தமிழில்: சிபி நந்தன்
தில்லியில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்திலும் ஷாஹீன் பாக்கிலும் நடந்துகொண்டிருக்கும் அமைதிப் போராட்டங்கள் மீது இந்துத்துவ அமைப்புகள் தொடர் தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றன. இந்தச் சூழலில் நாட்டின் நிதியறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த இரு நிகழ்வுகளையும் சமீபத்தில் நடந்து முடிந்த தில்லி மாநிலத் தேர்தலோடு இணைத்துப் பார்க்க வேண்டும். பாஜகவும் அதன் இதர அமைப்புக்களும் தேர்தலில் வென்றே தீர வேண்டும் என்ற நோக்கத்தோடு, கடந்த ஆறு ஆண்டுகளில் தாங்கள் ஏற்படுத்திய பொருளாதாரச் சீர்குலைவுகளை மறைத்து மக்களிடையே பிரிவினையைத் தூண்ட முட்டி மோதிப்பார்த்தனர். அதே சமயம் இந்த நிதியறிக்கையை உற்று நோக்கும்பொழுது, இந்த அரசின் பொருளாதாரப் பார்வை கார்ப்பரேட் மூலதனத்தின் நலன்களை முன்னிறுத்துவது தெரிகிறது. மேலும், இந்த அரசின் கொள்கைகளை பார்ப்பனீயம் வழிநடத்துவதும் புலப்படுகிறது.
அரசை கண்ணுக்குத் தெரியாத சந்தையின் கையும், ”நம்பிக்கையின் கையும்” தொடர்ந்து வழிநடத்தும் என 2019-20க்கான பொருளாதார ஆய்வறிக்கை (Economic Survey 2019-2020) தெரிவிக்கிறது. இருப்பினும், இந்த நிதியறிக்கை(பட்ஜெட்) எல்லோருக்குமான வளர்ச்சியை (சப்கா விகாஸ்), எல்லோரோடும் சேர்ந்து அடைந்து (சப்கா சாத்) எல்லோருடைய நம்பிக்கையையும் பெருவது (சப்கா விஷ்வாஸ்) என்று குறிப்பிட்டது. அத்தோடு, பொருளாதார வளர்ச்சியும் முன்னேற்றமும் “நாட்டின் வளத்தைப் பெருக்குபவர்களை மனதில் கொண்டு” இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் நமது நிதியமைச்சர். இந்த அனைத்திலும் நிதியறிக்கை தோல்வி அடைந்துள்ளது என்பதே உண்மை.
இந்த நிதியறிக்கையைப் பொறுத்தவரை, நாட்டின் கட்டுமானங்களிலும் பிற துறைகளிலும் பணத்தைக் கொட்டும் கார்ப்பரேட்டுகளே நாட்டின் ‘வளத்தைப் பெருக்குபவர்கள்’. இவர்களுக்கு பெருமளவில் வரிவிலக்கு அளிப்பதிலேயே இந்த நிதியறிக்கை முழு கவனத்தையும் செலுத்துகிறது. நாட்டின் வளத்தை உண்மையாகவே பெருக்கித் தருவோரான தொழிலாளர்களைப் பற்றி இந்த நிதியறிக்கைக்கு எந்தக் கவலையும் இல்லை. இந்த உழைக்கும் வர்க்கத்தின் பெரும் பகுதியினரான பெண்கள், ஆதிவாசிகள், தலித்துகள், சிறுபான்மையினர் ஆகியோர் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ஒடுக்குமுறையைச் சந்திக்கின்றனர். இந்த நிலையே தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் ஒவ்வொரு நிதியறிக்கையிலும் தொடர்ந்து வெளிப்படுகிறது. தொடர் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை சந்திப்பது, சமூகத்தின் ஒடுக்கப்பட்ட வகுப்புகளே என்பதால், இந்த வகுப்புகளுக்கு சிறப்பு கவனம் தேவைப்படுகிறது. அதாவது, நாட்டின் மொத்த உழைக்கும் வர்க்கத்துக்குமே சொற்பமான நிதியே ஒதுக்கப்பட்டிருந்தாலும், வரலாறு நெடுகிலும் ஒடுக்கப்பட்டு வரும் தலித்துகள், ஆதிவாசிகள், பெண்கள், சிறுபான்மையினர் ஆகியோர் இந்த நிதிநிலை ரீதியான ஒடுக்குமுறையின் தாக்கத்தை அதிகம் சந்திக்க நேரிடும்.
கடந்த இரண்டு ஆண்டுகளின் நிதியறிக்கைகளைப் பார்த்தால் இதனை ஆதாரபூர்வமாக உணர முடியும். சமீபத்திய உழைப்பாளர் கணக்கீட்டின் படி 2017-18ஆம் ஆண்டில் நாட்டின்மொத்த மக்கள் தொகையில் 19.6 விழுக்காடு தலித்துகளும், 9.3 விழுக்காடு ஆதிவாசிகளும், 42.8 விழுக்காடு பிற்படுத்தப்பட்டோரும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் சாதியினர் (அதாவது தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் அல்லாத பிற சாதியினர்) 28.2 விழுக்காடு இருப்பதாக தெரிவிக்கின்றது. இந்த மக்கட்தொகையை மனதில் கொண்டு செயல்பட்டிருந்தால், நிச்சயம் பெரும்பான்மையினரான ஒடுக்கப்பட்டோருக்கும், அவர்கள் நலனுக்காக இயங்கும் அமைச்சகங்கள் மற்றும் திட்டங்களுக்கும் கணிசமான நிதிஒதுக்கீட்டை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், கடந்த இரு ஆண்டுகளில், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் நலனுக்காக செயல்படும் அமைச்சகங்களுக்கும் துறைகளுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கும் திருத்தப்பட்ட நிதியின் மதிப்பீடு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. மிகச் சொற்ப நிதியே ஒதுக்கப்பட்டு, செலவிடப்பட்டுள்ளது. சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் அளவு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.045 விழுக்காடு, மொத்த செலவில் 0.33 விழுக்காடு. ஆதிவாசிகள் நலனிலும் இதே நிலைமைதான். பழங்குடியினர் விவகாரங்களுக்கான அமைச்சகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.032 விழுக்காடு, மொத்த செலவில் 0.23 விழுக்காடு.
சிறுபான்மையினர் நல அமைச்சகம், உள்நாட்டு உற்பத்தியில் 0.022 விழுக்காடும் மொத்த செலவில் 0.17 விழுக்காடு நிதியும் பெற்றுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம், உள்நாட்டு உற்பத்தியில் 0.013 விழுக்காட்டையும் 2020-21 ஆண்டின் மொத்த செலவில் 0.098 விழுக்காட்டையும் பெற்றுள்ளது. இதுதான் 2020-21 நிதியறிக்கையின் நிலை.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு அமைச்சகங்களின் மொத்த ஒதுக்கீட்டைப் பார்த்தோமானால், நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் 0.23 விழுக்காடு நிதியையும், 2020-21 ஆண்டுக்கான மொத்த செலவில் 1.72 விழுக்காடு நிதியையுமே பெற்றுள்ளன. இந்த நிதி ஒதுக்கீடானது, இதே மோடி அரசு தாக்கல் செய்த 2018-19 நிதியறிக்கையில் ஒதுக்கப்பட்டதை விட குறைவாகும். 2018-19 மொத்த செலவில் 1.86 விழுக்காடு நிதி இந்த நான்கு அமைச்சகங்களுக்கும் ஒதுக்கப்பட்டது, இந்த ஆண்டு வெறும் 1.72 விழுக்காடே ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியானது கடந்த ஆண்டின் பட்ஜெட் ஒதுக்கீட்டை விட 0.06 விழுக்காடும், திருத்தப்பட்ட ஒதுக்கீட்டை விட 0.02 விழுக்காடும் குறைவு. அதாவது, பொருளாதார நெருக்கடியில் நாடு இருக்கும் பொழுதிலும், நாட்டின் ஒடுக்கப்பட்டோரான தலித்துக்கள், பெண்கள் ஆதிவாசிகள், சிறுபான்மையினர் ஆகியோருக்காக ஒதுக்கப்பட்ட நிதி குறைக்கப்பட்டுள்ளது.
நிதியறிக்கை தலைப்பு | 2018-19 செலவீனம் | 2019-20 நிதியறிக்கை ஒதுக்கீடு | 2019-20 திருத்தப்பட்ட ஒதுக்கீடு | 2020-21 நிதியறிக்கை ஒதுக்கீடு |
பட்டியல் சாதியினர் நலத்திட்டங்கள் | 5.82 | 6.76 | 6.69 | 7.11 |
பழங்குடியினர் நலத்திட்டங்கள் | 3.95 | 4.40 | 4.52 | 4.58 |
சிறுபான்மையினர் நலத்திட்டங்கள் | 0.38 | 0.39 | 0.43 | 0.43 |
பாலின நிதியறிக்கை | 12.33 | 11.39 | 13.10 | 12.24 |
பிற பாதிப்படையக்கூடிய குழுவினருக்கான நலத்திட்டங்கள் | 0.95 | 0.60 | 0.68 | 0.72 |
செய்த செலவு – பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் திருத்தப்பட்ட மதிப்பீடு ஆகியவற்றை காட்டும் அட்டவணை
மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின் படி, 2020-21 ஆம் ஆண்டு நலத்திட்டங்களுக்காக செலவிடப்பட்ட மொத்த நிதியில், நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு 25.08 விழுக்காடே ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2018-19 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மொத்த செலவை விட வெறும் 1.64 விழுக்காடு மட்டுமே அதிகம். அதேபோல், 2019-20ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை விட 1.54 விழுக்காடு மட்டுமே அதிகம். ஆனால், இந்த ஆண்டின் மொத்த செலவு கடந்த ஆண்டின் திருத்தப்பட்ட செலவுகளை விட 7.4 விழுக்காடு அதிகரித்துள்ளது. நிதியறிக்கையின் மொத்த செலவு 7.4 விழுக்காடு உயரும் போது, மக்கள் நலனுக்கான திட்டங்களுக்கு செய்யப்படும் செலவு மட்டும் 1.54 விழுக்காடுதான் உயர்கிறது.
நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்த வேளையில் மக்களின் சிக்கலைத் தீர்ப்பதில் இந்த அரசுக்கு துளியும் அக்கறை இல்லை என்பதையே இது காட்டுகிறது. இந்த சமூகக் குழுக்களின் மேம்பாட்டுக்காக திட்டமிட்டு செலவிடல்களை மேற்கொள்வதற்கு பதிலாக, இந்த அரசு தற்போதுள்ள முதலாளித்துவ அமைப்பிற்குள் நிலவி வரும் சமூக மற்றும் பொருளாதார ஒடுக்குமுறைகளுக்கு பாராமுகம் காட்டி வருகிறது.
மேற்குறிப்பிட்ட தகவல்கள், சமூக ரீதியாக ஒடுக்கப்படும் பெரும் பகுதியினர் பொருளாதார ரீதியாகவும் கைவிடப்படுகிறார்கள் என்பதை நமக்கு தெளிவுபடுத்துகின்றன. இந்தச் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் பொருளாதாரக் கொள்கை பார்ப்பனீயத்தோடும், ஆணாதிக்கத்தோடும் வசதியாக கைகோர்த்துக்கொண்டு பெண்கள், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினரைக் குறிவைக்கிறது. இவர்கள் மீது ஏவப்படும் சமூக மற்றும் அரசியல் ரீதியான வன்முறைகளும், பாஜக அரசின் அரசியல் நகர்வுகளுமே இதற்கு சாட்சி. சமீபத்தில், போராடும் முஸ்லிம்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரப்பிரதேச அரசு பிறப்பித்த உத்தரவையோ அல்லது முசாபர்நகரில் முஸ்லிம்களின் சொத்துக்கள் அடித்து நொறுக்கப்பட்டதையோ எடுத்துக்கொள்ளலாம். இவை அனைத்தும், வீரியமான ஒரு இந்துத்துவ பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான திட்டமிட்ட முயற்சிகள். மேலும், 2002இல் குஜராத் தாக்குதல்களில், முஸ்லீம்கள் மற்றும் தலித்துகள் மீதான பொருளாதாரத் தாக்குதலும் பெரும் பங்காற்றியதை இதோடு நினைத்துப் பார்க்க வேண்டும்.
இந்த அதிர்ச்சியூட்டும் குறியீடுகள்தான் நமக்கு “சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா, விஷ்வாஸ்” எனும் பளபளக்கும் கோஷங்களுக்குப் பின்னால் இருக்கும் சமூக மற்றும் அரசியல் நிதர்சனத்தை சுட்டிக்காட்டுகின்றன. பொருளாதாரக் கொள்கைக்கும், வலதுசாரி இந்துத்துவத்தின் வெறி அரசியலுக்கும் இருக்கும் மோசமான உறவினை முகமூடியைக் கிழித்து அம்பலமாக்க வேண்டும். இது சமூக ரீதியில் அனைவரையும் ஒருங்கிணைக்கும், உழைக்கும் மக்களின் ஒற்றுமையால்தான் சாத்தியம்.
Leave a Reply