மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


சோஷலிசமும் பெண் விடுதலையும்


பேரா. ஆர். சந்திரா

 எத்தகைய சமூகக் கட்டமைப்பில் பெண் விடுதலை சாத்தியம்? பொருளாதார சுதந்திரம் மட்டுமே பெண்களுக்கு விடுதலை அளிக்குமா? வர்க்க முரண்பாடுகள் நிலவும் ஒரு சமுதாயத்தில் அனைத்து பெண்களின் நலன்களும் ஒரே மாதிரியாக இருக்குமா? பொருளாதார, சமூக, கலாச்சார, அரசியல்–என அனைத்திலும் பெண்களுக்கு சம உரிமைகள்  கிட்டுமா?  தலைசிறந்த தொழிற்சங்க வாதியும், பெண் புரட்சியாளருமான அலெக்சாண்டரா கொலந்தாய் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இப்படி எழும் பல கேள்விகளுக்கு விடை அளிக்கும் விதத்தில் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அதில் அவர் “…ஆண்களின் உலகை போலவே, பெண்களின் உலகும் இரண்டாக பிளவுபட்டுள்ளது. எனவே,  ஒரு பகுதியினரின் நலன்களும், எதிர்பார்ப்புகளும், மற்ற பகுதியினரிடமிருந்து வேறுபடுகிறது. பெண் விடுதலை என்ற கோஷத்தை முன்வைக்கும் ஒரு பூர்ஷ்வா  பெண்ணும், உழைக்கும் பெண்ணும் எதிர்பார்க்கும் சமூக கட்டமைப்பு என்பது  வேறு வேறானது. உழைக்கும் பெண் சுரண்டலற்ற ஒரு சமுதாயத்தைக் கோருகிறாள். புரட்சிகரமானவர்கள் என்று தங்களை கூறிகொள்ளும் பெண்ணிய வாதிகள் அனைவருக்கும் பொதுவான, சமமான, அமைப்பை கோருவதில்லை… ஆகையால், வர்க்கச் சுரண்டலை தகர்க்காமல், பெண் விடுதலை  சாத்தியமில்லை. பெண் விடுதலையும் மானுட விடுதலையும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை”  என்கிறார். 

சோஷலிச புரட்சிக்கு முன்பு பெண்கள் நிலை எப்படி இருந்தது  என்பதை ஆய்வு செய்தால்தான் சோஷலிசம்  மூலம் பெண்கள் அடைந்த பயன்களை புரிந்துகொள்ள இயலும். முன்னாள் சோவியத் யூனியன், மக்கள் சீனம், வியத்நாம், கியூபா, முன்னாள்  ஜெர்மன் ஜனநாயக குடியரசு, சோசலிச கிழக்கு ஐரோப்பிய நாடுகள் போன்றவை சோஷலிச அமைப்பை உருவாக்கி, சாதனைகள் பலவற்றைப் புரிந்த நாடுகள் ஆகும். சோஷலிச கட்டுமானத்தின் மூலம் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும்  இந்நாடுகள் சாதித்தவற்றை  எளிதாக அழித்து விட முடியாது.   

புரட்சிக்கு முன்பு பெண்களின் நிலை

சமூக மாற்றம் நடைபெற்ற   நாடுகள் அனைத்திலுமே, புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில் பெண்கள் இரண்டாம்தர குடிமக்களாகவே கருதப்பட்டனர். பெண்கள் பற்றிய பிற்போக்கான கருத்துக்கள் நிலவின. ஜார் மன்னன் ஆட்சியில் ஆண்கள் , பெண்கள் அனைவருக்குமே, அரசியல், சமூக உரிமைகள் மறுக்கப்பட்டன. பெண்கள் ஆண்களின் சொத்தாகவே கருதப்பட்டனர். ஆயிரக்கணக்கான பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டனர். சீனாவில் கன்ஃபூசிய தத்துவம் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் பெண்கள் அடிமைகளாக, கேளிக்கைப் பொருட்களாக  நடத்தப்பட்டனர்.  வியத்நாம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் இதே நிலைமைதான் இருந்தது. உயர் குடும்பங்களை சேர்ந்த பெண்கள் மட்டுமே பொது வெளிகளில் தென்பட்டனர் .

புரட்சியில் பெண்கள் பங்களிப்பு

முன்னாள் சோவியத் ஒன்றியம்: 1917 பிப்ரவரியில் நிகழ்ந்த ரஷ்ய  புரட்சியில் பல்வேறு வர்க்கங்களை சேர்ந்த பெண்கள் முன்னணியில் நின்று போராடியது போல்ஷெவிக் கட்சியின் பெண்கள் பற்றிய பார்வை, அரசியலில் பெண்கள் பங்கேற்பு பற்றிய அணுகுமுறை தொடர்பான மாற்று சிந்தனைக்கு வழிவகுத்தது. நகரங்களில் இருந்தும், கிராமங்களில் இருந்தும் படித்த பெண்களும், ஏழை பாமரர்களும், விவசாய பெண்களும், தொழிலாளிகளும் என பல்லாயிரக்கணக்கில் தெருவிலிறங்கி கொடுங்கோலன் ஜார் மன்னனின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரப்   போராடினர். அப்பெண்களை பற்றி அலெக்சாண்டர் கொலன்தாய்  “புரட்சியில் பங்கு பெற்ற பெயர் தெரியாத  இந்த கதாநாயகிகள்  ஏழைகள். கிராமங்களில் இருந்து வந்தவர்கள். போரினால் சூறையாடப்பட்ட நகரங்களில் இருந்து வந்தவர்கள். கிழிந்த பாவாடை, தலையில் சிவப்பு நிற ஸ்கார்ப், குளிரில் இருந்து தப்பிக்க கோட்டு போட்ட இளம்  பெண்கள், மூதாட்டிகள், ராணுவ வீரர்களின் மனைவிகள், கூலி தொழிலாளிகள், வீட்டோடு இருக்கும் பெண்கள், ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள், கல்லூரி மாணவிகள், பெண் மருத்துவர்கள் என்று எல்லா வேறுபாடுகளையும் தாண்டி  பெண்கள்  பங்கேற்றனர். சுயநலமின்றி  மகிழ்ச்சியுடன் ஒரே நோக்கத்துடன் பங்கேற்றனர். ராணுவ வீரர்களின் குல்லாய்களை அணிந்து செஞ்சேனையுடன் இணைந்து  போராடினர்.  ராணுவத்தில் மக்கள் தொடர்பாளர்களாக பணியாற்றினர். கிராமங்களில் பெண்கள், பல நூற்றாண்டுகளாக அக்கிரமம் செய்த நிலப்பிரபுக்களை ஓட ஓட விரட்டியடித்தனர். அலை அலையாக மக்கள் திரண்டு வந்தது மக்கள் கடல் போல இருந்தது. பெண்கள் செங்கொடியையும்  கம்யூனிசத்தையும் தூக்கிப் பிடித்தனர்…”  என்கிறார். புரட்சிக்கு பின்னர் ஆண்களுக்கு சமமாக அனைத்து துறைகளில் பெண்களும் சாதிக்க முடியும் என்பதையும் சோவியத் ஒன்றியம் நிரூபித்தது.

கியூபா: கியூபாவில்,  பெண்களை புரட்சியில் ஈடுபட வைப்பதென்பது “புரட்சிக்குள் ஒரு புரட்சி” என   கருதப்பட்டது. பழைமையில் ஊறிப்போன பெண்களை புரட்சி பணிகளில் ஈடுபடுத்துவது அவ்வளவு எளிதாக இல்லை. வீட்டிற்கு வெளியே சென்று உழைத்த பெண்கள் பொருளாதார நெருக்கடியினால் வேலை செய்தார்களே தவிர, பெண் விடுதலை பெற வேண்டும் என்பதற்காக அல்ல. புரட்சிக்கு முன்பு ஏராளமான பெண்கள் விபச்சார விடுதிகளில் சுரண்டப்பட்டனர். பெண்கள், நர்சுகளாக, ஆசிரியைகளாக, குமாஸ்தாக்களாக பணியாற்றினரே தவிர,  அதிகாரத்தில் இல்லை. பாடிஸ்டாவை வீழ்த்திய பின்னர் கியூப பெண்களுக்கான கூட்டமைப்பு துவக்கப்பட்டது. இதன் நோக்கம் பெண்களுக்கு உரிமைகளை பெற்று தரவேண்டும் என்பதை விட  பெண்களை சோஷலிச கட்டுமான பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என்பதே ஆகும். இந்த அமைப்பின்  நிறுவனர்களில் ஒருவரான  வில் மாஈஸ்பின்  கூறுகையில்,  “பெண்களுக்கென பிரத்யேக அமைப்பு உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியவர் ஃபிடல் காஸ்ட்ரோ.  பெண்கள் அமைப்பின் மூலம் முக்கியமான பணிகளை செய்வதுடன், புரட்சியின் நோக்கங்கங்களை நிறைவேற்ற, பல திட்டங்களை செயல்படுத்த பெண்களின் முழு பங்களிப்பு தேவை என்பதை ஃபிடல் காஸ்ட்ரோ நன்கு உணர்ந்திருந்தார். கியூபா புரட்சிக்கு ஆதரவு தொடர இந்த மகளிர் அமைப்புகளின் செயல்பாடு அவசியம்” என்றார்.

வியத்நாம் : ஹோ சி மின் தலைமையிலான வியத்னாம் கம்யூனிஸ்ட் கட்சி பெண்களின் பங்களிப்பு இல்லாமல் புரட்சி இல்லை என்பதை உணர்ந்து பெண்களை திரட்டியது. வியத்நாம் புரட்சியில் மட்டுமின்றி, அந்நாடு ஒவ்வொரு முறை போரை சந்தித்தபொழுதும், பெண்கள் ஆண்களுக்கு சமமாக போரில் பங்கேற்றுள்ளனர். துப்பாக்கி ஏந்திய போராட்டம், கொரில்லா தாக்குதல் என எதிலும் அவர்கள் சளைக்கவில்லை. வயல்வெளிகளில், உணவு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டே, எதிரிகளை தாக்கவும் செய்துள்ள வீராங்கனைகள்  அப்பெண்கள். 1945 முதல் 1975 வரை முப்பது ஆண்டுகள் நாட்டைக் காக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். கிராமங்களை காவல் காப்பது, தகவல் தெரிவிக்கும்  நபர்களாக செயல்படுவது, பிரச்சாரம் செய்வது, ராணுவத்திற்கு ஆட்கள் சேர்ப்பது  என பெண்கள் ஆற்றியுள்ள பணிகள் கொஞ்ச நஞ்சமல்ல. தாய்மார்களாக, மனைவிகளாக, சகோதரிகளாக, அனைத்து பாரம்பரிய பணிகளை செய்து கொண்டே புரட்சியிலும் லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர்.

சீனப் புரட்சி  : லட்சக்கணக்கான கிராமங்களை கொண்ட ஒரு விவசாய நாடாக சீனா இருந்தது. பெண்கள் கடுமையாக உழைத்த போதிலும், சம உரிமைகள் இல்லை. கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்ட பொழுது பெண்களை அனைத்து நடவடிக்கைகளிலும் பங்கேற்க வைப்பதில் தயக்கம் இருந்தது. அவர்களை முறையாக உறுப்பினர்களாக சேர்ப்பதில் சுணக்கம் இருந்தது. நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் பெண்கள் ஒடுக்கப்படுவதை கட்சி நன்றாக உணர்ந்திருந்தது. அதை முற்றிலுமாக மாற்ற வேண்டுமென்பதற்கான திட்டமும் இருந்தது. 1925-1927 காலத்தில் ஏராளமான பெண்கள் பொதுவெளிக்கு வந்தனர். கிராமங்களில் பெண்கள்  நிலப்பிரபுக்களை எதிர்த்து கடும் போராட்டங்களை நடத்தினர். நகரங்களில், இளம்பெண்கள், மாணவிகள் பெரும் எண்ணிக்கையில் புரட்சிப் போராட்டங்களில் பங்கேற்றனர். அரை அடிமை நிலையில் இருந்த அவர்களுக்கு இது விடுதலைக்கான ஒரு வாய்ப்பாக அமைந்தது. கிராமப்புறங்களில் பெண்கள் பங்கேற்கும் கூட்டங்களில்  தங்களுடைய கசப்பான அனுபவங்களை பேச ஊக்குவிக்கப்பட்டனர். தங்களுக்கு நியாயம் வேண்டி  பெண்கள் பேச முடிந்தது.

கிழக்கு ஜெர்மனி, மற்றும் இதர கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சோவியத் புரட்சி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த நாடுகளிலும் சம உரிமைகளுக்கான, சமூக மாற்றத்திற்கான போராட்டங்களில் பெண்கள் பெரும் எண்ணிக்கையில்  பங்கு பெற முடிந்தது.

சோசலிச புரட்சிக்கு பின்னர்

சோவியத் ஒன்றியத்தில்: ரஷ்யபுரட்சி  மேலை நாட்டு பெண்களிடையேயும் புதிய நம்பிக்கையை தோற்றுவித்தது. 1921ல் அனைத்து ரஷ்ய பெண் கம்யூனிஸ்ட் போராளிகளின் முதல் மாநாட்டில் சோவியத் பெண் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் வாழ்த்தி கிழக்கத்திய பெண்கள் என்ற அமைப்பின் பிரதிநிதி ஆற்றிய உரையில் கூறியதாவது:

 “நாம் அடிமைகளாகவே பிறந்தோம்; அடிமைகளாகவே இறந்தோம். லட்சக்கணக்கான பெண்கள் தங்கள் வாழ்க்கையை அப்படிதான் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால்…. 1917-ல் அக்டோபர் புரட்சியின் பொழுது ஒரு “சிவப்பு நட்சத்திரம்” தோன்றியது. அதற்கு முன் நாம் அதை பார்த்ததில்லை. பெண்  தொழிலாளர்களும், விவசாயிகளும் புரட்சியில் பங்கேற்றது  பெண்களின் வாழ்க்கையை நிறையவே மாற்றி விட்டது. நீண்ட காலம் நாம் அதை நம்பவில்லை. தந்தைகளும், சகோதரர்களும் நம்மை வெளியுலகுடன் தொடர்பு கொள்ள இயலாமல் செய்துவிட்டனர். சோவியத் ரஷ்யாவிலிருந்து வந்துள்ள  பெண் தோழர்கள் நமக்கு மிகுந்த தைரியத்தையும், நம்பிக்கையையும் அளித்துள்ளனர்…”

 முதல் உலகப் போர் காலத்தில் பெண்கள் அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டது பின்னர் பெருமளவில் புரட்சிக்கு உதவியது. கம்யூனிஸ்ட் கட்சியின் மகளிர் பிரிவு புரட்சியின் மகத்துவத்தை பரப்புவதற்கு உதவியது. சம வேலைக்கு, சம ஊதியம், , பணியிடங்களில் பாதுகாப்பு சட்டங்கள், மகப்பேறு வசதி, தொழிற்சங்கத்தில் பெண்களின் பிரச்னைகளை விவாதித்தல் போன்ற சாதனைகள்  குறிப்பிடத்தக்கவை. முறை தவறி பிறந்த குழந்தைகளுக்கு முழு உரிமைகள்,  பெண்களுக்கு விவாகரத்து கோரும் உரிமை, விரும்பியவரை திருமணம் செய்து கொள்ளும் உரிமை போன்றவை உறுதி செய்யப்பட்டன. பெண்களின் இரட்டைச் சுமையை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னாட்களில் மேலை முதலாளித்துவ நாடுகளில் சம உரிமைகளுக்கு பெண்கள் போராடியபோது சோவியத் ஒன்றியத்தின் பாலின சமத்துவ, பெண்கள் நல சட்டங்கள் அவர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்தன.

கல்வியில், குறிப்பாக, கணிதம், அறிவியல், பொறியியல் மற்றும் மருத்துவ கல்வியில் பெண்களுக்கு முன்னுரிமை தரப்பட்டது. விண்வெளி ஆய்வு உள்ளிட்டு  அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பிரகாசிக்க துவங்கினர். முதன்முதலில் விண்வெளியில் சென்ற பெண் சோவியத் நாட்டை சேர்ந்த வாலண்டினா தெரெஷ்கோவா. விளையாட்டு துறையில் உலக அளவில் சோவியத் பெண்கள் சாதனைபுரிந்துள்ளனர். சோவியத் யூனியன் சிதைந்த பின்னரும் விளையாட்டு துறையில் அதில் முன்பு இருந்த நாடுகள் இன்றும் முன்னணியில் இருப்பதற்கு காரணம், சோஷலிச அரசு கல்விக்கு கொடுக்கும் அளவு முக்கியத்துவத்தை விளையாட்டிற்கும் கொடுத்ததுதான். இலவச பயிற்சி தரப்பட்டது.  குழந்தை பருவம் முதல் அவர்களுக்கு விருப்பமான துறையை தேர்ந்தெடுத்து அதில் முன்னேற அனைத்து வாய்ப்புகளும் வசதிகளும் தரப்பட்டன. இத்தகைய சாதனைகளை அவர்கள் செய்வதற்கு சோஷலிச கட்டுமானம்  இல்லாமல் சாதித்திருக்கமுடியாது. கம்யூனிச எதிர்ப்பாளர்கள் கூட சோவியத் யூனியன் பெண்களுக்கும், குழந்தைகளுக்குமான நாடு என்று புகழ்ந்தனர்.

கியூபாவில் : புரட்சிக்கு பின்னர் கியூபாவில் பெண்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. திறமைகளை வளர்த்துக் கொள்ள பிரத்யேக பயிற்சிகள் தரப்பட்டன. சமூக பொருளாதார நிலையை புரிந்து கொள்ளும் பயிற்சிகள் தரப்பட்டன. கல்வி கட்டாயமாக்கப்பட்டு  நாட்டின் உற்பத்தியில் பெண்களின் பங்கை கூட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கல்வி, மருத்துவம், சுகாதாரம் ஆகியவற்றில் பெண்களின் சமபங்குடன்  கியூபா சாதனைகளை படைத்துள்ளது.  உழைக்கும் பெண்களுக்கு  ஊதியத்துடன் கூடிய விடுப்பு, குழந்தைகளை பராமரிக்க, வசதிகள், போன்றவை அமுலுக்கு வந்தன. பெண்கள் தொழிற்சங்க பணிகளில் முழுமையாக ஈடுபட்டனர். தொழிற்சாலைகளில், வேலைக்கு அமர்த்துவதில் பெண்களுக்கு முன்னுரிமை தரப்பட்டது. 1971-ல் பெண்கள் முன்னணி என்ற அமைப்பு துவக்கப்பட்டது. இது தொழிற்சங்கங்களில் பெண்கள் செயல்படுவதற்கான அமைப்பு ஆகும். 1980-ல் இது மகளிருக்கான துறை என்று மாற்றி அமைக்கப்பட்டது. கியூபா பெண்களின் குரலை உரக்க ஒலிக்க செய்ய இந்தத் துறை உதவியது. பணிபுரியும் மகளிருக்கு இரட்டைச் சுமை ஏற்படுவதை கணக்கில் கொண்டு அவர்களுக்கு பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டன. குடும்பச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் வீட்டு வேலைகளை கணவன் மனைவி  இருவரும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது. சொத்துக்கள் இருவர் பெயரிலும்  பதிவு செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டது. விவாக ரத்து கோருவதில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு. ஒரு மாத கால அவகாசத்தில் விவாக ரத்து பெற இயலும்.  

சோவியத்யூனியனைப் போலவே, இங்கும், மருத்துவ கல்வி, சட்டக் கல்வி துறைகளில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட மிகவும் அதிகமாக இருந்தது. அரசியலிலும் பெண்கள் பங்கேற்பு சிறிது சிறிதாக அதிகரித்தது. பெண் கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. சட்டமன்றங்களில்  பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இருப்பினும் மிக உயர்ந்த அளவில் நிர்வாகத்தில் பெண்கள் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. 1984 கட்சி காங்கிரசில் பெண்களுக்கெதிரான அனைத்துவித பாரபட்சமும் முடிவுக்கு வர வேண்டும் என்றும், உயர் பதவிகளை வகிக்க அவர்களுக்கு எந்தத் தடையும் இருக்க கூடாதென்றும் வலியுறுத்தப்பட்டது. புரட்சிக்கு பின்னர் கியூப பெண்களின் குரல் நன்கு ஒலிக்கவே செய்கிறது. 

ஜெர்மன் ஜனநாயக குடியரசு: 1949-1989 வரையிலான நாற்பது ஆண்டுகள் ஜி.டி.ஆர் ஒரு சோஷலிசஅமைப்பை கொண்டதாக, திட்டமிட்ட பொருளாதாரத்தை பின்பற்றும் குடியரசாகத் திகழ்ந்தது. இந்தக் குறுகிய காலத்தில் இந்த அரசு பெண்கள் நிலையை பெரிதும் மேம்படுத்தியது. பெண்கள் விடுதலை பெற பொருளாதார சுதந்திரம் தேவை என்பதை கணக்கில் கொண்டு, பெண்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளித்தது. அரசு மூன்று முக்கிய நோக்கங்களை கொண்டிருந்தது:

1. ஆண்-பெண் இருவரும் சமம். எனவே, சமத்துவத்தை நிலை நாட்டுதல்

2. உழைக்கும் பெண்களை உயர்த்துதல்.

3. தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் பிரத்தியேக பாதுகாப்பு அளித்தல்.

முதல் பத்தாண்டுகளில் பெண்களை அந்நாட்டின் உழைக்கும் சக்தியுடன் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. உலகப்போரின் காரணமாக, பெண்கள் பெரும் எண்ணிக்கையில் உழைப்புச் சந்தைக்குள் வந்து விட்டனர். பெண்களுக்கான நிறைய சட்டங்கள் இந்த காலகட்டத்தில் கொண்டுவரப்பட்டன. பெண்களுக்கான கமிட்டிகள் அமைக்கப்பட்டன. பாசிச எதிர்ப்பு பிரச்சாரம், கலாச்சார விழிப்புணர்வு போன்றவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டன. ஜனநாயக மகளிர் அமைப்பு உருவாக்கப்பட்டு,  பெண்களை ஒன்றுதிரட்டி, அவர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்கும் பணியில் முனைப்பு ஏற்பட்டது. ஆண்-பெண் சமத்துவத்தை முன்னெடுத்து செல்ல தொழிற்சங்கங்கள்  நல்ல வாய்ப்பாக அமைந்தன. தொழிற்சங்க உறுப்பினர்கள் எண்ணிக்கை 37%  [1952] என்பதிலிருந்து    53% [1988] என்று அதிகரித்தது. பெண்களுக்கு பணிகளில் பிரத்யேக பயிற்சி, பணி உயர்வுக்கான பயிற்சிகள் தரப்பட்டன. மேற்கு ஜெர்மனியின் பெண்களை விட  இப்பெண்கள் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்க சோஷலிச அமைப்பே காரணமாக அமைந்தது. 

வியத்நாம் : இங்கும் புரட்சிக்கு பின்னர் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆசிய நாடுகளிலேயே, நிர்வாக துறையில் மிக அதிக எண்ணிக்கையில் பெண்கள் இருப்பதற்கு காரணம் சோஷலிச அடித்தளம் ஆகும். சம வேலைக்கு சம ஊதியம், உழைக்கும் பெண்களுக்கு சாதகமாக ஏராளமான சட்டங்கள்  திருமணம் மற்றும் குடும்ப சட்டம் போன்றவை பெண்களின் உரிமைகளை, பாதுகாப்பை, கணக்கில் கொண்டு இயற்றப்பட்டவை ஆகும்.

மக்கள் சீனம் : மக்கள் சீனத்தில் மாவோ தலைமையிலான அரசு அமைந்தவுடன், பாலின சமத்துவ கருத்துக்கள் முன்னிறுத்தப்பட்டன. விரும்பியவரை திருமணம் செய்து கொள்ளும் உரிமை உண்டு. கட்டாயத் திருமணம் இல்லை. வயதுவந்த இருவர் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், மூன்றாவது நபர் நுழைந்து அதைத் தடுக்க இயலாதபடி சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. வரதட்சிணகொடுமை இல்லை. திருமணத்திற்கு பின் சேரும் சொத்துக்களில் ஆண்-பெண் இருவருக்கும் பங்கு உண்டு 2001-ல்  திருமண சட்டம் திருத்தி அமைக்கப்பட்டு, பெண்களின் உரிமைகளை பாதுகாக்கும் ஷரத்துக்கள் கொண்டு வரப்பட்டு சொத்துக்கள் இருவர் பெயரிலும் பதிவு செய்யப்படுகின்றன. இதனால், பெண்கள் ஓரளவு ஆளுமை பெற்றவராக இருக்கின்றனர். 1950லேயே பெண்களுக்கு விவாக ரத்து கோரும் உரிமை அளிக்கப்பட்டது. 2005-ல் குடும்ப வன்முறை குற்றமயமாக்கப்பட்டு விட்டது. இருப்பினும் முப்பது சதம் குடும்பங்களில் வன்முறை நிகழ்வுகள் நடப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பாலியல் பலாத்காரம் போன்ற குற்றங்களுக்கு மிகக் கடுமையான தண்டனை உண்டு. எனவே, அத்தகைய சம்பவங்கள் குறைவு. பெண்கள் இரவிலும் சுதந்திரமாக நடமாட முடியும் என்பதே நம்பிக்கை அளிக்கும் விஷயமாகும். மக்கள் சீனத்தில் மக்கள்தொகை அதிகம் என்பதால், குடும்பக் கட்டுப்பாடு வலியுறுத்தப்படுகிறது.. அப்படி பிரச்சாரம் செய்யும் பொழுதுகூட, கணவன் மனைவி இருவரையும் அழைத்து பேசி, அதன் அவசியத்தை உணர்த்துகின்றனர். பெண்ணை மட்டும் மையமாக வைத்து குடும்ப கட்டுப்பாடு நடப்பதில்லை.

கல்வி, ஆரோக்கியம், விளையாட்டு ஆகிய துறைகளில் சீனப் பெண்கள் உலகில் முன்னணியில் இருக்கின்றனர். உழைப்புப் படையில் பெண்களின் பங்கு கணிசமாக உள்ளது. 1997 முதல் மக்கள் அனைவரும் சமூக பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். மக்கள் சீனத்தில்  கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கி குடி பெயர்தல் சமீப காலத்தில் அதிகரித்துள்ளது. குடிபெயரும் பெண்களின் பிரத்யேக  பிரச்னைகள் கணக்கில் எடுத்து கொள்ளப்படுகின்றன.

அரசியலில் பெண்கள் பங்கு என்று பார்க்கும்போது 28.4% என தெரிகிறது. எனவே, அதில் இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம் என்பதை அந்த அரசு உணர்ந்திருக்கிறது. பாலின சமத்துவக் கருத்துக்கள்   வேரூன்றி வருகின்றன. புரட்சிக்கு பின்னர் மக்கள் சீனத்தில் பெண்கள் பிரமிக்கத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளனர். 

சோஷலிச சமூக அமைப்பு பெண்களுக்கு சாதகமானது; காரணம் என்ன?

சோஷலிச நாடுகளில் அனைத்து வளங்களும் பொது உடமையாக்கப்படுகின்றன. இதனால் பெண்களுக்கு அவற்றை பெறுவதில் சிரமங்கள் குறைவு பெண்  கல்வி, ஆரோக்கியம் ஆகியவை மிக முக்கியம் வாய்ந்தவை என கருதப்படுகிறது. நூறு சதம் சமத்துவம் இல்லை என்ற போதிலும் அதை நோக்கி செல்வதற்குத் தேவையான அடித்தளத்தை சோசலிச வளர்ச்சிப் பாதை உருவாக்குகிறது. திறமைகளை பொறுத்தவரை ஆண்-பெண் பாகுபாட்டை சோஷலிச கட்டமைப்பு ஏற்பதில்லை. இதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.

2018-ல் வெளிவந்த “கணிதம், பெண்கள் மற்றும் சோஷலிசம்’ என்ற ஆய்வு முன்னாள் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் மாணவிகள் கணிதம் மற்றும் அறிவியல் துறைகளில் மாணவர்களை விட திறமை வாய்ந்தவர்களாக இருக்கின்றனர் என்கிறது. இந்நாடுகளில் பாலின இடைவெளி வெகுவாக குறைந்துள்ளது. இதற்கு காரணம் அங்கு சோஷலிச அமைப்பு இருந்ததுதான். இந்த ஆய்வின்படி, லாத்வியாவிலும், ஈஸ்டோனியாவிலும்  மொத்த மருத்துவர்களில்  நான்கில் மூன்று பங்கு பெண்கள் ஆவர். அமெரிக்காவில் இது  34% மட்டுமே. 

உயர் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறைகளில், ஐரோப்பிய யூனியன் நாடுகளை எடுத்துக்கொண்டால், ஐந்தில் நான்கு மிக சிறந்த பாலின சமத்துவ உழைக்கும் மக்களை கொண்ட நாடுகளாக முன்னாள் சோஷலிச நாடுகள் உள்ளன. பல்கேரியா, ருமேனியா, லாட்வியா, லிதுவேனியா, ஆகிய நாடுகள் முதல் இடம் பெறுகின்றன.  ஐரோப்பிய யூனியனில் பல்கேரியா மிக அதிக பெண்களை தகவல்-தொழில்நுட்பத் துறையில்  தனித்தன்மை கொண்ட நாடாகத் திகழ்கிறது. இந்த துறையில் உள்ள நிறுவனங்களை எடுத்துக்கொண்டால், அவற்றில் பணிபுரிவோரில் மிக அதிக எண்ணிக்கையில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பெண்கள் பணிபுரிகின்றனர் என்பதையும் அந்த ஆய்வு சுட்டிக் காட்டுகிறது. மார்ச் 2018 ஃபினான்சியல் டைம்ஸ் அறிக்கையின்படி, பெண்களின் ஊதியம் ஆண்களின் ஊதியத்தில் எத்தனை சதம் என்று பார்க்கும்போது  முன்னாள் சோஷலிச நாடுகளில்  பெண்களின் நிலை முதலாளித்துவ நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக நன்றாகவே உள்ளது.  கடந்த பத்தாண்டுகளில் பெண் எம்.பிக்கள் எண்ணிக்கையை பார்த்தால், முன்னாள் சோஷலிச நாடுகள் முதளித்துவ நாடுகளை விட மேம்பட்ட நிலையில் உள்ளன. 

சோஷலிச புரட்சி பெண்களை பொதுவெளிக்குக் கொண்டுவந்திருக்கிறது என்பதை பல ஆய்வுகள் உறுதிபடுத்தி உள்ளன. புரட்சி முடிந்த உடனேயே சமத்துவம் வந்துவிடாது என்பதை லெனின், மாவோ, காஸ்ட்ரோ, ஹோ சி மின் உள்ளிட்ட பொதுவுடைமை இயக்கத் தலைவர்கள் உணர்ந்திருந்தனர். அதனால் பாலின சமத்துவத்திற்கு அடிப்படை தேவைகள் என்னவோ அவற்றை செய்ய முயன்றனர். அதற்கான சட்டங்களை அமுல்படுத்தி ஓரளவு வெற்றியும் கண்டுள்ளனர். சுரண்டல் இல்லாத ஒரு அமைப்பில் மட்டுமே மனிதன் சுதந்திரமாக வாழ இயலும். அதனால்தான், பெண் விடுதலை என்பது மானுட விடுதலையுடன் பின்னிப் பிணைந்தது  என்பதை முன்வைத்து அத்தகைய சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கான பாதையை வகுக்க வேண்டும். மானுட விடுதலையை சோஷலிசம் மட்டுமே  சாத்தியமாக்கும்.



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: