செ.முத்துக்கண்ணன்
கொரோனா வைரஸ் தொற்று உலகளாவிய அளவில் கண்ணுக்கு தெரியாத எதிரியாய் மக்களோடு யுத்தம் நடத்தி வருகிறது. இதிலிருந்து மக்களை விடுவிப்பதற்கு, மீட்டெடுப்பதற்கு, தீர்வு காண்பதற்கான திட்டங்களும், செயல்பாடுகளும் உலக நாடுகளில் உள்ள ஆளும் அரசுகளை இரண்டு பிரிவாக பிரித்துவிட்டது.
மக்களின் உண்மையான நண்பர்கள் யார்? என்பதை உலகம் அறிய தொடங்கிவிட்டது. பேரிடர் காலத்திலும் இந்தியா உட்பட பொதுக்கட்டமைப்பு, பொது சுகாதாரம், பொது விநியோகம் என அரசு கட்டுப்பாட்டில் இருந்த இடங்களில் இதன் செயல்பாடு எப்படி மக்களை மீட்டெடுத்தது. இது தனியார் முதலாளிகள் கையில் இருந்தபோது லாபத்தை மட்டுமே பார்த்து மக்களை சீரழிக்கிறது என்பதை மக்கள் உணரும் தருணமிது.
கோவிட் 19 வைரசிற்கு ஒரு நாட்டின் பெயரை, ஒரு மதத்தின் பெயரை, ஒரு இனத்தின் பெயரை வைத்து மக்களை கூறு போடும் நடவடிக்கைகளை வகுப்புவாத சக்திகளும் மோடி அரசாங்கமும் செய்து வருகிறது. தங்களது தவறுகளில் இருந்து பாடம் கற்பதற்குப் பதிலாக பிரச்சனைகளை திசை திருப்புகிறது. உலகின் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அதிக உயிரிழப்பும், பாதிப்பும் இதனால் பொருளாதார முடக்கமும் அதிகரித்துள்ளது.
மோடி அரசு பெரும் கார்ப்பரேட்கள் நலனில் மட்டுமே அக்கறையோடு செயலாற்றுகிறது. இந்தியாவின் முதல் 63 பெரும் பணக்காரர்களுக்காக கடந்த 6 ஆண்டுகளில் ரூ. 11 லட்சம் கோடிக்கு மேல் வங்கிக் கடன் தள்ளுப்படி, வரிச்சலுகைகள் என வழங்கியுள்ளது. ஒரு பகுதி பன்னாட்டு கம்பெனிகளில் பொருளாதார நெருக்கடி என்ற உடன் நிதிச் சந்தையில் தங்களது முதலீடுகளை திரும்ப எடுத்துக் கொண்டு ஓடி வருகின்றன.
இத்தகைய நிலையில் அரசின் கொள்கைகள் எத்தகைய தாக்குதல் தொடுத்தாலும் இந்திய பொருளாதாரத்தை கட்டமைப்பதில் பெரும் பங்காற்றி வருவது சிறு குறு நடுத்தரத் தொழில்களும், விவசாயத் துறையுமே ஆகும். தேவைக்கேற்ப அளிப்பு இல்லாத நிலையில் பணவீக்கம் உயர்ந்த வண்ணம் உள்ளது. இதை சமாளிக்க வேண்டும் என்ற பெயரில் அதிக கடன் வாங்கினால் வட்டி விகிதம் கூடி உற்பத்தி செலவு கூடி மீண்டும் அதிகமாகும்.
சிறு குறு நிறுவனங்களுக்கான அரசின் உதவிகளை திட்டமிட்டு குறைக்கும் ஏற்பாடுகளை செய்கிறார்கள். வங்கிக்கடன்கள் குறித்த நிபந்தனைகளை கடுமையாக்குவதும், வட்டி விகிதங்களை கூட்டுவதுமாக உள்ளது. இந்நிலை கிராமப்புற விவசாயிகளின் மீதும் விவசாய கடன், வட்டி, மானியங்களின் மீதும் கடும் தாக்கத்தை செலுத்துகிறது. இடுபொருள் செலவு அதிகரிப்பும், குறைந்தபட்ச ஆதார விலை குறைப்பும் விவசாயத் துறையை நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது. இந்த கொரோனா காலத்தில் மட்டும் 14 கோடி பேருக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. அரசின் கடந்த காலச் செயல்பாடுகளில் உயர்பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி நடைமுறை, சுங்கக் கட்டணம், பெட்ரோலிய பொருட்கள் விலைஉயர்வு, ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகள் தொழில்களுக்கு கடும் நெருக்கடியை உருவாக்கி வருகின்றன.
பெரும் கார்ப்ரேட் குழுமங்களின் வளர்ச்சி விகிதம் குறைவாக இருந்த காலத்தில் சிறு, நடுத்தரத் தொழிற்சாலைகளின் வளர்ச்சிவிகிதம் முக்கிய பங்காற்றின. ஏனெனில் நேரடியான வேலைவாய்ப்பையும், பணச் சுழற்சியையும் உருவாக்குகிறது. ஆனால் இந்த நிதியை பெறுவது சிறு குறு தொழில்களுக்கும், ஏழைகளுக்கும், கிராமப்புறத்தினருக்கும் கடினமானதாகவே உள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் வறுமையை ஒழிக்க, வேகமான, விரிவான, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி தேவை.
இக்காலத்தில் இத்தொழில்களுக்கு கணிசமான உதவியும், அதிக அளவிலான உத்தரவாதம் கோராமல் வங்கிகள் கடன் அளிப்பதும், வட்டிக்கான மானியத்தை அரசே ஏற்பதும் அவசியம். ஏற்கனவே பெற்ற கடன்களை திரும்ப செலுத்துவதற்கான கால அளவை ஓராண்டுக்கு நீட்டிப்பதும், அபராத நடவடிக்கைகளை பேரிடர் காலத்தில் நிறுத்தி வைப்பதும் அவசியமான நடவடிக்கையாகும். உதாரணத்திற்கு மத்திய அரசு கொரோனா ஊரடங்கு காலத்தில் 50 கார்ப்ரேட் முதலாளிகள் வாங்கியிருந்த ரூ. 68,500 கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.
கடந்த 6 ஆண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள ரூ. 11 லட்சம் கோடியை சிறு, குறு, நடுத்தர தொழில்களில் முதலீடு செய்தால் என்ன விளைவு உருவாகும் என்பதை பார்ப்போம்.
உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனம் துவங்க 5 கோடி ரூபாய் அரசு அளித்தால், அதன் மூலம் நேரடியாக சுமார் 400 பேரும், மறைமுகமாக 1,000 பேரும் வேலைவாய்ப்பு பெற வழியேற்படும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விலக்கு அளித்த தொகையில் சுமார் 2.25 லட்சம் சிறு குறு தொழில் நிறுவனங்களை துவங்கிட முடியும். இதன் மூலம் 12 கோடி பேருக்கான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.
ஆளும் அரசுகளும், பெரும் முதலாளித்துவ நிறுவனங்களும் லாபம் என்ற ஒற்றைக் கோட்பாட்டை மட்டும் நிலைநிறுத்தவே முயற்சிக்கிறது, தனது சமூகக் கடமையை புறந்தள்ளுக்கிறது. இதனால் தேசத்தின் கட்டமைப்பில் வேலையின்மையை குறைக்கும் நடவடிக்கையை கைவிடுகிறது. இன்றைய உலகமயமாக்கல் கொள்கை நிதி மூலதனச் சந்தையில் தங்கு தடையின்றி செல்ல இருக்கும் கட்டுப்பாடுகளை முற்றாக நிராகரிக்கிறது. இதனை சமநிலைப்படுத்த சிறு,குறு, நடுத்தர தொழில்நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் தொழிலாளர் நலச் சட்டங்களின் மீதும் கடும் தாக்குதலை தொடுக்கிறது.
எனவே இத்தொழில் நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்களை பாதுகாப்பதும் முக்கிய கடமையாக மாறுகிறது. சிறு, குறு, நடுத்தர தொழில்களையும், கிராமப்புற விவசாயத்தையும் பாதுகாப்பதில் மத்திய மாநில அரசுகள் இணைந்து பணியாற்றுவதும், அதற்கான உரிய திட்டமிடலுமே இன்றைய தலையாய கடமையாகும்.
Leave a Reply