பேரா. ஆர். சந்திரா
“உழைக்கும் வர்க்கம் என்ற அடிப்படையில் எந்த பிரிவினையும் கூடாது. ஆண் பெண் இருவருமே உழைப்பாளிகள் என்று பார்க்கப்பட வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு ஏற்படும் தனித்துவமான பிரச்னைகளை தனியாக எடுத்து விவாதிக்கலாம். எனவேதான், பெண்களுக்கு தனி தொழிற்சங்கம் என்ற விவாதம் எழ வாய்ப்பு இல்லை.” [லெனின்]
சுதந்திரமான குடியரசு என்பது உள்ளிட்ட எந்த முதலாளித்துவ சமுதாயத்திலும் ஆண்-பெண் சமத்துவம் என்பது சாத்தியமில்லை. தற்போது உள்ள சட்டங்கள் மாற்றப்படவேண்டும். ஏனெனில் பழமைவாத கருத்துக்களும் சட்டங்களும் உழைக்கும் வர்க்கத்தின் மீது கடும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. [அலெக்சாண்ட்ரா கொலந்தாய்]
உழைக்கும் வர்க்க இயக்கங்களில் பெண்களின் பங்களிப்பை பற்றி பார்ப்பதற்கு முன்பு தற்பொழுது உலக உழைப்பாளர் சந்தை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வது, எதிர்காலத்தில் உழைக்கும் வர்க்கம் தன் கோரிக்கைகளை வடிவமைக்க உதவிடும். “உலக அளவில் தற்பொழுது நிலவும் வேலையின்மை பல மட்டங்களில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்துவதுடன் பொருளாதார ரீதியில் கடும் தாக்கத்தையும் ஏற்படுத்தும். வேலைக்காக காத்திருக்கும் மக்கள் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரிக்கும் சூழலில் அதை ஒரு பொருளாதார பிரச்னையாக மட்டுமே பார்க்க முடியாது. அதன் சமூக விளைவுகள் ஒட்டு மொத்த சமூகத்தின் மீதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று ஐ.எல் ஒ நிறுவன டி.டி.ஜி. டெபோரா கிரீன்பீல்ட் சென்ற ஆண்டு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். அப்பொழுது கொரோனா பரவல் தொடங்கியிருக்கவில்லை. இருந்தும் பொருளாதார சூழல் சாதகமாக இல்லை. தற்பொழுது உலக பொருளாதாரத்தையே கொரோனா நோய் புரட்டிபோட்டுவிட்டது. எனவே ஐ.எல்.ஒ சென்ற ஆண்டு வெளியிட்ட அறிக்கையிலேயே சுட்டிகாட்டிய அம்சங்களை திரும்பிப் பார்ப்போம். [World Unemployment and Social Outlook Trends 2019 ILO Report]
* பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட உலக பொருளாதார மந்தநிலையில் இருந்து பெரும்பாலான நாடுகள் இன்னும் மீண்டு வரவில்லை. சில துறைகளில் முன்னேற்றம் இருந்தும், வேலை உருவாக்கம் இல்லை என்பது பிரச்னைகளை தீவிரமடைய செய்கிறது என்பதே யதார்த்தம். தரமான வேலைகள் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்பதுடன், ஏராளமான முழு நேர பணிகள் பகுதி நேர பணிகளாக மாறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
* ரோபோ இயந்திரங்களின் பயன்பாடு மற்றும் செயற்கை அறிவு நுட்பங்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்றும், அவை பாதுகாப்பை மேம்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இத்தகைய வளர்ச்சி வேலையின்மையுடன் கூடிய வளர்ச்சியாகவே அமைந்துள்ளது.
* உலக அளவில் இளைஞர்களின் வேலையின்மை அதிகரித்துக் கொண்டே போகிறது. மொத்த உழைப்பாளர்களில் முக்கால்வாசி பேர் அமைப்பு சாரா துறைகளில் பணிபுரிகின்றனர். எந்தவிதமான பாதுகாப்பு சட்டங்களும் அமலாகாத நிலையில், இவர்களின் நிலைமை நாளுக்குநாள் மோசமாகிக் கொண்டு வருகிறது.
கொரோனா நோய் பரவலின் தாக்கம் இவர்களின் வாழ்க்கையை மேலும் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நிலையில் உழைக்கும் மக்களை ஒன்று திரட்டி, அமைப்பாக்க வேண்டிய தேவை உள்ளது. கடந்த 200 ஆண்டுகளில், உழைக்கும் வர்க்கம் எவ்வளவோ தியாகங்களை செய்து, பல கோரிக்கைகளை வென்றெடுத்துள்ளது என்பதை வரலாறு சுட்டிக் காண்பிக்கிறது. மே தினம் உழைக்கும் மக்கள் தினமாக உருவெடுத்ததும் அந்த தினத்தன்று, உழைக்கும் மக்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டங்கள், பேரணிகள் நடத்துவதும் முக்கியமான நிகழ்வுகள் ஆகும். உழைக்கும் வர்க்கம் வெறும் கூலி உயர்வுக்காக மட்டும் போராடவில்லை. எட்டு மணி நேர வேலை, பணியிடங்களில் பாதுகாப்பு, பணிப்பாதுகாப்பு, உலக அமைதி என பல முழக்கங்களை உழைக்கும் மக்கள் முன்னெடுத்து வைத்துள்ளனர். இத்தகைய இயக்கங்களில் பெண்கள் குறிப்பிடத்தக்க பங்கை செலுத்தியுள்ளனர்.
உழைக்கும் வர்க்க இயக்கங்களின் வளர்ச்சிக்கு சோசலிச நாடுகள் மட்டுமின்றி மேற்கத்திய, கீழை நாடுகளிலும் பெண்கள் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். சோவியத் யூனியனில் பெண் தொழிலாளர்களை ஒன்று திரட்டி அவர்களின் தனிச்சிறப்பான பிரச்னைகளில், கவனம் செலுத்தி உழைக்கும் பெண்களுக்காக பல்வேறு நல சட்டங்களை கொண்டு வந்த அலெக்சாண்ட்ரா கொல்லன்தாய்க்கு உலக உழைக்கும் வர்க்க வரலாற்றில் ஒரு தனி இடம் உண்டு. புரட்சி வந்த உடனேயே மாற்றங்கள் ஏற்பட்டுவிடவில்லை. தொடர்ச்சியான கருத்துப் போராட்டங்கள், அரசியல் கல்வி மூலம்தான், பெண்களை வென்றெடுக்க முடிந்தது.
அமெரிக்காவில், 1905-ல் “உலக உழைக்கும் மகளிர் அமைப்பு”[International Working Women] என்ற அமைப்பை மதர் ஜோன்ஸ் என்ற பெண்மணி துவக்கி, உழைக்கும் பெண்களை ஒன்று திரட்டினார். அதற்கு ஐந்து ஆண்டுகள் முன்பே, சர்வதேச ஆடை தயாரிப்பு தொழிலாளர்கள் “[International Garment Workers 1900] சங்கத்தை நிறுவினார்கள். கிட்டத்தட்ட முப்பதாயிரம் பெண்கள் அதில் உறுப்பினர்களாக சேர்ந்தனர்.
அப்பெண்கள் அவர்களே தங்கள் பணிக்கு தேவையான நூல், ஊசி போன்றவற்றை வாங்கிக் கொண்டு பணிக்கு செல்ல வேண்டும். முறையாக கூலி கொடுக்காமல் இருக்க முதலாளிகள் ஏகப்பட்ட குறைகளை சொல்வார்கள். ஒடுக்கப்பட்ட அந்த பெண் தொழிலாளிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தியுள்ளனர். 1909-ல் நியூயார்க் ஷர்ட் வெய்ஸ்ட் வேலை நிறுத்தம் ஆயிரக்கணக்கான பெண்களை போராட்டத்தில் உந்தித் தள்ளியது. இருபதாயிரம் பெண்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இறுதியில் அந்த ஆலை நிர்வாகம் சங்கத்தின் கோரிக்கைகளை ஏற்றது.
அதே போல, நாற்பதுகளில், ஆட்டோமொபைல் தொழிலில் கடுமையான பணிகளை [ஹெவி மெஷினரி வேலை] பெண்கள் செய்ய மறுத்தனர். லே ஆஃப் செய்யப்பட்டனர். விடாமல் போராடி அப்பெண்கள் தங்கள் கோரிக்கைகளை வென்றனர்.
ரேடியம் பெண்கள் : இன்று உலகம் முழுவதிலும் தொழிலாளர்களுக்கு ஆபத்து நிறைந்த பணிகளில் ஈடுபடும் பொழுது முக கவசம், கையுறைகள் வழங்கப்பட வேண்டும் என்பதை சட்டமாக கொண்டு வரக் காரணமாக இருந்தவர்கள் அவர்களே.
அமெரிக்காவில், 1925-ல் கடிகார உற்பத்தி தொழிற்சாலையில், ரேடியம் பூசும் பணியில் நூற்றுக்கணக்கான இளம் பெண்கள் ஈடுபட்டிருந்தார்கள். ரேடியம் புற்றுநோய்க்கு காரணம் என்று அவர்களுக்கு தெரியாது. பற்கள் விழுவது, எலும்பு முறிவது என்று பல இளம் பெண்கள் பணி தொடர்பான நோய்களால் தாக்கப்பட்டனர். எவ்வளவோ புகார் கொடுத்தும் நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. அவர்கள் உடல் ரேடியத்தினால் மின்னியது. “ஷைனிங் கர்ல்ஸ் என்று அவர்கள் அழைக்கப்பட்டனர். கிரேஸ் பிரியர் என்ற பெண் தொழிலாளியின் விடா முயற்சியால் யு.எஸ்.ரேடியம் கார்பரேசன் மீது வழக்கு தொடரப்பட்டது. அரசியல் செல்வாக்கு மிகுந்த அந்த நிறுவனத்திற்கு எதிராக வழக்கு நடத்த வக்கீல்கள் தயங்கினர். பணி தொடர்பான நோய்க்கு பெண்களின் மனநிலையே காரணம் என்று கூறப்பட்டது. ரேடியத்தை பயன்படுத்தி மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் ரேடியத்திற்கு ஆதரவான பிரசுரங்களை வெளியிட்டனர். மன உறுதியுடன் போராடிய அப்பெண்கள் இறுதியில் வெற்றி பெற்றனர். அதன் பின்னர், தொழிலாளர் நல சட்டங்கள் பல இயற்றப்பட்டன. உலக உழைக்கும் வர்க்க இயக்கத்தில் இப்பெண்களுக்கு தனி இடம் உண்டு. “ஒரு இருட்டு அறையில், ரேடியம் பூசிய கடிகாரங்கள் மின்னுவதை போல இப்பெண்கள் வரலாற்றில் ஒளி வீசுகின்றனர்.”
ஜெயா பென் தேசாய் ஒரு இந்திய வம்சாவளி பெண். லண்டனில் உள்ள மிக பிரபலமான க்ரான்விக் தொழிற்சாலை வேலை நிறுத்த போராட்டத்திற்குத் தலைமை தாங்கி [1977-78] கோரிக்கைகளை வென்றெடுத்த சிறந்த பெண் தொழிற்சங்கவாதி. நிர்வாகம் அவரையும் அவரது குடும்பத்தினரையும் அடக்கி ஒடுக்க நினைத்தது. மிகுந்த துணிவோடும், நம்பிக்கையுடனும், போராடிய அவர் ஆசிய நாடுகளிலிருந்து இங்கிலாந்தில் பனி புரியும் தொழிலாளர்களின் நலன்களுக்காக போராடிய பெண்மணி. வேலை நிறுத்தம் நடைபெற்றபொழுது அவர் நிர்வாகத்தை பார்த்து சாடியது அன்று மிகவும் பிரபலமாகியது.
“நீங்கள் தொழிற்சாலை நடத்துவதாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இல்லை. நீங்கள் மிருகக் காட்சி சாலை நடத்துகிறீர்கள். மிருகக்காட்சி சாலையில் நிறைய மிருகங்கள் இருக்கும். சில குரங்குகள் உண்டு. அவை உங்கள் ராகத்திற்கு ஏற்ப நடனம் ஆடும்… ஆனால்.. நாங்கள் சிங்கங்கள். மானேஜர் அவர்களே, நாங்கள் சிங்கங்கள். உங்கள் தலையை கடித்து குதறி விடுவோம்… ஜாக்கிரதை!” 2016-ல் BBC அவரை சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் சேர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலும், உழைக்கும் வர்க்க ஒற்றுமையை கட்டமைப்பதில் பெண்கள் மிகச் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் இடதுசாரி இயக்கத்தில், குறிப்பாக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சிறந்த பங்களிப்பை செலுத்தியவர்கள் ஆவர். விமலா ரணதிவே, அஹல்யா ரங்கனேகர், தமிழகத்தில், விவசாய தொழிலாளிகளை கிராமம் கிராமமாக சென்று ஒன்று திரட்டி அவர்களது குரலை சட்டமன்றத்தில் ஒலிக்க செய்த கே.பி. ஜானகி அம்மாள், ரயில்வே தொழிலாளர் போராட்டம் தொடங்கி பல உழைக்கும் மக்கள் போராட்டங்களுக்கு உறுதுணையாக இருந்த பாப்பா உமாநாத், மைதிலி சிவராமன், பெரிதும் அறியப்படாத திண்டுக்கல் ஆக்னஸ் மேரி ஆகியோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
உழைக்கும் மக்கள் இன்று ஏராளமான பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக எண்பது சதத்திற்கும் மேலான பெண்கள் அமைப்புசாரா துறையில் பணிபுரிவதால் அவர்களை வர்க்க ரீதியில் திரட்டுவதே மிகப் பெரிய சவாலாக உள்ளது. வேலையை இழந்து விடுவோம் என்ற அச்சம் மிக முக்கியமான காரணம். அதனால், எவ்வளவு கஷ்டங்கள், அவமானங்களை சந்திக்க வேண்டியிருந்தாலும், பொறுத்துக் கொண்டு வேலை செய்கின்றனர்.
இவர்கள் நிலையை பற்றி ஐ.எல்.ஒ அறிக்கை என்ன சொல்கிறது? “அமைப்பு சாரா துறையில் வேலை செய்யும் பெண்களின் தேவைகளும் பிரச்சனைகளும் பல வகைப்படும். எனவே, அவர்களை திரட்டுவது கடினம். அவர்கள் செய்யும் பணியின் தன்மைக்கேற்ப, தொடர் முயற்ச்சிகளின் மூலம் அவர்களை ஒன்று திரட்ட முயல வேண்டும்.” 1993ல் புனாவில், குப்பை பொறுக்கும் தொழிலாளர்களை திரட்டும் முயற்சி பல தடைகளை தாண்டி வெற்றி பெற்றது. அது மட்டுமின்றி, இன்று, அவர்கள் சுற்றுசூழல், நகர்புற சேவை, திடக் கழிவு மேலாண்மை போன்றவற்றில் பயன்படுத்தப் படுகிறார்கள். அவர்களின் கோரிக்கைகளும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் காலத்தில், உழைக்கும் வர்க்கம் நிறைய சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. சாதி, மதம் ஆகிய வேறுபாடுகளை களைந்து, விவசாய தொழிலாளர்களும், ஆலைத் தொழிலாளர்களும். அமைப்பு சார்ந்த, அமைப்புசாராத தொழிலாளர்களும் ஒன்றிணைந்து தங்கள் கோரிக்கைகளை முன்னெடுத்து செல்ல வேண்டியுள்ளது. போராட்டங்கள் மட்டுமே நமது நலன்களை காப்பதற்கு உதவும் என்பதை அழுத்தமாக மனதில் பதிய வைத்துக் கொண்டு முன்னேற வேண்டும்.
பெட்டி செய்தி
“உழைக்கும் மகளிர் இயக்கம் என்பது ஒவ்வொரு நாட்டின் நிலைமைக்கும் ஏற்றவாறு வேறுபடுகிறது. 1896-ல் சமூக ஜனநாயக கட்சியின் மாநாடு நடைபெற்றபொழுது, கிளாரா ஜெட்கின் பெண் உழைப்பாளிகளை போராளிகளாக மாற்ற சுயேச்சையான இயக்கத்தை கட்ட வேண்டும் என்றார். அதே ஆண்டு லண்டனில் நடந்த கூட்டம் ஒன்றில், முப்பது சோஷலிஸ்ட் பிரதிநிதிகள் [இங்கிலாந்து, ஜெர்மனி, அமெரிக்கா, ஹாலந்து, பெல்ஜியம், போலந்து போன்ற நாடுகளில் இருந்து வந்தவர்கள்] பெண் சோஷலிஸ்டுகள் இயக்கம் மூலமாக, பெண் தொழிலாளர்களை திரட்டும் முயற்சிகளில் இறங்க வேண்டுமென முடிவெடுத்தனர். வர்க்க போராட்டங்களில், உழைக்கும் பெண்களை கொண்டு வர இது சிறந்த ஏற்பாடு என்று கருதினார்கள். ஜெர்மனியில் பெண் தொழிலாளர்களுக்கென ஒரு தனி பீரோ உருவாக்கப்பட்டது.”
[Women Workers Struggle for their Rights – Alexandra Kollantai.1919]
Leave a Reply