மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


கொரோனா பெரும் தொற்று காலத்தில் மக்கள் மீது போர் தொடுக்கும் மோடி அரசு


பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா

இக்கட்டுரை எழுதும் நேரத்தில் கொரோனா தொற்று பாய்ச்சல் வேகத்தில் நாடு முழுதும் பரவிக்கொண்டிருக்கிறது. இன்றைய தேதியில் (ஜூன் 7, 2020) கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் பேருக்கு தொற்று பரவியுள்ளது என்றும் ஏறத்தாழ 7,000 பேர் இறந்துள்ளனர் என்றும் அரசின் தகவல்கள் கூறுகின்றன. எழுபது நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் இருந்தும் தொற்று கட்டுப்படவில்லை; சீறிப்பாய்கிறது. தொற்றை எதிர்கொண்டு மக்களை காப்பாற்றுவது என்ற சவாலில் மைய அரசு படுதோல்வி அடைந்துள்ளது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. ஆனால் இப்பொழுதும்கூட தொற்றை எதிர்கொள்வதில் தனது தவறான அணுகுமுறையை ஏற்றுக்கொள்ள மைய அரசு தயாராக இல்லை. மாறாக அரசின் புரிதலற்ற, குழப்பங்கள் நிறைந்த நடவடிக்கைகள் தொடர்கின்றன. மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். அரசின் மீதான கோபமும் வீதிகளுக்கு வர தொடங்கியுள்ளது. தனியார் மருத்துவ மனைகளின் பெரும் கொள்ளையும் அதற்கு உடந்தையாக உள்ள மத்திய அரசு மற்றும் கேரளா நீங்கலான மாநில அரசுகளின் கொள்கைகளும் மக்களை பெரும் துயரத்திலும் கோபத்திலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளன.

பிரதமரின் கபடநாடகம்

இத்தகைய மோசமான சூழலில்தான் மைய அரசு மக்கள் மீது பொருளாதாரப்போர் தொடுத்துள்ளது. பெரும் தொற்று கால ஊரடங்கால் வேலை, வாழ்வாதாரங்களை இழந்து வருமானம் இன்றி தத்தளிக்கும் மக்களுக்கு நிவாரணமளிக்க மைய அரசு 20 லட்சம் கோடி ரூபாய் செலவிடும் என்று பிரதமர் மே மாதம் 12 ஆம் தேதி தொலைக்காட்சிமூலம் அறிவித்தார். கடந்த ஆண்டு சுதந்திர தின உரையில் “கார்ப்பரேட்கள்தான் நாட்டின் செல்வங்களை உருவாக்குபவர்கள்” என்று அபத்தமாக முழங்கிய பிரதமர் தனது மே 12 உரையில் உழைப்பாளிகளைப்பற்றி உருக்கமாக பேசி ஒரு நாடகத்தை அரங்கேற்றினார். இந்த அறிவிப்பின் விவரங்களை நிதி அமைச்சர் தெரிவிப்பார் என்று கூறினார். நிதி அமைச்சர் விவரங்களை ஐந்து தவணைகளாக தொலைக்காட்சியில் முன்வைத்தார். உண்மையில் 20 லட்சம் கோடி ரூபாய் என்ற தொகை மிகத் தவறான, பொய்யான கணக்கு என்பது மிக வேகமாகவே அம்பலமாகிவிட்டது. நிதி அமைச்சரின் அறிவிப்புகள் பெரும்பாலும் கடன் மற்றும் தனியார்களுக்கான முதலீடுகளுக்கு நிதி வசதிகளை வங்கிகள் மற்றும் இதர நிதி நிறுவனங்கள் மூலமாக சாத்தியமாக்குவது தொடர்பாகவே இருந்தன. இவற்றில் பெரும்பகுதி ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகளை சார்ந்தவை. சிறு குறு தொழில் முனைவோருக்கான அறிவிப்புகள் அனைத்துமே அத்துறை சார்ந்தவர்களால் மிகவும் குறைவு; போதாது; பொருத்தமற்றது என்றே விமர்சிக்கப்பட்டுள்ளது. பிரதான பிரச்சினை கிராக்கி சரிவு என்ற நிலையில், கடன் கொடுக்க வங்கிகள் முன்வந்தாலும் கடன் வாங்குவதற்கு சிறு குறு தொழில் நிறுவனங்கள் தயாராக இல்லை என்ற யதார்த்தம் விரைவில் தெளிவானது. குறிப்பாக, பொருளாதாரம் சரிந்ததன் காரணமாக இந்த கால கட்டத்தில், ஏற்கனவே வாங்கிய கடன்களை சிறு-குறு தொழில்கள் அடைக்க முடியாமல் தவித்து வருகின்றன. இந்த கடன்களை திருப்பி செலுத்த அளித்த ஒத்திவைப்பு காலமும் முடிவடைந்துவிட்டது. மேலும் கிராக்கி இல்லாத காரணத்தால், புதிதாக கடன் பெற்று, உற்பத்தியை விரிவாக்கம் செய்ய சிறு-குறு தொழில்கள் எந்த விதமான முனைப்பையும் காட்டிவரவில்லை என்பது தெளிவாக நமக்கு தென்படுகின்றது. இச்சமயத்தில் மேலும் கடன் அளிப்போம் என்பது எந்த வகையிலும் ஊக்குவிக்கும் முயற்சி ஆகாது.

பல கோடி புலம் பெயர் தொழிலாளிகள் உணவின்றி, உறைவிடம் இன்றி தங்கள் ஊர்களை நோக்கி நெடிய நடைபயணம் மேற்கொண்டிருந்ததும், அதில் பல உயிரிழப்புகள் நிகழ்ந்ததும் அன்றாடம் தொலைகாட்சிகளில் வெளிவந்துகொண்டிருந்த நிலையிலும் நிதி அமைச்சரின் அறிவிப்பில் அவர்களுக்கு தலா ஐந்து கிலோ தானியம் மட்டுமே தருவதாக அறிவித்த அரசு, அதன் காசு மதிப்பு ரூ. 3500 கோடி என்று கணக்கு கூறியது. இந்த ஒன்று தவிர ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு மேலும் ரூ. 40,000 கோடி ஒதுக்கிடுவதாக அரசு அறிவித்தது. அரசின் முதல் அறிவிப்பையும் (மார்ச் 26 அன்று ரூ.1.7 லட்சம் கோடி அறிவிப்பு, இதில் புதிய செலவு ரூ. 93,000 கோடி மட்டுமே) நிதிஅமைச்சர் மே 13-17 தேதிகளில் செய்த அறிவிப்புகளையும் கூட்டினாலும் அரசின் மொத்த நிவாரண செலவு என்பது ரூ. 2 லட்சம் கோடியைக்கூட எட்டவில்லை. பார்க்ளேய்ஸ்(Barclay’s), நொமுரா (Nomura) உள்ளிட்ட பல நிதி சந்தை ஆலோசனை நிறுவங்கள் மைய அரசின் மொத்த கிராக்கி ஊக்கத்தை (Demand Stimulus) தேச உற்பத்தி மதிப்பில் 0.8% இல் இருந்து 1.3% க்குள் தான் இருக்கிறது என்று மதிப்பீடு செய்துள்ளனர். நிதி அமைச்சரின் கவனம் பெரும் பொருளாதார துயருக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகியிருந்த புலம் பெயர் தொழிலாளிகள், சிறு குறு தொழில் முனைவோர், அனைத்து துறைகளிலும் நிகழ்ந்துவரும் வேலை இழப்பின் காரணமாக வாழ்விழந்த தொழிலாளிகள், ஊரடங்கால் விவசாயம் முடக்கப்பட்டு தவித்துக்கொண்டிருந்த பல கோடி சிறு குறு விவசாயிகள் ஆகியோரின் துயர் துடைப்பதில் இல்லை.

அதி தீவிர தாராளமயம்

நிதி அமைச்சரின் அறிவிப்புகளில் பெரும் பகுதி தீவிர தாராளமய கொள்கைகளைத்தான் முன்வைத்தன. இதில் குறிப்பாக நாம் கவனிக்க வேண்டியது, இந்திய பொருளாதாரம் முழுவதையும் தனியார் மயமாக்குவது, அன்னிய பகாசுர கம்பனிகளுக்கு இந்திய சந்தையை தங்கு தடையின்றி திறந்துவிடுவது, அவை இந்தியாவிற்குள் நுழைந்து முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பாக நடைமுறையில் இருந்த அனைத்து நெறிமுறைகளையும் நீக்குவது, வேளாண் துறைக்கு அரசு அளித்துவந்த அனைத்து ஆதரவையும் பாதுகாப்பையும் நீக்கி, பன்னாட்டு பெரும் கம்பனிகளுக்கும் இந்திய பெரும் கம்பனிகளுக்கும் வேளாண்சந்தையை திறந்துவிடுவது ஆகிய முனைவுகளே அரசின் அறிவிப்புகளில் இடம் பெற்றன. இந்த அறிவிப்புகளின் பகுதியாக, நிலக்கரி, கனிமத்தொழில், பாதுகாப்பு துறை ஆகியவை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும்  100% அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும், சலுகைகள் அளித்து வரவேற்கப்படும் என்றும் அரசு சார்பாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. துயரம் என்னவெனில், தனது மே 12 உரையில் “சுய சார்பு” பற்றி முழங்கிய பிரதமர் இந்திய பொருளாதாரத்தை பன்னாட்டு பெரும் கம்பனிகள் கையில் ஒப்படைப்பதுதான் “சுய சார்பு” என்ற முற்றிலும் “புதிய” விளக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

நிதி அமைச்சர் முன்மொழிந்துள்ள தீவிர தாராளமய கொள்கைகள் புதியவை அல்ல. கடந்த பல பத்தாண்டுகளாக இவை பின்பற்றி வரப்பட்டுள்ளதன் அனுபவம் பெரும்பகுதி மக்களுக்கு கசப்பான ஒன்று. வேளாண் நெருக்கடி, கடும் வேலையின்மை, மக்களின் வாங்கும் சக்தியில் பெரும் சரிவு ஆகியவைதான் கடந்த ஆறு ஆண்டு பாஜக ஆட்சியில் இக்கொள்கைகள் அளித்துள்ள பரிசுகள். இத்தகைய பின்னணியில் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்றுவிட்டால் பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என்ற வாதத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை. இந்தியாவிலும் இல்லை, பிற நாடுகளிலும் இல்லை. ஒருநாட்டின் பொருளாதார வளர்ச்சி முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் ஏற்படும். தனியார் துறை லாப அடிப்படையில் மட்டுமே செயல்படுவதால் மக்களுக்கு அவசியமான, ஆனால் லாபம் அதிகம் பெற வாய்ப்பு குறைவான நடவடிக்கைகளில் முதலீடுகளை மேற்கொள்ளாது. அனைவருக்கும் கட்டுபடியாகும் தன்மையில் கல்வி, சுகாதாரம், மக்களுக்கான கட்டமைப்பு, பொது போக்குவரத்து வசதிகள் போன்றவற்றில் தனியார் முதலீடுகள் வராது. இங்கெல்லாம் பொதுத்துறைதான் மக்களை பாதுகாக்கும் என்பதே நமது அனுபவம்.

‘தனியார்’ என்ற சொல்லில் பெரும் குழப்பம் உள்ளது. பக்கத்து தெரு பெட்டிக்கடை, அதை அடுத்துள்ள மளிகைக்கடை, சிறு குறு விவசாயிகள், சிறு குறு வணிகர்கள் இவர்களும் தனியார் துறையை சேர்ந்தவர்கள். ஆனால் அரசு பேசும் தனியார் மயம்  இந்திய, அன்னிய பெரும் கம்பனிகளை கருத்தில் கொண்டதாகும். அரசு கம்பனிகளை தனியார் பெரும் கம்பனிகளுக்கு விற்பதால் வளர்ச்சி அதிகரிக்கும் என்ற முடிவுக்கு வர தரவுகள் எதுவும் கிடையாது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நாடு எதிர்கொண்டுவரும் வளர்ச்சி விகிதச் சரிவு என்பதன் அடிப்படையே தனியார் பெரும் நிறுவனங்கள் முதலீடு செய்யவில்லை என்பதும் நாட்டில் பெரும் கிராக்கி வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதும்தான். இத்தகைய அனுபவத்தை கணக்கில் கொள்ளாமல் தனியார் மயம் வளர்ச்சியை வேகப்படுத்தும் என்று சொல்வது முற்றிலும் தவறான கருத்து.

விவசாயிகளுக்கு பேர் ஆபத்து

நிதி அமைச்சரின் அறிவிப்பும் அதனை தொடர்ந்து மத்திய அமைச்சரவை முடிவெடுத்து அமலுக்கு வந்துள்ள அத்தியாவசியப் பண்டங்கள் பாதுகாப்பு சட்ட திருத்தங்கள் அவசர சட்டம் உட்பட மைய அரசின் பல நடவடிக்கைகள் விவசாயிகளுக்கு பெரும் ஆபத்தாக அமையும். அனைத்துப்பகுதி உழைப்பாளி மக்களுக்கும் ஆபத்தாக அமையும். மூன்று நடவடிக்கைகளை அரசு துவக்கியுள்ளது

முதலாவதாக, தானியங்கள், பருப்பு வகைகள், இதர உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பண்டங்களின் விலைகளை கட்டுப்படுத்துவதற்காக 1955இல் கொண்டுவரப்பட்ட சட்டத்தை அவசர சட்டம் மூலம் மாற்றியுள்ளது அரசு. இனி அத்தியாவசியப் பொருட்களை வாங்கி விற்கும் பெரும் வணிக நிறுவனங்கள் இப்பண்டங்களை எந்த அளவிற்கு வேண்டுமானாலும் பதுக்கி வைத்துக்கொண்டு விலைகளை உயரச் செய்யலாம். உணவு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக மாறும் அபாயம் இதில் உள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் தேவைக்கும், உற்பத்திக்கும் இடையே மெல்லிய இடைவெளிதான் உள்ளது என்பதால், தேவையில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் விலைவாசியில் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடும். அதேபோல், நுகர்வோர் என்கிறபோது அதில் விவசாயிகளும் அடங்குவார்கள். விவசாயிகள் தங்களின் உற்பத்திப் பொருள்களைச் சந்தையில் விற்று,  தேவைக்கேற்ப பின்னர் நுகர்வு செய்கின்றனர். எனவே, இந்த விலைவாசியின் தாக்கம் அவர்களையும் பாதிக்கும். தற்சமயம் அரசின் கிடங்குகளில் உணவு தானியம் குவிந்துள்ளது என்பது பொது விநியோகம் தொடர்பான அரசின் கொள்கைகளால் ஒரு பகுதி ஏழை மக்களுக்கு தானியங்கள் முறையாகச் சென்று சேரவில்லை என்பதைக் குறிக்குமே தவிர, உணவு உற்பத்தியில் முழுமையாகத் தன்னிறைவு பெற்றதாகக் கருதிவிடக் கூடாது. மேலும், வேளாண்மை என்பது பருவநிலை சார்ந்து இயங்கக்கூடியது என்பதால் இதில் உள்ள நிலையற்றத் தன்மையை நாம் மறந்துவிடக் கூடாது. பருவநிலை மாற்றம் காலத்தில் ஒரு டிகிரி வெப்பம் அதிகரிப்பதாலும் உற்பத்தியில் குறைவு ஏற்படும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உணவு போன்ற அத்தியாவசிய விஷயத்தில் தன்னிறைவு பெற்றுவிட்டோம் என்று கருதும் அலட்சியப்போக்கு ஆபத்தானது. எனவே, அத்தியாவசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை காலாவதியானது எனப் புறக்கணிப்பது முறையல்ல.

இரண்டாவது, வேளாண்பொருட்கள் விற்பனை தற்பொழுது அரசால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் ஒழுங்குபடுத்தப்பட்டு வருகிறது. இந்த அமைப்புகளின் செயல்பாட்டில் சில நிறைகுறைகள் இருந்தாலும், இவை விவசாயிகளுக்கு ஏகபோக பெருவணிகர்களிடம் இருந்து ஒரளவு பாதுகாப்பு அளிக்கின்றன.  இந்த ஏற்பாட்டை முடிவுக்கு கொண்டுவந்து, விவசாயிகள் நேரடியாக பெரும் கம்பனிகளுக்கு விற்பது என்ற ஏற்பாட்டுக்கு செல்ல முனைகிறது அரசு. இது விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க வழி செய்யும் என்று அரசு கவர்ச்சிகரமாக பிரச்சாரம் செய்கிறது. ஆனால் இது உண்மையல்ல.

வேளாண்மை உற்பத்தி சந்தைக்குழுச் சட்டம் மாநிலங்களுக்குக் கீழ் வருகிறது என்பதால் ஏற்கனவே தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்தச் சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு வந்துள்ளன. நாட்டின் வேளாண்மைத் துறை என்பது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்ட ஒன்று. கேரளா போன்ற மாநிலத்தின் விவசாயச் சூழல் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்குப் பொருந்தாது. எனவே, அந்தந்த மாநிலங்கள் தங்களது சூழலுக்கு ஏற்றாற்போல் இந்தச் சட்டத்தைத் திருத்திக்கொள்வதே சரி. அதை விட்டுவிட்டு, டெல்லியில் இருந்துகொண்டு நாடு முழுவதும் ஒரேவிதமான சட்டத்தை அமல்படுத்துவது என்பது யதார்த்தத்திற்குப் பொருத்தமாக இருக்காது.

இந்திய வேளாண்மைத் துறையில், சுமார் 86 விழுக்காடு விவசாயிகள் சிறு, குறு விவசாயிகள்தான். இவர்கள் சாகுபடிசெய்யும் பரப்பளவு 44 விழுக்காடு மட்டுமே. மீதமுள்ள 14 விழுக்காடு நில உரிமையாளர்கள்தான் 56 விழுக்காடு பரப்பளவில் விவசாயம் செய்கின்றனர். எனவே, சிறு, குறு விவசாயிகள் உற்பத்தி செய்யும் சிறிய அளவிலான பொருள்களை அருகிலேயே சந்தை செய்யும் சூழல் தற்போது இல்லை.

விவசாயிகள் 5 கி.மீ. சுற்றளவிலேயே தங்கள் உற்பத்திப் பொருள்களை விற்க வேளாண்மை உற்பத்தி சந்தைக்குழுச் சட்டம் அடிப்படையில் மண்டிகளை உருவாக்க வேண்டும் என எம்.எஸ். சுவாமிநாதன் குழு 2006ஆம் ஆண்டே பரிந்துரைத்துள்ளது. இதுபோன்ற வேளாண்மை உற்பத்தி சந்தைக்குழுச் சட்டம் கட்டமைப்புகளை பல மாநிலங்களில் உருவாக்குவதே தற்போதைய தேவை. மேலும், பெரும் பகுதி விவசாயிகள் குறைந்த அளவிலான உற்பத்தி செய்வதைக் கூட்டுறவு அமைப்புகள் ஒருங்கிணைத்து அதை முறையாகச் சந்தைப்படுத்தும் சூழலை உருவாக்க வேண்டும். உதாரணமாக, அமுல், ஆவின் போன்ற வெற்றிகரமான கூட்டுறவுத் திட்டங்களை எடுத்துக் கொள்ளலாம்.

உண்மையான பிரச்சினை என்ன? உற்பத்தி செய்யப்படும் கோதுமையில் 69 விழுக்காடும், நெல்லில் 73 விழுக்காடும் கொள்முதல் நிலையங்களுக்கு வருவதில்லை என ஆய்வுகள் கூறுகின்றன. அத்தியாவசிய பொருள்களான கோதுமை, நெல் போன்றவைகளுக்கே இதுதான் நிலைமை. காரணம், பெரும் பகுதி விவசாயிகள் தங்கள் பொருள்களைப் பாதுகாப்பாகச் சேமித்து வைத்துக் கொள்ளவும், கொள்முதல் மையங்களுக்குச் கொண்டு செல்லவும் வசதிகொண்டவர்களாக இல்லை. எனவே, சேமிப்புக் கிடங்கு, கூடுதல் கொள்முதல் மையங்கள், உள்ளூர் சந்தை ஆகியவற்றை உருவாக்குவதில் அரசு முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு மாறாக சந்தையை, தாராளமயக் கொள்கையுடன் திறந்துவிடுவது பயனளிக்காது.

மூன்றவதாக அரசு முன்வைத்திருப்பது ஒப்பந்த விவசாயம்தான் பிரச்சனைகளுக்கு தீர்வு என்ற கருத்து. கரும்பு விவசாயத்தைக் கொண்டே ஒப்பந்த வேளாண்மை முறையில் உள்ள சிக்கல்களை நாம் எளிமையாகப் புரிந்துகொள்ளலாம். நீண்டகாலமாகவே நாட்டில் கரும்பு வேளாண்மை என்பது கரும்பு ஆலைகள், நிறுவனங்கள் ஆகியவற்றுடன் ஒப்பந்த வேளாண்மை அடிப்படையிலேயே நடைபெற்றுவருகிறது. ஆனால், இந்த ஆலைகளும் நிறுவனங்களும் விவசாயிகளுக்குச் சேர வேண்டிய கோடிக்கணக்கான ரூபாயைத் தராமல் நிலுவையில் வைத்துள்ளன.

நீண்ட அனுபவமிக்க கரும்புத் துறையிலேயே ஒப்பந்த வேளாண்மைகளுக்கு முழுமையான சாதகமான பலன்களைத் தருவதில்லை என்பதற்கு இதுவே ஒரு உதாரணம். பலம்வாய்ந்த பெரும் நிறுவனம், அமைப்புகளுக்குமுன் சிறு, குறு விவசாயிகள் பலமற்றவர்களாக உள்ள நிலையில்தான் தற்போதும் உள்ளனர். எனவே, விவசாயிகளைப் பாதுகாக்கும் விதமான நடைமுறைகளைக் கொண்டு ஒப்பந்த வேளாண்மை போன்ற விவகாரங்களை அரசு முன்னெடுக்க வேண்டும். விவசாயிகளின் கூட்டு அமைப்புகளை உருவாக்கி ஒப்பந்த விவசாயம் செய்ய நேரிடும் சமயம் விவசாயிகளின் பேரம் பேசும் சக்தியை அதிகப்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு பெரும் நிறுவனங்களுடனான ஒப்பந்த விவசாயத்தில் மிகவும் கசப்பான பல அனுபவங்களுண்டு.

தொழிலாளி வர்க்கத்தின் மீதான தாக்குதல்

நிதி அமைச்சரின் ஐந்து உரைகளில் தீவிர தாராளமயம் முன்வைக்கப்பட்டுள்ளதை பார்த்தோம். இன்னும் மிக முக்கியமான ஒரு விஷயம் உள்ளது. பாஜக மைய அரசும் அதன் தலைமையில் உள்ள சில மாநில அரசுகளும், வேறு சில மாநில அரசுகளும் கடந்த சில வாரங்களாக தொழிலாளி வர்க்கம் நெடிய போராட்டங்களின் மூலம் பெற்றுள்ள அடிப்படை ஜனநாயக  உரிமைகளை பறிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளன. இதுதான் பெருமுதலாளிகளின் விருப்பமும். ஆலைகளில் வேலை நேரத்தை சட்டப்படியான 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக அதிகரிப்பது, சில ஆண்டுகளுக்கு தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்கும் சட்ட சரத்துக்களை நீக்கிவைத்தல் உள்ளிட்ட பல எதேச்சாதிகார முன்மொழிவுகளும் நடவடிக்கைகளும் நிகழ்ந்துவருகின்றன. கொரோனா தொற்று காலத்திற்குப் பின் மக்கள் சீனத்தில் இருந்து பல பெரும் தொழில் நிறுவனங்கள் இந்தியாவிற்கு வர வாய்ப்பு உள்ளது என்ற கனவில் அக்கம்பனிகளை ஈர்க்கும் வகையில் அவர்களுக்கு பட்டுக்கம்பளம் விரிக்கும் முனைவுகள் தொடங்கியுள்ளன. கொரோனா காலத்திற்கு முன்பாகவே பாஜக அரசு தொழிலாளர் உரிமை சட்டங்களை பலவீனப்படுத்தும் வகையில் 44 சட்டங்களை 4 விதிமுறைகள்(codes) என்பதாகச் சுருக்கி பல உரிமைகளைப் பறித்துள்ளது. ஆனால் பெரும் தொற்றும் ஊரடங்கும் நிலவும் காலத்தில் எதிர்ப்பின்றி மக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்றிட முடியும் என்று அரசும் ஆளும் வர்க்கமும் கருதுகின்றன.

இறுதியாக

அரசின் அனைத்து மக்கள் விரோத முனைவுகளை  எதிர்த்தும், நமது மாற்றுக் கொள்கைகளை முன்வைத்தும் ஆகப் பெரிய போராட்டங்களை நடத்த வேண்டிய பொறுப்பு நம் முன் உள்ளது. பெரும் தொற்றின் கொடிய விளைவுகளில் இருந்து மக்களை இயன்ற அளவு பாதுகாப்பது, அவர்களுக்கு நிவாரணங்களை போராடி பெறுவது, பொருளாதார மீட்சிக்கான மாற்று முன்மொழிவுகளை முன்னெடுப்பது ஆகிய கடமைகள் நம்மை போராட்ட களத்திற்கு அழைக்கின்றன.Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: