மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


இந்தியப் பெண்கள் இயக்கத்தில் சோசலிச சிந்தனையும் செயல்பாடும்


பிருந்தா காரத்

வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கருத்தோட்டத்தை அடிப்படையாகக் கொண்டதே பெண்களின் பிரச்சனைகளுக்கான சோசலிச வகைப்பட்ட அணுகுமுறையாகும். உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி, உற்பத்திக் கருவிகளின் மீதான கட்டுப்பாடு, ஆண், பெண் மற்றும் குடும்ப நிறுவனம் ஆகியவற்றை உள்ளடக்கி பயணிக்கின்ற சமூக உறவுகளுக்கும் மனித சமூகத்தின் வளர்ச்சிக்கும் இடையிலான இயங்கியல் ரீதியான தொடர்புகளை அலசுவதாகவே அணுகுமுறை அமைகிறது.

பெண்களின் மீதான அடக்குமுறையின் வேர்களை வர்க்க சமுதாயத்தின் வளர்ச்சியில், தனியார் சொத்தின் வளர்ச்சியில்தான் காண வேண்டும் என்றும் அது கூறுகிறது. பரம்பரை உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக, பெண்களையும் ஆவர்களுடைய பாலியல் விருப்பங்களையும் அடக்குவது அவசியமாகிறது.  

இந்தியாவில், பண்டைய இந்திய தத்துவ சிந்தனைப் போகுகளானவை   பொருள்முதல்வாத ரீதியான சமூக ஆய்வின் பல்வேறு நீரோட்டங்களையும் கொண்டதாக இருந்தது எனினும் சாதிய அடிப்படையிலான படிநிலைகள் என்ற தத்துவ கட்டமைப்பைப் பின்பற்றி வந்த ஆளும் வர்க்கங்கள் மீது இரக்கமற்ற வகையில் தாக்குதல் மேற்கொண்டதன் காரணமாக அப்படியான பொருள்முதல்வாத ஆய்வுகள்  மக்களிடையே மிகவும் குறைவாகவே சென்று சேர்ந்தன.

சாதி, வர்க்க அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான சமத்துவப் பார்வை கொண்ட போராட்டங்களும், கலகங்களும் மேற்கொண்டு சவால்கள் விடுக்கும் மனிதாபிமானம் மிக்க சமூக அணுகுமுறைகளுடன் கூடிய மத வகைப்பட்ட எதிர்ப்புகளை பவுத்தர்களும், சீக்கிய குருமார்களும், சுஃபி பாரம்பரியத்தைப் பின்பற்றுவோரும், பக்தி இயக்கத்தவரும் வெளிப்படுத்தி வந்தனர். காலம் காலமாக பெண்கள் தம் சுயத்திற்காகவும், சுய உரிமைக்காகவும் அநீதிகளை எதிர்த்து, சாதி அமைப்பு உட்பட நடத்திய போராட்டங்கள் இத்தகைய சமூக சீர்திருத்த இயக்கங்களில் பிரதிபலித்தன என்பதோடு, அத்தகைய இயக்கங்களின் வரம்பை விரிவடையச் செய்வதிலும் முக்கிய பங்கு வகித்தன. பாலியல் வன்முறை, சுரண்டல், ஒடுக்குமுறை ஆகியவற்றின் கொடூரங்களுக்கு எதிரான இந்தப் போராட்ட மரபுகள், வெவ்வேறு துறைகளில்,  வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பெண்களின் கூட்டானதும், தனிப்பட்டதுமான கிளர்ச்சிகள் நமது வரலாற்றின் பகுதியாகவே இருந்து வருகின்றன.

ஆங்கிலேய காலனியாதிக்கத்திற்கு எதிரான விடுதலைப் போராட்டம் பெண்களின் இத்தகைய போராட்ட வரலாற்றில் தர அடிப்படையில் முற்றிலும் புதியதொரு அத்தியாயத்தைக் கொண்டு வந்தது. லட்சக்கணக்கான பெண்கள் காந்தியால் உந்துதல் பெற்றனர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தின் மையமாக இல்லாவிட்டாலும் அதன் உள்ளாகவாவது பெண்களை கொண்டுவர வேண்டும் என இதுவரை கண்டிராத வகையில் அவர் (காந்தி) மேற்கொண்ட உணர்வுப் பூர்வமான முயற்சிகள் ‘நல்ல’ பெண்மணிகளின் இடம் வீட்டின் நான்கு சுவர்களுக்கு உள்ளேதான் என்ற நடைமுறையை, ஆணாதிக்க சிந்தனைகளை தலைகீழாகப் புரட்டிப் போட்டன. இரண்டாவதாக, பெருந்திரளாக இந்தப் போராட்டங்களில் பெண்களின் பங்கேற்பானது அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனைகள் குறித்த விரிவான ஆய்வுமுறையுடன் கூடிய, சமத்துவத்திற்கும் விடுதலைக்குமான, பெண்களுக்கே உரித்தான போராட்டங்களோடு கேந்திரமான வகையில் தொடர்புடைய எதிர்கால இயக்கங்களுக்கான கட்டமைப்பையும் உருவாக்கியது.

இந்த வரலாற்றுப் பின்னணியில், இதற்கு இணையான வகையில் ஜார் மன்னனின் கொடுங்கோலாட்சியில் சிக்கித் திணறி வந்த ருஷ்யாவில் ஒரு சோசலிசப் புரட்சியை நடத்தி, உலகின் முதல் தொழிலாளர் அரசை நிறுவிய சோசலிசப் புரட்சியினால் கவரப்பட்டு சோசலிச சிந்தனை மற்றும் செயல்பாடு ஆகியவற்றை மேற்கொள்ளும் மற்றொரு நீரோட்டம் உருப்பெற்றது. இந்தியாவுக்குள்ளேயே நேரு முதல் சுபாஷ் சந்திரபோஸ் – பகத்சிங் வரை, ரவீந்திரநாத் தாகூர் முதல் பிரேம்சந்த் வரை, சரோஜினி நாயுடு முதல் கல்பனா தத் வரை பலவிதமான சுதந்திரப் போராளிகளும் சோசலிசத்தின், சோவியத்  ஒன்றியத்தின் மகத்தான தொடக்கபகால சாதனைகளால் ஈர்க்கப்பட்டு அதை தங்கள் எழுத்துக்களிலும், சுதந்திரப் போராட்டத்திற்குள் செய்த பணிகளிலும் வெளிப்படுத்தி வந்தனர். உண்மையில் இந்தியாவில், சோசலிசத்திற்கும், சோசலிச இலக்குகளுக்கும்  பொதுவான வரவேற்பு இருந்தது. அப்போதுதான் வளர்ந்துகொண்டிருந்த  சோவியத் அரசாங்கம், தன்னை அழிக்கத் தீர்மானித்த ஏகாதிபத்திய சக்திகளால் சூழப்பட்டிருந்த நிலையிலும், இந்தியாவின் ஆங்கிலேய காலனியாதிக்க எதிர்ப்பு போராட்டத்திறு வழங்கிய உறுதியான ஆதரவும் இதற்குக் காரணம் ஆகும்.

சோசலிச சிந்தனையினால் கவரப்பட்டு செயலில் இறங்கிய பல்வேறு அரசியல் நீரோட்டங்களைப் பற்றி நான் இங்கு பேசப் போவதில்லை. மாறாக ஆங்கிலேய ஆட்சியிடமிருந்து இந்தியாவை விடுவித்து ஒரு சோசலிச அரசை உருவாக்க வேண்டும் என்ற இலக்கோடு ஒரு கம்யூனிஸ்ட் கட்சியாகத் தங்களை அணிதிரட்டிக் கொண்டவர்களைப் பற்றி மட்டுமே பேசப் போகிறேன். 1920ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டுத் தருணத்தை இப்போது கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அதன் தொடக்க நாட்களிலிருந்து இன்றுவரை, இந்தியப் பின்னணியில், சோசலிசக் கருத்தோட்டம் என்ற கட்டமைப்பிற்குள் மிகவும் முழுமையான புரிதலைக் கொண்ட பெண் விடுதலைக்கான போராட்டங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை, இன்னும் சொல்லப்போனால், முன்னேற்றத்தை நாம் கண்ணுற்று வருகிறோம்.

எதிரிகளில் பலரும், நம் மக்களை நம்பவைக்க முயல்வதைப் போல் இந்தச் சோசலிச சிந்தனை ஒன்றும் உறைந்து போன தத்துவம் அல்ல என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். இந்திய சமூகத்தின் வளர்ச்சியில் கட்டமைப்பு ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் ஏற்படும் வெளிப்படையான மாற்றங்களின் பின்னணியில் அதன் வரம்பு தொடர்ந்து விரிவடைந்து கொண்டே வருகிறது. ஊரக இந்தியா உள்ளிட்டு, பழங்குடிகள் வாழும் தொலைதூரப் பகுதிகள் உள்ளிட்டு, அனைத்துப் பகுதிகளிலும் துறைகளிலும் முதலாளித்துவத்தின் ஊடுருவலும் விரிவாக்கமும், சில நேரங்களில் கண்ணுக்குத் தெரிந்த, வேறு சில நேரங்களில் கண்ணுக்குப் புலப்படாத பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ள அதன் நவதாராளமய காலகட்டமானது அதற்கேயுரிய வகையில் பெண்களின் போராட்டங்களின்மீதும், அதன் திசைவழி மற்றும் நடைமுறை உத்திகளின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இஎம்எஸ் நம்பூதிரிபாட், பி.டி. ரணதிவே, கோதாவரி பருலேகர், விமலா ரணதிவே, கனக் முகர்  போன்ற பல மார்க்சிய சிந்தனையாளர்களும் செயல்பாட்டாளர்களும் இத்தகைய முன்னேற்றங்களுக்கு கணிசமான அளவில் பங்களிப்பு செய்துள்ளனர்.

நான் இங்கே கவனப்படுத்த விரும்புகிற விசயங்கள் பின்வருமாறு:

பெண் விடுதலையின் பிரிக்க இயலாத பகுதியாகிய முதலாளித்துவ எதிர்ப்பு நோக்கில், பெண்களின் வர்க்க அடிப்படையிலான அணிதிரட்டல் என்ற முக்கியமான விசயம்; இரண்டாவதாக பெண்களின் குடி உரிமை பிரச்சனைகள், இன்னும் குறிப்பாகச் சொல்லவேண்டுமெனில், சாதிய அமைப்பை நொறுக்குவதற்கான போராட்டம்; மூன்றாவதாக, பாரம்பரியமான கருத்தோட்டங்கள், மத அடிப்படையிலான கட்டுப்பாடுகள் மற்றும் தற்போது ஊடுருவியுள்ள முதலாளித்துவ கலாச்சாரம் ஆகிய, பெண்களுக்கு எதிரான வன்முறையை அனுமதிக்கும் ஒரு சில அம்சங்கள்.

1929ஆம் ஆண்டில் அப்போதுதான் தலையெடுத்து வந்து கொண்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மேல்மட்டத் தலைவர்கள் மீது மீரட் சதி வழக்கை சுமத்தி ஆங்கிலேய ஆட்சி கட்சியை நசுக்கி அழிக்க முற்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த, எவ்வித ஆவணங்களையும் தேடி எடுக்க முடியாத நிலையில் இருந்த இந்தக் கைதிகள் தங்கள் தரப்பு வாதத்தை எடுத்துக்கூறும் வகையில் தாங்கள் நம்பிக்கை வைத்திருந்த அரசியல் குறித்த ஓர் ‘பொது அறிக்கை’யை தயார் செய்தனர். அந்த அறிக்கை கீழ்க்கண்ட வகையில் அமைந்திருந்தது:  “அரசுத் தரப்பு எழுப்பியிருந்த முக்கியமான அரசியல் கேள்விகள் அனைத்திற்கும் கம்யூனிஸ்டுகளின் பார்வையிலிருந்து நாங்கள் பதிலளிக்க விரும்புகிறோம். இந்தக் குற்றச்சாட்டுகளில் ‘குடும்பம், பெண்கள்’ மீதான சோசலிச அணுகுமுறை குறித்த குற்றச்சாட்டுகளும் அடங்கும்.”  இந்த கம்யூனிஸ்ட் குழுவினர் இந்தப் பிரச்சனை குறித்து வெளியிட்ட முதல் அறிக்கை இதுவாகத்தான் இருக்கும். அவற்றில் சிலவற்றை இங்கு எடுத்துக் கூறுவது பொருத்தமாகவும் இருக்கும்.

“குடும்பத்தையே எப்போதும் சுற்றியிருக்கும் உணர்வு சுரண்டலுக்கான ஒரு வழியாகவே எப்போதும் பயன்படுத்தப்படுகிறது. பெண்களையும் குழந்தைகளும் சுரண்டுவதற்காகவே குடும்பத்தைப் பயன்படுத்துவது சோசலிசத்தின் கீழ்தான் முடிவுக்கு வரும் என்று நாங்கள் உறுதிபடக் கூறுகிறோம்.” பெண்களின் அந்தஸ்து என்பது வழிவழியாகவே ஆண்களை விட தரம் குறைந்த ஒன்றாகவும், ஒரு சில நேரங்களில் உண்மையில் அடிமைத்தனமாகவுமே இருந்து வருகிறது. சோவியத் யூனியனில் தற்போது நிகழ்ந்து வரும் பெண்களின் விடுதலை போன்ற ஒன்றுதான் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய வழியாகும்… பெண்களை அடிமைப்படுத்துவதும் அவர்களைச் சுரண்டுவதும் மனித குலத்தின் பெரும்பான்மையான மக்களின் – ஆண்களும் அதில் அடங்குவர் – மீதான அடிமைத்தனம், சுரண்டல் ஆகியவற்றின் ஒரு பகுதியே ஆகும். எனவே இதை வர்க்க அடிப்படையில்தான் தீர்க்க வேண்டுமே தவிர, பாலின அடிப்படையில் அல்ல…”

“பாலின அடிப்படையில் அல்ல; வர்க்க அடிப்படையில்” என்ற இறுதி வாக்கியம் பற்றி பின்னர் குறிப்பிடுகிறேன். இங்கு சுட்டப்பட வேண்டியது என்னவெனில், தொடக்க நாட்களிலும் கூட, இந்தியாவில் நிலவிய சோசலிசத் தன்மை கொண்ட சிந்தனையில் மூன்று அம்சங்கள் உள்ளடங்கி இருந்தன. (1) தொழிலாளிகள்- விவசாயிகள் என்ற வகையில் பெண்கள் மீதான சுரண்டல் பற்றி வலியுறுத்துவது. (2) தற்போதுள்ள குடும்ப அமைப்பின் ஆணாதிக்க கட்டமைப்பை விமர்சிப்பது. (3) சாதி அமைப்பிற்கு சவால் விடுவது; அதை எதிர்த்துப் போராடுவது.

வர்க்க ஆய்வும் வர்க்க அடிப்படையில் பெண்களை அணிதிரட்டுதலும்

பெண்கள் சமூகரீதியாக ஒன்றுதிரட்டப்பட்ட ஒரு குழுவினர் என சோசலிச கருத்தாக்கம் கருதுவதில்லை. முதலாளித்துவ சமூகமானது சுரண்டுவோர், சுரண்டப்படுவோர் என்று வர்க்கங்களாகப் பிளவுபட்டுள்ளது. இருப்பவர், இல்லாதோர் என்ற நிலையானது பெண்களையும் பிளவுபடுத்தி உள்ளது. முதலாளித்துவத்திற்கு எதிராகவும், முதலாளித்துவம் வளர்த்தெடுக்கின்ற கலாச்சாரங்களுக்கு எதிராகவும் போராடாமல் பெண்கள் தங்கள் விடுதலையை வென்றடைய முடியாது.

விடுதலைக்கான இயக்கத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியாக்கிரகம் போன்ற பல அணிதிரட்டல்களிலும் பெருந்திரளான பெண்கள் தங்களை இணைத்துக் கொண்டனர். அதேபோன்று, ஊதியத்திற்காகவும், நிலத்திற்காகவும், தங்கள் சமூக மேன்மைக்காகவும் பம்பாய் நெசவாலைத் தொழிலாளர்கள், ஷோலாப்பூர் பீடித் தொழிலாளர்கள், பீகார்-வங்காள மாநிலங்கள் ஆகியவற்றில் இயக்கங்கள் வெடித்தெழுந்தபோது பெண்கள் பெருமளவில் அவற்றில் அணிதிரண்டனர். இத்தகைய முக்கியமான தொழிலாளர் அணிதிரட்டல்களுக்கு அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) தலைமை தாங்கியது. 1920ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு வெகுவிரைவிலேயே கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கின் கீழ் வந்து சேர்ந்தது. பெண்களை அணிதிரட்டுபவர்களாக முதலில் வெளிப்பட்டவர்களில் ஒருவரான சந்தோஷ் தேவி ஏஐடியுசி தொடங்கப்பட்ட உடனேயே தன்னை அதில் இணைத்துக் கொண்டதோடு, வங்காளத்தில் இருந்த சணல் ஆலைத் தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தினரிடையே செயல்படத் தொடங்கினார். அதன்பிறகு முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் அகல்யா ரங்கனேகர், உஷாடாய் டாங்கே, போன்ற பலரும் இத்தகைய செயல்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். 1936ஆம் ஆண்டில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் உருவாக்கப்பட்ட பிறகு, நிலவுரிமை மற்றும் சுயமரியாதைக்கான (dignity) மாபெரும் அணிதிரட்டல்களில் பெண்களும் இணைந்து கொண்டனர். தேபகா, தெலுங்கானா, சுராமா பள்ளத்தாக்கு போராட்டங்கள் அனைத்துமே இந்த உழைக்கும் மக்களின் மகத்தான போராட்டங்கள் ஆகும். பொருளாதார, சமூக நீதிக்காக நடைபெற்ற இத்தகைய போராட்டங்களில் சமமான அளவில் பங்கேற்றது மட்டுமின்றி பல நேரங்களில் அவற்றின் தலைமைப் பொறுப்புகளிலும் பெண்கள் இருந்தனர்.

ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற, சுரண்டல், ஏற்றத்தாழ்வு ஆகியவற்றிலிருந்து விடுதலை பெற்ற ஒரு சுதந்திர இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதே அவர்களின் கனவாக இருந்தது. இந்தப் போராட்டங்களில் பங்கேற்ற பெண்கள், குறிப்பாக பெண்களை அணிதிரட்டும் பொறுப்பில் இருந்தவர்கள், சோசலிச உணர்வு கொண்டவர்களாக இருந்தனர். பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற பெண்களுக்குக் கிடைத்த குடும்ப ரீதியான ஆதரவு, சமூக அந்தஸ்து ஆகியவை இவர்களுக்குக் கிட்டவில்லை. எதற்கும் தளர்ந்து போகாத இந்தப் பெண் புரட்சியாளர்கள் சமூக விதிமுறைகளை எல்லாம் மீறியே சோசலிசப் பதாகையை உயர்த்திப் பிடிக்க முன்னணிக்கு வந்தனர். ஆங்கிலேய ஆட்சியின் பெரும்பான்மை காலத்திற்கு வெளிப்படையாக இயங்க தடை விதிக்கப்பட்டே இருந்த ஓர் அரசியல் கட்சிக்குள் இருந்துகொண்டு அவர்கள் செயல்பட்டனர். பெண்கள் மேற்கொண்ட வர்க்க ரீதியான நடவடிக்கைகள் அப்போது நிலவிவந்த சமூக விதிமுறைகளுக்கு சவால் விடுவதாகவே இருந்தன. வர்க்க, சமூக கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும்போது இது ஆணாதிக்க கலாச்சாரத்திற்கு விடப்பட்ட இரட்டைச் சவாலாகவே இருந்தது.

1945ஆம் ஆண்டில் மகாராஷ்ட்ராவில் தானே பகுதியில் உள்ள ஓர்லி ஆதிவாசிகளிடையே செயல்படத் தொடங்கிய கோதாவரி பருலேகரின் அனுபவங்கள் இந்த அம்சத்தை மிகத் தெளிவாகவே எடுத்துக் காட்டுகின்றன. நிலப்பிரபுக்களின் கொடூரமான சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற ஆதிவாசி பெண்கள், தங்களுக்கும் தங்களை அடக்கி ஆளுவோருக்கும் இடையிலான சமூக உறவுகளை அந்தப் போராட்டம் மாற்றி அமைத்ததை சரியாகவே விளங்கிக்கொண்டார்கள். மேலும் கூட்டுச் செயல்பாட்டின் வலிமை, அவர்கள் அதுவரை எதிர்கொண்டு வந்த மிகக் கொடூரமான, திட்டமிட்ட பாலியல் வன்முறைக்கு எதிராகப் பேசுவதற்கும் உத்வேகம் கொடுத்தது.

‘வர்க்கத்திற்கு உள்ளேயே’ ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான உறவுகளுக்கும் சவால்கள் எழுப்பப்பட்டன. இந்தச் சவால்களை தூண்டி விட்டவர்கள் பெண்களே. தெலங்கானா விவசாயிகளின் ஆயுதப் போரில் பங்கேற்றவர்கள் எழுதிய பதிவுகள் பலவற்றில் இதுபோன்ற பிரச்சனைகள் இடம்பெற்றுள்ளன. குடும்பங்களுக்குள் அப்போது நிலவி வந்த சமன் நிலை (equation) குறித்துப் பெண்கள் கேள்வி எழுப்பினர். தங்கள் ‘துணைவர்கள்’ ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்காத நிலையில் (பெற்றோரால்) ‘ஏற்பாடு செய்யப்பட்ட’ திருமணங்களை முடிவுக்குக் கொண்டுவரும் முடிவையும் எடுத்தார்கள். தன் எழுத்துக்கள் பலவற்றிலும் இதுபோன்ற பல உதாரணங்கள் பலவற்றை பி. சுந்தரய்யா எடுத்துக் கூறியுள்ளார். மேலும், இப்படியான கேள்விகள் எழுவதை போராட்டங்களில் பங்குபெற்ற ஆண்கள் விரும்பவில்லை என்பதையும் விவரிக்கிறார். கணவன் – மனைவி ஆகிய இருவருமே இயக்கத்தில் ஈடுபட்ட நிலையில் வீட்டு வேலைகளை  பகிர்ந்து கொள்வது பற்றிய கேள்விகளையும் பெண்கள் எழுப்பினார்கள். ஆண்களும் பெண்களும் இணைந்து நடத்திய இயக்கங்களுக்கு உள்ளேயே பெண்களுக்கான சமத்துவம், சுதந்திரம் ஆகியவற்றுக்கான இயக்கத்தையும் இணைத்தே முன்னெடுத்த, ஆண்களைப் போன்றே சம அளவில் சோசலிச கருத்துக்களை உள்வாங்கியிருந்த பெண்களுக்கு ஆய்வாளர்கள் சம அளவில் முக்கியத்துவம் தருவதே பொருத்தமானதாக இருக்கும். அந்த வகையில் சோசலிச கருத்துக்களை ஏற்ற பெண்கள் இயக்கத்திற்கு உள்ளேயே முன்னோடியான பங்கினை வகித்தனர்; இன்றும் வகித்து வருகின்றனர்.

அவ்வகையில், உழைக்கும் வர்க்கங்களையும் உள்ளிட்டு அன்று பாலின அடிப்படையில் பெண்கள் தரம் குறைந்தவர்கள் என்பதாக நிலவிய விதிமுறைகளை எதிர்த்துப் போராடுவதில் இதுபோன்ற வர்க்கப் போராட்டங்களும் கூட எவ்வாறு மாறும் தன்மை கொண்டவையாக இருந்தன என்ற அனுபவம் இல்லாதவர்களாகவே தொடக்க கால கம்யூனிஸ்டுகள் சிந்தித்தார்கள் என்பதையே “பாலின அடிப்படையில் அல்ல; வர்க்க அடிப்படையில்” என்ற கருத்து வெளிப்படுத்துகிறது. இத்தகைய முழுமையற்ற பார்வையைப் பிரதிபலிப்பதாகவே அவர்களின் அன்றைய அறிக்கை இருந்தது.

பல பத்தாண்டுகளுக்குப் பிறகு, தொழிற்சங்க இயக்கத்திற்கு உள்ளேயே உழைக்கும் பெண்களின் குழுக்களையும், மேடைகளையும் வளர்த்தெடுப்பதில் முன்னோடியாக விளங்கிய பி.டி. ரணதிவேயும் தொடக்க காலங்களில் இயக்கத்திற்குள் பெருமளவு எதிர்ப்பை சந்திக்க நேர்ந்தது. அப்போது அவர் கூறிய புகழ்பெற்ற வாக்கியம் இதுதான்: “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்! என்று மார்க்ஸ் அறைகூவல் விடுத்தபோது ஆண் தொழிலாளர்களை மட்டுமே அவர் குறிப்பிடவில்லை.” வேறு வார்த்தைகளில் கூறுவதெனில் முதலாளித்துவ அமைப்பிற்கு எதிரான இந்தப் போராட்டத்தின் அடித்தளம் வர்க்க அடிப்படையிலானது என்பதைப் போலவே அதே அளவிற்கு சமமான வகையில் பாலின அடிப்படையிலானதும் கூட.

ஆனால் சமூக கட்டமைப்பை புரிந்துகொள்ள அடிப்படையாக வர்க்கம் பற்றிய ஆய்வுப்பார்வை உள்ளதை மறுப்பவர்கள் “பாலினத்தை வர்க்கத்திற்குள் அடக்கி விடுகிறார்கள்” என கம்யூனிஸ்டுகள் மீது குறை கூறுகிறார்கள். வர்க்க அடிப்படையிலான இயக்கங்களுக்கு உள்ளே ஆணாதிக்க நடைமுறைகளை எதிர்க்கும் வகையில் பெண்கள் தொடங்கி வைக்கும் இயக்கமானது பெண்களின் விடுதலைக்கான போராட்டத்தின் மீது சாதகமான, விரிவான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை அவர்கள் அங்கீகரிப்பதும் இல்லை; பாராட்டுவதும் இல்லை. உண்மையில்,  சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்துடன் இணைந்த வர்க்க கண்ணோட்டம் என்ற கூட்டணியானது இன்று சோசலிச சிந்தனைப் போக்கினுள் மிகப்பெரும் சக்தியாக உருப்பெற்றிருக்கிறது. சோசலிச சிந்தனையுடன் செயல்பட்ட பெண்களின் முயற்சிகளாலேயே இது நடந்தது எனச் சொல்வது சற்றும் மிகையில்லை.

வெறித்தனமாகச் செயல்பட்டு வரும் முதலாளித்துவம், ஏழை உழைக்கும் பிரிவைச் சேர்ந்த இந்தியப் பெண்களை சமூகத்தின் ஓரத்திற்கு விரட்டி அடிக்கும் இன்றைய சூழலில், கடந்த 40 ஆண்டுகளில் காணாத மிக  அதிகமான வேலையின்மை பெண்களிடையே நிலவி வரும் சூழ்நிலையில், ஒப்பந்தக் கூலி முறை, வீட்டிலிருந்தே வேலை செய்வது, விருப்பம்போல் வேலை செய்வது போன்ற பல்வேறு புதிய வழிகளில் பெண்களின் உழைப்பைச் சுரண்டி உபரியைக் கவர்ந்து செல்லும் வர்க்கச் சுரண்டலுக்கு எதிராக அவர்களை அணிதிரட்டுவதன் அவசியத்தை அதிகரித்துள்ளது. இடம்பெயர்தல், கொடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக எத்தகைய தரக்குறைவான வேலையையும் செய்வதற்கு சம்மதிப்பது ஆகியவை முக்கிய பிரச்சனைகள் ஆகும். இந்தியாவில் உள்ள பெண்களின் அந்தஸ்து மேலும் மேலும் மோசமாகிக் கொண்டே வருவதை மாற்றவும், அதை எதிர்த்துப் போராடவும் இன்றைய இயக்கங்கள் ஒவ்வொன்றுமே முன் நிற்பது அவசியமாகும்.

பெண்கள் மீதான ஒடுக்குமுறையின் வர்க்க ரீதியான அம்சங்கள்

வர்க்கம்-பாலினம் பற்றிய இந்த விவாதம் இந்தியப் பின்னணியில் அமைந்த சோசலிச ஆய்வுக் கண்ணோட்டத்தின் மிக முக்கியமானதொரு பகுதியைப் புறக்கணிக்கிறது. பல்வேறு நிலைகளில் இருந்தாலும் அனைத்து வர்க்கங்களையும் சார்ந்த பெண்களின் மீது தாக்கம் செலுத்தும் ஆண் மேலாதிக்கத்தை வலியுறுத்துகின்ற தத்துவங்களுக்கு எதிரான போராட்டம்தான் அவ்வாறு புறக்கணிக்கும் பகுதியாகும்.

இந்தியாவில் பெண்களின் நிலை குறித்து 1975-ல் வெளியான  முக்கியமான கட்டுரையில் இந்தியாவில் பெண்கள் எதிர்கொள்கின்ற பல்வேறு வகையான சுரண்டல், ஒடுக்குமுறை என்ற அடிப்படைப் பிரச்சனையை தோழர் இ எம் எஸ் எழுப்பியிருந்தார். பெண்களின் இந்த நிலையின் வர்க்கரீதியான மற்றும் பல்வேறு வர்க்கங்களையும் உள்ளடக்கிய அம்சங்கள் என அவர் விரிவாக வகைப்படுத்தி இருந்தார். சுரண்டப்படும் உழைக்கும் வர்க்கங்களின் ஓர் உறுப்பினர் என்ற வகையில் ஒரு பெண் இருவகையான சுரண்டலை எதிர்கொள்கிறார். ஒன்று சுரண்டப்படும் வர்க்கத்தின் ஓர் உறுப்பினர் என்ற வகையிலும், ஆணாதிக்க மதிப்பீடுகள் மேலாதிக்கம் செலுத்தும் ஒரு முதலாளித்துவ சமூகத்திற்குள் வசிக்கும் ஒரு பெண் என்ற வகையிலும் அந்தச் சுரண்டல் அமைகிறது. எனினும் பெண்கள் என்ற வகையில் பொதுவாகவே வர்க்க வேறுபாடுகளுக்கு அப்பால் தங்கள் சொந்த சமூகத் தளங்களில் பாரபட்சமான அணுகுமுறையை அவர்கள் எதிர்கொள்ள நேர்வதுடன் சமூக ரீதியாகவும் தனிப்பட்ட வகையிலும் வன்முறையை சந்திக்க நேரிடுகிறது. நாட்டின் குடிமகள் என்ற வகையிலும் கூட தனிப்பட்ட சுதந்திரம் உள்ளிட்டு பல்வேறு அளவுகளில் பாரபட்சமான அணுகுமுறைகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

ஜனநாயக உரிமைகள், அரசியல் அமைப்புச் சட்டத்தின் மதிப்பீடுகளை பாதுகாப்பது போன்ற விரிவான அம்சங்களோடு தொடர்புடையதாக பெண்கள் சமத்துவம் குறித்த பிரச்சனைகள் அமைகின்றன. ஒரு குடும்பத்திற்கு உள்ளான உறவுகளும், குடும்பங்களுக்கு இடையிலான உறவுகளும் இவற்றில் அடங்கும். இந்திய சமூகத்திற்கான மாற்று வழியைப் பற்றிப் பேசும்போது மார்க்சிஸ்ட் கட்சியின் திட்ட அடிப்படையிலான புரிதலில் “குடும்ப உறவுகளை ஜனநாயகப்படுத்துவது” என்ற முக்கியமானதொரு விதியும் உள்ளடங்கி உள்ளது  குறிப்பிடத்தக்கதாகும்.

இத்தகைய அணுகுமுறையானது சோசலிச அணுகுமுறையை ஏற்றுக்கொண்ட, அல்லது அதை ஏற்காத பல்வேறு வகையான அமைப்புகளுடன் கூட்டாகவும் ஒன்றுபட்டும் இயக்கங்களை நடத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

இந்தியாவில் அவசரநிலைக் காலத்திற்கு பின் எழுந்த பேரெழுச்சியைத் தொடர்ந்து உருவான எண்ணற்ற சுயேட்சையான பெண்கள் குழுக்கள் ஒரு கருத்தை முன்வைத்தார்கள். “பெண்களின் பிரச்சனைகள் பற்றி மட்டுமே பேசுவது; இதில் அரசியல் எதுவும் கூடாது!” என்றதுடன் சோசலிச கருத்தோட்டங்களை “ஆணாதிக்க மனோபாவம் கொண்டவை” என வெறுப்போடு நோக்கினார்கள். இவர்களுக்கெல்லாம் முன்பாகவே இ.எம்.எஸ் தனது கருத்தை எழுதி வந்துள்ளார். அவரது முக்கியமான தலையீடு என்பது இடதுசாரி இயக்கங்களில் எழுந்த விவாதங்களிலும் ஏற்பட்ட மாற்றங்களிலும் பிரதிபலித்தது. பெண்களை அணிதிரட்டும்போது ‘வர்க்கம்’ மட்டுமே அதற்கான அடிப்படையாக இருக்க வேண்டும் என்று நம்பும் ஒரு போக்கு நிலவிய அதேநேரத்தில் ‘வர்க்கரீதியான’ அணிதிரட்டல்கள் என்பவை தொழிற்சங்கங்களுக்கு மட்டுமேயானதாக இருக்க வேண்டும் என்று நம்பிய மற்றொரு போக்கும் நிலவியது. இ.எம்.எஸ், தனது சாதி சமூகத்திற்குள் பெண்களுக்கு எதிராக நிலவிய ஒடுக்குமுறை பாரம்பரியங்களின் விதிகளை எதிர்த்து தொடக்க நாட்களில் ஆற்றிய பணிகளை அடிப்படையாகக் கொண்டு அவருடைய ஆய்வு அமைந்திருந்தது. இடதுசாரிகளுக்கு உள்ளேயே முழுமையான புரிதலைக் கொண்டுவருவதற்கான விவாதத்தை வடிவமைப்பதில் அவரின் இந்த அனுபவம் முக்கியமான பங்கினை வகித்தது. 

பல பத்தாண்டுகளுக்கு முன்பாகவே, பல்வேறு மட்டங்களிலும் பெண்கள் எதிர்கொள்ளும் சுரண்டல், ஒடுக்குமுறை ஆகியவற்றை உணர்ந்த வகையில் இஎம்எஸ் அவர்களால் விரித்துரைக்கப்பட்ட இந்த அணுகுமுறையானது வலுவானதொரு இயக்கத்தை வளர்த்தெடுக்க உதவும் நடைமுறை உத்தியையும் கொண்டதாக அமைந்திருந்தது இன்றைக்கும் பொருத்தமானதாக உள்ளது. குறுகிய, விசமத்தனமான மனுதர்ம சிந்தனைகளையும் செயல்முறைகளையும் வைத்துக் கொண்டு தாக்குதல்களை மேற்கொண்டுவரும் ஆட்சியாளர்களை எதிர்கொள்கிற இன்றைய நாளுக்கும் இது மேலும் பொருந்துவதாகும்.

சாதி: பெண் விடுதலைக்கு மிகப்பெரும் தடை

சோசலிச சிந்தனையாளர்களைப் பொறுத்தவரையில் இந்தியாவில் நிலவி வரும் சாதி, சாதிய அமைப்பு என்பது பெரிதும் வெறுக்கத்தக்க ஒன்றாகவே உள்ளது. 1930ஆம் ஆண்டிலேயே ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகவும், விடுதலைக்காகவும் ஆன போராட்டம் குறித்த திட்டரீதியான கண்ணோட்டம் எனப்படும் தன் செயல்பாட்டு மேடையின் மூலமாக கம்யூனிஸ்ட் கட்சியானது சாதிய அமைப்பை முற்றிலுமாக அழித்தொழிக்க வேண்டும் என அறைகூவல் விடுத்தது. இத்தகைய அறைகூவலை விடுத்த முதல் அரசியல் கட்சியும் அதுவே ஆகும்.

காந்தி தலைமையில் நடைபெற்ற தேசிய விடுதலை இயக்கம்  ‘அமைப்பிற்கு உள்ளேயே சீர்திருத்தம்’ மேற்கொள்வது பற்றி பேசி வந்தது என்பதை இங்கு நினைவு கூரலாம். தீண்டாமைக்கு எதிரான பெரும் போராளியாக இருந்த காந்தி  வர்ண (சாதி அடுக்குமுறை) அமைப்பு இயற்கையான ஒன்று எனவும் அதற்கு தவறான விளக்கம் அளித்ததன் விளைவாகவே தீண்டாமை வழக்கம் தோன்றியது என்றும் நம்பினார். 1930ஆம் ஆண்டின் செயல்பாட்டு மேடை இவ்வாறு குறிப்பிட்டிருந்தது: “ஆங்கிலேய ஆட்சி, நிலப்பிரபுத்துவ அமைப்பு, பிற்போக்குத்தனமான சாதிய முறை, மதரீதியான ஏமாற்று, கடந்த காலத்தின் அடிமை மற்றும் கொத்தடிமை பாரம்பரியங்கள் ஆகிய அனைத்துமே இந்திய மக்களின் குரல்வளையை நெறித்துக் கொண்டிருக்கின்றன என்பதோடு அவர்களின் விடுதலைக்கான பாதையிலும் குறுக்கே நிற்கின்றன. அதன் விளைவாகவே இந்த 20 ஆம் நூற்றாண்டிலும் தங்கள் சக மனிதர்களை நேருக்கு நேராகச் சந்திக்கவோ, பொதுக்கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்துப் பருகவோ, பொதுப்பள்ளிகளில் கல்வி பயிலவோ அல்லது இதுபோன்ற வேறு எந்தவிசயங்களிலும் ஈடுபடுவதற்கே உரிமையற்ற தீண்டத்தகாதவர்களாக இன்றும் நீடிக்கிறார்கள்.”

“இந்திய மக்களின் மீதான இந்த அவக்கேடான கறைகள் அனைத்திற்கும் ஒரேயடியாக முற்றுப்புள்ளி வைப்பதற்குப் பதிலாக, காந்தியும் இதர காங்கிரஸ் தலைவர்களும் சாதிக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தீண்டத்தகாதவர்களின் இருப்பை நியாயப்படுத்தியும், இதற்கு அடிப்படையாக உள்ள சாதிய அமைப்பை நிலைத்திருக்கச் செய்யவும் கோருகின்றனர். காந்திய சீர்திருத்தத்திற்கு ஆளான சாதி உள்ளிட்டு, சாதி அமைப்பினையே இறக்கமேதுமின்றி முழுமையாக அழித்தொழிப்பதன் மூலமே, விவசாயப் புரட்சியின் மூலமே, ஆங்கிலேய ஆட்சியை பலவந்தமாக தூக்கி எறிவதன் மூலமே உழைக்கும் தீண்டத்தகாதவர்கள், அடிமைகள் ஆகியோரின் சமூக, பொருளாதார, கலாச்சார, சட்டபூர்வமான விடுதலைக்கு வழிகோல முடியும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அடிமைத் தனத்தை, சாதிய அமைப்பை, சமூக, கலாச்சாரம் போன்ற அனைத்து வடிவங்களிலுமான சாதிய ஏற்றத்தாழ்வை முழுமையாக அழித்தொழிக்கப் போராடுகிறது. உழைக்கும் தீண்டத்தகாதவர்கள் மற்றும் நம் நாட்டின் அனைத்து உழைப்பாளிகளின் முழுமையான, முற்றிலுமான சமத்துவத்திற்காகப் போராடுகிறது.”

இந்துத்துவவாதிகள் சாதியை ஆதரித்துப் பேசி வந்ததை தொடர்ச்சியான பல கட்டுரைகளின் மூலம் பி.டி.ரணதிவே சுக்குநூறாக நொறுக்கினார். 1983ஆம் ஆண்டில் எழுதிய ஒரு கட்டுரையில் சாதியின் தொடர்ந்து நீடிக்கும் திறமை குறித்து அவர் ஆய்வு செய்திருந்தார். (1) முதலாளித்துவத்திற்கு முந்தைய நிலப்பிரப்புத்துவ, அரை நிலப்பிரபுத்துவ உறவுகளுக்கு உள்ளேயே சாதி தன்னை பதித்துக் கொண்டுள்ளது. இவற்றோடு சமரசம் செய்து கொண்ட நிலையில்தான் இந்தியாவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சிப் பாதை அமைந்திருந்தது. (2) தலித்துகளின் உழைப்புச் சக்தியை மேலும் அதிகமாகச் சுரண்டுவதற்கான ஒரு கருவியாகவும் சாதி பயன்படுத்தப்படுகிறது. (3) மக்களின் மீதான சாதியத்தின் தத்துவார்த்த ரீதியான ஆதிக்கம் அரசின் உதவியுடனேயே செயல்படுகிறது.

சாதிய அமைப்பிற்கு எதிரான சோசலிச கண்ணோட்டத்தை  முன்வைத்ததோடு, விடுதலைக்கான மிகப் பெரும் தடைக்கல்லாக சாதிய அமைப்பு நீடித்து வருகிறது என்றும் குறிப்பிட்டார்.

தொடக்க கால கம்யூனிஸ்டுகளின் வேலைகளில் பெரும்பாலானவை சமூக சீர்திருத்தத்திற்கும் தலித்துகளின் விடுதலைக்குமான சாதி எதிர்ப்பு போராட்டங்களுமே இருந்தன. பாபா சாஹேப் அம்பேத்கரின் வரலாற்றுச் சிறப்புமிக்க மகத் பேரணி நடைபெற்று ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு கேரளா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் சாதிய பழக்க வழக்கங்கள், சாதி அடிப்படையிலான வன்முறை ஆகியவற்றுக்கு எதிரான எண்ணற்ற போராட்டங்கள் வெடித்தெழுந்தன. இந்தப் போராட்டங்களை நடத்துவதிலும்  அவற்றில் பங்கேற்பதிலும் கம்யூனிஸ்டுகள்தான் முன்னணியில் இருந்தனர். சாதிக்கு எதிரான போராட்டங்களின் தலைவர்களாகத்தான் கம்யூனிஸ்ட் தலைவர்கள் தங்களது பொதுவாழ்க்கையைத் தொடங்கினர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எனவே, இந்து மத விதிமுறைகளில் சீர்திருத்தங்களை முன்வைத்த மசோதா மீதான விவாதம் மற்றும் போராட்டங்களின் போது, ​​சோசலிச சித்தாந்தங்களால் செல்வாக்கு பெற்றவர்கள் இந்த சீர்திருத்தத்திற்கு ஆதரவான போராட்டங்களில் முன் வரிசையில் இருந்தனர் என்பது ஒரு தர்க்கரீதியான வளர்ச்சியாகும். அந்த நாட்களில்தான் அப்போதுதான் புதிதாக உருவான இடதுசாரி நோக்குடைய பெண்களின் சங்கங்கள் இந்த விதிமுறைகள் சீர்திருத்தை எதிர்ப்போரை  நேருக்கு நேராக எதிர்கொண்டன. இந்த பெண்கள்தான் இந்த எதிர்ப்புகளைத் துணிந்து எதிர்கொண்டனர் என்பதோடு, சில சமயங்களில் உடல் ரீதியான தாக்குதல்களையும் சந்தித்தார்கள்.

அவர்கள் இதற்கென அமைக்கப்பட்ட ராவ் கமிட்டியின் முன் ஆதாரங்களை அளித்தனர். மேலும் மசோதாவுக்கு ஆதரவாக பெண்களை அணிதிரட்டினர். வெறுக்கத்தக்க நச்சு சாதி அமைப்பைப் பாதுகாப்பதாகவும், பெண்களை இழிவுபடுத்துவதாகவும் அமைந்த மத நூல்களை கேள்விக்கு உள்ளாக்கியதன் மூலம் எதிர தரப்பின் பெரும்பகுதி திரட்டப்பட்டது. சோசலிச எண்ணம் கொண்ட பெண்கள் தலைமையிலான இயக்கங்களைப் பொறுத்தவரை சாதி அமைப்புக்கு எதிரான போராட்டத்துடன் இந்து மத விதிகளை சீர்திருத்தி அமைப்பதற்கான மசோதாவுக்கான போராட்டம் பின்னிப்பிணைந்த ஒன்றாக மாறியது.

இந்த மரபை முன்னெடுத்துச் செல்வதானது, சாதி முறையை ஒழிப்பதற்கான சமகால முயற்சிகள், தலித் மக்களின் உரிமைகளுக்கான போராட்டம் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதியினரின் போராட்டம் ஆகியவை அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளை உருவாக்குவதிலும் அரசியல் துறையில் அடையாள அரசியல் பிரதிபலிக்கும் சூழலிலும், இன்றும்  நடைபெறுகிறது. ஒடுக்கப்பட்ட சாதியின் தனிப்பட்ட பிரதிநிதியாக தாங்களே  இருக்க வேண்டும் என்றும் அது கோருகிறது. இது அரசியல் துறையில் உயர் சாதி ஆதிக்கத்தின் ஏகபோகத்தை உலுக்கி  சீர்குலைத்தது என்பதில் சந்தேகமில்லை என்றாலும், ஒருவகையில் அது சாதி அமைப்பை ஒழிப்பதற்கான போராட்டத்தின் கூர்மையை மழுங்கடிப்பதாகவே திகழ்கிறது. இந்த கட்சிகளின் தேர்தல் அரசியல் கூட்டணிகள் சில சமயங்களில் சாதி எதிர்ப்பு போராட்டங்களை பெருமளவிற்கு பலவீனப்படுத்துகின்றன. அதேநேரத்தில் இடதுசாரிகள் சாதி விசயத்தில் கவனம் செலுத்தவில்லை என்றும், சாதி எதிர்ப்பு போராட்டங்களை வர்க்கப் போராட்டத்திற்கு துணையான அம்சங்களாகவே பார்ப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இடதுசாரிகளில் சில பிரிவினரிடையே ஒரு போக்கு நிலவுகிறது. அந்தப் போக்கானது சமூக அமைப்பைப் பொருட்படுத்தாமல் ‘வர்க்கத்தை’ ஒரு வகையாக இயந்திரகதியாக கருதுகிறது. பெரும்பான்மையான தலித்துகள் தொழிலாளர்களாகவும், கிராமப்புற ஏழைகளாகவும் இருக்கும்நிலையில், ​​சாதிய கலவை குறித்த புரிதல் ஏதுமற்று வர்க்கம் பற்றிய புரிதல் என்பது வர்க்கம் குறித்த ஆய்வை ஒரு கேலிக்கூத்தாகவே ஆக்கிவிடும். எவ்வாறாயினும், அதையெல்லாம் பொருட்படுத்தாது, கட்சியின் நிறுவனர்களால் பல தசாப்தங்களுக்கு முன்னர் விவரிக்கப்பட்டுள்ளபடி, சாதி முறை என்பதே முன்னேற்றத்திற்கு எதிரான நிரந்தரத் தடை, ஒரு கறை, மனித உரிமைகள் மீதான அருவருப்பான ஒரு களங்கம், கவுரவம் மற்றும் சம குடியுரிமை என்ற கருத்தை அது வெறுக்கிறது என பார்ப்பதே சரியாகும். தலித் பெண்கள் சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறையின் மூன்று வகையான சுமைகளை எதிர்கொள்கின்றனர்: சாதி அமைப்பை எதிர்கொள்ளும் தலித்துகள் என்ற வகையிலும், பெண்கள் என்ற வகையிலும், தலித் தொழிலாளர்கள் என்ற வகையிலும் அவர்கள் இதை எதிர்கொள்கின்றனர்.

கடந்த இருபதாண்டுகளில், புதிய தாராளமயக் கொள்கைகளானவை,  ஏற்கனவே ஓரங்கட்டப்பட்ட, சுரண்டப்பட்ட சமூகங்கள் மீது தீவிரமான தாக்குதலை மேற்கொள்கிறது. இதனால் தலித் பெண்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வலுப்பெற்றுள்ள இந்துத்துவ சித்தாந்தமானது சாதி நம்பிக்கைகளையும், நடைமுறைகளையும் மேலும்  வலுப்படுத்துகின்றன. சோசலிச எண்ணம் கொண்ட பெண்கள் இந்த பிரச்சினைகள் அனைத்திலும்,  சில நேரங்களில் சுயேச்சையாகவும், வேறு பல நேரங்களில் மற்றவர்களுடன் இணைந்தும் தலித் பெண்கள் மீதான சாதி அடிப்படையிலான திட்டமிட்ட வன்முறையையும், அடக்குமுறையையும் எதிர்த்துப் போராடி வருகின்றனர்.

இந்த ஆண்டுகளில்தான் சாதி அமைப்புக்கு எதிராக அனைத்து மட்டங்களிலும் நடைபெற்று வரும் போராட்டங்களில் இடதுசாரி இயக்கங்கள் முன்னணியில் உள்ளன. விவசாயத் தொழிலாளர்களின் அமைப்புகள், இடதுசாரி பெண்கள் அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து நிலம், ஊதியம் மற்றும் சமூக அந்தஸ்து உள்ளிட்ட தலித் பெண்களின் பிரச்சினைகள்  மீது பல்வேறு வகையான முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆந்திரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தேநீர் கடைகள், ஹோட்டல்களில் இரட்டைக் குவளை ஏற்பாடு குறித்த  ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதில் தலித் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி குவளைகள் வழங்கப்பதும் அறியப்பட்டது. தலித் விவசாய பெண் தொழிலாளர்கள் முக்கிய பங்கு வகித்த பெரிய போராட்டங்களின் விளைவாக பல கிராமங்களில் இந்த முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. செங்கொடியின் தலைமையிலான இந்த கள  அளவிலான வெகுஜன போராட்டங்கள்தான் அடக்குமுறையை எதிர்த்துப் போராடுவதற்கான நம்பிக்கையை ஊட்டியுள்ளன. வர்க்கப் போராட்டமும் சமூக நீதிக்கான போராட்டமும் மிக நெருக்கமாகப் பின்னிப் பிணைந்துள்ளன. இதில் எந்த ஒன்றும் மற்றொன்று இல்லாமல் பலவீனமானதாகத்தான் இருக்கும்.

முடிவுரை

பெண்களின் பிரச்சினைகளைப் பொறுத்தவரை, சோசலிச சிந்தனையும் நடைமுறையும் இந்த ஆண்டுகளில் மிகவும் விரிவான முன்னோக்குப் பார்வையாகவும் திட்டமாகவும் உருவெடுத்துள்ளது. இந்தக் கட்டுரையில் அதன் சில அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கோட்பாட்டின் வளர்ச்சி என்பது நடைமுறையில் பெற்ற அனுபவங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள பொருளாயத நிலைமைகள் குறித்த ஆய்வுகள் ஆகியவை கைகோர்த்துச் செல்வதாகும். இந்தப் பரிணாம வளர்ச்சியில் – இதை முன்னேற்றம் என்றும் அழைக்கலாம் – சோசலிச கருத்தோட்டம் கொண்ட  பெண்களின் பங்கு முக்கியமானது. இது பெரும்பாலான நேரங்களில் உரிய மதிப்பு அளிக்கப்படாத ஒன்றாகவும்,  அங்கீகரிக்கப்படாத ஒன்றாகவும், முறையாக  ஆவணப்படுத்தாத ஒன்றாகவுமே இருந்து வந்துள்ளது. இருந்தபோதிலும்கூட, இந்திய சமுதாயம் குறித்த ஒரு வர்க்க பகுப்பாய்வின் அடிப்படையில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டு அவர்கள் பெண்கள் பிரச்சினையில் சோசலிச சிந்தனை உலகம் மேலும் விரிவுபட உதவியுள்ளனர். உலக அளவிலும், இந்தியாவிலும் செயல்படும் பெண்கள் இயக்கங்கள் குடும்ப வன்முறை உள்ளிட்டு பல்வேறு குறிப்பான பிரச்சனைகளில் சோசலிச அணுகுமுறைகளை உருவாக்கவும், விரிவாக்கிடவும், பணிகளையும், தலையீடுகளையும் திட்டமிடுவதற்கும், கொள்கை உருவாக்கத்திற்கும் உதவி புரிந்துள்ளன என்பதும் உண்மை ஆகும்.

இங்கு சுட்டிக் காட்டப்பட்ட சில சிக்கல்கள் இந்திய பெண்கள் இயக்கங்களில் சோசலிச சிந்தனையின் பங்கை நன்கு புரிந்துகொள்ள உதவும் என்று நம்புகிறேன்.

நவம்பர், 2019

தமிழில்: வீ. பா. கணேசன்Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: