T.K. சண்முகம்
கொரோனா விஸ்வரூபத்தை கண்டு சர்வதேச சமூகம் கதிகலங்கி நிற்கிறது. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமான வழிமுறைகளை அந்தந்த நாட்டு அரசுகள் மேற்கொண்டன. ஒரே நாட்டில் உள்ள பல்வேறு மாநில அரசுகளும் ஒவ்வொரு விதமான அணுகுமுறைகளை கையாண்டன.
இந்தத் தொற்றின் தீவிரத்தால் நமது ஒட்டுமொத்த வாழ்க்கை சூழலும் முடங்கிக் கிடக்கின்றன. தனியார் மருத்துவ மனைகள் அனைத்தும் மூடிக்கிடக்க, அரசு மருத்துவமனைகள் ஓவர்டைம் போட்டு சேவை ஆற்றிக் கொண்டிருக்கின்றன. பிழைப்பிற்காக நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வந்த கிராமத்து தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப போராடிக் கொண்டிருக்கின்றனர்.
இப்படிப்பட்ட பல உண்மைகள் கொரோனாவால் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. வர்க்கம் பார்த்து, வர்ணம் பார்த்து, மதம் பார்த்து, அது தாக்கவில்லை என்றாலும், நகர்ப்புறங்களை வீரியத்துடன் தாக்கிக் கொண்டிருக்கிறது கொரோனா. அமெரிக்காவின் நியூயார்க் தொடங்கி இந்தியாவில் டெல்லி, மும்பை, சென்னை என நகர்ப்புறங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் சரிபாதிக்கு மேல் சென்னையில்தான் என்பதிலிருந்தே நகரங்களை நோக்கிய கொரோனா பாய்ச்சலை புரிந்து கொள்ள முடியும்.
நகரங்களை நோக்கிய கொரோனாவின் கோபத்திற்கு காரணம் என்ன?
நெரிசல் மிக்க வசிப்பிடங்களில் மக்கள் குவியலாக வாழ்வதுதான் நோய் பரவக் காரணம் என்று ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். சர்வதேச தொடர்பு மையமாக நகரங்கள் இருப்பதும் மற்றொரு காரணமாக கூறுகின்றனர். கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இயலாமையை – தோல்வியை மூடி மறைப்பதற்கான முயற்சியே அரசு சொல்லும் காரணங்களாகும்.
நோய் பெருக்கத்திற்கு இதுவரை தாம் உருவாக்கி வைத்திருக்கிற நகரக் கட்டமைப்பு காரணமல்ல; அடர்த்தியான பகுதிகளில் இருந்து கொண்டு, சமூக விலகலை கடைப்பிடிக்காத மக்கள்தான் காரணம் எனக் கூறி அரசு தப்பிக்க நினைக்கிறது.
இத்தகைய மோசமான சூழ்நிலையில் கூட ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற பொய்யுரையைக் கண்டு சமூக ஆர்வலர்கள் முகம் சுளிக்கின்றனர். இது ஏதோ கொரோனாவோடு முடிந்து விடக்கூடிய பிரச்சினையல்ல. இன்றைய நகரங்களின் கட்டமைப்பு தன்மையை கேள்விக்குள்ளாக்கி ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய முக்கியமான பிரச்சனையாகும். நகரமயமாக்கலை அதன் போக்கிலேயே விட்டுவிட்டு, அடிப்படை வசதிகளற்ற, பலவீனமான கட்டமைப்பை போற்றிப் பாதுகாத்து வருகின்ற ஆட்சியாளர்கள் குற்றவாளிகள் இல்லையா?
நகர வளர்ச்சியும், நகரமயமாக்கலும்
வீட்டு வசதி, உணவு பாதுகாப்பு, பொது சுகாதாரம், தரமான பொதுக்கல்வி, உத்தரவாதமான வேலைவாய்ப்பு, பொது போக்குவரத்து வசதி, சாக்கடை நீர் கலக்காத சுத்தமான குடிநீர், கழிவுநீர் மேலாண்மையின் ஒரு பகுதியான பாதாள சாக்கடை திட்டம் , குப்பையற்ற நகரத்திற்கு அடிப்படையான திடக்கழிவு மேலாண்மை, ஆறுகள் மற்றும் நீர்நிலைகள் உள்ளிட்ட இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், மாசற்ற காற்று, மக்கள் நலன் சார்ந்த நிலையான கட்டமைப்பு கொண்ட நகர வளர்ச்சியை அரசுதானே உருவாக்க முடியும்.
கொரோனா தொற்றுப் சமூகப்பரவலாக மாறி அச்சுறுத்திக் கொண்டிருக்க கூடிய சென்னையில் பாதிக்கப்பட்ட இடங்கள் முழுவதும் குடிசைப்பகுதிகள்தான் (Slum) என்பதற்கு தனியாக ஆய்வு எதுவும் தேவை இல்லை. நோய் கட்டுப்பாட்டு பகுதி (Containment Zone) என்று சென்னை மாநகராட்சியயால் சீல் வைக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட குடிசை பகுதிகளில் வசிப்பவர்கள் யார்? இந்த பகுதியிலுள்ள ஏழை, எளிய கூலி உழைப்பாளர்கள்தான் இன்று நோயோடும், பசியோடும் போராடிக் கொண்டிருப்பவர்கள். கிராமத்திலிருந்து பிழைப்பு தேடி வந்த இந்த மக்கள் விரும்பி ஏற்றுக்கொண்ட வாழ்க்கையா இது? இந்த மக்கள் மீது பழிபோட்டு அரசு தப்பித்துக் கொள்ளக்கூடாது.
நகர அபிவிருத்திக்கான ஐ.நா.சபை மாநாடு 21ஆம் நூற்றாண்டின் முக்கிய நெருக்கடிகளில் ஒன்றாக நகரமயமாக்கலை அடையாளம் காட்டியது. நகர்ப்புற வாழ்க்கையில் நிலவும் நிச்சயமற்ற சூழலையும் ஐ.நா.சபை மாநாடு சுட்டிக்காட்டியது.
நாடு முழுவதிலும் உள்ள கிராமங்களிலிருந்து 13.9 கோடிப்பேர் நகரங்களை நோக்கி வருகிறார்கள். இந்திய பொருளாதார ஆய்வறிக்கை 2017இன் படி மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 90 லட்சம். 13 கோடி தொழிலாளர்கள் சொந்த மாநிலத்துக்குள்ளேயே நகரம் நோக்கி வந்தவர்களாவர். நகரங்களை நோக்கி வருகின்ற இந்த தொழிலாளர்களில் கட்டுமான தொழிலில் 4 கோடி பேரும், 1 கோடி பேர் செங்கல் சூளையிலும் பணியாற்றுபவர்கள். 2 கோடி பேர் வீட்டு வேலையிலும், 1.1 கோடி பேர் ஜவுளி தொழிலிலும், மற்றவர்கள் இதர தொழில்களிலும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
தமிழகத்தின் ஒட்டுமொத்த தொழில் உற்பத்தியில் 75 சதவீத பங்களிப்பை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, திருப்பூர் அளிக்கின்றன. மீதம் உள்ள மாவட்டங்களின் பங்கு 25 சதமே.
கிராமப்புற வாழ்வாதாரம் சரிந்து போனதால், கிராமத்தை விட்டு பிழைப்பு தேடி நகரங்களுக்கு செல்வது உழைக்கும் மக்களுக்கு அவசியமாகிறது. அதே நேரத்தில் பெருந்திட்டங்களை மையப்படுத்திய நகர வளர்ச்சிக்கு மலிவான உழைப்பாளிகள் (Cheap Labour) தேவை கட்டாயமாகிறது. எந்த ஒரு கிராமத்தானும், நகரங்களின் பிரம்மாண்ட தோற்றத்தை தரிசிப்பதற்காக விரும்பி நகரத்திற்கு வரவில்லை. பிழைப்புக்கு வழியின்றி நகரத்தை நாடி வந்தவர்கள் இவர்கள்.
லட்சக்கணக்கில் நகரத்திற்குள் நுழையும் இந்த உழைப்புப் படையை உள்வாங்கிக் கொண்டு, அதற்கேற்ற வகையில் நகர கட்டமைப்பை மேம்படுத்தி, ஒரு கண்ணியமான வாழ்க்கையை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதில் ஆட்சியாளர்கள் தோல்வி அடைந்துவிட்டனர்.
ஏற்றத்தாழ்வை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ சமூக அமைப்பில் நகரத்தை நோக்கி மக்கள் திரள்வது தவிர்க்க முடியாததாகி விட்டது. 2026ல் டில்லிக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் நகர்ப்புற மக்களின் எண்ணிக்கை 74.8 சதமாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நகர்ப்புற மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரிபாதி மக்கள் குடிசைப் பகுதிகளில் வசிக்கின்றனர் என்பதை அலட்சியப்படுத்திவிடக்கூடாது.
தற்போதைய நவீன உலகமய போட்டியில் கார்ப்பரேட் மயமாக்கப்பட்ட சந்தைக்கும், நகர கட்டமைப்பு திட்டங்களை உருவாக்கி அமல்படுத்த வேண்டிய அரசிற்கும் ஒரு நெருக்கமான பிணைப்பு உள்ளது. எப்படிப்பட்ட நகர்ப்புற வளர்ச்சி, அரசின் பொது நிதியாதாரம் எதற்கு, எப்படி, எங்கே செலவு செய்ய வேண்டுமென்பதை தீர்மானிப்பது இந்த கார்ப்பரேட் சந்தைதான். இந்த சந்தைக்கு இணக்கமாக அரசு மற்றும் மாநகராட்சிகள் செயல்படுகின்றன.
எனவேதான் நகரமயமாக்கல் மக்களின் நல்வாழ்விற்காக நடைபெறுவதை விட, சர்வதேச நிதி மூலதனத்தின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே நடைபெறுகிறது. ஸ்மார்ட் சிட்டி துவக்க விழாவில் “நகரமயமாக்கல் சாபமல்ல, அது வரம்” என்று பிரதமர் மோடி திருவாய் மலர்ந்ததும் சந்தையின் தேவைக்காகவே.
வேலை, கல்வி, குடியிருப்பு, சுகாதாரம் உள்ளிட்ட மக்களின் அடிப்படை தேவைகளை அவசியம் என்று கருதக்கூடிய நிலையான நகர கட்டமைப்பு சிறப்பு திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். குடிசைப் பகுதி மக்களின் நலன்களை முதன்மை இலக்காக கொண்டு மாபெரும் மக்கள் இயக்கம் நடைபெறும்போதுதான் நகரமயமாக்கல் தறி கெட்டுப் போகாமல் தடுக்க முடியும்.
Leave a Reply