பிரகாஷ் காரத்
தமிழில்: ச. லெனின்
(ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டைச் சிறப்பிக்கும் வகையில் 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாத ‘ஃபிரண்ட்லைன்’ இதழில் வெளியான கட்டுரை)
வரலாற்றுச் சிறப்புமிக்க ரஷ்யப் புரட்சி உலகம் முழுமைக்குமான ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியது. ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டைக் கொண்டாடும் இத்தருணத்தில் (2017) இருபதாம் நூற்றாண்டின் நிகழ்வுகளை சற்றே பின்னோக்கிப் பார்ப்பது ரஷ்யப் புரட்சியின் முக்கியத்துவம் மற்றும் அதன் தற்கால பொருத்தப்பாடு குறித்து மதிப்பிட உதவும்.
மனிதகுல வரலாற்றிலேயே தன்னைச் சுரண்டிய ஆளும் வர்க்கத்தைத் தூக்கியெறிந்துவிட்டு சுரண்டலற்ற ஓர் அரசு உருவானது ரஷ்யப் புரட்சியால்தான். அதன் மூலமே முதலாளித்துவத்திற்கு உறுதியானதொரு மாற்றாக சோஷலிசம் உலக வரலாற்றில் முதன்முறையாக முன்னுக்கு வந்தது. தற்கால உலகிலும் ரஷ்யப் புரட்சி நீடித்த பொருத்தமுடையதாக இருப்பதற்கு இந்த உள்ளீடே சான்றாகும்.
ரஷ்யப் புரட்சி என்பது ஜாரின் எதேச்சாதிகாரத்திற்கு எதிரான புரட்சி மட்டுமல்ல; அது ஏகாதிபத்தியம், முதலாளித்துவம் ஆகியவற்றுக்கு எதிரான சோஷலிச குணாம்சம் கொண்ட ஒரு புரட்சியாகும். இதற்கு ஒரு சர்வதேசிய முக்கியத்துவம் உண்டு. லெனினோ, போல்ஷ்விக்குகளோ இப்புரட்சியை தங்கள் நாட்டிற்கு மட்டுமேயானதாகப் பார்க்கவில்லை. அவர்கள் இதை உலக சோஷலிச புரட்சிக்கான முன்னோடியாகவே பார்த்தனர்.
ரஷ்யப் புரட்சியை அதன் ஏகாதிபத்திய எதிர்ப்பு உள்ளடக்கத்தைப் பிரித்து விட்டு புரிந்துகொள்ள முடியாது. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான மார்க்சிய புரிதலை லெனின் மேம்படுத்தினார். அது அவரது உண்மையான, முக்கியமான பங்களிப்பாகும். இந்தப் புரிதலை அடிப்படையாகக் கொண்டே புரட்சிக்கான உத்தி உருவாக்கப்பட்டது. முதலாளித்துவத்தின் உலகளாவிய வளர்ச்சியின் அம்சத்தை மார்க்ஸ் முன்னுணர்ந்திருந்த போதிலும் அவரின் மறைவிற்குப் பிறகே முதலாளித்துவம் ஏகபோக முதலாளித்துவமாக வளர்ந்தது.
மார்க்சிய அணுகுமுறையில் லெனினுக்கு இருந்த மேதமையின் விளைவாக ஏகபோக முதலாளித்துவத்திற்குத் தவிர்க்க முடியாத தேவையாக, உலகளாவிய அமைப்பு முறையைக் கொண்ட ஏகாதிபத்தியத்தின் வளர்ச்சி உள்ளது என்பதை அவர் கண்டுணர்ந்தார். இதை உலகப் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான உறுதியான நடைமுறையோடும், நீண்ட கால உத்தியோடும் அவர் இணைத்தார்.
முழுமையானதொரு முதலாளித்துவ வளர்ச்சிக் கட்டத்திற்குப் பிறகே சோஷலிசப் புரட்சி சாத்தியம் என்ற வழக்கமான மார்க்சிய புரிதலை லெனினின் இந்த ஏகாதிபத்தியம் பற்றிய புரிதல் உடைத்தெறிந்தது. முதலாளித்துவ வளர்ச்சி முழுமையடையாத நிலையிலும் கூட ஏகாதிபத்திய காலகட்டத்தில் ஏற்றத்தாழ்வான முதலாளித்துவ வளர்ச்சியின்போதும் சோஷலிசப் புரட்சி வெற்றியடையும் சாத்தியம் உள்ளது என லெனின் குறிப்பிட்டார்.
ஒட்டுமொத்த உலகமும், உலக முதலாளித்துவ முறைமையின் கீழ் ஏகாதிபத்தியத்தால் கொண்டுவரப்பட்டுவிட்டது. அதன் பலவீனமான கண்ணியில் தாக்குதல் தொடுத்தால் அதை உடைத்தெறிய முடியும் என்றார் லெனின். ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போட்டிகளின் விளைவே முதலாம் உலகப் போர் என்றும் அதன் விளைவாக ஜாரின் ஆளுகையில் இருந்த ரஷ்யா அத்தகைய பலவீனமான கண்ணியாக உள்ளது என்பதையும் லெனின் தான் முதலில் சுட்டிக் காட்டினார்.
ரஷ்யப் புரட்சியின் இரண்டாவது முக்கியமான நீண்டகால உத்தி என்பது சோஷலிசப் புரட்சியைக் கட்டியமைக்க முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை தொழிலாளி வர்க்கம் தலைமையேற்று நடத்தலாம் என்பதாகும். எவ்விதத் தடையுமின்றி சோஷலிச கட்டத்தை அடைய தொழிலாளி வர்க்கம் ஜனநாயகப் புரட்சிக்குத் தலைமை ஏற்க வேண்டியதன் அவசியம் குறித்து முதன்முதலில் வாதாடியதும் லெனின்தான்.
முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிக்கும் சோஷலிசப் புரட்சிக்கும் இடையே மிகப்பெரிய சீனப் பெருஞ்சுவர் எதுவும் இல்லை என்றார் லெனின். இந்தப் புரிதலின் அடிப்படையிலேயே ஜார் ஆட்சியைத் தூக்கியெறிந்த பிப்ரவரி புரட்சிக்குப் (முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி) பிறகு, “ புரட்சி இதோடு முடிவடைந்துவிடவில்லை; சோஷலிசப் புரட்சியை நோக்கி நாம் முன்னேற வேண்டும்” என்று லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சி அறைகூவல் விடுத்தது.
இத்தருணத்தில் லெனின் நாடு கடத்தப்பட்டிருந்தார். பிப்ரவரி புரட்சியின்போது தாயகம் திரும்பிய லெனின், தனது “ஏப்ரல் ஆய்வுரை”யில் பிப்ரவரி புரட்சியானது முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் முழுமையை அடைந்து விட்டது என்று வாதிட்டார். இந்தப் புரட்சிக்குப் பிறகு அமைந்துள்ள முதலாளித்துவத் தலைமையை உழைக்கும் வர்க்கம் ஏற்கக் கூடாது; நாம் மேலும் முன்னேறி தொழிலாளி- விவசாயிகளை அணிதிரட்டி, அதிகாரத்தைக் கைப்பற்றி சோஷலிச கட்டத்தை அடைய வேண்டும் என்றார் லெனின்.
முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை தொழிலாளி வர்க்கம் தலைமையேற்று நிறைவேற்றிய பிறகு சோஷலிச கட்டத்தை நோக்கி முன்னேறுவதற்கு படைப்பாற்றல் மிக்க இரண்டு முக்கியமான உத்தியை போல்ஷ்விக் கட்சி மேற்கொண்டது. ஒன்று விவசாயத் திட்டம்; மற்றொன்று தேசிய இனங்கள் குறித்த திட்டமாகும்.
விவசாயி-தொழிலாளி ஒற்றுமையை உருவாக்கும் உத்தியை கருத்தில் கொண்டே விவசாயத் திட்டம் உருவாக்கப்பட்டது. நிலப்பிரபுத்துவத்தை ஒழிப்போம் என்ற முழக்கத்தின் மூலம் தொழிலாளர்களுடன் ரஷ்ய விவசாயிகளை அணிசேர்க்க முடியும். முதலாளித்துவம் வளர்ந்து வரக்கூடிய அரைநிலப்பிரபுத்துவ நாட்டில் லெனின் புரட்சிக்கான உத்தியாக விவசாயி-தொழிலாளர்களின் ஒற்றுமையை முன்வைத்தார். “முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிக்குப் பிறகு, நிலப்பிரபுத்துவத்திற்கு முடிவு கட்டுங்கள்; உழுபவனிடமே நிலத்தை ஒப்படையுங்கள்!” என்ற கோரிக்கையை முன்வைத்து போல்ஷ்விக்குகள் வாதிட்டனர்.
இதையே “அமைதி, நிலம், ரொட்டி(உணவு)” என்ற ரஷ்யப் புரட்சியின் முழக்கம் எதிரொலித்தது. நிலப்பிரபுத்துவத்திற்கு முடிவு கட்டுவது; நிலக் குவியலை உடைத்தெறிவது என்ற போல்ஷ்விக்குகளின் உறுதியான திட்டமே ரஷ்யப் புரட்சியில் விவசாயி-தொழிலாளியை ஓரணியில் நிற்க வைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. பிப்ரவரி புரட்சி வரையில் ஆலைத் தொழிலாளர்களும் ஜார் ஆட்சி ராணுவத்தில் அதிருப்தியோடு இருந்த வீரர்களுமே போல்ஷ்விக் கட்சியில் அதிகம் இருந்தனர். இந்த ராணுவ வீரர்களைத்தான் ‘சீருடையில் உள்ள விவசாயிகள்’ என லெனின் அழைத்தார். ஜாரின் ராணுவம் வெறிச்சோடிக் கலைந்தபோது இந்த ராணுவ வீரர்களே ‘உழுபவனுக்கே நிலம்’ என்ற போல்ஷ்விக்குகளின் செய்தியை விவசாயிகளிடம் எடுத்துச் சென்றனர்.
தேசிய இனங்கள் குறித்த பிரச்சனைகள்
ஜாரின் ஆதிக்கத்தில் இருந்த ரஷ்யா பல்வேறு தேசங்களை உள்ளடக்கிய ஒரு பேரரசாக இருந்தது. ஜாரின் எதேச்சாதிகார நுகத்தடியின் கீழ் நூற்றுக்கும் அதிகமான தேசிய இனங்கள் அடிமைப்பட்டு இருந்தன. ஜார் பேரரசின் தேசிய ஒடுக்குமுறையால் வேதனையுற்றவர்களுக்கு தேசியம் குறித்த கேள்விகள் முக்கிய அம்சமாக இருந்தன. ஜாரை தூக்கியெறியும் போராட்டத்தின் ஒரு பகுதியாக தேசிய இனங்களுக்கான சுயநிர்ணய உரிமையை முதன்முதலில் போல்ஷ்விக்குகளே முன்வைத்தனர்.
“பிரிந்து செல்வதற்கான முழு உரிமை; விரிவான, தேசிய மற்றும் உள்ளூர் தன்னாட்சி, சிறுபான்மையினருக்கு விரிவான உரிமைகள்” ஆகியவையே தேசிய இனங்கள் குறித்த பிரச்சனைகளுக்கு புரட்சிகர தொழிலாளர்களின் திட்டம் என லெனின் பதிலளித்தார். பல்வேறு தேசிய இனங்களின் உரிமைகளை உத்தரவாதப்படுத்தும் உத்தியை போல்ஷ்விக்குகள் கையாண்டதே ரஷ்யப் புரட்சிக்கு முன்பும் பின்பும் ஆன வெற்றிக்குக் காரணமாகும். இத்தகைய பல்வேறு தேசிய இனங்களின் ஒருங்கிணைவே சோவியத் சோஷலிச ஒன்றியங்களின் குடியரசு அமைய அடித்தளம் இட்டது.
தேசிய இனங்கள் குறித்த இந்த உத்தி ரஷ்யாவிற்கான அடித்தளம் மட்டுமல்ல; இதையே பின்னர் 1920ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் அகிலத்தில் தேசிய இனங்கள் குறித்த பிரச்சனைகளுக்கான தீர்வாகவும் லெனின் முன்வைத்தார். இதன் மூலம் காலனியம், தேசியம் குறித்த பிரச்சனைகளுக்கான நீண்ட கால, நடைமுறை உத்திகளுக்கு ரஷ்யப் புரட்சி ஒரு புதிய வழியைக் காட்டியது.
அரசும் புரட்சியும்
அரசு அதிகாரத்தைக் கையில் எடுப்பதில் ரஷ்யப் புரட்சி கவனம் செலுத்தியது. ஆளும் வர்க்கத்தின் கீழ் இருந்த அரசைத் தூக்கி எறிந்துவிட்டு தொழிலாளி வர்க்கம் ஒரு புதிய அரசை நிறுவ வேண்டியது அவசியம் என்று ரஷ்யப் புரட்சிக் காலத்தில் எழுதப்பட்ட அரசும் புரட்சியும் என்ற நூலிலேயே லெனின் அழுத்தமாகக் கூறியிருந்தார். 1871-இல் நிகழ்ந்த பாரீஸ் கம்யூன் அனுபவங்கள் குறித்த மார்க்சின் பகுப்பாய்வை கருத்தில் கொண்டே, அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவது புரட்சியின் மையமான பணி என்று லெனின் கூறினார். இந்த தத்துவார்த்த ரீதியான உறுதிதான் முதலாளித்துவ அமைப்பிற்கு உள்ளேயே சீர்திருத்த நடவடிக்கைகள் போதுமானது என்று பேசிய சமூக ஜனநாயக வாதத்தை உடைத்தெறிந்தது.
உலக அளவிலான தாக்கம்
இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை ஏகாதிபத்தியங்களின் பேரரசுகளே நீடித்து வந்தன. பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்ட்ரோ-ஹங்கேரி, ஜப்பான், ரஷ்யா ஆகிய பேரரசுகளே உலகை தங்களுக்குள் பிரித்துக் கொண்டு ஆதிக்கம் செலுத்தி வந்தன. இத்தாலி, போர்ச்சுக்கல் போன்ற சிற்றரசுகளும் இருந்தன. இத்தகைய பழைய காலனிய முறைக்கெல்லாம ரஷ்யப் புரட்சி முடிவு கட்டியது. ஜார் பேரரசு தூக்கி எறியப்பட்ட அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு உலகில் அநேகமாக ஒரே ஒரு பேரரசு மட்டுமே எஞ்சியிருந்தது.
தொழிலாளர் –விவசாயிகளின் கூட்டுறவில் எழுந்த ரஷ்யப் புரட்சி காலனிய, அரைக்காலனிய நாடுகளில் விடுதலைக்கான போராட்டங்களுக்கு வலுவான உந்துதலைக் கொடுத்தன. ஆசிய, ஆப்ரிக்க, லத்தீன் அமெரிக்கப் பகுதிகளில் தேசிய விடுதலைப் போராட்டங்களுக்கு அது ஊக்கமளித்தது. காலனிய நாடுகளில் நடைபெற்ற ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களுக்கு சோவியத் அரசு தனது முழு ஆதரவை நல்கியது. இந்தியாவிலும் கூட ரஷ்ய நாட்டின் விவசாயி-தொழிலாளர் புரட்சியானது இந்திய தேசிய காங்கிரஸ், புரட்சிகர குழுக்களைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் மத்தியில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஜனநாயகத்திற்கான போராட்டங்களிலும் ரஷ்யப் புரட்சியின் வலுவான தாக்கம் இருந்தது. பாசிசமே ஜனநாயகத்தின் மிகப்பெரும் எதிரியாகும். பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் உலக கம்யூனிஸ்டுகளும் சோவியத் ரஷ்யாவும் அளப்பரிய தியாகத்தை செய்தனர். பாசிசத்தை எதிர்த்த போராட்டத்தில் சுமார் இரண்டரை கோடி சோவியத் மக்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர்.
மேற்கத்திய முதலாளித்துவ நாடுகள் நாடாளுமன்ற-ஜனநாயக முறையைப் பின்பற்றினாலும் கூட, பொருளாதாரத்தில் அவை எதேச்சாதிகாரத்தையே அமலாக்கி வந்தன. இங்கிருந்த தொழிலாளி வர்க்கம் தங்கள் நாடுகளில் போராட்டங்களை நடத்தி குறிப்பிடத்தக்க பயன்களை பெற்றது. சோவியத் ஒன்றியத்தின் தாக்கத்தின் விளைவாகவே மேற்கு ஐரோப்பாவில் தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதி, ஓய்வூதியம் போன்ற பல மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் நடைமுறைக்கு வந்தன.
ரஷ்யப் புரட்சியானது உலகப் புரட்சிகர இயக்கங்களுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் வழிகாட்டியாக விளங்கியது. ஆசியாவில் சீனா, வியட்நாம், கொரியாவிலும், பின்னர் உலகின் மேற்குப் பகுதியில் இருந்த கியூபாவிலும் புரட்சிகள் வெற்றிகரமாக நடந்தேறவும், உடனடி மற்றும் நீண்டகால உத்திகளுக்கான தத்துவார்த்த அடித்தளத்தையும் அது வழங்கியது.
ரஷ்யப் புரட்சி நடந்து முடிந்து நூறாண்டுகளுக்குப் பிறகும் கூட அதன் பெருமையைச் சீர்குலைக்கும் வேலைகள் தொடர்ந்து நடைபெற்ற வருகின்றன. ரஷ்யாவில் தீவிரவாதத்தின் மூலம் சர்வாதிகார அரசு அமைக்கப்பட்டது என்பது போன்ற சதித்தனமான எழுத்துக்கள் ஆற்று வெள்ளம்போல் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டைக் கொண்டாடும் வேளையிலும் கூட அந்த முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
2017 நவம்பர் 7ஆம் தேதி வெளியான ‘கார்டியன்’ இதழின் தலையங்கம் இவற்றுக்குப் பதில் சொல்லும் முறையில் அமைந்துள்ளது. அதில் “ரஷ்யப் புரட்சியின் தன்மையை திருத்திக் கூறுவதற்கு ஏன் திட்டமிட்ட வகையில் தொடர்ச்சியான முயற்சிகள் நடந்து வருகின்றன? ஏனெனில் திடுக்கிடும் வகையில் அதற்கான பொருத்தப்பாடு இன்றும் நீடித்து வருகிறது. புதிய தாராளவாத முதலாளித்துவம் நெருக்கடியில் ஆழ்ந்துள்ள இத்தருணத்தில், ஏகாதிபத்தியம் தனது மேலாதிக்கத்தைத் தொடர்ந்து நீடித்துவரும் இவ்வேளையில், உலக அளவிலான ஏற்றத்தாழ்வு அதற்கு முந்தைய நிலைகளை எல்லாம் விஞ்சியுள்ள நிலையில், முதலாளித்துவத்தின் அதீதமான பேராசையால் உலக அளவில் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள சீரழிவு போன்றவற்றுக்கு ரஷ்யப் புரட்சி பதில் அளிக்கிறது. இவை இவ்வாறு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு மாற்று உள்ளது. அதுதான் சோஷலிசம்” என்று குறிப்பிட்டுள்ளது.
அக்டோபர் புரட்சியைப் போன்றதொரு புரட்சி மீண்டும் உருப்பெறாது என்பதைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. எனினும் அக்டோபர் புரட்சி நடைபெற்று முடிந்து நூறாண்டுகளுக்குப் பிறகும் கூட அதைத் தொடர்ந்த 20ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்தேறிய புரட்சிகளின் அனுபவங்களை வைத்துப் பார்க்கும்போது எதிர்காலத்தில் உருவாக இருக்கின்ற புரட்சிகள், அக்டோபர் புரட்சியின்போது நிலவிய, சாதாரண, ஏழை எளிய மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், படைவீரர்கள் ஆகியோர் தங்கள் எதிர்காலத்தை தங்களது கைகளில் எடுத்துக் கொண்டார்கள் என்ற அத்தியாவசியமான அம்சங்களின் அடிப்படையில்தான் கட்டமைக்கப்படும் என்று கூறுவதே இங்கு பொருத்தமானதாக இருக்கும்.
நன்றி: ஃபிரண்ட்லைன்
Leave a Reply