மின் நூல் வடிவில் படிக்க செயலியை பயன்படுத்தவும்
ஆந்திர மாநிலம் நெல்லூரில் 1913 ஆம் ஆண்டு பிறந்தவர் தோழர் பி.சுந்தரய்யா. தனது 17 வயதிலேயே படிப்பைத் துறந்து விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி தண்டனை பெற்றவர்.
பிறகு கம்யூனிச சித்தாந்தத்தினை வாழ்க்கை இலட்சியமாக ஏற்றார். உழைக்கும் மக்களையும் விவசாயத் தொழிலாளர்களையும் திரட்டடுவதிலும், மாபெரும் மக்கள் இயக்கங்களை உருவாக்குவதிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.
ஹைதராபாத் நிஜாம் மன்னனுக்கு எதிராக நடைபெற்ற நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றதில் தோழர் சுந்தரய்யாவிற்கு முக்கிய பங்கு உணடு.
வரலாற்றில் தெலுங்கானா போராட்டம் என்று அழைக்கப்படுகிற அந்தப் போராட்டம் பல லட்சக்கணக்கான விவசாயிகள் ,விவசாயத் தொழிலாளர்களையும் ஈர்த்த போராட்டம். தலைமுறை தலைமுறையாக நிலத்தில் உழுது பாடுபட்டு வரும் மக்களை அடிமைகளாக வைத்திருந்த நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக, நிலத்தில் உழுபவருக்கே உரிமை என்று விவசாயப் புரட்சி நிகழ்ச்சி நிரலை முன்னுக்கு கொண்டு வந்த போராட்டம்.
அந்தப் போராட்டத்தில் தலைமை தாங்கிய கம்யூனிஸ்டுகள் இந்திய சோசலிச மாற்றத்தில் விவசாயிகளின் புரட்சிகரமான பங்கினை உயர்த்திப் பிடித்தனர். இத்தகு பாரம்பரியம் கொண்ட போராட்டம்.
தோழர் சுந்தரையா “தெலுங்கானா மக்கள் போராட்டமும், அதன் படிப்பினைகளும்” என்கிற சுமார் 600 பக்க நூலில் போராட்ட வரலாற்றை பதிவு செய்துள்ளார். இந்தியாவில் உழைக்கும் மக்களுக்கான மாற்றமும், பாட்டாளிவர்க்க அதிகாரமும் மலர வேண்டும் என்று போராடுகிற அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் நூல் அது. பல்லாயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் இந்த போராட்டத்தில் உயிர் நீத்தனர். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நீண்ட தியாக வரலாற்றில் தெலுங்கானா போராட்டத்திற்கு முக்கிய இடம் உண்டு.
1964-ஆண்டில் மார்க்சிஸ்ட் கட்சி உதயமானபோது அதன் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு மார்க்சிஸ்ட் கட்சி வளர்ச்சிக்கு அரும்பணி ஆற்றியவர். 1985 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி அன்று தோழர் சுந்தரய்யா மறைந்தார்.
இன்று கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில்,’எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்’ என்று ஆட்சியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தோழர் சுந்தரய்யா வாழ்க்கையை நினைவுகூர்வது சோசலிச இலட்சியத்தின் மீதான உறுதிப்பாட்டை வலுப்படுத்த உதவிடும்.
தமிழகத்தில் மார்க்சிய தத்துவத்தை ஏந்திப் பிடித்து, உலக நடப்புகளையம் நாட்டு நடப்புகளையும் மார்க்சிய லெனினிய பார்வையில் விளக்குகிற கட்டுரைகளை மார்க்சிஸ்ட் மாத இதழ் வெளிக்கொண்டு வருகிறது.
இன்று மின் நூல் வடிவமெடுத்து மேலும் பல்லாயிரக்கணக்கான வாசகர்களை சென்றடைய உள்ளது.
இன்று தோழர் க.பாலகிருஷ்ணன் அவர்கள் தோழர் சுந்தரய்யாவிற்கு அஞ்சலி செலுத்தி மார்க்சிஸ்ட் இணையதளத்தில் மின் நூல் பிரிவினை துவக்கி வைக்கிறார்.
வாசகர்கள் தொடர்ந்து நல்லாதரவு அளிக்க கோருகிறோம்.
இன்றைய தினத்திற்கு மேலும் ஒரு சிறப்பு உள்ளது. இன்று உலகில் வியட்நாம் நாடு சோசலிச நாடாக சாதனைகள் பல படைத்து வருகிறது. வியட்நாமில் புரட்சி நடத்தி சோசலிசத்தை உருவாக்கிய ஹோசிமின் பிறந்த தினம். 1890ஆம் ஆண்டு மே 19 அன்று பிறந்த மாபெரும் பாட்டாளி வர்க்கத்தின் உன்னதமான தலைவர் ஹோசிமின் வாழ்க்கையையும் நினைவுகூர்வது அவசியம்.
– என்.குணசேகரன்
மார்க்சிஸ்ட் ஆசிரியர் குழு.
Leave a Reply