ச.லெனின்
பெண்கள் பிரச்சினைகள் குறித்து தோழர் லெனின் என்னுடன் அவ்வப்போது பேசுவார். கம்யூனிஸ்டுகளின் கொள்கையை வகுப்பதற்கு பெண்களுக்கான சமூக சமத்துவம் என்பது அவசியமானதாகும். இதுகுறித்து 1920ஆம் ஆண்டு கிரெம்ளினில் லெனினுடன் ஒரு நீண்ட உரையாடல் நடந்தது.
அப்போது லெனின் “ஒரு தெளிவான தத்துவார்த்த அடித்தளத்துடன் வலுவானதொரு சர்வதேச பெண்கள் இயக்கத்தை கட்டியமைக்க வேண்டும். மார்க்சிய தத்துவமின்றி ஒரு நல்ல நடைமுறை இல்லை என்பது தெளிவு. இப்பிரச்சினையில் கம்யூனிஸ்டுகளுக்கு கொள்கை ரீதியான சரியான தெளிவு தேவை. இதில் நமக்கும், இதர கட்சிகளுக்கும் கூர்மையான வித்தியாசம் அவசியம் இருக்க வேண்டும்” என்று கூறினார்.
“பெண்கள் மத்தியில் கம்யூனிஸ்டுகளின் பணி குறித்த ஒரு முன்மொழிவை உருவாக்குங்கள். உங்கள் மனத்தில் என்ன மாதிரியான முன்மொழிவுகள் உள்ளன?” என்று லெனின் என்னிடம் வினவினார். நான் ஒரு சுருக்கமான வரைவை அவரிடம் கூறினேன்.
அதற்கு “பெண்களுக்கான உண்மையான சுதந்திரம் என்பது கம்யூனிசத்தால் மட்டுமே சாத்தியம் என்பதை உங்கள் அறிக்கை தெளிவாக முன்வைக்க வேண்டும். உற்பத்தி சாதனங்கள் மீதான தனிச் சொத்துடைமைக்கும் சமூகத்தில் பெண்களின் கீழான நிலைக்கும் பிரிக்கமுடியாத தொடர்பு உள்ளது என்பதை வலுவாக வெளிக்கொணர வேண்டும். அதுவே நமக்கும் மற்ற பெண்ணியவாதத்திற்கும் இடையே தவிர்க்கமுடியாத, தெளிவான ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும்.
தொழிலாளர்களுடைய பிரச்சினைகளின் ஒரு பகுதியான பெண்களின் பிரச்சினைகள் குறித்த அடிப்படையை இது வழங்கும். அதுவே தொழிலாளிகளின் வர்க்க போராட்டத்தினையும் புரட்சியையும் உறுதியாக பிணைக்கும்.
பரந்துபட்ட மக்களுடைய இயக்கத்தின் ஒரு பகுதியாக விளங்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பெண்கள் இயக்கம் பெரியதொரு மக்கள் திரள் இயக்கமாக இருக்க வேண்டும். இதில் தொழிலாளி வர்க்கத்தினர் மட்டுமின்றி முதலாளித்துவம் உள்ளிட்ட ஆதிக்க அமைப்புகளால் சுரண்டப்பட்டும், ஒடுக்கப்பட்டும் பாதிப்புக்குள்ளான அனைவரையும் இணைக்க வேண்டும். அதுவே தொழிலாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும், கம்யூனிச சமூகம் அமைவதற்கான வரலாற்று கடமையை ஆற்றுவதற்கும் முக்கியமானதாகும்.
கட்சியிலும், கம்யூனிஸ்ட் அகிலத்திலும் புரட்சிகர பெண் போராளிகள் பூத்துக் குலுங்குகிறார்கள் என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் அது போதுமானதல்ல. கிராமங்களிலும் நகரங்களிலும் உள்ள கோடிக்கணக்கான உழைக்கும் பெண்களை நாம் வென்றெடுக்க வேண்டும். நமது போராட்டக் களத்திற்கு வென்றெடுப்பதோடு, கம்யூனிசத்தை நோக்கிய சமூக மாறுதலுக்கான பணியிலும் அவர்களை இணைத்திட வேண்டும். ஒரு உண்மையான வெகுஜன இயக்கமென்பது பெண்கள் இன்றி சாத்தியமில்லை” என்றார் லெனின்.
சோவியத் ரஷ்யா பெண்களுக்கான கோரிக்கைகளை புதிய வெளிச்சத்தில் பார்க்கிறது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் அக்கோரிக்கைகள் என்பது பாட்டாளிகளுக்கும் முதலாளி வர்க்கத்திற்கும் இடையே நடக்கும் போராட்டம் போன்றதல்ல. அவை கம்யூனிச சமூக அமைப்பின் ஒரு பகுதியாகும். அது மற்ற நாடுகளில் உள்ள பெண்களுக்கு பாட்டாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டியதன் தீர்க்கமான முக்கியத்துவத்தை உணர்த்தும். மற்றவர்களுக்கும் நமக்குமான வித்தியாசம் தெளிவாக எடுத்துரைக்கப்பட வேண்டும். அப்போதுதான் பெண்கள் பாட்டாளிவர்க்கத்தின் புரட்சிகரமான வர்க்கப்போராட்டத்தில் இணைவார்கள். சரியான புரிதலுடன் கூடிய கொள்கை மற்றும் ஸ்தாபன அடித்தளத்தோடு பெண்களை திரட்டுவதே கம்யூனிஸ்ட் கட்சிகளின் வெற்றிக்கு அவசியமானதாகும்.
கம்யூனிச சிந்தனைகள் அல்லாத பழைய உளவியல்கள் அனைத்தையும் கடந்து முன்னேறும் வேலையை தொழிற்சங்கங்கள், கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டவை ஒருங்கிணைத்து பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசின் கீழ் செய்து முடிக்கும். இங்கு எந்த பழைமைவாதத்தையும் அது விட்டு வைக்காது. எங்கும் சமத்துவத்தை நடைமுறைக்கு கொண்டுவரும் உண்மையான ஆவல் மேலெழும் தன்மை காணப்படுகிறது. நாம் சட்ட ரீதியாகவும், அரசுமுறையிலும் பெண்களை சமூக பொருளாதாரத்தில் இணைக்கிறோம். அவர்களின் தொழில் முறை மற்றும் சமூக திறன்களை வளர்க்கும் நோக்கோடு அனைத்து கல்வி நிலையங்களும் அவர்களுக்காக திறந்திருக்கிறது.
அனைவருக்கும் பொதுவான சமையல், பொது உணவு உட்கொள்ளும் நிலையம், பொது துணி துவைக்கும் மையம், குழந்தைகள் காப்பகம், அனைத்து குழந்தைகளுக்குமான கல்வி நிலையங்கள் எல்லாம் அமைக்கப்படுகிறது. சுருக்கமாக சொல்வதெனில், பொருளாதார மற்றும் கல்வியியல் நடவடிக்கைகளை குடும்ப பொறுப்புகளில் இருந்து சமூக பொறுப்பாக மாற்றுகிறோம். இது பழைய வீட்டு வெளிகளில் இருந்தும், ஆணை சார்ந்திருக்க வேண்டும் என்ற நிலையிலிருந்தும், பெண்களை விடுவிக்கும். மற்றவற்றை சார்ந்திருக்கும் நிலையிலிருந்து பெண்களை இது விடுவிப்பதோடு அவர்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் உதவிடும். வீட்டில் வளர்வதை விட குழந்தைகள் மேம்பட்ட நிலையில் இங்கு வளர்வார்கள். பெண் தொழிலாளர்களுக்கான முன்னேறிய பாதுகாப்பு நிறைந்த சட்டங்கள் இங்கு உள்ளது. மகப்பேறு மருத்துவமனைகளும், குழந்தைகள் வளர்ப்பு வழிமுறைகளும் இன்னபிற தாய் சேய் நல நடவடிக்கைகளும் சிறந்த முறையில் உருவாக்கப்படுகிறது. வேலை இல்லாத, வேலை வழங்கப்படாத பெண்களின் நலன் குறித்தும் கூடுதல் அக்கறை செலுத்தப்படுகிறது.
பெண்களின் உண்மையான விடுதலைக்கு இவையெல்லாம் போதுமென்று நாங்கள் கருதவில்லை. உழைக்கும் பெண்களின் தேவைகளோடு ஒப்பிடுகையில் இவை போதுமானதல்ல. ஆனபோதும் ஜார் ஆட்சியின் கீழ் இருந்த முதலாளித்துவ நிலைமைகளை விட இது மேலும் முன்னேறிய ஒரு நிலையே ஆகும். முதலாளித்துவ நாடுகளுடன் ஒப்பிடுகையில் இவை மிகப்பெரிய விஷயமாகும். இது சரியான பயணத்தின் நல்லதொரு துவக்கமாகும். நாம் மேலும் முன்னேறிச் செல்வோம். பெண்களின் பங்களிப்பு இல்லாமல் சோவியத் அரசின் நிலைத்தன்மை சாத்தியம் இல்லை என்பதை அனுபவம் நிரூபித்து வருகிறது.
Leave a Reply