மார்க்சியம் – புதிய சகாப்தம், புதிய சூழ்நிலை, புதிய தேவைகள்


(சீன கம்யூனிஸ்ட் கட்சியின்   மத்தியக் கமிட்டி  வெளியிடும்  கோய்ஷி என்ற பத்திரிக்கையின் குழுவில் உள்ள  லிஜே எழுதிய இக்கட்டுரை ஆங்கில மார்க்சிஸ்ட் (2018  ஜனவரி – மார்ச்) இதழில்  மறுபிரசுரமானது.)

[வரலாற்றின் பல்வேறு கட்டங்களிலும் சரக்கு உற்பத்தி முறையில் தொடர்ந்து மாற்றங்கள் நேர்ந்து கொண்டிருப்பதை நாம் அறிவோம். உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி என்பது எல்லா சமூகங்களிலும் மானுட வரலாற்று வளர்ச்சியில் இயல்பானதும் தவிர்க்க இயலாததும் ஆகும்.

அவ்வாறு உற்பத்தி சக்திகளில் ஏற்படும் வளர்ச்சிக்கு ஏற்ப சந்தையும் மாறிவந்திருக்கிறது. நிலவுடைமை கட்டத்திலும் சந்தை இருந்தது. முதலாளித்துவ அமைப்பிலும் சந்தை உள்ளது. சோசலிச அமைப்பிலும் சந்தை இருக்கிறது. லாப விரிவாக்கத்திற்காக சந்தையை பயன்படுத்திக் கொள்வதையும், சந்தையை கட்டுப்படுத்துவதையும் முதலாளித்துவ கட்டத்தில் பார்க்கிறோம். சோசலிசத்தின் கீழ் சந்தை என்பது மக்களின் தேவைகளை மையப்படுத்தி உற்பத்தி பொருட்களை வினியோகிப்பதற்கான சாதனமாக இருக்கிறது. மையப்படுத்தப்பட்ட திட்டமிடல் மற்றும் வழிகாட்டுதலின் கீழ் உள்ள ஒரு அங்கமாக அது உள்ளது.

விவசாயம், வணிகம், தொழில் உற்பத்தி, அரசு முதலாளித்துவம் மட்டுமல்லாமல் வணிக மற்றும் ஊக மூலதனமும், தொழில் மூலதனமும் உள்ளடக்கிய உலக நிதி மூலதனம் இப்போது உருவாகியுள்ளது. முதலாளித்துவ அமைப்பானது ஒருங்கிணைந்து ஆழமாகவும், விரிவாகவும் வளர்ச்சிபெற்று நீண்ட காலத்திற்கு நிலைத்துள்ளது.

வணிக முதலாளித்துவம் மற்றும் தொழில் உற்பத்தி முதலாளித்துவம் இச்சமூகத்தை வரலாற்று வழியில் வேறுபடுத்திக் காட்டுகிறது. குறிப்பாக அது வளர்ந்த நாடுகளுடைய தொழில் புரட்சிக் காலத்திற்கு பிறகான நிதி மூலதனத்தின் வளர்ச்சியில் அந்த வேறுபாட்டைக் காட்டுகிறது. பல்துறை வளர்ச்சி கொண்ட சமூகம், ஊடக வளர்ச்சி ஆகியவற்றை சாதித்த வளர்ந்த நவீனமான, சிக்கலான முதலாளித்துவமாக அது மாறியுள்ளது.

நவீனமான, வளர்ந்த முதலாளித்துவத்தின் இயக்கம், அதன் சித்தாந்த ஆதிக்கம் மற்றும் அதனை வீழ்த்துவதற்கான புரட்சிகர செயல்பாடு போன்றவைகளில் முக்கிய பங்களிப்பைச் செய்தவர் அந்தோனியோ கிராம்சி. அவர் இதே சொற்களில் குறிப்பிடவில்லை என்றாலும், 19 ஆம் நூற்றாண்டில் நடந்தது போன்ற புரட்சிகர எழுச்சிகளை தவிர்ப்பது எப்படி என முதலாளித்துவம் உணர்ந்துகொண்டதை சுட்டிக்காட்டுகிறார். அக்காலத்தில் முதலாளித்துவ அமைப்பை தூக்கியெறியும் புரட்சிகள் தவிர்க்க முடியாததைவையாக இருந்தன.

முதலாளித்துவமானது வெளிப்படையான ஒடுக்குமுறையை கொண்டு வர்க்க ஆட்சியை நிலைநாட்டுவதோடு மட்டுமல்லாமல் சிவில் சமூக நிறுவனங்களை பயன்படுத்தி மக்களின் தத்துவ நோக்கை முதலாளித்துவ அமைப்புக்கு சாதகமாக திருப்புவது என்ற வழிமுறையை கைக்கொண்டது என்பதுதான் அவரது எழுத்துக்களின் மையமாக அமைந்தது.

தொழில் துறை நடவடிக்கைகளை தொடர்ந்து விரிவாக்குதல்;. பொருளாதார கட்டமைப்பை நிலைப்படுத்த அரசின் தலையீட்டை பயன்படுத்திக் கொள்ளல்;. ஜனநாயக அரசாங்கம் என்ற ஏற்பாட்டைக் கொண்டு, முதலாளித்துவ அரசானது தன்னுடையை நடவடிக்கைகளை சட்டப்பூர்வமாக ஆக்கிக் கொள்வது;. மற்றும் குறைந்தபட்ச சம்பள உயர்வு மூலம் தொழிலாளி செலுத்திய உழைப்புச் சக்திக்கு உரிய ஊதியத்தை அளிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவது என அது இயங்குகிறது என்பது அவர் போதனையின் வெளிச்சத்தில் நாம் புரிந்துகொள்ள வேண்டியவை.

சோசலிச சக்திகளும் தன்னை மேம்படுத்திக் கொள்கின்றன. சோவியத் அமைப்பு என்பது சோசலிசத்தின் முதல் முன்மாதிரி ஆகும். அதனால் கிடைத்த படிப்பினைகளை நாம்  எடுத்துக் கொள்கிறோம். மீண்டும் பழைய வடிவிலான சோசலிசம் சாத்தியமில்லை. அது தன்னை மேம்பட்ட வடிவத்தில் காண்பது தவிர்க்க இயலாதது.

இந்த கட்டுரை சீன மார்க்சிஸ்டுகள் எவ்வாறு தொடர்ந்து தம்மை மேம்படுத்திக் கொண்டு செயல்படுகிறார்கள் என புரிந்துகொள்ள உதவும்.

– டி.கே. ரங்கராஜன்]

1. சந்தை

சந்தைக்கும் சரக்கிற்கும் நீண்ட வரலாறு உண்டு. அவ்வரலாற்றில்  சீனத்திற்கும்  மற்ற நாடுகளைப்போல் பெரும் பங்குண்டு.  முதலாளித்துவம்  சரக்கு  உற்பத்தியையும்  சரக்கு சார்ந்த  பொருளாதாரத்தையும்  தனது நாடுகளில்  மட்டுமன்றி உலகம் முழுவதும்  கொண்டு சென்றது. அப்படி கொண்டு  செல்கையில், ஒருங்கிணைந்த  தேசிய  சந்தை,  பிராந்திய  நாடுகளின் கூட்டு சந்தை மற்றும் உலகமயமான  பொருளாதாரம் இவற்றையும் பரவலாக்கியது.

இப்படியான நிலைமையில்,  சந்தைப் பொருளாதாரம்தான் ஒருங்கிணைந்தது;  அணுக எளிமையானது; திறமையானது  என்றும்  பிரகடனம் செய்யப்பட்டது.  இப்பிரகடனம்  உலகமயமாக்கப்பட்ட  பொருளாதாரம், பிராந்திய  நாடுகளின்  பொருளாதார கூட்டமைப்பு,  சர்வதேச  நிதி மற்றும்  வர்த்தகம் இவை உலகெங்கும்  பாய்வதற்கு  உதவியது.  மேலும், மூலதனம்,  தொழில்நுட்பம், தொழில்  வல்லுனர்கள்,  தகவல் இவையாவும்  உலகமெங்கும்  பாய்வதற்கும்  இப்பிரகடனம்  வழி வகுத்தது.

இப்படிப்பட்ட  உலகளாவிய  நிலைபாட்டினால் சந்தைப் பொருளாதாரம்  என்பது முதலாளித்துவ அமைப்பிற்கு மட்டுமே  உரியது என்ற  பரவலான  கருத்து நிலவுகிறது. இக்கருத்துடையோர், சீனாவும் தனது சந்தைப்  பொருளாதாரத்தை  மேலும் வளர்ச்சி  அடையச் செய்ய  முதலாளித்துவ அமைப்பில்  உள்ளதுபோல்  அனைத்தையும்  தனியார்மயமாக்குதல் என்ற வழிமுறையைக்  கையாள வேண்டும் என்று ஆலோசனை  தெரிவிக்கிறார்கள். இப்படிச்  செய்வதன் மூலம், முதலாளித்துவ  அமைப்புகளிலிருந்து  பிரிந்திருத்தலை அது கைவிடவேண்டுமென ஆலோசனைகளையும் வழங்குகின்றனர்.

இவர்கள்  கூறுவது  உண்மையில்  சரியா  என ஆராய்வோம்.

21-ம் நூற்றாண்டில்  நடந்த மூன்று மிகப்பெரிய  நிகழ்வுகள்  முதலாளித்துவ சந்தைப்  பொருளாதாரத்தின்  சர்வாதிகாரப் போக்குக்கு  முற்றுப்புள்ளி  வைத்தன.

ஒன்று, சீனா தனது இரண்டாவது சீர்திருத்த நடவடிக்கையில் தீவிரமாக  இறங்கியது.   இதன்மூலம்  தனது சோசலிச சந்தைப் பொருளாதாரத்தை  மேலும்  விரிவடையச் செய்தது.  சோசலிசத்தை அமல்படுத்திக்கொண்டே  எடுத்த இந்த தனித்துவமான நடவடிக்கை  பெரும் வெற்றியை  கொடுத்தது.   இந்த நடவடிக்கை சீனாவை உலக அளவில்  இரண்டாவது  பெரும்நாடு என்ற   இடத்திற்குச் செல்ல வழி வகுத்தது.

இரண்டாவது, இக்கால கட்டத்தில்  வளரும்  நாடுகளில்  சந்தைப் பொருளாதாரம்  மிக வேகமான  வளர்ச்சியடைந்து கொண்டிருந்தது.  இவ்வளர்ச்சி உலக பொருளாதார நிலமைகளை மாற்றியமைத்தது மட்டுமின்றி  உலகப் பொருளாதார  வளர்ச்சிக்கு   புதிய  இயந்திரங்களாகவும்  செயல்பட்டன.

மூன்றாவது, 2008ஆம் ஆண்டில் தொடங்கிய  பொருளாதார  மந்த நிலையால்  அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தி முன்நின்ற பல மேற்கத்திய நாடுகளும் ஐரோப்பிய  யூனியனும்  தொடர்ந்து  பொருளாதார  தேக்க நிலையில்  சிக்கிக் கொண்டிருந்தன.

ஒருசேர நடைபெற்ற இந்த மூன்று  நிகழ்வுகளின்  விளைவு,  சீனாவில் உள்ள  ஹாங்சோ என்ற நகரத்தில் 2016ல்  ஜி-20  உச்சி மாநாடு நடப்பதற்கு வழிவகுத்தது. ஜி-20  அமைப்பின்  தலைமைப்  பொறுப்பையும் சீனா  ஏற்றிருந்தது.  இம்மாநாட்டில் சீன அதிபர்  அனைத்து நாடுகளும்  தேக்கநிலையை  உடைத்து   முன்னேற  பரிந்துரைகளை வைத்தார்.  இப்பரிந்துரைகளை   ஒருமித்த   கருத்தாக  ஜி-20 மாநாடு ஏற்றது.

இதன்மூலம்  வளர்ந்த  மேற்கத்திய நாடுகள்  மத்தியில்  சீனாவின்  மதிப்பு  மேலும் உயர்ந்தது.  சந்தைப் பொருளாதாரத்தை  ஏற்படுத்தவும்   விரிவுபடுத்தவும் முதலாளித்துவத்தால்  மட்டுமே  முடியும் என்ற   கோட்பாடு   தவறு என்பது    நிரூபணமானது.

ஒவ்வொரு நாடும்  சுதந்திரம்  அடைந்த பிறகு,  சீனா உட்பட  அனைத்து  வளரும் நாடுகளும்  தங்கள்  நாட்டு  யதார்த்த நிலைமைகள், கோட்பாடுகள்,  அம்சங்கள்  இவைகளை  கணக்கிலெடுத்து  தங்களது  சந்தைப் பொருளாதாரத்தை சுதந்திரமாக நிர்மாணித்துக் கொண்டன. இப்படி நிர்மாணிக்கப்பட்ட சந்தைப் பொருளாதாரம் உள்நாட்டிற்கேற்ப ஒன்றிணைக்கப்பட்டதாகவும், வெளியுலகத்திற்கு  திறக்கப்பட்டதாகவும்   அமைக்கப்பட்டன.

இதன்மூலம் சந்தை பொருளாதாரம் என்பது பல்நோக்குடனும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் இருப்பதை  நம்மால்  பார்க்க முடிகிறது.

சந்தைப் பொருளாதாரத்தினுள்  புதைந்துள்ள  விதிகளை  ஒரு புதிய  பரிமாணத்தில்  இது வெளிப்படுத்துவது  மட்டுமின்றி  21வது நூற்றாண்டில்  மார்க்சியத்தின் மறுமலர்ச்சியையும், வளர்ச்சியையும் இப்போக்குகள் உணர்த்துகின்றன.

மிக முக்கியமாக சீனநாடு புதிய  சகாப்தத்தை  உருவாக்க ஒரு பரந்த மேடை  கிடைத்துள்ளது என்பதையும்   இந்நிகழ்ச்சிப் போக்கிலிருந்து கண்டுணர முடிகிறது. 

2. மூலதனம்

சரக்கு, சந்தை  இவற்றிற்கு உள்ளது போலவே  பணம்,  பணப்பரிவத்தனை,  கடன்,  உழைப்பு இவை எல்லாவற்றிற்கும்  ஒரு வரலாறு  உண்டு. இவை அனைத்தும் முதலாளித்துவ  உற்பத்தியுடன்  பின்னிப் பிணைந்துள்ளதால் மூலதனம்  பெருகுவதற்கு  பலமான  அடித்தளம்  அமைந்தது.

முதலாளித்துவம், உள்நாட்டு  சந்தையின்மீது தனது ஆதிக்கத்தை  செலுத்திவருகிற அதே வேளையில்,  மூலதனத்தின்  சக்தியை  கையாண்டு  உலக பொருளாதாரத்தையும், அதன் நடத்தை விதிமுறைகளையும் தனது வசமாக்கி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.  மூலதனத்தை  விஞ்ஞானம்,  தொழில்நுட்பம்,  தொழில்புரட்சி  இவற்றுடன்  இணைத்து  இதனைச் செய்தது.

உலக பொருளாதாரத்தின்  தலைமை யார் கையில்  இருக்கவேண்டும் என்பது  முன்னேறிய  முதலாளித்துவ நாடுகளுக்கு  இடையே நடக்கும்  போட்டியில்  தீர்மானிக்கப்படுகிறது. யாரிடம்  அதிக மூலதனம்  உள்ளதோ, நிதிவளம் உள்ளதோ  அவர்களே  தலைமை ஏற்பார்கள். இது வலுவான  நாடே  ஆதிக்கம் செலுத்தும்  என்ற பொருளாதார   கோட்பாடின்  வெளிப்பாடே  ஆகும்.   

இப்படிப்பட்ட சூழ்நிலையில்  அங்குள்ள  முதலாளித்துவ  ஆட்சியில்  தொழிலாளி வர்க்கம் தனக்கு  பயன் இல்லை என்பதை  உணர்ந்து  ஒரு சமூகப்  புரட்சி மூலம்  அரசியல்  அதிகாரத்தை  கைப்பற்றுமேயானால்  அவர்கள் செய்ய வேண்டிய  முதல்  முக்கிய நடவடிக்கை   உடமையாளர்களிடம்  இருந்து உடமைகளை  எடுப்பதே ஆகும்.

இது சரியானதும்,  நியாயமான  நடவடிக்கையும்  ஆகும்.  ஏனெனில்  மூலதனம்  சமூக  சொத்தின்  ஒரு வடிவமே  என்பதும்  அது தொழிலாளர்களாலேயே  உண்டாக்கப்பட்டது என்பதனாலும் ஆகும். (சீனத்தில் புரட்சி மூலம்  அதிகாரத்தை கைப்பற்றிய பின்) இனி அடுத்தது  என்ன? என்ற கேள்வி எழுந்தது.  பல காலமாக  பதில் அளிக்கப்படாத  இக்கேள்விக்கு  பதில் அளிக்க வேண்டிய  பொறுப்பு  சீனக் கம்யூனிஸ்ட்  கட்சியின்  தோள்களில்  விழுந்தது.   ஒரு கடினமான  செயல்முறை ஆராய்ச்சிகளில் கிடைத்த முடிவுகளின்    அடிப்படையில்  பொருளாதார சீர்த்திருத்தம்  மற்றும்  சீனப்பொருளாதாரத்தை  திறந்து விடுவது என்ற நடவடிக்கை  தீர்மானிக்கப்பட்டு  கையாளப்பட்டது.

சீனப் பண்பியல்புகளுடன் கூடிய சோசலிசம்  என்ற நடவடிக்கைக்கு  மிகப்  பெரிய வெற்றி கிடைத்தது. சீனக் கம்யூனிஸ்ட்  கட்சி தனது நவீன மயமாக்கல்  மற்றும் புத்துணர்ச்சி கொண்ட தேசத்தைக் கட்டமைக்கும் தன்னுடைய இலக்கை அடையவேண்டுமென்றால்   மூலதனத்தின்  சக்தியை  புறந்தள்ளக் கூடாது என்பதை  உணர்ந்தது.

மூலதனம்   என்பது   வர்க்கத்துடனும்   சமூக  அமைப்புடனும்  பின்னிப்   பிணைக்கப்பட்டிருந்தாலும்,   அதை யார் பயன்படுத்துகிறார்கள், எந்த  அமைப்பின் கீழ்  அது செயல்படுகிறது,   அது யாருக்கு  சேவை செய்கிறது என்பவையும் முக்கியமாக  கவனிக்கப்பட வேண்டியதொன்றாகும்.

இந்த மூலதனத்தின் ஆக்க சக்தியை உருவாக்குவதற்கும், கையாளுவதற்கும், பயன்படுத்துவதற்குமான அவசியம் சோசலிசத்திற்கு உள்ளது என்பது மட்டுமல்ல; அதற்கான திறனும் சோசலிசத்திடம் உண்டு. முன்பு முதலாளித்துவம்  மூலதன  சக்தியை எவ்வாறு  கையாண்டதோ,  அதேபோல  இன்று  சோசலிசம்  மூலதன  சக்தியை  உருவாக்குவது,  பயன்படுத்துவது என்பதன் மூலம்  மார்க்சியத்தை  உயர்த்திப் பிடிப்பதையும்,  அதை காலத்திற்கு ஏற்ப விரிவுபடுத்துவதையும்   செய்து வருகிறோம்.

சோசலிசத்தின்  மூலம்  மூலதனத்தின்  சக்தியை   உருவாக்குவதும், பயன்படுத்துவதும் மிகப்புதியதொரு  முயற்சி  என்று நாங்கள்  நினைக்கிறோம்.  மேலும் இவ்வகையில் மார்க்சியத்தை  உயர்த்திப் பிடிப்பதும், வளர்த்தெடுப்பதற்குமான  பயிற்சியாகவும்   நாங்கள் பார்க்கிறோம்.

இவ்வாறு  செய்யும்போது  மூன்று பெரிய,  முக்கியமான  சிக்கல்களை  தீர்க்க  வேண்டியுள்ளது.

ஒன்று, சீன கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நாங்கள் மூலதனத்தை  கையாளும்போதும், விரிவுபடுத்தும்போதும், பயன்படுத்தும்போதும் அதற்குள்  சிறைபடாமல் கவனமாக  இருக்க வேண்டியுள்ளது.

இரண்டு, சர்வதேச தளத்தில் பார்க்கும்போது, ஒவ்வொரு சோசலிச நாடும் அந்நிய மூலதனத்தை  கையாள வேண்டியுள்ளது மட்டுமின்றி, அதற்கு ஒத்துழைக்கவும்  வேண்டியுள்ளது.  மேலும்,  சோசலிச நாடுகள்  உலகம் முழுவதும் முதலீடு செய்ய வேண்டிய தேவையும் உள்ளது.  இவ்வாறு  செய்யும்பொழுது,  தனது நாட்டு  நிதித்துறை  பாதிக்கப்படாமல் உறுதிப்படுத்த வேண்டும். நிதித்துறையும், மூலதனமும் ஆபத்துக்கு ஆளாகாமல் பாதுகாத்திடவும் வேண்டும்.

மூன்றாவதாக, மூலதனம்  தன்னை வளர்த்துக்  கொண்டு  போகும் சூழ்நிலையில் வருமானத்தில் உருவாகும் ஏற்றத்தாழ்வையும், பகிர்வினையும் சரிப்படுத்த வேண்டியுள்ளது. மூலதனம்  விரிவடையும்போது  ஏற்படக்  கூடிய  தவறான  போக்குகளையும்  களைய வேண்டிய கட்டாயம் உள்ளது.

இதன் பொருள் என்னவெனில்,  நடுத்தர வர்க்கம் என்பதை  மேலும்  மேலும் விரிவுபடுத்துவதும்,  வளர்ச்சியின்  பலனை  அனைவருடன்  பகிர்ந்து கொள்வதன் மூலம்  வறுமை மற்றும் சுரண்டலை  ஒழித்து  அனைவரும்  செழிப்புடன்  வாழ வகை  செய்வதும் ஆகும்.

இப்படிச் செய்வதன் மூலமே உழைப்புக்கும் மூலதனத்திற்கும் உள்ள அடிப்படையாக உள்ள உறவை  மாற்றியமைக்க முடியும். மேலும்  மூலதனத்திற்கு  உழைப்பு  அடிமைப்படுவதை மாற்றி உழைப்பிற்கு  மூலதனத்தை  அடிமைப்படுத்திட முடியும்.

அத்தகைய  அதிசய நிகழ்வை  சீன பண்பியல்பை உள்ளடக்கிய  சோசலிசத்தினால்தான் நிகழ்த்திட முடியும்.

மேற்கண்ட  வரலாற்று  முன்மொழிவை  21ஆம் நூற்றாண்டில் மார்க்சியத்தை விரிவாக்க நாங்கள் எடுத்துள்ள முயற்சியில், சமகால சீனப் பொருளாதாரத்தோடு  நிரூபித்தாக வேண்டும்.   

3. சட்டத்தின் ஆட்சி

மனிதகுலம் வாழ்க்கையில் ஏற்படுத்திய  விதிமுறைகளிலிருந்து  சட்டம் இயற்றிய  விதிமுறைகளுக்கு  மிக அதிகமாக  மாறிய  போக்கினை நம் காலத்தில் காணலாம்.

இந்த மாற்றம்  முதன்முதலில்  பூர்ஷ்வா புரட்சியின் மூலமே  ஏற்பட்டது. இந்த மாற்றத்தின்  மூலம்    சமூகத்தின் மீது முதலாளித்துவம் தனது  ஆதிக்கத்தைச் செலுத்தியது மட்டுமின்றி, தனது புரட்சிகர  கோட்பாடுகளை, இறைஇயல், மதகுருமார்கள், நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்கள் இவர்களை அனுசரிக்கவும்  முறைப்படுத்தியது.  இவ்வாறு தனது கோட்பாடுகளை  இந்த அமைப்புகள் பின்பற்ற பல நிறுவனங்களை அமைத்து  முதலாளித்துவம் வளர்வதற்கு  உகந்த நிலையை  உருவாக்கியது.  பல நூற்றாண்டு பரிணாம  வளர்ச்சியில்  முதலாளித்துவ  பிரச்சாரத்தால்  அதற்கு உகந்த  சமூக விஞ்ஞானமும்  சட்டதிட்டங்களும்  இறுதியில்  நடந்தேறியுள்ளது.

இச்செயல்முறை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது இரண்டு  முக்கிய  மாற்றங்களும்  நடந்தேறின.  ஒன்று முதலாளித்துவத்தின்  கோட்பாடுகள்  சித்தாந்தமாக்கப்பட்டதும் இரண்டு  ஏகபோகங்கள் ஆட்சி மறைமுகமாக   ஏற்பட்டதும்  ஆகும் (பூர்ஷ்வா சர்வாதிகாரம்). 

இவ்வாறு  முதலாளித்துவ  கோட்பாடுகள்  சித்தாந்தமாக   ஆக்கப்பட்ட நிலையில்,  இதற்கு வலுவான  ஆதரவு கொடுப்பதற்கு  கல்வி முறைகளையும்,   பிரச்சார மேடைகளையும் உருவாக்கினார்கள்.

இவ்வாறு உருவாக்கப்பட்ட முதலாளித்துவ  சித்தாந்தம்  தனக்கே  உரித்தான  வர்க்க  குணாம்சங்களை  வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.  மாறாக, முதலாளித்துவம் என்பது  உலகத்தின் மறையாகவும், உலகம் முழுவதும்  உள்ளதாகவும், உலகைப்  பிரதிபலிப்பதாகவும்,  விரிந்து  கிடப்பதாகவும்   கற்பிக்கப்பட்டது.  தனது சர்வாதிகார போக்கை  முக்காடிட்டு மறைத்துக் கொண்டே  நாட்டின் விதிகளை  தனக்கேற்ற  சட்டமாக  மாற்றிக் கொண்டது.

இவ்வாறு  சட்டத்தின்  ஆட்சி என்ற  அமைப்பின் கீழ்  பூர்ஷ்வா  சர்வதிகாரம்  தன்னை மறைத்துக் கொண்டே அனைவருக்கும் பொதுவானதாகவும்,  நீக்கு போக்குடன் இருப்பதாகவும் காட்டிக் கொண்டது. மேலும் பாரபட்சமின்றி  தேர்தல்களை நடத்துவதாகவும், சீரான நிர்வாக அமைப்புகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும்,  நியாயத்துடன் விதிமுறைகளும், நடவடிக்கைகளும்  கையாளப்படுவதாகவும்,  சட்டத்தின்  அங்கீகாரத்திற்கு  உட்பட்டே  நடப்பதாகவும்  காட்டிக் கொண்டது. 

ஆனால் சோசலிச சட்டத்தின் ஆட்சி  முதலாளித்துவ சட்டத்தின்  ஆட்சியை அப்படியே பிரதியெடுத்து  நடத்தக் கூடியது அல்ல. மாறாக, 1. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின்  தலைமை 2. சட்டத்தின்  ஆட்சி  3. மக்களே எம் நாட்டின  தலைவர்கள்   என்ற நிலை  ஆகிய மூன்றையும்  சமநிலைக்கு  கொண்டு வர  வேண்டியுள்ளது.  எப்படியாயினும், மனிதகுலம் ஏற்படுத்திய வாழ்க்கை நெறிமுறைகளிலிருந்து  சட்டம் ஏற்படுத்திய  நெறிமுறைகளுக்கு  மாற்றிக்கொள்வதில் பல நடைமுறை சிக்கல்களை இன்றும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இது  படிப்படியாகவும்  நீண்டகாலம்  பிடிக்கும்  செயல்முறையாகவும் இருக்கும்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின்  18வது  மத்திய கமிட்டி  தனது தீர்மானத்தில்  கூறிய  வழிகாட்டுதலின்  அடிப்படையில், விரிவான  சட்டத்தின்  ஆட்சியை  அமல்படுத்த நீடித்தகாலத்திற்கு ஈடுபட வேண்டியுள்ளது; அதில் முழு முயற்சியையும் செலுத்தவேண்டியுள்ளது. எங்களுடைய இந்த முயற்சியானது மார்க்சியத்தை  21ம் நூற்றாண்டிற்கேற்ப  விரிவுபடுத்தவும்,  சமகால  சீனத்திற்கு  ஏற்ப எடுக்கும் நடவடிக்கையும் ஆகும்.

எங்களது  நாட்டில்  சட்டத்தின் ஆட்சியை  அமல்படுத்துகிறபோது  மூன்று முக்கிய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண  வேண்டியுள்ளது.

1. சீனக் கம்யூனிஸ்ட்  கட்சியின் தலைமை 2. சீன அரசியலமைப்புச் சட்டத்தை உயர்த்தி பிடிப்பது  3. சட்டத்தின்  மீது   உள்ள நம்பிக்கை   ஆகிய மூன்றுக்கும் உள்ள உறவினை  சமச்சீராக   கொண்டு செல்ல வேண்டியுள்ளது.  சிலர்  சட்டத்தின்  அதிகாரம் பெரிதா? அல்லது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின்   அதிகாரம்    பெரிதா? என்று கேட்கிறார்கள். இது தவறு.   ஆட்சி அதிகாரம், சட்டம்  இவற்றிற்கிடையே இணக்கமான உறவிலேயே நாம் கவனம் செலுத்த வேண்டும். இரண்டாவது, சட்டத்தின்   ஆட்சிக்கும், மக்கள் ஜனநாயக  சர்வாதிகாரத்திற்கும் இடையிலான உறவையும் சமப்படுத்தவேண்டியுள்ளது.

சீனாவின் அரசியல்  அமைப்பில் உள்ள  நான்கு அதிமுக்கியமான  கொள்கை பிரகடனத்தில்  தேசிய  நிர்வாகத்தின்  அடித்தளமே  மக்கள் ஜனநாயகத்தின்  சர்வாதிகாரம் என்பதாகும்.  இது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்புச் சட்டத்திலும் உள்ளது,  சீன அரசியல்  அமைப்பு சட்டத்திலும் இடம் பெற்றுள்ளது.  இந்த  கொள்கையில்  எந்த ஊசலாட்டத்திற்கும்  இடம் கொடுக்க முடியாது.

எனவே, மக்கள்  ஜனநாயக  சர்வாதிகாரத்தை   சட்டத்தின்  உணர்வுகளோடு  இணைந்து எடுத்துச் செல்வதுதான் சரியான  பாதையாக  இருக்குமேயன்றி, மற்றது அல்ல.

மூன்றாவது  சட்டத்தின்  அதிகாரத்தினையும் மக்களின் முக்கிய நிலமைகளையும்  கணக்கில் கொண்டு  சமச்சீராக  கொண்டு  செல்லவேண்டியுள்ளது.  சோசலிசத்தின்  சட்ட ஆட்சியில்  மக்களே  முதன்மையானவர்கள் ஆவர்.   அதன் குறிக்கோளே  மக்களை   பாதுகாப்பது,  முன்னேற்றுவது,  அவர்களோடு   இணைந்து மக்களின்   தேவைகளை பூர்த்தி செய்வது.

இதுவே  முதலாளித்துவ  சட்ட ஆட்சிக்கும் சோசலிச  சட்ட ஆட்சிக்கும் உள்ள அடிப்படை  வேறுபாடு. 

4. பகிர்ந்தளித்தல்

செல்வத்தின் பெருக்கம் மற்றும்  செல்வம் அல்லாத பொருள்களின்  பெருக்கம்  அனைத்தும்,  எல்லா மக்களுக்கும், எல்லா சமூகத்தினருக்கும்  சமமாக  பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பது உலகில் உள்ள மக்களின் விருப்பம் ஆகும். இந்த விருப்பத்தின்  பின்னணியில்  ஒரு சோசலிச சமுதாயத்தில்   கையாளப்படும்  பகிர்ந்தளித்தலுக்கும், முதலாளித்துவ சமுதாயத்தில் ஏற்படும்   பகிர்ந்தளித்தலுக்கும்  உள்ள வேறுபாட்டினை  காணலாம்.  முதலாளித்துவ சமுதாயத்தில்  அரசியல்,  சமூகம்  மற்றும் பல விசயங்களையும்   பகிர்ந்தளிப்பதற்கு  நிபந்தனை உண்டு. அதாவது சொந்த  நலன்களையே   நோக்கும் சிறுபான்மையினராக உள்ள பெரு முதலாளி மற்றும் நிலப்பிரபுக்களை திருப்திப்படுத்துவதே அந்த நிபந்தனையின் மையம் ஆகும்.

ஆனால் சோசலிசத்தில்  பகிர்ந்தளிப்பது  என்பது  இதற்கு மாற்றாக  மக்களை  மையப்படுத்திய   அணுகுமுறையாக  இருக்கும்.

சீர்த்திருத்தத்தை முன்னெடுத்துக் கொண்டே ஒரு ஆழமான  பொருளாதார  விரிவாக்கத்தை மேற்கொண்டு,  புதிய கோட்பாடுடைய  முன்னேற்றத்தின் பாதையில் பெறும் நலன்கள் அனைவருக்கும்  பகிர்ந்தளிக்கப்படும்.  இப்படிப்பட்ட  நடவடிக்கையினால்  காலம்காலமாக  சுயலாபக்காரர்கள்  ஏற்படுத்திய  தடைகள்  அகற்றப்படும்.

இவ்வாறு  பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய  நோக்கத்தை நிறைவேற்றிடவும், திட்டவட்டமான,  சமச்சீரான  நலன்களை   கிராமப்புறம் மற்றும்  நகர்ப்புறத்தில்  வாழும் மக்களிடையே உறுதி செய்யவும்  நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்படும். இந்த நடவடிக்கைகளால்  கிராமப்புற,  நகர்ப்புற  மக்களிடையே  ஒருங்கிணைந்த  முன்னேற்றம்,  நியாயமற்ற  வருமானத்தை கைப்பற்றி பகிர்ந்தளித்தல்,  நடுத்தர வர்க்கத்தை  விரிவுபடுத்துதல்  மற்றும் கிராமப்புற மக்கள் மற்றும்  அடித்தட்டு மக்களின்  வருமானத்தை   அதிகரித்தல்  ஆகியவற்றுக்கான நடவடிக்கைகள்  எடுக்கப்படுகின்றன.

பகிர்ந்தளிப்பது என்பது சோசலிசத்தின் ஒரு அடிப்படையான அம்சமாகும். சீனக் கம்யூனிஸ்ட்  கட்சியின்  நெஞ்சார்ந்த  கொள்கை  என்பது தன் மக்களுக்கு  மனப்பூர்வமாக  சேவை செய்வதே ஆகும்.

சோசலிச நவீனமயமாக்கலின்  அடிப்படை நோக்கம் என்பது  இறுதியில்  மக்களின்  முழுமையான  முன்னேற்றமாகும்.  முன்னேற்றத்தின்  கொள்கை  என்பதே மக்களுக்காக,  மக்களின்  உதவியுடன்  பெறப்படும் நன்மைகள்  அனைத்தும் மக்களிடையே பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதாகும்.   பகிர்ந்தளித்தல் என்பது  கொள்கை மட்டுமல்ல;  தேவையும் கூட. இந்த செயல் நடைமுறையால் சமூகத்தை  கீழ்நிலையிலிருந்து  மேல்நிலைக்கு   முன்னேற்ற முடியும்.

இந்த பகிர்ந்தளித்தல்  ஒரே நாளில்  நடக்கக்கூடியது அல்ல. ஆகவே  இத்தருணத்தில்  மக்களின்  எதிர்பார்ப்புகளுக்கு  அதிகமாக  உறுதி அளித்துவிடக் கூடாது.  அதேநேரத்தில்  பகிர்ந்தளித்தல்  என்பது ஒரு வெற்று முழக்கமாகிவிடுவதும்  கூடாது.  அதேசமயத்தில் பகிர்ந்தளிப்பது என்பது  சமூக நிலைகளிலுள்ள  வேறுபாடு  மற்றும் பன்முகத் தன்மைகளை  கணக்கில் கொண்டு  செய்யப்படும் என்பதை  முன் எச்சரிக்கையுடன்  உறுதி செய்ய வேண்டும். எல்லோருக்கும்  என்ற அடிப்படையிலோ  அல்லது  எல்லோருக்கும்  ஒரேமாதிரி என்ற  அடிப்படையிலோ பகிர்ந்தளிப்பது தவறாக முடியும்.

ஆகவே பொருளாதார முன்னேற்றத்தில்  ஏற்படக்கூடிய  வெவ்வேறு  நிலைகளுக்கு ஏற்ப  பகிர்ந்தளிப்பதிலும்  வெவ்வேறு மாறுபட்ட  நிலைகள் ஏற்படும்.  இந்நிலையில்  சமூகத்திலுள்ள  ஒவ்வொரு  அடுக்கு மக்களுக்கும், மக்கள் பகுதிக்கும்,  குறிப்பாக  குறைந்த  வருமானமுள்ள  பகுதியில்  உள்ளவர்கள்  மகிழ்ச்சி  அடையவும்,   ஆதாயம்  பெறவும் திருப்தி  அடைவதற்குமான நடவடிக்கைகள்  எடுக்கப்படும்.  இதன்மூலம்  சீன மக்கள், சீன கம்யூனிஸ்ட்  கட்சிக்கு, சீன நாட்டிற்கு, சீன சமூகத்திற்கு பற்று உடையவர்களாக  இருப்பது மட்டுமன்றி ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பதற்கும்  முன்வருகிறார்கள். 

இவ்வாறு  பகிர்ந்தளிப்பது  என்ற நடவடிக்கை மூலம்  மார்க்சியத்தை   21ஆம் நூற்றாண்டிற்கேற்ப  முன்னேற்றி சமகால சீனத்தில்  அமல்படுத்திப் பார்ப்பது என்ற முயற்சியில் இறங்கியுள்ளோம்.

5. சகவாழ்வு

பலவிதமான சமூக அமைப்பு மற்றும் சமூகச் சூழல், வரலாறு,  கலாச்சாரம்  இவைகளிலும் பலவிதமான பின்னணி  உடைய நாடுகள் அனைத்தும்  ஒருவருக்கொருவர்  இணைக்கமாக இருப்பது  இன்றைய முக்கிய  தேவையாகும்.  இதன்மூலம்  மனித குலத்திற்கு  தேவையான  பகிர்ந்தளிர்ப்புடன் கூடிய எதிர்காலத்தை  நிர்மாணிக்க முடியும்.  ஒருவருக்கொருவர்  ஒத்துழைப்புடனும்,  அமைதியான சூழலுடனும்  வளர்ச்சிப் போக்கினை  நிறுவிட  முடியும்.  இவ்வாறு  செய்வதன்மூலம்  பலம் மிகுந்த  நாடே  உலக நாடுகள் அனைத்தின் மீதும்  பொருளாதார   கலாச்சார  மேலாதிக்கம்   செலுத்தும்  என்ற காலம்  காலமாக  இருந்த எண்ணத்தை அடியோடு அகற்றிட முடியும்.

இந்த சமாதான  சகவாழ்வு  என்பது  சோசலிசத்திற்கும்  முதலாளித்துவத்திற்கும் இடையே  ஊசலாடுகிறது. முதலாளித்துவமும்  சோசலிசமும் வெவ்வேறு காலகட்ட வளர்ச்சி நிலைகளில் உள்ள போதிலும், அவற்றின் சமூக அமைப்புகள் வேறுபட்டிருக்கும்போதும், இவை இரண்டுக்குமான சகவாழ்வு தேவைப்படுகிறது. அவ்வாறு  சகவாழ்வு  வாழ்கின்ற இன்றைய  காலகட்டத்தில் இவ்விரு  வெவ்வேறான  சித்தாந்தங்களுடைய  சமூக  அமைப்புகள் ஒன்றோடொன்று  போட்டியிட்டுக் கொண்டே, ஒரு சமூக அமைப்பிலிருந்து மற்றொரு சமூக அமைப்பு கற்றுக் கொள்வதையும்  பார்க்க முடிகிறது.  சமூக வளர்ச்சியில்,  வரலாற்றில்  இப்படிப்பட்ட  புதுமையான  நிகழ்ச்சி இதுவரை   ஏற்பட்டதில்லை.

இதிலிருந்து தெரிவது என்னவென்றால்  முதலாளித்துவம்  தோன்றியதிலிருந்து  இன்று பலவிதமாக மாறுபட்டுள்ளது.  ஒரேமாதிரியான  உற்பத்தி  முறையோ  அல்லது சமூக அமைப்போ உலகில்  ஆதிக்கம்  செலுத்த முடியும்  என்ற காலமும்  கரையேறிவிட்டது. ஆகவே இன்றைய காலகட்டத்துடன் இணைந்து வாழ  பனிப்போர் திட்டங்களை அறவே ஒழிப்பதும்  என்னை எதிர்ப்பவர் தோல்வியுற வேண்டும் என்ற  போக்கை  கைவிடலும் அவசியமாகிறது.

முதலாளித்துவத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையில்  யார் யாரை  அழிப்பது என்ற  கேள்விக்கே  இடமில்லை.  பல வருடங்களாக மேற்கத்திய நாடுகள்  சோசலிச நாடுகளை தோற்கடிக்கவும்  அல்லது மாற்றியமைக்கவும்  முயற்சிகளை  மேற்கொண்டன.  இந்த முயற்சியில்  சோவியத் யூனியனிலும்  கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும்  சோசலிசத்தை அகற்றி வெற்றி கண்டனர்.  இதனால் உலக அளவில்  சோசலிச சக்திகளுக்கு  தற்காலிக   பின்னடைவு ஏற்பட்டது.  ஆனால்  இக்கால கட்டத்திலும்  சீனப் பண்பியலோடு கூடிய  சோசலிசத்தின் வளர்ச்சியை  தடுத்து நிறுத்துவதில் அவர்கள் தோற்றுப்போனார்கள். சோசலிசத்தினுடைய  உருக்கு போன்ற சக்திக்கு  இது ஒரு சான்றாகும்.

இன்றைக்கு  மிகச் சிக்கலாக  இருக்கக்கூடிய உலக  வரைபடத்தில்  சோசலிசமும்  முதலாளித்துவமும்  தங்களது  வலுவில்  சமமாக  பொருந்தியுள்ளன.  இரண்டிற்குமே  ஒரு மிகுந்த  சக்தியுடைய தலைமையும், பல  ஆதரவு சக்திகளும்  உள்ளன.

இந்த நிலைமை ஏற்பட  நேரடியான  போரையோ  அல்லது பனிப்போரையோ  காரணமாக  காட்ட முடியாது.  நீண்டகால,  சமாதான  வளர்ச்சியுடன்  சீனப் பண்பியல்போடு கூடிய சோசலிசம்  நிறுவப்பட்டதும்,  சீர்திருத்தமும்,  பொருளாதாரத்தை   திறந்துவிட்டதும் இதற்கான காரணங்கள் ஆகும்.  இந்த சீன வளர்ச்சியின்மூலம் பனிப்போர் காலத்தில் ஏற்பட்ட “சோசலிசம்  முடிந்துவிட்டது” என்ற கோட்பாடு  முறியடிக்கப்பட்டது.

இவ்வாறு  சமாதான சகவாழ்வு என்பதன் மூலமும்,   சீன அரசின்  வலுவும்  வளர்ச்சியும் இணைந்து  சீனாவை  உலக மேடையின்  நடுமையத்திற்கு  இட்டு வந்துள்ளது.  முதலாளித்துவத்தின்  அமைப்புகளை  இறுதியாக  சோசலிசமாக  மாற்றுவது என்பது   பல சரித்திர   கட்டங்களை உள் அடக்கிய  நீண்ட கால நிகழ்ச்சியாகும்.

ஒரு முக்கியமான  கட்டத்தில் சோசலிச நாடுகள்  அனைத்தும்  தங்கள் நாட்டிற்கு ஏற்புடைய  சீர்த்திருத்த  நடவடிக்கைகளில்  இறங்க வேண்டும். தங்கள்  நாட்டினை  திறந்துவிடல்  வேண்டும். இதன்மூலம்  உலக முதலாளித்துவத்தை  சமமாக  சந்திக்க  இயலும்.

இப்படிச் செய்வதன் மூலம்  மேற்கத்திய  நாடுகள்  சோசலிசத்தை பின்பற்றி வரும் நாடுகளை முற்றுகையிடுவதையும், கட்டுப்படுத்துவதையும்  உடைத்தெறிய முடியும்.

பொதுவாகச் சொன்னால், முதலாளித்துவமும்  சோசலிசமும்  சகவாழ்வு  வாழ்வது  சம்பந்தமாக  நான்கு முக்கிய  குறிக்கோள்களை மனதில்  கொள்ள வேண்டும்.

ஒரு சோசலிச நாடு தான் செல்லும்  பாதையில்,  கோட்பாடுகளில், தன்னுடைய  அமைப்பில்,  கலாச்சாரத்தில்  அசையா நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும்.  இவைகளில்  உங்களுக்கே  நம்பிக்கை இல்லையெனில்   உங்கள்மீது  நம்பிக்கை வைத்து  வருவார்கள்  என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

இரண்டாவது  சோசலிச நாடு  சுயச்சார்பு உடையதாக  இருக்கவேண்டும். இதற்கான  முயற்சியை தன் கையில் இறுகப் பற்றி எடுக்க வேண்டும். எக்காரணம்  கொண்டும்  மற்றவர்களை  சார்ந்து  இருக்கக்கூடாது. தன் நாட்டினுடைய  இறையாண்மை,  பாதுகாப்பு,  வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள்  இவை எதற்கும்  பிறநாட்டை  சார்ந்திருக்கக் கூடாது.

மூன்றாவது ஒரு சோசலிச நாடு வெளி உலகிற்கு  தனது நாட்டை   முழுவதும் திறந்து விடவேண்டும்.  உலக நாடுகளுடன் விரிவான  தொடர்பு  வைத்திடல்  வேண்டும்.   இதன்மூலம்  ஒருவருக்கொருவர்  கற்றுணர வேண்டும்.

நான்காவது  ஒரு சோசலிச நாடு தனது  சர்வதேச தொடர்புகளை  மேம்படுத்திக் கொள்ளுதல்  மிகவும்  அவசியம்.  இதன்மூலம்  தனது செல்வாக்கை  உலகளவில்  உயர்த்திக் கொள்ள முடியும்.

மேற்சொன்ன  நான்கு  கோட்பாடுகளையும்  சோசலிச  நாடுகள் கையாள்வதே  வெற்றிக்கு  திறவுகோலாக  அமையும். நீண்டகாலமாக  அனுகூலங்களற்ற நிலையில்  இருக்கும் சோசலிச  நாடுகள்  தங்கள் நாடுகளின்  பண்பியல்பிற்கு ஏற்ப சோசலிச  நடவடிக்கைகளை  வளர்த்திட வேண்டும்.  அவ்வாறு  வளர்ப்பதற்கு  நாட்டிற்கேற்ற  சீர்த்திருத்தங்களையும்,  நாட்டை திறந்து விடுவதையும்  மேற்கொள்ள  வேண்டும்.   

இக்கட்டுரையில்  கூறப்பட்ட  ஐந்து முக்கிய விசயங்கள்:- 1. சந்தை 2. மூலதனம்  3. சட்டத்தின்  ஆட்சி  4. பகிர்ந்தளித்தல்  5. சகவாழ்வு  இவைகளின்  சுருக்கம்  யாதெனில்  ‘மார்க்சியம் நிச்சயமாக மறுமலர்ச்சி பெறும் என்பதும்,  எங்களது  சீனக் கனவின் அடிப்படையில் சீன  தேசம்  புத்தெழுச்சி  பெறும் என்பதுமாகும்.

மார்க்சியம் சீனாவில் வளர்வதற்கு  தேவையான அடித்தளமும்  நம்பிக்கையும்  உள்ளது.

இதற்கான  தரக்குறியீடு  என்பது 21ஆம் நூற்றாண்டிற்கான  மார்க்சியத்தை  சமகால  சீன நாட்டில் பொருத்தி அதை  வளர்ச்சி  அடையச் செய்வதும் ஆகும்.   மேலும் சீனப் பண்பியல்களோடு தத்துவம்,  சமூக விஞ்ஞானம்,  ஆய்வு  முதலியவற்றை  மேற்கொள்ளுவதும்  ஆகும்.

தமிழில்: கே.ராமசுப்பிரமணியன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s