சுபாஷினி அலி
சித்தாந்தங்கள் – நாம் சிந்திக்கும், விளங்கிக் கொள்ளும் வழிகள் – எங்கிருந்தோ திடீரென முளைப்பதில்லை. அவை நம் சூழ்நிலைகளின், வரலாற்று-சமூக உண்மை நிலைகளில் இருந்துதான் விளைகின்றன. நாம் முக்கியமாக புரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால், ஒன்று, அவை சுரண்டல் நிறைந்த சமூக-பொருளாதார அமைப்பை வலுப்படுத்தவும் நிலையானதாக ஆக்கவும் உருவாக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு, பரப்பப்படுகின்றன; அல்லது அவை சுரண்டல் நிறைந்த சமூக-பொருளாதார அமைப்பை தூக்கி எறிவதற்காக உருவாக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு, பரப்பப்படுகின்றன.
இந்த கட்டுரை எண்ணிலடங்கா வேறுபாடுகளைக் கொண்ட பிற்போக்கான சித்தாந்தங்களை அலசுகிறது – ஆனால் அவற்றிற்கிடையே ஓர் ஒற்றுமை உள்ளது – அவை அனைத்தும் சுரண்டல் நிறைந்த ஓர் அமைப்பை நியாயப்படுத்தி, ஒப்புக்கொள்ளச் செய்து, வலுப்படுத்தி, நிலையானதாக்க முனைகின்றன.
வரலாற்றுப் போக்கில் சமூக பொருளாதார அமைப்புகள் பல முக்கியமான மாற்றங்களை காண்கின்றன. ஆனால், அவற்றையும் தாண்டி, பல காலங்களுக்கு முன் தோன்றிய, ஆண்டான்-அடிமை காலம் அல்லது ண் அடிமை காலத்தில் தோன்றிய பல பிற்போக்கான சித்தாந்தங்கள், சற்றே மறு-உருவாக்கம் செய்யப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு, சீரமைக்கப்பட்டு, நவீன சுரண்டல் முறைகளான முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் போன்றவற்றை வலுப்படுத்த இன்றும் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன. ஏனென்றால், பண்பாட்டோடு ஒன்றிப்போன பிற்போக்கான சித்தாந்தங்களுக்கு, அவற்றோடு பிணைந்திருக்கும் பலதரப்பட்ட சுரண்டப்படும் மக்களிடையே ஒப்புதல் அதிகமாக இருக்கும். இதனால்தான், சுரண்டுபவர்கள் பிற்போக்கான சித்தாந்தங்களை ஊக்குவித்து பயனடைகின்றனர்.
தனிச்சொத்து தோற்றம்
ஆணாதிக்கம்தான் இவற்றுள் பெரும்பாலும் மிகவும் பழமையான சித்தாந்தம். எங்கெல்ஸ் தன்னுடைய ஆதாரப் படைப்பான “குடும்பம், தனிச்சொத்து, அரசு” என்ற நூலில் ஆழமாக விளக்கியது போல், பல பண்டைய சமூகங்களிலும், தனிச்சொத்து தோன்றுவதற்கு முன்பு, பெண்கள் குழந்தை பெறுவோராக சமூகத்தில் மிகவும் உயர்ந்த நிலையில் வைக்கப்பட்டனர். வேளாண்மை வளர வளர, தனிச்சொத்து எனும் கருத்து தோன்றி முக்கியத்துவம் பெறத் துவங்கியது. பொதுவாக, வேளாண்மையில் ஈடுபட்டு, அவற்றின் கருவிகளுக்கும் பின்னர் நிலத்திற்கும் சொந்தக்காரர்களாக ஆண்களே இருந்ததால், அவர்களின் சமூக நிலை உயர்ந்து, பெண்களின் சமூக நிலை பல மாற்றங்களைக் கண்டது.
தனிச்சொத்து தோன்றியதும்,அவை கைமாற்றப்படும் வாரிசுகளின் அதிகாரப்பூர்வ தன்மையை உறுதி செய்யும் ஆசையும் உருவானது. இது குடும்ப உறவுகளை முற்றிலும் மாற்றியது. பெண்கள் இல்லங்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டு, அவர்களின் சுதந்திரம் ஒடுக்கப்பட்டது. பலவிதமான வன்முறைகள் மூலமாகவும், அதனுடனே பெண்களின் கற்பு நிலையின் முக்கியத்துவம், அடிபணிதலின் நல்லொழுக்கம், ஆண்களுக்கு அடிமையாகப் பணிபுரிவதன் முக்கியத்துவம் ஆகியவற்றை வலியுறுத்திய “பண்பாடுகள்” பரிணமித்ததன் மூலமும்தான் இது சாத்தியமாகியிருக்கக் கூடும். எங்கெல்ஸ், குடும்ப வாழ்வில் பெண்கள் மீது ஆண்கள் செலுத்திய ஆதிக்கமே வர்க்கப் போராட்டத்தின் முதல் வடிவம் என்றார். அவர், “தாய் உரிமை தூக்கி எறியப்பட்டதே பெண் பாலினத்தின் உலக வரலாற்று வீழ்ச்சி. இல்லத்தின் அதிகாரத்தை ஆண் எடுத்துக் கொண்டான்; பெண்கள் தரம் தாழ்த்தப்பட்டு, அடிமைப்பணிக்கு தள்ளப்பட்டனர்; அவள் அவனின் இச்சையை தீர்க்கும் அடிமையாகவும், குழந்தைகளை உற்பத்தி செய்யும் எந்திரமாகவும் மாற்றப்பட்டாள். பெண்களின் தரம் தாழ்ந்த நிலை… காலப்போக்கில் மட்டுப்படுத்தப்பட்டு, சாயம்பூசப்பட்டு, சாந்தமான வடிவத்தின் போர்வை போர்த்தப்பட்டதே ஒழிய, எந்த வகையிலும் அது முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை” என்று எழுதினார் (எங்கெல்ஸ், குடும்பம், தனிச்சொத்து, அரசு).
இந்த ஆதிக்கம், உலகின் பல சமூகங்களில் காணப்படும் பலவிதமான ஆணாதிக்க பழக்க வழக்கங்களால் வலியுறுத்தப்பட்டு, வலுவூட்டப்பட்டது.
மதங்களின் சித்தாந்த செயல்பாடு
மதங்களை, அவற்றிலிருக்கும் ஆன்மீகக் கூறுகளை தவிர்த்து விட்டுப் பார்த்தோமானால், பிற்போக்கான சித்தாந்தங்களுடன் அதிக தொடர்பு உள்ளது. ஆணாதிக்கத்தையும், படிநிலைகளையும், அடிமைகள் உட்பட அனைத்து தனிச்சொத்துக்களையும் அவை ஆதரிக்கின்றன. தருமம் செய்வதை அவை ஆதரித்தாலும், தருமச்சேவை என்ற சிந்தனையே, நிவாரணத் தேவை கொண்ட ஓர் ஏற்றத்தாழ்வு நிறைந்த சமூகம் நிலவுவதைத்தான் குறிக்கிறது. பெரும்பாலான மதங்கள் முடியாட்சியை ஒரு சரியான ஆட்சி முறையாகக் குறிப்பிடுவதோடு, அந்த மதத்தை பின்பற்றுவோரிடையே ஒழுக்கத்தையும் அடிபணிதலையும் ஊக்குவிக்கின்றது. ஆட்சியாளர்கள் உபரி மதிப்பை அபகரித்துக்கொள்ளும் ஏற்பாடு மத அமைப்புகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாக இருந்ததால், அது அவர்களால் மேலும் ஊக்குவிக்கப்பட்டது.
கிறித்துவம் போன்ற சில மதங்களின் தோற்றத்தின் பின்னணியில் சுரண்டலாட்சிகளுக்கு எதிரான போராட்டங்கள் இருந்தன என்பது உண்மைதான். தொடக்க கால கிறித்துவர்கள் இரகசிய குழுக்கள் துவங்கி, அதன் மூலம் தங்களின் மதத்தையும், ரோமானிய பேரரசுக்கு எதிரான கருத்துக்களையும் பரப்பினார்கள். ஆனால் அவர்களின் எண்ணிக்கை வளர்ந்து, பெரும் செல்வம் படைத்த குழுக்களும் கிறித்துவர்களாக மாற மாற, இந்த எதிர்ப்பு நிலை மாறி, இறுதியில் ரோமானிய பேரரசரே கிறித்துவராக மாறி, கிறித்துவம் ரோமானிய பேரரசின் அதிகாரப்பூர்வமான மதமாக மாறிப்போனது. அது ஒடுக்கப்பட்டவர்களின் மதமாக இருந்ததிலிருந்து விடுபட்டு, பின் ஐரோப்பாவில், ஆளும் வர்க்கத்தின் நலனை ஊக்குவிக்கும் சித்தாந்தமாக, அரசர்கள், உயர் குடியினர், வணிகர்கள், பிற்காலத்தில் முதலாளி வர்க்கம், பின் ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் காலனிய ஆதிக்கவாதிகளின் நலனை காக்கும் சித்தாந்தமாக மாறியது.
இஸ்லாமிய மதமும் இது போன்றே விரைவான மாற்றங்களைக் கண்டது. துவக்க காலத்தில் எளிய, ஏழை அரேபிய நாடோடிகளாக இருந்த அதன் அடியார்கள், பின்னர் மிகக் குறுகிய காலத்திற்குள்ளேயே ஏராளமான செல்வங்களையும் நிலங்களையும் கையகப்படுத்திய அடக்குமுறையாளர்களாக மாறினார்.
இந்தியாவில், கி.மு.-வின் இறுதி நூற்றாண்டுகளிலும், கி.பி.-யின் துவக்க நூற்றாண்டுகளிலும், பார்ப்பனீயம், அதிக பகுத்தறிவுத் தன்மையும் சமத்துவத்தன்மையும் கொண்ட பௌத்தம், சமணம் போன்ற சித்தாந்தங்களின் சவாலை சந்திக்க நேர்ந்தது. இந்த தருணத்தில்தான் மனு ஸ்ம்ரிதி (மனு நீதி) எழுதப்பட்டது. அது பார்ப்பனீயத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்டவும், வர்ணாசிரம தர்மத்தின் (சாதிய முறையின்) அடிப்படையிலான சமூக கட்டமைப்பை நாட்டின் பல பகுதிகளில் திணிக்கவும் வழிவகுத்தது. மனிதன் அறிந்த வேறெந்த மத-சமூக அமைப்பும் பார்ப்பனீயத்தை காட்டிலும் அதிகளவு ஏற்றத்தாழ்வையும், ஆணாதிக்கத்தையும், சுரண்டலையும் ஊக்குவிப்பதில்லை.
இந்த பிற்போக்கு சித்தாந்தங்கள் அனைத்தும் மனித வரலாற்றின் வெவ்வேறு கால கட்டங்களில், வெவ்வேறு சுரண்டல் முறைகள் திகழ்ந்திருந்தபோது தோன்றியவை. இவை பண்டைய வரலாற்றில் நிலச் சொத்து வளர்ந்து வந்த ஆண்டான்-அடிமை காலத்தில் தோன்றினாலும், மன்னராட்சியும் கொடுங்கோலாட்சியும் பண்ணை அடிமை முறையும் இருந்த காலத்தில் தோன்றினாலும், அல்லது பின் வணிகவியமும் முதலாளித்துவமும் காலனிய ஆதிக்கம் அல்லது ஏகாதிபத்தியத்தின் காலத்தில் தோன்றினாலும், இந்த பிற்போக்கான சிந்தனைகள், அவை தோன்றிய, அவற்றை வலுப்படுத்திய சமூக அமைப்புகள் உதிர்ந்து போனாலும் மறைந்துவிடவில்லை. இதன் காரணம், இந்தச் சித்தாந்தங்கள் இந்தச் சமூகங்களைத் தோற்றுவித்து, ஆதிக்கம் செலுத்திய மக்களின் மனதில் வேரூன்றி பதிந்திருந்ததது. அவை ஏற்றத்தாழ்வையும், சுரண்டலையும் ஊக்குவித்தபொழுதும், “மதம்”, “பண்பாடு”, “நல்லொழுக்கம்” போன்ற பெயர்களால் அவை ஊட்டப்பட்ட காரணத்தால், அவை ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட மக்கள் உட்பட, அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பெரும் செல்வாக்கு செலுத்தின. இதன் காரணமாக, எந்த ஆளும் வர்க்கம் முன்பிருந்த சுரண்டும் வர்க்கத்தை தூக்கி எறிந்து விட்டு ஆட்சிக்கு வந்தாலும், அது இந்த சித்தாந்தங்களை ஊக்குவித்தன. அவை மாற்றமடைந்து மறு-உருவாக்கம் கண்டாலும், அவற்றின் முக்கிய கூறுகளை தக்கவைத்துக் கொண்டன.
மதங்கள் ஏற்றுக்கொள்ளும் படிநிலைகளும், சுரண்டலும், அந்த மதத்தைப் பின்பற்றும் பெரும்பாலான மக்கள் சுரண்டப்படுபவர்களாக இருந்தபோதிலும், அவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. வெவ்வேறு சமூகங்களிலும், வெவ்வேறு சமூக அமைப்பு மற்றும் சுரண்டல் முறைகளின் வளர்ச்சிப் போக்கில், பல்லாயிரக்கணக்கான வேறுபாடுகளுடன் ஆணாதிக்க மற்றும் மத சித்தாந்தங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஆதிக்க மதங்களுக்கு உள்ளேயே, மூடநம்பிக்கைகளை எதிர்க்கும் வேறுபாடுகளோ, அல்லது மதத் தலைவர்கள் மத்தியில் நிலவும் சீர்கேடுகளை எதிர்க்கும் வேறுபாடுகளோ, அல்லது இரண்டையும் எதிர்க்கும் வேறுபாடுகளோ கூட வளர்ந்தன.
சீர்திருத்த இயக்கங்கள்
கிறித்தவப் பிரிவான பிராட்டஸ்டண்ட்வாதம் அல்லது சீர்திருத்தவாதம் இதன் சிறந்த எடுத்துக்காட்டு. இந்த வேறுபாடுகள், மத அமைப்பிலும், உயர் குடிகளின் சமூக நிலையிலும் மாற்றங்களை ஏற்படுத்தின. இந்த வேறுபாடுகள், வரலாற்றுப் போக்கில் காலாவதியாகிப்போன பண்டைய சமூக-பொருளாதார முறையிலிருந்து புதிய சமூக-பொருளாதார அமைப்பு பிறப்பெடுக்கும் தருவாயில், அந்த மாற்றத்தின் ஊடே சமூகத்தில் தேவையான ஓரளவு ஜனநாயகத் தன்மையையும், பகுத்தறிவு சிந்தனைகளையும் வளர்த்தன. இந்த சீர்திருத்த இயக்கங்கள் ஒரு வர்க்க ஆட்சியை தூக்கி எறிந்து வேறொரு வர்க்க ஆட்சியை நிலைநாட்ட உதவின. புதிதாக வந்த உற்பத்தி சக்திகள் பெரும் மாற்றங்களை கொண்டு வந்தாலும், சுரண்டலற்ற சமூகம் உருவாக்குவதற்கான சூழல் ஏற்படாத காரணத்தால், சுரண்டல் நிலை மட்டும் மாறாமல் தொடர்ந்தன.
இதன் காரணமாக, இந்த சீர்திருத்தவாத சித்தாந்தங்களும் ஆணாதிக்கத்தையும் படிநிலைகளையும் தொடர்ந்து ஊக்குவித்தன. சில மாற்றங்கள் இருந்த போதிலும், அடிப்படையில் இருக்கும் ஆண்-பெண் இடையேயான ஏற்றத்தாழ்வுகளும், சுரண்டப்படும் அனைத்து ஆண்கள், பெண்களின் சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் தொடர்ந்து நீடித்தன.
கடந்த 150 ஆண்டுகள் அசாதாரணமான மாற்றங்களை கண்டுள்ளன. வளர்ந்த நாடுகளில், தொழில்துறை மூலதனம் அதன் வருகையோடு கூடவே பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதற்கான சந்தைகளின் தவிர்க்க முடியாத தேவையால் மிக குறுகிய காலத்திலேயே உலகின் பல நாடுகளையும் காலனிய ஆதிக்கத்தின் அடியில் கொண்டு வந்தது. பல இடங்களில், பல சமூக அமைப்புகளும் கிழித்தெறியப்பட்டு, பல்லாயிரக்கணக்கான மக்கள் கடுமையான சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்டனர். இந்த சுரண்டல் காலனிய நாடுகளில் மட்டும் நிகழவில்லை. காலனிய ஆதிக்கவாதிகளின் நாடுகளிலும், தொழிற்சங்க போராட்டங்களும், அரசியல் ஜனநாயகத்துவமும், சட்ட சீர்திருத்தங்களும் இருந்த போதும், சுரண்டலின் அளவு குறையவில்லை.
ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களும், வெற்றிகரமான தேசிய விடுதலைப் போராட்டங்களும் நிகழ்த்த போதிலும், வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் நிலவும் சுரண்டலும், வளரும் நாடுகளின் மக்களையும் வளங்களையும் சுரண்டுவதும் அதிகரித்துள்ளது. இன்றைக்குப் பரலவாக உணரப்பட்டுள்ள, பல்வேறு சமூகங்களுக்கு உள்ளும், சமூகங்களுக்கு இடையேயும் அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வுகள் இந்த உண்மையை நிரூபிக்கின்றன.
சோசலிச முகாமின் வீழ்ச்சிக்குப் பின், ஏகாதிபத்தியம் கட்டுக்கடங்காத உலகச் சூறையாடலில் ஈடுபட்டு வருகிறது. ஏகாதிபத்திய நாடுகளால் வளரும் நாடுகளின் மேல் திணிக்கப்படும் நவீன தாராளமயக் கொள்கைகள் மூலம், சந்தைகள் எளிதில் கையகப்படுத்தப்பட்டு ஆதார வளங்கள் கொடிய பேராசையோடு அழிக்கப்பட்டு வருகின்றன. இன்று வளரும் நாடுகளிடமிருந்து வளர்ந்த முதலாளித்துவ நாடுகள் வளங்களை சூறையாடுவது காலனிய ஆதிக்க காலத்தை விட மோசமான அளவில் உள்ளது. அதே நேரத்தில், வளர்ந்த முதலாளித்துவ உலகில், பலதரப்பட்ட மக்கள் வறுமையையும், வேலையின்மையையும், வாழ்க்கைத் தரத்தில் பெருமளவு சரிவையும் சந்தித்து வருகின்றனர்.
கலச்சாரப் படைப்புகள்
இந்த நிலையின் வளர்ச்சியோடு, சித்தாந்த தளத்தில் பின்-நவீனத்துவம் மற்றும் அதனோடு இணைந்த அடையாள அரசியல் போன்ற கட்டமைப்புகள் வளர்ந்துள்ளன. இன்று, வளர்ந்த முதலாளித்துவ நாடுகள் அதீத அறிவுசார் மற்றும் கலாச்சார தாக்கத்தை சர்வதேச அளவில் செலுத்துகின்றன என்பதை நாம் நினைவில் கொள்வது அவசியம். சினிமா, அச்சு ஊடகம் போன்ற பல கலாச்சார கூறுகளும் முதலாளித்துவ அமைப்புகளின் படைப்பாகவே உள்ளன. மேற்கத்திய சினிமா, புத்தகங்கள், பத்திரிக்கைகள், காமிக்ஸ்கள் போன்றவை உலக அளவில் பெரும் செல்வாக்கு செலுத்துவதால், அவை ஏற்றத்தாழ்வு, சுரண்டல், படிநிலை போன்றவற்றை ஊக்குவிக்கும் பிற்போக்கான சித்தாந்தங்களை நாசூக்காக பரப்பும் சக்திவாய்ந்த கருவிகளாக திகழ்கின்றன. முதலாளித்துவத்தில் அநேக குறைபாடுகள் இருப்பினும், முதலாளித்துவத்தின் ஆதிக்கத்தை தூக்கிப் பிடிப்பதில் இந்த கலாச்சார படைப்புகள் முக்கிய பங்காற்றுகின்றன. மேற்கத்திய நாடுகளின் உயர் கல்விக்கான நிறுவனங்களின் தாக்கமும் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. அவை உலகின் சிறந்த அறிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமான இடமாக அமைகின்றன. அதே சமயத்தில், அவை அறிவுசார் படைப்புகளிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன. மேற்கத்திய நாடுகளின் பல்கலைக்கழகங்கள், சுதந்திரத் தீவுகளாக தோன்றினாலும், அவை வெவ்வேறு அளவில் கார்ப்பரேட்டுகளாலும், அரசினாலும், அவற்றின் மறைமுகமான தேவைகளுக்காக கட்டுப்படுத்தப்பட்டே வருகின்றன.
ஆகையால், பின்-நவீனத்துவம், அடையாள அரசியல் போன்ற சித்தாந்தங்கள் மேற்கத்திய நாடுகளின் பல்கலைக்கழகங்களில் தோன்றியது தற்செயலானது அல்ல. இன்று அந்த கோட்பாடுகள், ஒரு காலத்தில் இடதுசாரி அறிஞர்கள் என்று மதிக்கப்பட்ட கல்வியாளர்கள் உட்பட, பல கல்வியாளர்கள் மத்தியிலும் ஏற்புடையதாக மாறிவிட்டது. இதன் விளைவாக, இந்த சித்தாந்தங்கள் கல்வி தளத்தில் மட்டுமின்றி, சமூக ஆர்வலர்கள், தொண்டார்வ நிறுவனங்கள், அரசியல் அமைப்புகள் போன்ற தளங்களிலும் தாக்கம் செலுத்தும் அளவு வளர்ந்துவிட்டன.
பின்நவீனத்துவம்
சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர், மார்க்சிய சிந்தனைகளுக்கு எதிரான பிரச்சாரங்களும், குறிப்பாக வர்க்கப் போராட்டம் என்ற கருத்துக்கு எதிரான பிரச்சாரங்களும் கடுமையாக வலுத்துள்ளது. சுரண்டப்படுவோரின் கூட்டுச் சக்தி, சர்ச்சைக்குரிய பிளவுவாத போக்கினால் தாக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது; இந்த பிளவுவாத போக்கிற்கு பின்-நவீனத்துவமும், அடையாள அரசியலும் பெரும் பங்காற்றியுள்ளது.
சுருக்கமாக சொன்னால், பின்-நவீனத்துவம் என்பது எது ஒன்றன் “முழுமையான” உண்மையையும் புரிந்து கொள்வது சாத்தியமில்லை என்கிறது. அதன்படி, பலதரப்பட்ட சமூகங்களில் உள்ள மக்களின் வழக்கங்களின், பண்பாடுகளின், நம்பிக்கைகளின் அடிப்படியில் சரியான பழக்கங்களும் தவறான பழக்கங்களும் நிர்ணயிக்கப்படுவதால், சரி எது தவறு எது என்ற முடிவு எடுப்பது சாத்தியமில்லை. இந்த கருத்தாடலின் விளைவாக, பின்-நவீனத்துவவாதிகளின் கருத்தில், ஒரு நிகழ்வைக் குறித்த புரிதல், அந்த நிகழ்வை பிளவுபடுத்தி, அந்த நிகழ்வின் துண்டுகளின் புரிதலாக மட்டுமே இருக்க முடியும். அதே போல், சமூகத்தை குறித்த புரிதல், அதன் துண்டுகள் குறித்த புரிதலாக மட்டுமே இருக்க முடியும்.
இதன் மூலம் எவ்வாறு அடையாள அரசியல் பின்-நவீனத்துவதிலிருந்து பிறந்தது என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். இங்கே நாம் புரிந்து கொள்ள வேண்டியது, அடையாள அரசியல் என்பது ஒரு அடையாளத்தின் உணர்வு என்பதிலிருந்தது முற்றிலும் வேறுபட்டது. உதாரணமாக, உழைக்கும் வர்க்க அடையாளத்தை, சமூகத்தின் மேலும் மேலும் அதிக பிரிவு மக்கள் தழுவுவது என்பது ஒரு மாற்றத்தை நோக்கிய அடி. அதே போல், பல்வேறு பிரிவைச் சேர்ந்த பெண்களும் தங்களின் விடுதலைக்கான ஒன்றிணைந்த போராட்டத்தின் அடிப்படியில் பாலின அடையாளத்திற்கான உணர்வை அடைவதும் ஒரு முற்போக்கான வளர்ச்சி.
ஆனால், அடையாள அரசியல், சுரண்டப்படும் மக்களிடையே ஒற்றுமையை வளர்க்காமல், அவர்களை இன, உள்-இன அடிப்படையில் துண்டுகளாக பிளவுபடுத்துகிறது. அடிப்படையில், வர்க்க உணர்வை முற்றிலுமாக அழிக்க முனைந்து, வர்க்கம் என்ற சமூகக் கூறு இருப்பதையே மறுக்கின்றது. இதன் விளைவாக, சிறு குழுக்கள், அவர்களின் வர்க்கத்தையே சேர்ந்த வேறு சிறு குழுக்களால் சுரண்டப்பட்டு, ஒடுக்கப்படுவது போல் சிந்தித்துக்கொள்கின்றன. இது போன்ற உக்கிரமான உணர்வு, அனைத்து பிரிவினரின் உழைக்கும் வர்க்கத்தையும் உண்மையான சுரண்டும் வர்க்கத்தினருக்கு எதிரான ஒன்றிணைந்த போராட்டங்களின் சாத்தியக்கூறுகளை பாதிப்பதோடு அழிக்கவும் செய்கிறது. பல்வேறு குழுக்களையும், சமூகங்களையும் சேர்ந்த உழைக்கும் வர்க்க மக்கள் அனைவரும், ஒருவருக்கொருவர் இடையேயான பாரபட்சமான புரிதலுக்கு இரையாகாமல், அவர்கள் அனைவரும் ஒரே சுரண்டல் முறையால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து, அதற்கெதிராக ஒன்றிணைவதே அவர்கள் தங்களது விடுதலையை தேடிக்கொள்ளும் பாதையின் முதல் படி.
இந்திய நிலை
இந்த நவீன பிற்போக்கு சித்தாந்தங்கள் ஆணாதிக்கத்தை பல்வேறு வகைகளில் வலுவூட்ட, ஆணாதிக்க வழக்கங்களுக்கு ‘பண்பாடு’ என்ற பெயரில் புதிய மதிப்புத்தன்மை அளிக்கப்பட்டு வருகின்றன (இதற்கு எடுத்துக்காட்டு, சில இந்திய பின்-நவீனத்துவ சமூக அறிவியலாளர்கள் ‘சதி’ எனும் உடன்கட்டை ஏறுதல் முறைக்கு அளிக்கும் ஆதரவு). பல சமுதாயங்களில், ஆணாதிக்க பழக்கங்கள் “சமுதாயத்தின் ஒற்றுமை” என்ற பெயரில் எதிர்க்கப்படுவதில்லை.
ஒன்றிணைந்த மகளிர் இயக்கங்களை அடையாள அரசியல் பாதிப்பதை நாம் நம் அனுபவங்களிலிருந்து பார்த்துள்ளோம். துவக்கத்தில், பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டிற்கான கோரிக்கையில் இயக்கம் ஒற்றுமையாக இருந்தது. முதலாளித்துவ கட்சிகள், தங்களின் ஆணாதிக்க சிந்தனையால், ஒன்றிணைந்து இந்த கோரிக்கையை எதிர்த்தனர். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின பெண்களின் குரலாக பேசுவதாகக் கூறிக்கொண்ட சில மகளிர் அமைப்பினர், இந்த இட ஒதுக்கீடு கோரிக்கைக்குள் சாதி-வாரி, மத-வாரி இட ஒதுக்கீடு கோரிக்கையை எழுப்பியதுதான் அவர்களுக்கு பெரும் உதவியாக இருந்தது. இது போன்ற பல எடுத்துக்காட்டுகள் கொடுக்க முடியும்.
மனுவாதம்
‘மனுஸ்ம்ரிதி’ நூல் தான் இந்தியாவில் ஆணாதிக்கத்திற்கும், சமூக படிநிலைகளுக்கும் ஆணிவேராக இருக்கும் ‘புனிதமான’, பண்டைய எழுத்து. புனித நூலாகக் கருதி, அதற்கு முழுமையாக அடிபணிய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த நூல், மிகவும் கடுமையான பாலின, சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை போற்றிப் பறைசாற்றுகின்றது. பெண்களும் ஆண்களும் வெவ்வேறு சமுதாயத்தில் பிறந்து, அவர்களின் தொழில்கள் அவர்களுக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதால், இயற்கையிலேயே ஏற்றத்தாழ்வு தவிர்க்க முடியாதது; நிரந்தரமானது என்ற பிற்போக்கான கருத்தை இந்த நூல் தொடர்ந்து வலியுறுத்துகின்றது.
சமத்துவத்தை உறுதி செய்யும் இந்திய அரசியல் சாசனம் எழுபது ஆண்டுகளுக்கு முன் ஒப்புக்கொள்ளப்பட்ட பின்பும், இன்றும் பலரின் சிந்தனைகளையும் செயல்களையும் மனுவாதம் ஆட்டிப்படைக்கின்றது. பல பெண்களும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களும், ஏழைகளும் கூட அதன் பால் ஈர்ப்பு கொண்டுள்ளனர். மனுவாதம் படிநிலைகளை ஊக்குவித்து, அவர்களின் ஏற்றத்தாழ்வையே உறுதி செய்தாலும், அது படிநிலைகளை ஊக்குவிப்பதனால், வேறு யாரோ ஒருவரை விட உயர்ந்த சமூக நிலையில் வசிப்பதை ஒவ்வொருவருக்கும் அது உறுதி செய்வதனால், பலரும் அதன் பால் ஈர்ப்பு கொண்டுள்ளனர். மேலும், இந்த வழக்கங்களை பின்பற்றி, தன்னை விட உயர்ந்த நிலையில் உள்ளவர்களின் கட்டளைகளை ஏற்று நடந்தால், அது தானும் படிநிலையில் உயரும் வாய்ப்பை அதிகரிக்கும் என்ற ஒரு மாயையை மக்கள் மனதில் ஏற்படுத்துகின்றது. ஆனால் அதே நேரத்தில், இதற்கு முரணாக, அதே ஒடுக்கப்பட்ட மக்கள் தான் தாங்கள் சமூக பொருளாதார நிலையில் குன்றிக் கிடப்பதை எண்ணி வருந்துகின்றனர்; அந்த சமூகங்களில் உள்ள எழுச்சி மிக்க சிலர், மனுவாதமே விடுதலைக்கும் சமத்துவத்திற்கு பெரும் முட்டுக்கட்டையாக இருப்பதை உணர்கின்றனர். மாமேதை அம்பேத்கர் மகாராஷ்டிராவின் மகத் நகரில் மனுஸ்ம்ரிதி புத்தகத்தை பொது வெளியில் எரித்ததே அவரின் முதல் முக்கிய பொதுப் போராட்டச் செயல் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்திய அரசியல் சாசனம் இயற்றப்பட்ட பொழுது, அரசியல் வட்டத்தில் இரண்டே குழுக்கள் – இந்து மகாசபை மற்றும் ஆர்.எஸ்.எஸ்.- மட்டுமே அரசியல் சாசனத்தை நிராகரித்து, மனுஸ்ம்ரிதி மட்டுமே தங்களுக்கு ஏற்புடைய சட்ட நூல் என பிரகடனம் செய்தனர்.
இன்று ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள பா.ஜ.க. மத்தியிலும், பல மாநிலங்களிலும் ஆட்சி புரிகின்றது. இந்த கட்சிதான் இந்தியாவின் மத நல்லிணக்கத்தை ஒழித்து, அதை மனுஸ்ம்ரிதி சட்டங்களால் ஆளப்படும் ‘இந்து ராஷ்ட்ர’ நாடாக மாற்ற முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது.
அதன் ஐந்தாண்டு கால ஆட்சியில் உழைக்கும் மக்கள் மீதான சுரண்டல் அதிகரித்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனிதநேய மாண்புகள் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டு, இந்தியாவின் இயற்கை வளங்களான காடுகள், சுரங்கங்கள், கனிம வளங்கள் யாவும் உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கப்பட்டதில் ஆச்சரியம் இல்லை. அதன் ஆட்சியில் உழைப்பாளர்களும், விவசாயிகளும் கடும் பொருளாதார இன்னலில் தள்ளப்பட்டுள்ளனர். பட்டியல் சாதியினர், பழங்குடியினர்களுக்கு எதிரான கொடுமைகள் வரலாறு காணாத அளவை எட்டியுள்ளதோடு, பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் வடிவங்களும் நிலையும் நம்ப முடியாத, தாங்க இயலாத அளவை எட்டியுள்ளது.
தடையின்றி மனுவாத கோட்பாடுகளை அமலாக்கும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. அரசாங்கத்தின் செயல்கள், பெண்கள் இதுநாள் வரை போராடி வென்ற உரிமைகளும், அவர்களின் சமத்துவத்திற்கும், சம வாழ்வாதாரத்திற்குமான உரிமைகளும் மறைந்து போகும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்களை ஒப்பிடுகையில் பெண்களின் சமூக நிலை குறைய குறைய, பெரும் பலம் கண்டுள்ள சந்தை பொருளாதாரத்தின் லாப வீதம் அதிகரித்துக்கொண்டே போவதனால், அது மனுஸ்ம்ரிதியில் உள்ளடங்கிய ஆணாதிக்கம், பாலின பாகுபாடுகள், படிநிலை மாண்புகள் போன்றவற்றை மேலும் ஊக்குவிக்கின்றது. இந்த தரம் தாழ்தலால், பெண்களின் குடும்பங்கள் ஆண்களின் குடும்பங்களுக்கு திருமணம், பண்டிகை, சடங்குகளின் சமயத்தில் பரிசுகள் வழங்குவதே ஆண்-பெண் இடையேயான வேறுபாட்டைசீரமைக்கும் ஒரே வழி என்பது போன்ற கருத்துக்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. மேலும், ஆண் குழந்தைக்கான விருப்பத்தை ஊக்குவிப்பதினால், பாலின விகிதமும் கடுமையாக பாதிக்கப்படுகின்றது. இது மருத்துவ தொழிலில் உள்ள பல பிரிவினருக்கும் லாபத்தை பெருக்கி, பெண்களின் உரிமைகளுக்கு பெரும் தீங்கு விளைவிக்கின்றது. நம் நாட்டிலேயே, அரசியல் சாசனமும், பாலின பாகுபாட்டிற்கு எதிரான பல சட்டங்களும் இயற்றப்பட்ட பின்னும், நம் சமூகம் இன்றும் ஆணாதிக்க சித்தாந்தத்தின் இரும்புப் பிடியில்தான் உள்ளது என்ற உண்மையை நாம் அங்கீகரிக்க வேண்டும்.
தடையற்ற சுரண்டலும் லாப வெறியும் நிறைந்த இந்த நவீன தாராளமய காலத்தில், அனைத்து இடங்களிலும் ஏற்றத்தாழ்வுகள் அதிகரிப்பதோடு, இந்திய கலாச்சார நம்பிக்கைகள் மற்றும் சடங்குகளின் பெயரால் அது ஊக்குவிக்கப்படுகின்றது. ஆனால், பண்டைய இந்தியாவில் பகுத்தறிவை போற்றும் அறிவியல், கணித, சித்தாந்த முறைகளின் சாதனைகள் ஏதும் இந்த அரசாங்கத்தின் பண்டைய ‘ஹிந்து’ இந்தியாவை பற்றி புகழ் பாடும் பிரச்சாரங்களில் காண முடியாது. மேலும் கார்ப்பரேட் ஊடகங்களும் இவற்றிற்கெல்லாம் எந்த முக்கியத்துவமும் அளிக்காமல், வெறும் மூட நம்பிக்கைகளுக்கும், ஆணாதிக்க சிந்தனைகளுக்கும், பிற்போக்கான வழக்கங்களுக்கும், பெண்களின் நிலையை தரம் தாழ்த்தி, சுரண்டப்படுவோர் படிநிலைகளை ஒப்புகொள்ளச் செய்யும் அனைத்து விசயங்களுக்கு மட்டும் கவனம் அளித்து நேரம் ஒதுக்குகின்றன.
சுரண்டப்படும் மக்களில் பெண்களும், தலித் மக்களும் பெருமளவில் உள்ளனர். இரண்டு பிரிவையும் சேர்ந்த பெண்கள், நவீன தாராளமயக் கொள்கைகள் ஊக்குவிக்கும் அதீத-சுரண்டலால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அதீத லாபத்தையும், அதீத சுரண்டலையும் ஊக்குவிக்கும் இந்த அமைப்பை தக்க வைத்துக்கொள்ள அவர்களின் மலிவான உழைப்பு அவசியமாக உள்ளது. ஆணாதிக்க, படிநிலை மற்றும் சாதிய மனுவாதத்தை பரப்புவதன் மூலம் அவர்களை அடக்கி, ஒடுக்கி, கட்டுப்பாட்டில் வைத்திருப்பது சாத்தியமாகின்றது.
முதலாளித்துவம் வளர்ந்தால், பண்டைய நிலப்பிரபுத்துவ நம்பிக்கைகள் மறைந்து, மேலும் ஜனநாயக பூர்வமான சமூகம் அமையும் என்று நம்பப்பட்டது. ஆனால் நடந்ததோ அதற்கு நேர் எதிரானது. முதலாளித்துவமும், அதன் சமகால வடிவமான நவீன தாராளமயமும், பிற்போக்கான பண்பாடுகள், ஆணாதிக்க வழக்கங்கள், சாதிய முறை ஆகியவற்றை பயன்படுத்தி தன்னை வலுப்படுத்திக் கொண்டுள்ளது.
இந்த அரசாங்கத்தின் உள்நோக்கத்தை அம்பலப்படுத்தவும், மேலும் மேலும் அதிக அளவிலான பெண்களையும், ஜனநாயக சக்திகளையும் ஒன்று திரட்டவும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மனுஸ்ம்ரிதியின் நிலைபாட்டை படித்து, அறிந்து, பலதரப்பட்ட மக்களுக்கும் பகிர வேண்டும். அது குறிப்பாக தாக்கும் பிரிவினர் அனைவரையும், அதன் கோட்பாடுகளுக்கு எதிராகவும், அது அமலாக்கப்படும் விதங்களுக்கு எதிராகவும் போராட்டத்தில் ஒன்றிணைக்க வேண்டும். அரசியல் சாசனத்தை ஆதரிப்பவர்களையும், அது உறுதியளிக்கும் சமத்துவத்திற்காக நிற்பவர்களையும் போராட்டத்தில் பங்கெடுக்க ஊக்குவிக்க வேண்டும்.
தனிச்சொத்தின் வளர்ச்சிக்கும், பெண்களின் நிலை தாழ்த்தப்படுவதற்கும் இடையேயான இணைப்பை சரியாகப் புரிந்து கொண்டு, பெண்களின் உரிமைகள், சமத்துவம், விடுதலைக்கான போராட்டத்தை சோசலிசத்திற்கான போராட்டத்தோடு ஒன்றிணைப்பது அவசியம்.
தமிழில்: அபிநவ் சூர்யா
Leave a Reply