ஆயிஷே கோஷ்
ஆராய்ச்சி மாணவி
ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர் சங்க தலைவர்
மகாராஷ்டிரா மாநிலத்தில், லாத்தூர் நகரைச் சேர்ந்த மாணவன் பராஸ் மடிக்கர் தன்னைப் போன்ற 11வயது சிறுவர்களைப் போலவேதான் நடந்து கொண்டான். ஊரடங்கால் பள்ளி மூடப்பட்டு தனது நான்காம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மகிழ்ந்து போன அவன் மேலும் நீண்ட விடுமுறையை எதிர்நோக்கியிருந்தான். ஆனால் அது நடைபெறவில்லை.
அவனுடைய அக்கா சுருதிக்கு 14 வயது. அவளும் அதே பள்ளியில் படித்து வருகிறாள். இவர்களுடைய தந்தை ஸ்ரீகாந்த் 45 வயது ஓட்டுனராக தன்னுடைய குடும்பத்தை நடத்தி வந்தார். அந்த வேலையை இழந்த பிறகு முன்பைவிட மிகக் குறைந்த சம்பளத்தில் ஒரு வேலையில் சேர்ந்து வாழ்க்கையை நடத்தி வருகிறார். இவர்களது 35 வயதான தாய் சரிதா சமையலராக பணியாற்றிய இடத்தில் ஊரடங்கால் வேலை போனதால் மார்ச் 25 முதல் வீட்டில்தான் இருக்கிறார். எனவே பராஸ் மற்றும் சுருதி ஆகிய இருவரும் தாங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து சிறிது தொலைவில் உள்ள இடத்தில் நாள் முழுவதும் காய்கறிகளை கூடைகளை தலையில் சுமந்து விற்பனை செய்து வருவது பத்திரிகைகளில் வெளியானது.
பராஸ் கூறியிருந்தான்: “தினசரி மாலையில் எனக்கு சொல்ல முடியாத அளவிற்கு கழுத்து வலி இருக்கும். நான் வீடு திரும்பும் போதெல்லாம் எனது அம்மா சிறிது எண்ணெய் ஒத்தடம் கொடுப்பது கொஞ்சம் நிம்மதியாக இருக்கும்” என்று முணுமுணுத்தான். ஆனால் சுருதியின் பிரச்சினை வேறு. “மதிய வேளையில் எனக்கு கடுமையான வயிற்று வலி ஏற்படும். அப்போது மதிய உணவுக்கு முன் சிறிது எலுமிச்சம் சாறு எடுத்துக் கொள்வேன். அது எனக்கு சிறிதளவு வலிநிவாரணம் அளிக்கும்.” இவ்விரு குழந்தைகளும் இந்த ஊரங்கிற்கு முன்பு இத்தகைய உடல் உழைப்பை செலுத்தியதில்லை.
ஆனால் தற்போது நிலவிவரும் மோசமான சூழலில் இப்போது வெளியுலகிற்கு ‘கொஞ்சம் ரொட்டி சம்பாதிக்க’ வந்திருக்கிறார்கள். அவர்கள் இப்போது இருக்கும் நிலையில் வெண்ணெயை பற்றி நினைக்க முடியுமா என்ன?
கடந்த மார்ச் 26 அன்று ஐக்கிய நாடுகள் கல்வி,அறிவியல் மற்றும் பண்பாட்டு கழகம் (UNESCO) வெளியிட்டுள்ள அறிக்கையில்,165 நாடுகளில் உள்ள பள்ளி மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டு, நடைமுறையில் உள்ள கல்வி செயல்பாட்டில் ஏற்பட்டுள்ள திடீர் இடையூறினால் 150 கோடி குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறுகிறது.
உலகம் இதுவரை கண்டிராத ஒரு சூழலை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்த சுகாதார நெருக்கடியில் மட்டுமே இதுவரை 2 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இச்சூழல் மாணவர்கள் மத்தியில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அது கல்வியில் இடைநிற்றலையும், பாலின பாகுபாடுகளையும் கூடுதலாக்கும். சமூகத்தில் வரலாற்று ரீதியாக பின்தங்கிய பிரிவினர் கல்வி கற்பதை தடுப்பதற்கு மேலும் வழி ஏற்படுத்தும். ஐக்கிய நாடுகள் சபை (UNO) மற்றும் உலக சுகாதார நிறுவனம் (WHO), மாணவர்கள் எதிர்கொள்ளும் இத்தகைய சூழலுக்கு எதிர்வினையாற்றும்படி அனைத்து நாடுகளையும் அறிவுறுத்தியிருக்கிறது. ஆனால் உண்மையில் இந்த அறிவுரை எங்கும் பின்பற்றப்படுவதாகவே தெரியவில்லை.
வரலாறு இதற்கு சாட்சியளிக்கிறது, அது எபோலா வாக இருக்கட்டும்; அல்லது தற்போது பரவி வரும் கொரோனாவாக இருக்கட்டும்; எதுவாக இருப்பினும் கல்விதான் மிகவும் மோசமான தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது.
உதாரணமாக, எபோலா நெருக்கடியின்போது மேற்கு ஆப்பிரிக்காவில் கிட்டத்தட்ட 6000 பேர் உயிரிழந்தனர்; 16000 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அப்போது வெளியான அறிக்கைகளில் மனித இனம் சந்திக்கக்கூடிய இத்தகைய நெருக்கடிகளில் கல்விக்கு முன்னுரிமை கொடுப்பது மிகவும் முக்கியத்துவமானது என தெரிவித்தன. ஐநாவின் ஒரு அறிக்கை எபோலா கல்வி முன்னேற்றத்தை பின்னோக்கி இழுக்ககூடும் என்றது. அப்பொழுது பள்ளி இடைநிற்றல் அதிகமாக நடைபெற்றது; குறிப்பாக பெண்கள், இளம் வயதிலே மகப்பேறு அடைவதால் அதிகம் பாதிக்கப்பட்டனர்.
தற்போது இந்தியாவில் வல்லுனர்களின் ஆலோசனைப்படி கடுமையான ஊரடங்கை அமல்படுத்துவதன் மூலம்தான் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கமுடியும் என்று கூறி மார்ச் மூன்றாம் வாரத்தில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இத்தகைய முன்னேற்பாடு இல்லாத செயல்களால் கல்வி வளாகங்களில் விளிம்புநிலையில் உள்ள, பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்கள், பெண்கள் குறிப்பாக முதல் தலைமுறை பட்டதாரிகள் ஆகியோர் தவிப்புக்கு ஆளானார்கள்.
முன்னதாக மார்ச் மாதத்தில் அரசாங்க அறிவுறுத்தல்களில் நிலவிய தெளிவின்மை காரணமாக கல்வி நிறுவனங்கள் வழங்கிய அறிவிப்புகள், குறிப்பாக பல்கலைக்கழகங்களில் 48 மணி நேரத்திற்குள் விடுதிகளை காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது; மாணவர்கள் கூட்டமாக தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றதானது அவர்களையும் அவர்கள் குடும்பங்களையும் தேவையற்ற ஆபத்தில் தள்ளியது.
பொது தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகள் எந்த ஒரு முறையான அறிவிப்புமின்றி ஒத்தி வைக்கப்பட்டன. இது மாணவர்களை மேலும் அச்சத்திற்கு ஆளாக்கியது. இது ஒருவகையில் பாராட்டத்தக்க முடிவு என்றாலும் கூட நிறைய பள்ளிக்கூடங்கள் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை தேர்வு இல்லாமல் கட்டாய தேர்ச்சி செய்வது என்ற முடிவுக்கு வந்தன. கல்விக்கட்டணம் பற்றிய தெளிவற்ற நிலைமை உள்ளிட்ட சிக்கல்களால் மாணவர்களுடைய குடும்பங்களின் மன உளைச்சல் அதிகரித்திருக்கிறது. இத்தகைய பள்ளிகளில் மாணவர் மறு-சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது. சில ஆயிரம் ரூபாய் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும் என்றும், மேலும் சில பள்ளிக்கூடங்களில் அடுத்த கல்வி ஆண்டுகளுக்கான புத்தகங்கள் மற்றும் பொருட்களை வாங்குவது குறித்தும் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரையில் மத்திய அரசு இதுகுறித்த எந்த ஒரு அறிவிப்பையும் வழங்கவில்லை. சலுகை காட்டுவது என்ற பெயரில், பள்ளிகள் வழங்கியதெல்லாம் கால வரம்பில் நீட்டிப்பு மட்டுமே தவிர, அவற்றின் கட்டணத்தில் இருந்து ஒரு பைசா கூட குறைக்கவில்லை.
மேலும் இந்தியாவில் உள்ள குழந்தைகள் மதிய உணவு திட்டத்தின் கீழ் எவ்வளவு ஊட்டச்சத்து பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் பல மாநிலங்களில் மதிய உணவுத் திட்டம் இல்லாததால் மாணவர்கள் கற்றல் திறன் குறைவதும் தவிர்க்க முடியாத உண்மையாகும். வீடுகளில் சீரான, போதுமான இணைய சேவையை ஒரு சிலர் பெற்றிருந்தாலும் வீட்டிற்கு திரும்பிச் சென்ற மாணவர்களில் பெரும்பாலோர், குறிப்பாக பெண்கள், வீட்டு வேலைகளில் ஈடுபட நிர்பந்திக்கப்படுவார்கள் என்பதுதான் நடைமுறையாகும்.
2014ஆம் ஆண்டின் தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பு (NSSO) அளித்துள்ள தரவுகள் மொத்த மக்கள்தொகையில் 10% உயர்கல்வியை எட்டவில்லை என்பதை காட்டுகிறது. குறிப்பிட்ட சில பகுதிகளில் இருந்து வரும் மாணவர்கள், அதாவது தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பெண்கள் கற்றலில் அவர்களுக்கான இடம் என்பது இன்னும் எட்டாக் கனியாகவே உள்ளது.
ஆன்லைன் கற்றல் முறையை நோக்கி யுஜிசி நகர்ந்துகொண்டிருப்பதை சமீபத்திய செய்திகள் காட்டுகின்றன. இது கல்வித்துறையில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும் நடவடிக்கையாகும். தற்போதைய பாஜக அரசாங்கத்தால் 2019 இல் வெளியிடப்பட்ட தேசிய கல்வி கொள்கை கல்வித்துறையை தனியார்மயத்தை ஊக்குவிக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்புதான் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் இலவசக் கல்விக்காகவும், அரசு கல்வி நிலையங்களை பாதுகாக்கவும் போராட்டங்கள் நடைபெற்றன. இப்படியான சூழலில் இணையவழிக் கல்வியானது பேரழிவாக இருக்கும்.
உலகில் இணைய வசதியைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ள நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனாலும் அடிப்படை இணைய சேவையை எல்லோராலும் பெற முடியவில்லை. அதற்கென்று பல வரம்புகள் இருக்கின்றன. சாதாரண நேரங்களில் கூட இணையத்தைப் பெரிதும் பயன்படுத்தாத மிகவும் பின்தங்கிய கிராமப்புற பகுதியில் இருந்து வந்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு தாங்கள் இருக்கும் இடத்தில் இணைய சேவை கிடைக்குமா என்பது கூட கேள்விக்குறிதான். இது கிராமப்புற மாணவர்களை திட்டமிட்டு ஒதுக்கி வைக்கக்கூடிய செயலாக இருக்கிறது.
இணையவழியிலான தேர்வுகள், வகுப்புகள் மற்றும் மதிப்பீட்டு முறை ஆகியவை இத்தகைய மாணவர்களை ஒதுக்கிவைப்பது மட்டுமல்லாமல், இடைநிற்றல் அதிகரிக்கவும் வழிவகுக்கிறது. இந்தக் கடுமையான சூழலில் பல குடும்பங்கலுக்கு இணைய சேவையைப் பெறுவதற்கு பணமும் இல்லை. பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவு மாணவர்கள் இத்தகைய பொருளாதார நெருக்கடியில் இணைய முறை கல்வி கற்றலில் இருந்து சற்று விலகி தங்கள் குடும்பங்களுக்கு உதவ வீட்டு வேலைகளில் தள்ளப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிடும்.
இந்த ஊரடங்கில் பராஸ் போன்று பல மாணவர்கள் பின்தங்கிய பிரிவினர், பெண்கள், முதல்தலைமுறை பட்டதாரிகள் தங்கள் குடும்பங்களுக்கு உதவுவதற்காக வீட்டு வேலைகளில் தள்ளப்படுகின்றனர். நம் நாட்டில் இது போன்ற லட்சக்கணக்கான பராஸ்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, நோய் பெருந்தொற்றுக்கு பின்பு இந்த இளம் சிந்தனையாளர்களை மீண்டும் கல்விப் புலத்திற்குள் கொண்டுவர இவர்களை உள்ளடக்கிய கொள்கை கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
மேலும், தேசிய குற்றப் பதிவுகள் வாரியம் (NCRB) “இந்தியாவில் குற்றங்கள்-2018” என்ற தனது அறிக்கையில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 8% குடும்ப உறுப்பினர்களால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிடுகிறது. பொது வெளியில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில், குழந்தைகள், குறிப்பாக பெண்குழந்தைகள், கடத்தல், ஒடுக்குமுறை மற்றும் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்பதை மேலும் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இத்தகைய புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது வீடுகளில் அடைபட்டு இருக்கும் மாணவிகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்திருப்பதற்கான வாய்ப்புகள் ஏராளம். உதாரணமாக, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 11 நாட்களுக்குள் குழந்தைகள் பாதுகாப்பு சேவை (child line safety service) எண்ணிற்கு வன்முறை மற்றும் பாலியல் சீண்டல்கலிருந்து பாதுகாப்பு கோரி 92,000 அவசர அழைப்புகள் (SOS calls) வந்திருக்கின்றன. இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதுடன், விரிவான திட்டமிடலைச் செய்தால்தான் கல்வியின் நோக்கத்தை முன்னெடுக்கும் வழிமுறைகளை உருவாக்கிட முடியும்.
நாட்டின் தலைநகரில் வரும் செய்திகளை பார்த்தால், வாடகை வீடுகளின் வழிக்கும் மாணவர்கள் வீட்டு உரிமையாளர்களின் வாடகை வசூலால் துன்பத்திற்கு ஆளாவது தெரிகிறது; இல்லையென்றால் சுகாதார நெருக்கடிக்கு மத்தியில் அவர்கள் வீடுகளில் இருந்து வெளியேற அச்சுறுத்தப்படுகின்றனர். ஆனால், இதில் நாம் யாரைக் குறை கூறுவது? மாணவர்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதும் – அவர்களுக்கு அடிப்படை வசதிகளை உறுதி செய்வதும், எந்த இழப்பும் ஏற்படாத வகையிலும், அனைத்து வகையான நிதி ஆதரவையும் உளவியல் ஆதரவையும் வழங்குவது அவசியத் தேவையாகும்.
இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் முன்னேறுவதற்கான கருவியாக கல்வி மாற வேண்டும் என்பதை உணர வேண்டும். இதுபோன்ற பிரச்சனைகள் கல்வி வளாகங்களில் உள்ள மாணவர்களுக்கு பெரும் மன அழுத்ததை தரும். இன்று எடுக்கப்படும் அனைத்து கொள்கை முடிவுகளும் எல்லா தரப்பட்ட மாணவர்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
இச்சமயத்தில் அரசு அனைத்து கல்வி நிலையங்களுக்கும் தெளிவான வழிமுறைகளை வழங்குவது அவசியம். அது கல்வியில் ஏற்படும் குழப்பங்களை தடுப்பதற்கும், மாணவர்களை பாதுகாப்பதற்கும் உதவியாக இருக்கும். மாணவர்களின் உடல் மற்றும் மன வலிமைகளைக் கருத்தில் கொண்டு, அரசு தன்னுடைய நிலைப்பாட்டை மாணவர்களுக்கு ஆதரவாக எடுக்கவேண்டும். தற்போது டிஜிட்டல் கல்வி முறையை கொண்டு வருவது அவசரகதியான, தவறான சிந்தனையும் முடிவும் ஆகும். இத்தனை காலம் கல்வியில் அது நிகழ்த்திய சாதனைகளையும் பாதிக்கும். மேலும் இதுபோன்ற முடிவுகளுக்கு அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைப்பது இன்றைய காலத்தின் தேவையும் ஆகும். எதிர்காலம் மிகவும் சவாலான ஒன்றாகவே இருக்கப்போகிறது. நமது கல்வி நிலையங்களும் அதனால் சீர்திருத்தங்களுக்கு உள்ளாகும். ஆனால், அது வசதி படைத்தவர்களை மட்டும் மையப்படுத்தியதாக அல்லாமல், சமமானதாக, அறிவியல் பூர்வமானதாகவும் இருக்க வேண்டும்.
தமிழில்:
தீ.சந்துரு,
தென் சென்னை மாவட்ட செயலாளர்,
இந்திய மாணவர் சங்கம்.
Leave a Reply