மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


குறைத்து மதிப்பிடப்படும் பெண்களின் உழைப்பு, ஊதிய அசமத்துவம்


குரல்: தேவி பிரியா
  • கே ஹேமலதா

2019-20ம் ஆண்டுக்கான உலகளாவிய பாலின இடைவெளி குறியீட்டு எண் உலகப் பொருளாதார மன்றத்தால் ஜனவரி 2020ல் வெளியிடப்பட்டது.  இப்பாலின இடைவெளி பட்டியலில், ஆய்வு நடத்தப்பட்ட 153 நாடுகளில் இந்தியா 112வது இடத்தில் உள்ளது.  2018ம் ஆண்டில் 108வது இடத்தில் இருந்த இந்தியாவின் நிலை தற்போது 4 புள்ளிகள் சரிவடைந்துள்ளது.  2006ம் ஆண்டில் உலகப் பொருளாதார மன்றம் பாலின இடைவெளியை கணக்கீடு செய்ய துவங்கியபோது இருந்த நிலையிலிருந்து இந்தியா தற்போது 14 புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளது.  சுகாதாரம் மற்றும் தொடர்ந்து உயிர் வாழ்தல் ஆகிய வரையறைகளில், நமது அண்டை நாடுகளான சீனா, இலங்கை, நேபாளம் மற்றும் வங்கதேசத்தை விட மிகவும் கீழே – 150வது இடத்தில் – இந்தியா இருப்பது மிகுந்த கவலையை அளிக்கிறது.  இந்தியாவில் பெண்களுக்கான பொருளாதார வாய்ப்புகள் 35.4% என்ற மிகக் குறைவான அளவில் இருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது.  பாகிஸ்தான், ஏமன், சிரியா மற்றும் ஈராக் ஆகிய நான்கு நாடுகளில் உள்ள பெண்கள் மட்டும்தான் இந்தியாவில் உள்ள பெண்களை விட குறைவான பொருளாதார வாய்ப்புகளைப் பெற்றவர்களாக உள்ளனர்.

உலகப் பொருளாதார வாய்ப்புகளில் காணப்படும் இடைவெளி கடுமையான சரிவை சந்தித்திருப்பதாக உலகப் பொருளாதார மன்றம் குறிப்பிடுகிறது.  இந்த இடைவெளியை சரி செய்திட 202 ஆண்டுகள் பிடிக்கும் என 2018-ம் ஆண்டில் மதிப்பீடு செய்யப்பட்டது.  தற்போது அதற்கு 257 ஆண்டுகள் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில், பெண்களின் வேலை பங்கேற்பு விகிதம் பல ஆண்டுகளாக தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.  15 வயதுக்கு மேற்பட்ட கிராமப்புற பெண்களின் வேலை பங்கேற்பு விகிதம் 1999-2000த்தில் 35 சதவீதமாக இருந்தது.  2011-12ல் இது 24 சதவீதமாக குறைந்தது.  2017-18ல் 18 சதவீதத்திற்கும் கீழே சென்றுள்ளது.  நகர்ப்புற பெண்களின் பங்கேற்பு விகிதம் சுமார் 16 சதவீதம் என்ற குறைவான அளவிலேயே உள்ளது.  இந்தியப் பெண்கள் எந்த வேலையையும் செய்யாமல், சும்மா இருக்கிறார்கள் என்பது இதன் பொருளல்ல.

பொருளாதார கணக்கீடுகளில் பெண்களின் வேலைகள் குறைத்து மதிப்பிடப்படுகிறது.  இவ்வாறு குறைத்து மதிப்பிடப்படுவது, வேலை பங்கேற்பு விகிதத்தில் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதற்கான முக்கியமான காரணிகளில் ஒன்றாகும்.  இதன் காரணமாக புள்ளிவிவரங்களில் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.  ‘வீட்டு வேலைகளை மட்டும் செய்வது’ மற்றும் ‘வீட்டு வேலைகளை செய்வதோடு, காய்கறிகள், விறகுகள், கால்நடைகளுக்கான தீவனங்கள், குடிநீர் போன்றவற்றை சேகரிப்பது மற்றும் வீட்டு உபயோகத்திற்கான தையல் வேலைகளையும், துணி நெய்யும் வேலைகளையும் செய்வது’ என குறிப்பிடப்படும் சில வேலைகள் கணக்கீட்டு முறைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டால், தொழிலாளர் சக்தியில் பெண்களின் பங்களிப்பு வியக்கத்தக்க அளவு அதிகரிக்கிறது.  கிட்டத்தட்ட 85 சதவீதம் என்ற அளவை அது எட்டுகிறது.  2019ம் ஆண்டில் 80 சதவீதத்திற்கும் சற்று குறைவாக இருந்த ஆண்களின் பங்கேற்பு விகிதத்தை விட நிச்சயமாக இது கூடுதலாகும்.  இந்தியாவில் ஆண்களை விட பெண்களே கூடுதலாக உழைக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது.

‘பெண்களுக்கான வேலைவாய்ப்புகளில் ஏற்பட்டுள்ள சரிவானது, ஊதியம் பெறும் வேலைகளிலிருந்து ஊதியமில்லாத வேலைகளுக்கு அவர்கள் மாறுவதையே உண்மையில் பிரதிபலிக்கிறது எனப் புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர் ஜெயதி கோஷ் குறிப்பிடுகிறார். 

நவீனதாராளவாத யுகத்தில் பெண்களின் வாழ்நிலை சீர்குலைந்து போயிருப்பதன் காரணமாக, அதிக எண்ணிக்கையிலான பெண்கள் – குறிப்பாக ஏழைக் குடும்பங்களைச் சார்ந்த பெண்கள் இத்தகைய வேலைகளை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.  நவீன தாராளவாத கொள்கையின் கீழ் உண்மை ஊதியம் என்பது தேக்கமடைந்து இருப்பது அல்லது வீழ்ச்சியடைந்து வருவதோடு, அடிப்படை வசதிகள் இல்லாதது, கல்வி, சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் கட்டமைப்புகளுக்கு போதுமான அளவு அரசு செலவிடாது இருப்பதன் காரணமாக, குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய கூடுதல் நேரத்தை செலவிட்டு, கூடுதலாக வேலை பார்க்க வேண்டிய நிலையில் பெண்கள் உள்ளனர்.  சமூகத்தில் காணப்படும் ஆணாதிக்க நடைமுறைகள் காரணமாக, பெண்கள் மட்டுமே செய்ய வேண்டிய குடும்பப் பொறுப்புகளின் பகுதியாகவே இவ்வேலைகள் பார்க்கப்படுகின்றன.  சுற்றுச்சூழல் சீர்கேடு, காடுகள் அழிப்பு, தண்ணீர் நெருக்கடி போன்றவை பெண்களின் சுமையை மேலும் அதிகரிக்கச் செய்கின்றன.  ஆனால், இந்த வேலைகளை செய்யும் பெண்களுக்கு எந்த கூலியும் கொடுக்கப்படுவதில்லை என்பதோடு, அது வேலை என்ற கணக்கீட்டிற்குள் வருவதும் கிடையாது.

2012ம் ஆண்டிற்கான தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியப் பெண்கள் தண்ணீர் சேகரிக்க நாள்தோறும் சராசரியாக 30-35 நிமிடங்கள் செலவிடுகின்றனர்.  அப்படி அவர்கள் நேரத்தை செலவிடவில்லை என்றால், தண்ணீருக்காக அக்குடும்பம் ஒரு மாதத்திற்கு சுமார் 93 ரூபாய்கள் செலவிட வேண்டியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.  அதே போன்று, விறகுகளை சேகரிப்பதோடு, சமையல் எரிபொருளுக்காக மாட்டு சாணத்தை சேகரித்து வறட்டிகளை தயாரிக்கின்றனர்.  உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு உருளைக்கான இணைப்பும், முதல் எரிவாயு உருளையும் இலவசமாக கொடுக்கப்படுகிறது.  எனினும், அதிகரித்து வரும் சமையல் எரிவாயு உருளை விலை காரணமாக, மீண்டும் அவற்றை காசு கொடுத்து வாங்கிட இந்த ஏழைக் குடும்பங்கள் மிகவும் சிரமப்படுகின்றன.  எனவே, சமையலுக்குத் தேவையான எரிபொருளை சேகரிக்கும் பணியை தொடர்ந்திட பெண்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.  அதேபோன்று, குடும்பத்தின் செலவுகளைக் குறைத்திட துணி தைக்கும் வேலைகளை பெண்கள் மேற்கொள்கின்றனர்.

பிரதானமாக பெண்களால் செய்யப்படும் வேலைகள் அங்கீகரிக்கப்படாமல் இருப்பதும், அவ்வேலைகள் மதிப்பீடு செய்யப்படாமல் இருப்பதும் பெண்கள் மீது மட்டும் பாதிப்பை ஏற்படுத்தும் விஷயமல்ல. ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் இது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது பெண்களை மட்டுமின்றி, அவர்கள் செய்யும் வேலைகளையும் மதிப்பிழக்கச் செய்கிறது.  இதன் காரணமாக, இந்த வேலைகள் குடும்பத்தைத் தாண்டி வெளியில் செய்யப்படுகிறபோதும், குறைத்து மதிப்பிடப்பட்டு, குறைவான கூலியே கொடுக்கப்படுகிறது.  அதிக எண்ணிக்கையில் பெண்கள் செய்திடும் இவ்வேலைகளுக்கு கூலி மிகக் குறைவாகவே உள்ளது.  ஆணுக்கும் பெண்ணுக்கும் கொடுக்கப்படும் கூலிக்கு இடையே காணப்படும் இடைவெளி மிக அதிகமாக உள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.  சராசரியாக, ஆண் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்படும் கூலியில் மூன்றில் இரண்டு பங்கே பெண்களுக்கு கூலியாகக் கொடுக்கப்படுகிறது. 

முக்கியமாக, பெண்கள் செய்யும் பணிகளை அரசே குறைத்து மதிப்பீடு செய்கிறது அல்லது அவர்களது பணிகளை குறைத்து மதிப்பிட்டு தனது செலவுகளைக் குறைத்திட சமூகத்தில் பரவலாகக் காணப்படும் இத்தகைய போக்கை பயன்படுத்துகிறது.  அங்கன்வாடி, தேசிய சுகாதார திட்டம், மதிய உணவுத் திட்டம், தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டம் (என்சிஎல்பி), அனைவருக்கும் கல்வி போன்ற இந்திய அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் கிட்டத்தட்ட 80 லட்சம் பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.  இவர்கள் உணவு சமைத்தல், அவற்றை குழந்தைகளுக்கு அளித்தல், குழந்தைகளுக்கு கற்பித்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சுகாதார சேவைகளை அளித்தல் போன்ற பணிகளை செய்து வரும் இவர்களுக்கு, “தொழிலாளர்” என்ற அங்கீகாரம் குறிப்பாக மறுக்கப்பட்டு வருகிறது.  “சமூக சேவகர்கள்”, “செயல்வீரர்கள்”, “நண்பர்கள்” என்பன போன்ற பல்வேறு பெயர்களில் இவர்கள் அழைக்கப்பட்டு, அற்பத் தொகையே கூலியாகக் கொடுக்கப்படுகிறது.  இவ்வாறாக, அரசின் நலத்திட்டங்கள் தொடர்பான செலவுகளுக்கு பெருமளவிலான மானியத்தை இவர்கள் அளிக்கின்றனர்.

பெண்களின் வேலைகள் குறைத்து மதிப்பீடு செய்யப்படுவது இந்தியாவிலும், இதர வளர்ந்து வரும் நாடுகளில் மட்டும் காணப்படும் நிகழ்வல்ல.  வளர்ந்த நாடுகளிலும் கூட இத்தகைய போக்கை காணமுடிகிறது. ஆண்-பெண் இடையேயான வரலாற்றுபூர்வமான வேலைப் பிரிவினைக்கான நடைமுறையில், சமூகத்தின் வளர்ச்சிப் போக்கு மற்றும் ஆணாதிக்க மதிப்பிகளில் இது வேரூன்றி இருக்கிறது.  வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகள் உள்ளிட்ட முதலாளித்துவ சமூகத்தில் இன்றைக்கும் கூட இவை நீடிக்கின்றன.  பாலின சமத்துவத்திற்கு பெயர் பெற்று, பாலின இடைவெளி அட்டவணையின் உச்சியில் இருக்கும் நோர்டிக் நாடுகளிலும் கூட பெண்களின் வேலைகள் குறைத்து மதிப்பீடு செய்யப்படும் நடைமுறை காணப்படுகிறது.  உதாரணமாக, பின்லாந்து நாட்டில், உள்ளூர் அரசுப் பணிகளில் உள்ள ஊழியர்களில் 80 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.  அதே நேரத்தில், இவர்களில் பெரும்பகுதியினர் குழந்தை பராமரிப்பு, சுகாதாரப் பணி, சமூகப் பணிகள் போன்றவற்றில் வேலை செய்கிறார்கள்.  அதிலும், கிட்டத்தட்ட 90 சதவீதத்தினர் பெண்கள் ஆவர்.  இவர்களே உள்ளூர் அரசுப் பணிகளில் இருப்பவர்களில் குறைவான ஊதியம் பெறுபவர்களாக உள்ளனர்.

ஆண்களோடு ஒப்பீடு செய்கையில் வீட்டுப் பொறுப்புகளில் பெருமளவிலானவற்றை இன்றைக்கும் கூட பெண்களே செய்ய வேண்டியுள்ளது.  அநேகமாக உலகின் அனைத்து நாடுகளிலும் கூட இச்சுமையே பெண்கள் குறைவான அளவில் பொருளாதார பங்கேற்பிற்கும், பொருளாதார வாய்ப்புகளுக்கும் காரணமாகிறது.  உலகின் எல்லா பகுதிகளிலும் ஊதியம் எதுவும் இல்லாத வீட்டு வேலைகளில் பெண்கள் செலவிடும் நேரமானது ஆண்கள் செலவிடும் நேரத்தை விட பல மடங்கு கூடுதலாக உள்ளது.  நார்வே போன்ற நாடுகளில் கூட, ஆண்கள் செலவிடுவதைப் போன்ற இரண்டு மடங்கு நேரத்தை பெண்கள் ஊதியமற்ற வீட்டு வேலைகளுக்காக செலவிடுகின்றனர்.  ஜப்பானில் இது நான்கு மடங்கிற்கும் கூடுதலாக உள்ளது.

ஆண்டுதோறும் 10 டிரில்லியன் அளவிற்கு உலகளவில் பெண்கள் ஊதியமின்றி பராமரிப்பு பணியை செய்து வருவதாக ஒரு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.  இது உலகின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 13 சதவீதமாகும்.  பெண்கள் ஊதியம் எதுவும் பெறாது செய்யும் வேலையின் அளவு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.1 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது.   ஆனால், பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாததாக உள்ள பெண்களின் இவ்வளவு பெரிய பங்களிப்பு, “வேலை” என்று அங்கீகரிக்கப்படுவதில்லை.  இன்னும் சொல்லப் போனால், இது பெருமளவிலான சொத்து மறைமுகமான பண உதவியாக ஏழைகளிடமிருந்து பொருளாதாரத்திற்கு சென்று சேருகிறது.

பெண்கள் செய்யும் வேலைகள் மதிப்பிடப்படாது அல்லது குறைவாக மதிப்பிடப்படுவது என்பது பராமரிப்பு பணிகள் என்பதில் மட்டுமில்லை.  பல்வேறு உற்பத்தி நடவடிக்கைகளில் பெண்கள் செய்யும் வேலைகளும் கூட மதிப்பிடப்படாமல் அல்லது குறைவாக மதிப்பிடப்படுகின்றன.  உதாரணமாக, இந்தியாவின் பல்வேறு வடமாநிலங்களில் உள்ள செங்கல் சூளைகளில், ஆண்களும் பெண்களும் ஜோடியாக வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டு, ஆணுக்கே கூலி அளிக்கப்படுகிறது.  சமூகத்தில் காணப்படும் ஆணாதிக்கச் சிந்தனைகள் எந்த அளவிற்கு நடைமுறையில் உள்ளது என்பதை இதில் காண முடிகிறது.  முதலாளிகள் மட்டுமல்ல, தொழிற்சங்கங்களும் கூட பெண் தொழிலாளர்களை அழையா விருந்தாளிகளாகவே நடத்துகிறார்கள்.  பல இடங்களில், பெண்களுக்கான உறுப்பினர் சந்தா அவர்களது குடும்பத்து ஆண்களிடமிருந்து வசூலிக்கப்பட்டாலும், செங்கல் சூளையில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தில் உறுப்பினர்களாக நேரடியாக இணைக்கப்படுவதில்லை.  சங்கத்தின் ஆவணங்களிலும் அவர்கள் எண்ணிக்கை காட்டப்படுவதில்லை.

பெண்கள் செய்கிற வேலைகள் இவ்வாறு குறைத்து மதிப்பிடப்படுவது இன்றைய சமூகத்தில் பெண்களின் நிலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.  விவசாயப் பொருட்களின் உற்பத்தியில் அவர்கள் பெருமளவு பங்களிப்பைச் செலுத்துகிறபோதும், பெரும்பாலான பெண்கள் விளை நிலத்திற்கோ அல்லது இதர உற்பத்திச் சொத்துக்களுக்கோ உடமைதாரராக இருப்பதில்லை.  குடும்பத்திற்குள்ளும் முடிவுகளை எடுப்பதற்கான அதிகாரம் அவர்களுக்கு குறைவாகவே உள்ளது.

ஆண்-பெண் ஊதியங்களுக்கிடையே பெருமளவு இடைவெளி உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.  இந்தியாவில் ஆண்-பெண் ஊதியங்களுக்கிடையேயான இடைவெளி 27 சதவீதம் ஆகும்.  2017ம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஆக்ஸ்பாம் அறிக்கையின்படி, மிகக் குறைவான கூலியைப் பெறும் தொழிலாளர்களில் இந்தியப் பெண்கள் 60 சதவீதத்தினராகவும், அதிகளவு ஊதியம் பெறுபவர்களில் அவர்கள் வெறும் 15 சதவீதத்தினராக மட்டுமே உள்ளனர்.    

ஆண் தொழிலாளர்கள் செய்வதைப் போன்ற வேலைகளையே பெண் தொழிலாளர்கள் செய்தாலும் கூட, விவசாயம், கட்டுமானம் போன்ற துறைகளில் பெண்களுக்கு ஆண்களை விட குறைவான கூலியே கொடுக்கப்படுகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்றேயாகும்.  ஆனால், ஊதியத்தில் இத்தகைய பாலின இடைவெளி அணி திரட்டப்பட்ட துறை உள்ளிட்ட இதர பல துறைகளில் காணப்படுவதாக மான்ஸ்டெர் ஊதிய அட்டவணை குறிப்பிடுகிறது.  ‘குறைவான கூலியை அளிக்கும் துறை’ என்றழைக்கப்படும் உற்பத்தித் துறையில் பாலின ஊதிய இடைவெளி 34 சதவீதம் என்ற அளவில் உள்ளது.  தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒரு மணி நேரத்திற்கு ஆண்கள் ரூ.360.90-ஐ ஊதியமாகப் பெறுவதாகச் சொல்லப்படுகிறது.  அதே நேரத்தில் வெறும் ரூ.239.60-ஐ மட்டுமே பெண்கள் ஊதியமாகப் பெறுகிறார்கள்.  வங்கி, நிதித்துறை சேவைகள் மற்றும் காப்பீடு, போக்குவரத்து, லாஜிஸ்டிக்ஸ் மற்றும் தகவல் தொடர்புகள் போன்ற துறைகளில் 17.7 சதவீதம் என்ற அளவில் ஊதிய இடைவெளி காணப்படுவதாக் மான்ஸ்டர் ஊதிய அட்டவணை தெரிவிக்கிறது.

இந்திய சமூகத்தில் இன்றைக்கும் கூட ஆதிக்கம் செலுத்தி வரும் ஆணாதிக்க அணுகுமுறைகளும், தனது லாபத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்ற முதலாளித்துவ சமூக அமைப்பில் காணப்படும் உந்துதலால் சுரண்டப்பட்டு வரும் பெண்களின் உழைப்பும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிற்போக்கான தத்துவத்தால் வழிநடத்தப்படும் தற்போதைய பாஜக தலைமையிலான அரசின் கீழ் மேலும் மோசமடைந்து வருகின்றன.  பெண்களைக் குறித்தும் அவர்களது பங்களிப்பு குறித்தும் மோகன் பகவத் மற்றும் இதர தலைவர்கள் உள்ளிட்ட இந்த அமைப்பின் பல தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில், மனுநீதியை உறுதியாகப் பற்றியுள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பின் அணுகுமுறை திரும்பத் திரும்ப வெளிப்பட்டுள்ளது.  ராணுவத்தில் போர்முனையில் பெண்களின் பங்கு குறித்த பிரச்சனையில் உச்சநீதிமன்றத்தில் அரசின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பாஜக அரசின் இத்தகைய அணுகுமுறையைக் காண முடிந்தது சமீபத்திய உதாரணமாகும்.  ‘குறைந்த உடல் தகுதிகள், பெரும்பாலும் கிராமப்புற பின்னணியிலிருந்து வந்திருக்கும் ஆண்களை மட்டுமே நமது படைப்பிரிவுகள் கொண்டிருப்பது’ என்பதோடு, ‘தாய்மை, குழந்தைப் பராமரிப்பு, உளவியல் வரம்புகள்’ ஆகியன பெண்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதால் போர் முனையில் பணியாற்றுவதற்கு பெண்கள் தகுதியற்றவர்கள் என வெட்கமின்றி அரசு நீதிமன்றத்தில் கூறியது.  இந்த வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை என்பது வேறு விஷயமாகும்.  அதே நேரத்தில், ‘படைப்பிரிவின் முன்வரிசையில் நிற்பதை பெண் சங்கடமாக உணர்கிறாள்’ என்றும், ‘தனி ஒதுக்கிடமும், பாதுகாப்பும் பெண்களுக்குத் தேவை’, ’தன்னுடன் பணிபுரியும் ராணுவ வீரர்களின் பார்வைகளிலிருந்து பெண்கள் “பாதுகாக்கப்படவேண்டும் என்று சொல்லும் தலைவரை ராணுவத்தில் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் மறந்திட இயலாது.    

பெண்கள் செய்யும் வேலைகள் குறைவாக மதிப்பிடப்படுவதற்கு அடிப்படைக் காரணமாக உள்ள ஆணாதிக்க அணுகுமுறையை எதிர்த்துப் போராட வேண்டிய அவசியமுள்ளது.  அதே நேரத்தில், இது ஓர் நீண்ட நெடிய போராட்டமாகும்.  ஊதியமின்றி பெண்கள் செய்யும் வேலைகளை அங்கீகரிப்பதோடு, இத்தகைய வேலைகளுக்கு பொருளாதார மதிப்பை அளிப்பதே இன்றைக்கு செய்ய வேண்டியுள்ளது.  இவ்வாறு செய்வது குடும்பத்திற்குள்ளும், சமூகத்திலும் பெண்களின் பொருளாதார நிலையையும், கண்ணியத்தையும் அதிகரிக்கச் செய்யும்.   

தமிழில் – எம் கிரிஜாLeave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: