பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா
உலகம் முழுவதும் இன்று பெரும்பாலான நாடுகள் கொரோனா பெரும் தொற்று, அதனை எதிர்கொள்வதற்கான யுக்திகளில் ஒன்றாக ஊரடங்கு, அதனால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகள், கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களும் வருமானமும் சிதைந்துள்ள அவலநிலை, மக்கள் மத்தியில் பரவிவரும் அச்சம் என்று தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. இத்தகைய அவநம்பிக்கை நிறைந்த சூழலில் சோசலிஸ சக்திகள் மட்டுமே மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றன.
குறிப்பாக, பெரும்தொற்றை எதிர்கொண்டு மக்களை பாதுகாப்பதில் சிறப்புற செயல்படும் அரசுகளாக சோசலிச அமைப்பை கொண்டுள்ள மக்கள் சீனம், வியத்நாம், கியூபா, இவை தவிர இந்திய முதலாளித்துவ அமைப்புக்குள் இருந்துகொண்டே, மார்க்சிஸ்டுகள் தலைமையில் இயங்கிவரும் இடது ஜனநாயக மாநில அரசை கொண்டுள்ள இந்திய மாநிலமான கேரளம் ஆகியவை உலகம் முழுவதும் பாராட்டப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் பெரும்தொற்றை எதிர்கொள்வதிலும் மக்களை பாதுகாப்பதிலும் கியூபாவின் வெற்றிகரமான அனுபவத்தை சுருக்கமாக பதிவிடுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
கியூபா என்ற சிவப்பு நட்சத்திரம்
கியூபா நாடு அமெரிக்க ஐக்கிய நாட்டின் தெற்கு மாநிலமான ஃப்ளோரிடாவில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 1492 இல் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கொலம்பஸ் என்ற மாலுமியால் முதலில் ஐரோப்பியர்களுக்கு கியூபா அறிமுகமானது. 1711 இல் ஸ்பெயின் அரசின் படைகள் கியூபாவை தமது காலனி நாடாக ஆக்கிக் கொண்டன. கியூபாவின் மக்கள் கடும் சுரண்டலுக்கு உள்ளாக்கப் பட்டனர்.
அடுத்து வந்த பல பத்தாண்டுகளில் ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து லட்சக்கணக்கான கருப்பின மக்கள் அடிமைகளாக கைப்பற்றப்பட்டு, இந்த நாட்டிற்கு அழைத்து வரப்பட்டு அவர்களது உழைப்பும் மிகக் கடுமையாக சுரண்டப்பட்டது. கியூபா மக்கள் ஸ்பெயின் அரசின் காலனி ஆதிக்கத்திற்கு எதிராகவும் கொடிய காலனீய முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராகவும் மீண்டும் மீண்டும் கிளர்ந்து எழுந்தனர்.
1898 இல் அமெரிக்க வல்லரசு கியூபாவை கைப்பற்றியது. 1902 இல் கியூபாவிற்கு சுதந்திரம் அளிப்பதாக அமெரிக்க வல்லரசு அறிவித்த போதிலும் அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவின் காலனி போல் தான் கியூபா இருந்தது. 1959 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கியூபாவில் இருந்த அமெரிக்க ஆதரவு சர்வாதிகாரி பாதிஸ்தா தலைமையிலான அரசு ஃபிடெல் காஸ்ட்ரோ தலைமையிலான கியூப விடுதலைப் படையால் விரட்டி அடிக்கப்பட்ட பின்புதான் கியூபா உண்மையில் சுதந்திரம் பெற்றது.
பல ஆண்டுகளாக அன்றைய கியூபாவின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து, ஜனநாயக ஆட்சியை அமைக்க ஃபிடெல் தலைமையில் நடந்து வந்த ஆயுதம் தாங்கிய போராட்டம் 1959 இல் வெற்றி பெற்றது. மிக விரைவில் கியூபாவின் ஜனநாயக புரட்சி சோசலிச தன்மை கொண்டது என்பது தெளிவானது. கியூப கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் ஃபிடெல் அவர்களை தலைவராக கொண்ட ஆட்சி அமைக்கப்பட்டது.
அமெரிக்க அரசு கியூபாவின் புதிய, சுயேச்சையான ஆட்சியை கவிழ்க்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக கியூபாவின் சோசலிச ஆட்சியை அழிப்பதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. கியூபாவிற்கு எதிராக உணவு மற்றும் மருந்து விற்பனையைக் கூட தடுக்கும் கொடிய, முழுமையான வர்த்தக, தொழில்நுட்ப, பொருளாதார தடையை அறுபது ஆண்டுகளாக அமெரிக்க வல்லரசு அமலாக்கி வருகிறது. தனது நட்பு நாடுகளையும் இதனை கடைப்பிடிக்குமாறு நிர்ப்பந்திக்கிறது.
கியூபாவை அழிக்க மட்டுமின்றி, கியூபாவின் சோசலிச புரட்சியின் மகத்தான தலைவர் ஃபிடெல் காஸ்ட்ரோவை கொலை செய்யவும் பலமுறை அமெரிக்க அரசு முயன்றது. ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதிகள் அனைத்தையும் முறியடித்து, இன்று உலக நாடுகளில் பெரும்பான்மை நாடுகளின் ஆதரவை பெற்று, மக்கள் நலன் பேணுகின்ற அரசு என்ற பெருமையையும் கியூபா பெற்றுள்ளது. குறிப்பாக, மத்திய, தென்அமெரிக்க நாடுகளில் உள்ள அனைத்து முற்போக்கு சக்திகளுக்கும் எழுச்சிதரும் எடுத்துக்காட்டாக கியூபா திகழ்கிறது.
1959 இல் கியூபா மிகவும் பின்தங்கிய, கொடிய சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், பரவலான வறுமை ஆகியவற்றை இலக்கணமாக கொண்ட ஒரு சமூகமாக இருந்தது. இன்று சோசலிச கியூபா அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் மக்கள் நல்வாழ்வு, அனவைருக்கும் வேலை, நிறவெறி ஒழிப்பு, சமூக பொருளாதார சமத்துவம் ஆகிய இலக்கணங்களைக் கொண்ட நாடாக உலக அரங்கில் மிளிர்கிறது.
கியூபாவின் மனிதவள குறியீடுகள் முன்னணி முதலாளித்துவ நாடுகளுக்கு சமமாகவும் சில அம்சங்களில் அவற்றை விட சிறப்பாகவும் உள்ளன. எடுத்துக்காட்டாக, ஆரோக்கியக் குறியீடுகளில் முக்கியமான ஒன்று சேய் இறப்பு விகிதம் என்பதாகும். உயிருடன் பிறக்கும் ஆயிரம் சேய்களில் ஒரு வயது நிறைவு அடையும் முன் இறந்துவிடும் சேய்களின் எண்ணிக்கைதான் சேய் இறப்பு விகிதம் என்று அழைக்கப் படுகிறது. இது கியூபாவில் வெறும் 4 என ஆகியுள்ளது. இந்த விகிதம் 1959 இல் கிட்டத்தட்ட 50 என்றிருந்தது. அமெரிக்காவில் இந்த விகிதம் இன்றும் கியூபாவை விட அதிகமாக உள்ளது. வேறு பல பணக்கார நாடுகளுக்கும் இது பொருந்தும்.
இந்தியாவில் சேய் இறப்பு விகிதத்தின் சராசரி 2018 இல் 32 ஆக இருந்தது. சில மாநிலங்களில் இன்னும் அதிகம். எடுத்துக்காட்டாக, மத்திய பிரதேசத்தில் கிராமப் புறங்களில் இது 52 ஆக இருந்தது. ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறு பதம் என்று இதனை எடுத்துக் கொள்ளலாம். சராசரி ஆயுட்காலம், சராசரி கல்வி பயிலும் ஆண்டுகள், எழுத்தறிவு விகிதம், இந்த குறியீடுகளில் பாலின வேறுபாடு மிக்குறைவாக இருத்தல், நகர – கிராம இடைவெளி மிககுறைவாக இருத்தல் – இவை அனைத்திலும் கியூபாவின் சாதனைகளை காணலாம். (இந்தியாவில் இத்தகைய சாதனைகளை கேரள மாநிலத்தில் மட்டுமே பார்க்க முடியும்.)
பொதுசுகாதாரத்தை பேணிக்காப்பதிலும் அனைத்து மக்களுக்கும் கல்வியையும் மக்கள் நல்வாழ்வையும் உறுதி செய்வதிலும் கியூபா உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு வழிகாட்டியாக உள்ளது. இப் பின்புலத்தில் கியூபா கொரோனா தொற்றை எதிர்கொண்ட விதத்தை பார்க்கலாம்.
கியூபாவும் கொரோனா பெரும் தொற்றும்
உலக சுகாதார அமைப்பு கொரோனா பெரும் தொற்றின் புதிய குவி மையம் மத்திய, தென் அமெரிக்கா என்று அறிவித்துள்ளது. ஆனால் 2020 ஏப்ரல், மே ஆகிய இரு மாதங்களில் கியூபாவில் புதிதாக தொற்று உள்ளவர் என அறியப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக பிரிட்டிஷ் பத்திரிக்கையான கார்டியன் ஜூன் 7 தேதியிட்ட ஒரு கட்டுரையில் கூறுகிறது. அதன்பின் நிலமை தொடர்ந்து சீரடைந்து வருகிறது.
தொற்றை எதிர்கொள்ள கியூபா அரசும் மக்களும் தயார் நிலையில் இருந்தனர். மார்ச் 24 கியூபாவில் 48 நபர்கள் தொற்று கொண்டிருந்தனர். இந்த எண்னிக்கை வேகமாக அதிகரித்தது. மார்ச் 29 இல் 119 ஆகியது, ஏப்ரல் 14 இல் ஏழு மடங்காக, 814 ஆக உயர்ந்தது. அச்சமயம் 24 பேர் இறந்திருந்தனர். அடுத்த இரு மாதங்களில் அரசும் மக்களும் இணைந்து மேற்கொண்ட, திட்டமிட்ட, கட்டுப்பாட்டுடன் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஜூன் 7 கணக்குப்படி அன்றுவரை மொத்தம் 2,173 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. 83 நபர்கள் இறந்திருந்தனர். 19 நாட்கள் கழித்து, ஜூன் 26 கணக்குப்படி கியூபாவில் அன்றுவரை மொத்தம் 2,325 நபர்களுக்கு தொற்று உறுதியாகியிருந்தது. மொத்த இறந்தவர் எண்ணிக்கை இரண்டு கூடி 85 ஆகியிருந்தது. கடைசியாக ஜூலை 3 தகவல்படி அன்றுவரை மொத்தம் தொற்று உறுதியானவர் 2,353, இறந்தவர் 86. தொற்றின் பரவல் வேகமும் இறப்பு விகிதமும் வேகமாக குறைந்துள்ளன. கியூபாவின் மக்கள் தொகை 2018 இல் 1.13 கோடியாக இருந்தது. இந்த விவரங்கள் அடிப்படையில் கொரோனா பெரும் தொற்றை கியூபா திறமையாகவும், இயன்ற அளவிற்கு குறைந்த உயிர் இழப்புடனும் எதிர்கொண்டுவருகிறது என்று கூறலாம். இதற்கு பின்புலமாக உள்ளது சோசலிச கியூபாவின் மக்கள் நல்வாழ்வு கட்டமைப்பும் அரசின் கொள்கை சார்ந்த அணுகுமுறையும் ஆகும்.
கியூப புரட்சி 1959இல் வெற்றி பெற்ற நாளில் இருந்தே மக்களின் நலன் சார்ந்து செயல்படுவதை அடிப்படை கொள்கையாக அங்குள்ள சோசலிச அரசு கடைப்பிடித்துவருகிறது. கல்வி, ஆரோக்கியம் ஆகிய இரண்டு அம்சங்களுக்கும் அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளது. 1978ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அன்றைய கஸக்ஸ்தான் குடியரசின் ஆல்மா ஆடா என்ற நகரில் நடைபெற்ற சர்வதேச மாநாடு ‘அனைவருக்கும் ஆரோக்கியம்’ என்ற முழக்கத்தை, இலக்கை முன்வைத்தது.
சோசலிச கியூபா அப்பொழுதே அந்த இலக்கை நோக்கி கணிசமாக முன்னேறியிருந்தது. அதற்குப் பின் கியூபா அந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்ட முதல்நிலை ஆரோக்கிய வசதி (primary health care) என்பதையும் நோய் தடுப்பு ஆரோக்கிய அணுகுமுறை (preventive health care) என்பதையும் தாரக மந்திரங்களாக எடுத்துக்கொண்டு மக்கள் வாழும் ஒவ்வொரு பகுதியிலும் போதுமான மருத்துவர், செவிலியர், மருத்துவ கட்டமைப்பு இருத்தல், குடும்ப மருத்துவர் , குடும்ப செவிலியர் என்ற அணுகுமுறை, ஒவ்வொரு குடும்பத்தையும் சந்தித்து அவர்களது ஆரோக்கியத் தேவைகளை கண்டறிந்து நோய் தடுப்பு மற்றும் மக்கள் நல்வாழ்வு சேவைகளை அமைத்துக்கொள்ளுதல் என்று மக்களின் ஆரோக்கியம் தொடர்பான பல அம்சங்களையும் முழுமுனைப்புடன் முன்னெடுத்துச்சென்றது.
இந்த வரலாற்றுப் பின்னணியில் இன்று கியூபாவில் வலுவான ஆரோக்கிய கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 2019 கணக்குப்படி கியூபாவில் 1000 மக்களுக்கு 9 மருத்துவர்கள் உள்ளனர். (இந்தியா: 1.34). 2014 ஆம் ஆண்டு விவரப்படி, கியூபாவில் 1000 மக்களுக்கு 5.2 மருத்துவமனை படுக்கைகள் உள்ளன. (இந்தியா, 2019 : 0.55) இந்த நிலை பணக்கார நாடுகளில் கூட இல்லை. குறிப்பாக, கியூபாவில் ஆரோக்கிய அமைப்பு மக்களுடன் மிக நெருக்கமாக உள்ளது. குடியிருப்புப் பகுதிகள் அனைத்திலும் செயல்படும் “புரட்சி பாதுகாப்பு அருகமை அமைப்புகள்” இத்தகைய ஒருங்கிணைப்புக்கு உதவுகின்றன.
இதனால் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள் மக்கள் வாழும் பகுதிகளில் எழும் பொழுதே கண்டறிந்து எதிர்கொள்ள முடிகிறது. கொரோனா பெரும் தொற்றை எதிர்கொள்வதில் முக்கியம் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தும் அனைத்து அம்சங்களையும் கியூபாவால் திட்டமிட்ட முறையில் அமலாக்க முடிந்திருக்கிறது.
தொற்று உள்ளதா என்று விரிவான பரிசோதனைகள் மூலம் விரைவில் அறிதல், தொற்று உள்ளவர் என்று அறியப்படுபவர் யாருடன் எல்லாம் தொடர்பு கொண்டிருந்தார் என்பதையும் விரைவில் கண்டறிந்து அவர்களையும் பரிசோதித்து, தனிமை படுத்துதல், தக்க சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட உரிய நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொண்டு தொற்றின் பரவலை கட்டுப்படுத்துவதில் கியூபா சிறப்புற செயல்பட்டுள்ளது.
இதற்கு ஒரு முக்கிய காரணம் ஆரோக்கியம் தொடர்பான மனிதவளம் திட்டமிட்ட அடிப்படையில் தொலைநோக்குடன் போதுமான அளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் கியூபா நாட்டில் மேலோங்கியுள்ள சமூக விழுமியங்கள் ஆரோக்கியத்தை மனித உரிமை எனக் கருதுகின்றன. (கியூபாவின் சோசலிச அரசியல் சாசனம் இதை உறுதிபடக் கூறுகிறது.) கியூபாவின் மருத்துவர்களும் செவிலியர்களும் லாப நோக்கத்தால் உந்தப்பட்டு செயல்படுவதில்லை. மாறாக, மக்கள் நலம் பேண அவர்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று உலகின் பல நாடுகளிலும் அவர்கள் சேவையை அரசுகள் நாடுகின்றன. மிகுந்த சோசலிச சர்வதேச உணர்வுடன் கியூபா பல ஆப்பிரிக்க, மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்கு இந்த வகையில் உதவுகிறது. கொரோனா தொற்று காலத்திலும் கியூபாவின் உதவி பல நாடுகளுக்கு – மக்கள் நலன் கருதி, கியூபாவிற்கு எதிராக செயல்படும் பிரேசில் நாட்டுக்குக் கூட – தரப்படுகிறது. இக்காலத்தில் உலகின் மிகவும் பணக்கார ஏழு நாடுகளில் ஒன்றான இத்தாலி நாடு கூட கியூபாவின் உதவியை பெற்றுள்ளது.
கியூபாவில் கொரோனா பெரும் தொற்றை எதிர்கொள்வதில் பல பத்தாயிரம் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் படிக்கும் மாணவர்கள் களம் இறக்கப்பட்டு, வீடு வீடாக சென்று பணிபுரிகின்றனர். நமது நாட்டிலும் மனித நேயம் மிக்க மருத்துவர்களும் செவிலியர்களும் உள்ளனர். ஆனால் ஆரோக்கியம் என்பது தனியார்மயம், வணிகமயம் என்ற பாதையில் பயணித்துள்ளதால், மக்களை பாதுகாப்பது பெரும் சவாலாகியுள்ளது.
மிக முக்கியம் என்று உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் வலியுறுத்தும் பொதுசுகாதார நடவடிக்கைகளை கியூபா திட்டமிட்டு அமலாக்குகிறது. அதற்கான கட்டமைப்பை கியூபா தொடர்ந்து உருவாக்கியுள்ளது மட்டுமின்றி, சோசலிச அரசியல் தின்ணமும் கியூபா கொரோனா பெரும் தொற்றை எதிர்கொள்வதில் முக்கிய பங்கு ஆற்றியுள்ளது. நாடு முழுவதும் உயிர்ப்புடன் செயல்படும் மக்களின் ஜனநாயக அமைப்புகள் இப்பணியில் முக்கிய பங்கு ஆற்றியுள்ளன. இறுதியாக, கியூபா உறுதியான அறிவியல் அடிப்படையில் இப்பிரச்சினையை எதிர்கொண்டுவருவது அதற்கு மேலும் வலு சேர்க்கிறது.
Leave a Reply