அன்வர் உசேன்
கேரளாவின் கோவிட் 19 வைரசுக்கு எதிரான போராட்டம் மற்றும் வெற்றி குறித்து இந்திய பத்திரிக்கைகள் மட்டுமல்ல; உலகம் எங்கும் உள்ள சுமார் 30க்கும் அதிகமான பத்திரிக்கைகள் கட்டுரைகளை எழுதியுள்ளன. வாஷிங்டன் போஸ்ட்/ நியூ யார்க் டைம்ஸ்/ கார்டியன்/ அல்ஜசீரா/ கலீஜ் டைம்ஸ்/ எக்னாமிஸ்ட் போன்ற புகழ்பெற்ற பத்திரிக்கைகளும் இதில் அடங்கும்.
இந்தியாவில் மட்டுமல்ல உலகில் உள்ள பல நாடுகளுக்கும் கேரளா முன்மாதிரியாக உள்ளது. கேரளாவைவிட நன்றாக செயல்பட்ட நாடுகளைக் குறிப்பிட வேண்டும் எனில் சோசலிச நாடுகளான சீனா, வியட்நாம் மற்றும் கியூபாவைதான் குறிப்பிட வேண்டும். இதன் பொருள் மற்ற நாடுகள் ஒன்றுமே செய்யவில்லை என்பது அல்ல! சில முதலாளித்துவ நாடுகள் கூட கடுமையாக பணியாற்றி உள்ளன. ஆனால் கேரளா மற்றும் சோசலிச நாடுகளின் மக்கள் ஆதரவு அணுகுமுறை தீர்மான பங்கை வகித்துள்ளன என்பதே முக்கியமானது.
கேரளாவின் வெற்றிக்கு கீழ்கண்ட முக்கிய காரணங்களை குறிப்பிடலாம்:
- அரசுத்துறையில் வலுவான சுகாதார கட்டமைப்பு
- அதிகார பரவல் காரணமாக வைரசுக்கு எதிரான போரில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரமிக்கத்தக்க பங்கேற்பு
- குடும்பஸ்ரீ போன்ற சுய உதவி குழுக்கள் மற்றும் வெகு மக்கள் அமைப்புகளின் கடுமையான பணி
- முன் கூட்டிய திட்டமிடல்
- சீரிய அரசியல் தலைமை
- மக்களின் ஒத்துழைப்பு
- சிவப்பு நாடாவில் சிக்கி கொள்ளாத நிர்வாக எந்திரம்
- மருத்துவ பாதுகாப்பை உத்தரவாதப்படுத்திய பொருளாதார பாதுகாப்பு.
சிறந்த சுகாதார கட்டமைப்பு
கேரளாவின் சுகாதார கட்டமைப்பு வலுவானது மட்டுமல்ல; தரமானதும் கூட! அரசு மருத்துவமனைகள் தனியார் அமைப்புகளுக்கு இணையானவை. ஒவ்வொரு கிராமத்திலும் மருத்துவமனை உண்டு. மருத்துவர்கள்/செவிலியர்கள்/பரிசோதனை கூடம் உண்டு. மிக முக்கியமாக கிராம மற்றும் வட்ட அளவில் மருத்துவமனைகளை உள்ளாட்சி அமைப்புகள் நிர்வகிக்கின்றன. இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளும் மருத்துவ துறையும் ஒருங்கிணைந்து செயல்படுவது சாத்தியமானது.
இந்த சூழல் சில நாட்களில் உருவானது அல்ல! பல ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடதுசாரி அரசாங்கங்கள் திட்டமிட்டு நிதி மற்றும் மனிதவள முதலீடு செய்தன. இது தொடங்கியது 1957ம் ஆண்டு தோழர் இ.எம்.எஸ். ஆட்சியில்! இடையில் வந்த காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கங்கள் இந்த திசை வழியை மாற்றவில்லை அல்லது மாற்ற அனுமதிக்கப்படவில்லை.
இந்த வலுவான, தரமான சுகாதார கட்டமைப்புதான் இன்று வைரசுக்கு எதிரான போராட்டத்தில் அடிப்படையாக இருந்து உதவியுள்ளது.
வைரஸ் எதிர்ப்பு போர் மக்கள் இயக்கமாக!
சுகாதார கட்டமைப்பு மட்டுமே வைரசை கட்டுப்படுத்த இயலாது. உதாரணத்திற்கு தமிழகத்திலும் கட்டமைப்பு மோசம் என கூற இயலாது. இன்னும் சொல்லப்போனால் கேரளாவைவிட தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் அதிகம். எனினும் அந்த கட்டமைப்பை பயன்படுத்த வைரஸ் எதிர்ப்பு போரில் மக்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும். அது தமிழகத்தில் நடக்கவில்லை; கேரளாவில் நடந்தது.
ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பும் அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் முன்களப் போராளிகளாக செயல்பட்டனர். தமது எல்லையினுள் உள்ள மக்களை அணுகுவது/ வெளியூரிலிருந்து வந்தவர்களை கண்காணிப்பது, அவர்களுக்கு உதவுவது போன்ற பணிகளை உள்ளாட்சி அமைப்புகள் செவ்வனே செய்தன. தினசரி மக்களுடன் தொடர்பில் இருந்ததால் அவர்கள் மக்களின் ஒத்துழைப்பை பெற முடிந்தது.
உதாரணத்திற்கு ஒரு கிராம உள்ளாட்சி தனிமனித இடைவெளியை உத்தரவாதப்படுத்த குடைகளை பயன்படுத்த முன்வந்தது மட்டுமல்ல; குடைகளை மக்களுக்கு மானிய விலையில் கொடுத்தது. இத்தகைய முன்கையெடுப்பு வைரஸ் எதிர்ப்பு போரில் மிக முக்கியம்!
அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் இடதுசரிகளின் கைகளில் இல்லை. காங்கிரஸ் கூட்டணி கட்சிகளும் கணிசமாக உள்ளாட்சி அமைப்புகளில் உண்டு. களத்தில் இடதுசாரி கட்சிகளும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளும் இணைந்தே செயல்பட்டன. சில இடங்களில் மக்களிடமிருந்து தனிமைப்படுவதை தவிர்க்க பா.ஜ.க.வும் இணைந்தது என பத்திரிக்கைகள் குறிப்பிடுகின்றன. மாநில அளவில் காங்கிரஸ் விமர்சனம் கூறினாலும் கீழ்மட்ட களத்தில் கட்சி வேறுபாடின்றி பணிகள் நடந்தன.
கேரளாவின் குடும்பஸ்ரீ குழுக்களும் வாலிபர்/மாதர்/மாணவர் வெகு மக்கள் அமைப்புகளும் களத்தில் தன்னலம் கருதாது குதித்தனர். முகக்கவசம், கிருமிநாசினி தயாரிப்பு/ சமுதாய சமையலறைகள்/ இந்த சமையலறைகளுக்கு காய்கறிகள் சேகரிப்பு போன்ற பல பணிகளில் இந்த அமைப்புகள் ஈடுபட்டன. உணவு பொருட்களும் மருந்துகளும் வீடுகளுக்கு நேரில் சென்று தர 2.75 இலட்சம் பேர் கொண்ட தன்னார்வலர் குழுக்கள் உருவாக்கப்பட்டன. இதிலும் வெகு மக்கள் அமைப்புகள் பங்கு முக்கியமானது.
அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்றினர். எங்கும் வன்முறை இல்லை; காவல்துறை கெடுபிடி இல்லை. மருத்துவ ஊழியர்களுக்கு எதிரான பாகுபாடு இல்லை.
தமிழகத்தில் என்ன நடந்தது? அனைத்து கட்சி ஒருங்கிணைப்புக்கு எந்த முயற்சியும் இல்லை. எதிர்க்கட்சி தலைவர்கள் என்ன மருத்துவர்களா? எனும் அகங்காரம்தான் வெளிப்பட்டது.
சிறந்த அரசியல் தலைமையும் சீரிய நிர்வாக எந்திரமும்
கோவிட் வைரஸ் போன்ற பேரிடர் காலத்தில் நிர்வாக அமைப்பு செவ்வனே செயல்படுவது அவசியம். ஆனால் நிர்வாக இயந்திரம் மட்டுமே வெற்றியை ஈட்டாது. உதாரணத்திற்கு தமிழக நிர்வாக இயந்திரம் சிறந்ததுதான்! தமிழகம் இந்த அளவிற்காவது தாக்குபிடித்தது எனில் அதற்கு காரணம் இங்கு இருந்த நிர்வாக அமைப்புதான்! ஆனால் இந்த நிர்வாக இயந்திரம் சிகப்பு நாடாவில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டும் எனில் சிறந்த அரசியல் தலைமை தேவை. அது தமிழகத்தில் இல்லை. கேரளத்தில் இருந்தது.
கேரளாவின் அரசியல் தலைமை என வெளி உலகம் அறிந்த இரண்டு தலைவர்கள் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் சுகாதர அமைச்சர் ஷைலஜா டீச்சர் ஆவர்! இவர்களின் பங்கு மிக முக்கியமானது. எனினும் அவர்களுடன் பல அரசியல் ஆளுமைகளும் செயல்பட்டன. நிதி அமைச்சர் தாமஸ் ஐசாக் உட்பட அமைச்சர்கள் அனைவரும் மட்டுமல்ல; மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் தொடங்கி ஏராளாமான கட்சி தலைவர்களும் ஊழியர்களும் இந்த கூட்டு முயற்சியின் பிரிக்க முடியாத அம்சம்.
இந்த கூட்டு முயற்சிதான் பல மாநிலங்கள் என்ன செய்வது என சிந்திப்பதற்கு முன்பே கேரளம் களத்தில் அமலாக்குவதில் சாத்தியப்படுத்தியது. அவற்றில் சில;
- மார்ச் 10ம் தேதியே ஊரடங்கு
- தொற்று நோய் சிறப்பு சட்டம்
- ரேபிட் டெஸ்ட் எனும் விரைவு பரிசோதனை
- பிளாஸ்மா சிகிச்சை
- வெளிநாடுகளில் இருந்த கேரளா மக்கள் ஊர்திரும்பும் பொழுது தனிமைப்படுத்த 2.5 இலட்சம் படுக்கைகள்
- காலியாக இருந்த கட்டடங்களும் படகுகளும் மருத்துவமனைகளாய் மாற்றம்
- அலைபேசி நிறுவனங்களுடன் பேசி கூடுதல் இணையதள வசதி
- வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கு பி.எஸ்.என்.எல். சிம் கார்டுகள்
- வெளிநாட்டில் உள்ள கேரள மக்களுக்கு டெலி மெடிசின் எனும் மருத்துவ ஆலோசனை
- 1400 சமுதாய சமையல் கூடங்கள்
- இடம் பெயர் தொழிலாளர்களுக்கு 19,000 முகாம்கள்
- மருத்துவ கண்காணிப்புக்கு அலைபேசியில் பல செயலிகள்
இவையெல்லாம் கேரளா அரசாங்கம் அமலாக்கிய முதன்மைகள்!
மருத்துவ பாதுகாப்பை உத்தரவாதப்படுத்திய பொருளாதார பாதுகாப்பு
மேற்கண்ட அனைத்து முயற்சிகளும் வெற்றி அடைந்தன எனில் அதற்கு மிக முக்கிய காரணம் கேரளா அரசாங்கம் அறிவித்த ரூ 20,000 கோடி பொருளாதார திட்டம்தான். வேறு எந்த மாநிலமும் இந்த அளவிற்கு செய்யாத நிவாரணம் மட்டுமல்ல; மோடி அரசாங்கம் முற்றிலும் புறக்கணித்த அம்சம் பொருளாதார பாதுகாப்பு ஆகும். உணவு இல்லை எனில் ஊரடங்கு மீறும் சூழல் உருவாகும் என்பதை கேரளா அரசாங்கம் தெளிவாக உணர்ந்து இருந்தது. எனவேதான் இந்த பொருளாதார திட்டம்!
கேரளாவின் நிதி நிலைமை மோசமாக இருந்த பொழுதும் அரசாங்கம் இந்த முயற்சிகளை எடுத்தது. மோடி அரசாங்கம் உதவ முன் வராத சூழலில் வெளிச்சந்தையிலிருந்து 9% வட்டிக்கு கடன் வாங்கியுள்ளது கேரள அரசாங்கம்.
ஏன்?
“கேரளாவில் உணவு இல்லை என ஒருவருக்கும் சூழல் இருக்கக்கூடாது என்பதே அரசாங்கத்தின் குறிக்கோள்”
என்றார் முதல்வர் பினராயி விஜயன்.
Leave a Reply