மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


சிங்காரவேலர்: சமூக நீதியும் பொதுவுடைமையும்


 ச. லெனின்

ஒவ்வொருவரின் சுதந்திரமான வளர்ச்சியையே அனைவரின் சுதந்திரமான வளர்ச்சிக்கு நிபந்தனையாகக் கொண்ட ஒரு கூட்டமைப்பை நாம் நிச்சயம் பெறுவோம்..

 – கம்யூனிஸ்ட் அறிக்கை, மார்க்ஸ் – எங்கெல்ஸ்

விடுதலை போராட்டத்தின்போது  இந்திய முதலாளி வர்க்கம், ஏகாதிபத்திய எதிர்ப்பை சில சமரசங்களுடன் முன்னெடுத்த போதும் சமூக சமத்துவத்திற்கான போராட்டங்களை பெரிதாக முன்னெடுக்கவில்லை. சாதிய மேலாதிக்கம் நிலவிய  இந்தியச் சமூகத்தில் பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலையடைந்தாலும் உள்ளூர் ஆதிக்க சாதியினரின் ஆதிக்கம் தொடரவே செய்யும். எனவே இங்குள்ள சாதிய மேலாதிக்கத்தை வீழ்த்துவதே முதல் வேலை என்று சமூக நீதிக்கான போராட்டத்தை முன்னெடுத்தவர்கள்  பேசினர்.  பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பல்வேறு நிகழ் முறைகளை  இதன்பொருட்டு ஆதரிக்கவும் செய்தனர்.

இந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில்தான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்திற்கு எதிராகவும், சாதி ஆதிக்கத்திற்கு எதிராகவும், பொருளாதார சமத்துவமின்மைக்கு எதிராகவும் ஏககாலத்தில் செயலாற்றுவதன் தேவையை சிங்காரவேலர்  முன்னுணர்ந்து பணியாற்றினார் என்பது கவனிக்கத்தக்கது.

சிங்காரவேலரின் பங்கு

இந்தியாவில் பொதுவுடைமை கருத்தை முதன்முதலில் பொதுவெளியில் முழங்கியவர் தோழர்  சிங்காரவேலர் தான்.  1922இல் கயாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் தன்னை கம்யூனிஸ்ட் அகிலத்தின் பிரதிநிதி என்று பிரகடனப்படுத்திக் கொண்டு அவர் பேசியதே இந்தியாவில் பொதுவுடைமை கருத்தியலின் முதல் குரலாகும். அதுவே அந்தக் காங்கிரசில் ஒலித்த பொதுவுடைமை  சிந்தனையுமாகும்.

தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை துவங்கப்படுவதற்கு பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பே சென்னையில் மே தினத்தைக்  கொண்டாடியவர் சிங்காரவேலர். இக்காலகட்டத்தில்தான் காங்கிரஸ்  கட்சியிலிருந்த சாதிய மனோபாவத்தைக் கண்டித்து 1925ஆம் ஆண்டு வெளியேறுகிறார். சாதிய ஆதிக்கத்திற்கு எதிராக சமூக நிதிக்கான போராட்டத்தை முன்னெடுக்கும் நோக்கில் பெரியாரின் சுயமரியாதை இயக்கம்  செயலாற்ற துவங்குகிறது. இவ்வியக்கத்திற்கான கருத்தியல் ரீதியான உள்ளடக்கங்களைக் கொடுப்பதில் சிங்காரவேலரின் பங்கு சிறப்பானதாகும். சாதி, மத பழமைவாதங்களை எதிர்ப்பதில்  வறட்டுத் தனமான நாத்திகப் பிரச்சார முறையைக் கடந்த அறிவியல்  கண்ணோட்டம் கொண்ட எழுத்துக்களை சிங்காரவேலர் தொடர்ந்து குடியரசு இதழில் எழுதிவந்தார். சமூக ஒடுக்குமுறை என்பது அதோடு பின்னிப்பிணைந்துள்ள பொருளாதார சுரண்டலை உள்ளடக்கியதே என்பதை வலியுறுத்திய சிங்காரவேலர், சமூக நீதிக்கான போராட்டத்தைப் பொருளாதார சமத்துவத்திற்கான போராட்டத்தோடு இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். சுயமரியாதை இயக்கத்தின் சமூக நீதிக் கொள்கையை  பொதுவுடைமை கோட்பாட்டோடு ஒருங்கிணைக்கும் பணியையும் அவர் முன்னின்று ஆற்றினார். சமூகநீதி என்பது தனித்த ஒன்றல்ல; அது பொருளாதார சமத்துவத்தோடு பின்னிப் பிணைந்தது என்ற கருத்துநிலைக்கு இசைவு தெரிவித்த பெரியார் பிறகு  அதிலிருந்து  விலகியபோது அதை உரிமையோடு மிகக் கடுமையாகவே விமர்சிக்கவும் சிங்காரவேலர் தயங்கவில்லை. இந்த விமர்சனங்களையும் பெரியார் நடத்தி வந்த “பகுத்தறிவு” இதழுக்கே அனுப்புகிறார். தன்மீதான அந்த விமர்சனம் நிறைந்த அக்கட்டுரையின் கீழ் சிறுகுறிப்பை மட்டும் இணைத்து பெரியார் அதை அப்படியே வெளியிடவும் செய்கிறார். நாம் விவாதிக்கவுள்ள இக்காலப் பகுதியின்போது  சிங்காரவேலரின் வயது எழுபதுக்கு மேல் என்பதை நினைவில் கொள்வதும் அவசியமாகும்.

1926-27 காலத்தில்தான் நேரு சோஷலிச சோவியத் ஒன்றியப் பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா வந்தார். ரஷ்ய நாட்டின் திட்டமிட்ட பொருளாதாரத்தினால் கவரப்பட்ட அவர் அதை நமது சொந்த முறையிலேயே அமல்படுத்தவேண்டும் என்று பேசினார். 1931இல் இதனடிப்படையில் ஒரு பொருளாதார திட்டத்தை நேரு கராச்சி காங்கிரசில் முன்வைத்தார். அதை அம்மாநாடும் அங்கீகரித்து ஏற்றுக்கொண்டது.   இத்திட்டம் தனியுடைமையை ஆதரித்ததோடு, முக்கிய ஆலைகளையும்,  கனிமவளச் சுரங்கங்களை மட்டும் அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறியது. “பொதுவுடைமை என்பது பொருளாதார அர்த்தத்தில் மட்டுமே” என்றும் அது கூறியது. இதுவே நேரு முன்வைத்த “சொந்த முறையிலான” பொதுவுடைமை திட்டம்.  அதாவது அரசியல் மற்றும் கலாச்சார  (சமூக) ரீதியான சமத்துவத்தை இத்திட்டம் முன்வைக்கவில்லை என்பதே அதன் பொருளாகும்.

தேசிய அளவில் காங்கிரசின் பொதுவுடைமை கொள்கை இப்படியாக இருந்த போது தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி  துவங்கப்படாத  நிலையில் அது இங்கு வேறு ஒரு குரலாக ஒலித்தது. பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் புரிதல் மற்றும் செயல்பாட்டில் அது எதிரொலித்தது. அதில் சிங்காரவேலரின் தெளிவான சித்தாந்த போரும், அதனூடாக அவர் அவ்வியக்கங்களில் ஆற்றிய பணிகளும், பங்கும் மிக முக்கியமானதாகும்.

பெரியார் சுயமரியாதை  இயக்கம் 

வகுப்பு வாரி  பிரதிநிதித்துவ திட்டத்தைக் காங்கிரஸ் ஏற்காதது மற்றும்  அங்கு நிலவிய சாதிய  பாகுபாடுகள் உள்ளிட்ட  காரணங்களுக்காக காங்கிரசிலிருந்து வெளியேறிய பெரியார் 1929ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் செங்கல்பட்டில் சுயமரியாதை இயக்கத்தின்  முதல் மாநாட்டை நடத்தினர்.  ‘சுயமரியாதை இயக்கமும் பொதுவுடைமையும்’ என்கிற தனது நூலில் இம்மாநாடுகள் குறித்தும், அதன் பிறகான பெரியாரின் செயல்பாடுகளையும் பேரா. கோ. கேசவன்  விரிவாக விளக்குகிறார்.

சுயமரியாதை இயக்கத்தின் மாநாட்டில் இயற்றப்பட்ட  பதினோரு தீர்மானங்களில்  “சமயத்தையும் சாதியையும் தகர்க்கின்ற தன்மையில் தீர்மானங்கள் அமையவில்லை. சமயத்திலும்,  சாதியிலும் உள்ள மூடப்பழக்கங்களையும் வேறுபாடுகளையும் களைந்து  அவற்றைச்  சனநாயகப்படுத்தும் தன்மையே அதில் இருந்தது” என்கிறார் அவர்.

“அன்றைய பிரதான தொழில் உறவான நிலவுடைமை சீர்திருத்தங்கள் பற்றி எதுவும் இல்லை. ஆனால் நிலவுடைமையின் கலாச்சார அம்சங்களில் (சாதி, மத பழமைவாதங்கள்) உள்ள ஜனநாயகமற்ற அம்சங்களைத் தாக்குகிறார்.” “அரசியலில் ஏகாதிபத்திய ஆதரவு நிலையும் (சைமன் குழுவை ஆதரித்தது), சாரத்தில் நிலவுடைமை கலாச்சார எதிர்ப்பும் நிலையும் கையாளப்பட்டது. சமூக சீர்திருத்தவாதிகளில் பெரும்பாலானோர் அரசு ஆதரவாளர்களாகவே இருந்துள்ளனர். அரசு ஆதரவு இருந்தால்தான் சட்டங்களின் மூலம் சமூக சீர்திருத்தங்களைக் கொண்டு வரமுடியும் என்ற எண்ணம் இவர்களிடம் இருந்தது.”  

அதே நேரம் அடுத்த இரண்டு மாநாடுகள் நடக்கும் காலத்திற்குள் பெரியாரின் கருத்துக்களில் ஒரு மேல்நோக்கிய நகர்வு (Upward Mobility) உள்ளது என்பதை 1931 காலகட்டத்தில் “குடி அரசு” இதழில் பெரியாரின் எழுத்துக்கள் எடுத்துரைக்கிறது என்கிறார் கோ.கேசவன். 

“இன்றைய முயற்சியை விட, சாதியை ஒழிப்பதென்பது  மிகுதியாகச்  சமதர்மமும் பொதுவுடைமைத் தன்மையும் கொண்டதாகும். ” (குடி அரசு 4.1.1931) “எல்லா விஷயங்களிலும் ரசிய அரசாங்க சீர்திருத்தமே மேலானது.” (குடி அரசு – 1.2.1931)

“பொதுவுடைமைக்கு வெள்ளையராட்சிதான் விரோதமானதாக இருக்கிறது என்பதை நான் ஒப்புக்கொள்ள முடியாது. நமது நாட்டில் உள்ள வருணாசிரம தருமந்தான் பொதுவுடைமைக்கு   விரோதமானதாகும்.” (குடி அரசு 6.71931).  இப்படியான  பலவீனத்துடன்  பொதுவுடைமையைக் கலாச்சார அளவில் புரிந்து கொள்ளும் நிலையில் தான் பெரியாரின் ரஷ்யப் பயணம் நடந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார். 

“தீண்டாமையின் கலாச்சார  அம்சத்தைப்  புறக்கணிக்க  முடியாது எனினும் அதன் வேர்கள் பொருளாதாரத்தில் கட்டுண்டது” என்பதையும் கோ.கேசவன் தனது நூலில் சுட்டிக்காட்டுகிறார்.ரஷ்யப் பயணத்திற்கு முன்பே  பெரியாருக்குப்  பொதுவுடைமை  கருத்துக்கள் மீது ஒரு ஈர்ப்பு இருந்ததை மேலே உள்ள பதிவுகள் விளக்கும். அதேபோல் 1931இல் விருதுநகரில் நடந்த சுயமரியாதை மாநாட்டிற்கு  சிங்காரவேலர்  அழைக்கப்பட்டிருந்தார். உடல் நிலை காரணமாக அவரால் அம்மாநாட்டில் பங்கேற்க இயலாதபோதும்  மாநாட்டுத் தீர்மானங்கள் மீது தனது விருப்பத்தைத்  தெரிவித்திருந்தார். 1931 டிசம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற சுயமரியாதைக்காரர்கள் மாநாட்டை அவர் திறந்து வைத்தார்.

“இங்கு மேல் சாதி-கீழ் சாதி என்பது அதிகமாகவும் முதன்மையாகவும் இருப்பதால் அது பணக்காரர் – ஏழை தத்துவத்திற்கு ஒரு கோட்டையாக இருந்து வருகிறது” என்கிற பெரியாரின் கருத்தை நேர்மறையாக சிங்காரவேலர் அணுகினார். இக்கருத்தைச் செழுமைப்  படுத்தும் வகையில் “பொருளாதார வேறுபாடுகள் இருக்கும்வரை சாதி சமய வேறுபாடுகள் நீங்க இயலாது என்றும், சாதி சமய சீர்திருத்தங்களோடு நின்று விடாமல், இயக்கத்தினர் ஒரு பொருளாதாரத் திட்டத்தை முன்வைத்து அரசியல் துறையில் இறங்க வேண்டும்” எனவும் சிங்காரவேலர் சுட்டிக்காட்டினார். 

பெரியாரின்   “குடி அரசு” இதழில் “பிரிட்டிஷ் அரசின் விளைவுகள்”, “மதமும் அரசியலும்”, “ஜாதி ஒழிப்பு”,  “சமூக அமைப்பும்  பொருளாதாரமும்”, “சமதர்ம விளக்கம்” போன்ற தலைப்புகளில்  சிங்காரவேலர் தொடர் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

ரஷ்யப் பயணமும் – மாற்றமும் 

சோவியத் ஒன்றிய பயணம்  பெரியாருக்குப்  பல விஷயங்களைத்  தெளிவாக்கியது. “முதலாளித்துவ அமைப்பினை வீழ்த்தி, தனது நாட்டில் சோஷலிசத்தை கட்டி வளர்த்து வரும் சோவியத்  ஒன்றியம்  ஒன்றுதான் மதத்தின் பிடிப்பிலிருந்து மக்களை விடுதலை அடைய வகை செய்துள்ளது” என்பதையும் உணர்ந்தார்.

“பெரியாரின் சுயமரியாதை இயக்கம் துவக்கத்தில் பிராமண எதிர்ப்பு, இந்துமத எதிர்ப்பு என்பவற்றைப் பிரதானமாக வைத்துத்தான் ஆரம்பிக்கப்பட்டது. இந்து மத எதிர்ப்பிற்கு ஆதரவான  கருத்துக்களைத் தேடித்தேடிச் சேகரித்தபோது ராபர்ட் இங்கர்சால்லின் மத எதிர்ப்பு கருத்துக்களைப் பெற்று அதையும் அவர்கள் உள்வாங்கிக் கொண்டனர். இத்தகைய மத எதிர்ப்புக் கருத்துக்கள்  பிற்காலத்தில்  மதத்தின் பிடியிலிருந்து மக்களை விடுவித்த  ரஷ்யாவின்  அணுகுமுறைக்கு இட்டுச் சென்றது. இப்படித்தான்  பொதுவுடைமை  கருத்துக்களை நோக்கி பெரியாரும்  அவர்தம் இயக்கமும் வந்தடைந்தனர்” என்றும் கூறப்படுகிறது.  

“சிங்காரவேலு அவர்களது பிரச்சாரத்தின் விளைவாகவும்,  சோவியத்  ஒன்றியம் உள்ளிட்ட பல மேலை நாடுகளில் ஈ.வெ.ராமசாமி அவர்களின் அனுபவத்தின் பயனாகவும் சுயமரியாதை  இயக்கத்  தொண்டர்கள் பலரிடையிலும் இயக்கத்தின் தலைவராகிய   ஈ.வெ.ராமசாமி அவர்களிடத்தில்  இயக்கத்தைச்  சமுதாய  சீர்திருத்த  இயக்கமாக மட்டுமன்றி, அரசியல் குறிக்கோள்களை கொண்ட ஒரு இயக்கமாக்க வேண்டுமென்ற விருப்பம் ஏற்பட்டது.” 

இதைத் தொடர்ந்து சிங்காரவேலர் ஒரு திட்டத்தை  உருவாக்கினார். இயக்கத்தின் நோக்கத்தை விளக்கி ஒரு வேலைத் திட்டமும் அதில் உள்ளடங்கி இருந்தது. இதுவே பிரபலமாக அறியப்பட்ட ஈரோடு திட்டமாகும். 1932 டிசம்பர் 28, 29 தேதிகளில் பெரியாரின் இல்லத்தில் இத்திட்டம் மாகாணத்தின் சுயமரியாதை இயக்க தொண்டர்கள் சுமார் 200 பேர் வரை பங்குகொண்ட கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.  சிங்காரவேலர் இத்திட்டத்தை விளக்கி அக்கூட்டத்தில் பேசினார்.  இத்திட்டத்திற்குக் கூட்டத்தில் சிலர் எதிர்ப்பு தெரிவித்த போதும் விளக்கங்களோடு அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. இத்திட்டத்தை   விளக்கி சிங்காரவேலர் பல்வேறு சுயமரியாதை மாநாடுகளில்  பங்கேற்றுப் பேசினார். பெரியாரும், ஜீவாவும் தொடர்ந்து இந்த ஈரோடு திட்டத்தை விளக்கி அனைத்து சுயமரியாதை குழுக்களிலும் பேசினார்.

திட்டத்தின் அடிப்படையில் அரசியல் செயல்பாட்டைக் கொண்டு செல்லும் வகையில் தென்னிந்தியச் சமதர்ம கட்சி என்ற ஒரு தனிப்பிரிவும் சுயமரியாதை இயக்கத்தில் அமைக்கப்பட்டது. 

 1933 களில் ரஷ்யாவைப்  பற்றி ஏகப்பட்ட கட்டுரைகள் “குடி அரசு” இதழில் வெளிவந்துள்ளன. மதம் குறித்து லெனின் எழுதிய கட்டுரைகளும்,  எங்கெல்சின் “கம்யூனிசத்தின் கோட்பாடுகள்” “கம்யூனிஸ்ட் அறிக்கை” உள்ளிட்டவை அவ்விதழில் மொழியாக்கம்  செய்யப்பட்டு வெளியிடப்பட்டன.  

கைதும் கைவிடலும் 

“இன்றைய ஆட்சி முறை ஏன் ஒழிய வேண்டும்” என்று “குடி அரசு” இதழில் வெளியான தலையங்கத்திற்காக 1933 டிசம்பர் 30 அன்று பெரியார் கைது செய்யப்பட்டார். ஒன்பது மாதக் கால சிறைத் தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது. அவர் சிறையில் அடைக்கப்பட்டவுடன் பெரியார் விடுதலையாகும்வரை எந்த கூட்டமும் நடத்துவதில்லை என்று செயற்குழுவினர் முடிவு செய்தனர். ஆனால்  ஜீவா போன்ற இளம் சுயமரியாதைக்காரர்கள் வேகமாக வேலை செய்தனர். மே தின கொண்டாட்டத்தை நடத்துமாறு அறிக்கை விடப்பட்டது.

தமிழ் மாகாண சமதர்ம மாநாடு இக்காலத்தில் நடத்தப்பட்டது.  சிங்காரவேலர் இம்மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தார். உடல் நலமின்மையால் அவரால் இதில் பங்கேற்க முடியவில்லை. ‘குடி அரசு’ இதழ் தடை செய்யப்பட்டிருந்ததால் “புரட்சி” என்கிற இதழ் துவங்கப்பட்டிருந்தது. அதில் “நாம் செய்ய வேண்டியது என்ன?” என்கிற தொடர் கட்டுரைகளை இக்காலத்தில்தான் சிங்காரவேலர் எழுதினார்.      

“இந்த வழக்கு, முதலாளிய வர்க்கம் அல்லது மத நிறுவனத்தினர் செய்த சூழ்ச்சியின் விளைவு என்றும், குறிப்பிட்ட அரசின் அடக்குமுறைக்கு அஞ்சப்போவதில்லை” என்றும் பெரியார் தெரிவித்திருந்தார்.  சிறையில் இருந்த காலத்தில் காங்கிரஸ் சோஷலிஸ்ட், காங்கிரஸ் மற்றும் நீதிக்கட்சி ஆகியவை பெரியாரை தங்கள் இயக்கத்திற்கு கவர்ந்திழுக்க முயற்சிகள் மேற்கொண்டன. அதே சமயம், பெரியார் விடுதலை ஆனவுடன் சுயமரியாதை இயக்கத்தின் தேக்கத்தை உடைக்கும் வகையில் ஒரு திட்டத்தை சிங்காரவேலர் முன்வைத்தார். அதில் இயக்கத்தில் முதலாளிகள் மற்றும் சிறு முதலாளிகளைத்  தவிர்த்து தொழிலாளிகள் மற்றும் விவசாயிகளை இணைக்க வேண்டுமென்றும், ஈரோடு திட்டத்தை அமலாகும் வழிகள் குறித்தும் பேசப்பட்டுள்ளது. “புரட்சி” இதழில் வெளியான இத்திட்டத்தின் கீழ் பெரியார் “இது சம்மந்தமான நமது அபிப்ராயத்தைச் சமீபத்தில் எழுதுவோம்” என்று ஒரு குறிப்பை மட்டும் எழுதியிருந்தார். 

இறுதியில் பெரியார் நீதிக்கட்சியினரோடு இணைந்தார். நீதிக்கட்சிக்கு ஒரு வேலைத் திட்டம் இல்லை என்றும், தான் முன்வைக்கும்  வேலைத் திட்டத்தை ஏற்றுக்கொண்டால் நீதிக்கட்சியுடன் நிற்பதாகவும் தெரிவித்து ஒரு பத்து  அம்ச வேலைத் திட்டத்தை நீதிக்கட்சிக்கு பெரியார் வழங்கினார்.

ஈரோடு திட்டத்தை முன்வைத்த போதே “டபிள்யூ. பி. ஏ. சௌந்தரபாண்டிய நாடார் உள்ளிட்ட (நீதிக்கட்சியிலும்  செயல்பட்ட) முக்கியமான சில தலைவர்கள்  சுயமரியாதை  இயக்கத்தை  பொதுவுடைமை கட்சியாக மாற்றும் திட்டத்தை ஏற்கவில்லை.  அப்போதே பெரியார் ஒரு சமரசத்தை மேற்கொண்டார்.  பொதுவுடைமையை ஏற்றுக் கொள்வோர் சுயமரியாதை சமதர்ம கட்சியாகவும், ஏற்காதோர்  சுயமரியாதை  இயக்கத்தைத்  தொடர்ந்து நடத்துவது என்பதே அந்த சமரசமாகும். இதுவே பின்னாளில் பொதுவுடைமை பிரச்சாரத்தை நிறுத்திக் கொண்டு சுயமரியாதை பிரச்சாரத்தை நீதிக்கட்சியோடு இணைந்து தொடர வழிவகுத்தது” என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நீதிக்கட்சியோடு பெரியார் தன்னை இணைத்துக் கொள்வதை  சிங்காரவேலர் உரிமையோடு கடுமையாக விமர்சித்தார். “தனது சொந்தக் கட்சியின் திட்டத்தையே (ஈரோடு திட்டம்) இன்னும் நிறைவேற்றாத பொழுது பெரியார் நீதிக்கட்சிக்கு ஒரு வேலைத்  திட்டத்தை அனுப்பியது குறித்தும் அவர் விமர்சனம் செய்தார். பெரியார் அனுப்பிய இந்தத் திட்டத்தைக்கூட நீதிக்கட்சி நிறைவேற்ற இயலாதென்றும், நீதிக்கட்சியிலும் காங்கிரசுக் கட்சியிலும் முதலாளிகளே முழுப் பங்கு உறுப்பினர்களாக இருக்க, இவர்களோடு சரச சல்லாப வார்த்தைகளைப் பேசுவதால் யாது பயன்? என்று கேட்டுவிட்டு, (அரசிடம்) நல்லப்பிள்ளை பெயரெடுக்க வேண்டுமானால் அது வெகு சுளுவில் அடையாளம்” என்று முடித்துள்ளார்.   

பெரியாரிடம் ஏற்பட்ட இந்த திடீர் மாற்றத்திற்கான காரணம் என்னவெனில், 29.07.1934 அன்று வெளியான அரசாணையின்படி  பொதுவுடைமை இயக்கம் இந்தியாவில் சட்டவிரோதமாக்கப்பட்டது. மாகாணங்களில் செயல்பட்டு வந்த பொதுவுடைமை குழுக்களையும் தடை செய்வதென அரசு முடிவு செய்த்திருந்ததேயாகும். 

‘சுயமரியாதை இயக்கத்தை ஒடுக்க பிரிட்டிஷ் அரசு உறுதி பூண்டு விட்டதை உணர்ந்தேன், அரசின் கண்காணிப்பு, தலையீடு காரணமாக இயக்கம் ஏற்கெனவே பாதிக்கப்படத் தொடங்கியதையும் கண்டேன்; அரசின் அடக்குமுறை காரணமாக காங்கிரஸ் கட்சிகூட மறைமுக நடவடிக்கைகளுக்கு மாறிவிட்டதையும் கண்டேன். சுயமரியாதை இயக்கத்தவர்கள் சோஷலிச பிரச்சாரம் செய்வதை நிறுத்துவது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்” என்று பெரியார் குடியரசு இதழில் எழுதினார்.

 சமதர்மம் பத்திரிக்கை வெளியீட்டு விழாவில் பெரியார் பேசுகையில் பெரியாரின் இந்த மாற்றத்திற்கான அர்த்தம் வெளியானது. “நாட்டில் பொதுவுடைமை கட்சியைச் சட்ட விரோதம் என அரசு அண்மையில் ஆணை வெளியிட்டுள்ளது. சுயமரியாதை இயக்கமும், அதன் சமதர்ம கட்சியும் அதன் கொள்கைகளும், திட்டங்களும் நிச்சயமாகச் சட்ட வரம்புக்கு உட்பட்டதாகும். இப்போது நடைபெறும் பிரிட்டிஷ் நிர்வாக முறை இன்றைய உலகில் உள்ள நிர்வாக முறைகள்  அனைத்திலும்  சிறந்தது என்பதை நாங்கள் ஏற்கிறோம்” என்று பெரியார் தெரிவித்தார்.  பிரிட்டிஷ் ஆட்சிக்குத் தாம்  விரோதி அல்ல என்பதை  ஆட்சியாளர்களுக்கு இதன் மூலம் அவர் தெரிவித்திருந்தார்.

தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் துவங்கப்படாத இக்காலகட்டத்தில் தமிழகம் எங்கும் பொதுவுடைமை கருத்துக்கள் விரிவாகப் பரவ சுயமரியாதை இயக்கம் உதவியது என்பதை மறுப்பதற்கில்லை. அதே நேரம் “தமிழ் நாட்டின் குறிப்பிடத்தக்கச்  சிந்தனையாளரான பெரியார் சிந்தித்து தம் அறிவையும், ஆயிரக்கணக்கான இளைஞர்களின் அறிவையும் வளர்த்தெடுத்தார். ஆனால்   அது சொல்லளவில்  பொதுவுடைமையில் போய் முடிந்தது; செயல் அளவில் அல்ல.” என்று கோ.கேசவன் குறிப்பிடுகிறார்.

பெரியார் விட்டதும் சிங்காரவேலர் தொட்டதும் 

“ஈ.வே.ரா வும் பார்ப்பனரல்லாதோர் மாநாடும்” என்றொரு  கட்டுரையைப்  பெரியாரின் “பகுத்தறிவு” இதழுக்கு சிங்காரவேலர் அனுப்புகிறார். பெரியார் தனது  சிறிய குறிப்புடன் அக்கட்டுரையைப் பிரசுரிக்கிறார். அதில்  “முதலாளித்துவத் திட்டத்தை ஆதரித்துக்கொண்டு “சமதர்மம்” பேசுபவர்களாயின் அது பல்லாண்டு கோடி பாமர மக்களை ஏமாற்றுவதாகுமென அறிக. அவ்விதம் பேசும் கட்சியினரை நம்புவதும், நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதெனவும் அறிக.” என்று சிங்காரவேலர் எழுதியுள்ளார். அக்கட்டுரையின்  கீழ் பெரியார் எழுதியுள்ள குறிப்பில் “நான் என்னைப்  பொறுத்தவரை  பணக் கொடுமையை விட, பூணூல் கொடுமையே பலமானதும்,  மோசமானதுமென எண்ணுகிறேன்” என்று எழுதியுள்ளார்.

1934இல் நடைபெற்ற மாகாண தேர்தலில் பெரியார் இந்த அடிப்படையிலேயே ஜஸ்டிஸ் கட்சிக்கு ஆதரவாக நின்றார். இது பெரியாரின் முந்தய நிலைக்கு மாறானதாகும்.  1932 இல்   “அரசனுக்குப்  பதிலாகப் பார்ப்பனனை ஏற்றி வைப்பதும்,  பார்ப்பனனுக்குப்  பதிலாகப் பணக்காரனை ஏற்றி வைப்பதும் ஒரு நாளும் சுய மரியாதை ஆகாது; அது சுயநல மரியாதை ஆகும்” என்று பெரியார்தான்  குறிப்பிட்டிருந்தார். ஆனால்  இங்குச் சாதி பேதம் காக்கும்  காங்கிரசிற்குப் பதிலாகப் பணக்காரனான ஜஸ்டிஸ் கட்சியினரை ஏற்றி வைக்கும் நிலையைப் பெரியார் அப்போது எடுத்திருந்தார். விடுதலை வேட்கை எழுச்சி உற்றிருந்த நிலையில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. ஜஸ்டிஸ் கட்சி இத்தேர்தலில் படுதோல்வி அடைந்தது.

இதே காலகட்டத்தில் ஜஸ்டிஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க  சிங்காரவேலரிடம் சிலர் கேட்ட போது, கம்யூனிஸ்ட் அல்லது  சோஷியலிஸ்ட் போட்டியிட்டால் அவரை ஆதரித்து வேலை செய்யலாம். அப்படி இல்லாதபோது காங்கிரஸ் வேட்பாளரைத் தான் ஆதரிக்க வேண்டும். ஏனெனில் காங்கிரஸானது ஏகாதிபத்திய எதிர்ப்பை பிரதிபலிப்பது. ஜஸ்டிஸ் கட்சியோ அவ்வாறில்லை என்று அவர் கூறிவிட்டார். 

ஏகாதிபத்திய ஆதரவு, ஆளும் வர்க்கத்தின் சட்டத்திற்கு உட்பட்டு நடக்கும் நல்ல பிள்ளை தனம்   போன்றவற்றைத்  தயவு தாட்சணியம்  இன்றி சிங்காரவேலர் விமர்சித்தார். பெரியார் எதிர்த்துப் பேசிவந்த சாதி, மதம், ஒழுக்க நெறிகள் போன்றவை ஆளும் வர்க்கத்தின் நலன் சார்ந்தவையே என்கிற மார்க்சிய புரிதலோடே  சிங்காரவேலர்  சுயமரியாதை இயக்கத்திற்குள் செயலாற்றினார். அதே சமயம் இந்திய விடுதலைக்கான ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டம் என்பது தவிர்க்கவியலாத உடனடி கடமை என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

முதலாளித்துவ ஜனநாயகத்திற்கு உட்பட்ட சிற்சில சீர்திருத்தங்களோடு நிறைவு கொள்ளாது ஒரு முழுமையான சமூக விடுதலைக்கான வேட்கையோடுஅவர் முன்னின்றார். வறட்டு நாத்திகத்தைக் கடந்த அறிவியல் பூர்வமான இயக்கவியல்  பொருள்முதல்வாதத்தின்  வழி  நின்று சிங்காரவேலர் செயலாற்றினார்.

சமூக ஒடுக்குமுறைக்கு எதிராகவும், சமூகநீதிக்காகவும், சமத்துவத்திற்காகவும் போராடும் அனைவரும் ஒருவருக்கொருவர் கொடுப்பதற்கும், கொள்வதற்கும் வரலாறு நிறையவே படிப்பினைகளை நமக்கு வழங்கியுள்ளது. சமூகநீதி என்பதைத் தனித்த ஒன்றாகவும்,  பொதுவுடைமையை மற்றொரு தனித்த வழியாகவும் கட்டமைப்பதே தவறான கண்ணோட்டமாகும். இங்கு மேற்கொள்ளப்பட்ட விவாதங்களும் முன்வைப்புக்களும், பெரியாரா, சிங்காரவேலரா என்கிற நோக்குடையதல்ல. சமூக நீதியும்  பொதுவுடைமையும்  தனித்தனியானவையல்ல, அவை  ஒருங்கிணைந்த  செயல்பாட்டைக்  கோருபவை, ஒன்றை ஒன்று உள்ளடக்கியவை என்பதை  விளக்குவதற்கான ஒரு முன்னெடுப்பேயாகும்.

“சாதி, உற்பத்தி உறவுகளில் சந்தேகமின்றி தொடர்ந்து நீடிக்கிறது. சாதியும் வர்க்கமும் ஒன்றுக்கொன்று இயைந்தவை. சாதியும் வர்க்கமும் பிணைந்திருக்கின்றன. சாதிக்கும் வர்க்கத்திற்குமான பிணைப்பையும் இணைப்பையும் அறியாமல் சாதியை ஒழிக்க முடியாது.” எனவே சமூக நீதிக்கான  போராட்டத்தைப்  பொருளாதார சமத்துவத்திற்கான போராட்டத்தோடு இணைக்க வேண்டும். பெரியார் போன்ற சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர்களின் பங்களிப்புக்களையும் உள்ளடக்கிய பொதுவுடைமைக்கான செயல்திட்டத்தை கொண்டதே  சிங்காரவேலரின் முன்மொழிவாகும்.

“சாதிய முறையையும், அதன் அனைத்து வடிவத்திலான சமூக ஒடுக்கு முறைகளையும் எதிர்த்துப் போராட வேண்டியது ஜனநாயகப் புரட்சியின் முக்கியமான பகுதியாகும். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் வர்க்கச் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த ஒன்று. நிலம், கூலி, பொருளாதார கோரிக்கைகளை – சமூக உரிமைகளுக்கான கோரிக்கை போராட்டங்களோடு இணைக்க வேண்டும். இக்கடமைகளையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் வகுத்துள்ளது.” அதுவே தீண்டாமைக்கு எதிரான களப்போராட்டங்கள் மூலம்  முன்னெடுக்கப்படுகின்றன . அதை மேலும் கருத்தாழத்தோடு தீவிரப்படுத்தும் முனைப்பே நம் காலத்தின் தேவையாகயுள்ளது,

சாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டம் வர்க்கச் சரண்டலுக்கு எதிரான போராட்டத்துடன் பின்னிப்பிணைந்த ஒன்றாகும்.

ஏற்றத்தாழ்வான நிலையை எதிர்த்த போராட்டமும், சமத்துவத்திற்கான பெண்களின் போராட்டமும் சமூக விடுதலைக்கான இயக்கத்தின் பகுதியே ஆகும்.

  • கட்சித் திட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

உதவிய நூல்கள்

  1. கோ.கேசவன் – சுயமரியாதை இயக்கமும் பொதுவுடைமையும், சரவண பாலு பதிப்பகம், விழுப்புரம், 1999 (இரண்டாம் பதிப்பு)
  2. சிங்காரவேலர் கட்டுரைகள், என்.சி.பி.எச், சென்னை, 2004.
  3. கே. முருகேசன், சி.எஸ். சுப்பிரமணியம் – சிந்தனைச் சிற்பி சிங்காரவேலு வாழ்வும் சிந்தனையும், பாரதி புத்தகாலயம், சென்னை, 2008
  4. இந்தியாவில் சாதி முறை : ஒரு மார்க்சிய பார்வை, பிரகாஷ் காரத், மார்க்சிஸ்ட், ஜூலை மாத இதழ். 2017.
  5. சாதி எதிர்ப்பில் கம்யூனிஸ்டுகள் – பிரகாஷ் காரத், மார்க்சிஸ்ட், ஆகஸ்ட் மாத இதழ். 2017


3 responses to “சிங்காரவேலர்: சமூக நீதியும் பொதுவுடைமையும்”

  1. அதென்ன உள்ளூர் ஆதிக்க சாதி? பார்ப்பன ஆதிக்கம் என்று சொல்ல பயமா? அல்லது மார்க்சிய லெனினிய அமைப்புக்களில் பார்ப்பனர்கள் உள்ளதால் பார்ப்பன ஆதிக்கம் என்று சொல்ல பயமா? அல்லது அதிக்க சக்தி பார்ப்பனர்கள் என்பை மறைப்பதற்காக உள்ளூர் சாதி என்று சொல்கிறீர்களா?

    Like

  2. அதென்ன வரட்டு நாத்திகம்? கடவுள் என்பது இந்தியாவில் பார்ப்பன உற்பத்தி முறையில் கருவியாக உள்ளது மற்றும் அது சாதியை காப்பாற்றுகிறது, அதனை ஒழிக்க பெரியார் நாத்திகம் பேசுகிறார் அதுவும் அறிவியல் பார்வையில் நாத்திகம், புரட்சிகான நாத்திகம். ஆனால் கம்யூனிஸ்டுகள் பார்ப்பன உற்பத்தி முறையை காப்பாற்றவே நாத்திகத்தை கையில் எடுக்காமல் பெரியாரை வரட்டு நாத்திகர் என்று விமர்சனம் செய்பவர்கள் என்பது அறிந்ததே.

    Like

  3. சாதி என்பது நிலவுடைமை யின் அம்சமா? அப்படியானால் மற்ற எந்த நாட்டிலும் நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் ஏன் சாதி உருவாகவில்லை? சாதி என்பது கீழ் கட்டுமானம், உற்பத்தி விசையில் பார்ப்பனர்கள் இல்லை ஆனால் உற்பத்தி விசையில் சாதி உள்ளது. பார்ப்பன ஆதிக்கத்தை மறைக்க மார்க்சிஸ்டுகள் கற்ற மற்றும் கற்பிக்கும் மார்க்சியம் வெறும் பச்சை பார்ப்பனியமே…???

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: