ச.லெனின்
கொரோனா ஊரடங்கு காலம் எல்லோரையும் முடக்கிப்போட்டது. குடும்ப வன்முறையோ இந்த காலத்தில் முடங்கிப் போகாமல் மேலும் அதிகரித்துள்ளது என்கின்றன புள்ளிவிவரங்கள். உலகளவில் சுமார் முப்பது சதவீத குடும்ப வன்முறைகள் இக்காலத்தில் உயர்ந்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை தேசிய பெண்கள் ஆணையத்திற்கு குடும்ப வன்முறைகள் குறித்து வரும் புகார்களின் எண்ணிக்கை இந்த ஊரடங்கு காலகட்டத்தில் இருமடங்கு உயர்ந்துள்ளது.
வீட்டில் இருப்பது பாதுகாப்பா..?
கொரோனா பரவலில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள “வீட்டிலேயே இருங்கள்” என்று அறிவுறுத்தப்பட்டோம். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க கேட்டுக்கொள்ளப்பட்டோம். ஆனால் பல பெண்களுக்கோ வீடே பாதுகாப்பற்றதாகத்தான் உள்ளது. பெண்களிடம் “சமூக இடைவெளியை” எப்போதும் நம் ஆணாதிக்க சமூக அமைப்பு கடைப்பிடிப்பதே இல்லை. ஏனெனில் பெண்களை உடைமையாகக் கருதுவதும், அந்த உடைமையின் உரிமையாளன் என்கிற வகையில் அவர்கள் மீதான உரிமையும் ஆண்களுக்கே என்ற போக்குமே இதற்கு அடிப்படையாக உள்ளது.
பெண்களை சகமனுஷியாகப் பார்க்காமல் அவர்களை “உற்பத்திக் கருவியாகவும்“ அதன் உடைமையாளனாகவும் ஆணாதிக்க சமூகம் தன்னை நிலை நிறுத்திக்கொண்டது. எனவேதான் கம்யூனிச சமூகத்தில் எல்லா உடைமைகளும் பொதுவுடைமையாகும் என்பதை அறிந்த அவர்கள் பெண்களும் பொதுவாக்கப்படுவார்கள் என்று கூறினர். இத்தகைய பாசாங்கான வழிமுறைகளில் பொதுவில் ஒரு அறச்சீற்றத்தை கையாண்டனர். கம்யூனிசம் என்பது உண்மையில் “பெண்கள் வெறும் உற்பத்திக் கருவிகளாக இருக்கும் நிலையை ஒழித்துக்கட்டுவதுதான்“ என்று மிகத் தெளிவாகவே கம்யூனிஸ்ட் அறிக்கை பேசியது.
அதே போல் “ஒவ்வொரு சகாப்தத்திலும் ஆதிக்கம் செலுத்திய கருத்துக்கள், அந்தந்த காலத்தின் ஆளும் வர்க்கத்திற்குரிய கருத்துக்களாகவே எப்போதும் இருந்துள்ளது. “ஒருவரின் செயல்பாடுகள் தனி மனிதரின் தனிப்பட்ட செயல் போல் இருந்தபோதும் அவை ஒரு வகையில் சமூகத்தால் கட்டுப்படுத்தப்பட்ட அல்லது வழிநடத்தப்பட்ட தன்னிச்சை செயல்களே ஆகும். அத்தகைய ஆணாதிக்கம் நிறைந்த ஆளும் வர்க்கத்தால் வழிநடத்தப்படும் போக்கின் வெளிப்பாடாகவே குடும்ப வன்முறைகளைப் பார்க்க முடியும்.
குடும்ப வன்முறை, சம்பள வெட்டு, வேலை இழப்புகள் உள்ளிட்ட சமூக பொருளாதார பிரச்சினைகளையும், அதனால் மேல் எழுந்துள்ள மன அழுத்தங்கள், சமூக பதட்டங்கள் ஆகியவைகளை புரிந்து கொண்டு செயல்படும் சரியான பார்வை அரசுக்கு இல்லை.
சிறு ஆசுவாசமும் பறிபோனது
ஊரடங்கால் புலம் பெயர் தொழிலாளர்களில் உள்ள பெண்கள், குழந்தைகளின் நிலை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது ஒரு பக்கமெனில், ஊரடங்கு என்கிற பெயரில் ஒரே கூரையின் கீழ் அடைக்கப்பட்ட பல பெண்கள் மற்றும் குழந்தைகளின் நிலையும் பாதுகாப்பானதாக இல்லை. வேலைக்குச் செல்லாத பெண்களுக்கு முன்பு சமையல் வேலையை முடித்து குழந்தைகளையும், கணவனையும் பள்ளிக்கும், அலுவலகத்திற்கும் அனுப்பிவிட்டு சற்று முதுகு சாய்க்கவேனும் சிறிது நேரம் கிடைக்கும். ஆனால் தற்போது எல்லோரும் வீட்டில் உள்ள நிலை எல்லா நேரமும் அவர்கள் அடுப்படியிலேயே இருக்கவேண்டியது என்றாகிவிட்டது. வேலைக்குச் செல்லும் பெண்களோ வீட்டு வேலை, வீட்டிலிருந்தபடியே அலுவலக வேலை என இரண்டையும் சிரமத்தோடு மேற்கொள்கின்றனர். பெண்களுக்குள்ள இந்த வழக்கமான கொடுமைகளுக்கு மத்தியில்தான் குடும்ப வன்முறைகளும் அதிகரித்துள்ளது.
வார்த்தைகளால் வாட்டுவது, செயல்களால் வதைப்பது, அடிப்பது, பல்வேறு வகைகளில் உடல் ரீதியாகத் துன்புறுத்துவது, மனரீதியாகத் துன்புறுத்துவது, பாலியல் சித்திரவதை என குடும்ப வன்முறை பல வகைகளில் தொடர்கிறது. ஊரடங்கு என்கிற பெயரில் எல்லோரும் ஒரே கூரையின் கீழ் அடைப்பட்டு உள்ள நிலையில், பல பெண்கள் இதுவரை பெற்றுவந்த சிறு பொழுது ஆசுவாசத்தையும் முற்றாக பறித்துவிட்டது. முன்பு குடும்ப வன்முறையால் ஒரு பெண் பாதிக்கப்பட்டால் கணவன் வேலைக்குச் செல்லும்போதோ, ஏதேனும் ஒரு இடைவெளியிலோ தனது சொந்தங்களைத் தொடர்பு கொண்டு பிரச்சினையை சொல்ல முடியும். பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மிகவும் கீழ் நிலையில் வைக்கப்பட்டுள்ள பெண்கள் இந்த கொரோனா காலத்தில் முழு நாளும் “எல்லா அதிகாரமும் பெற்ற“ ஆண்களின் கண் பார்வையில் நிறுத்தப்பட்டுள்ளனர். கொடுமைக்காரர்களின் கைப்பிடியிலிருந்து சற்று நகரவும்கூட வாய்ப்பற்றதாகிவிட்டது சூழல். அருகில் உள்ள உறவினர்கள் நண்பர்கள் வீட்டுக்கு அடைக்கலம் தேடிப் போகவும் வழி இல்லை. பொது போக்குவரத்தெல்லாம் இல்லாத நிலையில் புகார் தெரிவிக்கவோ கொடுமைகளிலிருந்து தப்பிச் செல்லவோ வழியற்ற நிலையிலேயே இன்று பெண்கள் உள்ளனர்.
இப்படியான விஷயங்களையெல்லாம் மாதர் அமைப்புகள் எடுத்துரைத்த பின்பே அரசு சில அறிவிப்புகளை வெளியிட்டது.
அரசு செய்ய வேண்டியவை
- பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து புகார் கிடைக்கபெற்ற உடனே விரைந்து நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்
- குடும்ப வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு உணவு மற்றும் தங்கும் ஏற்பாட்டை பாதுகாப்பான சுகாதாரமான தரமான வகையில ஏற்பாடு செய்து கொடுப்பது
- உடனடியாக நிதி உதவிகளை செய்வது.
- பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் குழந்தைகளுக்கும் மனநல ஆலேசனைகள் வழங்குவது.
- கணவரை சார்ந்து வாழமுடியாத நிலையில் உள்ள பெண்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் நிதி ஆதாரத்தை உருவாக்கி தருவது
- சட்ட ரீதியான உதவிகள் செய்வது
- குற்றவாளிகள் மீது தாமதமின்றி நடிவடிக்கை எடுப்பது
குடும்பம் அடிமைகளின் கூடாரம்
பழமைவாதம் நிறைந்த நிலப்பிரபுத்துவத்துடன் சமரசம் செய்துள்ள இந்திய முதலாளித்துவம் தனது குறைந்தபட்ச ஜனநாயக பங்களிப்பைக் கூட ஆற்றாமலே உள்ளது. இந்திய குடும்ப அமைப்பு முறையில் உள்ள ஆணாதிக்க போக்கின் மீது அது பெரிய அளவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அது வழங்கும் குறைந்தபட்ச ஜனநாயகமும் பெயரளவிலானது தானே அன்றி அது பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள் உள்ளிட்ட பழமைவாதங்களுக்கு முடிவு கட்டும் செயலை செய்வதில்லை.
Familia என்கிற சொல் துவக்கத்தில் திருமணமானவர்களையும் அவர்களின் குழந்தைகளைக் குறிக்குகின்ற, குடும்பத்தைக் குறிப்பதற்கான சொல்லாக இல்லை. “Famulus என்றால் வீட்டு அடிமை என்று பொருள். Familia என்பது ஒரு நபருக்குச் சொந்தமான அடிமைகளின் மொத்த எண்ணிக்கையைக் குறிக்கும்” என்று எங்கெல்ஸ் “குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்“ என்ற தனது நூலில் சுட்டிக்காட்டுகிறார். குடும்பம் என்ற பழைய அர்த்தத்திலான அடிமை முறையின் உள்ளடக்கத்தை கொண்டே நவீன கால குடும்பமும் உள்ளது. இந்த ஆணாதிக்க உடைமை வர்க்க போக்கே பெண்கள் மீதான வன்முறைகளுக்கு அடித்தளமிட்டுக் கொடுத்து அதைத் தொடர வைக்கிறது. உடனடி நடவடிக்கையாக நடைமுறையில் முன்னெழும் பிரச்சினைகளுக்கான கோரிக்கைகளையும் போராட்டங்களையும் முன்னெடுக்கும்போதே நீண்டகால திட்டமிடலுடன் பிரச்சினைகளின் அடித்தளத்தை உடைக்கும் செயல்முறையையும் இணைக்க வேண்டியுள்ளது.
ரஷ்ய புரட்சிகர பெண் போராளி கொலந்தாய் குறிப்பிடுவது போல் எந்த குடும்ப அமைப்பும் முன்பிருந்த அதே நிலையில் இன்றில்லை.
சொத்துடைமையை மையமாக கொண்ட ஆணாதிக்க குடும்ப அமைப்பு முறையும் மாற்றப்பட்டே ஆக வேண்டும். பெண்ணடிமைத் தனத்தை நிலைநிறுத்தியுள்ள சொத்துடைமையை தூக்கியெறியும் பொதுவுடைமை ஒன்றே அதற்கான வழியாகும்.
அலெக்ஸாண்ட்ரா கொலந்தாய்
Leave a Reply