கொரோனாவும் கூட்டாட்சி தத்துவமும்


கே. பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

அதிகாரங்களை பகிர்ந்து அளிப்பதே ஜனநாயக அரசுகளின் அடிப்படைக் கூறாகும். இதை கவனத்தில் கொண்டே, இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கும்போது இந்தியாவை “மாநிலங்களின் ஒன்றியம்” என வரையறை செய்யப்பட்டது. இந்தியாவின் பன்முகத்தன்மை, வேற்றுமையில் ஒற்றுமை என்ற கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் மத்திய அரசுக்கான அதிகாரங்களை கொண்ட மத்திய அரசு பட்டியல் எனவும், மாநிலங்களின் அதிகாரங்களைக் கொண்ட மாநில பட்டியல் எனவும் இரண்டு அரசுகளின் இணைந்து கவனிக்கிற ஒத்திசைவு பட்டியல் என்ற பொதுப்பட்டியல் கொண்டதாக அரசியல் சாசனம் வடிவமைக்கப்பட்டது.

விடுதலைப் போராட்ட காலத்தில் விவாதிக்கப்பட்ட கிராம ராஜ்ஜியம் என்ற கோட்பாட்டுக்கு வடிவம் கொடுக்கும் வகையில் இந்திய அரசியல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 73 மற்றும் 74வது திருத்தங்களின்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரங்கள் அளிக்க வழி செய்யப்பட்டது. இது மூன்றாவது ஆட்சி முறை என வரையறை செய்யப்பட்டது.

மாநிலங்களின் ஒன்றியம் இந்தியா என அழைக்கப்பட்டாலும், மத்திய அரசுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் வகையிலேயே அரசியல் அமைப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது.  அரசியல் அமைப்பு சட்டத்தால் வழங்கப்பட்ட குறைந்தபட்ச மாநிலங்களுக்கான அதிகாரங்களைக்கூட இதுவரை மத்தியில் ஆட்சியில் இருந்தவர்கள் வழங்கியதாக வரலாறு இல்லை. மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கோரும் பல மாநில கட்சிகள்கூட தங்களது ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரங்களை பகிர்ந்து அளிக்க மறுத்துவிட்டன.  நடைமுறையில் மூன்றாவது ஆட்சிமுறை என்பது சொல்லாட்சியாகவே உள்ளது.   அதிலும், மத்தியில் ஆட்சி பொறுப்புக்கு வந்துள்ள பாஜக மாநில உரிமைகளை பறித்து ஒரு ஒற்றை ஆட்சி முறையை உருவாக்கும் நோக்கோடு அனுதினமும் செயல்பட்டு வருகிறது.

தற்போது உலகம் சந்தித்து வரும் கொரோனா கொடுமையை எதிர்த்த போராட்டத்திலும் மத்திய பாஜக அரசு அரசியல் சட்டத்தின் அடிப்படைக்கே விரோதமாக, கூட்டாட்சி தத்துவத்தை தவிடுபொடியாக்கும் வகையில், மாநிலங்களின் உரிமைகளை பறித்து வருவதை கண்கூடாக காண முடியும்.

கண்ணுக்கு தெரியாத கொரோனா கிருமி தாக்குதலால் உலகமே முடங்கிக் கிடக்கிறது.  இதன் ஒரு பகுதியாக ஒட்டுமொத்த இந்திய நாடும் கடந்த 50 நாட்களாக பொது முடக்கத்தால் செயலற்று இருக்கிறது.  நாட்டில் அடிப்படையான தொழில், தொழில் உற்பத்தி, விவசாய உற்பத்தி, வணிகம், அனைத்து வகையான போக்குவரத்து, கட்டுமானம், விளையாட்டு, சினிமா, கலை இலக்கியம், நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் இயங்கவில்லை. 140கோடி மக்களும் தங்கள் வீடுகளிலேயே முடங்கிக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  முன்னெப்போதும் இல்லாத இத்தகைய கொடூர நிலைமையில் பொருளாதார பாதிப்புகளில் மூழ்கியுள்ள மக்களைப் பாதுகாப்பது, அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது, பசி பட்டினியில் இருந்து மக்களைப் பாதுகாப்பது, ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை ஈடுசெய்வது போன்ற கேந்திரமான பணிகளின் மூலம் மக்களைப் பாதுகாக்கும் பெரும் பொறுப்பு மத்திய, மாநில அரசுகளிடம் உள்ளது.  நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்கும், தொற்று குறித்த சோதனைகளை மேற்கொள்வதற்கும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட கூடுதலான பணிகளை அரசுகள் நிறைவேற்ற வேண்டிய பெரும் சுமை ஏற்பட்டுள்ளது.

இத்தகைய கடமைகளை நிறைவேற்றி மக்களைக் காப்பாற்றும் பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுடையது என்றபோதும், நேரடியாக மக்களோடு நெருக்கமான தொடர்பில் உள்ள மாநில அரசுகளின் மேல் விழுந்துள்ளது. மாநில அரசுகள் மேற்கண்ட இமாலய பணிகளை நிறைவேற்ற வேண்டுமெனில் வழக்கமான நிதி ஆதாரம் மட்டுமின்றி கூடுதலான நிதி அளித்தால் மட்டுமே இப்பணிகளை நிறைவேற்ற முடியும்.  நாடு சந்திக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு, நிதி, உணவுப்பொருள் உள்ளிட்ட அனைத்தையும் தாராளமாக வழங்குவதின் மூலமே கொரோனாவை எதிர்த்தப் போராட்டத்தில் இந்திய நாடு வெற்றிபெற முடியும்.

ஆனால், மோடி தலைமையிலான மத்திய அரசு இக்கடமைகளை நிறைவேற்றுவதில் நியாயமாக நடந்துகொண்டுள்ளதா? அரசியல் சட்டம் வழங்கியுள்ள கூட்டாட்சி கோட்பாட்டின் அடிப்படையில் செயல்பட்டுள்ளதா? என்பதே இப்போதைய கேள்வி  ஆகும்.  மேலோட்டமாக ஆய்வு செய்து பார்த்தாலே மோடி அரசின் அணுகுமுறை கூட்டாட்சி தத்துவத்துக்கு விரோதமானது; மாநில உரிமைகளை பறிப்பது என்பது மட்டுமின்றி, மாநிலங்களையே இல்லாததாக்குவது என்பதாக, முழுமையான அரசியல் சட்டத்துக்கு விரோதமானதாக உள்ளது என்பதைக் காண முடியும்.

ஊரடங்கு உத்தரவுகள்

கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு தனித்திருப்பது, தனி நபர் இடைவெளி கடைப்பிடிப்பது அவசியமான ஒன்றாகும்.  எனவே, இதுவரை அறிவிக்கப்பட்ட 4 ஊரடங்கு உத்தரவுகளையும் இந்திய நாட்டு மக்கள் முழுமனதோடு ஏற்று அதற்கு முழு ஒத்துழைப்பு அளித்து வந்துள்ளார்கள்.  அனைத்து அரசியல் கட்சிகளும் ஊரடங்கு உத்தரவினை எதிர்த்து கருத்து தெரிவிக்காமல் மக்கள் ஒத்துழைக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர்.   ஆனால், இந்த பரவல் தொற்று நோய் தொடர்பாக ஊரடங்கு உத்தரவினை பிறப்பிப்பதற்கு மத்திய அரசுக்கு இந்திய அரசியல் சட்டத்தின்படி அதிகாரங்களே இல்லை என்பது வெள்ளிடைமலை.

ஒவ்வொரு முறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும்போதும் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005இன்படி பல விதிமுறைகளை உருவாக்கி அதை செயல்படுத்த வேண்டுமென மாநில அரசுகளின் மீது மத்திய அரசு அழுத்தம் தருகிறது.  இந்த விதிமுறைகளை மாற்றவோ, திருத்தவோ கூடாது எனவும் கட்டாயப்படுத்தி வருகிறது. இந்த விதிகளை உருவாக்கி நாடு முழுவதும் அமலாக்க வேண்டுமென கட்டாயப்படுத்துவதன் மூலம் நோய் எதிர்ப்பு என்ற பெயரில் மத்தியத்துவப்படுத்தப்பட்ட அணுகுமுறையினை உருவாக்கி மாநில அரசுகளை, அவைகளை நிறைவேற்றுகிற ஒரு நிர்வாக அமைப்பாக மாற்றிவிட்டது மோடி அரசு.  மூன்றாவது முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது, நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என பிரித்து பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது.  இவ்வாறு செய்யும்போது மாநில அரசுகளை குறைந்தபட்சம்கூட கலந்து பேசவில்லை.

சில மாநில அரசுகள், தங்கள் மாநிலங்களில் சிவப்பு மாவட்டங்களாக பட்டியலிடப்பட்டதை எதிர்த்து குரல் எழுப்பின.  சில மாநிலங்களில் பெரிய பரப்பளவை கொண்ட சில மாவட்டங்களை சிவப்பு மாவட்டங்களாக அறிவித்ததை ஏற்க முடியாது என மறுத்தன.  இத்தகைய பெரிய மாவட்டங்களில் கொரோனா பாதித்த குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டும் சிவப்பு பகுதியாக அறிவிக்காமல் ஒட்டுமொத்த மாவட்டத்தையே முடக்கி வைப்பது அவசியமற்றது என்பது மட்டுமின்றி அவ்வாறு செய்வது பொருளாதார நெருக்கடிக்கு வித்திடும் என கருத்து தெரிவித்தன.  ஆனால், மத்திய அரசு, மாநில அரசுகளின் இந்த நியாயமான கோரிக்கைகளைக்கூட பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆக, பேரிடர் மேலாண்மை சட்டத்தின் அடிப்படையில் தாங்கள் மேற்கொண்ட விதிகளில் சிறிய மாற்றத்தைக்கூட செய்வதற்கு மத்திய அரசு இசைவு தெரிவிக்கவில்லை. இதுமட்டுமின்றி கேரள அரசு வெற்றிகரமாக கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தியுள்ள நிலையில் சில ஊரடங்குக் கட்டுப்பாடுகளை தளர்த்தலாம் என அறிவித்தபோது உள்துறை அமைச்சகம் கேரள அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அதை அனுமதிக்கவில்லை.

அதேசமயம், பிரதமர் நரேந்திர மோடி நான்கு முறை ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.  இவ்வாறு பிரதமர் ஊரடங்கினை அறிவிப்பது, அரசியல் சட்டத்துக்குப் புறம்பானது என்பது மட்டுமல்ல, மக்களுக்கும் பெருந்தொல்லைகள் அளித்துள்ளது.  மாநிலங்களுடன் கலந்து பேசாமல், எந்த முன்தயாரிப்பும் இல்லாமல், அதிரடியாக ஊரடங்கை அறிவிப்பதால், இந்திய நாட்டு மக்கள் எண்ணில் அடங்காத கொடுமைகளை சந்தித்து வருகின்றனர்.  உதாரணமாக பிரதமர் மார்ச்-24 ஆம் தேதி, காணொலி காட்சியில் தோன்றி, அதிரடியாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு என அறிவித்தார்.  அதன் பின்னரும் தொடர்ந்து ஊரடங்கு நீடிப்பு செய்து அறிவிக்கப்பட்டது.  அதிரடியாக ஊரடங்கு அறிவித்த காரணத்தால் பலகோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், கல்வி, தொழில், வியாபாரம், சுற்றுலா போன்றவைகளுக்காக பல மாநிலங்களுக்கு சென்றவர்கள் ஊர்திரும்ப முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். மாநிலத்துக்கு உள்ளேயே பல காரணங்களுக்காக வெளி மாவட்டங்களுக்கு சென்றவர்கள் வீடு திரும்ப முடியாமல் சிக்கிக் கொண்டார்கள்.  அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு எந்த ஏற்பாடும் செய்துகொள்ள முடியாமல் மக்கள் விழி பிதுங்கி நின்றனர்.

பிரதமர் அறிவிப்பதற்கு முன்னரே ஊரடங்கினை மாநிலங்களின் சில பகுதிகளில் சம்பந்தப்பட்ட முதலமைச்சர்கள் அறிவித்த இடங்களில் இந்த நெருக்கடிகள் ஏற்படவில்லை. இதைப்போல முழு ஊரடங்கினை மாநில முதலமைச்சர்கள் மூலம் அறிவிக்கிற ஏற்பாட்டினை பிரதமர் செய்திருந்தால் ஊரடங்க காலத்தில் மக்கள் அனுபவித்த துன்ப துயரங்கள், நெருக்கடிகள் பெரும்பகுதி தவிற்திருக்க முடியும்.

ஒருவேளை, கொரோனாவை எதிர்த்த போராட்டத்தை வீரியத்துடன் நடத்த வேண்டுமென்ற அக்கறையில் பாரதப்பிரதமர் இத்தகைய ஊரடங்கினை அறிவித்தார் என வாதிடக்கூடும். ஆனால், இது உண்மைக்கு மாறானது. பிப்ரவரி மாதமே உலகின் பல நாடுகளில் கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக அந்நாட்டு அரசுகள் ஊரடங்கு உள்ளிட்ட பல நடவடிக்கைகளை மேற்கொண்டபோது, மோடி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வருகைக்கான ஏற்பாடுகளில் மூழ்கி இருந்தார். பிப்ரவரி மாத கடைசியில் கொரோனா வேகமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், மோடி குஜராத்தில் உருளைக்கிழக்கு விவசாயிகள் மாநாட்டில் பேசிக்கொண்டிருந்தார். கொரோனாவுக்கான மருத்துவ உபகரணங்களுக்கு பல நாடுகள் அல்லாடிக்கொண்டிருந்தபோது, சீனாவுக்கு மருத்துவ உபகரணங்களை அனுப்பி வைத்தேன் என பெருமை பேசிக்கொண்டிருந்தார். மார்ச் மாதம் கேரளாவில் சில மாவட்டங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆட்சி மாற்றத்துக்கான ரசவாத பணிகளில் ஈடுபட்டிருந்தார். உண்மையில், பிரதமர் மோடிக்கு கொரோனா குறித்த அக்கறை இருந்திருக்குமேயானால், பிப்ரவரி மாதத்திலேயே மாநிலங்களை உஷார்படுத்தி, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருக்க முடியும். இதன் மூலம், கொரோனா வைரஸ் தொற்றை தொடக்கத்திலேயே தடுத்திருக்க முடியும் என்பதோடு, நீடித்த ஊரடங்குகள்கூட அவசியம் இல்லை என்ற நிலையை உருவாக்கியிருக்க முடியும்.

இதில் இன்னொரு முக்கியமான அம்சமும் உள்ளது. “பேரிடர் மேலாண்மை சட்டம்-2005” என்பது பலவிதமான பேரிடர்கள் குறித்த வரையறுப்புகளைக் கொண்ட சட்டமாகும். இச்சட்டத்தில் பெருந்தொற்று (epidemic) நோய்கள் இடம்பெறவில்லை. ஆனால், மத்திய அரசு, இந்த சட்டத்தின்கீழ் கோவிட்-19க்கான விதிகளை உருவாக்கி, அதை மாநில அரசுகளின் தலைகளில் திணித்து அமலாக்கக் கோருவது அரசியல் சட்டத்துக்கே விரோதமானதாகும். இது மட்டுமின்றி, பொது சுகாதாரம், நோய், மருத்துவம் ஆகிய இத்துறைகள் அனைத்தும் மாநில அரசுகளின் அதிகார எல்லைக்குள் உள்ளதாக அரசியல் சட்டம் வகுத்து அளித்துள்ளது. மாநில அரசுகளின் அதிகாரங்களுக்கு உட்பட்ட துறைகளில், மாநில அரசுகள் மட்டுமே விதிகள், உத்தரவுகள், நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இத்துறைகளில் எந்த சூழ்நிலையிலும் மத்திய அரசு மூக்கை நுழைக்கக் கூடாது.

உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள பல்வேறு தீர்ப்புகளில் இந்திய அரசியல் சாசனத்தின் கூட்டாட்சி கோட்பாட்டில் மத்திய அரசு கூடுதலான அதிகாரங்களைக் கொண்டிருந்த போதிலும், மாநிலங்கள் சுயாதிபத்திய உரிமை கொண்டதென அழுத்தமாக குறிப்பிட்டுள்ளது. இதன் அர்த்தமென்னவெனில், மாநிலங்களுக்கு வகுத்தளிக்கப்பட்டுள்ள உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவது அரசியல் சட்ட அடிப்படைக்கு விரோதமானது என்பதே. ஆனால், கோவிட்-19 என்ற பெருந்தொற்று பரவல் நோய் குறித்த அனைத்து நடவடிக்கைகளும்.. அதாவது நோய் தடுப்பு, மருத்துவ சிகிச்சை, சுகாதாரப்பணிகள் உள்ளிட்டவைகளில் உத்தரவுகளை பிறப்பிக்கவும், அரசாணைகளை பிறப்பித்து செயல்படுத்தவும், மாநில அரசுகளே அதிகாரம் கொண்டவைகளாகும். இந்த சட்ட வரம்புகளை மீறிய மத்திய மோடி அரசு, கோவிட்-19 தொடர்பான விதிகளை உத்தரவுகளாக பிறப்பித்து செயல்படுத்தி வருகிறது.

பெருந்தொற்று நோய்கள் சட்டம்

பெருந்தொற்று பரவல் நோய் மீதான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்வதற்கான ஒரு சட்டம் பிரட்டிஷ் அரசால் நிறைவேற்றப்பட்டு, இன்றும் அது அமலில் உள்ளது. இச்சட்டத்திற்கு “பெருந்தொற்று நோய்கள் சட்டம்-1897 (Epidemic diseases Act-1897) “என அழைக்கப்படுகிறது. சுமார் 120 ஆண்டுகளை கடந்துவிட்டதால் இச்சட்டம் அமலில் இருக்க வாய்ப்பில்லை என சிலர் கருதக்கூடும். ஆனால், உண்மை என்னவெனில் இப்போதும் இச்சட்டம் அமலில் இருப்பதும், இச்சட்டத்தை பயன்படுத்தி சில மாநில அரசுகள் கோவிட்-19 காலத்தில் ஊரடங்கினை பிறப்பித்துள்ளதும் கவனிக்கத்தக்கது. மோடி அரசு ஊரடங்கினை பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ஐ பயன்படுத்தி கோவிட்-19 காலத்தில் முதன்முறையாக மார்ச்-22ல் ஊரடங்கு பிறப்பிப்பதற்கு முன்னாலேயே கேரள அரசு பெருந்தொற்று நோய்கள் சட்டம்-1897ஐ பயன்படுத்தி கேரளாவின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்தது. இதேபோல, இதர சில மாநிலங்களும் இச்சட்டத்தை பயன்படுத்தி தங்கள் மாநிலத்தில் ஊரடங்கினை பிறப்பித்துள்ளன.

இச்சட்டம் பெருந்தொற்று நோய், பரவல் நோய் உள்ளிட்ட நோய்கள் மீதான நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்வதற்கென்றே உருவாக்கப்பட்ட சட்டமாகும். கடந்த பல்லாண்டுகளில் இச்சட்டத்தின்படியே நோய் தொற்று எதிர்ப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்வதும், அந்நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஊக்கமளிப்பதும் நடைமுறையில் இருந்து வருகிறது- இச்சட்டத்தில், மத்திய அரசுக்கு ஒரு வாய்ப்பு மட்டும் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, பெருந்தொற்று பரவல் நோய் ஏற்பட்ட காலங்களில் நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வோரையும், வெளிநாடுகளில் இருந்து உள்நாட்டுக்கு வருவதையும், மாநிலங்களுக்கு இடையில் பயணிப்பவர்களையும் கண்காணித்து முறைப்படுத்துவதற்கான பணிகளை மட்டுமே மத்திய அரசு செய்ய முடியும்.

ஆனால், மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கண்ட சட்டங்களுக்கு விரோதமாக மாநில அரசுகளின் இறையாண்மையை தவிடுபொடியாக்கி, மத்திய அரசுக்கு சம்பந்தம் இல்லாத கோவிட்-19 பெருந்தொற்று பரவல் தொடர்பாக அனைத்து விதிமுறைகளையும் உருவாக்கி மாநில அரசுகளின் மீது திணித்து வருகிறது. இத்தகைய நடவடிக்கைகள், பகிரங்கமாக அரசியல் சட்டத்தை மீறுவது என்பதோடு, கூட்டாட்சி தத்துவத்துக்கு சமாதி கட்டுவதுமாகும்.

பிஎம்-கேர்

கோவிட்-19ஐ பயன்படுத்தி, பிரதமர் மோடி தலைமையில் பிஎம்-கேர் என்ற புது நிதி திரட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடு விடுதலை அடைந்தது முதல் இத்தகைய இடர்ப்பாடு காலங்களில் உதவி செய்வதற்கென பிரதம மந்திரி நிவாரண நிதி என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு மாறாக, இந்த புதிய திட்டத்தினை மோடி அரசு உருவாக்கி உள்ளது. இந்நிதியினை பராமரிப்பதற்கும், முறைப்படுத்துவதற்கும், தணிக்கை செய்வதற்குமான ஏற்பாடுகள் எதுவும் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை.

70 ஆண்டுகளுக்கு மேலாக பிரதம மந்திரி நிவாரண நிதி அமலில் இருக்கும்போது, இத்தகைய புதிய திட்டம் ஏன் என்ற கேள்விக்கு நியாயமான பதிலும் அளிக்கப்படவில்லை. இந்த நிதி திரட்டல் ஏற்பாட்டிலும் மாநிலங்கள் வஞ்சிக்கப்படுகின்றன. தொழில் நிறுவனங்கள் தங்களது லாபத்தில் 2%ஐ சமூக சேவை திட்டங்களுக்கு(சிஎஸ்ஆர்) செலவழிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இந்த சிஎஸ்ஆர் நிதியை கம்பெனி நிர்வாகங்கள் புதிதாக துவக்கப்பட்டுள்ள பிஎம்-கேர் நிதிக்கு தாராளமாக அளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதே சமயம், மாநில முதலமைச்சர்கள் தலைமையில் உள்ள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கம்பெனி நிர்வாகங்கள் இந்த சிஎஸ்ஆர் நிதியை அளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து மாநிலங்களிலும் உள்ள தொழில் நிறுவனங்கள் சிஎஸ்ஆர் நிதியை பிஎம்-கேர் நிதிக்கு மட்டுமே அளிக்க முடியும். நிதி பற்றாக்கறையில் தடுமாறும் மாநில அரசுகளுக்கு நிதி கிடைக்கும் வாய்ப்புகள் இதன் மூலம் தட்டிப்பறிக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றுக்கான சோதனைகள், மருத்துவ கட்டமைப்புகளை பலப்படுத்துவது, மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவது, நோய் தொற்று பாதித்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது, மாநிலம் முழுவதும் தூய்மைப் பணிகளை மேற்கொள்வது போன்ற போன்ற அடுக்கடுக்கான பணிகளை கவனிக்க வேண்டிய கட்டாயம் மாநில அரசுகளுக்கு ஏற்பட்டது.

இன்னொரு பக்கம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வாழ்வாதாரத்தை இழந்த அனைத்துப் பகுதி மக்களுக்கும் உணவு, அடிப்படைத் தேவைகள் மற்றும் நிவாரணங்களை வழங்க வேண்டிய பெரும் பணிகளை சமாளிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இத்தகைய பணிகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு அதிகப்படியான நிதி மற்றும் மருத்துவ உபகரணங்கள், அரிசி மற்றும் உணவுப்பொருட்கள் அனைத்தும் தேவை ஏற்பட்டன. நாட்டில் உள்ள மாநில அரசுகளும் இந்தத் தேவைகளை ஈடுகொடுக்க முடியாமல், மூச்சுத்திணறும் நிலையில் தள்ளாடிக் கொண்டிருந்தன. மருத்துவத் தேவைகளை ஈடுகொடுப்பதற்கும், மக்களின் வாழ்வாதார தேவைகளை ஈடுகொடுப்பதற்கும் தங்களது சொந்த நிதி ஆதாரத்திலிருந்து மாநில அரசுகள் ஓரளவுக்கே ஈடுகொடுக்க முடிந்துள்ளது. இதுவரை அறிவிக்கப்பட்டிருக்கிற மருத்துவ மற்றும் நிவாரண ஏற்பாடுகள், யானை பசிக்கு சோளப்பொறி இட்டது போலவே உள்ளன.

கொரோனா நோய் தொடர்பான மருத்துவப் பணிகளுக்கும் பொருளாதார இழப்பீடுகளை ஈடுசெய்வதற்கும் மத்திய அரசு மாநிலங்களுடன் இணைந்து அதிக நிதி அளிப்பதன் மூலமே கொரோனா பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பாற்ற முடியும். ஆனால் மத்திய மோடி அரசு மாநில அரசுகள் வற்புறுத்தி பல முறை கோரிக்கை எழுப்பிய போதிலும் போதிய நிதி அளிக்க மறுத்துவிட்டது.

உதாரணமாக, தமிழக முதல்வர் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள நிதித்தேவை குறித்து ஏப்ரல் முதல் தேதி விரிவான கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அக்கடிதத்தில் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அனைத்து மாநிலங்களுக்கும் உடனடியாக ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்க வேண்டும் எனவும், அதில் தமிழ்நாட்டிற்கு ரூ. 9,000 கோடி அளிக்க வேண்டும் எனவும், அதே போல 20-21ஆம் ஆண்டிற்கு மாநில அரசுக்கு 33% கூடுதல் கடன் வாங்கிக் கொள்வதற்கு அனுமதி அளிக்க வேண்டுமெனவும், மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ. 3000 கோடியும், நெல் கொள்முதல் செய்வதற்கு ரூ. 1321 கோடியும் தேசிய பேரிடர் நிதியிலிருந்து முன்பணமாக ரூ. 1000 கோடியும் கோரியிருந்தார். இது மட்டுமின்றி, ஏற்கனவே தமிழகத்திற்கு மத்திய அரசு வருவாய் பற்றாக்குறை மானியமாக 15வது நிதிக்குழுவின் சிபாரிசுப்படி ரூ. 4023 கோடியும் ஜிஎஸ்டி வரிப் பகிர்வில் மத்திய அரசு அளிக்க வேண்டிய பங்குத் தொகை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கொடுக்க வேண்டிய தொகை போன்ற பல தலைப்புகளில் ரூ.16,400 கோடி அளித்திட வேண்டுமெனவும் தொடர்ந்து வற்புறுத்தப்பட்டு வந்துள்ளது.

ஆனால் மத்திய அரசு இதுவரையில் மாநில அரசுக்கு வழங்கியுள்ள மொத்தத் தொகை ரூ. 6,420 கோடி மட்டுமே. அதாவது வரிவருவாயில் மத்திய அரசின் பங்களிப்பாக ரூ. 1,928 கோடியும் வருவாய் பற்றாக்குறை மானியமாக ரூ. 402 கோடியும் 2019-2020 டிசம்பர் ஜிஎஸ்டி பங்களிப்பாக ரூ. 1,369 கோடியும் மாநில பேரிடர் நிவாரண நிதிக்காக ரூ. 510 கோடியும் கிராமப்புற சுகாதார திட்டங்களுக்காக ரூ. 312 கோடியும் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு மத்திய அரசு ஏற்கனவே அளிக்க வேண்டிய பாக்கித் தொகையில் மூன்றில் ஒரு பங்குத் தொகையை மட்டுமே அளித்துள்ளது. இதில் வேதனை என்னவெனில், கொடூரமான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட சிறப்பு நிதியாக வழங்கவில்லை என்பதுதான். மேலும் மாநில அரசு கடன் பெறுவதற்கான அனுமதியைக் கூட மத்திய அரசு வழங்க மறுத்துவிட்டது.

மாநில அரசுகள் ஏற்கனவே நிதிநெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. நிதி வரவு-செலவில் பற்றாக்குறை ஏற்பட்டு கடனில் மூழ்கி வருகின்றன. தமிழக அரசின் கடன் சுமை நடப்பு ஆண்டோடு சேர்த்து ரூ. 4,56,000 கோடியாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வட்டிக்காக மட்டும் ரூ. 30,000 கோடி வரை செலுத்த வேண்டியுள்ளது. நடப்பாண்டில் கொரோனா பாதிப்பால் மாநிலத்தில் சொந்த வருவாய் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் சொந்த வரிவருவாய் உற்பத்தி இழப்புகளாலும் வியாபார மந்தத்தினாலும் பெரும் சரிவு ஏற்படும். பத்திரப் பதிவு, டாஸ்மாக் விற்பனை, பெட்ரோலிய பொருட்கள் மீதான வரி வருவாய் எதிர்பார்த்ததை விட சரிபாதியாகக் குறையும் என கணக்கிடப்பட்டுள்ளது.

அதேசமயம் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளால் மாநில அரசின் செலவினங்கள் உயர்ந்து கொண்டே வருகின்றன. உதாரணமாக, கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு ரூ 3218 கோடி ஒதுக்கியதுடன் மருத்துவம், சுகாதாரப் பணிகளுக்கு கூடுதலான செலவுகளை மேற்கொண்டுள்ளது. ஒருபக்கம் நிதி நெருக்கடி இன்னொரு பக்கம் கூடுதல் நிதி செலவினங்கள் என்ற இருமுனைத் தாக்குதல்களுக்கு உள்ளாகி்யுள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவியினால் மட்டுமே மக்களைக் காப்பாற்ற இயலும். ஆனால் மத்திய அரசு கடைப்பிடித்து வரும் மாற்றாந்தாய்ப் போக்கு மாநில அரசுகளை முடக்கிப் போட்டுவிடும் ஆபத்தானதாகும்.

கொரோனா தொற்று ஏற்பட்டு மூன்றரை மாதங்கள் முடிந்துவிட்டன. ஐம்பது நாட்களுக்கு மேலாக ஊரடங்குகள் நீடித்துக் கொண்டிருக்கின்றன. இருந்தபோதிலும், கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்துவதிலும், மருத்துவ சோதனைகள் நடத்துவதிலும், நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும், இன்னொரு பக்கம் ஏற்பட்டுள்ள வேலையிழப்பு, தொழில் உற்பத்தி பாதிப்பு, ஏழை-நடுத்தர மக்களின் வாழ்வாதார இழப்புகளை மீட்டெடுப்பதிலும் மத்திய மாநில அரசுகள் பெரும் தோல்வியை சந்தித்துள்ளன.

இத்தகைய தோல்விக்கான அடிப்படை காரணங்களைக் கண்டறிய வேண்டும். உலகம் இதற்கு முன் கண்டிராத நோய்த் தொற்றால் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இதனை எதிர்கொள்ள உலகின் பல நாடுகள் கூடுதலான நிதியினை ஒதுக்கி மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. உதாரணமாக, ஜப்பான் 71.1%, அமெரிக்கா 13%, ஸ்வீடன் 10%, பிரான்ஸ் 9.3%, ஸ்பெயின் 7.3% என தங்களது நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் இந்த விகிதங்களை ஒதுக்கியுள்ளன. ஆனால் 132 கோடி மக்களை கொண்ட இந்திய நாட்டில் பாஜக அரசு கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக ஒதுக்கிய நிதி ரூ 1.7 லட்சம் கோடி மட்டுமே. அதாவது இந்திய நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 1% கூட இல்லை. மேலும் ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டு அமுலாக்கப்பட்டு வரும் சில திட்டங்களுக்கான நிதியும் இந்தத் தொகையில் அடங்கும். அவைகளை நீக்கிவிட்டு கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைக்காக மட்டும் ஒதுக்கப்பட்ட தொகை 0.6% என நிபுணர்கள் தெரிவித்துள்ளதில் இருந்து கொரோனா எதிர்ப்புப் போராட்டத்தில் மோடி அரசின் அக்கறையைப் புரிந்து கொள்ள முடியும். இதற்கான அறிவிப்புகளில் மத்திய அரசே நேரடியான நிவாரண உதவிகளை பெயரளவிற்கு அறிவித்ததே தவிர, இத்தொகையில் மாநில அரசுகளுக்கான பங்கீட்டுத் தொகையாக ஏதும் வழங்கவில்லை.

கொரோனா தடுப்பில் படுதோல்வி அடைந்துவிட்ட நிலையில் மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கி நோய்த்தடுப்பு மற்றும் நிவாரண உதவிகள் வழங்கவில்லை என பொதுமக்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழும்பியுள்ள நிலையில் தற்போது ரூ. 20 லட்சம் கோடியை ஒதுக்கி உள்ளதாக மோடி அறிவித்துள்ளார். இதற்கான நிவாரணத் திட்டங்கள் தவணை முறையில் நிதி அமைச்சரால் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த அறிவிப்புகளை எல்லாம் உற்று நோக்கினால் நேரடியாக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு மாறாக வங்கிகளில் கடன் வழங்குவது; கடன் தவணை காலக்கெடுவை நீட்டிப்பது போன்ற வெற்று அறிவிப்புகளே அதிகம் இடம்பெற்றுள்ளன. நேரடியான நிவாரண நிதி எதையும் ஒதுக்காமல், ரூ. 20 லட்சம் கோடியை ஒதுக்கி விட்டதாக இமாலய கட்டுக்கதைகளை பிரதமர் மோடியால் மட்டுமே எழுத முடியும்.

இந்த நிலைமைக்கு மாறாக உண்மையிலேயே கையில் கிடைத்த அதிகாரங்களைக் கொண்டு கொரோனா பாதிப்பை வெற்றிகரமாக ஒரு மாநிலம் எதிர்கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது கேரளா மட்டும்தான். அங்கு மட்டும் இது எப்படிச் சாத்தியமானது? கொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக ரூ. 20,000 கோடியினை ஒதுக்கியது மட்டுமின்றி அதில் சரிபாதி நிதியையும் அதிகாரங்களையும் உள்ளாட்சி அமைப்புகளிடம் அளித்தது என்பதுதான் கொரோனாவை வெற்றிகரமாக அந்த மாநிலம் எதிர்கொண்டதில் இருக்கும் சூட்சுமம் ஆகும். மாநில அரசின் அழைப்பை ஏற்று உள்ளாட்சி மன்றங்கள் மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்களில் நேரடியாக மக்கள் பங்கேற்கிறார்கள். இந்த ஊரடங்கு காலத்தில் கேரளத்தில் 1400க்கும் மேற்பட்ட சமுதாய சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டு புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் உணவு உறுதி செய்யப்பட்டது. இவற்றை நடத்துவது ஆங்காங்கே உள்ள உள்ளாட்சி மன்றங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. சுகாதாரப் பணிகள் முழுவதையும் உள்ளாட்சி அமைப்புகளே செய்கின்றன. பல நூற்றுக்கணக்கான கிராமங்களில் மாற்றுத்திறனாளிகள், மற்ற நோயாளிகளுக்கு பாதுகாப்பு மையங்களை உள்ளாட்சி மன்றங்களே ஏற்படுத்தின. இந்த நடவடிக்கைகளுக்கெல்லாம் மாநில அரசு உள்ளாட்சி மன்றங்களுக்கு நிதி உள்ளிட்ட ஏற்பாடுகளைச் செய்து தந்தது. கேரளத்தில் உள்ளாட்சி அமைப்பின் ஒரு பகுதியாகவே பெண்களின் மேம்பாட்டுக்கான குடும்பஸ்ரீ திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் மூலமாக இன்னும் களத்தில் முழுமையாக உள்ளாட்சி அமைப்புகளால் செயல்பட முடிந்திருக்கிறது. இந்தியா முழுவதும் கொரோனா பரவலும் பாதிப்பும் தீவிரமடைந்துள்ள நிலையில், அதிகாரப்பரவல் மூலமாகத்தான் கேரளா அரசு அதைக் கட்டுப்படுத்தியிருக்கிறது.

எனவே கொரோனா பாதிப்பு, அதைக்கட்டுப்படுத்துவது என்பது முற்றிலும் மருத்துவம் சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல; அந்த நடவடிக்கைகளை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் மத்திய அரசே அனைத்து அதிகாரங்களையும் நிதியையும் தன்வசம் குவித்துக்கொள்ளாமல், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிநாதமாக உள்ள கூட்டாட்சி தத்துவம் என்ற கோட்பாட்டை உறுதியாகப் பின்பற்றி மாநிலங்களுக்கு முழுமையான அதிகாரம், கூடுதல் நிதி; உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம், சரிபாதி நிதி ஒதுக்கீடு என முழுமையான அதிகாரப்பரவல் மட்டுமே கொரோனா உள்ளிட்ட எத்தகைய நெருக்கடியையும் திறம்பட எதிர்கொள்வதற்கான வழியாகும். மத்திய அரசுக்கு அதை உணர்த்த வேண்டியதும், செயல்படுத்த வைக்க வேண்டியதும் நமது கடமையாகும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s