டார் வாகனத் துறை பெரும் நெருக்கடியை சந்தித்தது. டாட்டா மோட்டார்ஸ், மாருதி சுசூகி போன்ற நிறுவனங்களில் ஆயிரக் கணக்கில் ஆட்குறைப்பு அரங்கேறியது. பார்லே பிஸ்கட் நிறுவனத்தில் 10000 பேர் வெளியேற்றப்பட உள்ளதாக அறிவித்தது. 90 வயதான அந்த நிறுவனம் இதுவரை சந்தித்திருக்காத நெருக்கடி அது.

காக்னிசன்ட் போன்ற மென் பொருள் நிறுவனங்களும் ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த பட்ஜெட் இதற்கான தீர்வு எதையும் உருப்படியாக முன் வைக்கவில்லை.

இவற்றுக்கான பின்புலமாக உள்ள கிராக்கி குறைவு (Demand constraint) என்கிற பிரச்சினையை அங்கீகரிக்கவோ, உரிய மாற்றை முன் வைக்கவோ இந்த பட்ஜெட் தயாராக இல்லை. மாறாக கார்ப்பரேட் வரிகளில் கடந்த ஆண்டில் அளிக்கப்பட்ட ரூ 1,45,000 வரையிலான சலுகைகள் தொடர்கின்றன. இந்த நடவடிக்கை தொழில் மந்தத்தை போக்க எந்தவொரு உந்துதலையும் தரவில்லை. ஆனாலும் அத்தகைய தலைகீழ் “தீர்வுகளை” நோக்கியே இந்த பட்ஜெட்டும் நகர்ந்துள்ளது.

பெருக்கல் விளைவுகள் இல்லை

கடந்த காலங்களில் வட்டி விகித குறைப்புகள், கடன் அடிப்படையிலான சந்தை விரிவாக்கம் போன்றவை செய்யப்பட்டு சந்தையில் தற்காலிக உந்துதல்கள் தரப்பட்டன. ஆனால் தற்போதிருக்கும் பொருளாதார நெருக்கடியின் உக்கிரம் அது போன்ற தீர்வுகளின் வரையறைகளை கடந்ததாக உள்ளது.

பெருக்கல் விளைவுகளை (Multiplier effect) உருவாக்கி கிராக்கியை தூண்டக் கூடிய துறைகளான விவசாயம், கிராமப் புற மேம்பாடு, பெண் நலன், குழந்தைகள் மேம்பாடு போன்றவற்றிற்கான பட்ஜெட் ஒதுக்கீடுகள் போதுமானதல்ல.

மகாத்மா காந்தி கிராம வேலை உறுதிச் சட்டத்திற்கு ஒதுக்கீடு பெருமளவு குறைக்கப்பட்டிருப்பது அரசின் எதிர்மறை அணுகுமுறைக்கு சான்றாகும். 2019-20 ல் திருத்திய மதிப்பீடு ரூ. 71,000 கோடிகளாக இருந்தாலும் 2020-21 க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது ரூ 61,500 கோடிகள் மட்டுமே. இத்திட்டத்திற்காக மாநிலங்களுக்கு தர வேண்டிய மத்திய அரசின் பங்கும் உரிய நேரத்திற்கு செல்வதில்லை. கேரளா கேட்ட தொகையில் 39 சதவீதமே அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவுக்கு 37 சதவீதம், ஆந்திர பிரதேசத்திற்கு 41 சதவீதம், ராஜஸ்தானுக்கு 44 சதவீதம் என்ற நிலைதான் உள்ளது. இத்திட்டத்தை மத்திய அரசு நடத்துகிற விதம் படிப்படியாக இத் திட்டத்தை கைவிடும் அவர்களின் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.

ட்ரிக்கில் அப்

கிராக்கி அதிகரிப்பிற்கு அரசின் பொது முதலீடுகள் அதிகரிக்கப்பட வேண்டும். அதற்கு நிதி ஆதாரங்கள் தேவை. எப்படி உறுதி செய்வது? வரி வருவாயை பெருக்கலாம். ஆனால் அதை செய்யவில்லை. அவர்கள் “சொட்டு பயன் முறைமையை” (Trickle down theory) நம்புகிறார்கள். அதாவது தொழிலதிபர்களுக்கு சலுகைகள் தரப்பட்டால் அவர்கள் ஊக்கம் அடைவார்கள்; தொழில் நடத்துவார்கள்; வேலைவாய்ப்பும் வருமானமும் பெருகும் என்பதே அந்த எதிர்பார்ப்பாகும். நவீன தாராளமயத்தின் அணுகுமுறை அது. தொழிலதிபர்களுக்கு அவ்வாறு “உந்துதல் ஊக்கம்” வழங்கப்பட்டாலும் அது “சொட்டு பயனாக” கீழே வரவில்லை. மாறாக “மேல் நோக்கி பயன் நகர்தல்” (Trickle Up) என்கிற போக்கு உள்ளது. அதாவது நகர்ப்புற, கிராமப்புற உழைப்பாளி மக்களின் வருமானத்தை மேலும் மேலும் உறிஞ்சி ஏற்றத் தாழ்வு இடைவெளியை பெரிதும் அதிகரித்துள்ளது. அண்மைய ஆக்ஸ்பாம் அறிக்கையில் நாம் அதனை பார்த்தோம்.

மேல் நோக்கி உறிஞ்சுதல் (Trickle up)

ஜனவரி 2020 ல் வெளியான ஆக்ஸ்பாம் அறிக்கை, இந்தியாவின் டாப் 1 சதவீதம் பேரிடம் உள்ள செல்வம், அடிமட்டத்தில் வாழும் 70 சதவீதம் பேர் (95 கோடி பேர்) வைத்துள்ள மொத்த சொத்துக்களில் 4 மடங்கு அதிக செல்வத்தை வைத்துள்ளனர் என்று கூறியது. 63 இந்தியப் பெரும் கோடீஸ்வரர்களிடம் இருக்கும் மொத்த சொத்து மதிப்பு இந்தியாவின் முழு ஆண்டு பட்ஜெட் தொகையை விட அதிகமாக இருக்கிறது. எந்த அளவிற்கு ஏற்றத்தாழ்வு பெரும் அகழி போல் விரிந்திருக்கிறது என்பதற்கும், “மேல் நோக்கி உறிஞ்சுதல்” (trickle up) நடந்தேறியுள்ளது என்பதற்கும் உதாரணங்கள் இவை.
அரசின் வருவாய் ஈட்டும் கொள்கைகளும் மேற்சொன்ன மாற்றத்திற்கு உதவி செய்திருக்கின்றன. மொத்த வரி வருவாயில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சியில் இந்த தாக்கத்தை காண்கிறோம்.

வருமான வரியில் சலுகை கிடைத்துள்ளதா?

இந்த பட்ஜெட்டில் இரண்டு வகையான வருமான வரி கணக்கீட்டு முறைகள் அறிமுகம் செய்யப்பட்டு, தாமே ஒன்றை தேர்வு செய்துகொள்ளலாம் என வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

முதலாவது ஏற்கனெவே உள்ள வருமான வரி கழிவுகளை உள்ளடக்கியது. இரண்டாவது அத்தகைய கழிவுகள் ஏதுமில்லாத வரி விகித குறைப்பு முறைமை. இதில் பலருக்கு இரண்டாம் முறைக்கு மாறினால் ஏற்கெனவே கட்டுகிற வரிகளை விட அதிகம் கட்ட வேண்டி வரும். இது போன்ற வருமான வரி சலுகைகள் அதிகமாக மூத்த குடி மக்களுக்கு இருக்கும். அவர்களுக்கு புதிய முறைமை எந்த பலனையும் தராது. இந்த இரண்டாம் முறைமை இந்த பட்ஜெட்டில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை விட இது எதிர்காலத்தில் சலுகைகளே இல்லாத சூழலை நோக்கி நகரப் போகிறது என்பதையும், இல்லங்களின் சேமிப்பு என்கிற வருவாய் ஊற்றையே சந்தைக்காக காவு கொடுக்கப் போகிறது என்பதுமே அது உணர்த்தும் அபாயமாகும்.

என்.ஆர்.ஐ தொழிலாளர் மீதான வரி முன் மொழிவுகள், வரையறைகளில் அறிவிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் சவுதி போன்ற நாடுகளுக்கு பிழைப்பிற்காக சென்றுள்ள சாதாரண, நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும். எனவேதான் இத்தகைய தொழிலாளர்கள் அதிகம் கொண்டிருக்கும் கேரள மாநிலத்தின் இடது முன்னணி அரசு உடனே எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
இன்சூரன்ஸ் நிறுவனங்கள் எல்லாம் இன்சூரன்ஸ் பிரிமியத்திற்கு சிறப்பு வருமான வரி கழிவுக்கான பிரிவை உருவாக்க வேண்டுமென்று கோரி வந்த நிலையில் இருப்பதையே கேள்விக்கு ஆளாக்குகிற இந்த முன் மொழிவு எதிர்காலத்தில் பெரும் பாதிப்புகளை பொருளாதாரத்தில் ஏற்படுத்தும்.

வருமான திரட்டலில் அநீதியும் பள்ளமும்

கார்ப்பரேட்களுக்கான சலுகைகளும், டிவிடெண்ட் பகிர்மான வரி சலுகையும் ரூ 25,000 கோடி அளவுக்கு அரசின் வருமானத்தில் பள்ளத்தை கூடுதலாக உருவாக்கும். சில குறிப்பிட்ட தொழில்களுக்கு கார்ப்பரேட் வரிகள் 15 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டிலேயே கார்ப்பரேட் வரிகளில் வழங்கப்பட்ட பெரும் சலுகைகள் வரிவருவாயில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த பட்ஜெட் அதை சரி செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை. 2019 -20 ல் ரூ. 6,10,500 கோடிகள் கார்ப்பரேட் வரிக்கான பட்ஜெட் தொகையாகும். டிசம்பர் வரை வசூலாகியிருந்த தொகை ரூ.3,69,000 கோடிகள் மட்டுமே. இது 60 சதவீதம் மட்டுமே. (2018 டிசம்பரில் 64 சதவீதம்).

கார்ப்பரேட் வரிகள் மட்டுமின்றி மற்ற வரிகளுமே கடுமையான வசூல் பாதிப்புகளை சந்தித்துள்ளன. வருமான வரியில் 57 சதவீதம், ( டிசம்பர் 2018 ல் 64 சதவீதம்) மத்திய ஜி.எஸ்.டி வசூல் 60 சதவீதம் ( டிசம்பர் 2018 ல் 74 சதவீதம்), சுங்க வரி 68 சதவீதம் (2018 டிசம்பரில் 82 சதவீதம்) கலால் வரிகள் 62 சதவீதம் (டிசம்பர் 2018 ல் 67 சதவீதம்).
இந்த வருமான திரட்டல் முறைமை கூட்டாட்சி கோட்பாட்டின் மீதும் தாக்குதல் தொடுக்கிறது. மத்திய அரசிடம் இருந்து மாநிலங்களுக்கு தர வேண்டிய வரி பங்கு ரூ. 8.1 லட்சம் கோடிகள் என்பது 2019-20 பட்ஜெட் மதிப்பீடு. ஆனால் திருத்திய மதிப்பீடு 6.6 லட்சம் கோடிகள்தான். 10 மாநிலங்களுக்கு அவர்களுக்கான பங்கில் சரிவு ஏற்பட்டுள்ளது. 2020- 21 பட்ஜெட் ரூ. 7.8 லட்சம் கோடி தரப்படும் என அறிவித்துள்ளது. இதுவெல்லாம் மலையேறுமா என்பது கேள்விக்குறி. கேரள மாநில அரசு தனது எதிர்ப்பை கடுமையாக பதிவு செய்துள்ளது.

இது அரசின் பொருளாதார பாதையின் விளைவு ஆகும். தனது பாதையை மாற்றிக்கொள்ள அரசிடம் எந்த முன்முயற்சியும் இல்லை.

இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அரசு முன் வைத்துள்ள பட்ஜெட் மொழிவுகள் விபரீதமானவை. தொலை நோக்கு பார்வையற்ற ஒதுக்கீடு வெட்டுகள், மருத்துவத் துறை குறித்த கொள்கை முடிவுகள், சமூக நலத் திட்டங்களுக்கு ஒதுக்கீடு குறைப்பு, பொதுத் துறை பங்கு விற்பனை என நகர்ந்துள்ள விதம் பொருளாதார மறு பங்கீட்டில் மிகப் பெரும் வஞ்சனையை செய்யவுள்ளது.

சாதாரண மக்கள் தலையில் சுமத்தும் வகையில் இந்த பட்ஜெட் மும்முனை தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
ஒன்று சமூக நலத் திட்டங்களில் செய்துள்ள வெட்டு.
இரண்டாவது விவசாயத்திற்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி. மூன்றாவது பொதுத் துறை மீதான தாக்குதல்.

மறந்து போன முழக்கங்கள்

மிக ஆரவாரமாக அறிவிக்கப்பட்ட பல திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள் வெட்டப்பட்டுள்ளன. “மேக் இன் இந்தியா” பற்றிப் பேசுகிற ஆட்சியாளர்கள் ஆராய்ச்சிக்கான ஒதுக்கீடுகள் குறித்து கண்டு கொள்ளவில்லை. “ஆர்வமிக்க இந்தியா” (ASPIRATIONAL INDIA) என்பது பட்ஜெட்டின் “தீம் சாங்” என்றாலும் இந்திய தொழில்கள் கச்சா பொருட்களுக்கும், தொழில் நுட்பத்திற்கும் அந்நிய நாடுகளை நம்பி இருக்க வேண்டிய நிலைமையை மாற்ற ஓர் அடி கூட எடுத்து வைக்கவில்லை. உலகம் முழுவதும் 2019 ல் பதிவுக்காக தரப்பட்டுள்ள காப்புரிமை விண்ணப்பங்களில் 50 சதவீதத்தை சீனா தந்துள்ளது என்பதை இங்கு நினைவு கூருவது பொருத்தமானது. சீனாவின் இந்த வளர்ச்சி இந்திய பொருளாதாரத்திலேயே பிரதிபலிப்பதை மின்னணு உற்பத்தி, மருந்துகள் உற்பத்தி இரண்டிலும் காண முடிகிறது.

இந்திய மருந்து உற்பத்தி 140 நாடுகளுக்கு ஏற்றுமதி ஆவதாகும். “உலகத்தின் பார்மசி” என்று இந்தியாவை சொல்வார்கள். ஆனால் இந்த மருந்து உற்பத்திக்கு தேவையான கச்சா பொருட்கள் (API- Active Pharma Ingredients) 69 சதவீதம் சீனாவில் இருந்துதான் வருகின்றன. 1994 ல் பிளேக் நோயை எதிர்கொள்வதில் பெரும் பங்கை ஆற்றிய ஐ.டி.பி.எல் போன்ற பலமான நிறுவனங்களை உருவாக்க, வளர்க்க வேண்டியதன் அவசியத்தை இந்த பட்ஜெட் உணர்ந்து எதுவும் செய்யவில்லை. இன்று கரோனா வைரஸ் சீனாவிலேயே பெரும் உயிர் இழப்புகளையும், பொருளாதார பாதிப்புகளையும் உருவாக்கியுள்ள நிலையில் ஆராய்ச்சி தேவைகளை அலட்சியம் செய்வது ஆபத்தானது. இந்தியாவில் சிரிஞ்சை உற்பத்தி செயகிற நாம் ஊசிகளை இறக்குமதி செய்கின்றோம். இந்த பட்ஜெட் இறக்குமதி வரிகளை உயர்த்தி உள்நாட்டு உற்பத்திக்கான சந்தையை உறுதி செய்வதாக கூறியுள்ளது. ஆனால் இருதயங்களில் பொருத்தப்படும் ஸ்டென்டுகள், ரேடியேஷன் இயந்திரங்கள், ஹை எண்ட் ஸ்கேனர் ஆகியன வெளி நாடுகளில் இருந்தே எதிர்பார்க்கப்படுகிற நிலையில் இந்த வரி உயர்வு இறக்குமதியை குறைக்காது; மாறாக நுகர்வோர் தலையில் சுமையையே ஏற்றப் போகிறது.

மின்னணு உற்பத்தியிலும் இதே நிலைமை. இந்தியாவில் 6 ஆண்டுகளில் மொபைல் போன் உற்பத்தி தலங்கள் 2 ல் இருந்து 268 ஆக உயர்ந்துள்ளது. 4.58 லட்சம் கோடிகள் மதிப்புள்ள வணிகம் நடைபெறுகிறது. ஆனால் அவை பெரும்பாலும் வெறும் “இணைப்பு” (Assembly) தலங்களாகவே உள்ளன; அவற்றில் நடைபெறுகின்ற மதிப்பு கூட்டல் 7 முதல் 8 சதவீதம் மட்டுமே ஆகும். இறக்குமதியை சார்ந்து இருப்பதால் இதன் வருவாயில் 93 சதவீதம் சீனாவுக்கு செல்கிறது. (இந்து பிசினஸ் லைன்- 06.02.2020). ஆராய்ச்சிக்கான முனைப்பு அற்ற பட்ஜெட் இவற்றையெல்லாம் எப்படி சரி செய்யப் போகிறது? ஆர்வமிக்க இந்தியா எப்படி உருவாகப் போகிறது?

கசக்கிறது சமூக நலம்

தேசிய உடல் நலக் கொள்கை ரூ 1.12 லட்சம் கோடிகள் தேவை என கூறுகிறது. இந்த பட்ஜெட்டில் உடல் நலத்திற்கான ஒதுக்கீடு ரூ 65011 கோடிகள். 58 சதவீதம் மட்டுமே. பொது மருத்துவம் சிதைக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவமனை படுக்கை வசதி அதிகரிப்பில் 80 சதவீதத்தை தனியார் மருத்துவ மனைகளே செய்துள்ளன எனில் மருத்துவம் எவ்வளவு வணிக மயம் ஆகியுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
“ஆயுஷ்மான் பாரத்” திட்டத்திற்கு சென்ற பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை 6400 கோடிகள். டிசம்பர் வரை 16 சதவீதம் மட்டுமே (1014 கோடிகள்) மத்திய அரசால் செலவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு, குஜராத், ஆந்திரா, ராஜஸ்தான், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் அவர்கள் கோரியுள்ள தொகை மத்திய அரசிடமிருந்து வராமல் தவிக்கின்றன. கேரளா கோரியுள்ளதில் 39 சதவீதம் மட்டுமே தரப்பட்டிருப்பது ஓர் எடுத்துக்காட்டு.

இந்த பட்ஜெட் ஓர் அபாயகரமான முன் மொழிவையும் வைத்திருக்கிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு நிலமும் தந்து அவர்களை மாவட்ட அரசு பொது மருத்துவ மனைகளுடன் இணைப்பது என்பதாகும். வளங்களை மடை மாற்றம் செய்வதில் எந்த அளவிற்கு இந்த பட்ஜெட் சென்றுள்ளது என்பதற்கு இது சாட்சியம்.

பட்ட காலிலேயே படும்

பட்ஜெட் பலி பீடத்தில் நிறுத்தப்பட்டுள்ள இன்னொரு காவு பொது விநியோக திட்டம் ஆகும். 2019-20 ல் உணவு மானிய ஒதுக்கீடு 1,84,220 கோடிகளாக இருந்தன. இப்போது அது 1,08,698 கோடிகளாக பெரும் சரிவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறையை குறைத்து காட்டுவதற்காக அரசு கடன் வாங்குவதற்கு பதிலாக இந்திய உணவுக் கழகத்தை கடன் வாங்குகிற நிலைமைக்கு திட்டமிட்டு தள்ளியுள்ளது. அரசு கடன் திரட்டினால் வட்டி குறைவாக இருக்கும். இந்திய உணவு கழகம் வங்கிக் கடன் வாங்கினால் அதிக வட்டிக்கு வாங்க வேண்டி வரும். இது உணவுப்பாதுகாப்பை சிதைக்கும்.

பிரதமரின் கிசான் திட்டத்தில் அவர்கள் இலக்கு 14.5 கோடி விவசாயிகளை தொடுவது. ஆனால் இத்திட்டத்தில் பதிவு ஆகியிருக்கிற விவசாயிகள் 62 சதவீதம் மட்டுமே. அதிலும் முழு பயன் பெற்றவர்களை மட்டும் பார்த்தால் மொத்த இலக்கில் 50 சதவீதத்திற்கு சரிந்து விடுகிறது. இப்படி பாதிக் கிணறு தாண்டுவதையே வழக்கமாக வைத்துள்ளார்கள். கிசான் ரயில் போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இருந்தாலும் பட்ஜெட் ரயில் விவசாயிகளை ஏற்றிக் கொள்ளாமலேயே சென்று விட்டது என்பதே உண்மை.

அரசு கொள்முதலை கைவிடுவதை நோக்கி இந்த அரசு நகர்கிறதோ என்ற சந்தேகம் வருகிற அளவிற்கு உச்சகட்ட அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இந்திய உணவு கழகம் எந்த அளவிற்கு தள்ளப்பட்டுள்ளது என்பதை ஏற்கெனவே விவரித்துள்ளோம். இது அரசு கொள்முதலை கடுமையாக பாதிக்கும். சந்தை விலைகளும் அரசின் ஆதரவு விலைகளை விட குறைவாக இருப்பதால் விவசாயிகள் வருமானம் கடும் பாதிப்பிற்கு ஆளாகும். இந்த லட்சணத்தில் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாவது என்ற வாய் ஜாலங்கள் எல்லாம் எப்படி நடக்கும்?

ஒரு புறம் இப்படி வருமானம் பாதிக்கப்படும் போது மறுபுறம் டீசல், உரம், மின்சாரம், டிராக்டர்கள், ஆயில், கால்நடை தீவனம், பூச்சிக் கொல்லி மருந்து ஆகிய இடுபொருள் விலைகள் ஏறியுள்ளன. டீசல் விலைகள் கிட்டத்தட்ட 10 சதவீதமும், ஆயில் 13 சதவீதமும் அதிகரித்துள்ளன. பால் உற்பத்தி திறனை இரட்டிப்பாக்குவது பற்றி பட்ஜெட் பேசியுள்ளது. ஆனால் கால் நடை தீவன விலை உயர்வும், கால்நடை மருத்துவ செலவினங்களின் உயர்வும் அதை அனுமதிக்குமா என்பது கேள்வி. உர மானியம் போன பட்ஜெட்டில் ரூ 80000 கோடிகள். திருத்திய மதிப்பீடு ரூ 79997 கோடிகள். ஆனால் 2020-21 பட்ஜெட்டில் ஒதுக்கீடு ரூ 71309 கோடிகள். ஏதாவது தர்க்க நியாயம் உள்ளதா?

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கதையை முடித்து விடுவார்கள் போலிருக்கிறது. 2019- 20 ல் ரூ 71000 கோடியாக இருந்த ஒதுக்கீடு 2020-21 ல் 61500 கோடிகளாக குறைக்கப்பட்டுள்ளது. இது 2018-19 தொகையான ரூ 61815 கோடிகளை விட குறைவான ஒதுக்கீடு ஆகும். 2018- 19 ல் கூலி பாக்கி வேறு இருந்தது என்பதையும் சேர்த்துப் பார்த்தால் எவ்வளவு குரூரமான முன் மொழிவு என்பதை புரிந்து கொள்ள இயலும்.
விவசாயக் கடன் 11 சதவீதம் உயரும் என பட்ஜெட் அறிவித்துள்ளது. இந்திய விவசாயிகளில் பெரும்பாலானோர் நிறுவனக் கடன் பெறுபவர்களாக இல்லை. கந்து வட்டி வலைக்குள் தான் இருக்கிறார்கள். எனவே இந்த அறிவிப்புகள் எல்லாம் உண்மையில் விவசாயிகளைப் போய் சேருமா?

துல்லிய தாக்குதல் பொதுத் துறை மீது

இந்த பட்ஜெட் தீர்வுகளை நோக்கி நகர்ந்திருக்க வேண்டுமென்றால் பொது முதலீடுகளை அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்வதற்கு “சூப்பர் ரிச்” எனப்படும் பெரும் பணக்காரர்கள் மீது வரிகள் போடாமல் செய்ய இயலாது. உலகின் சூப்பர் ரிச் மீது 0.5 சதவீதம் வரி போட்டாலே 26 கோடி குழந்தைகளுக்கு கல்வி தர முடியும். ஆனால் வலதுசாரி பொருளாதார பாதை இத்தகைய மனிதம் கொண்ட பொருளாதார பாதையை நோக்கி தடம் மாறாது. இந்திய பட்ஜெட்டும் விதிவிலக்கல்ல.

பொதுத் துறை பங்கு விற்பனைக்கு ரூ. 2.10 லட்சம் கோடி இலக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எல்.ஐ.சி பங்கு விற்பனை முன் மொழிவு ஓர் மிகப் பெரும் அதிர்ச்சியை மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது. வங்கிகள், பி.பி.சி.எல், ஐ.ஆர்.சி.டி.சி உள்ளிட்ட நிறுவனங்கள் குறி வைக்கப்பட்டுள்ளன.

நியாயமற்ற எல்.ஐ.சி பங்கு விற்பனை

மட்டுமின்றி ஆயுள் காப்பீட்டின் மீது பன்முகத் தாக்குதலை இந்த பட்ஜெட் தொடுத்துள்ளது. 100 கோடி முதலீட்டை மட்டுமே கொண்ட எல்.ஐ.சி, ஆண்டு டிவிடென்டாக அரசுக்கு தருவது ரூ 2611 கோடி ஆகும். அரசின் திட்டங்களில் பத்திரங்களில் ரூ. 28 லட்சம் கோடிகள் முதலீடு, சொத்து மதிப்பில் ரூ. 32 லட்சம் கோடிகள் என வளர்ந்து நிற்கிற நிறுவனம் ஆகும்.

இறப்பு உரிமப் பட்டுவாடாவில் 98.2 சதவீதம் கொண்டிருக்கும் எல்.ஐ.சி, இன்சூரன்ஸ் பரவலில் 42 கோடி பாலிசிகள் என உலக சாதனை படைத்துள்ள நிறுவனம் ஆகும். இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் பங்குவிற்பனை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒரு நிறுவனத்தின் பங்குகளை சந்தையில் பட்டியலிடப் பட்டுவிட்டால் 35 சதவீதமான பங்குகளை சந்தைக்கு கொண்டு வர வேண்டுமென்பது விதி. ஸ்டேட் வங்கியின் பங்குகளில் தற்போது 58 சதவீதம் மட்டுமே அரசு பங்குகள் உள்ளன. 2003 ல் வங்கிகளில் அரசின் பங்கை 33 சதவீதமாக குறைக்க சட்டத் திருத்தம் கொண்டு வர முயற்சித்ததை மறந்து விடக் கூடாது. ஆகவே தனியார் மயம் நோக்கிய முதற்படியாகவே பங்கு விற்பனை என்ற சொல்லாடல் நைச்சியமாக முன் வைக்கப்படுகிறது. எல்.ஐ.சி பங்கு விற்பனைக்கு பட்ஜெட்டின் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க வேண்டியிருப்பதே உடனடிக் காரணம்.

இந்த பட்ஜெட் 102 லட்சம் கோடிகள் ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கு திரட்டப்படும் என அறிவித்துள்ளது. அதில் 39 சதவீதத்தை மட்டுமே மத்திய அரசு தரும். மீதமெல்லாம் மாநில அரசுகள், தனியார் கொண்டு வருவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியெனில் 61 சதவீதம் மத்திய பட்ஜெட்டிற்கு வெளியே இருந்து திரட்டப்பட வேண்டும். ஆயுள் இன்சூரன்ஸ்தான் நீண்ட கால சேமிப்புகளை திரட்டக் கூடிய துறை. ஒரு பக்கம் தேவை இருக்கிறது. மறு பக்கம் அதை தருகிற வல்லமை கொண்ட எல்.ஐ.சி நிறுவனம் இருக்கிறது. அதைப் பலப்படுத்துவதற்கு மாறாக குறுகிய காலத் தேவைகளுக்காக பங்கு விற்பனை என்பது பொறுப்பற்ற முன் மொழிவு ஆகும்.

ரயில்வே மேம்பாட்டிற்கு 150000 கோடிகளை ஐந்தாண்டுகளுக்குள் தருவதாக எல்.ஐ.சி ஏற்றுக் கொண்டு ஆண்டு தோறும் ரூ 30000 கோடிகளை தர புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதென்பது பொருளாதார வரலாற்றில் ஒரு சாதனை. ஒரே துறைக்கு மட்டும் இவ்வளவு நிதி கொடுப்பது சரியல்ல என்று ஐ.ஆர்.டி.ஏ என்று முட்டுக் கட்டை போடுவதாக இப்போது செய்தி. இந்த பட்ஜெட் 34000 கோடி ரயில் என்ஜீன், கோச்சுகளுக்கு தேவை என்றும், 31000 கோடி இதர ரயில் திட்டங்களுக்கு தேவை என்றும் பட்ஜெட் செய்துள்ளது. இது எங்கே இருந்து கிடைக்கும்!

இவை போதாதென்று ஏற்கெனவே உள்ள ஆயுள் இன்சூரன்ஸ் பிரிமியத்தின் மீதான 18 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிப்பு, இந்த பட்ஜெட் வருமான வரியில் இன்சூரன்ஸ் பிரிமியத்திற்கான சலுகை உள்ளிட்ட கழிவுகளை காலப் போக்கில் நிறுத்தி விடுமென்ற சமிக்ஞை ஆகியவை இன்சூரன்ஸ் வணிகத்திற்கு எழுந்திருக்கும் புதிய அபாயங்கள் ஆகும்.

தாக்குதல் பல விதம்

ஏற்கெனவே தனியார் ரயில்கள் டெல்லியில், குஜராத்தில் தனியார் ரயில்கள் ஓட ஆரம்பித்து விட்டன. அதிக கட்டணம், மூத்த குடி மக்கள் சலுகை ரத்து, பயணப் பாதையில் அவற்றுக்கு வழி விட மற்ற ரயில்கள் தாமதம் ஆகிய அபாயங்கள் வெளி வந்துள்ளன. 150 ரயில் தடங்கள் தனியார் வசம் ஓப்படைக்கப்ப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. லாப வழித் தடங்கள் தனியாருக்கு வழங்கப்பட்ட பிறகு சமூகப் பொறுப்பை அரசு ரயில்வே சுமக்க வேண்டி வரும். சில காலம் கழித்து நட்டம் என்று பேச ஆரம்பிப்பார்கள். இப்படிப் பொதுத் துறை மீது விதம் விதமான தாக்குதல்கள். பி.எஸ்.என்.எல் இப்படித்தான் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளானது. செல் சேவை அனுமதியில் தாமதம் செய்தது துவங்கி, டவர் நிர்மாணத்தில் அனுமதி இழுத்தடிப்பு, 4 ஜி சேவை தருவதற்கு நீண்ட இடைவெளி என இழுத்தடிப்பு. ஒவ்வோர் தடைக் கட்டத்திலும் நிறுவனத்தை பாதுகாக்க தொழிற்சங்கமே வீதிகளுக்கு வந்தது. அதன் உச்ச கட்டமாக 150000 தொழிலாளர்களில் 93000 பேர் ஒரே நாளில் வி.ஆர்.எஸ் என்ற பெயரில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஏர் இந்தியாவின் பங்குகள் 100 சதவீதம விற்கப்படும். ஐ.ஆர்.சி.டி.சி பங்குகள் சந்தைக்கு வரும். வங்கிகள், எண்ணெய் நிறுவனங்கள் என வரிசையாக…. பட்ஜெட், புல்டோசரை தயார் நிலையில் வைத்திருக்கிறது.

பொதுத் துறை நிறுவனங்கள் தங்கள் சந்தையை தக்க வைக்கவும் போராட வேண்டியுள்ளது. ஒரு சிம்மை உருவி விட்டால், நம்பரை மாற்றாமல் நிறுவனத்தை மாற்றினால் சந்தை போய்விடுமென்ற நிலையில் இவ்வளவு இழுத்தடிப்பு மூலம் பி.எஸ்.என்.எல் தாக்கப்பட்டது. எல்.ஐ.சியின் சந்தை நீண்ட கால முதலீடு என்பதால் 23 தனியார் ஆயுள் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் போட்டிக்கு மத்தியிலும் எல்.ஐ.சி 76 சதவீத சந்தைப் பங்கை வைத்திருக்கிறது. போட்டியை எதிர் கொள்ள முடிகின்ற எல்.ஐ.சி யின் பங்கு விற்பனைக்கு அரசு எத்தனிக்கிறது. ஆகவே ஒரு புறம் அரசின் கொள்கைகளுக்கு எதிரான போராட்டம்… மறுபக்கம் மக்கள் மத்தியில் ஏற்படுகிற அச்சத்தை அகற்றி சந்தைப் பங்கை தக்க வைக்கிற போராட்டம் என இரு முனைகளில் நகர வேண்டியுள்ளது.

மக்கள் மத்தியில் இந்த பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு எழலாம் என்பது ஆட்சியாளர்களுக்கு தெரியும். ஆகவே திசை திருப்பலையும் பட்ஜெட் உரையிலேயே அவர்கள் செய்துள்ளார்கள். சரஸ்வதி சிந்து என்று பேசியிருப்பது அவைகளில் ஒன்றாகும்.

முதலாளித்துவ சமூகத்தில் எல்லா பட்ஜெட்டுகளுமே மடை மாற்றத்தை ஆளும் வர்க்கங்களுக்கு சாதகமாக மாற்றுவது நடந்தேறும். ஆனால் இந்த பட்ஜெட் அதை மூர்க்கத்தனமாக அரங்கேற்றுகிறது என்பதே வித்தியாசம்.Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: