என். குணசேகரன்
தொழிலாளி வர்க்க இயக்கத்துடன் இணைந்த வாழ்க்கை மாமேதை லெனின் வாழ்க்கை. இதனால், லெனின் தனக்கான தனிப்பட்ட வாழ்க்கை எதையும் அமைத்துக் கொள்ளவில்லை. சுரண்டலில் இருந்து வர்க்க விடுதலை, புரட்சி லட்சியமே அவரது வாழ்க்கை.
அவர் பிறந்து 150- ஆம் ஆண்டுகள் ஆன பிறகும் அவரது பெயர் நிலைத்து நிற்பதற்கு காரணம் என்ன? நூற்றுக்கணக்கான காரணங்களை இதற்கு சொல்ல முடியும் .ஆனால், மிக முக்கியமான காரணம் இதுதான்: உழைக்கும் மக்களுக்கென்றே உன்னதமான ஒரு உலகத்தைப் படைக்க முடியும் என்று மனித சமூக வரலாற்றில் நிரூபித்துக் காட்டியவர் லெனின். தனி மனிதராக லெனின் அந்த மாற்றத்தை சாதித்தாரா ?
துவக்கத்திலிருந்தே பலர் “ரஷ்யப் புரட்சி ஒரு தனிநபரின் சாகசம்” (one man performance) என்ற வகையில் எழுதினர். தொடர்ந்து முதலாளித்துவ எழுத்தாளர்கள் புரட்சி வெறி பிடித்த ஒரு தனிநபரால் ரஷ்யப் புரட்சி நிகழ்ந்தது என எழுதி வருகின்றனர். லெனினை ஒரு சதிக் கூட்டத் தலைவர், கொடூர மனம் படைத்த சர்வாதிகாரி என்றெல்லாம் எழுதுகின்றனர்.
தனி மனிதராக லெனினது பங்கு புரட்சியில் எவ்வாறு இருந்தது?
- ரஷ்ய பாட்டாளி வர்க்க இயக்கம் வளர்ந்த சூழலும், இதர எதார்த்த காரணங்களும் புரட்சிக்கு சாதகமாக இருந்தன.
- ஆனால், புரட்சியை நோக்கி முன்னேற லெனினது தத்துவ வழிகாட்டுதல்கள் புரட்சி வியூகங்கள், உத்திகள் முக்கிய காரணங்களாக அமைந்தன. புரட்சி உத்திகளை அன்றைய போல்ஷ்விக் கட்சியில் நீண்ட விவாதங்கள் நடத்தி ,கட்சியின் முடிவாக அவற்றை முன்னெடுக்கச் செய்ததில் லெனினுக்கு பெரும் பங்குண்டு. புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி வெற்றிக்கு அடித்தளமிட்டது.
இந்த இரண்டையும் இணைத்துப் பார்ப்பதே சரியான பார்வை.
ஒரே இலட்சியம்
1870-ஏப்ரல் 22 அன்று பிறந்த லெனின் வாழ்ந்தது, 54 ஆண்டுகள்தான். அந்த 54 ஆண்டுக் கால வாழ்க்கை முழுவதும் அவர் தனக்கென்று சொந்த நோக்கங்கள் எதையும் வைத்துக் கொண்டதில்லை. ஒரே ஒரு இலட்சியத்தை நோக்கித்தான் அவரது வாழ்க்கை இயங்கியது. வரலாற்றில் இதுவரை அடிமைத்தனத்திற்கும்,சுரண்டலுக்கும், ஒடுக்குமுறைக்கும் ஆளான மக்களிடம் ஆட்சி அதிகாரம் வர வேண்டும் என்பதுதான் அந்த இலட்சியம்.
அமெரிக்க எழுத்தாளர் ஜான் ரீட் ரஷ்யாவில் புரட்சி நடந்ததை நேரில் கண்ட எழுத்தாளர். பிரசித்தி பெற்ற அவரது “உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்” என்னும் நூலில் எழுதுகிறார்:
“வரலாற்றில் மிகச் சொற்ப தலைவர்களே அவரைப் போல மக்களது பேரன்புக்கும் பாராட்டுக்கும் பாத்திரமாகி இருப்பார்கள். விசித்திரமான மக்கள் தலைவர் – முற்றிலும் அறிவாற்றல் என்னும் தகுதியின் காரணமாகத் தலைவராகியவர். வண்ணக் கவர்ச்சியில்லை, மிடுக்கில்லை, மனம் தளர்ந்து விட்டுக் கொடுக்கும் இயல்பில்லை; தன்வயப்பட்ட விருப்பு வெறுப்பில்லை. படாடோபமான தனிப் பாணிகள் ஏதுமில்லை – ஆனால் ஆழ்ந்த கருத்துகளை எளிய முறையில் விளக்கும் ஆற்றலும் ஸ்தூல நிலைமைகளைப் பகுத்தாராயும் திறனும் நிரம்பப் பெற்றவர். இவற்றுடன் கூட மதிநுட்பமும் அசாதாரணமான தொலைநோக்குப் பார்வையும் சேர்ந்திருந்தன.””
திறந்த புத்தகம்
அவரது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். அவரது வாழ்க்கையை முப்பெரும் பிரிவுகளாகக் காணலாம். அவரது வாழ்க்கையின் முதல் பகுதி, புரட்சி இலட்சியத்தை வடிவமைத்த காலம். அதாவது சோஷலிஸம் எனும் புதிய சமூகத்தை அமைப்பதற்கு மார்க்சிய தத்துவம் வழிகாட்டிய அடிப்படையில், திட்டம் உருவாக்கிய காலம்.
இதற்கு அடுத்த அவரது வாழ்நாள் கட்டம், புரட்சிகர இலட்சியத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பெருவாழ்வாக அமைந்தது. அவரது இறுதிக் காலம், பாட்டாளி வர்க்க ஆட்சியை அமைத்து, ஒரு சோசலிச முன்மாதிரி அரசைக் கட்டமைத்த காலமாக அமைந்தது. கடலில் இடைவிடாது நீந்திக் கொண்டிக்கும் மீன் போன்று, புரட்சி இலட்சியக்கடலில் இடைவிடாது நீந்திக் கொண்டிருக்கும் வாழ்க்கையாக அவரது வாழ்க்கை இருந்தது.
1917ஆம் ஆண்டில் ரஷ்யாவில் இரண்டு புரட்சிகள் நிகழ்ந்தன. ஜார் மன்னராட்சி கொடுங்கோன்மையிலிருந்து ரஷ்யா விடுதலை பெற்ற, பிப்ரவரி புரட்சி. அன்றைய கம்யூனிஸ்ட் கட்சியான போல்ஷ்விக் கட்சி மற்றும் இதர பல குழுக்களின் ஆதரவோடு, கெரன்ஸ்கி தலைமையிலான முதலாளித்துவ அரசாங்கம் அதிகாரத்திற்கு வருகின்றது. தொழிலாளி வர்க்க கட்சியான போல்ஷ்விக் கட்சி ஜார் மன்னராட்சி அகற்றப்பட வேண்டும் என்பதற்காக கெரன்ஸ்கி ஆட்சிக்கு வருவதற்கு உறுதுணையாக இருந்தது.
அந்த முதலாளித்துவ அரசு ஏற்றுக்கொண்ட எதையும் அமலாக்கவில்லை. ரஷ்ய மக்கள் போரின் கொடுமையால், வாடிக் கொண்டிருக்கிற நிலையில், போரைக் கைவிட வாக்குறுதி அளித்த அரசு, போரை நீட்டிக்க முயற்சித்தது. அந்த அரசு நிலப்பிரபுக்கள், பெரும் தொழிலதிபர்கள், வங்கி உரிமையாளர்கள் போன்றோரின் அரசாக இருப்பதால், தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் அளித்த வாக்குறுதிகளை நிச்சயமாக நிறைவேற்றாது என லெனின் உறுதியாகக் கூறினார்.
எனவே, பாட்டாளி மற்றும் ஏழை விவசாயிகள் உள்ளடக்கிய சோவியத்துகள் ஆட்சி அதிகாரத்தை உடனடியாக கைப்பற்ற வேண்டுமென வலியுறுத்தினார்.
நாடு கடத்தப்பட்டு, சூரிச் நகரில் இருந்த லெனின், ரஷ்யாவின் பெட்ரோகிராடு நகரை வந்தடைந்தார்.அவர் கையோடு கொண்டு வந்த ஒரு சிறு குறிப்பில் ‘ஏப்ரல் ஆய்வுரைகள்’ என்று அழைக்கப்பட்ட புரட்சிக்கான திட்டம் இருந்தது. அதில் பல கடமைகளை முன்வைத்தார்.
- உடனடியாக முதல் உலகப் போரில் பங்கேற்ற ரஷியா போரிலிருந்து விலக வேண்டும்.
¨ பெரும் நிலங்களை உள்ளடக்கிய எஸ்டேட்டுகளைக் கையகப்படுத்த வேண்டும்.
¨ தொழிற்சாலைகளை தொழிலாளிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.
¨ வங்கிகளை தேசிய உடைமையாக்க வேண்டும்.
¨ தற்போதுள்ள காவல்துறை, இராணுவத்தை அகற்றி விட்டு தொழிலாளர்களைக் கொண்ட படைகளை உருவாக்க வேண்டும்.
¨ ¨பழைய அரசாங்க அதிகார வர்க்கத்தை அகற்றி, தொழிலாளர்களைக் கொண்ட அரசு நிர்வாகத்தை அமைக்க வேண்டும்.
என இவை அனைத்தும் ஏப்ரல் ஆய்வுரைகளில் இருந்தன.
அப்போது நடந்த சோவியத்துகளின் அனைத்து ரஷ்ய மாநாட்டில் ‘எல்லா அதிகாரங்களும் சோவியத்துகளுக்கே’ என்ற புகழ் பெற்ற முழக்கத்தை எழுப்பினார்.
தொழிலாளர்கள் உள்ளடங்கிய உள்ளூர் மட்டத்திலான அமைப்புக்கள் புரட்சி வெற்றிக்கு முக்கிய பங்கினை வகித்தன. “தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத்துகள்” என்கிற தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் நிர்வாக அமைப்புக்களில் தொழிலாளர்கள் அணி திரண்டனர். வேலைநிறுத்தம் நடத்துவதற்கான போராட்டக் குழுவாக துவங்கிய இந்த அமைப்புகள், உள்ளூர் நிர்வாக, தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளாக மாறின..பல இடங்களில் ராணுவ வீரர்கள், மாலுமிகள் தொழிலாளர்களோடு இணைந்து பிரதிநிதிகளாக செயல்பட்டனர். பல பகுதிகளில் தொழிலாளர்கள்-விவசாயிகள் பிரதிநிதிகள் கொண்டதாகவும் அமைந்தன. தொழிலாளர்கள் தங்களுடைய தேவைகள், வாழ்வாதார கோரிக்கைகளுக்காக அமைப்பு ரீதியாக ஒன்றுபடும் களங்களாக சோவியத்துக்கள் அமைந்தன.
விவசாயிகளை புரட்சியில் இணைப்பதிலும் லெனின் வெற்றி கண்டார். அன்று கிராமப்புறங்களில் வறுமை தாண்டவமாடியது. 300 ஆண்டு கால மன்னராட்சி விவசாயிகள் மத்தியில் ஒரு கொடூரமான அடிமைத்தனத்தை உருவாக்கியிருந்தது. நிலப்பிரபுக்களின் கையில் நிலப்பிரபுத்துவ தனியுடைமை வலுவாக இருந்தது. முதலாவது உலகப்போர் வந்தபோது அரசாங்கம் ஒரு கோடி விவசாயத் தொழிலாளர்களை போருக்கு அனுப்பியது.
விவசாயிகள் மத்தியில் அரசியல் கேள்விகள் கொந்தளிப்புடன் எழுந்தன. நிலப்பிரபுத்துவத்தை ஒழித்து, மன்னர் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்கிற முழக்கங்கள் எதிரொலித்தன. எனவே நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் எழுந்த எழுச்சி இயல்பாகவே தொழிலாளர்களையும் விவசாயிகளையும் புரட்சிக்கு அணி திரட்டியது. தொழிலாளி-விவசாயி கூட்டணி உருவாகி புரட்சியை முன்னெடுக்க வேண்டுமென்ற லெனின் வகுத்துக் கொடுத்த உத்தி வெற்றியை ஈட்டிட துணை நின்றது.
வரலாற்றில் தொழிலாளி வர்க்கம்
தொழிலாளிகளை புரட்சிக்கு தயார் செய்வதிலும் லெனின் பல கோட்பாடுகளை வகுத்தளித்தார். புரட்சிக்காக அணிவகுக்கும் பெரும்படையில் தொழிலாளி வர்க்கம் முன்னணி படையாக செயல்பட வேண்டும் என்ற கருத்தை அழுத்தமாக வலியுறுத்தினார். இது வரலாற்றுரீதியாக தொழிலாளி வர்க்கத்திற்கு நிச்சயிக்கப்பட்டுள்ள கடமை என்றார்.
தொழிலாளி வர்க்கம் தனது இயக்கங்களின் மூலமாக தொழிற்சங்க உணர்வை, அதாவது தங்களது கோரிக்கைகளை எழுப்ப வேண்டும் என்கிற உணர்வை பெறுகிறது. அதற்கான ஒற்றுமை உருவாக்கப்பட வேண்டும் என்ற உணர்வையும் அது அடைகிறது. சங்க வேலைகளில் ஈடுபடுவது, நிர்வாகத்தின் போக்கினை எதிர்த்து போராடுவது, தொழிலாளர் நல சட்டங்களை இயற்ற அரசாங்கத்தை கட்டாயப்படுத்துவது போன்ற பல நடவடிக்கைகளால் தொழிற்சங்க உணர்வும் கோரிக்கைக்கான போராட்ட உணர்வும் வளரும். ஆனால் இதையும் தாண்டி வர்க்க உணர்வு தொழிலாளர்களுக்கு ஏற்பட வேண்டும் என்று லெனின் போதித்தார்.
தொழிலாளி தனது வேதனைகள், துயரங்கள், உழைப்புச் சுரண்டல் கொடுமைகள் அனைத்திற்கும் கண்ணுக்குப் புலப்படாத கடவுள் மீது பாரத்தை சுமத்தி அற்ப நிம்மதி அடைவது, தலைவிதியை மாற்ற முடியாது என்கிற அறிவியலற்ற எண்ணத்தில் மூழ்கி கிடப்பது இவை அனைத்தையும் கருத்து முதல்வாத பார்வை என்கிறது மார்க்சியம். இதற்கு மாறாக தன்னைச் சுற்றி நடக்கிற நிகழ்வுகள், அவற்றின் உண்மைகளை அறிந்து கொள்ளும் பார்வை -அதாவது பொருள்முதல்வாத பார்வை – மாற்றத்திற்கு தொழிலாளியை தயார்படுத்தும் என மார்க்சியத் தத்துவம் போதிக்கிறது.
மார்க்சிய தத்துவத்தால் வழிகாட்டப்படும் தொழிலாளி வர்க்கம் இதர விவசாயப் பிரிவுகள் உள்ளிட்ட பல்வேறு வர்க்கங்களின் நிலைமையை சரியாக புரிந்து கொள்கிறது; அவர்களையும் அணிதிரட்டி, மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கிறது; இதற்கேற்றவாறு, வர்க்க அரசியல் உணர்வு படைத்ததாக தொழிலாளி வர்க்கம் உணர்வு ரீதியில் வளர்ச்சி பெறுகிறது. லெனின் எழுதிய என்ன செய்ய வேண்டும் என்ற நூல் இக்கருத்துக்களை கொண்டதாக விளங்குகிறது.
இந்த அரசியல் உணர்வு தானாக வந்து விடாது; கம்யூனிஸ்ட் கட்சி இந்த வர்க்க உணர்வை உழைக்கும் வர்க்கங்களிடம் வளர்த்திட வேண்டும்.கட்சி என்பது தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படை என்று லெனின் எழுதினர்.
புரட்சியின் போதும், சோஷலிசக் கட்டமைப்பின் போதும் தொழிலாளி வர்க்கத்தின் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றன. 1903 ஆம் ஆண்டிலிருந்து 1917 வரை ரஷ்யாவில் வரலாறு காணாத அளவில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடைபெற்றன. 1905ஆம் ஆண்டில் நடைபெற்ற வேலை நிறுத்தங்களில் கலந்துகொண்ட தொழிலாளர் எண்ணிக்கை 18 லட்சத்து 43 ஆயிரம் இது படிப்படியாக ஆண்டுதோறும் அதிகரித்தது.
இந்தப் போராட்டங்களில் ஒரு முக்கிய மாற்றம் படிப்படியாக ஏற்பட்டது. தொழிலாளர்களுடைய எட்டு மணி நேர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளோடு அரசியல் கோரிக்கைகளையும் எழுப்பினர். மன்னராட்சிக்கு மாற்றாக ஒரு ஜனநாயக குடியரசு அமையவேண்டும் என்ற முழக்கங்கள் இந்த போராட்டங்களில் எதிரொலித்தன. இந்த போராட்டங்களை வலிமையாக நடத்திட சோவியத்துகள் பெரும் பங்கு வகித்தன.
உண்மையான தேசப்பற்று
முதல் உலகப் போர் மூண்ட நிலையில் தாய் நாட்டை பாதுகாக்க ஆளும் வர்க்கங்கள் பிரச்சாரம் செய்தன. உலகை ஆதிக்கம் செலுத்த வேண்டும், உலகைச் சுரண்ட வேண்டும் என்ற வெறியுடன் ஏகாதிபத்தியம் இயங்கி வருகிற நிலையில் பாட்டாளி வர்க்கமே ஏகாதிபத்திய முறையை முடிவுக்குக் கொண்டு வரும் வர்க்கமாக லெனின் கண்டார்.
எப்போதுமே தேசபக்தி என்ற முழக்கத்தை ஆளும் வர்க்கம் தனது நலனுக்காக பயன்படுத்தும். ரஷ்ய ஆளும் வர்க்கம் முதலாம் உலகப்போரில் ரஷ்ய ராணுவத்தை ஈடுபடுத்தினர். உண்மையில் ரஷ்ய ராணுவத்தில் இருந்தவர்கள் தொழிலாளர்கள், விவசாயிகள் பிரிவிலிருந்து வந்தவர்கள்தான். முதல் உலகப் போரில் பங்கேற்ற நாடுகளிலேயே அதிக இழப்பை சந்தித்தது ரஷ்யாதான். கிட்டத்தட்ட 25 லட்சம் பேர் போரில் கொல்லப்பட்டனர். அதிலும் விவசாயிகளை உள்ளடக்கிய தரைப்படைதான் அதிக இழப்பை சந்தித்தது.
அதே நேரத்தில் போரினால் முதலாளிகள் பெரிய லாபத்தை அடைந்தார்கள். பல பெரிய கம்பெனிகள் 100% மேலாக லாபம் ஈட்டினர். இந்த விவரங்கள் டூமா எனப்படும் ரஷ்ய பாராளுமன்றத்திலேயே சமர்ப்பிக்கப்பட்டது. தேசப்பற்று எனும் பெயரால் உழைக்கும் மக்களை போரில் ஈடுபடச் செய்தது முதலாளிகளின் லாப வேட்டைக்குத்தான் என்பதை மக்கள் புரிந்துகொள்ள தொடங்கினர்.
முதலாளித்துவத்துக்கு உண்மையான தேசப்பற்று இருப்பதில்லை. உண்மையான தேசப்பற்று கோடானு கோடி உழைக்கும் மக்களின் விடுதலையோடு இணைந்தது. உண்மையான தேசப்பற்று பாட்டாளி வர்க்கத்திற்கு பிரிக்க முடியாத அளவில் அவர்களின் உணர்வோடு கலந்ததாக இருக்கும். தாய்நாட்டிற்காக போர் என்கிற முதலாளிகளின் கபட நாடகத்தை தொழிலாளி வர்க்கம் நன்கு புரிந்து கொண்டது.
புரட்சிக்கு அறைகூவல் விடுகிறபோது லெனின் மூன்று முழக்கங்களை முன்வைத்தார். சமாதானம்; உணவு; நிலம்; இந்த முழக்கம் போரின் கொடுமையாலும் பசி பட்டினியாலும் வாடிக் கொண்டிருந்த தொழிலாளி வர்க்கத்தை களத்தில் இறக்கியது. .அதேபோன்று கிராமங்களில் நிலப்பிரபுத்துவ கொடுமைகளால் வேதனை வாழ்க்கை நடத்திவந்த விவசாயிகளுக்கு, நிலம் என்கிற முழக்கம் ஒரு புரட்சிகர ஈர்ப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவாக தொழிலாளி – விவசாயி வர்க்க கூட்டணி உருவானது .இந்த கூட்டணி கட்சிகளின் கூட்டணி அல்ல. வர்க்கங்களின் கூட்டணி. இதற்கு பிரம்மாண்டமான ஆற்றல் இருந்தது; இந்த ஆற்றலின் விளைவாகத்தான் ரஷ்யாவில் புரட்சிகர மாற்றம் நடைபெற்றது; சோசலிசம் உருவானது.
மார்க்சிய லெனினிய உருவாக்கம்
கார்ல் மார்க்ஸ் முதலாளித்துவ சமூகத்தின் இயக்கத்தை முழுமையாக ஆராய்ந்தார். இந்த சமூகத்தில் நிலவுகிற சமத்துவமின்மை, ஏழை பணக்காரர் என்கிற ஏற்றத்தாழ்வு எதனால் ஏற்படுகிறது என்பதையும் அவர் ஆராய்ந்தார். அதேபோன்று பாடுபடும் பாட்டாளிகள் உழைப்பைச் செலுத்தி இந்த உலக செல்வத்தை உருவாக்கினாலும் அவர்கள் வாழ்க்கை பொருளாதார பற்றாக்குறை உள்ளிட்ட சிக்கல்கள் நிறைந்ததாக இருந்து வரும் நிலையில், அவர்களது உழைப்பு எவ்வாறு சுரண்டப்படுகிறது என்பதை ஆராய்ந்து விளக்கினார்.
அதேபோன்று முதலாளித்துவ அமைப்பு சீராக நீடிப்பதில்லை. நெருக்கடிகள் தொடர்ந்து வருகின்றன. இதனாலும் வேலை இழப்பு, வேலை நிச்சயமின்மை போன்ற பிரச்சனைகளால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். அந்த நெருக்கடிகளுக்கு காரணம் என்ன என்பதையும் மார்க்ஸ் ஆராய்ந்து விளக்கினார். ஆக, சமத்துவமின்மை,சுரண்டல்,நெருக்கடிகள் ஆகிய மூன்று பரிமாணங்களையும் முதலாளித்துவ சமூகத்தின் கூறுகளாக விளக்கி அந்த மூன்று பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கான வழிவகைகளை மார்க்ஸ் விளக்கினார்.
ஏற்றத்தாழ்வை அகற்றி ,சமத்துவம்; உழைப்புச் சுரண்டலை அகற்றி உழைப்புக்கு உரிய பலன்; நெருக்கடிகள் நீங்கிய திட்டமிட்ட பொருளாதாரம்; இவை அனைத்தும் கொண்ட ஒரு சோசலிச சமூகத்தை அமைக்க முடியும் என்பதை மார்க்ஸ் விளக்கினார். கருத்துத் தளத்தில் மார்க்சியம் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. அதுவரை ஏற்றத்தாழ்வும் சுரண்டலும் நெருக்கடிகளும் தீர்க்க முடியாத ஆண்டவன் விதித்த கட்டளை என்ற உணர்வில் இருந்து வந்த மனித சமூகம் மெல்ல மெல்ல விழித்துக் கொண்டது.
பல இடங்களில் புரட்சிகர போராட்டங்கள் நடைபெற்றன. 1871ஆம் ஆண்டு முதன்முறையாக பாரிஸ் நகரத்தை தொழிலாளி வர்க்கம் கைப்பற்றி 71 நாட்கள் சமத்துவ சமூகத்தை அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அது வெற்றி பெறவில்லை. முதலாளித்துவ எதிரிகள் பாரிஸ் கம்யூன் எனப்படும் அந்த எழுச்சியை அடக்கி ஒடுக்கி ஏராளமான தொழிலாளர்களை கொன்று குவித்தனர். மார்க்ஸ் இந்தப் புரட்சி அனுபவங்களை ஆய்வு செய்தார். அவரின் வழித்தடத்தில் லெனின் உலகப் புரட்சிகள் அனைத்தையும் உள்வாங்கி மார்க்சுக்கு பிந்தைய உலகம் எவ்வாறு மாறி இருக்கிறது என்பதனையும் ஆய்வு செய்து புதிய புரட்சி வியூகம் உருவாக்கினார்.
மாறியுள்ள உலக நிலைமைகள், ரஷ்ய நிலைமைகள், ரஷ்யாவில் முதலாளித்துவ எதிரிகளின் பலவீனம், பாட்டாளி வர்க்க சக்திகளின் பலம் ஆகியற்றை துல்லியமாக மதிப்பீடு செய்தார் லெனின். உலகை ஆதிக்கம் செலுத்தும் ஏகாதிபத்திய சக்திகள் ரஷ்யாவில் பலவீனமான நிலையில் இருந்ததையும் லெனின் கவனிக்க தவறவில்லை. இந்த மிகத் துல்லியமான ஆய்வு முடிவுகளின் அடிப்படையில்தான் ரஷ்ய தொழிலாளி வர்க்கம், விவசாயிகள் உள்ளிட்ட பாட்டாளி வர்க்க சக்திகளுடன் இணைந்து முதலாளித்துவத்தை வெற்றிகரமாக வீழ்த்த முடியும் என்ற முடிவிற்கு லெனின் வந்தடைந்தார்.
ரஷ்யாவில் புரட்சியை முன்கொண்டு சென்று, 1917-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி ஒரு பாட்டாளி வர்க்க அரசை அமைத்தார். மார்க்சியம், லெனினது உருவில் மிகுந்த ஏற்றம் பெற்றது. கருத்தளவில் இருந்த மார்க்சிய தத்துவம் ரஷ்யாவில் நடைமுறைக்கு வந்தது; சோஷலிசக் கனவு நனவானது.
தொழிலாளி வர்க்க ஆற்றல்
லெனின் காலத்தில் இருந்த தொழிலாளி வர்க்கம் தற்போது இல்லை; .இன்றைய தொழிலாளர்களால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது; தொழிலாளி வர்க்கத்திடையே எவ்வளவோ மாற்றங்கள் நடந்துவிட்டன. இதுபோன்ற பல விதமான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதையொட்டி பல நூல்கள் எழுதப்பட்டுள்ளன. இவற்றில் தொழிலாளி வர்க்கத்தின் ஆற்றலை குறைத்து மதிப்பிட்டு இந்த எழுத்தாளர்கள் எழுதுவதோடு மட்டுமல்லாது மார்க்சியம் லெனினியம் தவறாகிப் போய்விட்டது,! தொழிலாளி வர்க்க ஆட்சி என்கிற கருத்து லெனினோடு அஸ்தமனமாகி விட்டது என்பது போன்ற கருத்துக்களை அவர்கள் எழுதுகின்றனர்.
உண்மையில் தனது அன்றாட வேலை, பிரச்சினைகள் வருகிற போது சில போராட்டங்கள் என்ற அளவில் தொழிலாளர்கள் இருக்கும் வரை அதன் ஆற்றல் வெளியில் தெரிவதில்லை. ஆனால் முதலாளித்துவ நெருக்கடி தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வாதாரத்தின் மீது தொடர் தாக்குதல்கள் அதிகரிக்கிறது. தனது வாழ்நிலையின் அடிப்படை தளர்கிற நிலையில் தொழிலாளிக்கு விழிப்புணர்வு அதிகரிக்கிறது.
ஆளும் வர்க்கத்தின் மீதான அதிருப்திகள் குவிந்து கொண்டே வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் ஒரு சிறு பொறி இருந்தால் போதும். அது பெரு நெருப்பாய் மாறி சமூக அடிப்படையை மாற்றிடும். ஒரு புதிய சமூகத்தை உருவாக்கிடும். இதனால்தான் லெனின் தொழிலாளி வர்க்கத்தின் ஆற்றலை சரியாகப் பயன்படுத்தி ரஷ்ய புரட்சி தலைமை தாங்கி நடத்தியவர் என்ற பெருமையைப் பெற்றார்.
அன்றைய ரஷ்ய ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக தொழிலாளர்கள் பிரமாண்டமான வேலைநிறுத்தப் போராட்டங்களை நடத்தினார்கள். இந்த போராட்டங்கள் அன்றைய ரஷ்ய தொழிலாளி வர்க்கத்தின் தன்னம்பிக்கையை வலுப்படுத்தியது. தங்களால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை பல்வேறு போராட்டங்களால் அவர்களுக்கு உறுதிப்படுகிறது என்று லெனின் எழுதினார்.
ஒவ்வொரு வேலைநிறுத்தப் போராட்டமும் தொழிலாளர்களுக்கு தங்கள் மீதான அவநம்பிக்கையை போக்குகிறது. சுரண்டலில் இருந்து விடுதலையும், எதிர்காலமும் தங்கள் கையில் உள்ளது என்று நம்பிக்கை அவர்களுக்கு வலுப்படுகிறது. தாங்கள் தனி நபர்கள் அல்ல என்ற உண்மையும், தாங்கள் ஒரு வர்க்கம் என்ற உண்மையும் அவர்களுக்கு புலப்படுகிறது.
அன்றைய ரஷ்யாவில் இந்த நம்பிக்கை வளர்வதை துல்லியமாக கணித்த லெனின் அவர்களது ஆற்றலை சரியான திசைக்கு கொண்டு செல்லும் உத்திகளையும் உருவாக்கினார். பாட்டாளி வர்க்க ஒற்றுமை என்ற கருத்தை அழுத்தமாக வலியுறுத்தினார். தொழிலாளி வர்க்கம் தலைமை தாங்க, தொழிலாளி விவசாயி கூட்டணி அச்சாணியாகத் திகழ, அனைத்து உழைக்கும் மக்களும் ஒன்று திரண்டு நடத்திய ஒரு மாபெரும் மக்கள் திருவிழாதான் ரஷ்ய புரட்சி. எனவே லெனின் காலத்திற்கு பிந்தைய மாற்றங்களை ஆய்வு செய்ய வேண்டும். அதே நேரத்தில் வர்க்க உணர்வு பெற்ற பாட்டாளி வர்க்கமும், அதன் வர்க்க ஒற்றுமையும் சோஷலிசத்தை சாதித்திடும் என்ற கோட்பாடு இன்றும் பொருந்துவதாக அமைந்துள்ளது.
முற்போக்கான அனைத்துக்கும் திறவுகோல்
லெனின் தலைமையில் நடைபெற்ற ரஷ்யப் புரட்சி முற்றிலும் வேறுபட்டது. அந்தப் புரட்சி ஒட்டுமொத்த மனித குல விடுதலைக்கான புரட்சியாக இருந்தது. இதனால் உலகம் முழுவதும் தாக்கம் ஏற்படுத்தியது. தொழிலாளர்கள் நலன், தொழிலாளர் உரிமைகள், பெண்ணுரிமை, பெண் சமத்துவம், முற்போக்கு சிந்தனை, அறிவியல் வளர்ச்சி, திட்டமிடப்பட்ட பொருளாதாரம், உலக சமாதானம் என மனித சமூக முன்னேற்றத்திற்கு லெனின் சாதித்த புரட்சி திறவுகோலாக அமைந்தது.
புரட்சிகர தத்துவம் இல்லாமல் புரட்சிகர இயக்கம் இல்லை என்றார் லெனின்.
அவரது காலம் வரை இருந்த அனைத்து தத்துவங்களையும் அவர் கற்றறிந்தார். அரிஸ்டாட்டில் முதல் ஹெகல் வரை வளர்ந்து வந்த தத்துவங்கள் அனைத்தையும் அவர் கற்றறிந்து, அவற்றுக்கெல்லாம் மணிமகுடமாகத் திகழும் மார்க்சியத்தை சமூக மாற்றத்தை சாதிக்க வல்ல தத்துவமாகக் கண்டறிந்தார். இதுவரை வந்த தத்துவ ஞானிகள் எல்லாம் உலகத்தை பல கோணங்களில் விளக்கினார்கள்; ஆனால் உலகத்தை மாற்றுவதுதான் முக்கிய கடமை என்ற மார்க்சிய நெறியில் லெனின் செயல்பட்டார். எனவேதான் மார்க்சிய லெனினிய தத்துவம் புரட்சிக்கான விடுதலை தத்துவமாக திகழ்கிறது.
லெனினியத்தின் துணைகொண்டு, சமகால சவால்களை எதிர்கொண்டு உலகப் பாட்டாளி வர்க்க ஒற்றுமையை வலுப்படுத்துவோம்! சோசலிசம் படைப்போம்!
Leave a Reply