கோவிட்-19 பெருந்தொற்றை கையாள்வதில் உலக நாடுகள் மத்தியில் பெரும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. சோசலிச கொள்கைகளை கடைப்பிடிக்கும் கடைபிடித்து வரும் சீனா, கியூபா, வட கொரியா, வியட்நாம் போன்ற நாடுகளும், இந்தியாவின் கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கமும் நோய்க் கட்டுப்பாட்டில் ஆகச்சிறந்த முன்னேற்றங்களை சாதித்திருக்கின்றன.
சோசலிச கொள்கையான திட்டமிடப்பட்ட சமூக வளர்ச்சியே இந்த சாதனைகளுக்கு அடிப்படையாக உள்ளது.
அனைத்து வளங்களையும் மக்களின் நல்வாழ்விற்காக திட்டமிட்ட முறையில் பயன்படுத்தி வந்த காரணத்தால் சோசலிச நாடுகளின் கட்டமைப்பால் பெருந்தொற்றை திறம்பட எதிர்கொள்ள முடிந்தது.
சீனாவும், கியூபாவும் பெற்ற கவனத்தை வியட்நாம் செய்த சாதனைகள் பெற்றிடவில்லை. எனவே இக்கட்டுரையில் வியட்நாம் சாதித்த சாதனைகள் குறித்து பார்க்கலாம்.
வியக்கச் செய்யும் சாதனைகள்:
9.5 கோடி மக்கள்தொகை கொண்ட நாடு வியட்நாம், அதன் பரப்பளவை ஒப்பிடும் பொழுது மிக அதிக மக்கள் நெருக்கம் கொண்ட நாடாகும். மேலும் சீனாவுடன் எல்லையை பகிர்ந்துள்ள வியட்நாம், அந்நாட்டுடன் நெருங்கிய வர்த்தக தொடர்பும் கொண்டுள்ளது. இந்த காரணங்களால் வியட்நாம் பெரும் ஆபத்தில் உள்ளதாக கருதப்பட்டது. ஆனால் மே மாதம் இறுதி வரையிலான நிலையில், வியட்நாமில் மொத்தமாகவே வெறும் 328 பேர் மட்டுமே கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டனர். இதில் 188 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். மேலும் 85% நோயாளிகள் குணமடைந்துவிட்டனர். இதற்கெல்லாம் மகுடம் சூட்டும் விதமாக, வியட்நாமில் கோவிட்-19 நோயால் ஒருவர் கூட பலியாகவில்லை. இப்படிப்பட்ட பெரும் சாதனையை வியட்நாம் செய்திருக்கிறது.
முதலாளித்துவ பத்திரிக்கையான “தி எக்கனாமிஸ்ட்” வியட்நாமையும் கேரளாவையும் ஒப்பிட்டு, அதன் சாதனைகளை போற்றி வெளியிட்ட பின்னரே அதன் செய்திகள் வெளியே தெரியத் தொடங்கின. சோசலிச கொள்கைகளை முழு மூச்சுடன் எதிர்க்கும் பத்திரிக்கையாலேயே கம்யூனிச அரசுகளின் சாதனைகளை போற்றுவதை தவிர்க்க முடியவில்லை.
எகனாமிஸ்ட் பத்திரிக்கையின் ஒப்பீட்டில் வெளிப்படும் மற்றொரு உண்மை வியட்நாமிற்கும் கேரள மாநிலத்திற்கும் இடையிலான நெருங்கிய வரலாற்று தொடர்பு ஆகும். மக்கள் நல்வாழ்வை முதன்மையாகக் கொண்ட வளர்ச்சி, பொது சுகாதார கட்டமைப்பு, குறிப்பாக கம்யூனிஸ்டுகளின் திட்டமிட்ட தலைமை, நீண்ட காலமாக செய்து வரும் பொதுச் சுகாதார முதலீடுகள், பொதுக் கல்வியில் அடைந்த முன்னேற்றம் ஆகியவை ஒப்பிட்டு அறிந்துகொள்ள வேண்டியவை.
சீனாவுக்கு வெளியில் கோவிட் நோய்த்தொற்று பரவிய முதல் சில நாடுகளில் ஒன்று வியட்நாம். துரிதமான, விரைவான மற்றும் உறுதியாக பலனளிக்கக் கூடிய நடவடிக்கைகளால் தொடக்கத்திலேயே வீழ்த்திக்காட்டியது. வளரும் நாடுகளும் தங்கள் வளங்களை சரியாக திறம்பட பயன்படுத்தி பெருந்தொற்று பரவலை வெற்றி காண முடியும் என்பதற்கு வியட்நாம் முன்னுதாரணமாக இருக்கிறது.
வியட்நாமின் மருத்துவ கட்டமைப்பு
1945இல் ஹோ சி மின் தலைமையில் வட வியட்நாம் விடுதலை அடைந்தது. மருத்துவ சேவைகள் அனைத்தும் அனைவருக்கும் இலவசமாகவும், முற்றிலுமாக அரசிடம் இருந்தன. இதுவே 1975இல் வட-தென் வியட்நாம் ஒன்றிணைந்த பின்னரும் இந்த நிலை தொடர்ந்தது.
1980களின் பிற்பகுதியில், சீனாவைப் போலவே, சோசலிச சமூகத்தை கட்டியமைக்கும் பணிகளில் சந்தை சக்திகளையும் பயன்படுத்தும் பாதையை வியட்நாமும் கையிலெடுத்தது; இதன் முக்கிய நோக்கம் உற்பத்தி சக்திகளை அதிவேகத்தில் வளரச் செய்வது என்பதே ஆகும். இதன் தொடர்ச்சியாக, 1989இல் மருத்துவ துறையில் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டனஇப்போது அந்த நாட்டில் 4% மருத்துவமனை படுக்கைகள் தனியார் துறையில் உள்ளன. அரசுதான் பெரும்பகுதி சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது. மக்களிடையே பிரபலமான பெரும் மருத்துவமனைகள் பலவும் அரசின் கையிலேயே உள்ளன. சில பொது மருத்துவமனைகள் தன்னிச்சையாக இயங்க அனுமதிக்கப்பட்டு, கட்டணம் வசூலிப்பதன் மூலம் நிதி திரட்டும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது. பிரபலமான மருத்துவர்கள் பலரும் அரசு மருத்துவமனைகளிலேயே பணி புரிகின்றனர். பெரும்பாலும் சிறிய உடல்நலக் குறைவுகளுக்கு மட்டுமே மக்கள் தனியார் மருத்துவமனைகளை நாடுகிறார்கள்.
பெரும் பொது மருத்துவமனைகள் பலவும் நகரங்களில் உள்ளன, அந்த மருத்துவமனைகளே ஊரக பகுதிகளுக்கு சுகாதார நிபுணர்களை வழங்கும் பொறுப்புக்களை ஏற்று செயல்படுகின்றன. ஆரம்ப நிலை சுகாதார மையங்களை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டி வருகிறது வியட்நாம். இதனால் பெரும்பாலான நோய்களுக்கான சிகிச்சைகளை கிராம அல்லது மாவட்ட அளவிலேயே மேற்கொண்டு, மத்திய பொது மருத்துவமனைகளின் மீதான பளு குறைக்கப்படுகிறது. இன்று மருத்துவ சிகிச்சைகளில் 70% ஆரம்ப அல்லது மத்திய நிலை சுகாதார மையங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.
சமூக காப்பீட்டுத் திட்டம்:
1992இல் நிறுவப்பட்ட அரசின் சமூக காப்பீட்டு திட்டம் 90% மக்களுக்கு சுகாதாரத்தை உறுதி செய்கின்றன. இந்த காப்பீட்டில் மகப்பேறு கால நலம், குழந்தை பிறப்பு நலம் உட்பட அடங்காத எந்த செலவும் இல்லை. காப்பீட்டுக் கட்டணத் தொகையிலிருந்து ஏழை மக்களுக்கும், 6 வயதிற்கு உட்பட்டோருக்கும், 80 வயதிற்கு மேலானோருக்கும், விளிம்பு நிலை மக்களுக்கும் 100%-மும், உழைக்கும் வர்க்க மக்களுக்கு 80%-மும் தள்ளுபடி அளிக்கப்படுகின்றது.
நாட்டின் மொத்த சுகாதார செலவில் 60% அரசால் செய்யப்படுகிறது. 40 சதவீதம் மக்களிடம் வசூலிக்கப்படுகிறது. (இந்தியாவில் அரசின் பங்கு இதில் பாதி கூட கிடையாது). பெரும்பாலான மருத்துவர்களும் அரசு பல்கலைக்கழங்களிலேயே சொற்ப கட்டணம் செலுத்தி பயில்கின்றனர். மருத்துவர்களை சுழற்சி முறையில் ஊரக பகுதிகளில் பணி புரியச் செய்யும் முறையும் அமலில் உள்ளது.
வளர்ந்த நாடுகளை ஒப்பிடுகையில், வியட்நாமின் மருத்துவ கட்டமைப்பும், தொழில்நுட்ப மற்றும் அறிவுசார் வளர்ச்சியும் ஆரம்ப நிலையிலேயே உள்ளது. உதாரணமாக 10,000 பேருக்கு 25 படுக்கைகளும், 80 மருத்துவர்களுமே உள்ளனர். வியட்நாமின் மருத்துவ துறை செல்ல இன்னும் நெடுந்தூரம் உள்ளது. ஆனால் இது அனைத்திலும் “அரசு மையப் பங்கு வகிக்கும். அதுவே சோசலிசம்: அரசின் நிலையான வழிகாட்டுதல்”என்கிறார் அந்நாட்டின் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர்.
வரும் முன் காக்கும் பண்பாடு:
வியட்நாம் மருத்துவத்திற்காக சராசரியாக ஆண்டிற்கு ஒருவருக்கு செலவிடுவது வெறும் $216 மட்டுமே. இது வளர்ந்த நாடுகள் செலவீட்டில் 10 சதவீதம் கூடைல்லை. ஆனால் அந்த நாட்டில் சராசரி ஆயுட்காலம் 75 ஆண்டுகளாகும். சீனாவின் சராசரி ஆயுட்காலத்தை விட ஓராண்டு மட்டுமே குறைவாகும். இந்த வெற்றிக்கு காரணம்,வியட்நாம் நோய் தடுப்பில் பெரும் கவனம் செலுத்துவது தான்.
உதாரணமாக அங்கே தடுப்பூசிகள், குழந்தை நலம், ஊட்டச்சத்து, தாய்-சேய் உடல் நலம் போன்ற அனைத்து சேவைகளும் இலவசமாக அளிக்கப்படுகின்றன. இதனால் பொது சுகாதாரத்திற்கான மருத்துவ சேவைகள் மக்களை சென்றடைவது எளிதாகின்றது. இன்று வியட்நாமில் 99% குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் அளிக்கப்படுகின்றது; அமெரிக்காவிலேயே இது 95 சதவீதம்தான். மேலும் கடந்த 30 ஆண்டுகளில் குழந்தை பிறப்பு சமயத்திலான தாய்/சேய் இறப்புகள் 80% குறைந்துள்ளன. 90% பிரசவங்கள் தேர்ந்த நிபுணர்களால் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த சாதனைகளுக்கு உலகம் முழுவதும் பல விருதுகளை வியட்நாம் பெற்றுள்ளது.
வியட்நாமின் 63 மாகாண நோய் தடுப்பு மையங்களும், 700 மாவட்ட நோய் தடுப்பு மையங்களும், 11,000 சமூக நோய் தடுப்பு மையங்களும் தொடர்ந்து நோய் பரவலை கண்காணிப்பதன் மூலம், நாட்டின் நோய் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளார்கள். 2003இல் சார்ஸ் (SARS) பெருந்தொற்றை முற்றிலுமாக ஒழித்த முதல் நாடு என்ற பெருமையை வியட்நாம் பெற்றது. 2009இல் மலேரியாவை ஒழித்தது வியட்நாம், பின்னர் லாவோஸ் மற்றும் கம்போடியா உடனான எல்லைப் பகுதிகளில் மீண்டும் மலேரியா பரவிய பொழுது, அப்பகுதிகளுக்குள்ளேயே அந்த நோயை கட்டுப்படுத்தி ஒழித்தது.
கோவிட் 19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்
மேற்சொன்ன அடித்தளம் கோவிட் 19 நோய் எதிர்ப்புக்கு மக்களை தயார்ப்படுத்துவதில் முக்கிய பங்காற்றின. திட்டமிடப்பட்ட பொதுமுடக்கங்கள், சோதனைகள், தனிமைப்படுத்துதல், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் சரியான நேரத்தில் பரவலை கண்டறிதல் ஆகிய நடவடிக்கைகள் இப்போரில் வெற்றிக்கு வழிவகுத்தன.
சீனாவின் ஊகான் நகரத்தில் கோவிட் 19 நோய் தொற்று தொடங்கியபோது பல நாடுகளும் அதனை வெறும் செய்தியாக கருதிக் கொண்டிருந்தார்கள். வியட்நாம் அப்போதே தடுப்பு நடவடிக்கைகளை தொடங்கியது. ஜனவரி 15 அன்று வியட்நாம் சுகாதாரத் துறை அமைச்சர் உலக சுகாதார அமைப்பை தொடர்பு கொண்டு நிலவரத்தை அறிந்துகொண்டு, அடுத்த நாளே இந்த தொற்றின் ஆபத்தை மக்களுக்கு அறிவித்தார். ஊகான் நகரில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட அதே நாளில், வியட்நாம் மருத்துவமனைகளுக்கு வைரசை கையாளும் வழிமுறைகள் வழங்கி தயார்ப்படுத்த தொடங்கிவிட்டார்கள். “இந்த வைரஸ் மக்களின் வாழ்வை எவ்விதத்திலும் பாதிக்காது”என்று அமெரிக்கா கூறிக்கொண்டிருந்த நேரத்தில், சீனாவில் வெறும் 27 நோயாளிகள் இருந்த சமயத்திலேயே, வியட்நாமின் பிரதமர் நுயென் ஷுவன் ஃப்பூ, அந்த நாட்டின் துணைப் பிரதமர் தலைமையில் ஒரு சிறப்பு தடுப்பு அணியை அமைத்தார். ஜனவரி 30 அன்று பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. பிப்ரவரி 1 அன்று அவசர நிலை அறிவிக்கப்பட்டது. சீனா உடனான போக்குவரத்து தடை செய்யப்பட்டது. படிப்படியாக இந்த தடை கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் நீட்டிக்கப்பட்டது.
ஜனவரி 23ஆம் தேதி சீனாவிலிருந்து திரும்பிய இருவரிடம் கோவிட் 19 நோய் அறியப்பட்டது. குறுஞ்செய்தி மூலம் முன்னெச்சரிக்கை ஜனவரி 27 ஆம் தேதி தொடங்கினார்கள். வெளிநாட்டிலிருந்து திரும்பியோரும், தொடர்பில் இருந்தோரும், அறிகுறிகளே இல்லாவிட்டாலும் அரசின் தனிமைப்படுத்தும் வசதிகளில் 14 நாட்கள் தங்க வேண்டும். இதுநாள் வரை குறைந்தது 2 லட்சம் பேர் தனிமைப்படுத்துதலில் 14 நாட்களாவது கழித்துள்ளனர். இதற்காக ராணுவ வசதிகளும், ஓட்டல்களும் பயன்படுத்தப்பட்டன. நோய்த் தொற்று சந்தேகத்தினால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டோர் வெளியே வந்தால், அவர்களின் பெயரை நாளிதழ்களில் அறிவிப்பது போன்ற கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஒரு வீட்டில் நோய் தொற்று இருக்கும் சந்தேகம் இருந்தால், அந்த வீடு அமைந்த பகுதி முழுவதும் மூன்று வேளையும் உணவளிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டது.
F0 (நோய் இருப்போர்), F1 (நோயிருப்போருடன் நேரடி தொடர்பிலிருந்தோர்), F2, F3, F4 (F1-உடன் தொடர்பிலிருந்தோர்) என பல பிரிவுகளாக கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். நோய் தடுப்பு மையங்கள் ஏற்கனவே தயார் நிலையில் இருந்ததால் இந்தப் பணி எளிதானது.
பிப்ரவரி 12 அன்று தலைநகர் ஹனாய் அருகில் உள்ள 10,000 பேர் கொண்ட ஊரக சமூகம் பொதுமுடக்கத்தில் கொண்டுவரப்பட்டது. இதுவே சீனாவுக்கு வெளியில் முதன்முதலில் கொண்டுவரப்பட்ட பொதுமுடக்கம். இந்த நடவடிக்கைகளின் காரணமாக பிப்ரவரி 13 அன்று 16வது நோயாளி கண்டறியப்பட்ட பின், முதல் கட்ட பரவல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது; அதன் பின் இருபது நாட்களுக்கு ஒரு நோயாளி கூட இல்லை.
இரண்டாம் கட்டப் பரவல்:
இதன் பின் மார்ச் 4 அன்று ஐரோப்பாவிலிருந்து திரும்பியோரிலிருந்து இரண்டாம் கட்ட பரவல் துவங்கியது. இந்தப் பரவல் செல்வந்தர்கள் சிலர் தங்களின் பயண விவரங்களையும், உடல் நிலையையும் மறைத்து, தனிமைப்படுத்துதலையும் மீறியதால் துவங்கியதாக கூறப்படுகிறது. இவர்களுள் மார்ச் 6 அன்று 17வது நோயாளி கண்டறியப்பட்டார்;
மார்ச் இறுதியில் நோயாளிகள் எண்ணிக்கை 200ஐ கடந்ததனால், ஏப்ரல் 1 அன்று பிரதமர் 22 நாட்களுக்கு பொது “சமூக இடைவெளி”யை அறிவித்தார். வியட்நாம் இந்தியாவைப்போல் நாட்டையே ஸ்தம்பிக்க வைக்கும் பொது முடக்கத்தை அமலாக்கவில்லை. பரவலை திறம்பட கண்காணிக்கும் வலுவான கட்டமைப்பு இருந்ததனால், தொற்று பரவல் அதிகமாக உள்ள “ஹாட்ஸ்பாட்”களில் மட்டுமே பொதுமுடக்கம் கொண்டுவரப்பட்டது.
வலுவான உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஆரம்ப சுகாதாரத்தின் பலனை இந்நிலையில் பார்க்க முடிந்தது. பொதுமுடக்கம் அறிவிக்கும் அதிகாரம் ஆரம்ப சுகாதார வசதிகளின் உதவியுடன் செயல்படும் உள்ளாட்சி அமைப்புகளுக்கே வழங்கப்பட்டது. அதிகபட்சமாக சில மாகாணங்களும் ஒரு சில மாவட்டங்களும் மட்டுமே பொது முடக்கத்தில் வைக்கப்பட்டன. மற்ற தொற்று கட்டுப்பாடு அனைத்துமே கண்காணிப்பு மூலமும், மக்களின் தடுப்பு நடவடிக்கைகள் மூலமுமே சாத்தியமாக்கப்பட்டது.
பொது முடக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் அரசே அனைவருக்கும் உணவு வழங்கியது. இதர பகுதிகளிலும் விலைவாசி உயராமலும், பதட்டத்தில் வாங்கிக் குவிப்பதையும் தடுத்தது. உதாரணமாக, தலைநகர் ஹனாய் அருகிலுள்ள ஹன்லோய் மாகாணம் அடைக்கப்பட்ட பொழுது, அருகாமைப் பகுதியினர் பலர் பதட்டத்தில் உணவுப்பொருட்களை வாங்கிக் குவிக்கத் துவங்கினர். இது போன்ற செயல்கள் தொற்றை அதிகரிக்கும் என்பதால், உடனே அரசு மற்றும் ராணுவ அதிகாரிகள் அப்பகுதி மக்களுக்கு மலிவு விலையில் பொருட்களை வீட்டிற்கே கொண்டு கொடுத்தனர்.
இக்காலக்கட்டத்தில் வியட்நாமின் ஆராய்ச்சி துறையும், உற்பத்தி துறையும் ஒன்றிணைந்து அரசிற்கு பெரும் துணை புரிந்தன. வெப்பநிலைப் பகுதிகளின் தொற்று நோய்களை எதிர்கொண்ட அனுபவத்தின் காரணமாக, வியட்நாம் ஆய்வாளர்கள் குறுகிய காலத்திலேயே கொரோனா சோதனை ‘கிட்’ஒன்றை கண்டுபிடித்தனர். இந்த கிட்டுகள் அமெரிக்கா போன்ற நாடுகள் பயன்படுத்துவதைவிட கால் பங்கு செலவில் உற்பத்தி செய்யக்கூடியது மட்டுமன்றி, வெறும் இரண்டே மணி நேரத்தில் 100% துல்லியமான முடிவுகளை காட்டக்கூடியவை. மார்ச் 5 அன்று உலக சுகாதார அமைப்பின் ஒப்புதலை பெற்று, ஏற்றுமதியையும் துவங்கியது வியட்நாம். கொரியாவிடமிருந்து கிட்டுகளை இறக்குமதி செய்து வந்த வியட்நாம் நாட்டில் இந்த மலிவு விலை கிட்டுகளின் மூலமாக சோதனைத் திறனை பன்மடங்கு அதிகரித்தது. இது போன்ற கிட்டுகளை கண்டுபிடிக்க வியட்நாமிற்கு 4 ஆண்டுகள் ஆகும் என உலக சுகாதார அமைப்பு கணித்திருந்த நிலையில், ஒரே மாதத்தில் கண்டுபிடித்து சாதனை படைத்தனர் வியட்நாம் ஆராய்ச்சியாளர்கள். மேலும் வியட்நாமின் தனியார் மற்றும் அரசு உற்பத்தி நிறுவனங்கள் முகக் கவசங்கள் மற்றும் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி செய்ய தங்களின் உற்பத்தி திறனை ஒருங்கிணைத்துக்கொண்டன. வியட்நாமின் 40 நிறுவனங்கள் நாள் ஒன்றிற்கு 70 லட்சம் முகக் கவசங்களும், பாதுகாப்பு உபகரணங்களும் உற்பத்தி செய்தன.
சுகாதார ஊழியர்கள் மத்தியில் கொரோனா பரவுவதாக சீனா அளித்த எச்சரிக்கையை தீவிரமாக எடுத்துக்கொண்ட முதல் நாடும் வியட்நாம் தான். ஏப்ரல் 15 அன்று இரண்டாம் கட்ட பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதன் பின், இது நாள் வரை, 50 நாட்களாக வியட்நாமில் ஒரு உள்நாட்டு தொற்று கூட இல்லை. பிறகு கண்டறியப்பட்ட அனைவருமே வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள் மட்டுமே. வியட்நாமின் கட்டுப்பட்டு நடவடிக்கைகளின் வெற்றி அதன் குறியீடுகளில் வெளிப்படையாக தெரிகிறது.
தொற்று அறிதல் விகிதம் எனப்படும் “சராசரியாக எத்தனை சோதனை செய்து ஒரு கோவிட் நோயாளியை கண்டறிந்தனர்”என்ற குறியீட்டில் உலகிலேயே சிறந்து விளங்குவது வியட்நாம் தான். சராசரியாக 800 சோதனைகளில் ஒருவர் மட்டுமே நோயாளி. இதற்கு அடுத்தபடியாக உள்ள தைவானில் இந்த குறியீடு வெறும் 144 மட்டுமே. இந்தியாவின் நிலை பாதாளத்தில் 25க்கும் குறைவாக உள்ளது. இப்போது வியட்நாம் நோயாளிகளில் 60% பேர் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களாகவும், 43% பேர் அறிகுறிகளே இல்லாதவர்களாகவும் உள்ளனர். இவையெல்லாம் வியட்நாமின் நடவடிக்கைகளின் வெற்றியை பிரதிபலிக்கின்றது.
பொருளாதார முன்னெடுப்புகள்
வியட்நாமின் பொருளாதார முன்னெடுப்புகள் இந்தியாவைப்போல் முதலாளித்துவத்தை காப்பாற்றும் நடவடிக்கைகளாக இல்லாமல், உண்மையிலேயே மக்களுக்கு நிவாரணம் அளிப்பவையாக இருந்தன. முதலில் கொரோனா காலத்தில், மக்கள் எத்தனை முறை சோதனை செய்துகொண்டாலும் அவை அனைத்தும் இலவசம், கொரோனா கண்டறியப்பட்டால் சிகிச்சையும் இலவசம் எனவும், இவை அனைத்துமே சமூக காப்பீட்டு திட்டத்தில் அடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதனால் கொரோனா சிகிச்சை பெற எவரும் தயங்கவில்லை.
ஏழை பணக்கார பாகுபாடின்றி, அரசு தனிமைப்படுத்துதலில் இருக்கும் அனைவருக்கும் வசதிகள் அனைத்தும் இலவசம். பணம் படைத்தவராக இருந்தால் அவர் உணவுக்கு மட்டும் கட்டணம் செலுத்துவார். ஏழையாக இருந்தால், அவருக்கு உணவு இலவசமாக அளிக்கப்பட்டதோடு, அவர் வேலைக்குச் செல்ல முடியாததால், நாள் ஒன்றிற்கு $4 வரை ஊக்கத்தொகையும் அளிக்கப்பட்டது.
வேலையிழந்த தொழிலாளர்களுக்கு (இந்திய ரூபாயின் மதிப்பில்) தோராயமாக மாதத்திற்கு ரூ.7500/-, வேலையிழப்பு காப்பீடு இல்லாதோருக்கும், வியாபாரம் முடங்கிப்போன சிறு-குறு தொழில் உரிமையாளர்களுக்கும் மாதம் ரூ.3500/- என்ற ஊக்கத்தொகை மூன்று மாதங்களுக்கு அளிக்கப்பட்டது. இதைத் தவிர வேலை இருப்பினும், இல்லாவிட்டாலும், ஏழை மக்கள் ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ.1000/- வழங்கப்பட்டது. இவையெல்லாம் மக்களுக்கு தக்க நேரத்திலான நிவாரணமாக அமைந்ததோடு, பொருளாதாரத்தில் கிராக்கியையும் விழாமல் காக்கும் நடவடிக்கையாகவும் அமைந்தது.
இவ்வாறு கிராக்கியை பெருக்கும் நடவடிக்கைகள் எடுத்த பின்னரே நிறுவனங்களுக்கு குறைந்த வட்டித்தொகையில் கடன் அளிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஐ.எம்.எஃப் அமைப்பு வியட்நாமின் வளர்ச்சி விகிதம் இந்த ஆண்டில் 2.7% இருக்கும் என கணித்திருந்தாலும், வியட்நாம் பிரதமர் 5 சதவீத வளர்ச்சிக்காக பாடுபடும் என அறிவித்திருக்கிறார்.. உள்நாட்டு கிராக்கி வலுவாக இருந்தாலும், சர்வதேச சூழல் மோசமாக உள்ளதால், அண்மை காலங்களில் ஏற்றுமதித் துறையில் அடைந்த முன்னேற்றங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் தென் கிழக்கு ஆசியாவின் அதிவிரைவாக வளர்ந்து வரும் சுற்றுலாத்தளமாக இருந்த வியட்நாமின் சுற்றுலாத் துறை பின்னடைவை சந்தித்துள்ளது. இதிலிருந்து மீள்வது பெரும் சவாலாக இருக்கும்.
மக்களை முன்னிறுத்தும் கோட்பாடு
வியட்நாமை பொறுத்தவரையில், மக்களின் ஒன்றுபட்ட சக்தியும் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசின் தெளிவான சமூக-அரசியல் பார்வையும் ஒன்றிணைந்து, சோசலிச முறையின் மேன்மையை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்ட அறிவியல், சுகாதார மற்றும் தொழில்நுட்ப தயாரிப்பு நடவடிக்கைகளால் தொற்று நோயின் தாக்கத்தை திறம்பட கட்டுப்படுத்த முடிந்தது.
அவசர நிலை அறிவித்தவுடன், நாட்டு பிரதமர் நுயென் ஷுவன் ஃப்பூ பேசுகையில், “வியட்நாமின் அசாதாரண வளர்ச்சியை தக்கவைப்பதையும், பொது சுகாதாரத்தை உறுதி செய்வதையும் சமநிலையில் வைத்து முன்னேற அரசு முயற்சி செய்து வருகிறது. ஆனால் வளர்ச்சிப் பாதையிலே எவரும் விடுபட்டுப் போகக்கூடாது என்பதனால், பொருளாதாரத்தை விட்டுக்கொடுக்க நேர்ந்தாலும், சுகாதாரத்திற்கே முக்கியத்துவம் அளிக்கப்படும்”என்றார்.
வியட்நாமின் சாதனைகள் அனைத்தும், அந்நாட்டு மக்களின் துணையின்றி சாத்தியமாகி இருக்காது. சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே அரசு கடைபிடித்து வரும் மக்களை முன்னிறுத்திய வளர்ச்சியின் காரணமாக, நாட்டின் மீதான பற்று மக்களிடையே அதிகமாக உள்ளது.
கொரோனா தொற்றுக்கு பின் நடந்த கம்யூனிஸ்ட் கட்சியின் 12வது ப்ளீனம் கூட்டத்தில், “தேசிய சுதந்திரம் மற்றும் சோசலிசத்திற்கான இலக்கை நோக்கி தொடர்ந்து பாடுபட வேண்டும்; மார்க்சிய-லெனினியத்திற்கும், ஹோ சி மின் சிந்தனைகளுக்கும், கட்சி ஸ்தாபனத்தின் வழிகாட்டுதலுக்கும், அரசியல் சாசனத்திற்கும், நாட்டின் நலனிற்கும் விசுவாசமாக இருக்க வேண்டும்”என்று அறிவுறுத்தப்பட்டது. ஆக, இன்று கொரோனாவிற்கு எதிராக வெற்றி பெற்றதைப் போல், வரும் காலங்களிலும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், சோசலிச சமூகத்தை கட்டமைக்கும் பணியில் வியட்நாம் மக்கள் பெரும் வெற்றிகள் காண்பார்கள் என எதிர்பார்க்கலாம்.
கம்யூனிஸ்ட் கட்சியின் நடவடிக்கைகள்
இந்த போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகள் இன்றியமையாதது. கட்சியின் மத்தியக் குழுவின் கீழ் உள்ள வெளியுறவு ஆணையம் உலகின் பல்வேறு கட்சிகளுக்கும் கோவிட் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், அதில் கூட்டு முயற்சி மேற்கொள்வது குறித்தும் கடிதங்கள் எழுதியது.
அவசர நிலை அறிவித்த பின்னர், வியட்நாம் பிரதமர் அவர்கள் “ஹோ சி மின் கம்யூனிஸ்ட் இளைஞர்கள் சங்க”உறுப்பினர்களை சந்தித்து, இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் இணைந்து நாட்டிற்கு உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதன் அடிப்படையில், இளைஞர் சங்க உறுப்பினர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தடுப்புப் பணிகளில் முழு வீச்சில் ஈடுபடத் துவங்கினர். தேவையுள்ள மக்களுக்கு பால், மளிகை, உணவு ஆகியவற்றை வாங்கிக்கொடுப்பதிலிருந்து, இலவச முக கவசங்கள் மற்றும் கிருமி நாசினிகளை மக்களிடம் விநியோகிப்பது, மருத்துவ பணியாளர்களுக்கு உதவுவது, அரசின் விழிப்புணர்வு செய்திகளை சமூகத்தினரிடையே கொண்டு சேர்ப்பது என பல்வேறு பணிகளில் ஈடுபட்டனர். இளைஞர் சங்கம் ஒன்றிணைந்து, மக்களிடமிருந்து நன்கொடைகள் சேகரித்து, நிவாரணப் பணிகளுக்காக அரசிடம் $17,000 வழங்கியது.
கொரோனா தொற்று அடங்கிய பின்பு, ஹனாய் நகரில் இளைஞர் சங்கம் நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் பணியிழந்த 10,000 பேருக்கு வேலை உறுதிசெய்யப்பட்டது. “நான் என் நாட்டை நேசிக்கிறேன்”என்ற இயக்கம் துவங்கி, தேசிய உணர்வை ஆக்கபூர்வமாக பொதுப் பணிகளில் வெளிப்படுத்துவதைப் பற்றிய பிரச்சாரங்களை இளைஞர் சங்கம் மேற்கொண்டது.
இவ்வாறு தொற்று காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் அர்ப்பணிப்புடன் செயல்பட்டுள்ளனர்.
சர்வதேச ஒருமைப்பாடு
“சர்வதேச ஒருமைப்பாடு”என்கிற கம்யூனிச கோட்பாட்டை தவறாமல் பின்பற்றும் கட்சியாக வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியும், அதன் தலைமையிலான அரசும் திகழ்ந்து வருகின்றன. முதலாளித்துவ நாடுகள் பலவும் தங்களின் தோல்வியை மறைக்க சீனா மீது பழி கூறி, பொய்க் கதைகளை ஜோடித்து பரப்பி, சீனர்களுக்கு எதிரான வெறுப்புணர்வை வளர்த்து வந்த வேளையிலே, “சர்வதேச கூட்டு முயற்சிகளையும் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்துவதே கொரோனாவைரஸ் நோயை எதிர்கொள்வதற்கு அவசியம்”என்கிற அதிகாரப்பூர்வ கொள்கையோடு செயல்பட்டது வியட்நாம்.
2003ல் சார்ஸ் தொற்றில் வெற்றி கண்ட பின்னர், பல்வேறு தொற்று நோய்களுக்குமான சிகிச்சைகள், தடுப்பூசிகள், தடுப்பு வழிமுறைகள் அனைத்தையும் உருவாக்கியுள்ள வியட்நாம், இது அனைத்தையும் உலக நாடுகளுடன் திறந்த முறையில் பகிர்ந்து வந்துள்ளது. இந்த கோவிட் 19 சமயத்தில் கூட, விரைவாக மலிவு விலை சோதனை கிட்டுகளை கண்டுபிடித்து உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் பெற்ற வியட்நாம், இதற்கான ஆராய்ச்சிகளை உடனே உலக நாடுகளுடன் வெளிப்படையாக பகிர்ந்து கொண்டது. இவ்வாறு அறிவுசார் தளத்திலும் சர்வதேச ஒருமைப்பாட்டை போற்றி வருகிறது வியட்நாம்.
பல நாடுகளுக்கும் தன்னால் இயன்ற அளவு உதவிகளை செய்து வருகிறது. அண்டை நாடுகளான கம்போடியா மற்றும் லாவோஸிற்கு சுமார் 7 லட்சம் முககவசங்களை வழங்கிய பின்னர், தன்னை காலனியாதிக்கத்தில் வைத்திருந்த பிரான்ஸ் உட்பட பல ஐரோப்பிய நாடுகளுக்கும் 6 லட்சம் முகமூடிகள் அளித்தது. வெறும் 50 ஆண்டுகள் முன்னால் தடை செய்யப்பட்ட நேபாம் ரசாயன குண்டுகளை தன் நாட்டின் மீது வீசிய ஏகாதிபத்திய அமெரிக்காவிற்கு, அதன் மக்களைகாக்க 4.5 லட்சம் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களை (PPE) அனுப்பி வைத்தது வியட்நாம்.
நோய் தொற்று சமயத்திலும் சர்வதேச பிரிவினைவாதத்தை தூண்டும் வலதுசார் ஏகாதிபத்திய சக்திகளின் மத்தியிலே, ஒற்றுமையின் சின்னமாய் விளங்குகிறது வியட்நாம். கியூபாவின் சர்வதேச ஒருமைப்பாட்டு நிலைபாட்டை போற்றும் நேரத்தில், வியட்நாமின் முயற்சிகளை அங்கீகரிப்பதும் அவசியம்.
References:
Leave a Reply